3

     அடைக்கலசாமிக்கு அறுபது வயதிருக்கும். வைரம் பாய்ந்த உடம்பு. எலும்பும் சதையும் ஒன்றோடொன்று ஒட்டி, இறுகப்பற்றிய எஃகு. அதோடு மனிதர் ரோஷக்காரர். பண்ணையார்கள் சார்பில், பக்கத்து ஊர்களில் போய்க்கூட, எதிரிகளை அடித்துவிட்டு வரும் புறநானூற்று வீரர். அந்தப் பசுமாடு, அவரை முட்டுவதற்காக கொம்புகளைத் தரையில் சாய்த்தபோது அவர் அதை பயங்கரமாகப் பார்க்க, மாடு 'பசுவாகி' விட்டது.

     ஆண்டியப்பனை, தங்கை மகனாய் பார்க்காமல், பண்ணையாருக்குத் துரோகம் செய்த படு பாதகனாகவும், கள்ளத் தேங்காய் பறித்து, அப்படிப் பறிக்கும் போதே கீழே விழுந்து செத்துப் போன மைத்துனனின் மகனாகவும் கருதினார். ஆண்டியப்பனுக்கும், அவர் தாய்மாமனாகத் தெரியவில்லை. பரமசிவத்தின் காவல் நாயாகவே அவர் தோன்றினார். பண்ணை வயல்களில், அவர் அம்மா களை பிடுங்கும் போது ஒரு வாய்க்கால் அருகே பிறந்த அவர், இன்னும் அந்த வாய்க்காலைத் தாண்டாத, கொத்தடிமையாகவே, அவனுக்குக் காட்சி அளித்தார்.

     அடைக்கலசாமி, மாட்டின் கயிற்றுச் சுருக்கைப் பிரித்துக் கொண்டிருந்தார். ஆண்டியப்பன், அரிவாளுடன் அவரை நோக்கி ஆவேசமாகப் போய்க் கொண்டிருந்தான். தங்கம்மா, அவனைப் பிடித்துக் கொள்ளப் பார்த்தாள். அவன், அவளிடம் இருந்து திமிறிக் கொண்டே ஓடினான். வெளியே வந்த காத்தாயி, என்ன செய்வதென்று புரியாமல், கைகளை நெரித்தாள். இதற்குள் அங்கே வந்த, இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளான மாணிக்கம், கோபால் முதலிய இளைஞர்களும், மன்றத்தின் 'அட்வைசர்' மாசானமும் அருகே இருந்த பனை மரத்தருகே நின்று கொண்டார்கள். ஜாக்கிரதையான தூரம். மேற்கொண்டு நகரவில்லை.

     இதுவரை பனையோலைகளை வெட்டிக் கொண்டிருந்த அரிவாளுடன், ஆண்டியப்பன் பரமசிவமாகத் தெரிந்த அடைக்கலசாமியை நெருங்கிவிட்டான். கையைக் கூட ஓங்கிவிட்டான். காத்தாயி கதறினாள். தங்கம்மா, அய்யாவுக்குக் கேடயமாக நின்று கொண்டாள். அந்தக் கிழவரோ, எதையும் பொருட்படுத்தாமல், மாட்டின் கயிற்றை, முக்கால்வாசி அவிழ்த்துவிட்டார். ஆண்டியப்பன் 'எதிரியின்' மகள் தங்கம்மாவைத் தள்ளிவிட்டு, கிழவரை வெட்டப் போவதற்காக தன்னை தயார்படுத்திய போது - பசுமாட்டின் அப்பாவித்தனமான பார்வை, அவன் அரிவாள் பாய்ச்சலை அதிகமாக்கியபோது -

     உள்ளே இருந்து வெளியே வரமுடியாமலும், உபயோகமில்லாமல் போய்விட்டோமே என்பது மாதிரியும், புரள முடியாமல், எல்லாம் பொய்மையாய் போனது போல் தவித்த மீனாட்சியின் ஒப்பாரிச் சத்தம், வெளியே கேட்டது. ஆண்டியப்பனுக்கு அதிகமாகக் கேட்டது.

