உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
20 ஊர்ச் செருப்புக்காக ஒதுக்கப்பட்ட இடம்போல் தோன்றிய சேரிப் பகுதியில், பெரும்பாலான குடிசைகளுக்கு, நடைவாசல், புறவாசல் கிடக்கட்டும், முறையான வாசலே கிடையாது. ஓலைத்தட்டிகள்தான் வாசல் கதவுகள். உடைந்து கிடந்த மணற் கட்டைகள் தான் ஸோபா ஸெட்டுகள். சமையலறைதான் சயன அறை. குடிசைகளின் குடுமி போலிருந்த ஓலைகள் செல்லரித்து, அதன் இத்துக்கள் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, சேரியின் வடக்குப் பகுதியில் இருந்த முனீஸ்வரன் கோயிலுக்கு, அர்ச்சிக்கப்பட்டவை போல் விழுந்து கொண்டிருந்தன. மனிதர்கள் குனிந்து கொண்டே நிற்க வேண்டிய குடிசைகள். தொட்டால் விழக்கூடிய மண் சுவர்கள். தொடாமலே விழும் சிலந்தி வலைகள். முனீஸ்வரன் கோயில் முகப்பில், ஜாதி - ஹரிஜனங்களை வரவேற்பது போல் மாவிலைத் தோரணம் கட்டப்பட்டிருந்தது. மூல விக்ரகத்திற்கு முன்னால், 'சர்வ ஜாதி செத்து, சமதர்ம ஜாதி பிறந்தது' என்று எழுத்துக்களால் கோலம் போடப்பட்டிருந்தது. கோயிலுக்கு முன்னால் உள்ள ஆலமரத் தூணைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த சிமெண்ட் மேடையில் சின்னானும், இன்னும் ஒரு சில ஹரிஜன வாலிபர்களும் நின்றுகொண்டு, ஊர் முனையை நோக்கிக் கொண்டிருந்தார்கள். காத்தாயியும், இன்னும் சில பெண்களும், இடுப்பில் குழந்தைகளை வைத்திருந்தாலும் அவை இல்லாதவை போல் இயங்கிக் கொண்டிருந்தார்கள். காத்தாயியின் கணவன் முத்துக்கருப்பன், ஒரு தவில் மேளத்தை தாளத்தோடு அடிக்க, அந்தத் தாளத்திற்கு ஏற்றாற்போல், ஒரு எட்டு வயதுச் சின்னப் பயல் 'சிங்கி' போட்டான். முன்னொரு நாள் அரசாங்க விழாவில் அமைச்சர் கொடுப்பதாக இருந்த சீருடைகளை வாங்க முடியாமல் போன ஹரிஜனச் சிறுவர்களும், சிறுமிகளும் சின்னான் வாங்கிக் கொடுத்திருந்த புத்தாடைகளை அணிந்தவர்களாய், அவன் எழுதிக் கொடுத்த ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். ஊரிலிருந்து ஒருவர் ஒருவராக, இருவர் இருவராக வந்து கொண்டிருந்தார்கள். சாமக்கோழி கூவப்போகிற நேரம். துருவ நட்சத்திரம் சுடர்விடும் காலம். பிச்சாண்டி, சஸ்பெண்டான ஒரு ஆசிரியர், முனியாண்டி முதலியோர் மொத்தமாக வந்தார்கள். ஆண்டியப்பனும், தங்கம்மாவும், ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி வந்தார்கள். அவர்கள் வந்த ஐந்து நிமிடத்திற்குள், கோபாலும், அவன் தந்தை, தங்கைகளும் வந்தார்கள். அரைமணி நேரத்திற்குள் கிணறு வெட்டப் போய் காலொடிந்து