உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
19 விறகோடு சேர்ந்து மீனாட்சி எரிந்து கொண்டிருந்தாள். மயானக் காக்கைகள், அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்தன. பூணிக்குருவிகள் அருகே இருந்த தோட்டத்தில் எள் செடி ஒன்றை வளைத்து, சிதைத்துக் கொண்டிருந்தன. ஒரு சில சமாதிகளில் முளைத்திருந்த எருக்கலைச் செடிகளை, மைனாக் குருவிகள், அலகுகளால் முகர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தன. அருகாமையில் இருந்த கிறிஸ்தவச் சுடுகாட்டில், வெள்ளை நிறத்தில் சிலுவைக் குறிகளுடன் அமைந்த சமாதிகளைப் பார்க்கையில் படுத்துக் கிடக்கும் பசு மாடுகள், தலைகளை நிமிர்த்திப் பார்ப்பது போல் தோன்றியது. அவற்றுள் நடமாடிய எருமை மாடுகள் ஒன்றிரண்டில், காகங்கள் உட்கார்ந்து, 'உன்னிகளைத்' தின்று கொண்டிருந்தன. மாண்டு மடிந்தோரின் மரணக் கதைகளை விண்டுரைப்பதுபோல, பனையோலைகளை சலசலக்க வைத்த பேய்க்காற்று ஒரு பழுத்த பனையோலையை வீழ்த்த, அந்த ஓலை சிதையில் பட்டு, தீயோலையாக மாற, சிதைப் புகை அடியில் செந்நிறமகவும், நுனியில் கருமையாகவும் தோன்ற, பனை மரக்காடுகள் வழியாக, ஆகாயத்தைத் துளைக்கப் போவது போல் போனது. பேய்க்காற்றில் விழுந்த தென்னங் குரும்பையை, சிட்டுக்குருவி ஒன்று கொத்திக் கொண்டிருந்தது. புல்லுக்கு மானாகவும், மானுக்குப் புலியாகவும், புலிக்கு வேடனாகவும் உருமாறியும், தாக்குவதில் துவக்கமாகவும், தாக்கப்படுவதில் முடிவாகவும் தோன்றும் உருமாற்றம் அல்லாது ஒரு மாற்றமும் இல்லாத மரணம், மவுடீகமாக கோர தாண்டவம் ஆடுவதுபோல், சிதைப்புகை பேய்க் காற்றுக்கு ஏற்றாற்போல், நெளிந்தும், சிதைந்தும் ஒன்று பலவாகவும், பல ஒன்றாகவும், தீ நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு ஆடியது. மீனாட்சி எரிந்து சாம்பலானதும், அந்த அஸ்தியை, அருகேயுள்ள ஏரியில் கரைப்பதற்காக, சற்றுத் தொலைவில் இருபது இருபத்தைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் தவிர பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்டார்கள். ஆண்டியப்பன், குழந்தையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, அவனைப் போல் தோன்றிய அதன் மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டு, எரியும் சிதையை ஏக்கத்தோடு பார்த்தான். "பெண்டாட்டி செத்த துஷ்டியைக் கூட கேக்கல" என்று சொல்லி, யாரும் இரண்டாவது கல்யாணப் பெண்ணைக் கொடுக்க முன்வராமல் இருந்து விடக்கூடாது என்பதற்காக, அம்மாவுடன் வந்தவன் போல் தோன்றிய மீனாட்சியின் புருஷன் கூட, எதையோ ஒன்றைப் பறிகொடுத்த ஏக்கத்துடன் நின்றான். 