உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
5 தாய்ப்பாலே விஷமானது போல, தன் கையே தன் கண்ணைக் களைந்தது போல, லாக்கப்பிற்குள் ஆண்டியப்பன் தலையில் கை வைத்தபடி, உட்கார்ந்தான். நீதி நீதி என்கிறார்களே - இதற்குப் பேர்தான் நீதியா? தர்மம் தர்மம் என்கிறார்களே - இதற்குப் பேர்தான் தர்மமா? இதோ, இந்தப் பூட்டிய அறைக்குள் இருக்கும் அவனுக்கு தொலைதூரத்தில் நடக்கும் ஒரு பொதுக் கூட்டத்தின் பேச்சுச் சத்தம் காதைக் குத்துகிறது. 'ஏழையை ஏய்க்கின்ற காலம் போய்விட்டது' என்று ஒருவர் கனைக்கிறார். உடனே பலர் கை தட்டுகிறார்கள். அப்படிக் கை தட்டுபவர்கள் அநேகமாக ஏழைகளாகத்தான் இருக்க வேண்டும். சொல்லமுடியாத கை தட்டல். இடிபோன்ற முழக்கப் பேச்சு. 'யாருமே அதர்மத்தால் பாதிக்கப்பட அனுமதிக்கப்படாது' என்ற பசப்பல். ஆனால் இங்கே, இதே ஆண்டியப்பன், அங்கே போய் நடந்தததைச் சொல்ல வேண்டும் என்பதுபோல், இரும்புக் கம்பிகளை அழுந்தப் பற்றுகிறான். பைத்தியக்காரன்! நடந்ததைச் சொன்னாலும், அங்கேயும் ஒரு வழக்கு 'புக்' ஆகலாம் என்பதை அறியாத பேராசைக்காரன். ஏழைக்கு இந்த மாதிரி பேராசைதானே இருக்க முடியும்? எந்த இடத்தில் 'ஏழைக்கும் காலம் வந்துவிட்டது' என்று முழங்கப்படுகிறதோ, அங்கே இருந்து ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இதோ இந்த இடத்தில் தான், இந்த ஏழை புலம்பத் தெரியாமல், புரிந்தது புரியாமல், தெரிந்தது தெரியாமல் தவிக்கிறான். திடீரென்று அந்தப் பொதுக்கூட்டத்தில் குமார் பேசுவதும், அவன் காதில் தானாய்ப் பாய்கிறது. ஆண்டியப்பன், வெறுப்போடு சப்-இன்ஸ்பெக்டர் மேஜையைப் பார்க்கிறான். ஒரு இலக்கிய விழா அழைப்பிதழ் தென்படுகிறது. 'நீதியில் சிறந்தவன் நெடுஞ்செழியனா அல்லது மனுநீதிச் சோழனா' என்ற பட்டிமன்றம் நடக்கப் போகிறதாம். தேவைதான். நடக்கக் கூடாதவைகள் நடக்கும்போது, இது மிக மிக அவசியம்தான். அப்பனைக் கொல்கிறவன், சத்திரம் கட்டிய கதைதான். நடந்ததை நினைக்க நினைக்க, அவனுக்கு நினைப்போ, அந்த நினைப்பிற்கான நெஞ்சமோ, தேவையில்லை என்பதுபோல் தோன்றியது. அவன், 'உள்ளே' போனதும், வெளியே இருந்த இளைஞர் நற்பணி மன்றக்காரர்கள், முதலில் விறைத்துப் போனார்கள். பிறகு மாணிக்கம், "சார் இது அநியாயம்" என்று யார் வேண்டுமானாலும், அவனைப் பயன்படுத்தலாம் என்பது மாதிரி பேசினான். கடைசி வார்த்தையை, அவன் உச்சரித்த விதத்தில், 'அ'வை விழுங்கிவிட்டவன் போலவும் தோன்றியது. சப்-இன்ஸ்பெக்டர் சினந்து பேசினார். "நான் உங்களை 'வாச்' பண்ணிக்கிட்டுதான் வாரேன். அன்றைக்குப் பொதுக்கூட்டத்தில் கலாட்டா பண்ணப் போனீங்க. இப்போ இங்கேயே கலாட்டா பண்ண வந்திருக்கீங்க. எல்லாம் என் தப்புதான்" என்று அவர் 'சட்டயர்' செய்த போது, மாணிக்கமும், மற்றவர்களும் தப்புச் செய்தவர்கள் போல் மருவியபோது, ராமதுரை என்ற இ.