காண்டிராக்டரால் கைவிடப்பட்ட லோகன், பள்ளிக்கூட சர்ட்டிபிகேட்டு மறுக்கப்பட்டு 'டவுனில்' சர்க்கார் கழுதையை மேய்க்க முடியாமல், எருமை மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் மகனைப் பெற்ற மாடசாமி, சாலையோர சர்க்கார் மரத்தை வெட்டும்படி தூண்டிவிடப்பட்டு, பின்னர் கையுங் களவுமாகப் பிடிபட்ட போது - மரவியாபாரியால் கைவிடப்பட்டு, கைவிலங்கு பட்ட காத்தவராயன், தட்டாசாரி தங்கச்சாமியிடம் 'மூதேவி' என்று அடிக்கடி அர்ச்சிக்கப்பட்ட ஆசாரிப் பையன் ஆறுமுகம், பண்ணையார்களின் வயலில் கிடைபோட்டும், வயிற்றுக்கு விடை காணாத சண்முகக் கோனார், நாவிதர், சலவையாளர் முதலியவர்கள் ஓடி வந்தார்கள். காத்தாயியின் இடுப்பில் இருந்த மீனாட்சியின் குழந்தையை, தங்கம்மா வாங்கியபோது, "இந்த மேளச் சத்தத்துலயே ஆண்டி அண்ணாச்சிய, ஒனக்குத் தாலி கட்டச் சொல்லட்டுமா" என்றாள் காத்தாயி. தங்கம்மா நாணவில்லை. பெண்மையால் 'பசலை நிறம்' படரவில்லை. காத்தாயியைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே "நான் இப்போ இந்த ஊரு திரியோதனாதிபதிகள முடிக்க வந்திருக்கிற திரௌபதி" என்றாள் - கோயில் ஒன்றில் முன்பு நடந்த ஒரு வில்லுப் பாட்டு நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டே. இதற்குள் இன்னும் பலர் கூடிவிட்டார்கள். சின்னானால் ஓரளவு குடும்பச் சுமையை குறைத்துக் கொண்ட சேரி விதவை மூக்கையாவின் மனைவியும், ஜாதி விதவை நயினாரம்மாவும், இன்னும் பல ஏழைபாளைகளும் அங்கே ஓடோடி வந்தார்கள். சேரிக் குடிசைகள் கம்பீரப்பட்டவை போல், காற்றில் சிலிர்த்தன. வாதமடக்கி மரங்களும், பூவரசு கிளைகளும், ஒன்றுடன் ஒன்று மோதி கர்ஜித்தன. கல்லாய் இருந்த முனீஸ்வரர் உயிர்பெற்று, மனித அவதாரங்களாய் மாறியது போலவும், சேரி ஜனங்களும் சாதி ஜனங்களும் ஜாதியைத் தொலைத்துவிட்டு, ஏதோ ஒன்றைக் கண்டுபிடிப்பது போலவும், ஒருவரை ஒருவர் புதிதாகப் பார்ப்பவர்கள் போலவும், இதுவரைக்கும் அப்படிப் பார்க்காமல் போனதற்குப் பிராயச்சித்தம் தேடுபவர்கள் போலவும், ஒருவர் தோளில் இன்னொருவர் கை போட, முனீஸ்வரனின் திரிசூலத்தை, போர்க்கோலம் பூண்டவர்கள் போல் பார்த்தார்கள். கிழிந்த வேட்டிகளிலும், மக்கிப்போன சேலைகளிலும், ஒட்டிய வயிறுகளிலும், ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. மானம்! தன்மானம்! அஞ்சி அஞ்சி சாக விரும்பாத செறுக்கு! செத்து வாழ்வதைவிட, வாழ்ந்து சாக நினைக்கும் வைராக்கியம். யாரும், யாருடனும் அதிகமாகப் பேசவில்லை. வாயின் வேலைகளைக் கண்கள் எடுத்துக் கொண்டன. முனீஸ்வரனுக்குக் கர்ப்பூரம் கொளுத்தாமலே