     "ஆயிரம் செய்தாலும் அவரு
     நம்ம தாய்மாம அண்ணாச்சி.
     அய்யாவுக்கு அய்யாவா
     நம்ம வளர்த்தவரு அண்ணாச்சி.
     தோளுல தூக்கி வச்சு
     தூங்க வச்சவரு அண்ணாச்சி.
     அவர வெட்டுமுன்ன...
     என்ன வெட்டு அண்ணாச்சி"

     ஏழைப் பெண்களுக்கு, தாங்கொணா சோகம் வரும்போது, ஒப்பாரி பிறக்கிறது. அந்த ஒப்பாரியே ஒரு காவியம் போல் வருகிறது. தாளநயங் கெட்ட வாழக்கையில் சலித்துப் போய், சோகத்துள் மூழ்கடிக்கப்படும்போது, அவலம் பாட்டாகவும், அந்தப் பாட்டு ஆன்மாவின் வெளிப்பாடாகவும் ஆகிவிடுகிறது. தாளம், தானாகப் பிறக்கிறது.

     மீனாட்சியின் ஒப்பாரியில் ஆன்மா பேசியிருக்க வேண்டும். அங்கே 'இழவு' விழவில்லை. மீனாட்சி, மேலும் மேலும் ஒப்பாரி வைக்க வைக்க ஆண்டியப்பனின் அரிவாள் கரம், வேறு பக்கமாக விழுந்து கொண்டிருந்தது. இளமையில் தாய் தந்தையரை இழந்தபிறகு, தாய்க்குத் தாயாய், தந்தைக்குத் தந்தையாய், தோளிலே தூக்கி வளர்த்த மாமா முன்னே வந்தார். 'மேலத்தெரு' ராமையா சிறுவனாக இருந்த இவனை ஏதோ ஒரு காரணத்திற்காக அடிக்க, அந்த ராமையாவை, அரிவாளை வைத்துக் கொண்டே ஓடஓடத் துரத்திய அடைக்கலசாமி முன்னால் வந்து சிரித்தார்.

     இந்தச் சமயத்தில், பசுமாட்டை பூரணமாக அவிழ்த்துவிட்ட அடைக்கலசாமி, உட்கார்ந்து கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தார். அவன் கையரிவாளைப் பார்த்துக் கொண்டே, "ஏமுல நின்னுட்ட? வெட்டுல! ஒரேயடியாய் வெட்டுல! நீ பெரிய மனுஷங்களப் பகைச்சிட்டு, அதனால படப்போற கஷ்டத்தப் பார்க்காமலே நான் ஒன் கையாலயே சாவுறேன். வெட்டுடா, வெட்டு" என்றார்.

     ஆண்டியப்பன் தடுமாறிக் கொண்டிருந்தபோது, மீனாட்சி, "அம்மா சாவும்போது, எங்கள ஒம்ம கையில ஒப்படைச்சத மறந்திட்டீரே மாமா! எங்கள அனாதையா விட்டுட்டீரே மாமா. நேத்து கூட என் வாயில சோத்த உருட்டிப் போட்டுக்கிட்டே, என் தலையைக் கோதிவிட்ட மாமாவே - இப்போ எங்க வாயில மண்ணள்ளி போடுறீரே! மாட்டப் பிடிக்கது நியாயமா?" என்று சொல்லிக்கொண்டே அழுதபோது, ஆண்டியப்பனுக்கு மீண்டும் கோபம் வந்தது.

