4

     ஒரு மாதம் ஓடியிருக்கும்.

     வேல்சாமியும், அவனுடன் பின்னிப் பிணைந்த பாட்டாளி வாழ்க்கை முறையும், சாமியார் மனதில் இருந்து மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. எப்போவாவது அணைக்கட்டுப் பகுதியில், வாழ்க ஒழிக கோஷங்கள் கேட்கும். ஓரிரு தடவை போலீஸ் ஜீப்புகள் போவதையும் பார்த்திருக்கிறார். என்னதான் நடக்கிறது என்பதைப் போய்ப் பார்க்கலாம் என்று குறுகுறுத்த மனதை, மாயையில் உழல்வதாக நினைத்து, பத்மாசனம் போட்டு, புருவ மத்தியைப் பார்த்து அடக்கினார். சர்வேஸ்வரனிடம் ‘லேசாக நன்மைக்காக, அந்தரங்க சுத்தியோடு’ பிரார்த்தித்துக் கொண்டார். வேல்சாமியைப் பார்க்க வேண்டும்போல் ஒரு எண்ணம் ஏற்படும்போதெல்லாம், கூடவே மாண்டுபோன தன் மகனின் நினைவும், அவன் பிரிவாற்றாமயால் உயிர் துறந்த மனைவி, மனைவியால் சேவகம் செய்யப்பட்ட தம்பிகள் - தம்பிகளை மட்டுமே பெற்றதாக நினைத்த தன் தாய் - அத்தனை பேரும் அவர்கள் சம்பந்தப்பட்ட ஒட்டு மொத்தமான நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகள் சுமந்த உணர்வுகளும் வந்தன. மீண்டும், லோக மாயையில் உழல அவர் விரும்பவில்லை. ஈஸ்வரனிடம் அர்ப்பணித்த உள்ளத்தை ஜல்லடை போட அவர் விரும்பவில்லை. ஆகையால் வேல்சாமி, தன் கண்ணில் படக்கூடாது என்று கூட, தன் விருப்பத்திற்கு விரோதமாகவே பிரார்த்தித்துக் கொண்டார்.

     பிரார்த்தனை பலித்தது - சற்று அதிகமாகவே. வழக்கம் போல், அதிகாலையில் பூஜைக்குப் புறப்பட்ட சாமியார், நிலவொளியில், கோவிலுக்குச் சற்று அருகே கூட்டம் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டவராக, வேகமாக நடந்தார்.

     அங்கே -

     ஒரு பாறையில், வள்ளி கிடத்தப்பட்டிருந்தாள். அவள் கழுத்தில் சுருக்குக் கயிறு அவிழ்க்கப்படாமல் இருக்கப் பட்டிருந்தது. நாக்கு, மகிஷாசுரவர்த்தினியின் நாக்கு போல், கோரமாக வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. கண்கள், விழிகள் விலகி உருட்டிய பாவத்துடன், எதையோ உருட்ட நினைக்கும் கோபத்துடன் தெறித்து விழப் போகிறவைபோல் வெறித்து நின்றன. சுருக்குக் கயிற்றின் இறுக்கத்தால், அவள் கழுத்து ‘விடமுண்ட கண்டன்’ போல் வீங்கியிருந்தது. அவளைப் பார்த்த சாமியாருக்கு, ஊத்துக்கோட்டைக்கு அருகே உள்ள ஈஸ்வரன் கோயிலில் மயங்கிய நிலையில் உமையாள் மடியில் தலைவைத்துக் கிடக்கும் ஈஸ்வரன் சிலைதான் நினைவுக்கு வந்தது.

     சாமியாரைப் பார்த்ததும், சடலத்தைச் சுற்றி நின்ற தொழிலாளிகள் அவருக்கு மரியாதையாக வழி விட்டனர். வள்ளியை குனிந்து பார்த்த சாமியார், ‘ஈஸ்வரா... ஈஸ்வரா... இது நியாயமா... நியாயமாடா... ஒன் முன்னால் என் கையால் கொடுத்த விபூதியே அவள் உடம்பை அஸ்தியாக்கிட்டே... சர்வேஸ்வரா, சர்வேஸ்வரா...’ என்று தன்பாட்டுக்கு கூவிய சாமியார், சிறிது நிதானித்து, சிறிது தியானித்து, “வேல்சாமிய எங்கே...” என்று பொதுப்படையாகக் கேட்டார். தொழிலாளர்களில் ஒருவர் பதிலளித்தார்:

     “முந்தாநாள் அம்மாவுக்கு மருந்து வாங்குறதுக்காக... கீழே போனவன் ஒரேயடியாகக் கீழே போயிட்டான் சாமி! லாரில அடிபட்டு - அடிபட்ட இடத்துலயே போயிட்டான் சாமி...”

     சாமியாரால் இப்போது பேச முடியவில்லை. அழுகையை அடக்கி ஆகாயத்தைப் பார்த்தபடி கேட்டார்:

     “விபத்தா... இல்ல...”

