உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
9 கூட்டுறவுச் சங்கத் தலைவரின் அநியாயமான கோபத்திற்கும் ஒரு நியாயம் இருந்தது. சங்கத்து உறுப்பினர்களில் முப்பது பேருக்கு ஒரு வங்கி, கறவை மாடு வாங்க, தலா மூவாயிரம் ரூபாய் வழங்க முன் வந்திருந்தது. அந்த வங்கியும் 'டார்ஜெட்டை' நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்ததால், சீக்கிரமாக லிஸ்டை அனுப்பும்படி சங்கத்தைக் கேட்க, கூட்டுறவுத் தலைவர் தன் உறவுக் கூட்டுக்குள் தூரமாகவும், பக்கமாகவும், இருந்த ஆறுபேரை லிஸ்டில் சேர்த்திருந்தார். ஆறு பேரில் நான்கு பேர் பால்மாட்டை நம்பத் தேவையில்லாத வாத்தியார்கள். இந்த ஆறு பேரும் சங்கத்தில் முறைப்படி உறுப்பினர்களாகச் சேருவதற்கு முன்னாலேயே இவர்கள் பெயர் லிஸ்டில் ஏறி, அந்த லிஸ்டு வங்கிக்குப் போய், 'டிராப்ட்டாக' மாறி, 'டிராப்ட் கறவை மாடுகளாகி, அந்த மாடுகளும், இவர்களது வீடுகளில் இறக்குமதியாயின. என்றாலும் என்னமோ தெரியவில்லை. மூன்று பசுமாடுகள் கொடுத்த ஒருவாரத்திற்குள் செத்தன. இப்போது ஒரு பசுமாடு சாகக் கிடக்கிறது. அது சாகவில்லையானாலும், மாட்டின் உரிமையாளர் அதை சாக அடித்துவிடுவார். ஏனெனில் இனிமேல் அது தேறினாலும் பால் தேறாது. செத்த பசுக்களை வாங்கியவர்கள் கூட்டுறவுச் சங்கம் அனுப்பிய லிஸ்டில் இருந்தாலும் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேராமல் இருந்தவர்கள். இப்போது 'நான் உறுப்பினர் இல்லை. பசுமாட்டுக்குப் பணம் கட்ட முடியாது' என்கிறார்கள். மிஞ்சிக் கேட்டால், 'நீயும் வெட்னரி டாக்டரும் பங்கு போட்டது தெரியாதா... ஆயிரம் ரூபா மாட்டத்தான அநியாய விலைக்குத் தந்தியரு. நீரே கட்டும்' என்கிறார்கள். 'எத்தனையோ பேரு மாட்டுக்குத் தவம் இருக்கையில நான் ஒங்களுக்குத் தந்தனடா' என்று தலைவர் 'தந்தனம்' பாடினால், 'அதுக்காவ செத்த மாட்டுக்குப் பணம் கட்ட முடியுமா... என்ன பேச்சுப் பேசிறியரு செத்த பேச்சு" என்றார் ஒருவர். "சகுனி, துரியோதரன... கூட இருந்தே கெடுத்தது மாதிரி நீரும் மாட்ட தருமுன்னாலேயே மாட்டிக்கணுமுன்னு ஊசி போட்டு தந்ததுலதான் மாடு செத்துப் போச்சு. நானும் யோசிச்சேன். மெம்பரா ஆவு முன்னாலேயே மாட்டத் தாரீயரேன்னு யோசிச்சேன். கடைசில நீரு வம்பரா இருந்திருக்கியரு. மாட்டுப்பாலு முப்பது ரூவாய்க்கு வித்திருக்கு. தீவனம் நாற்பது ரூபாய்க்குப் போட்டிருக்கேன். மீதி பத்து ரூபாய் கொடும்வே" என்று ஒருவர் 'கொடும்' பேச்சைக்கூடப் பேசிவிட்டார். தேள் கொட்டிய திருடன் கூட, கொட்டிய இடத்தைப் பிடித்துக் கொண்டு கசக்கலாம். ஆனால் எதையும் கசக்க முடியாமல், கசங்கிப் போன கூட்டுறவு சங்கத் தலைவர், பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில் குழுமிய ஊர்ப் பிரமுகர்கள் கூட்டத்தில் முறையிட்டார். அங்கே அந்த 'நாலு பேரும்' இருந்தார்கள். 