உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
8 உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காமல் போன மாணிக்கம் பி.ஏ., பி.டி. சிறிது யோசித்துப் பார்க்கத் துவங்கினான். இளைஞர் பெரும்பணி மன்றம் என்று புதிய அமைப்பை உருவாக்கிய குமார், இப்போது 'பட்டி தொட்டி பதினாறும்' அறிந்த பிரமுகனாக மாறிவிட்டான். கிழவியின் பென்ஷனில் இருந்து, குமரியின் கல்யாணம் வரை, இந்த குமாரின் சொல் எடுபடுகிறது. இவனைக் கண்டால் அதிகாரிகளும் ஓரளவு பயப்படுகிறார்கள். கிராமத்தில் உள்ள படித்தவர்கள் அனைவரும் அவனைச் சுற்றி மொய்க்கிறார்கள். இன்றைய கிராமிய அரசியலிலும் மாவட்ட அரசியலிலும், அடிப்படைப் பிரச்சினைகளுக்காக வாதாடுபவனை விட 'வேலை வாங்கிக் கொடுப்பவன் - வேலையில் இருந்து எடுப்பவன் - பட்டை சாராயம் காய்ச்சுபவர்களை ஜாமீனிலோ அல்லது எதுவும் நடவாதது போலவோ காப்பாற்றுபவன் - எந்தக் காரியத்திற்கும் தராதரம் தெரியாமல் மிரட்டலின் பின்னணியில் சிபாரிசு செய்பவன்' முதலிய குணாதிசயங்களும், அந்த குணாதிசயங்களைக் கொண்டு செலுத்தும் அதிகார சங்கிலித் தொடரை ஏற்படுத்திக் கொள்பவனுந்தான் அரசியல்வாதியாக முடியும். இந்தப் பின்னணியில் மாணிக்கத்தால் முன்னணிக்கு வரமுடியாமல் போனதுடன், ஒரு வாத்தியார் வேலைகூட கிடைக்கவில்லை. ஊர்க்காரர்கள் குமாரையும், மாணிக்கத்தையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். மாணிக்கத்தைக் குப்பையில் போடவில்லை. குப்பையாகவே போடுகிறார்கள். மாணிக்கத்திற்கு என்னவோ போலிருந்தது. பேசாமல் தனது இ.ந. மன்றத்தையும் குமாரின் இ.பெ. மன்றத்தையும் ஒன்றாக இணைத்து விடலாமா... கீரியும், பாம்புமாக இருந்தவர்கள் இப்படி விவஸ்தை இல்லாமல் சேருகிறார்களே என்று யாராவது சொல்ல மாட்டார்களா... எப்படிச் சொல்வார்கள்? இப்போது யாருக்கு விவஸ்தை இருக்கு? விவஸ்தை கெட்ட குணம் கூட விவேகமாக அல்லவா கருதப்படுகிறது. மாணிக்கத்திற்கு யோசிக்க யோசிக்க ஆண்டியப்பன் மீது அலுப்புத் தட்டியது. ராசியில்லாத பயல். இவனால் எனக்கு வேலை கூட கிடைக்கல. ஊர்ல ஒருவர்கூட மதிக்கல - என்ன செய்யலாம்? என்னதான் அவன் யோசித்தாலும் அவன் கால்கள் மூளையின் கட்டளையை, மீறியவை போல் ஆண்டியப்பனின் வீட்டைப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தன. அதோடு அங்கே மாட்டு விவகாரத்துக்கான 'வியூகத்தை'ப் பேசி முடிக்க வேண்டும்! கோபால் அங்கே இருப்பான். ஒரு சில இளைஞர்களும் இதற்குள் அங்கே கூடியிருப்பார்கள். 'மாட்டு' விவகாரம் போலீஸ் நிலையத்திலிருந்து 'ரிலீஸ்' ஆனதும், மாணிக்கமும், அவன் கூட்டாளிகளும் ஆண்டியப்பனை அழைத்துக் கொண்டு போய், கோட்ட ஆட்சித் தலைவரிடம் காட்டினார்கள். அவர் கோட்ட வளர்ச்சி அதிகாரியின் விவகாரம் என்றார். இவர்களும் வளர்ச்சி அதிகாரியைப் பார்த்தார்கள். அவர் பால் பண்ணை அதிகாரியிடம் கை காட்டினார். பார்த்தார்கள். பால் பண்ணை அதிகாரி, 'கூட்டுறவு டெப்டி