ந. வாலிபன் "சார்! ஊர்ல வந்து நடந்ததை விசாரியுங்க. அப்புறம் வேணுமுன்னால் இவனை என்ன வேணுமுன்னாலும் பண்ணுங்க. எங்க பேர்ல தப்புன்னு தெரிய வந்தால் செருப்பை வைத்து வேணுமுன்னாலும் எங்கள அடியுங்க" என்று சொன்னபோது சப்-இன்ஸ்பெக்டர் அமைதியாகக் கேட்டார். "ஒங்க பேரு?" "ராமதுரை சார்." "என்ன வேலை பாக்குறே?" "கவர்மெண்ட் செர்வண்ட்!" "ஓ! அந்த தைரியமா... ஒங்க டிபார்ட்மெண்ட் பெயரைச் சொல்லுங்க. உங்களுக்கு இன்னைக்கே ஒரு ரிப்போர்ட் அனுப்பிடுறேன்." ராமதுரை பயந்துவிட்டான்! "சார்! எனக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு சார். இனிமேல் இந்த மாதிரி வம்பு தும்புக்குப் போகமாட்டேன் சார்... சார்... சார்..." என்று சொல்லிவிட்டு, அந்தப் போலீஸ் அதிகாரி புன்னகைத்தபோது, ஆசாமி வெளியேறி விட்டான். மிஞ்சாமலேயே மிஞ்சி இருந்தவர்களும் போகலாம் என்பதுபோல் சப்-இன்ஸ்பெக்டர் எழுந்து நின்றுகொண்டே, தீர்மானமாகப் பேசினார். "ஆல்ரைட். ஒங்கள மாதிரி வெட்டியாய் இருக்க எனக்கு நேரமில்ல. இவன் பேரு என்னடா... நீங்க சும்மா இருங்க. அவனே சொல்லட்டும். ஆண்டியா... ஆம். இந்த ஆண்டிப்பயல் செய்திருக்கது அட்டம்ப்ட் டு மர்டர்... கொலை செய்வதற்கான ஹோமிசைட் முயற்சி. அதனால் இவனை இன்னும் இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ளே மாஜிஸ்திரேட் முன்னால் ஆஜர் பண்ணப்போறோம்! நீங்க அங்க வந்து மாதம் முந்நூறு ரூபாய்க்கு மேல வருமானம் உள்ள இரண்டு பொறுப்பான நபர்களைக் கொண்டு வந்து, ஜாமீன் கொடுத்து மீட்கலாம். இனிமேயாவது ஒழுங்கா இருங்க. நீங்கல்லாம் படிச்சவங்க. இது நம்ம நாடு. புண்ணிய பூமி. இதுக்காக உழைக்கணுமே தவிர, இப்படி உருப்படாமல் போகக்கூடாது. உங்களுக்கு, வேலைக்கு ஆர்டர் வரும்போது, நாங்கதான் உங்களைப் பற்றிய கேரெக்டர் வெரிபிகேஷனை செய்யணுங்கறதை மறந்திடாதீங்க. ஓகே? கேன் கோ டபுளப்." இ.ந. இளைஞர்கள், ஆண்டியையே பார்க்க, அவன், தன் ஜெர்ஸி மாடு தன்னை எப்படிப் பார்த்ததோ, அப்படி அவர்களைப் பார்க்க, அந்த இளைஞர்கள் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்தவர்கள் போல், ஒரு சேர வெளியேறினார்கள். கோபால் (இ.