'மங்கள காரியம்' நடைபெறப் போகும்போது, 'தடிமாடுத்தனமாய்' பேசுறான் பார் என்று நினைத்தவர்கள் போல், பிரமுகர்கள் பேசாதிருந்த போது, கூட்டுறவுப் புதல்வர் குத்திக் குத்திப் பேசினார். "நம்மளோட சேர்ந்தவங்க பிழைக்கட்டுமேன்னு செஞ்சது தப்பாப் போச்சு. மானேஜரு பால் பவுடர விக்காரு. வாத்தியாருவ சம்பளத்துல பிடிக்காரு. வெளிலே தெரியல. கணக்கப்பிள்ளை நிலம் விக்கவன் கிட்டயும் வாங்குறவன் கிட்டயும் வாங்குறாரு. வெளில தெரியல. முன்ஸீப்பு நிலவரில, தலைக்கு ஐம்பது பைசா போடுறாரு. அது வெளிலயும் தெரியல. ரசீதுலயும் வரல. ஆனால் நான் மட்டும் மாட்டிக்கிட்டேன். ஏன்? ஏன் தெரியுமா? நீங்க ஒத்தயா செய்யுறிய. பிறத்தியாருக்கு பங்கு கொடுக்காம பண்ணுறிய. ஆனால் நான் இவங்க நாலு பேரு வீட்லயும் பசுமாடு சீதேவியாச்சே, இருக்கட்டுமுன்னு நினைச்சேன். கடைசில என்னை மூதேவியா ஆக்கிட்டாங்க. "பால் குடுத்து பரோபகாரம் பண்ணுனவன் பல்லப் பிடிச்சிப் பாக்காங்க. பரவால்ல! நாளைக்கே ராஜினாமா பண்ணப் போறேன். ஆனால் அதுக்குள்ள நீங்கல்லாம் யார் யார் பெயருல மாடுகள வாங்கினியளோ அவங்ககிட்ட மருவாதியா மாடுகள கொடுத்துடணும். மாட்ட மட்டுமில்ல - டிராக்டரு, குதிரு, யந்திரக் கலப்பை எல்லாத்தையும் கொடுத்துடணும். இல்லன்னா நல்லா இல்ல - ஆமாம் நல்லா இல்ல. திருடும் போது சேர்ந்து திருடப்படாது என்கிறது சரியாப் போச்சு. என்ன யோசிக்கிய? பதில் சொல்லிட்டு காரியத்த கவனிங்க. ஆண்டியப்பனுக்கு அநியாயம் பண்ணுன எனக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்." ஊர்ப்பிரமுகர்கள் அதிர்ந்து விட்டார்கள். கலைக்கப்பட்ட பஞ்சாயத்தின் முன்னாள் தலைவரான பரமசிவம் விழித்துக் கொண்டார். விரைவில் நடக்கப் போகும் விசாரணையில் இவரு கோளாறு பண்ணிட்டால், ஏற்கெனவே பஞ்சாயத்துத் தலைவர் என்பதை ப. (பழைய) தலைவர்னு சின்னான் பய சொல்லிக் கொடுத்து எல்லாப் பயலும் சொல்றாங்க. இதை இதுக்கு மேல் விடப்படாது. பரமசிவம் எழுந்து நின்று பேசினார். "அண்ணாச்சி நீ பேசுதது ஒனக்கே நல்லா இருக்கா? காய்ச்ச மரத்துலதான் கல்லெறி விழும். ஒன்ன நாங்க விட்டுக் கொடுப்போமா? இவங்க எங்க போயிடப் போறாங்க. நாம எங்க போயிடப் போறோம்?" கூட்டுறவுச் சங்கத் தலைவரின் கோபம் ரெட்டிப்பானாலும், 'உலக மொறைக்காக' அந்த இடத்தில் அடக்கிக் கொண்டார். தாம்பாளத் தட்டுகளுடன் இருந்த மாப்பிள்ளைகளின் தந்தைமார்களிடம் "பன்னிரெண்டாயிரம் ரூபா இருக்கு, நல்லா எண்ணிக்கங்க" என்று