     இதற்குள், காத்தாயி, ஆண்டியின் மோவாயைப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டே, "ஆண்டி மவராசா - நான் சொல்லுதத கேளும் ராசா! இது காலத்தோட கோலம்! ஒம்ம மாமா வெறும் அம்புதான். அத எய்தவரு பரமசிவம். அவரு மாட்ட மவராசனா, புண்ணியவான் கொண்டு போவட்டும். இது ஒம்ம மாடு... போலிஸ்ல சொல்லலாம். போன மாடு தானா வரும்; விட்டுடுமய்யா. விட்டுடு முதலாளி..." என்றாள்.

     இந்தச் சமயத்தில், பனைமரத்தடியருகே நின்ற இளைஞர் கோஷ்டியின் ஆலோசகர் மாசானமும், அங்கிருந்து நகராமலே, "ஆமாண்டா - மாட்ட இப்ப விடு; பார்க்க வேண்டிய இடத்துல, பாக்க வேண்டியதப் பாத்துப்புடலாம்" என்றார்.

     மாட்டை அவிழ்த்துவிட்டு, கன்றை அவிழ்க்கப் போன அடைக்கலசாமியிடம், "மாட்ட கொண்டு போறக் கையோட, என் தலையயும் கொண்டு போயிடும்" என்று சொல்லி, அரிவாளை அவரிடம் நீட்ட, அவர் அதை வாங்கி தூரமாக எறிந்துவிட்டு, கன்றை அவிழ்த்தார். இதற்குள் சத்தம் கேட்டு, கூட்டம் கூடிவிட்டது. மீசைக்காரன் உட்பட, பண்ணையாட்களும் வந்துவிட்டார்கள்.

     அடைக்கலசாமி, அவிழ்த்த மாட்டையும் கன்றையும் பண்ணையாள் ஒருவரிடம் கொடுத்து, "நீயே இந்த ரெண்டயும் கட்டு இந்தக் கயிறுல. கொஞ்சத்த வேணுமுன்னா கொடு. தூக்குப் போட்டுச் சாவணும்" என்று சொல்லிக் கொண்டே வடக்குப் பக்கமாகப் போனார்.

     பண்ணையாட்கள், மாட்டோடும் கன்றோடும் தெற்குப் பக்கமாகப் போனார்கள். மாடு, மிரண்டு மிரண்டு பார்த்தது. ஆண்டியப்பனிடம் வரத் துடிப்பது போல், பண்ணையாட்களை உதறிக்கொண்டே, 'ம்மா.. ம்மா' என்றது. அதன் கழுத்தில், ஆண்டியப்பன் வாங்கிப் போட்டிருந்த மணி தாளத்துடன் ஒலிக்க - கிட்டத்தட்ட மாட்டின் சத்தம், ஒப்பாரிபோல் கேட்டது. மாடு 'சண்டித்தனம்' செய்வதைப் புரிந்து கொண்ட மீசைக்காரன் அதன் கன்றை, வலுக்கட்டாயமாக தரதரவென்று இழுத்தான். அது நகராமல் போனதால், அதை சிரமப்பட்டுத் தூக்கிக் கொண்டு போனான். இப்போது, இந்த ஜெர்ஸி இனக் கலப்புப் பசு, தாய்மைக் காந்தத்தால் இழுக்கப்பட்டு தானாக நடந்தது.

     மாடு போவதை விட, தன் மானம், மரியாதை, கவுரவம் எல்லாம் தன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போவது போல் ஆண்டியப்பன் செய்வதறியாது திகைத்து நின்றான். பிறகு ஆவேசப்பட்டவன் போல், தரையில் கிடந்த அரிவாளை உஷ்ணமாகப் பார்த்தபோது, அவனது 'பனை மரத்தடி' சகாக்கள் அதன் நிழலைப் போல அவனருகே வந்து, அவனது கைகால்களைப் பிடித்துக் கொள்ள, மாசானம், "பொறுடா, மாடு எங்க போயிடப் போவுது... இந்தப் பரமசிவம் எங்க போயிடப் போறான்... நாங்க எங்க போயிடப் போறோம்... இந்த ஒண்ணு போதாது, அவன பஞ்சாயத்துத் தேர்தலுல தோற்கடிக்கதுக்கு" என்றார். பஞ்சாயத்துத் தேர்தல் முடிவது வரைக்கும், போன பசுமாடு, அவனுக்குக் கிடைக்கக் கூடாது என்று அவரே நினைப்பது போல், அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஒன்றன்பின் ஒன்றாக தாமதமாக வந்தன.

