உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
10 கோலவடிவு, மீண்டும் அதே அந்த குளத்தடி வயல், பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்தாள். ஏதோ குளிக்க வேண்டுமே என்பதற்காக குளிப்பதுபோல், தண்ணிருக்குள் தலையைக் கொடுக்காமல், ‘காக்கா’ குளியலாகக் குளித்துக் கொண்டிருந்தாள். சோப்புத் தேய்க்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் எழுந்தாள். கண்கள் குளத்துக் கரையைப் பார்த்தன. அவளுக்கே தெரியும், அலங்காளி வரமாட்டாள் என்று. ஆனாலும் ஒரு சபலம். அலங்காரி அத்தை வந்தாலும் வருவாள். அவளைத் தேடி துளசிங்கமும் வந்தாலும் வருவார். அத்தையைத் தேடியா, இல்லை தன்னைத் தேடியா. கோலம், பம்ப் செட் அறைக்குள் துணி மாற்றியபடியே, தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். “பாவம் துளசிங்கம்... அண்ணா அவரு கைய திருகிப் போட்டானே. இப்போ கையி எப்படி இருக்கோ...? அவரு மட்டும் என்னவாம்... அண்ணா காதக் கடிக்க... ஊசி போட்டோமே... வேண்டாத சண்டை எனக்காவ இவரு விட்டுக் கொடுத்திருக்கலாம். நான் ரெண்டு கையை பிசைந்தது ரெண்டு பேருக்காவன்னு அவருக்குத் தெரியுமோ என்னவோ. என்னையும் சண்டைக்காரியாய் நினைக்கப் போறாரு. அப்படி நெணக்கப் படாதுன்னு அலங்காரி அத்தேகிட்ட சொல்லணும். முடியுமானால் அவரு கிட்டயே... அதெப்படி முடியும்... ஏன்... வாயாலதான் பேச முடியுமா... கண்ணால பேச முடியாதா... இந்தச் சண்டையால அவர நெனக்கக்கூட எனக்கு தகுதியில்லாம போயிட்டே. நல்ல வேளை அப்பா அண்ணாவைத்தான் திட்டுனாரு. அடிக்கக்கூட போயிட்டாரு. துளசிங்கம் நல்ல பையன்னு வேற சர்ட்டிபிகேட் கொடுத்தாரு. அலங்காரி அத்தைகிட்ட சொல்லணும். அந்த அத்தைக்கு மூள இல்ல. நான் இங்க இருப்பேன்னு தெரிஞ்சு வரவேண்டாம்... அத்தைக்குத் தான் மூள இல்ல... அவருக்குமா... சீச்சி... இதுக்குமேல நினைக்கறது இன்னும் கோபம் ஆறாத எங்கண்ணாவ அவமானப் படுத்தறது மாதிரி.” கோலவடிவு, மத்தாப்பு மனதைக் கல்லாக்கிக் கொண்டாள். ஈரப் புடவையைப் பிழிந்து, மூன்றாக மடித்துத் தோளில் போட்டுக் கொண்டு, புறப்பட்டாள். அடடே என்ன சத்தம்... ராமையா மாமா சத்தம்... துளசிங்கம் மச்சான் சத்தம்... கோலம் முதலில் ஆனந்தக் கோலமானாள். பின்னர், அப்படியே சோகக் கோலமானாள். ராமையா வயல், துளசிங்கம் வயலுக்கும் பக்கத்து வயல். இங்கிருந்தபடியே பேசினால் அங்கே கேட்கும். அந்த வயல் நெற்பயிரைத் துளசிங்கமும், ராமையாவும் கூடவே அக்கினி ராசாவும் சுற்றிச் சுற்றிப் பாக்காவ. கைகளை ஆட்டி ஆட்டி பேசுதாவ. இது