'நான் போட்ட தாலியக் கூட வித்துத் தின்னுட்டியடா பாவி'ன்னு நாக்கப் பிடுங்கிட்டுச் சாகும்படியாய் கேளுடா என்று அம்மாக்காரி சொன்னதை மனப்பாடம் செய்திருந்த அவனால், இப்போது அதை ஒப்பிக்க முடியவில்லை. ஆண்டியைப் பார்த்து, "அப்போ நான்..." என்றான். மைத்துனனைப் பார்த்து தங்கையின் தாம்பத்ய வாழ்க்கையையும், ஏலாதவனைப் பெற்ற 'வல்லரக்கி' மாமியாரையும் நினைவுக்குக் கொண்டு வந்த ஆண்டியப்பன், பைக்குள் கிடந்த கால்பவுன் தாலியை எடுத்து, மைத்துனனிடம் நீட்டி, "இந்தாரும் இது ஒமக்குத் தேவையா இருக்கும்" என்று சொல்லி நீட்டினான். மைத்துனன், அவன் சொன்னதன் பொருள் புரியாமலே, அந்தப் பொருளை வாங்கிக் கொண்டு, தான் பெற்ற பிள்ளையை அங்கேயே விட்டுவிட்டு, தயங்கித் தயங்கி சிதையைப் பார்த்துக் கொண்டே போய்த் 'தொலைந்தான்.' அவனையே பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் இப்போது மௌனத்தைக் கலைத்தது. "முந்தாநாள் வீட்டுக்குப் போயிருந்தப்போ அண்ணாச்சின்னு ஆசயோட மீனாட்சி கூப்பிட்டாள். இப்போ? சும்மாவாச் சொன்னான் - 'தூங்கும்போது ஒரு மூச்சு! அது சுழி போட்டு இழுத்தாக் கால் போச்சு' இது தெரியாமல் துள்ளுறோம் துடிக்கிறோம்" என்றார் ஒரு கிழவர். சின்னான், அவருக்குப் பதிலளித்தான். "அது சரிதான் சாமி! மனிதன் சாகலாம். ஆனால் மனிதகுலம் சாவதில்லை. அந்தக் குலத்துக்காக, நாம சாகும் முன்னால ஏதாவது நல்லது செய்யாம, இப்டி மூச்சைப் பிடிச்சுக்கிட்டு மூச்சப் பற்றிப் பாடினால் தப்பில்லியா..." ஆண்டியப்பன், ஆதங்கத்தோடு பேசினான்: "நீ இவ்வளவு பேசுறியே சின்னான்; நீ கூடத்தான் தப்புப் பண்ணிட்டே!" "என்ன பண்ணுனேன்?" "ஊர் ஜனங்கள் எல்லாம் ஒண்ணா திரண்டு, முன்ஸீப்பையும், போலீஸ்காரங்களையும் அடிக்கப் போனபோது நீ தடுத்திட்டே. ரெண்டு செறுக்கி மவனயாவது வெட்டிப் போட்டிருக்கணும்! சரி போவட்டும்... என் கையால ஒரு கொலையாவது விழாமப் போவாது!" "இந்தா பாரு ஆண்டி, நீ சொல்லிட்ட; நான் சொல்லல. அவ்வளவுதான் வித்தியாசம். ஆண்டி, உனக்கு ஞாபகம் இருக்கா? நாம் எட்டாவது வகுப்புப் படிக்கும்போது, 'திருவோடு' வாத்தியார் பிரெஞ்ச் புரட்சியைப் பற்றிச் சொல்லும்போது, கில்லடின் என்கிற ஆயுதத்தால எதிரிகளைக் கொன்னதாச் சொன்னாரு. உடனே நான் கில்லடின்னு எதுக்காகப் பெயர் வந்ததுன்னு கேட்டேன். வாத்தியார், ஆடு திருடுன திருடன் மாதுரி விழிச்சாரு. உடனே நான் 'கில்' பண்ணுனதால கில்லடின்னு பேர் வந்ததாச் சொன்னேன். உடனே, நீ 'கில்டியா' இருக்கவங்கள கொல்ற மிஷின் - அதனால கில்லடின்னு பேர் வந்திருக்குமுன்னு சொன்னே. ஞாபகம் இருக்கா? சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் ஆகிய லட்சியங்களுக்காகத் துவங்கிய பிரெஞ்சுப் புரட்சி, கடைசில எதேச்சாதிகாரத்துல முடியுறதுக்குக் காரணம் என்ன? சொல்லு பார்க்கலாம்..." ஆண்டி, கோபால் உட்பட