உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
6 சப்-இன்ஸ்பெக்டருக்கு சின்னான் உட்கார்ந்த தோரணையும், பார்த்த விதமும், பயப்படாதவன் போல் கண்ணைச் சிமிட்டிய லாவகமும், கட்டோடு பிடிக்கவில்லை. ஆகையால் அவனைக் 'கண்டுக்காதது போல்' ரைட்டர் எழுதி வைத்த ஏதோ ஒரு குறிப்பைப் படிப்பது போல பாசாங்கு செய்தார். மணியடித்த டெலிபோனை எடுத்து "டோண்ட் ஒர்ரி... நாலு நாளைக்கு லாக்கப்புல போட்டு, கையில காலுல விசாரிச்சா சரியாப் போயிடும்" என்று சொல்லிக்கொண்டே அவனை ஜாடை மாடையாகப் பார்த்தார். பத்து நிமிடம் போயிருக்கும். சின்னானால் பொறுமையாக இருக்க முடியவில்லை. "வரச் சொன்னீங்களாம். விஷயத்த சீக்கிரமாச் சொல்லலாமா? ஏன்னா நானும் பிஸி" என்றான் வினயமாக. சப்-இன்ஸ்பெக்டர், அவனை எரிச்சலாகப் பார்த்துக் கொண்டே "அன்றைக்கு மினிஸ்டர் கலந்துக்கிட்ட கூட்டத்தில் புகுந்து, சின்னப் பையங்களை அதட்டிக் கூட்டிக்கிட்டுப் போனது அனாவசியமான ஒரு சட்ட-ஒழுங்குப் பிரச்சினை. அப்பவே, நான் ஒங்களை அரெஸ்ட் பண்ணியிருக்கலாம். படிச்சவராச்சேன்னு செய்யல... அண்டர்ஸ்டாண்ட்? எச்சரிக்கை செய்யறதுக்காகக் கூப்பிட்டேன்" என்றார். "பொய்! என்னை அரெஸ்ட் பண்ணினால், சேரிக்காரங்க - உங்க பாணியில சொல்லப் போனால், இந்தப் பறப்பய பிள்ளைகள், இங்கு வந்துடுவாங்கன்னு பயம். இதனால - நீங்க எங்கேயாவது போக வேண்டியதிருக்குமோ என்கிற பயம்!" "யூ ஆர் எக்ஸீடிங் யுவர் லிமிட்." "லிமிட் மீறிப் போகிறவங்களுக்கு, லிமிட்டுக்குள்ள இருந்து பதில் சொல்ல முடியாது. போலீஸ் ஸ்டேஷன், ஒரு சமூக ஸ்தாபனம். ஒங்கள் பிரைவேட் லிமிடெட் ஸ்தாபனம் இல்ல." "இந்தா பாருங்க மிஸ்டர். அதிகப் பிரசங்கித்தனம் வேண்டாம். நீங்க ஒரு வகுப்புவாதியாய் மாறுறது உங்களுக்கே நல்லதுல்ல." "ஏழை ஹரிஜனப் பையங்களுக்கு, தாழ்வு மனப்பான்மை வரக்கூடாதுன்னும், அவங்க, ஏமாத்துப் பேர்வழிகளுக்கு பகடைக்காயாய் மாறக்கூடாதுன்னு நினைத்தும் என் பிள்ளைங்களை, நான் கூட்டிட்டுப் போறது வகுப்புவாதம். அதே கூட்டத்துல ஜாதிப் பையன்களை, ஏழைப் பையன்களா ஜோடிச்சது என்ன வாதம்? எங்க பையன்கள போல, ஜாதிப் பையன்களுக்கு சீருடை கொடுத்த மோசடியைப் பற்றி, இப்பவே ஒரு கம்ளெயிண்ட் கொடுக்கேன். ஒங்களால ஆக்ஷன் எடுக்க முடியுமா?" "அது அரசியல் பிரச்சினை." "பிறகு என்கிட்ட பேச, உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு?" "மீஸ்டர் நீங்க போஸ்டல் டிபார்ட்மெண்ட்ல வேலை பார்க்கது எனக்குத் தெரியும். ஒங்களைப் பற்றி ஒரு 'சீக்ரட்' ரிப்போர்ட் அனுப்ப அதிக நேரம் ஆகாது." "முதல்ல அதைச் செய்யுங்க சார். அங்கே வேலை பார்க்கிற என்னோட சகாக்கள் 'நான் கோட்டாவுல வந்தவன்னு' மனசுக்குள்ளேயே