2

     எழுத்தறிவில்லாத ஒரு ஏழைக் குடும்பத்தில் தலை மகனாய்ப் பிறப்பதே பாவம். அந்தத் தலைமகன், அரை குறையாகப் படித்துவிட்டு, அன்றாடம் அடுப்பை மட்டும் எரிய வைக்கும் மாதச் சம்பளத்தில் இருப்பது கொடிய பாவம். அவன் இந்த லட்சணத்தில் நேர்மையாய் இருந்தால் தொலைந்தான். முதல் பிள்ளை, அலுவலகத் தில் ஒவ்வொரு நாளும் தங்கம் தங்கமாக வெட்டியெடுத்து விற்பதாகவும், அவன் குடும்பம் செய்த ‘நன்றியை’ மறந்து தங்களை மறந்து விட்டதாகவும் குடும்பத்தினர் நினைப்பார்கள். அப்படிப்பட்ட நினைப்பு அவர்களுக்கு வரவில்லையானாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். உத்தியோகத்திற்காகப் போடப்படும் வெள்ளைச் சட்டை, உறவுக்காரர்களுக்கு அவனிடம் ‘கறுப்புப் பணம்’ இருப்பதுபோல் காட்டும்.

     இப்படிப்பட்ட ஏழ்மையும் அறியாமையும் இணைந்த ஒரு பின்னணியில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, எப்படியோ கஷ்டப்பட்டு எஸ்.எஸ்.எல்.சி. தேறி சென்னையில், அரசாங்க அலுவலகத்தில் கிளார்க்காகச் சேர்ந்தார். அந்தச் சமயத்தில் தந்தை கண்ணை மூட, நண்டும் சிண்டுமாக இருந்த தம்பி தங்கைகளை கவனிக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார். நேர்மையை வழிபட்ட அவருக்கு அலுவலகத்தில் உபகாரம் இல்லையென்றாலும், உபத்திரவங்கள் நிறைய கிடைத்தன. இதனால், கால் நூற்றாண்டுக் காலத்தில் கிடைத்த இரண்டு உத்தியோக உயர்வுகளும், அவருக்கு, ஒரு எக்ஸ்டிரா இன்கிரிமெண்டைத்தான் கொடுத்ததே தவிர, கணிசமான சம்பள மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் ஊர் வாய்க்குப் பயந்தும், உண்மையான பாசத்தின் உந்துதலாலும், இரண்டு தங்கைகளையும் சக்திக்கு மீறி செலவழித்து நல்ல இடங்களில் சேர்ப்பித்தார். தம்பிகள் இருவரையும், சென்னைக்குக் கொண்டு வந்து படிக்க வைத்தார். ஒருவன் எஞ்ஜினியரிங் டிப்ளமா. இன்னொருவன் அசல் எஞ்ஜினியர். (இப்போது, டிப்ளமாக்காரன், எஞ்ஜினியரை விட சம்பளத்திலும், கிம்பளத்திலும், அதிக உயரத்தில் கொடியைக் கட்டியிருப்பது வேறு விஷயம்.) படித்த மாப்பிள்ளைக்கு மனைவியாகப் போகும் பெருமிதத்தில் ராமையா நீட்டிய கயிற்றுக்கு பிற பெண்கள் மரபுப்படி தாழ்த்து முன்னாலேயே, தானாகவே கழுத்தைத் தாழ்த்திக் கொடுத்த அவர் மனைவி, மைத்துனன்மார்களின் துணிகளைக் கூட, தானே ஒருத்தியாய் துவைத்துப் போட வேண்டிய நிலைமை ஏற்பட்டதற்காக, முதலில்கொதித்தாள். இரண்டாவதாக அழுதாள். மூன்றாவதாக முனங்கினாள். இறுதியில் இதுதான் வாழ்க்கை என்று புரிந்துகொண்டு அதை ஏற்றுக் கொண்டாள். ஒரு சின்ன வீட்டில் இருந்த கூட்ட நெரிசலிலும் அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தப் பையன் எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது, அவன் ‘சித்தப்பாக்கள்’ தங்களை முன்பு மதிக்காத உறவுக்காரர்களிடமே பெண் வாங்கி மதிப்படைந்தார்கள். அண்ணன், மகனைப் படிக்க வைக்க, தங்களிடம் பணம் கேட்டாலும் கேட்கலாம் என்பதைப் புரிந்து கொண்ட ‘டிப்ளமா’ தம்பி ‘நம்ம... ராஜை காலேஜுக்கு... அனுப்பாண்டாம் அண்ணா... பாவம் எங்கள படிக்க வைக்கவே ரொம்பக் கஷ்டப்பட்டிங்க... இன்னும் கஷ்டப்படுறதுல நியாயமில்ல... அதனால... அவனை... ஏதாவது வேலையில சேர்த்துடுங்க...’ என்ற போது, ராமையா பொறுத்துக் கொண்டார். ஆனால் குற்றேவல்காரியாகப் பணியாற்றிய, அவர் மனைவி ‘ஒங்க வீட்டுக்கு பிச்சைக்கு வரமாட்டோம்பா. ஒங்க கண் முன்னாலேயே என் மகனைப் படிக்க வச்சுக் காட்டுறேன் பாரு... மொதல்ல வீட்டைவிட்டு வெளியேறு’ என்றாள்.