என்ன? ராமய்யா மாமா துளசிங்கத்தை அடிக்கப்போறது மாதிரி துள்ளுறாரே. மாமா அவர திட்டாதயும், திட்டப்படாது. இப்போது அவர்கள், அந்த வயலின் கிணத்து மேட்டுக்கு வந்து, கோபங் கோபமாய் பேசிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. துளசிங்கம் மச்சான் இடது கையில், பிளாஸ்திரி போடப்பட்டு, அது ஒரு துணிக்கட்டில் தொங்கியது. அடக்கடவுளே... ஆனாலும் எங்கண்ணா மோசம். அடிச்சாலும் இப்படியா... பாவம்... எப்டி துடிக்காரோ...? எப்படி வலிக்குதோ...? கோலவடிவுக்கு அந்தப் பக்கம் போக வேண்டும் போலிருந்தது. அவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் போலிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, துளசிங்கம் மச்சான் கை பிசகியிருக்கா, இல்ல ஒடிஞ்சிருக்கான்னு தெரிஞ்சுக்கணும். கடவுளே... கடவுளே பிசகி இருக்கணும்... ஒடிஞ்சிருக்கப்படாது. இந்தப் பாவி நெத்தியில எந்த நேரம் குங்குமம் வச்சாரோ, கை ஒடஞ்சிட்டே. ஒடச்சிட்டானே... நாசமாப் போறவன்... கடவுளே... கடவுளே... ஒடிச்சவன் எங்கண்ணன்னு தெரியாம திட்டிட்டேன் பாரு. சரி... இப்போ அந்தப் பக்கம் போகணும். எப்டி போறது... போறதுல தப்பில்ல. பழைய சண்டை விஷயமாயும் ரெண்டு பேரும் பேசலாமுல்லா. கோலவடிவு யோசித்தாள். அங்கிருந்தபடியே அந்த வயலுக்குத் தாவிக் குதிக்கப் போகிறவள்போல், முன் பாதங்களை அழுத்தினாள். அடடே... ராமய்யா மாமா... கிணத்து மேட்டுல ஒரு ரோசாச் செடி இருக்கே. நாலைஞ்சு பூ இருக்கே. தலையில வச்சால் எப்டி இருக்கும். யாரும் எப்படியும் போவட்டும். நாம் பூப்பறிக்கத்தானே போறோம்.” கோலவடிவு நடக்க முடியாதவள் போல் நடந்தாள். தன்னை நம்ப முடியாதவள் போல் நடை போட்டாள். ஒத்தைப் பரப்பில், கைகளை அங்குமிங்குமாய் ஆட்டி, சர்க்கஸ்காரி போல் நிதானமாய் நடந்து, ராமையா மாமாவின் வயலுக்கு வந்துவிட்டாள். அக்கினி ராசா பராக்குப் பார்த்துட்டு இருந்தான். துளசிங்கமும், ராமையாவும், காரசாரமாகப் பேசினார்கள். அக்கினி ராசா, அவளைப் பார்த்தான். என்னம்மான்னு கேட்க திராணி இல்லை. அப்பா முகத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். கோலவடிவே அவர்கள் கவனத்தைக் கலைத்தாள். “மாமா... இந்த ரோசாப் பூவை நான் பறிச்சுக்கட்டுமா...? நல்ல பூவு...” துளசிங்கத்திடம் வாயெல்லாம் பல்லாகக் கடித்துக் குத்திப் பேசிய ராமையாவுக்குக் கோலவடிவைக் கண்டதும், பல்லெல்லாம் வாயாகிவிட்டது. பய மவளுக்கும் அக்கினி ராசாவக் கட்டிக்க ஆசதான். இவள் சம்மதிக்காம கல்யாணம் நடக்காதேன்னு இனுமப் பயப்படவேண்டாம். ராமையா, அவளை