அநீதிகளைக் கொளுத்தி, அக்கிரமங்களை உடைக்கப் போகிற மனிதாபிமான பக்திப் பரவசம்! ஆண்டியப்பன் கூட்டத்தைப் பார்த்தான். மீனாட்சி இறக்கவில்லை. இருக்கும்வரை வாழாமல் போனவள் இறந்தபிறகு வாழ்கிறாள். அக்கிரமங்களைக் களையவேண்டும் என்ற இதயங்களின் நாடித்துடிப்பாக, அதற்காக எதையும் செய்யத் தயாரான கரங்களில் எஃகாக வாழ்கிறாள். ஒரு தங்கையை விட்டுக்கொடுத்து பல தங்கைகளைச் சம்பாதித்தவன் போல், ஒரு தாய்மாமனைப் பலிகொடுத்து, பல 'அம்மான்களை' பெற்றுக் கொண்டவன் போல், ஆண்டி கூட்டத்தைப் பார்த்தான். தனி மனிதனாக நின்று சமுதாயமாக மாறிய அவனை, சமுதாயமாக நின்ற கூட்டம், தனிமனிதனாக உருமாற்றம் ஆனது போல், அவனை ஒரு சேரப் பார்த்தது. ஆடவர்கள் வரிசை வரிசையாக நின்றார்கள். அனைவரும் வேட்டிகளைத் தார்பாய்ந்து, தோள் துண்டுகளைத் தலையில் கிரீடமாகக் கட்டிய 'மதுரை வீரன்கள்' போல் மார்பை நிமிர்த்தி நின்றார்கள். அந்த மார்புகள் இதயங்களுக்குக் கவசம் போல நிமிர்ந்து நின்றன. 'சின்னப்பய மவனுள பாரேன்' என்பது மாதிரி பார்த்துக் கொண்டிருந்த சில சேரிக் கிழவர்கள், குளிருக்காய் மூடிய போர்வைகளை வீசியெறிந்தார்கள். சின்னான் ஆணித்தரமாகவும் அமைதியாகவும் பேசினான்: "இன்றையில் இருந்து, நமக்கு நல்ல காலம். சேரிக் குடிசைகளும், ஜாதிக் குடிசைகளும் ஒண்ணாயிட்டு. இனிமேல் நாம் நடத்தப் போற உரிமைப் போராட்டத்திற்கு யாரும், வகுப்புவாத பாடை போர்த்த முடியாது" என்றான். அவன் சொல்லி முடித்ததும் ஆண்டியப்பன், "கர்ணத்த காணுமே" என்றான். அந்தப் பக்கமாக அதிகாலையில் 'வாக்கிங்' போகும் கர்ணத்தை, குண்டுக்கட்டாகக் கட்டிக் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சின்னான், கர்ணம் கடத்தப்பட்டு வருவதைக் கவனிப்பதற்காக வெளியே போகப் போனபோது, ஊர் கர்ணத்தை, நான்குபேர் தூக்கிக் கொண்டு வந்து, சின்னானின் முன்னால் நிறுத்தினார்கள். சின்னான் தூக்கிக் கொண்டு வந்தவர்களைக் கடிந்தான்: "ஏண்டா பெரிய மனுஷன வலுக்கட்டாயமா கொண்டு வர்றிங்க? கூப்பிட்டால் தானா வருவாரே?" "நாங்க பயந்து கூப்பிட்டோம். அப்புறம் நயந்து கூப்பிட்டோம். அவர் மாட்டேன்னார் - அப்புறந்தான்" என்று தன் வயிற்றில் கர்ணத்தின் முதுகை வைத்திருந்தவன். மூச்சிரைக்கச் சொன்னான். கர்ணத்தைப் பார்த்துவிட்டு, அனிச்சையாக தலையில் கட்டிய துண்டை எடுக்கப் போனவர்கள், அவரை பிறகு 'துண்டு' போடுவதுபோல் பார்த்தார்கள். பரம்பரைப் பழக்கத்தால் எழப்போன