ரிஜிஸ்தரார் தப்பாய் நினைப்பார். ஏன்னா இது அவரோட விவகாரம்' என்றார். இவர்களும் அந்த டெப்டியைப் பார்த்தார்கள். அவரோ 'புராஜெக்ட் அதிகாரியிடம் போங்கள்' என்றார். புராஜெக்ட் அதிகாரி 'கேம்ப்' போய்விட்டார். திரும்பி வரப்போனவர்களுக்கு ஒரு திடீர் யோசனை வந்தது. காரில் ஏறப்போன கலெக்டரிடம், வழி மறிப்பது போல் நின்று நடந்த விவகாரத்தை மீண்டும் சொன்னார்கள். கலெக்டர் சொன்னபடி விவகாரத்தை மீண்டும் எழுதி அவரது உதவியாளரிடம் கொடுத்தார்கள். என்ன ஆச்சுது என்று தெரியவில்லை. மாணிக்கம் நடந்து கொண்டே யோசித்தான். 'மாலை நேரம்', 'மதி' மயங்கும் 'கருக்கல்' பொழுது. ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து கொண்டிருந்தவனின் எதிரே மல்லிகா வந்து கொண்டிருந்தாள். மயக்கு விழி இருக்கோ இல்லையோ கண்ணில் மை தடவி அந்தத் தவப்புதல்வி மாணிக்கத்தைப் பார்த்து உதட்டை கடித்துச் சிரித்துக் கொண்டே வந்தாள். மாணிக்கம் எட்டாவது படித்தபோது, அதே உள்ளூர் பள்ளியில் ஐந்தாவது படித்தவள் இவள். அப்போது மாணிக்கம் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறான். 'ஏபிஸிடி... எங்கப்பன் தாடி... ஒபிஸிடி... ஒங்கப்பன் பேடி' என்று கிண்டலாகப் பாடிக்கொண்டே 'இங்கிலீஷ்' கற்றுக் கொடுத்திருக்கிறான். அப்புறம் இவன் எங்கேயோ, அவள் எங்கேயோ படித்தார்கள். விடுமுறையில் வரும்போது லேசாகப் பேசிக் கொண்டார்கள். படிப்பு முடிந்து ஊருக்கு வந்த பிறகு அதுவும் இந்த மாட்டு விவகாரம் வந்த பிறகு, அவள் யாரோ இவன் யாரோ. மல்லிகாவின் மீது தப்பில்லை. தண்ணீர் குடத்தை தலையில் வைத்து நடக்கும்போது அந்தக் குடம் நிஜமாகவே கீழே விழும் அளவிற்கு அவனைப் பார்த்து, கண்களால் பருகியிருக்கிறாள், வயலுக்குப் போகும்போது, அவனைப் பார்த்துச் சிரித்திருக்கிறாள். அவன் தான் இந்த ஆண்டியப்பன் அவளை விட மேலானவன் என்பதுபோல், அந்தப் பயலோடு சுற்றிச் சுற்றி, வந்தவளை உதாசீனம் செய்து, புனிதக் காதலின் பொருள் விளங்காமல் கிடக்கிறான். மாணிக்கம் அவளையே பார்த்துக் கொண்டு நடந்தான். இவளைப் பார்க்காமல் என்னால் எப்படி இருக்க முடிந்தது. எனக்காக, எனக்காகவே தங்கம்மாவிடம் தகாத வார்த்தைகளை வாங்கிக் கொண்டவள். நான், அவள் சொந்தக்காரர்களுக்கு எதிராக எவ்வளவோ செய்தாலும், இதோ... இப்போதுகூட என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே வருகிறாள். 'கல்லானாலும் காதலன்' என்பதுபோல சாய்வாய் பார்க்கிறாள். இந்தக் கண்ணகியை - இந்த நளாயினியை - இந்தத் தமிழ்ப் பண்பின் கற்புக்கடம் பூண்ட நங்கையை, என்னால் எப்படித் தவிர்க்க முடிந்தது? எப்படி... எப்படி... மல்லிகாவிற்கு வழிவிட்டு மாணிக்கமும், மாணிக்கத்திற்கு வழிவிட்டு மல்லிகாவும், முதலில் ஒதுங்கி, பிறகு அவள் நிற்கிறாள் என்று இவன் நடந்தும், இவன் நிற்கிறான் என்று அவள் நடந்தும், அல்லோ கல்லப்பட்டு, இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். மாணிக்கம் பிராயச்சித்தம் செய்கிறவன் போல், அவளை