     ராமையா எதுவும் பேசவில்லை. அண்ணன் தட்டிக் கேட்காத கொடுமையில், தம்பி வெளியேறினான். இன்னொரு தம்பியும் சௌகரியத்தை முன்னிட்டு அவனுடன் கூட்டணி அமைத்துக் கொண்டான். இதைவிடக் கொடுமை என்னவென்றால் ‘ஒன்னையாடா இந்தப் பய இப்படிக் கேட்டான்’ என்று கேட்க வேண்டிய ராமையாவின் அம்மாவே, தன் மூத்த மகனிடம் வந்து ‘ஒன் பெண்டாட்டிய பேசவச்சு... என் மகனை விரட்டிட்டே. இப்போவாவது ஒன் மனசு குளிர்ந்துதா?’ என்று கேட்டுவிட்டுப் போய்விட்டாள் இளைய மகன் ஒருவன் வீட்டுக்கு. பாவம்... சின்ன மருமகள் கைக்குழந்தைக்காரி... ஒத்தாசை செய்ய ஓடிவிட்டாள்.

     ராமையாவுக்கு அம்மா சொன்னதுபோல் உள்ளம் குளிரவில்லை. அதற்கு அதிகமாகவே உறைத்தது. மகனை கல்லூரியில் சேர்ந்தார். அவன் பி.யூ.சி.யில் முதல் வகுப்பில் தேறினாலும் எஞ்ஜினியரிங் கல்லூரியை எட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. (அட்மிஷனுக்கு பத்தாயிரம் வேண்டுமே!) அந்தப் பையனும் அம்மா போட்ட சபதத்தை பொய்யாக்க விரும்பாதவன் போல் நண்பர்களுடன் போன ஒரு உல்லாசப் பயணத்தின் போது, விபத்தில் உயிரிழந்தான். அவன் அம்மா, ‘இதையாவது என் இஷ்டப்படி நடக்க விடுங்க’ என்று சொல்வதுபோல் மகன் இறந்த நான்கு நாட்களில் கணவர் எங்கேயோ போயிருந்த போது, அவள் எண்ணெயை ஊற்றி தன்னையே கொளுத்திக் கொண்டாள். அவளைப் போல் உணர்வுகளும் சாம்பலாக, தனித்து விடப்பட்ட ராமையாவை தம்பிகள் மீண்டும் மொய்த்தார்கள். அண்ணனைத் தனியாய் தவிக்க விடலாமா... அவன் இன்சூரன்ஸ், ஜி.பி.எஃப்., கிராஜுவிட்டி பணத்தை வைத்துக் கொண்டு தனியாக செலவழித்து அவஸ்தைப்பட வைக்கலாமா... இதில் அவனுக்கு ஒத்தாசை பண்ணாண்டாமா...

     ராமையா ஒத்தாசைக்கு இடம் வைக்கவில்லை.

     ஒரு மாதம் விடுமுறை போட்டுவிட்டு எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, இந்தப் பக்கமாக வந்தார். இந்தக் கோவிலில் சைவப்பழம் போல் தோன்றிய சாமியாரிடம் அழுது தீர்த்தார். அந்தப் பெரியவர் ‘ஈஸ்வரன்கிட்ட வந்துட்டே... இனிமேல் எல்லாவற்றையும் அவன் பார்த்துக்குவான்’ என்று சொல்லி அவருக்கு விபூதி பூசினார். ராமையாவுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. இப்போது அந்த வேலை எப்படி இருக்கோ... யார் பார்க்கிறார்களோ...

     சாமியாருடனேயே தங்கிய ராமையா, அவருக்கு பூஜையின் போது உதவினார். கால்களைப் பிடித்துவிட்டார். அவர் சொல்லும் தத்துவங்களையெல்லாம் தன்னை மறந்து கேட்டுக் கொண்டார். பூஜையின் போது இதை எடு என்று சொல்வதற்கு முன்னாலேயே, பூஜைப் பொருட்களைக் குறிப்பறிந்து எடுத்துக் கொடுக்கும் ராமையாவை சாமியாருக்குப் பிடித்துப் போய்விட்டது. அதோடு சாமுத்திரிகா லட்சணப்படி, ஆன்மீகத்திற்காக அமைந்தவர் போலவும் சிஷ்யர் தோன்றினார். ஒரு நாள் - நல்லதோர் பௌர்ணமி தினத்தில், சாமியார் ராமையாவை இந்த அருவிநீர் விழும் தடாகத்தில் இடுப்பளவு தண்ணீரில் நிறுத்தினார். ஏதோ சில மந்திரங்களைச் சொல்லச் சொன்னார். பிறகு தான் உடுத்திய காவி வேட்டியை நீட்டி, அவரை அணியச் சொன்னார். அதன் பின் தன் கழுத்தில் கிடந்த ஒரு ருத்ராட்ச மாலையைப் போட்டுவிட்டார். பின்னர் நெற்றி நிறைய அவருக்கு விபூதி பூசி, ‘சிவா அர்ப்பணம்... சிவா அர்ப்பணம்’ என்று சொன்னபோது உணர்ச்சிப் பேரியக்கத்தில் உந்தப்பட்ட ராமையா, நீரென்றும் பார்க்காமல், ‘குருநாதா... என் அம்மையே... அப்பனே’ என்று தழுதழுத்தக் குரலில் சொல்லிக் கொண்டே நீருக்குள் நெருஞ்சாண்கிடையாக விழுந்து, குருநாதனின் பாதங்களைப் பற்றிக் கொண்டார்.