     இதற்குள், அடைக்கலசாமியின் கையைப் பிடித்த சீனியம்மா ஓடிவந்தாள். ஐம்பது வயதுக்காரி. அதிர்வெடி பேச்சுக்காரி.

     "என் புருஷனயால வெட்டப்போன - வளத்த கிடா மார்புல பாயுமுன்னு சொல்லுதது சரியாப் போச்சே! நீ நாசமாப் போவ! ஊரான் வீட்டுச் சொத்துக்கு ஆசப்பட்ட ஒன் நெஞ்சில, புத்து வர. ஒன் வீட்ல எள்ளு வைக்க - இழவு விழ..."

     சீனியம்மா, பேச்சோடு மட்டும் நிற்கவில்லை. நிற்கவும் மாட்டாள். கீழே குனிந்து, மண்ணை வாரி, மருமகன் மீது போடப் போனபோது, தங்கம்மா தாயின் கைகளைப் பிடித்துக் கொள்ள, கையிலிருந்த மண், அதை அள்ளியவள் தலையிலேயே விழ, சீனியம்மா, வாயை மகள் பக்கமாகத் திருப்பினாள்.

     "சண்டாளி! வேணுமுன்னா இப்பவே இந்தப் பய வீட்ல போயி இருந்துக்களா! பெத்த அப்பன வெட்டப் போயிருக்கான். இந்நேரம், என் மவராசன் மாண்டு மடிஞ்சி மண்ணா போயிருப்பாரு, இவ்வளத்தையும் பாத்துக்கிட்டு நீ இப்படி நிக்கதவிட, அவன் வீட்ல போயி இருந்துக்கிடலாம். இவா காத்தாயிய, 'வச்சிக்கிட்டது' மாதுரி உன்னையும் வச்சிக்கிடுவான்" என்றாள்.

     ஆண்டியப்பனுக்கு, மாட்டைப் பறிகொடுத்த ஆத்திரம் சீனியம்மா மீது திரும்பிக் கொண்டிருந்தது. தங்கம்மா, அவன் ஏடா கோடமாக எதையாவது சொல்லி, எதையாவது செய்து விடக் கூடாது என்பதுபோல், அவனைக் கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தாள். காத்தாயிக்கு கோபம் வந்தது. ஏதோ சொல்லப் போனாள். அதேசமயம், எதிர்பாராத இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்து போன அவளால், ஒன்றும் பேச முடியவில்லை. பிறகு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு 'இந்த முண்டய பதிலுக்குக் கேட்டால் விவகாரம் ஜாதிச் சண்டையா மாறினாலும் மாறலாம். பண்ணையாருங்களுக்குக் கொண்டாட்டமாயிடும்!' என்று தனக்குள்ளே பேசிவிட்டு, சீனியம்மாவை நிமிர்ந்து, நேராகப் பார்த்தாள்.

     அந்தப் பார்வையின் சூடு தாங்காத சீனியம்மா சற்று நடந்து, ஒரு மரத்தின் பக்கமாக நின்று கொண்டு, மகளை ஆவேசமாகப் பார்த்தாள். பிறகு "நீ வாரியா இல்லியாளா? இல்ல அவன் கூடயே இருக்கப் போறியாளா" என்றாள்.

     தங்கம்மா, அவளைப் பொருட்படுத்தாதது போல், புடவைத் தூசியைத் தட்டி விட்டுக்கொண்டே அங்கே நின்றாள். சீனியம்மாளுக்கு, 'இஞ்சி' தின்னதுமாதிரி இருந்தது.