வழிமறிப்பவன் போல் குறுக்கே நின்று கொண்டு, முதலில் பேசினான்: "என்னம்மா... என்னைப் பார்த்தால் ஒனக்கு ஒதுங்கணுமுன்னு தோணுதா..." மல்லிகா அவனைக் குனிந்து பார்த்தாள். ஏனென்றால் அவனைவிட, அவள் இரண்டு அங்குலம் உயரம். நாணத்துடனும், நாணமில்லாத கோபத்துடனும், "ஒதுங்குகிறவங்களைக் கண்டால், நானே ஒதுங்கிக்கிறது 'பெட்டர்' இல்லையா?" என்றாள். "அடடே... ஒனக்கு இங்கிலீஷ் வருமா?" "ஒங்க பிகாஸூ இங்கிலீஷை விட என் இங்கிலீஷ் இஸ் பெட்டர்." "என் இங்கிலீஷைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?" "நீங்க எனக்கு ஐந்தாவது வகுப்புல தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்த இங்கிலீஷ் இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு." "அதுமட்டும்தான... தலையில குட்டுனதும், கன்னத்தைக் கிள்ளுனதும் மறந்து போச்சோ! இன்னும் ஒருதடவை கன்னத்தைக் கிள்ளினால்தான் ஞாபகம் வருமுன்னு நினக்கேன்!" "இந்த மாதிரிப் பேச்சை என்கிட்ட வைக்காதீங்க." மாணிக்கத்தின் முகம் பித்தளைபோல் வெளுத்தது. அவளைக் கோபமாகப் பார்த்துவிட்டு மடமடவென்று நடக்கப் போனான். ஆனால் மல்லிகாவின் பேச்சு அவனை அங்கேயே நிற்க வைத்தது. "ஆண்டியைப் பெரிதாய் நினைத்து ஒரு பொண்ணோட மனசைப் புரிஞ்சிக்காதவரு, என்னோடு எதுக்காகப் பேசணும்? ஒங்கள பெரிசாப் பேசுனதாலேயே, ஒரு எச்சிக்கலை தங்கம்மாகிட்ட அவமானப்பட்டேன். அப்புறமும் அந்தத் தங்கம்மாவை பெரிசா நினைக்கிறவர்கிட்ட நான் எதுக்காகப் பேசணுமாம்? நான் ஒரு முட்டாள். என்னைப் பெரிசா நினைக்காதவரை, இன்னும் பெரிசாய் நினைக்கிறேன். எனக்கே புரியமாட்டக்கு." "மல்லி நீ சொல்றதைப் பார்த்தால் - பார்த்தால்..." "வயலுக்குப் போறேன். வழியை விடுங்க." "முடியாது. மீறிப்போனால் தலையில் குட்டுவேன். அடடே - நல்லா சிரிக்கிறியே. எந்த பிரஷ் வச்சும்மா பல் தேய்க்கிற? சும்மா சிகரெட் அட்டை மாதிரி ஜொலிக்குதே." "நான் எங்க வயலுக்குப் போறேன். நீங்க வேணுமுன்னால் உங்க வயலுக்கு வாங்களேன். ரெண்டும் பக்கத்து பக்கத்து வயலுங்கதானே." "இப்போ கொஞ்சம் வேலை இருக்கே." "ஆண்டியப்பன் கூடத்தானே? வழியை விடுங்க. ஒங்க வாடையே வேண்டாம். உம் வழியை விடுங்க." "மல்லி, மல்லி நான் மடையன். முட்டாள். உன்னோட அன்பைப் புரிஞ்சுக்காத இடியட். நானும் வாரேன். நானும் வாரேன்." மல்லிகா அவனை நாணத்துடன் பார்த்தாள். அக்கம் பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று அவசர அவசரமாகப் பார்த்துக் கொண்டு, யாரும் இல்லையென்று தெரிந்தபிறகும், அவனிடம் ரகசியம் பேசுபவள் போல் பேசினாள். "இப்போ வேண்டாம். வயலில் அப்பா இருக்கார். அம்மான்னா கண்டுக்க மாட்டாள். நைட்ல எங்க மாமாவோட வீட்டுக்கு வாறீங்களா?" "எந்த மாமா?" "எனக்கு ஒரே ஒரு தாய் மாமாதான். பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம். "அப்படிச் சொல்லாதம்மா. பஞ்சாயத்தைக் கலைச்சாச்சு. அவரு