ப. தலைவர் பரமசிவம் சொன்னபோது, அவர் அப்படிச் சொல்லும் முன்னாலேயே பணத்தை எண்ணிய மாசானமும், குமாரின் தந்தையும் லேசாக சிரித்தார்கள். குமாரும் மாசானத்தின் மைந்தனும் உள்ளே வீட்டுக்கதவில் ஒருவர் மேல் ஒருவராகச் சாய்ந்து கொண்டு மெய்மறக்க நின்ற வருங்கால மனைவிகளைப் பார்த்தார்கள். கூட்டுறவுச் சங்கத் தலைவர் மட்டும் 'பன்னிரண்டாயிரம்' என்றதும், 'ரிக்கார்ட்படி' தலா மூவாயிரம் மதிப்புள்ள செத்துப்போன நான்கு பசு மாடுகளை நினைத்துக் கொண்டார். பன்னிரெண்டாயிரத்துல ஒன்பதாயிரம் நம்ம தலையில விழுந்திடுமோ... மாடுவ செத்ததே செத்தது - இன்சூரன்ஸ் ஆன பிறவு செத்திருக்கப் படாதா... இல்லன்னா, இந்தப் பயலுவ மாட்ட வாங்கு முன்னால செத்திருக்கப்படாதா... எப்படியோ நிச்சயதாம்பூலம் நிறைவு பெற்றதன் அறிகுறியாக, வாழை இழைகள் விரிக்கப்பட்டு, கேசரி வைக்கப்பட்டு, பொங்கல் போடப்பட்டு, இவை எல்லாம் தின்னப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில்... தரைப்பாயில் கிடந்த மீனாட்சி கண்ணில் பெருகிய நீரை, கைகளைத் தூக்கமுடியாமல் தூக்கித் துடைத்துக் கொண்டாள். அவள் மார்பிலுள்ள புண்ணில், நீர் கட்டி, ஏர் குடையும் நிலம் போல, அவள் மார்பகத்தைக் குடைந்து எடுத்தன. பிரசவ வலியைவிட பெருவலி. அழுகையை அடக்க முடியாத அரக்க வலி. ஒருவேளை டாக்டரிடம் போனால் தீரலாம். டாக்டர் டவுனில் இருக்கிறார். நேரமோ இரவு. அண்ணனிடமோ காசில்லை. மாணிக்கம் அடித்த 'பல்டியில்' அவன் சோர்ந்து போய் கிடக்கிறான். அவனிடம் எப்படிச் சொல்வது, சொல்லாமல் இந்த வலியை எப்படித் தாங்கிக் கொள்வது? "காளியம்மா! ஒன்னையே கும்பிட்ட என்ன மார்புலயே சூலாயுதத்தால குத்துதியே. என்னை ஒரேயடியா கொல்லு. என்னைக் கொன்னு, என் அண்ணாச்சிக்குப் பலத்தக் கொடு. அய்யோ என்னால தாங்க முடியலியே! வலி தாங்க முடியலியே! அண்ணாச்சி... அண்ணாச்சி..." வெளியே முகப்புத் திண்ணையில் உட்கார்ந்திருந்த ஆண்டியப்பன் பதறியடித்து உள்ளே ஓடி வந்தான். "என்னம்மா எதுக்கு தாயி கூப்பிட்ட?" மீனாட்சி பல்லைக் கடித்துக் கொண்டாள். அவன் முகத்தையும், அதில் இழையோடிய துயர ரேகையையும் கண்டதும், தன் மார்புவலியை விண்டுரைக்கக் கூடாது என்று நினைத்தவள் போல், ஊசிபோல் குத்திய குத்தலை, உடம்பு முழுவதையும் சுண்டியிழுக்கும் நரக வலியை சகித்துக் கொண்டாள். அண்ணாச்சி ஏற்கெனவே குழம்பி இருக்கான். நாளைக்கி திருநெல்வேலில நடக்கப்போற விசாரணைக்காவ யோசிச்சுக்கிட்டு இருப்பான். அதோட இந்த தங்கம்மா, அவன உயிரோட சாகடிச்சிட்டாள். நானும் அவன புதைச்சிடப்புடாது. என்னோட வேதனயச் சொல்லி அவன வேதனப்படுத்தப்படாது. என்ன ஆனாலும் சரி. ஆண்டியப்பன் மீண்டும் ஏதோ கேட்கப் போனபோது குழந்தை