     "ஒய்யா வடக்குப் பக்கமா போறாரு. அக்கா மவன் கொடுத்த அரிவா மரியாதையில சந்தோஷப்பட்டு ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிடப் போறாரு. வாளா - போயிப் பார்ப்போம்."

     உள்ளே, இன்னும் அழுகையை விடாத அண்ணியைப் போய்ப் பார்க்க நினைத்த தங்கம்மா, ரோஷக்காரரான தந்தை, அம்மா சொன்னதுபோல ஏதாவது செய்தாலும் செய்துவிடலாம் என்று நினைத்தவள் போல், பித்துப் பிடித்த தன் தலையை உசுப்பிவிட்டுக் கொண்டாள். பின்னர், அம்மாவை நோக்கி நகர்ந்தாள்.

     அத்தானைப் பார்த்துக்கொண்டே, நகர முடியாமல் நகர்ந்தாள். அவள் கண்கள், ஆண்டியப்பனின் கண்களுடன் ஒட்டிக் கொள்ளப் போவதுபோல் துடித்தன. அவனருகே நிற்கப் போகிறவைபோல், கால்கள் இழுத்தன. அவனைக் கிள்ளி விளையாடிய கைகள், இப்போது ஒன்றை ஒன்று நெரித்துக் கொண்டன. அவன் கோதிவிட்ட தலைமுடி, இப்போது பாவாடை மாதிரி, காற்றில் விரிந்தது.

     'பால் பொங்குற வேளையில... பானை உடைஞ்சிட்டே மச்சான்' என்று மனத்துக்குள்ளே ஒப்பாரி வைத்துக் கொண்டு, 'நீ யாரோ நான் யாரோன்னு ஆயிட்டோமே' என்று மனதுக்குள்ளேயே மாரடித்துக் கொண்டு, தான் யாரோ என்று தவித்தவள் போல், தாயின் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தாள்.

     மாடு போன வேகத்தில் மாமன் மகள் போவதை நிலைகுத்திய பார்வையுடன், நிலைகுலைந்த உள்ளத்துடன், 'அவள் போனது ஒரு அடியா அல்லது ஒரேயடியா' என்று கணக்குப் போட்டுக் கொண்டிருப்பது போல், அவள் கால் பாதத்தையும், உச்சந்தலையையும் உற்று உற்றுப் பார்த்த ஆண்டியப்பனை, மாசானம் உசுப்பினார்.

     "ஏண்டா பித்துப் பிடிச்சி நிக்குற? பரமசிவம்... 'இந்தா பிடின்னு' தலையக் குடுத்துட்டான். தானா மாட்டிக்கிட்டான். இத விடப் போறதுல்ல. வீடு புகுந்து மாட்டப் பிடிச்சவன் கையில காப்பு மாட்டாட்டா - நான் மாசானம் இல்ல!"

     மாணிக்கம் பிஏ.பி.டி.யும் ஆறுதல் சொன்னான்.

     "கவலைப்படாத ஆண்டி. இந்த விவகாரத்த வச்சே... நம்ம ஊர்ல இருக்கிற ஒவ்வொரு விவகாரத்தையும் தீர்த்துடலாம். நாங்க இருக்கது வரைக்கும் நீ கவலைப்பட வேண்டாம்."

     ஆண்டியப்பன், இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளைப் பார்த்தான். அங்கே வந்திருந்த ஏழெட்டுப் பேருமே படித்தவர்கள். ஊர் நீதிக்காக, உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருக்கிறவர்கள். இவர்கள் இருக்கும் வரை, அவன் அஞ்ச வேண்டியதில்லை. சொல்லப் போனால், ஊர் மோசடிகளை அம்பலமாக்கப் போகும் போராட்டத்தில் அவன் மாடு தற்செயலாகப் போயிருக்கிறது. அவ்வளவுதான். சற்று நேரம் வரை, மாடு கொண்டு போகப்பட்ட போது, பண்ணையாட்கள், தன்னையே கழுத்தில் கயிற்றைக் கட்டி, கால்களுக்கு இணையாக கைகளையும் ஊன்ற வைத்து, கொண்டு போவதுபோல் சிறுமைப்பட்ட ஆண்டி, சிறிது பெருமைப்பட்டுக் கொண்டான். பிறகு, அவர்களுடன் தோழமையுடன் பேசினான்:

     "நீங்க இருக்கும்போது நான் எதுக்காவ கவலைப்படணும்! மீசக்காரன் மாட்ட பிடிச்சிக்கிட்டு போவும்போது - அரிவாள எடுத்து ஒரே வெட்டா வெட்டணுமுன்னு நினைச்சேன். ஆனால், நீங்க குறுஞ்சிரிப்பா சிரிச்சிக்கிட்டு நிக்கத பார்த்ததும் ஏதோ விஷயம் இருக்குன்னு தெரிஞ்சுபோச்சு!"

     மாசானம், குறுக்கே புகுந்தார்.

     "வந்த பயலுவ, என் ஒத்த விரலுக்குப் பெறுவானுவளா? குட்டாம்பட்டி டீக்கடையில நாலு பேர தனியா நின்னு சமாளிச்ச ஆளுடா நான்! இவங்கள ஒரு அடியில விழத்தட்டிட்டு மாட்ட ஒன்கிட்ட கொடுக்க எவ்வளவு நேரம் ஆவும்? ஏன் சின்னய்யா செய்யல? அங்கதான் விஷயம் இருக்கு. எதிரி தப்புப் பண்ணும்போது அவன அந்தத் தப்ப பண்ணவிடணும். ஒரு தப்புக்கு ஒம்பது தப்பு செய்ய விடணும். அப்புறம் ஒரே போடு. ஆளு எழுந்திருக்கப்படாது."

     இன்னும், எட்டுத் தப்புகள் நடந்தால்தான், தனக்கு மாடு கிடைக்குமோ என்று சந்தேகப்பட்ட ஆண்டியப்பனுக்கு, பொறுக்க முடியவில்லை. வாய்விட்டே கேட்டான்:

     "சரி. இனும் என்ன பண்ணணும் - அதைச் சொல்லுங்க."

     "அதத்தான் சின்னய்யா சொல்லப் போனேன். நாம சட்டப்படி என்னெல்லாம் செய்யணுமோ அதச் செய்யுவோம். அதுக்கும் முடியாட்டா, சின்னய்யாகிட்ட இருக்கவே இருக்கு வேல் கம்பு ஒரே குத்து."

     இதற்குள் கையில் சில நோட்டுப் புத்தகங்களை வைத்திருந்த, என்ஜினீயரிங் டிப்ளமாக்காரனான கோபால் "நாம இளைஞர் நற்பணி மன்றத்துக்கு மாணிக்கம் தலைவராக இருக்கணும். நான் செயலாளரு. இவன் ரவி பொருளாளரு. மற்றவங்க எல்லாம் கமிட்டி மெம்பருங்க. தீர்மானம் போட்டாச்சு. இதுல ஒரு கையெழுத்துப் போடு" என்றான்.

     ஆண்டியப்பனுக்கு எரிச்சலான எரிச்சல். கையெழுத்துப் போடுவதற்கு இதுவா நேரம்? என்ன செய்ய... இவங்கள வச்சுதான், போன மாட்ட மீட்கணும்.

     ஆண்டியப்பன் மன்றக் குறிப்பேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு, "சரி. இப்ப என்ன செய்யலாம்" என்றான்.

     "முதல்ல கூட்டுறவு சங்கத்துல போயி சொல்லுவோம். அப்புறம் 'மாடு திருடி பரமசிவமே - இனிமேல் நீ ஓட்டு திருட முடியாது'ன்னு சுவர்ல, வாதமடக்கி இலையை வச்சி எழுதலாம்."