மகளைப் பாாப்பதுபோல் பார்த்துத் தந்தை போல் பேசினார். “ஒனக்குல்லாத பூவாம்மா. நீ பறிக்காத... முள்ளு குத்தும். எல அக்கினி ராசா. வேட்டிய எடுத்து கால் வரைக்கும் இழுத்துப் போடுல. மூதேவி... மாமா மவளுக்கு பூப்பறிச்சுக் கொடுடா. எல்லாப் பூவையும் பறிச்சுக் கொடுடா...” அக்கினி ராசாவுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. அவனுக்கும் இந்தக் கல்யாணப் பேச்சு தெரிந்திருக்க வேண்டும். அவளை ஆவலோடு பார்த்தான். அனுமான் சஞ்சீவி மலையத் தூக்கியது மாதிரி, பூக்கள் மொய்த்த அந்த ரோசாச் செடியையே வேருடன் பிடுங்குவது போல் பூக்களைப் பறித்தான். மூன்று பூக்கள், ஒரு மொட்டு, நான்கையும் அவளிடம் நீட்டிவிட்டு, ஏதோ பேசப்போனான். பிறகு அவனுக்கு வெட்கம் வந்தது. ஒடிப்போய் துளசிங்கம் பக்கத்தில் நின்று கொண்டான். கோலவடிவு, அக்கினி ராசாவைப் பாவமாகப் பார்த்தாள். துளசிங்கத்தையும் ‘பாவமாகப்’ பார்த்தாள். அவனோ, அவள் பக்கம் சட்டென்று திரும்பிவிட்டு, அதே வேகத்தில் முகத்தை ராமையாவின் முன்னால் நிறுத்தினான். கோலவடிவு, தலையில் பூ வைக்கும் சாக்கில் அங்கேயே நின்றாள். அவள் போகட்டும் என்று பேச்சை நிறுத்திய துளசிங்கம், பிறகு அவள் ஒரு பொருட்டல்ல என்பதாய்ப் பேச்சை விட்ட இடத்தில் இருந்து துவங்கினான். “ஒமக்கு எப்டி சின்னய்யா நஷ்ட ஈடு கொடுக்க முடியும்.” “என்னடா பேச்சுப் பேசற. ஒன் உரத்த வாங்கி, இந்த ஆறு மரக்கால் விதப்பாடு அவ்வளத்துலயும் போட்டேன். மற்ற வயலுல நெல்லுப் பயிருவ. குட்டையாய் நிக்கும்போது என் வயலுல பயிரு நெட்டையா சிலுசிலுன்னு வளர்ந்ததுல சந்தோஷப்பட்டேன். இப்போ பயிருல்லாம் சாவியாய் போயிட்டேடா. இவ்வளவுக்கும் மத்த வயலுக்காரங்க மாதிரிதான் தண்ணி பாய்ச்சுனேன். பூச்சி மருந்து அடிச்சேன். எல்லா பயிரும் நெல்லுக் கதிரச் சுமக்கும் போது, என் நெற்பயிரு மலடி மாதிரி சாவியாயிட்டடா. ஒன் உரத்துலதான் ஏதோ மிஸ்டேக்கு...” “சரி, கத்தாதேயும்... எனக்கு மறந்து போச்சு. என்ன உரம் வாங்கினிரு.” “பொட்டாசியம்... சீம உரம்...” “ஒ... அதுவா... இப்போ நல்லா ஞாபகம் வருது. அந்த உரத்தோட யூரியா உரத்த கலந்து போடணுமுன்னு அக்கினி ராசா கிட்டே முருகன் கோவில் முன்னால் சொன்னேன். இல்லியா அக்கினி.” அக்கினி, ஆமாம் என்பதுபோல் தலையாட்டினான். உடனே, துளசிங்கம், “ஒம்ம மகன் கிட்டயே விசாரியும்” என்றபோது, அப்பா கேட்டால் மட்டுமே பேசும் அக்கினி பேசாமல் இருந்தான். “துளசிங்கம் சொல்லுறது நிசமாடா.” “ஆமா... பொட்டாசியம் உரத்த, யூரியா உரத்தோட போடாட்டா