ஒரு கிழவர், கால்மேல் கால்போட்டு, கம்பீரமாக உட்கார்ந்தார். கர்ணம் உடலெல்லாம் ஆட, பேச முடியாமல், ஆட்டுக்குட்டி மாதிரி நின்றார். எதுவுமே புரியாததுபோல், கண்களைக் கசக்கிக் கொண்டு, பின்பு எல்லாம் புரிந்தவர் போல் கூட்டத்தைப் பார்த்தார். சின்னான் அவரை ஆற்றுவித்தான். "ஒம்ம பேர்ல எங்களுக்குக் கோபமில்ல! ஒம்முடைய நிலைமையில் நான் இருந்தாலும் இப்படித்தான் நடப்பேன்! போவட்டும். சர்வே நம்பர சமஸ்கிருத மந்திரம் மாதுரி ரகசியமாய் வச்சது போதும். யார் யார் - யார் யார் பேர்ல, எந்தெந்த நிலத்த - பினாமியாய் எழுதி வச்சிருக்காங்க என்கிறத சொல்லிடும். ஒம்மை விட்டுடுறோம். இதுல நீரு வெட்கப்படுறதுக்கு அவசியமில்ல. ஒம்ம அவமானப்படுத்துறதும் எங்க நோக்கமில்ல. அதோட நீரு பெரிய மனுஷன். நீரு ஏழைகள் நிலத்துல வில்லங்கம் பண்ணுனது மாதுரி நாங்க ஒம்ம உடம்புல வில்லங்கம் பண்ணமாட்டோம். பயப்படாம விவரமாச் சொல்லும்." சின்னானின் சினேகித பாவமான பேச்சு, கர்ணத்திற்குக் கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது. தன்னைக் கண்டதும், துண்டை எடுத்து இடுப்பில் கட்டும் 'துண்டுப் பயல்கள்' கூட இப்போது தார்பாய்ந்து நிற்பதால் அதிர்ந்து போனாலும், அவர் சாமர்த்தியமாகப் பேசினார். "அடங்கல் பட்டாவை பார்த்தாத்தான் விவரம் புரியும். போய் எடுத்துக்கிட்டு வரட்டுமா? ஒரு நொடியில் வந்துடுறேன்." கர்ணம் குழைந்தபோது, சின்னான் சிரித்துக் கொண்டே குழைந்து பேசினான்: "ஒம்ம மேல எப்படி தனிப்பட்ட விரோதம் கிடையாதோ - அப்படி தனிப்பட்ட பாசமும் கிடையாது. ஒம்மை குரோதம் இல்லாமலே குத்தப்போறோம். முன்விரோதம் இல்லாமலே மூஞ்சியக் கிழிக்கப் போறோம். யாருகிட்ட கரடி விடுறீர்? தூக்கத்துல எழுப்பிக் கேட்டால் கூட, சர்வே நம்பரைச் சொல்றவரு நீரு. நீரு சொல்லித்தான் பட்டா நிலத்த பண்ணையாருங்க பினாமியாக்கியிருக்காங்க. சொல்றீரா - இல்ல திருவு திருவுன்னு திருவட்டுமா?" திருவி விடுவாங்களோன்னு, திருதிருவென்று விழித்த கர்ணத்திற்கு ஒன்று புரிந்துவிட்டது. 'இனிமேல் இந்த பயல்களை, யாரும் எதுவும் செய்ய முடியாது. நமக்கேன் பொல்லாப்பு' மடமடவென்று ஒப்புவித்தார். "பேச்சிமுத்து குளத்துல - பரமசிவம் நிலம் இருபது ஏக்கர்ல, பதினைஞ்சி, தலைக்கு - மூணாய் அடைக்கலசாமி, ஆண்டியப்பன், மயானபுத்திரன், பிள்ளையார், பெருமாள் பேருக்கு இருக்கு. கிட்டப்பா நிலத்துல குளத்தடி பாசனம் பிச்சாண்டி பேர்ல!" "சர்வே நம்பரோட சொல்லும்வே!" கர்ணம் சர்வே