     அவரைத் தூக்கிப் பிடித்து நிறுத்திவிட்டு, சாமியார் “மகனே... மந்திரம் தந்திரம் யந்திரம் என்று எதுவும் வேண்டாம். இப்போது நான் சொன்னவையெல்லாம், உன் மனதை வழிப்படுத்தும் பயிற்சிச் சொற்கள்தான். தேசக்கொடியை நாம் வணங்குவதால், தேசம், அந்த சின்னக் கொடிக்குள் அடங்கிவிட்டதாக எப்படி நினைக்க மாட்டோமோ, அப்படி ஈஸ்வரன் இந்த மந்திரத்துள் அடங்கிவிட்டதாக நினைக்கலாகாது. அவன் அனைத்தையும் கடந்தவன். அவனை உணர, ‘மூட’ பக்திக்கு இணையானது எதுவும் இல்லை. எந்தச் சித்தும் இல்லை. யோகமும் இல்லை. எனக்கு வழி காட்டும் ஈஸ்வரன், உனக்கும் காட்டுவான். நான் காத்திருந்தது வீண் போகவில்லை” என்று சொல்லிவிட்டு அவரை ஆலயத்துள் அழைத்துச் சென்றார்.

     ராமையா சிட்சை பெற்ற ஆறு மாதத்திற்குள் பெரிய சாமியார் இறந்துவிட்டார். தூரத்து கிராம மக்கள், அவரை விமரிசையாக அடக்கம் செய்ததுடன், சின்னச் சாமியாரையும் மரியாதையுடன் பார்த்தார்கள். இவரும் குருநாதரின் ஒரு ஜோடி காவி ஆடையை குடிசைக்குள்ளேயே வைத்து பூஜித்து அவரது நினைவைப் போக்கிக் கொண்டே, ஈஸ்வர சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

     ஆனால் இன்றைக்கு அந்தத் தொழுநோயாளியும், அதற்குப் பிறகு வந்த அந்த நடுத்தர வயது மாதும், அவர் உள்ளத்தை நிலைகுலைய வைத்துவிட்டனர். போதாக்குறைக்கு நான்கு மாதத்திற்கு முன்பு அந்த இடத்திற்கு ‘பிக்னிக்குக்காக’ வந்த ஒரு கூட்டம், இப்போது அடுக்கடுக்காக பல கூட்டங்களை அழைத்து வருகிறது. தண்ணீரில் குளிக்க ‘தண்ணி’யோடு வருபவர்களும் உண்டு. அத்துடன் அருகில் ஓடும் காட்டாற்றை மடக்கி, அணை கட்டுவதற்காக, அரசின் ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. எஞ்ஜினியர்கள், தொழிலாளர்கள் ‘டெண்ட்’ போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். காண்ட்ராக்டர்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், மலைச்சரிவுகளில் குடிசைகள் போட்டுக் கொண்டு முடங்கிக் கிடக்கிறார்கள். எல்லோரும் இந்த அருவியில் குளிக்க வந்துவிடுவார்கள். இவர்களைப் பார்த்ததும், சொந்த அனுபவத்தால், மனித சமூகம் மீதே வெறுப்புற்ற சாமியார், ஜனத்திரளைப் பார்த்ததும் குடிசைக்குப் போய்விடுவார்.

     சொந்த அனுபவத்தைத் தின்றுகொண்டோ அல்லது தின்னப்பட்டோ தவித்த சாமியார், அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்த மனிதர்கள். இப்போது அருவியை நோக்கிக் கூட்டமாய் போனபோது, கோவிலை விட்டுக் குடிசைக்குப் போனார். ஆனால் நெஞ்சில் பதிந்து அந்தத் தொழு நோயாளியும், நடுத்தர வயது மாதும் போக மறுத்தனர். எந்த ஸ்லோகத்தை நினைத்தாலும், இந்த மனித ஸ்லோகங்கள் அதை விழுங்கிக் கொண்டு நின்றன.



புதிய திரிபுரங்கள் : 1 2 3 4 5