அழுதது. அழுதது என்பதைவிட அழப் பார்த்தது. அழுவதற்கும் திராணி வேண்டாமா? ஆண்டி குழந்தையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு முதுகைத் தட்டிக் கொடுத்தான். பிறகுதான் அதற்கு இரவு பால் கொடுக்கவில்லை என்பதை உணர்ந்தவன் போல், தங்கையைப் பார்த்து, "ஒனக்கு அறிவிருக்காழா... நான் தான் அது இதை நினச்சி மறந்துட்டேன்; நீயுமா..." என்று அவன் சொன்னபோது, 'எனக்குள்ள பால் இருந்தும் குழந்தைக்குக் கொடுக்க முடியல. ஒன் மனசுக்குள்ள நியாயம் இருந்தாலும் அது ஒனக்குக் கிடக்கலியே... அது மாதிரி' என்று நயத்துடன், சோகங்கரிக்கும் சுந்தர வாயால் சொல்லப் போனாள். முடியவில்லை. எழுந்த நாக்கை இழுக்க வைத்தது வலி. ஆண்டியப்பன் குழந்தையைத் தோளில் வைத்துக் கொண்டே வீடு முழுக்கும் தேடினான். அடிக்களைப் பானைகள் மேலே இருந்த பரண், கீழே கிடந்த தகர டப்பா எங்கும், எதிலும் ஒரு இருபத்தைந்து பைசா கிடக்கவில்லை. இந்த லட்சணத்தில் நாளைக்கு திருநெல்வேலிக்குப் போகணும். பஸ் சார்ஜ், ஒரு ஆளுக்கு மட்டும் இரண்டு ரூபாய். அதுவும் போவதற்கு மட்டும். திடீரென்று அவன் மனத்தில் ஒரு ஆவேசம். பாளை அரிவாளுடன் பரமசிவம் வீட்டுக்குப் போய் மாட்டை அவிழ்த்துக் கொண்டு வரலாமா? வந்தால் மாடு வரும். இல்லையானால் உயிர் போகும். இந்த இரண்டில் ஒன்று வந்தாலும் சரி - இன்னொன்று போனாலும் சரி, லாபந்தான். ஏதோ ஒருவித சத்திய ஆவேசத்துடன், அவன் காசில்லாத தகர டப்பாவை கால்களால் தள்ளி, ஒரு பானையை உடைத்து, பாளை அரிவாளை எடுக்கப் போன போது, சின்னானின் அக்கா காத்தாயி வந்தாள். கடந்த ஒரு மாதமாக அவர்களின் கண்களில் அகப்படாதவள் தயங்கித் தயங்கி வந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள். மீனாட்சி காத்தாயியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அதை நனைத்தாள். பழியை சுமந்து கொண்டு, அந்தப் பழியை மனிதாபிமானத்திற்காக உதறிக் கொண்டு வந்து நின்ற காத்தாயியை கண்கலங்கப் பார்த்தான் ஆண்டி. இவள் யாரோ... நான் யாரோ... இவள் ஜாதி வேற, என் ஜாதி வேற. சீ ஜாதி - மண்ணாங்கட்டி ஜாதி... தெருப்புழுதி ஜாதி. ஜாதியத் தூக்கி எருக்குழில போட - அதுக்குக் கொள்ளி வச்சு, குடமுடைக்க! ஆண்டியப்பன் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு "அக்கா... என் கூடப் பொறக்காத பொறப்பே! ஒரு மாசமா எங்களைப் பார்க்காமல் எப்டிக்கா இருந்த? எப்டிக்கா மனசு வந்தது? எக்கா... எக்கா" என்று சொல்லிவிட்டு, அழுவது ஆண்பிள்ளைக்கு அழகில்லை என்று நினைத்தவன் போல் அவளைக் குழந்தையைப் போலவும், குழந்தை போலவும் பார்த்தான். காத்தாயி பதறினாள். "மொதலாளி என்ன வார்த்தப் பேசிப்புட்டீரு. இந்த