எரியுற எரிச்சல் என்னையும் சுடுது. அதோட, இன்றைய சமூக அமைப்பில் மாதச் சம்பளக்காரன் எவனும் உருப்படப் போறதில்ல. இருந்தாலும், நோஞ்சான் குழந்தை செத்தால் தேவலன்னு நினைத்தாலும், அது சாகிறதைப் பார்க்க விரும்பாத தந்தையைப் போல, எனக்கும் வேலையை ராஜினாமாச் செய்ய மனம் வரல. தானா முடியாத ஒன்றை, உங்கள் போலீஸ் பேனா மூலமாவது செய்யுங்க. ஒங்களுக்குக் கோடி புண்ணியம். இவ்வளவு பேசறீங்களே... இந்த ஆண்டியப்பனுக்கு, நீங்க வழங்கி இருக்கிற நியாயம், நியாயந்தானா?" "சம்பந்தமில்லாத விஷயத்தைப் பேசாதீங்க." "இன்னும் ஒரே ஒரு சம்பந்தமில்லாத விஷயத்தை மட்டும் பேசிட்டு, வாயை மூடிக்கிறேன். உங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும் மிஸ்டர் தங்கப்பன். கஷ்டப்பட்ட ஒரு ஏழைக் குடும்பத்தில் படித்து முன்னேறி, பெரிய பெரிய சமூக லட்சியங்களோட வேலையில் சேர்ந்தவரு. ஆரம்ப காலத்துல ஏழைகளுக்காகப் போராடி, பணக்காரர்களோட விரோதத்தைச் சம்பாதிச்சவரு. இதனாலேயே ஒரு தடவ சஸ்பெண்ட் ஆன தியாகி. 'நாம சஸ்பெண்ட் ஆனதுக்கு, இந்த ஏழப் பயலுவதானே காரணமுன்னு நினைத்து' ஏழைகள் மேல இருந்த அன்பை, வெறுப்பாய் மாத்திக்கிட்டவரு. இதுக்கு ஒங்களைக் காரணமுன்னும் சொல்லமாட்டேன். இந்த சமூக அமைப்புதான் காரணம். கன்வெர்ட்ஸ் ஆர் ஆல்வேய்ஸ் எக்ஸ்ட்ரீமிட்ஸ். கட்சி மாறுறவன், தீவிரவாதியாய் ஆகிறது சகஜம். அப்புறம் நான் வரட்டுமா - இல்ல, எதுலயாவது கையெழுத்துப் போடணுமா, இல்ல எதுக்குள்ளயாவது போய் நிற்கணுமா?" சப்-இன்ஸ்பெக்டர் தலையைக் கவிழ்த்துக் கொண்டே 'போகலாம்' என்றார். அவர், சின்னப்பிள்ளை மாதிரி நெளிந்தது, சின்னானுக்கே கஷ்டமாக இருந்தது. பைக்குள் வைத்திருந்த ஒரு கசங்கிய காகிதத்தை எடுத்து, அவரிடம் நீட்டி, 'படியுங்க சார்' என்றான். அதை முதலில் வேண்டா வெறுப்பாக படித்த அந்த போலீஸ் இளைஞர் பிறகு அவனைப் பிரமிப்பாகப் பார்த்தார். சின்னான் அமைதியாகப் பேசினான்: "யெஸ் சார்! எனக்கும் சர்வீஸ் கமிஷன் நடத்துன குரூப்-ஒன் போட்டியில டி.எஸ்.பி. வேல கிடச்சது. நானும் எனக்குப் பொண்ணு கொடுக்கத் தயாராய் இருந்த ஒரு ஹரிஜன 'எம்.எல்.ஏ.' மூலம் வேலையில சேரலாமுன்னு தான் முதலில் நினைத்தேன். அப்புறம் யோசித்துப் பார்த்தேன். எனக்கு மேல் ஜாதிக்காரர்கள் மேல அளவுக்கு மீறின கோபம் இருக்கது தெரியும். நான் டி.எஸ்.பி.