நம்பருடன் சொல்லச் சொல்ல, சின்னான் குறித்துக் கொண்டான். கடைசியாய் ஒரு கேள்வியைக் கேட்டான். "ஒம்ம நிலம் யார் பேர்ல இருக்கு?" "எனக்காவது விலக்குக் கிடையாதா?" "ஒமக்கு விலக்கு கூடாது - விலங்குதான் போடணும்! சரி சொல்லும்." "என்னோட நிலத்துல பிள்ளையார் கோயில் பக்கத்துல இருக்கிற நிலம், இந்தக் கிருஷ்ணன் பேர்ல இருக்கு." "பிள்ளையார் கோயில் நிலம் - கோயில் சொத்தாச்சே?" "இல்ல - அத பட்டாப் போட்டு, அப்புறம் இவன் பேருக்கு மாத்துனேன்." "நல்லது. காத்தாயி இவருக்குக் காபி கொடுத்துட்டு ஒன் வீட்லயே இவர கொஞ்ச நேரத்துக்குக் காவலுல வை." கர்ணத்தை இரண்டு பேர் தள்ளிக்கொண்டு காத்தாயியின் வீட்டுக்குப் போனபோது, இன்னும் சஸ்பெண்டிலேயே கிடக்கும் இடும்பன் சாமியும், இன்னொருவரும் மீசைக்காரனைத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். அவன் தலையில் இரண்டு எண்ணெய் டின்கள் இருந்தன. மீசையை சின்னானின் முன்னால் நிறுத்திவிட்டு, "உள்ளதைச் சொல்லு - இல்லன்னா முதுகுல டின்னு கட்டுவோம்" என்றார் இடும்பன்சாமி. மீசைக்காரன் அந்த மீசை படும்படி தரையில் விழுந்து, கூட்டத்தை வணங்கிவிட்டுப் புலம்பினான்: "சாமி சத்தியமாய் சொல்லுதேன் - இந்த எண்ணெய் டின்ன பள்ளிக்கூடத்து மானேஜர் ஜம்புலிங்கம்தான் தென்காசில ரகசியமா விக்கச் சொன்னாரு. கேர்ல இருந்த பிள்ளியளுக்கு கோதுமையை தாளிச்சு ரவையா கிண்டிக் கொடுக்கதுக்காக பள்ளிக்கூடத்துக்கு வந்த எண்ணெய் டின்னுன்னு சத்தியமாய் எனக்குத் தெரியாது. நெல்லு வண்டில அந்தத் தேவடியா மவன் தான் கொண்டு வந்து போட்டான். இதுதான் நிஜம்." ஆண்டியப்பன் பெருந்தன்மையாகப் பேசினான்: "பரவாயில்ல அண்ணாச்சி! நீ எனக்கு சின்ன வயசில நொங்கு வெட்டிக் கொடுத்ததை மறக்கல, சரி நீயும் எங்க ஜாதில சேரு. இல்லன்னா மல்லிகா ஒன் மகள் மேலயும் பழி போடுவாள்." மீசைக்காரன் சந்தோஷமாகச் சேர்ந்து கொண்டான். சின்னான் கூட்டத்தை உற்சாகப்படுத்தினான். "நான் என் வேலையை ராஜினாமாப் பண்ணிட்டேன். இனிமேல் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் உங்களோடயே இருப்பேன். இப்போ நாம ஊருக்குள் புகுந்து, நம்ம பேர்ல இருக்கிற பொருட்களைக் கைப்பற்றப் போறோம்! சட்டப்படி நமக்குச் சொந்தமான நிலத்துல உழப்போறோம்! ஆனால் யாரையும் நாம் அவமானப்படுத்தப்படாது. சட்டுப்புட்டுன்னு காரியத்த முடிச்சிடணும். நாலு மூலையிலயும் அவங்க போலீஸுக்குப் போகாதபடி ஆட்களை நிறுத்தியிருக்கேன். இருந்தாலும் சீக்கிரமாய் முடிக்கணும். புறப்படுவோமா? மச்சான்! நீரு மேளத்த