ந. செயலாளர் - என்ஜினியரிங் டிப்ளமா) மட்டும் "கவலைப்படாத ஆண்டி. ஒரு நொடில ஜாமீன் கொண்டு வாறோம்" என்று சொல்லிவிட்டு, தன் கண்ணிமைகளைத் துடைத்துக் கொண்டே போனான். அவர்கள் போனதும், சப்-இன்ஸ்பெக்டர், "என்னடா... ஒன் மனசுல நினைச்சுக்கிட்டே? ஒன்னை மாதிரி எத்தனை ரவுடிங்களைப் பாத்திருப்பேன்" என்று சொல்லிக் கொண்டே போய்விட்டார் எங்கோ... சப்-இன்ஸ்பெக்டர் போனதும், ஸ்டேஷனுக்கு தானே இன்சார்ஜ் என்று அறிமுகப்படுத்த விரும்பியதுபோல், ஹெட்கான்ஸ்டபிள் லாக்கப்பைத் திறந்து, உள்ளே வந்து, "சோமாரி... சோதாப் பயலே! அவனவன் இருக்கிற வேலையைக் கவனிக்க முடியாம துடிக்கிறான். நீ சட்டம் பேசிக்கிட்டு வந்துட்டியோ" என்று 'ரவுடி' ஆண்டியப்பனைப் பார்த்து, லத்திக் கம்பை ஆட்டிக்கொண்டே சொன்னபோது, ஆண்டியும், சாகத் துணிந்த தைரியத்தில் பேசினான்: "நானும் சட்டம் பேசுற காலம் வருது சார். ஏழைங்க சட்டம் பேசுறதுக்கும், வக்கீல் சட்டம் பேசுறதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு சார். ஒரு நோயாளி உலகத்துல உள்ள எல்லா மருந்துகளோட விவரத்தையும் தெரிஞ்சி வச்சிருந்தால் அந்த நோயாளிக்கு, எந்த டாக்டருடைய மருந்தும் பிரயோஜனப்படல்லன்னு அர்த்தம். இதுமாதிரிதான், ஏழைங்க... நியாயத்தத் தேடி, அது கிடைக்கிறதுக்கான தேடுன முயற்சியில நியாயம் கிடைக்காட்டாலும் சட்டத்தைப் புரிஞ்சிக்கிறாங்க. உதாரணமா என்னோட சொந்த மாடு, பட்டப் பகலுல பறிபோனதச் சொல்ல வந்தேன். இங்க வந்த பிறவு, மாடு கிடைக்கல்லன்னாலும், லாக்கப் கிடைச்சிருக்கு. அதோடு கொலை செய்ய முயற்சிக்கிறவனை, இருபத்து நாலு மணி நேரத்துல மாஜிஸ்திரேட் முன்னால ஆஜர்படுத்தணும், யார் ஜாமீன் எடுக்கணும் என்கிற விவரமும் தெரிஞ்சிட்டு." ஆண்டியப்பனை, பேச்சால் பணிய வைக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட ஹெட்கான்ஸ்டபிள், லத்திக் கம்பைத் தூக்கியபோது, "அடியுங்க சார் - பண்ணையாருங்க, என்னைக் கொல்லத்தான் போறாங்க. அது எனக்கு சம்மதமில்ல. என்ன மாதிரி, ஒரு ஏழை கையாலயே சாகணும் என்கிற ஆசையில சொல்றேன் - பரவாயில்ல, இந்தத் தொழிலாளிய போலீஸ் தொழிலாளியான நீங்களே கொல்லுங்க" என்றான். ஹெட்கான்ஸ்டபிள் வாயடைத்துப் போனார். அவனையே வியப்போடு பார்த்த அந்தச் சிவப்புத் தொப்பி அணிந்த கறுப்பு மனிதர், அவனைப் பார்த்து "டீ சாப்புடுறீயாடா?" என்றார். எப்படியோ, இரவுப்பொழுது போய்விட்டது. அந்த அறைக்குள்ளே தூங்காமலேயே தூங்கிய ஆண்டி, தன்னோடு