பயிரு பொண்ணு மாதிரி வளரும். ஆனால் சமையாது. அதாவது வயசுக்கு வராதுன்னு துளசி சொன்னது வாஸ்தவந்தான். நான் ஒம்ம கிட்ட சொல்லல. செலவாகுமேன்னு...” “போபும் போயும் எனக்கு வந்து மகனா வாய்ச்சே பாரு. நீயுல்லாம் ஒரு சம்சாரியா. செலவாகுமுன்னா நெனச்சே? வயல நட்டால் செலவாகும். நடாமல் இருப்பமோ? பம்பு செட் போட்டா கரெண்ட் செலவாகும். போடாம வைப்பமா? பூச்சி மருந்தடிச்சா செலவாவும். அடிக்காம இருப்பமா? நீயுல்லாம் ஒரு விவசாயியாக்கும். ஏடே துளசிங்கம். ஒன்ன நான் திட்டுவது தப்புத்தான், முட்டாத் தனந்தான். தப்பா எடுத்துக்காதடே.” “தலையை வெட்டிட்டு தப்புன்னு சொல்லும். எனக்குத் தெரியும், நீங்க எல்லாரும் என்னை இப்டி கரிச்சுச் கொட்டுவியங்கன்னு. பண்டாரம் பரதேசியாய் போனவன், அதுவும் உப்புக்கும் உதவாத எலி டாக்டர் மகன், நல்லா சம்பாதிக்கானேன்னு பொறாம. ஆனால் ஒண்ணு சொல்லுறேன். இந்த ஊரே சேர்ந்தாலும் என்னை துரத்த முடியாது. ஒங்களால மிரட்ட முடியும். ஆனால் விரட்ட முடியாது.” துளசிங்கம், போகப் போகிறவன்போல், செருப்பு போடப் போனான். அதைப் பார்த்த கோலவடிவு, ராமையா மாமா வயல் வழியாகச் சின்ன வாய்க்கால் வரப்பில் நடந்தாள். ராமையா, அக்கினி ராசாவை அடித்திருப்பார். பிறகு மருமகள் கோலவடிவுக்கும் அந்தப் பழக்கம் வந்துவிடக்கூடாதே என்று பல்லை மட்டும் கடித்தார். துளசிங்கத்திடம், “வைக்கோலாவது வருமா. அதை மாட்டுக்குப் போடலாமா” என்று கேட்கப் போனவர், மருமகளுக்குக் கேட்கும்படியாய் அவன் இன்னும் ஏடா கோடமாய் பேசிவிடப் படாதே என்று பயந்து போனார். அந்த வயலைவிட்டு அடுத்த வயல் சென்ற கோலவடிவு திரும்பிப் பார்த்தாள். துளசிங்கம் வந்து கொண்டிருந்தான். வேட்டி சட்டையோடு அல்ல. பொம்மைச் சட்டையோடும், பாவாடை மாதிரி அகலமான பேண்ட்டோடும். கோலவடிவு அவனுக்குப் பயந்து நடப்பவள் போல் நடந்தாள். பிறகு இன்னொரு வாய்க்காலுக்கு வந்ததும் பதுங்கி நின்றாள். சே... காலெல்லாம் ஒரே சகதி. வாய்க்காலுல காலக் கழுவணும். எப்படி அப்புது... எம்மாடி... கோலவடிவு, கால்களைக் கழுவிக் கொண்டிருக்கும் போது, துளசிங்கம் வந்துவிட்டான். அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு, திரும்பிப் பார்க்காமலே நடந்தான். கோலவடிவு கழுவிய ஒரு காலோடும், கழுவாத இன்னொரு காலோடும் ஓடினாள். அவன் முகத்தைப் பின்னோக்கிச் செலுத்துவதற்காக இருமினாள்... செருமினாள்... அவன் திரும்பியதும் நாணத்தோடு நின்றாள். அவன் மீண்டும் நடக்கப் போனான். அவள், வார்த்தைகளால் இடைமறித்தாள். “அலங்காரி