இப்போ பழசு." "எங்க மாமாவைப் பழசுன்னு சொன்னால் நானும் உங்களுக்குப் பழசுதான். சின்ன வயசுல நாம் பழகுனதை இப்போ புதுப்பிக்க முடியாது." "விளையாட்டுக்குச் சொல்றதை வித்தியாசமாய் எடுத்தால் எப்டி? இனிமேல் சத்தியமாய் பரமசிவம் சித்தப்பாவுக்கு எதிராய் எதுவும் செய்யமாட்டேன், போதுமா? அவரு வீட்ல என்ன விசேஷம்?" "ஒங்களுக்குத் தெரியாதா... பரமசிவம் மாமாவோட மூத்த பெண்ணுக்கும், மாசானம் சித்தப்பாவோட மகனுக்கும் இன்னைக்கு நிச்சயதாம்பூலம். அதே முகூர்த்தத்துல அவரோட இரண்டாவது மகள் இந்திராவுக்கும், இளைஞர் பெரும்பணித் தலைவர் குமார் அண்ணாச்சிக்கும் நிச்சயதாம்பூலம். ஏற்கெனவே அவங்க ரெண்டு பேருக்கும் காதல்." "அடிடா சக்கே. அப்போ நாம இரண்டுபேரு மட்டுந்தான் சும்மா இருக்கோம்." "அதுக்கு நான் காரணமில்ல. சரி. ரெண்டுல ஒண்ணைச் சொல்லுங்க. என் மனசு புரிந்திருந்தால் வாங்க!" "ஒங்க குமார் அண்ணாச்சி இருக்கிற இடத்துல நான் எதுக்கு?" "ஒங்க மல்லிகா இருக்கிற இடத்துக்கு - உங்களுக்காகவே இருக்கிற மல்லிகாவைப் பார்க்க வரப்படாதா? சரி வழியை விடுங்க." "பரமசிவம் மாமாவுக்குத் துரோகம் பண்ணிட்டேன். அவரு முகத்துல எப்படி விழிக்கிறது?" "கவலைப்படாதிங்க. அவரையும், குமார் அண்ணாச்சியையும், ஒங்களை ஒங்கள் வீட்ல வந்து கூப்பிட வைக்கிறதுக்கு நானாச்சு." "பரவாயில்லையே." "நான் மாதர் சங்கத் தலைவி சரோஜாவோட மகளாக்கும்." "சரி. நானும் எங்க வயலுக்குப் போறேனாம். நீயும் ஒங்க வயலுக்குப் போறயாம். சரி, போவோமா...?" ஆண்டியப்பன் வீட்டுக்கு அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்த மிஸ்டர் மாணிக்கம் பி.ஏ., பி.டி. மல்லிகாவுடன் தோளில் தோள்பட, கையோடு கையுரச, 'வழிமாறி' நடந்து கொண்டிருந்தான். இரவு வந்தது. பழைய பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம் வீட்டிற்கு பணக்காரர்கள் அதிகமாக வந்தார்கள். அந்தக் கிராமத்தில் ஜாதி வித்தியாசம் இல்லாததால் தட்டாசாரி தங்கசாமி, பண்ணையார் கதிர்வேல் பிள்ளை, ராமசாமிக் கோனார் முதலிய பெரிய மனிதர்களும், மாசானம், மாணிக்கம் முதலிய புதிய மனிதர்களும் கூடியிருந்தார்கள். மல்லிகா எப்படி மாணிக்கத்தை அங்கே கொண்டு வந்தாளோ, அதே போல் அவள் அம்மா சரோஜா கிராமத்தில் பணக்காரர்கள் 'பழைய கருவாட்டு' பேதங்காட்டாமல் ஒற்றுமையாக இருக்கவில்லையானால், ஏழைபாளைகளுக்கு இளக்காரமாகிவிடும் என்பதை உணர்ந்து, அண்ணன் பரமசிவத்திடம் வாதாடி, மாசான மச்சானிடம் பழைய காதலை ஞாபகப்படுத்தி அழுது, முன்னவரின் மகளை, பின்னவரின் மகனுக்கு 'முடிச்சு'ப் போடும் வேலையைச் செய்துவிட்டாள். பண்ணையார்கள் மத்தியில் தனக்குப் புதிய அந்தஸ்து கிடைத்த திருப்தியில், மாசானம் மகிழ்ந்து போனார். முகப்பு அறையில் ஒரு மேஜையின் மேல் இரண்டு தாம்பாளங்களில் தேங்காய், பழம், எல்லாவற்றிற்கும் மேல் வரதட்சணையாக ரூபாய் நோட்டுக் கற்றைகள் வைக்கப்பட்டிருந்தன. எப்படியோ, சுபயோக