     “வெளியுலகுக்கு விபத்து... ஆனால் எங்களுக்குத்தான் தெரியும், காண்டிராக்டரோட வேல... அணைக்கட்டுல சுவர் எழுப்புற எங்களுக்காக பேசுனவனுக்கு, அவரு கட்டுன சமாதி! ஏழை சொல்லு எங்கே அம்பலம் ஏறும் சாமி? போன வாரம்தான் சங்கத்தைத் துவக்கினோம். அவனை தலைவனாய் தேர்ந்தெடுத்தோம்... இப்போ தலையில்லாத முண்டமாய் நிக்கோம்... மூடனாய் இருந்தவங்க, அவனால மனுஷனாகி, இப்போ முண்டமாய் நிக்கோம். இந்தப் பொண்ணு துக்கம் தாங்காமல் தூக்குப் போட்டுக்கிட்டாள். தன்னையே கொன்னுட்டாள்...”

     இன்னொருவர் இடைமறித்தார்:

     “தற்கொலைன்னு எப்படிப்பா சொல்ல முடியும்? அந்த மவராசனோட கையாளுங்களே அடிச்சுப் போட்டுட்டு இப்படி செய்திருக்கலாம் இல்லியா...”

     “எதுக்கும் போலீஸ் வந்தால் தெரிஞ்சுட்டுப் போகுது. யாரும் கயிற்றைத் தொடாதீங்க...”

     “இவன் ஒருத்தன்... போலீஸ் மட்டும் வந்து என்னத்த கிழிக்கும்! வேல்சாமி விபத்துல சாகலன்னு மனுக் கொடுத்தோம். என்ன ஆச்சு? இன்ஸ்பெக்டர் நம்மையே மிரட்டலியா? அந்தக் கதைதான் இந்தக் கதையும்...”

     “நம்ம கதை அவலக்கதை தானப்பா... போன வாரம் ஒரு எஸ்டேட்டுக்குள்ள ஒருத்தி தூக்குப் போட்டுச் செத்துட்டதாப் பேச்சு... சப்-இன்ஸ்பெக்டர் எஸ்டேட் முதலாளி அனுப்புன கார்ல வந்து விசாரிச்சாரு... அவருக்கு ஓடுற காரு பெரிசாத் தெரியுமா? நின்னுட்ட ஒடம்பு பெரிசாத் தெரியுமா? இங்கேயும் தற்கொலைன்னு ‘பஞ்சாயத்து’ முடிவுபண்ணும்... இதை நாம மறுத்துச் சொன்னால், நமக்கும் லாரி கிடைக்கும்... சரி... ஏதோ தலை எழுத்தோ, காலெழுத்தோ... இனிமேல் ஆகவேண்டியதைப் பார்க்கலாம். போலீஸ் ரிப்போர்ட் பண்ண ஆள் போயாச்சா?”

     சாமியார் கோவிலுக்குள் போகவில்லை. கையில் வைத்திருந்த மாலையை அந்தப் பிணத்திற்குப் போட்டார். அவள் காலருகே உட்கார்ந்து -

     “வள்ளி... என்னை மன்னிச்சிடுமா. ஒன்னோட மரணத்திற்கும், ஒன்னவனோட மரணத்துக்கும் நானும் காரணமாயிட்டேன்... நான் மட்டும் அவனை யூனியன் வேண்டாமுன்னு சொல்லியிருந்தால் அவன் கேட்டிருப்பான். இந்த நிலையும் வந்திருக்காது... எனக்கு அப்படிச் சொல்ல மனமில்ல... இப்பவும் மனமில்லே... தெய்வமாய் மாறிட்ட நீ... இதோ என் பிள்ளைகள் யூனியன் மூலம் தங்கள் போராட்டத்த வெற்றிகரமாய் நடத்த வழி காட்டம்மா... வரம் கொடு தாயே...”

     சாமியார் எழுந்தார். அத்தனை தொழிலாளிகளும் அவரை வியப்போடு பார்த்தார்கள். எவரோ ஒருவர் ‘வேல் சாமியையும் வள்ளியையும் ஒங்களுக்குத் தெரியுமா சாமி’ என்று கேட்கப் போனார். சாமியார் ஆகாயத்தைப் பார்த்த தோரணையையும், தங்களை ஒவ்வொருவராக ஊடுருவிப் பார்த்த கண்களில் - அந்தக் கண்களையே எரிப்பது போல் தோன்றிய அக்கினிப் பிரவாகத்தையும் பார்த்துவிட்டு, சொல்ல வந்ததை விட்டுவிட்டு சொல்லப் போகிறவரையே பார்த்தார். சாமியார் ஏதாவது பேசுவாரா என்பதுபோல் எல்லோரும் பார்த்தார்கள்.

     அவர் பேசவில்லை.