யாய் மாறினால் என்னால் பாரபட்சமில்லாம இருக்க முடியாதுன்னு தீர்மானித்து, மனசைக் கல்லாக்கிக்கிட்டு, வேலையை வேண்டாமுன்னுட்டேன். அந்தச் சமயத்துல தபால் இலாகாவுல கெஜட்டட் வேலை வந்ததும் ஒரு காரணம். ஒண்ணும் மட்டும் சொல்றேன் சார்... "ஏழைகளுக்கு நீங்க நியாயமாய் நடந்தால், பணக்காரங்க விரோதத்த சம்பாதிக்கலாம். அநியாயமாய் நடந்தால், பணக்காரங்களின் பணத்த சம்பாதிக்கலாம். ஆனால், ஒண்ணு. பணக்காரங்கா விரோதம் அன்றே சாடும். கொல்லாது. ஆனால், ஏழை தரித்திர நாராயணன்களோட விரோதம் நின்றே சாடாது - கொல்லும். பழமொழியை மாற்றிப் போட்டு, பக்குவமாச் சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம். "பார்த்து நடந்துக்குங்க. நான் வாரேன் ஸார்! இதுக்கு மேலேயும் நான் பேசினால், உங்க யூனிபாரத்துக்கு மதிப்புக் கொடுக்காதவனாய் ஆயிடுவேன். வரேன் ஸார்! தரித்திர நாராயணனுக்கு இன்னொரு பெயர் ஆண்டி... குட்பை." சின்னான் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு, தன் யூனிபாரத்தைக் கழட்டிப் போட்டுவிட்டு, அவன் பின்னாலேயே ஓடவேண்டும் போலிருந்தது. ஏதோ ஒரு 'எப் ஐ ஆரை' படைத்துக் கொண்டிருந்த பிரும்மாவின் ஒரு கூறான ரைட்டரைப் பார்த்து, "பார்த்தியாய்யா ஒன்னை மாதிரி அவரும் ஒரு ஹரிஜன் தான். எவ்வளவு லட்சிய வெறியோடு இருக்காரு பார்த்தியா? நீயும் இருக்கியே. நீ என்னடான்னா ஹரிஜனங்ககிட்டத் தான் அதிகமாய் வாங்குற" என்று சீறினார். 'நான் மட்டும் தானா' என்பது மாதிரி, ரைட்டர் அவரைப் பார்த்து ஜாக்கிரதையாகச் சிரித்தார். ஆண்டியப்பனை இன்றைக்கு 'செமத்தையாக' கவனிப்பதாக இருந்த அந்தப் போலீஸ் இளைஞர் தானே லாக்கப் அறைக்கருகே போய் தானே இரும்புக் கதவைத் திறந்து, "ஆண்டி, நீ போகலாம்" என்றார். ஆண்டிக்கு அவரது மனவுளைச்சல் தெரியவில்லை. தெரியக்கூடிய நிலையிலும் இல்லை. தங்கச்சி எப்படி தவிக்காளோ... குட்டிப்பயல் எப்படிக் கிடக்கானோ... தங்கம்மா எப்படி ஆனாளோ... எல்லாரையும் பாக்கணும். உடனே பாக்கணும். போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த ஆண்டியப்பன், தலைவிரிகோலமாக பஸ் நிலையத்தைப் பார்த்து வேகவேகமாகப் புறப்பட்டபோது எதிரே தங்கம்மா வந்தாள். சாலையில் போவோர் வருவோரைப் பற்றிக் கவலைப்படாமல், அவனை அப்படியே வந்து கட்டிப் பிடித்துக் கொண்டு ஏங்கி ஏங்கி அழுதாள். "ஒங்களுக்கா மச்சான் ஜெயிலு. ஒங்களுக்கா மச்சான் ஜெயிலு? எல்லாம் என்னால - இந்தப் பாவியால" என்று புலம்பிக் கொண்டே அவனை இறுகத் தழுவினாள். ஒருவர் கை ஒருவர் மீது பட்டவுடனேயே துள்ளித் துடிக்கும் அந்த இரண்டு இளம் மேனிகளும், 'ஈருயிர் ஓருடலாய்' ஆனாலும், அந்தத் தலுவலில் ஒருவித ஆறுதல்தான் இருந்தது. இன்பமோ பருவத்துடிப்போ இல்லை. ஆனால் அந்த ஆறுதல் - அந்தத் துன்பப் பகிர்வு, அந்தத் தோளோடு தோள் நிற்கும் துணிவான துணை, ஆயிரம் இன்பக் கிளுகிளுப்புக்களை விட மேலானது. ஆயிரமாயிரம் பருவப் பகிர்வுகளைவிட மேலான ஆறுதல். உடலை ஊடுருவி அதனுள்ளே இருக்கும் ஆன்மாவை அணைப்பதற்கான தழுவல் முயற்சி