தினத்தில் அந்தத் தாம்பாளத்தட்டுகள் அசல் மாப்பிள்ளை ஜோடனையோடு வந்திருந்த மாசானத்திடமும், குமாரின் அப்பாவிடமும் கொடுக்கப்பட்ட பிறகு, நாற்பது ஏக்கர் நிலத்தில், அதுவும் நஞ்சை நிலத்தில், முப்பது ஏக்கரை 'வாயில்லா மனிதர்கள்' பேரில் எழுதி வைத்திருக்கும், பண்ணையார் கதிர்வேல் பிள்ளை பெரிய சத்தத்துடன் பேசினார். "நாம பஞ்சபாண்டவர் மாதிரி ஒற்றுமையாய் இருந்தால் எந்தப் பய வாலாட்ட முடியும்? ஆண்டிப்பயல் கூட சட்டம் பேசுறான்னால் அது அவனோட வீரம் இல்ல! நம்மோட தெம்மாடித்தனம். செறுக்கி மவன ஆளு வச்சாவது கொல்லணும். கூலிப்பயலுவள இந்த சின்னான் பய வேற தூண்டி விடுறான். நேத்து என் முகத்துக்கு எதுருலேயே அந்தச் சேரிப் பய வீரபாகு, 'செத்த மாட்டை நாங்க தூக்கவும் மாட்டோம், தின்னவும் மாட்டோ'முன்னு சொல்றான். காலத்தைப் பாத்தியளா, அவனுவ பார்க்கிற விதமே சரியில்ல. இதுக்குல்லாம் நாமதான் காரணம். பரமசிவத்தை, ஆண்டியோட தனியா விட்டோம். அவன் ஜெயிலுக்குப் போவாம திரும்பும்படியா விட்டோம். இப்போ லேசா ஒவ்வொரு பயலும் ஆண்டிமாதிரி ஆகிக்கிட்டு வாரானுவ. அந்தப் பிச்சாண்டிப்பய ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி இப்போ மாசானத்தையே கடிக்கிறான்!" மாசானம் பதறினார்: "என்னவாம்... என்னவாம்..." "சரியான பயித்தியக்காரன் நீ! அந்தக் கண்ணு தெரியாத கிழவி கிட்ட வாங்கிப் போட்டியே வயலு. அந்த பிச்சாண்டிக்கிட்ட என்ன ரேட்டுக்குப் பேசி குத்தகைக்கு விட்ட?" "பாதிக்குப் பாதி." "பிச்சாண்டிப்பய, சர்க்கார் இப்போ போட்டிருக்கிற சட்டப்படி வெள்ளாமையில முக்கால் பங்கை எடுத்துக்கப் போறானாம். என் கிட்டேயே சொல்லுதான்." "செருக்கி மவன செருப்பைக் கழட்டி அடிக்கப்..." "வினையே ஒன்னாலதான் வந்தது; பரமசிவத்துக்கு வந்தது. இப்போ ஒனக்கும் வரப்போகுது." பரமசிவம் பதறினார். "எனக்கு என்னய்யா வந்துட்டு? ஆண்டிப்பயன் எனக்கு எதிரியா? விசாரணைக்குக் கூப்புட்டதாலயே நான் குற்றவாளின்னு அர்த்தமா? பாத்துப்புடலாம்." "நான் அதுக்காவச் சொல்லலவே! காலம் கலிகாலம். நேத்து சாணி பொறுக்குன பயலுவ கூட இப்போ சட்டம் பேசுற காலமாப் போச்சு. அதனால் நாம ஒற்றுமையா இருக்கணும். ஒருவருக்கு வார ஆபத்தை, எல்லாரும் தனக்கு வந்ததா நினைக்கணும். இல்லன்னால் நமக்குத்தான் வம்பு. ஏய், மாணிக்கம்! நம்ம மானேஜர் ஜம்புலிங்கம், ஒன்னை பள்ளிக்கூடத்தில் ஹெட்மாஸ்டராய் போட்டுருவாரு. இனிமேலாவது சும்மா இருப்பியா? சிரிக்கான் பாரு... புரியுதா..." மாணிக்கம் புரிந்தவன் போல் ஏற்கெனவே தன்னை அணைத்துக் கொண்டிருந்த குமாரை தானும் அணைத்துக் கொண்டு சிரித்தான். பிறகு எல்லோரையும் பாசத்தோடு பார்த்தான். இந்தச் சமயத்தில் "எனக்கு ஒரு வழி சொல்லாட்டால் நானும் எல்லோரையும் இழுத்து விட வேண்டியது இருக்கும்" என்று சொல்லிக்கொண்டே கூட்டுறவுச் சங்கத் தலைவர் உள்லே வந்தார். ஊரில் ரகளை வரப்போவதற்கான ஒரு சம்பவத்தை சொல்லப் போனார். |