அடைபட்டுக் கிடந்த சைக்கிள் திருடிகள், பட்டைச் சாராய வகையறாக்களைப் பார்த்தான். இவர்கள் ஏன் இப்படிக் கெட்டுப் போகிறார்கள்? சீச்சி... ஆண்டிக்கு ஒரு சிந்தனை. இவர்களும் என்னைப் போல் நியாயங் கேட்டு, அநியாயம் பெற்றவர்களாக இருக்கலாம். அயோக்கியன் யோக்கியனாகவும், யோக்கியன் பயந்தாங்கொள்ளியாகவும் ஆகிப்போன இந்தக் காலத்தில் ஏழைகளில் ஒரு சாரார் இப்படி ஆகிறார்கள் என்றால், அதற்கு அவர்கள் பொறுப்பல்ல. சிந்தனையைப் பின்னோக்கிச் செலுத்திய ஆண்டியப்பன், அந்த போலீஸ் நிலைய காம்பவுண்ட் வாசலையே பார்த்தான். அவனை, மாஜிஸ்திரேட் முன்னால் ஆஜர் படுத்த, போலீஸ் வான் நிற்கிறது. ஆனால் ஜாமீன் எடுக்க ஆளைக் காணவில்லை. மாணிக்கமும், கோபாலும் மற்ற இளைஞர்களும் எங்கே போய்விட்டார்கள் என்று தெரியவில்லை. மீனாட்சி எப்படித் தவிக்கிறாளோ... குழந்தைக்குப் பால் கொடுக்க காத்தாயி வந்திருக்க மாட்டாள். எப்படி வருவாள்? அவளைத்தான், அவன் மாமன் பெண்டாட்டி பழி போட்டு பேசிவிட்டாளே. தங்கம்மாவை இந்நேரம் அந்தக் கிழட்டுப் பயல் அடித்துக் கொன்னாலும் கொன்னுருப்பான். மகள் என்று அடித்து, நான் என்று கொன்றிருப்பான். திடீரென்று சத்தங்கேட்டு, ஆண்டியப்பன் கண்களைச் சுழற்றினான். ஜாமீன் எடுக்க வந்திருப்பார்களோ... ஜாமீன்காரர்கள் வரவில்லை. அந்தக் காலத்து ஜமீன்தாரின் வாரிசுகளாக, தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்ட இந்தக் காலத்து பரமசிவமும், குமாரும் வந்தார்கள். அவர்களை அங்கே பார்த்ததுமே, சப்-இன்ஸ்பெக்டர், இங்கே எழுந்தது மட்டுமல்ல - எதிர்கொண்டழைக்கவும் போய்விட்டார். பரமசிவமும் குமாரும் அவர் காட்டிய நாற்காலிகளில் அமர்ந்தார்கள். குமார், "தேங்க் யூ வெரிமச். நீங்க இல்லாட்டா ஊர்ல லா அண்ட் ஆர்டர் ப்ராப்ளம் வந்திருக்கும்" என்றார். பஞ்சாயத்துத் தலைவர், "இன்னைக்கு சர்வகட்சி பொதுக்கூட்டம். நான் தலைமை தாங்கினேன், இவன் பேசினான்" என்ற போது, சப்-இன்ஸ்பெக்டர், "நான் தான் கூட்டம் நடத்தறதுக்கே லைசென்ஸ் கொடுத்தது" என்றார். உடனே எல்லோரும் சிரித்தார்கள். குமார் மெல்ல எழுந்து, ஆண்டியப்பன் பக்கமாக வந்து, மெல்லிய குரலில் "ஆண்டி... இனுமே ஒழுங்கா நடந்துக்குவேன்னு சொல்லு. விட்டுடச் சொல்றேன். இல்லன்னா ஏழு வருஷம். ஏதோ பழகுன பாசத்துல கேக்குறேன்" என்றான். ஆண்டியப்பன் யோசித்தான். நமக்கேன் வம்பு? பேசாமல், குமார் சொன்னபடி கேட்கலாமா? அடுத்த வருஷம் இவன் தயவுலேயே, பறிபோகாத பசுமாட்டை வாங்கலாம். இப்போ இவன் பேச்சைக் கேட்டு போனால், குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடக்கும் தங்கச்சிய போய்ப் பார்க்கலாமே. பாலில்லாமல் சாகக் கிடக்கும் குழந்தைக்கு ஏதாவது வழி பண்ணலாம். தங்கம்மா முகத்தைப் பார்க்கலாம். பழையபடியும் கிணறு வெட்டவோ, மரம் வெட்டவோ போவலாம். மாமாவும் சந்தோஷப்பட்டு, அவர் கையாலேயே தங்கம்பாவை கைப்பிடித்துக் கொடுப்பார். படித்தவனுகளே பொறுப்பில்லாதபோது, படிக்காத நான் எதுக்கு வம்பை விலை கொடுத்து வாங்கணும். கூடாது, கூடாது. படித்தவர்களால் உருப்படாமல் போன இந்த ஊரை படிக்காதவங்களாலதான் முறைப் படுத்த முடியும். நான், என் சுயநலத்துக்காக, ஒரு லட்சியத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது. மகாத்மா காந்தி படாத கஷ்டமா... நான், என்னுடைய பூரண சுதந்திரத்தை அடமானம் வைத்து, இந்த அற்ப சுதந்திரத்தை வாங்க மாட்டேன். நான் குமார் இல்ல. நான் மனிதன் - மனிதன். அவன் வாயில் இருந்து வருவதையே, அப்போதைக்குத் தேவ வாக்காகக் கருதியவன் போல், இளைஞர் பெரும்பணி மன்றத் தலைவன் குமார், அவனை உற்றுப் பார்த்தபோது, ஆண்டியப்பன் திட்டவட்டமாகக் கூறினான். "நான் பதவிக்கும் பொண்ணுக்கும் ஆசப்படுறவன் இல்ல குமார்! நான் நியாயத்துக்கு ஆசப்படுறவன். நீ பழகுன தோசத்துல கேட்டதுக்கு நன்றி. நீ உண்மையைத் தான் சொல்லியிருக்க. நீ என்கிட்ட பழகி, மாட்ட வச்சிக்கிடச் சொன்னதும், நான் உன்கிட்ட பழகி, உன்னைத் தலைவனாய் ஒத்துக்கிட்டதும் ஒரு தோசந்தான். ஒங்களால என்ன பண்ணணுமோ அதப் பண்ணுங்க..." குமாரின் சிவப்பு முகம், ரத்தச் சிவப்பாகியது. அவனை எரிப்பதுபோல் பார்த்துக் கொண்டே, பரமசிவம் மாமா பக்கத்தில் போய் உட்கார்ந்தான். கான்ஸ்டபிள் கொண்டுவந்த கலர் பாட்டல்கள் காலியானதும், அவர்கள் போய்விட்டார்கள். "பெரியவங்க சின்னவங்க என்கிற மரியாதை இல்லாமப் போயிட்டுது என்ன..." என்று சப்-இன்ஸ்பெக்டர், அவனைப் பார்த்து முறைத்துக் கேட்டார். முறைத்தவர், விறைத்து உட்கார்ந்தார். சின்னான், அங்கே அலட்சியமாக உள்ளே வந்து, அவர் சொல்லுமுன்னாலேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். பிறகு ஆண்டியப்பனையும் லேசாகப் பார்த்துவிட்டு, மீண்டும் பார்வையை அலட்சியமாக விட்டான். அவன் வந்ததால் வழி கிடைத்ததாய் நினைத்த ஆண்டியப்பன், 'சின்னான் நீயுமா... நீயுமா...' என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டு, வேறுபுறமாகத் திரும்பி, கண்களைத் துடைத்துக் கொண்டான். |