எல்லோரும் சின்னானையே பார்த்தார்கள். சின்னான் தனக்குத்தானே பேசுபவன் போல் பேசினான்: "பொருளாதார சமத்துவத்தை வலியுறுத்தாத எந்தப் புரட்சியும் வெற்றி பெறாது. சொத்துரிமையை ஒழிக்காத எந்தப் புரட்சியிலும் ஆன்மா இருக்காது. வெற்றி பெறும் போராட்டத்துக்குப் பெயர் புரட்சி. அதுவே தோல்வியானால் கிளர்ச்சி. இங்லீஷில் சொல்லப் போனால் முன்னால் சொன்னது ரெவலுஷன். பின்னால் சொன்னது ரிபெல்லியன். நான் செய்ய நினைக்கது புரட்சி! நீ செய்ய நினைக்கது கிளர்ச்சி! அதாவது நீ நினைக்கது மாதுரி போலீஸ்காரர்களையோ முன்ஸீப்பையோ அடிச்சிருந்தாலும் சரி - கொன்னுருந்தாலும் சரி - போலீஸ்காரங்க இதை தங்கள் டிபார்ட்மெண்டுக்கு எதிரான நடவடிக்கையாய் நினைப்பாங்க. பொது மக்களுக்கு போலீஸ் என்றால் கிள்ளுக்கீரைன்னு ஒரு எண்ணம் வரப்படாதுன்னு, விவகாரத்த சட்ட ஒழுங்குப் பிரச்சினையாய் பார்ப்பாங்களே தவிர, பொருளாதாரப் போராட்டமாய் நினைக்க மாட்டாங்க. தமிழகம் முழுவதையும் அடக்குவதற்கு உள்ள அத்தனை ஆயுதப் போலீஸும், ரிசர்வ் போலீஸும், இந்த சட்டாம்பட்டியில் 'டேரா' போட்டு, நம்மை சட்டி பானையை உடைக்கிறது மாதுரி உடைச்சிருக்கும்! இதை நீயே விரும்பமாட்டே! அதே சமயம் ரெண்டு விதவைப் பெண்களுக்காகப் போராடி, அந்தப் போராட்டம் ஊரையே மாற்றியிருக்கு. இதை மாற்ற வேண்டிய அளவுக்கு மாற்ற ஒரு புரட்சி தேவை!" "சரி, ஒன்னோட புரட்சி தான் என்னதுப்பா?" என்றான் பிச்சாண்டி - மாசானம் செய்த பத்து மூட்டை நெல், அந்தப் புரட்சியில் கிடைக்குமா என்பதை அறிய விரும்பியவனாய். சின்னான், ரகசியம் பேசுவதுபோல் பேசி, தழுதழுத்த குரலில் முடித்தான். "அன்றைக்குஞ் சரி, இன்றைக்குஞ் சரி, ஆண்டியை உயிருக்குயிராய் நேசிக்கிறவன் நான். கிராமங்கள் குட்டிச் சுவராய் போவதற்கு முக்கால்வாசிக் காரணம், படித்த பயல்கள் தான். இவன்கள் பூர்ஷ்வா பயல்கள். அதாவது தங்களை முக்கியப் படுத்துறதுக்காக எதையும் பிரச்சினையாக்குவாங்க. இவர்கள் மத்தியதர வகுப்பின் மேல்மட்ட வர்த்தக கலாச்சாரத்தின் வாரிசுகள். இவங்களுக்கு தத்துவம் முக்கியம் இல்ல. தலைமைதான் முக்கியம். எல்லாவற்றையும் தீர்க்கப்போறது மாதுரி பாவலா பண்ணும் இவங்க, யார்கூட வேணுமுன்னாலும் சேருவாங்க. தாங்கள் பெரிசாகணுங்கற ஒரே லட்சியத்துக்காக, தியாகம் செய்யத் தேவையில்லாத எதையும் செய்வாங்க. குமார், மாணிக்கம் இந்த வகைப் பயல்கள்... காட்டிக் கொடுக்கிறது லேசான காரியம் என்கிறதுனால, அதைச் செய்துட்டாங்க. ஏன்னா இவங்களுக்கு, இவங்கதான் முக்கியம். அதனாலதான் ஆண்டிய மாதுரி ஏழைகளைத் தூண்டிவிட்டு, அந்த ஏழைகளோட அடிவயிறுல எரியுற தீயில் குளிர் காய்வாங்க. ஆண்டியை ஆற்றில் தள்ளிட்டு அவன் பிணம் மிதக்கும்போது, இந்தப் பயல்கள், அதுல சவாரி பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியும்! அதனாலதான் ஆண்டி இவங்களோட பிரமையில் இருந்து விடுபடுறது வரைக்கும் - நான் காத்திருக்கத் தீர்மானிச்சேன். நான் இடையில தலையிட்டிருந்தால், இந்த ஆண்டியே எனக்கு விரோதமாய் மாறி இருக்கலாம்! அதே சமயம் இவனை ஆபத்தில் இருந்து மீட்கிறதுக்காக அப்பப்போ முயற்சி எடுத்திருக்கேன். ஆனால் நானும் ஒரு தப்புப் பண்ணிட்டேன்! ஆண்டியை அளவுக்கு மேல் தவிக்க விட்டுட்டேன்! இதனால மீனாட்சி இறக்க வேண்டியதாயிட்டு. அண்ணாச்சிய போலீஸ் கையைக் கட்டிக்கொண்டு போனாங்க என்கிறத கேட்ட அதிர்ச்சியிலேயே அவள் செத்திருக்கலாம்! இந்த வகையில் நானும் ஒரு கொலைக்காரன் தான்..." கோபால் பேச முடியாமல் விக்கித்துப் போன சின்னானின் முதுகைத் தட்டி ஆசுவாசப்படுத்தினான். சின்னான் தொடர்ந்தான்: "ஒரு வகையில் மீனாட்சியோட மரணம் ஆண்டியப்பனோட இழப்பு. இன்னொரு வகையில் இவள் மரணம் தான் நாம் செய்யப்போற புரட்சியோட விதை! மீனாட்சி ஊன ரீதியில் இறந்து, நம் புரட்சியில் ஞான ரீதியில் வாழப் போகிறாள்! நம்முடைய புரட்சிக்கு, செத்து, உயிர் கொடுத்துட்டாள்." "சரி, ஒன்னோட புரட்சி தான் என்ன? நான் வெள்ளாமை செய்த நிலம் கிடைக்குமா? ஆண்டியோட பசுமாடு கிடைக்குமா? அதச் சொல்லு!" "சொல்லுறேன்! நம்முடைய ஊர் நடைமுறையக் கவனிச்சாலே, உலக நடைமுறை தெரியும். ஓங்கி வளர்ந்த பனைமரத்துல ஏறி, பயினியை இறக்குறது என்பது அபாரமான வேலை. பெருமைப்படக்கூடிய சாதனை. ஆனால் அந்தத் தொழிலைச் செய்பவனை, பனையேறின்னு கேவலமாப் பேசுறோம். கிணற்றுக்குள் போய் வெடி மருந்த வச்சி பாறையை பிளக்கிறது, எல்லாராலும் செய்ய முடியாத வேலை. அந்த வேலயச் செய்பவனை கேவலமாய் நினைக்கோம். அந்த வேலையைச் செய்பவனைவிட, அந்த வேலைக்குக் காண்ட்ராக்ட் எடுக்கிறவன் பெரிய மனுஷனாயிட்டான். இதுமாதிரி - அழுக்கை எடுத்துட்டு சுத்தத்தைக் கொடுக்கிற வேலை சலவையாளர் வேலை. அவங்கள வண்ணான்னு கொத்தடிமையாய் வச்சிருக்கோம். பண்ணை நிலத்துல அல்லும் பகலும் வேலை செய்யுறவனை பறையன்னு தள்ளி வச்சிட்டோம். இப்படிக் கஷ்டமான வேலைகள் செய்றவங்களைக் கேவலப்படுத்தி அந்தத் தொழில்களையே கேவலமாக்கிட்டோம். ஏழைகள், கோழைகளாய் இருக்கும் வரை ஏய்ப்பவர்கள் தான் மேய்ப்பவர்களாய் இருப்பாங்க." "மேய்ப்பவர்களை என்ன செய்யணுன்னு சொல்லுற" என்றார் இடும்பன். "சொல்லுறேன்! நம்ம சமுதாயத்துல உழைப்பவன் - மேய்ப்பவன் என்கிற பிரிவோட இன்னொரு பிரிவு இருக்கு. இது அதிகார வர்க்கம். நிலப்பிரபுத்துவ ஆணவமும், முதலாளித்துவ கபடமும் கொண்ட இந்த அதிகாரவர்க்கந்தான், சமூக சமத்துவத்தின் முதல் எதிரி! ஒரு கலெக்டர் முன்னால் கிளார்க் 'நீங்க'ன்னு சொல்லக் கூடாது. 