     மாசானத்தின் ஆலோசனையின் பேரில், இ.ந. மன்றத்தின் ஏழெட்டு நிர்வாகிகளும், ஆண்டியப்பனும் கூட்டுறவுச் சங்கத்திற்குப் போனார்கள் சங்கக் கட்டிடம் அங்கே வாங்கப்படும் பால் மாதிரி, வெள்ளை வெளேரென்று இருந்தது. பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கம் அது. ஆகையால் பல ஆசாமிகளும், 'பலே' ஆசாமிகளுமாக நல்ல கூட்டம்.

     உள்ளே போனால், கிளார்க் நாற்காலி. அதற்கு எதிர்த்தாற் போல் தலைவர் அறை. சங்க உறுப்பினர்கள், தாங்கள் கடனாக வாங்கிய மாடுகளின் பாலை, அங்கே வந்து கொட்டினார்கள். கிளார்க், ரிஜிஸ்டரில் வரவு வைத்துக் கொண்டிருந்தார். உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் 'மாமா மச்சான்' என்று பேசிக்கொண்டே பாலை ஊற்றினார்கள். இது உறுப்பினர்களின் ஒற்றுமையைக் காட்டுவதாக, வெளியூர்க்காரர்கள் நினைக்கலாம். விஷயம் அப்படி இல்லை. பல ஜாதிகள் நிறைந்த அந்தக் கிராமத்தில், குறிப்பிட்ட இரண்டு பங்காளிக் கோஷ்டிகளே, சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுகிறார்கள் என்பதுதான், இந்த 'மாமா மச்சானின்' நிஜமான அர்த்தம்.

     முன்னால் வந்து நின்றவர்களை எடை போட்டுக் கொண்டே, கூட்டுறவுச் சங்கத் தலைவர் மாயாண்டி, ரிஜிஸ்டரில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அவர், அடித்து அடித்து எழுதுவதைப் பார்த்தால், அநேகமாக, சர்க்கரை விநியோகம் பற்றிய கணக்காக இருக்கும்.

     மன்றத் தலைவர் மாணிக்கம் பேசப் போனான். செயலாளர் கோபால் பேசப் போனான். உப பொருளாளர் ரவி பேசப் போனான். ஆனால், மாசானத்தின் வாய் முந்திக் கொண்டது.

     "நம்ம கூட்டுறவு மாட்ட, பரமசிவம் ஆள்வச்சி பிடிச்சிக்கிட்டு போயிட்டாரு. இத சங்கம் சும்மா விடப்படாது!"

     மாயாண்டி, ரிஜிஸ்டரில் இருந்து கண்களை விலக்காமலே கேட்டார்:

     "எந்த மாட்ட?"

     "நம்ம ஆண்டியப்பனோட மாட்ட."

     "இது என்ன போலீஸ் ஸ்டேஷனா? சங்கத்தப் பொறுத்த அளவுல, மாடு வாங்குனவங்க, பால் ஊத்தணும். இல்லன்னா தவணப் பணத்த கட்டணும். யாரு மாட்ட யாரு பிடிச்சா என்கிறது சங்கத்துக்கு சம்பந்தமில்லாத விஷயம். சட்டப்படி பார்த்தால், ஆண்டி, பணம் கட்டலன்னா, சங்கம் கோர்ட்ல வழக்குப் போடும். கோர்ட்லதான், அவன் மாடு எப்படிப் போயிட்டுதுன்னு சொல்லலாம். பரமசிவம் மச்சானுக்கும் அவனுக்கும் ஆயிரம் இருக்கும். அதுக்கு சங்கம் பொறுப்பாவாது. ஒரு வாரம் பார்ப்பேன். பணம் கட்டாட்டா, கோர்ட்ல வழக்குத்தான் போடுவேன். மாட்டுக்கு ஆண்டிதான் பொறுப்பு. அத காப்பாத்த வேண்டிய பொறுப்பும் அவனுக்குத்தான். சங்கத்துக்கு சம்பந்தமில்லாத சமாசாரம். சரி போயிட்டு வாரீயளா?"

     மாசானம் கோபத்தோடு பார்த்தார்.

     "நீரு பேசுறது முறையில்லாத பேச்சு. முழுப் பூசணிக்காய சோத்துக்குள்ள மறைக்கப் பாக்கிற பேச்சு. சங்கத் தலைவர் என்கிற பொறுப்போட பேசணும்."

     "நான் பொறுப்போட பேச ஆரம்பிச்சா அப்புறம் நீரு வெறுப்போட போவ வேண்டியதிருக்கும். போன வருஷம் நீரு உழவு மாடு சங்கக் கடனுல வாங்கினீரு. சரி. சந்தையில் இருந்து மாட்ட வீட்ல கட்டிட்டு அப்புறமாவது வித்திருக்கலாம். செஞ்சீரா? வாங்குன சந்தையிலேயே மாட்ட வித்தீரே - இதுக்கும் வேணுமுன்னா நோட்டீஸ் அனுப்பட்டுமா?"

     "மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போடாதேயும் மச்சான்."

     "நானும் அதத்தான் சொல்லுதேன். முழங்காலுல அடிச்சால், மொட்டத் தலையில் வலிக்கத்தான் செய்யும். மொட்டத் தலையில காயம் பட்டால் முழங்காலத் தூக்க முடியாது. நான் சொல்றது உமக்குப் புரியுதா... இல்ல புரிய வைக்கணுமா?"

     மாசானத்திற்கும் புரிந்தது. புரிய வேண்டாத அளவுக்குப் புரிந்தது. ஆண்டியப்பனுக்கும் புரிந்தது. அயோக்கியத்தனம் செய்கிறவன் நியாயம் பேசினால், அந்த நியாயமே அநியாயமாகிவிடும் என்பது புரிந்தது. என்ன செய்ய - எப்படியாவது மாட்டை மீட்டியாக வேண்டும். அதுவரை, மாசானத்திடமிருந்து மீளக்கூடாது.

     'பொருளாளர்' கோபால் ஒரு யோசனை சொன்னான்.

     "ஆல்ரைட், மணியக்காரர் கிட்ட போவோம். அவரு கிட்ட மாடு திருடு போனதுக்கு ஒரு ரிப்போர்ட் வாங்கிக் கிட்டு, போலீஸ் ஸ்டேஷன் போவோம். நாம் யார் என்கிறத இவங்களுக்குக் காட்டியாகணும்."

     மாசானம் 'கழட்டிக்' கொண்டார். இதர நபர்கள் ஊர்வலம் போலப் போனார்கள். மணியக்காரர் மாடசாமியின் வீட்டு வாசலுக்குப் போனார்கள். வெளித் திண்ணையில் உட்கார்ந்து உள்ளே எட்டிப் பார்த்தார்கள். இரண்டு தையல் மிஷின்கள், மூன்று நெற்குதிர்கள், இரண்டு ஜோடி உழவு மாடுகள், தழைமிதிக் கருவிகள், யந்திரக் கலப்பைகள்.

     மாடசாமியின் மனைவியான, மகளிர் சங்கத் தலைவி சரோஜாவும், அவர் மகள் மல்லிகாவும் ஒரு பக்கம் உட்கார்ந்திருந்தார்கள். எதிரே அடைக்கலசாமியும் அவர் மகள் தங்கம்மாவும் நின்று கொண்டிருந்தார்கள். அடைக்கலசாமி மகளை அதட்டினார்.

     "நாம பரம்பர பரம்பரயா சேவகம் செய்யுற குடும்பம் இது. மல்லிகாவ நீ திட்டுனது தப்பு. தெரியாம பேசிட்டேன்னு மட்டும் நீ சொல்லல. இப்பவே ஒரு கொலை நடக்கும். உம்... மல்லிகா கிட்ட..."