அது. தகாத முயற்சியல்ல. இது ஜனங்களுக்கு எப்படித் தெரியும்? தெரியவில்லை. ஆகையால் தெருவில் போய்க் கொண்டிருந்தவர்கள், அவசரமாகப் போய்க் கொண்டிருந்தவர்கள் கூட, சினிமாவுக்கு லேட்டாகப் போனவர்கள் கூட, இலவச சினிமா கிடைத்தது போல், வேடிக்கைப் பார்த்தார்கள். இதைப் புரிந்து கொண்ட ஆண்டியப்பன், தங்கம்மாவை மெல்ல விலக்கவும் இருவரும் பிரிந்து நடந்தார்கள். "மீனாட்சி எப்படி இருக்கா தங்கம்?" "அத ஏன் கேக்கியரு. பாவி மனுஷி அழுத அழுகை இருக்கே... அத சொல்லியும் முடியாது, சொன்னாலும் தீராது. கையை எடுத்து மார்புல அடிச்சதுல கடைசில மார்புல இருந்த புண்ணு பழையபடி வலிக்க ஆரம்பிச்சுட்டு. சீக்கிரமாக நடயும். மயினி துடிச்சிக்கிட்டு இருப்பாவ." "குழந்தைக்கி பாலுக்குக் காசு கொடுக்காம வந்துட்டேன். காத்தாயியும் வந்திருக்க மாட்டாள். என்ன பண்ணினாள்?" "இந்தத் தங்கம்மா செத்துப் போயிட்டான்னு நினைச்சீராக்கும்." "நீ இருக்கையில நான் எங்க வேணுமுன்னாலும் இருக்கலாம். லாக்கப்புல கூட இருக்கலாம். சும்மா விளையாட்டுக்குச் சொன்னால், இப்படியா முகத்த தூக்குறது? சரி. ஒய்யா எப்படி இருக்கார்? நீ என் வீட்டுக்குத்தான போனே?" "நல்லா இருக்கே. ஆயிரந்தான் அடிச்சாலும் அவரு என்ன பெத்த அய்யா. அவரு கையப் பிடிச்சுக் கொடுக்காம நான் ஓடுகாலியா ஒம்ம வீட்டுக்கு வருவேன்னு மட்டும் நினைக்காதையும்..." "ஏய், நீ என் வீட்டுக்கு எத்தனையோ தடவ வந்துருக்க. ஒவ்வொரு தடவயும் ஒங்க அய்யா எனக்கு ஒன் கையைப் பிடிச்சா கொடுத்தாரு? மனுஷன் ஒரு தடவகூட கொடுக்க மாட்டாரு போலுக்கே!" "அது வேற இது வேற. நான் இதுவரைக்கும் எங்க அத்தை வீட்டுக்குத்தான் வந்துக்கிட்டு இருக்கேன். ஆண்டியப்பன் வீட்டுக்கு இல்ல." "ஏய், பேரையாச் சொல்லுதே..." "பெண்கள் பகுத்தறிவு மாநாடுன்னு போட்டிருக்கது ஒரு பேப்பர்ல வந்திருக்கு. படிச்சிப் பாரும்; அப்பத்தான் ஒமக்குப் புத்தி வரும். பொம்புளையள அடக்கி வச்ச காலம் மலையேறிக்கிட்டு இருக்கு." "போவட்டும். ஒய்யா ஒன்னை அடிச்சாரா?" "இல்ல. எனக்கும் கொஞ்சம் உதறல்தான். அய்யா வந்தாரு. பேசாமப் போய் கட்டிலுல படுத்தாரு. நானும் பேசாம இருந்தேன். இப்ப ரெண்டு நாளா நாங்க ரெண்டு பேரும் பேசுறதே கிடையாது. இதுல ஒரு நன்மையப் பாரும். கீரியும், பாம்புமா இருந்த அய்யாவும், அம்மாவும், இப்போ கோழியும் சேவலுமா ஆயிட்டாவ..." "ஆவட்டும். நீ இங்க வந்தது யாருக்கும் தெரியுமா?" "இந்தப் பாழாப்போற மாணிக்கமும், கோபாலும் நேத்து ராத்திரிதான் சொன்னாங்க. நான் மயினிகிட்ட மட்டும் சொல்லிட்டு ஒரே ஓட்டமா ஓடி வந்தேன்." "ஆறு மைலும் நடந்தா வந்த? பஸ்சில் வரப்படாது? பாவம்... என்னால ஒனக்கு ரொம்ப கஷ்டம்." "அது