அடியும். டேய் பயலுவளா... நான் எழுதிக் கொடுத்த பாட்டைப் பாடுங்கடா..." கூட்டத்தினருக்கு முன்னால் முத்துக்கருப்பனின் மேளத்திற்கு ஏற்ப சிறுவர் சிறுமியர் பாடினார்கள். சின்னான் முனீஸ்வரரிடம் இருந்த திரிசூலத்தை எடுத்து ஆண்டியப்பனிடம் கொடுத்தான். ஆலமரத்தோடு சேர்த்துக் கட்டி வைக்கப்பட்டிருந்த கூர்மையான பித்தளை வேலை எடுத்து பிச்சாண்டியிடம் கொடுத்தான். சிறுவர் சிறுமியர் தாள நயத்தோடு பாடினார்கள்.
புதிய ஜாதி புதிய ஜாதி புதிய ஜாதி பிறக்குது புன்மை கொன்று நன்மை ஆக்க புதிய ஜாதி பிறக்குது! பள்ளர் ஜாதி செத்தது; பறையர் ஜாதி செத்தது. கள்ளர் ஜாதி செத்தது; பிள்ளை ஜாதி செத்தது. குறவர் ஜாதி செத்தது; குடும்பர் ஜாதி செத்தது. ரெட்டி ஜாதி செத்தது; செட்டி ஜாதி செத்தது. சர்வ ஜாதி செத்துமே சமதர்ம ஜாதி பிறக்குது!
(புதிய) நாட்டார் ஜாதி செத்தது; நாடார் ஜாதி செத்தது. நாயுடு ஜாதி செத்தது; நாய்க்கர் ஜாதி செத்தது. கவுண்ட ஜாதி செத்தது; கௌட ஜாதி செத்தது. பலஜாதி செத்துமே பாட்டாளி ஜாதி பிறக்குது! பாட்டாளி ஜாதி பிறக்குது!
(புதிய) அணிவகுப்பை அறியாதவர்கள் கூட அணிவகுத்துச் சென்றார்கள். ஊர்வலம் போலவும், தீவட்டிக் கொள்ளை போலவும், ஊருக்குள் ஐம்பது பேராக நுழைந்த கூட்டத்தில், இப்போது பலர், சொல்லாமலே சேர்ந்தார்கள். யாரும் கேளாமலே அந்தப் பாட்டைப் பாடினார்கள். கூட்டத்திற்கு முன்னால், ஆண்டியப்பனும், சின்னானும் கம்பீரமாகப் போனார்கள். காத்தாயியும், தங்கம்மாவும் அதற்கு அடுத்தாற்போல் போனார்கள். ஏதோ ஒன்றை அடையாளம் கண்டுகொண்ட திருப்தியில், பல மதில்மேல் பூனைகள் கூட்டத்தையே ஒரு மதிலாக நினைத்து, அரண்போல் ஆனார்கள். ஊரில் உள்ள பெரும்பாலான ஏழை மக்கள் - ஆறடி உடம்பை 'நான்கடிக்குள்' கூனிக் குறுக்கி நடமாடி வந்த அந்த குற்றேவல்காரர்கள், இப்போது ஒரு பனையைவிட உயரமான நீளத்தில் உடம்பும், ஆறடி அகலத்தில் மார்புங் கொண்ட, இதுவரை பார்த்தறியாத ஒரே ஒரு அசுர மனிதனைப் போல் தோன்றினார்கள். ஒட்டுப்போட்ட ரவிக்கைகளும், கிழிந்த சேலைகளும், இத்துப்போன வேட்டிகளும், அற்றுப்போன துண்டுகளும், அந்த அசுர மனிதனின் ஆடைகளாக, பழைய ஜாதிகளைச் சாடிய புதிய பாடல், அந்த மனிதனின் ஆன்மிகக் குரலாக, ஆணென்றோ, பெண்ணென்றோ இல்லாமலும், அந்த இயல்புகள் அல்லாமலும் தோன்றிய அந்த அர்த்தநாரீஸ்வரத்தின் ஒவ்வொரு அடியும் பேரடியாக, ஒவ்வொரு வார்த்தையும் புதியதோர் பிரம்மோபதேசமாக, ஊரின் ஒவ்வொரு உறுப்பும் கதிகலங்கி, பின்னர் 'கதி' கண்டதுபோல் எதிரொலியாய் ஒலித்தது. |