     குனிந்த தலை நிமிராமல், குறுகிய தோள்கள் புடைக்காமல், தரையையும் தன்னையும் பார்த்தபடி குடிசைக்குள் போனார். வெளியே கிடந்த பாறைக் கல்லில் உட்கார்ந்து கொண்டார். அங்கிருந்து பார்த்த அவர் கண்களுக்கு, பாறை மேல் சரிந்து கிடந்த வள்ளி, பாறையைப் பிளந்த ஆலமர வேர் போல தோன்றியது. அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டார். வள்ளி என்று அழைக்கப்பட்ட, அந்தப் பிணத்தைப் பார்த்த அவர் கண்கள், குளமாகிக் கொண்டே வந்தன.

     ஆறு மணி நேரத்திற்குப் பிறகு, போலீஸ்காரர்கள் வந்தார்கள். ஆண்களும் பெண்களுமாக நின்ற கூட்டத்தை அதட்டி அதட்டி எதையோ கேட்டார்கள். ஒரு போலீஸ்காரர், வள்ளியின் கழுத்தில் கிடந்த மாலையை லத்திக்கம்பால் தட்டியபடியே எதையோ கேட்டார். பிறகு சாமியார் இருந்த குடிசையைப் பார்த்தார்.

     இரண்டு போலீஸ் அதிகாரிகள், சாமியாரிடம் வந்தார்கள். அவரோ, அவர்களைப் பார்த்த பிறகும் அசைவற்றவராய் அந்தப் பாராங்கல்லிலேயே உட்கார்ந்திருந்தார்.

     பெரிய போலீஸ் அதிகாரி, அருகே இருந்த குட்டிக் கல்லில் உட்கார்ந்தபடி சாமியாரிடம் எதையோ கேட்கப் போனார். அதற்குள் சாமியாரே முந்திக் கொண்டு நடந்தவற்றை நடந்தவிதத்தில் கூறி முடித்தார். எல்லாவற்றையும் கேட்டு முடித்த போலீஸ் அதிகாரி, பிறகு சாவகாசமாக, “சாமி... எனக்கு எப்போ புரமோஷன் வரும்னு சொல்லுங்கோ...” என்றார். அவர் குரலின் தோரணை சாமியாரின் ஜோஸ்யம், அவரை வழக்கில் சாட்சியாக அழைக்காமல் இருப்பதற்கான லஞ்சம்போல் காட்டியது.

     சாமியார் அவரைப் பார்க்காமலே பதிலளித்தார்.

     “மொதல்ல வேல்சாமி... விபத்துலதான் செத்தானா? இந்தப் பொண்ணு தற்கொலையில்தான் செத்தாளா என்கிறதை நியாயமான முறையில விசாரணை நடத்துங்க. ஈஸ்வரன் உங்களுக்கு தானா வராத புரமோஷனைக் கூட வாங்கிக் கொடுப்பான்.”

     போலீஸ் அதிகாரி தனது சந்தேகத்தையே, சாதுரியமாக்கினார்.

     “சாமி... நீங்க பெரியவங்க... ஒங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. இருந்தாலும் சொல்றேன். தப்பா நினைக்கப்படாது. இன்னொரு தடவை இப்படிச் சொல்லாதீங்க... வேற அதிகாரிகிட்ட இப்படிச் சொன்னீங்கன்னா, ஒங்களை சாமியார் வேடத்தில் இருக்கிற நக்ஸலைட்டுன்னு சந்தேகப்படுவாங்க...”

     சாமியார், ஏகத்தாளமாகச் சொன்னார்:

     “அப்படிப் பார்த்தால், ஒரு கையில் உடுக்கையும், இன்னொரு கையில் திரிசூலமும் ஏந்தி, சுடலைப்பொடி பூசி, ஊழிநடனம் ஆடுற ஈஸ்வரனும் ஒரு நக்ஸலைட்டுத் தான்... ஒங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், நான் கோர்ட்டுக்கு வேணுமுன்னாலும் வாரேன். குறுக்கு விசாரணைக்கு உடன்படுறேன்...”

     “கோர்ட்டு கோவில் இல்ல சாமி...”

     “தெரியும்... செங்கோலுக்கு முன்னால் சங்கீதம் செல்லாதுன்னு தெரியும். அதே சமயம் தெய்வ நீதிக்கு முன் செங்கோல் நீதி செல்லாதுன்னும் தெரியும். சரி போயிட்டு வாரீங்களா... ஆறு மணி நேரமா அதோ பிணம் ஒங்களுக்காகக் காத்துக் கிடக்கு... பிணம் போல வாழ்ந்தவளை மனித ஜீவி மாதிரியாவது அடக்கம் பண்ணுங்க...”

     போலீஸ் அதிகாரிகள், சாமியார் மீது சந்தேகப் பார்வையை வீசிக்கொண்டே எழுந்தார்கள்.



புதிய திரிபுரங்கள் : 1 2 3 4 5