கஷ்டமில்ல. இப்ப கையப் பிடிக்கியரு பாரும், அதுதான் கஷ்டம். பேசாம விலகி நடயும். ஆளப்பாரு, இதுக்குத்தான் ஒம்மகிட்ட அதிகமாய் வச்சுக்கப் படாதுன்னு நினைக்கது. எனக்குக் கெட்ட கோபம் வரும். கைய விடுறீரா இல்லியா? சீ... பஸ்ல இருக்கவங்க பாக்காங்க." ஆண்டியப்பன் அவள் கையை விட்டான். அவள் சீறியதால் அல்ல. ஒரு பஸ்சில் இருந்து மாணிக்கமும் கோபாலும் இறங்கி வந்தார்கள். மாணிக்கம் வந்து கொண்டே பேசினான்: "ஒரு பயகூட ஜாமீன் கொடுக்க வரமாட்டேன்னுட்டான். கிணறு வெட்டப்போற ராமசாமியும், 'ஆட்டுக்கிடை' போடுற ஐயம்பெருமாள் கோனாரும் ஜாமீனுக்கு வாரேன்னு சொன்னாங்க. ஆனால், இந்தக் கர்ணம் இருக்காரே, அந்தப் பெரிய மனுஷன், இவங்களுக்கு மாத வருமான சர்டிபிக்கட் கொடுக்க மாட்டேன்னுட்டாரு. கடைசில ஒங்க பெரியய்யா பேரன் மயில்சாமி வந்தான். மூணு ஏக்கர் நிலம் வச்சிருக்கான். தையல் கடை வச்சிருக்கான். மாசம் நானூறு ரூபாய்க்கி மேலே வருமானம் வருது. அவன் கையில காலுல விழுந்து ஜாமீனுக்கு வர சம்மதிக்க வச்சோம். இந்தக் கணக்கப் பிள்ளை பயல் சர்டிபிகேட் கொடுக்க முடியாது - முடியவே முடியாதுன்னு சொல்லிட்டான்." "மாசானம்?" "கழுத களவாணி மனுஷன்! நேத்து தலைமறைவா ஆயிட்டாரு. இன்னைக்கி அகப்பட்டாரு. கேட்டால், 'நான் கவர்மெண்ட் காண்டிராக்டரு - இதுல மாட்டக்கூடாது'ன்னு சொல்லிட்டார். என்ன பொல்லாத 'ர்'? சொல்லிட்டான்." "கோபால் ஒன் கன்னம் ஏன் வீங்கியிருக்கு?" "ஒண்ணுமில்ல. ஒன்கூடச் சேரக்கூடாதுன்னு எங்க அப்பா லேசா அடிச்சாரு." அனைவரும் ஊருக்குள் வந்தார்கள். அங்கே தென்பட்ட பெரிய மனிதர்கள் அத்தனை பேரும், முகங்களைத் திருப்பிக் கொண்டார்கள். பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், 'பயலை எப்படி விட்டாங்க' என்ற ஆச்சரியத்தில் மூழ்கியபோது, அவரைப் பார்த்துப் பயந்து, பல ஏழைகள் ஆண்டியப்பனிடம் பேசவில்லை. ஆண்டியப்பன் தங்கம்மாவுடன் வீட்டுக்கு வந்தான். மீனாட்சியால் அழ முடியவில்லை. 'அண்ணாச்சி... அண்ணாச்சி' என்று அந்த வார்த்தைகளின் வழியாக உயிர் பிரிவது போன்ற வேதனைப் பிளிறல். வெளிக்காட்ட நினைத்தாலும், உடம்பு ஒத்துழைப்புக் கொடுக்காத பாசத்தின் அங்க அசைவுகள். ஆண்டி, தங்கை மகனை எடுத்து வைத்துக் கொண்டே, தங்கையின் கண்களை வேட்டி முனையால் துடைத்தபோது - திடீரென்று பலமான அழுகை ஒலி கேட்டது. அது ஒலித்துக் கொண்டிருக்கும் போதே ஒருவர் வந்து, "தங்கம்மா நீயும் இவனும், டவுனுல கல்யாணம் செய்துக்கிட்டதா... மல்லிகா புரளியக் கிளப்பி இருக்காள். ஒங்க அய்யா மருந்த குடிச்சிட்டு துள்ளத் துடிக்கக் கிடக்காரு. சீக்கிரமா போ" என்று சொல்லிவிட்டு அவரும் ஓடினார். தங்கம்மா பதறியடித்து ஓடினாள். |