'கலெக்டர் சொன்னார்'ன்னு தான் கலெக்டர் கிட்டேயே சொல்லணும். "இந்த மாதிரிக் கொத்தடிமைத்தனத்தை சங்கிலித் தொடராய்க் கொண்ட நிர்வாக அமைப்பில், சமூகத்தில் பணக்காரன் பணக்காரனாய் ஆகிறான். ஏழை ஏழையாகிறான். இதனால் நாடு முன்னேறலன்னு நான் சொல்லல. சுதந்திரத்திற்குப் பிறகு எவ்வளவோ முன்னேறி இருக்கோம். இதே ஆண்டி இன்னைக்கு போலீஸ் ஸ்டேஷனே நடுங்கும்படி புரட்சி செய்ய முடியுதுன்னால் - அது நாட்டோட முன்னேற்றம். இதே ஆண்டி இருபது வருஷத்துக்கு முன்னால இப்படிச் செய்திருந்தால், அவன் போன இடம் புல்லு முளைச்சிருக்கும். ஆக நாடு நல்லா முன்னேறியிருக்கு. அதே சமயம் நாடு முன்னேறிய அளவுக்கு நம்மள மாதுரி ஏழைகள் முன்னேறல. பஸ்ஸுல போன கோபாலை வழிமடக்கி, மதுரையில் லாக்கப்பில் அடைக்கிற காலம் போகல! அதேசமயம் அவனை என்னை மாதுரி ஒரு பறப்பையன்..." "ஏ, அப்டியெல்லாம் சொல்லாதப்பா..." "என்னை மாதுரி சாதாரணமானவன் மீட்கிற அளவுக்கு காலம் வந்திருக்கு. சமூக சமத்துவத்துக்காக சர்க்கார் - நிலச்சீர்திருத்த சட்டம் வந்தது. ஆனால் எல்லோரும் பினாமி பேர்ல எழுதி வச்சிருக்காங்க. நமக்கு வந்த மாடுங்க, அவங்க வீட்ல மேயுது. நாம கையைக் கட்டிக்கிட்டு சும்மா இருக்கோம். ஒரு நிகழ்ச்சிதான் ஞாபகம் வருது. கரும்புத் தோட்டத்துக்காரங்க, குரங்குகள் தோட்டத்தை அழிக்காமல் இருக்க, மூங்கில் கம்புகளைச் செதுக்கி, மிளகாய் சோற்றைச் செய்து, ஒரு பாறையில வப்பாங்க. கரும்பத் தின்ன வருகிற குரங்குங்க, இடையில இருக்கிற மிளகாய் சோற்றைத் தின்னுட்டு - அப்புறம் எரிச்சல் தாங்க முடியாமல் மூங்கில் கம்புகளை எடுத்து ஒன்றை ஒன்று அடிச்சிக்கிடும். கரும்புத் தோட்டம் பத்திரமாய் இருக்கும். இதுமாதிரி நாம் வறுமை என்கிற மிளகாய்ச் சோற்றைச் சாப்பிட்டு, வகுப்புவாதம், மொழி, ஜாதி முதலிய கம்புகளை வைத்து அடிச்சிக்கிடுறோம். நமக்குச் சேரவேண்டிய கரும்புத் தோட்டம் பத்திரமாய் இருக்கு." "நாம தோட்டத்துக்குள்ள இறங்கணும். கரும்புகளை ஒடிக்கணும். அதுக்கு வழியச் சொல்லு." "சொல்லுறேன்! சமூக உறவு, பொருளாதார உறவின் அடிப்படையில் அமைஞ்சது. உறவுக்கு மனிதாபிமானமோ, மனிதாபிமானத்திற்கு உறவோ தேவையில்லை. எந்த ஜாதியாய் இருந்தாலும், அந்த ஜாதியில் ஏழையாய் இருப்பவன் ஹரிஜன் தான். நீரைவிட, ரத்தம் அழுத்தமாய் இருக்கலாம். ஆனால் பணம், ரத்தத்தை விட அழுத்தமானது. பணக்காரன் பணக்காரனோடு சேரும்போது, ஏழை ஏன் ஏழையோடு சேரக்கூடாது?" "இப்போ யாருப்பா சேரக்கூடாதுன்னு சொன்னது? சேருறதுக்கு வழியச் சொல்லாம..." "சொல்லுறேன்! நாளைக்கு எங்க சேரில - நாம எல்லாரும் அதிகாலை ஐந்து மணிக்குக் கூடுவோம். சேரில கூடணுமுன்னு அகம்பாவத்துல சொல்லல. ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பகுதியை புனிதப் படுத்துறதுக்காக - நமக்குள்ள ஜாதி இல்லன்னு நிரூபிக்கதுக்காக கூடணுமுன்னு சொல்லுதேன். இங்க இருக்கிற இருபது பேரும் - சேரியில தேறுற முப்பது பேருமாய் ஐந்து மணிக்குக் கூடுவோம்! கூடி நம்ம மாடுகளைக் கைப்பற்றுவோம்! நம்ம பேர்ல இருக்கிற பினாமி நிலங்களில் ஏர் கட்டுவோம் - சரிதானே!" "சரிதான்! சரிதான்! மாசானத்திட்ட இருக்க நெல்லு மூட்டைய எடுக்கணும்! சின்னத்துரைகிட்ட இருந்து மூவாயிரம், மூவாயிரம் ரூபாயை வாங்கி, மூக்கையா குடும்பத்துக்கும், நயினார் குடும்பத்துக்கும் கொடுக்கணும். செறுக்கிமவன் கேஸ் போடமாட்டேன்னு சொல்லுதானாம்..." இதற்குள் சிதை எரிந்து முடிந்தது. அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் எழுந்து, சிதைக்கருகே போனார்கள். அஸ்தியை எடுத்துக் கொண்டு ஏரிக்கரைக்குப் போய் நீரில் கரைத்தார்கள். சின்னான் அவர்களை உஷார் படுத்தினான். "மறந்துடாதீங்க - மேளச்சத்தம் சேரியில கேட்டதும் வந்துடணும். கர்ணத்த எப்படியாவது அங்க கொண்டு வந்துடணும். ஆனால் யாரையும் அடிக்கப்படாது... மீனாட்சி, என்னென்ன காரணங்களால் மறைந்தாளோ... அந்தக் காரணங்கள் ஒழிவதற்கான காரியங்களைச் செய்யப்போகிறோம்! இது மீனாட்சி அஸ்தி சாட்சியாய் நாம் எடுக்கிற சத்தியம்! மீனாட்சியோட அஸ்தி, நம் புரட்சிக்கு அஸ்திவாரம்!" எல்லோரும் புதிதாய் பிறந்தவர்கள் போல், ஊருக்குத் திரும்பினார்கள். ஆண்டியப்பனிடம் இருந்த குழந்தையை, சின்னான், காத்தாயியிடம் கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு போய்விட்டான். சூன்யத்தின் சூடு தாங்காமல், ஆண்டியப்பன் தங்கையை சாத்தி வைத்திருந்த மூலையில் சாய்ந்திருந்தான். எங்கும் இருளின் ஆதிக்கம். ஊரே தூங்கி விட்டது. வெறுமையின் வெம்மை தாங்காமல், அவன் தவித்துக் கொண்டிருந்த போது, "நான் வரலாமா" என்று ஒரு குரல் ஒலித்தது. தங்கம்மா. சாப்பாட்டுத் தட்டுடனும், ஒரு ஈயப் பானையுடனும் வந்த தங்கம்மா, அவன் முன்னால் வந்து அமர்ந்தாள். சாதத்தைப் பிசைந்து அவன் வாயில் ஊட்டினாள். பிறகு "அம்மாதான் சாப்பாட்ட கொண்டு போகச் சொன்னாள்" என்று சொல்ல வேண்டியதை நான்கு வார்த்தைகளில் சொன்னாள். "தங்கம்மா என்னை கைவிட மாட்டியே!" தங்கம்மா அவன் கைகளை அழுந்தப் பிடித்தாள். ஒருவர் கையை ஒருவர் பிடிக்க, முகம் தெரியாத அந்த இருட்டில் இருவரும், எதுவும் பேசாமல், ஒருவர் உள்ளத்தில் இன்னொருவர் வியாபிக்க, ஒருவர் மேனியில் இன்னொருவர் உயிராக, உள்ளங்கள் தழுவி ஒன்றுபட்டதைக் காட்டும் வகையில் கையோடு கை கலக்க, தோளோடு தோள் உரச, பிறகு ஒருவர் தோளில் ஒருவர் தலையும், ஒருவர் தலையில் இன்னொருவர் தோளுமாக லேசாகக் கண்ணயர்ந்தபோது - சேரியில் மேளச் சத்தம் கேட்டது. ஆண்டியப்பனும் தங்கம்மாவும் சிலிர்த்து எழுந்தார்கள். |