அற்ப..." "இந்தா பாரு, இனிமேலும் என்னை ஜாதிய நம்பச் சொன்னீயானா, எனக்குக் கெட்ட கோபந்தான் வரும். நீயும் பிச்சக்காரி, நானும் பிச்சைக்காரன். இதுல மொதலாளி பட்டம் எதுக்கு? நாம பட்டத்தைக் கேட்டுக் கேட்டே பட்டா நிலத்தக்கூட விட்டுட்டோம்." "நீரு சொன்னவுடனே ஞாபகம் வருது. நீரு இருக்கிற இந்த வீடு பட்டா நிலம் இல்லியாம். புறம்போக்காம். வீட்டை பதினைஞ்சி நாளையில காலி பண்ணாவிட்டால், இடிப்பாங்களாம். தாசில்தார் நோட்டிஸ்ல கையெழுத்துப் போட்டுட்டாராம். நாளைக்கு ஒமக்கு வருமாம். சின்னான் சொன்னான். நான் இதைச் சொல்லத்தான் ஓடிவாரேன்!" "அப்படியா! வரட்டும். இந்தப் போஸ்ட்மாஸ்டர், இந்த இதமட்டும் கிழிக்காம கொடுத்துடுவான். நோட்டீஸ் வரட்டும். அப்புறம் பார்த்துக்கிடலாம். இவன் ஒவ்வொருவனையும் சுவர்ல ஒட்டுற நோட்டீஸ கிழிக்கது மாதிரி கிழிக்கப் போறேன்!" காத்தாயி, எந்தவிதப் பதிலும் பேசாமல், குழந்தைக்குப் பால் கொடுத்தாள். குழந்தை கால்களை துள்ளிக் கொண்டு, கைகளை ஆட்டிக்கொண்டது. பசு மாட்டின் மடுவை - முட்டிக் குடிக்குமே கன்றுக்குட்டி, அதுமாதிரி, பெறாமல் பெற்ற அந்தத் தாயின் கால்களை, தற்செயலாகத் தொடுவதுபோல், மீனாட்சி லேசாகப் பிடித்தாள். காத்தாயிக்கு, தெரியக்கூடாது என்பது மாதிரி. பொழுது புலர்ந்தது. ஆண்டியப்பனுக்கு ஒன்றும் ஓடவில்லை. இருபத்தைந்து பைசா கொடுத்து பால் வாங்க முடியாதவனால் நியாயத்தை எப்படி வாங்க முடியும்? நியாயத்தின் விலை அதிகமாயிற்றே! யோசித்தான். அதோடு இன்னொரு யோசனையும் வந்தது. மாட்டைப் பிடிச்சது மாமா. அவர் மண்ணோடு மண்ணாயிட்டாரு. சட்டப்படி, அவர் தான் முதல் எதிர். சட்டம் இல்லாதபடி, முதல் எதிரியான பரமசிவத்தின் பாதுகாப்பாக சட்டம் இருக்கலாம். மாமாவ அவமானப்படுத்தறது மாதுரி எதுக்காவ விவகாரத்தை இழுக்கணும்? அதோட நம்மளால சமாளிக்க முடியாது. எல்லாப் பயலும் கையை விட்டுட்டான். கையை விட்டால் பரவாயில்லை. அந்தக் கையை இன்னொரு பெண்ணோட கழுத்துல விடுறான். குருவி தலையில் பனங்காயை வச்சிட்டு, பனங்காட்டு நரி மாதுரி போயிட்டாங்க. நமக்கு வம்பு வேண்டாம். மாமாவோட, மாடும் செத்ததா நினைச்சிடலாம். மரம் வெட்டப் போவலாம். ஒழுங்கா தங்கச்சிக்கு சோறாவது போடலாம். மருமவப் பயலுக்கு பாலாவது கிடைக்கும். ஆண்டியப்பன் வீட்டை விட்டு வெளியே வந்தான். இன்று இளைஞர் நற்பணி மன்ற உதவித் தலைவன் கோபாலைக் கூட்டிக் கொண்டு, நெல்லை போவதாக ஏற்பாடு. நெல்லையும் வேண்டாம் தொல்லையும் வேண்டாம். பட்டது போதும் சாமி! கோபாலைப் பார்த்து தன் புதிய முடிவைச் சொல்வதற்காகப் புறப்பட்ட ஆண்டியப்பன், தலையைத் தடவிக் கொண்டே நடந்தான். எதிரே தங்கம்மா வந்து கொண்டிருந்தாள். அழுக்கடைந்த புடவை, சிக்கல் விழுந்த தலைமுடி, எங்கேயோ பார்க்கும் கண்கள், தள்ளாடிக் கொண்டே நடந்த அவளைப் பார்க்க, ஆண்டிக்கே பரிதாபமாக இருந்தது. "என்ன தங்கம் இப்படி ஆயிட்ட?" "எங்க இப்படி?" "இன்னைக்கி திருநெல்வேலி போகணும். யோசிச்சுப் பார்த்தேன். மாமனே செத்துட்டாரு. அவரு பிடிச்ச மாடா பெரிசு. அதோட என்னால தனியா நிக்க முடியாது. நீ எப்போ என்கிட்ட பேசுறத நிறுத்திட்டியோ அப்பவே மனசுக்குள்ள பேசிக்கிட்டிருந்த நியாயமும், படிப்படியா பேசுறத நிறுத்திட்டு. கோபாலப் பார்த்து விவகாரத்தை விட்டுடலாமுன்னு சொல்லப் போறேன். வரட்டுமா? வந்து மரம் வெட்டப் போகணும்." தங்கம்மா, அவனை நிமிர்ந்து பார்த்தாள். கலங்கிய கண்களில் ஒருவித ஒளி! இருட்டின வீட்டில் வைத்த மெழுகுவர்த்தி போல் - தன்னையே எரித்து ஒளிமயமாக்குவது போல் கண்கள் செம்மைப்பட்டன. வாய் தானாகப் பேசியது. "நியாயம் இப்போ கூன்பட்டு கிடக்கு. அந்த கூனை நிமுத்துறதுக்கு, நாம வளஞ்சிதான் ஆகணும். அப்படி வளையும்போது முதுகு வலிக்கும். அதப் பார்க்கப்படாது. நாம நியாயத்த நிமுத்துற வேகத்துல அந்த நியாயம் நிமுறலாம். அது நிமுறுற வேகத்துல நம்மளக்கூட தூர வீசி அடிக்கலாம். அதுக்குக் கவலைப்படப்படாது. எங்கய்யா எனக்கு நான் சாவுறது வரைக்கும் தெய்வம். ஆனால், மாட்டு விவகாரத்துல அவரு ஒரு குற்றவாளி. அவரு மாட்டைப் பிடிச்சதுக்கு நான் வேணுமுன்னாலும் சாட்சி சொல்றதுக்கு வரத் தயாரு! என்னோட அத்தான் எனக்கு புருஷனா வரப்படாதுன்னு தீர்மானம் பண்ணுன பாவிதான் நான். ஆனால், அவரு நாணயத்துக்காவ போராடுனவர்னு ஜனங்க சொல்லணுமுன்னு நினைக்கேன். அவரவிட அவரு வச்சிருக்கிற நியாயம் ஜெயிக்கணும். இல்லன்னா நான் உயிரோட இருக்கதுல நியாயமில்ல. வரட்டுமா? கையிலே ரெண்டு ரூபா இருக்கு. தரட்டுமா? நீரு கைத்தொட்டு வாங்காண்டாம். தரையில வச்சிடுதேன் எடுத்துக்கிடும்." ஆண்டி, தங்கம்மாவை வியப்போடும் தவிப்போடும் பார்த்தான். அவளே, தன்னைச் சுற்றி ஒரு வேலியை, அவன் தாண்ட முடியாத அளவுக்குப் போட்டுக் கொண்டாள். அந்த முள்வேலி பட்டு இரத்தம் வரக்கூடாது என்பதற்காக, ஒதுங்கிக் கொள்ளும் வகையில், அவன் மண்வெட்டியைத் தரையில் வைத்தான். அதை, இப்போது ஏன் குத்திக் காட்டுகிறாள்? ஆவலோடு பார்த்தவன், அவளின் கண்கள் செத்துப் போனது போலவும், காதல் அதனுடன் உடன்கட்டை ஏறியது போலவும் தோன்றியதைப் புரிந்து கொண்டான். இவள் பழைய தங்கம்மா இல்லை; அவள் செத்துட்டாள்... செத்துட்டாள். அவள் செத்ததுனால நானும் செத்துக்கிட்டே இருக்கேன். தன்னையே, தானே, சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போகிறவன் போல், அவன் ஆவேசமாக நடந்தான். |