அத்தையக் காணோம்...” “கூட்டிட்டு வா காட்டுறேன்... பாசம் ரொம்பத்தான் பொங்குதோ.” “ஒம்ம கையி...” “ஏன் முழுசா உடையலன்னு கேட்கியா? கையில பணமில்லாமலே சிமெண்ட் கேட்டு வம்புக்கு வந்த அண்ணன் கையில ரூபாய் திணிச்சத நான் மறக்கல... எம்மாளு... ஒனக்குக் கோடி கும்பிடு. இந்த வம்பு தும்புக்கு மூலமே நீதான். எங்க அலங்காரி சித்தி வியைாட்டுக்குச் சொன்னத. நீ பெரிசு படுத்தாம இருந்திருந்தால் எனக்கு கையும் ஒடிஞ்சிருக்காது. ஒங்கண்ணாவுக்கு காதும் கிழிஞ்சிருக்காது. இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ. ஒன்ன நல்ல பொண்ணுன்னு நெனச்சேன் பாரு, என்னை...” துளசிங்கம், அவள் இதயத்தை இட்டு நிரப்பாதது போல், சொல்ல வந்ததையும் சொல்லி முடிக்காமலே வேறு பக்கமாக நடந்தான். அவனையே பார்த்து நின்ற கோலவடிவிற்கு விக்கல் வந்தது. அது விம்மலாகியது... வெடிச் சத்தமாகியது... கசிவாகியது... கண்ணிராகியது. ‘கை ஒடிஞ்சுட்டாமே... ஒடிஞ்சுட்டாமே... என் மனசு அவருக்குப் புரியலியே... நான் எப்பவும் நல்ல பொண்ணுதான். அவருகிட்ட யார் சொல்லுறது... நாம் சொல்ல முடியாது. அப்படியே சொல்லத் தயாராய் இருக்கதுக்கு அவரு கேட்கத் தயாராய் இல்ல. அத்தே... அலங்காரி அத்தை... எங்கத்தே போயிட்டே... எப்பத்தே வருவே...’ கோலவடிவு குளத்துக்கரை வழியாக நடந்தாள். போனவாரம் அவன் வைத்த குங்குமம் கலையப்படாமல் ஆனந்த அதிர்ச்சியுடன் போன அதே கரையில், தள்ளாடித் தள்ளாடி தானாய் நடக்காமல் யாரோ நடத்துவதுபோல் நடந்தாள். எப்படித்தான் வீட்டுக்கு வந்தாளோ. வழியறியாமலே, பழக்கப் பட்ட காரணத்தால் வந்துவிட்டாள். தெரு வாசல் கதவை திறந்துவிட்டு, நுழையப் போனாள். அப்பா ஏன் சித்தப்பா கிட்டே இப்படிக் கத்துறார். “அதெப்டிடா... அக்கினி ராசாவோட கோலவடிவு... நெனச்சுக் கூடப் பாக்க முடியாதுப்பா.” “ஏன் முடியாது... திருமலைக்கும் துளசிங்கம் செறுக்கி மவனுக்கும் நடந்த சண்டையில, ராமையா மச்சான் நம்ம பக்கம் நின்னாரு. இதனாலதான் துளசிங்கம் பயலும் இறங்கி வந்தான். அதோட காத்துக் கருப்பன் குடும்பம் நம்ம அம்மா பிறந்த குடும்பம். ஆள்பலம் உள்ள குடும்பம்.” “சரி யோசிக்கேன்... யோசிக்கேன்...” “யோசிக்க யோசிக்க கோலவடிவுதான் கொடுத்து வச்சவள்னு வரும்...” அப்பாவின் முதலாவது பதிலில் முழு வெற்றி கண்டவள்போல் நிமிர்ந்த கோலவடிவு, அவரது இரண்டாவது பதிலில் துவண்டாள். தோளில் கிடந்த அந்த சேலை போல் கண்ணிரால் ஈரம்பட்டு நிலைப்படியில் சாய்ந்தாள். அப்பா சம்மதிக்க மாட்டார். ஒருவேளை அப்படி சம்மதிச்சுட்டால் வருமுன் காக்கணுமே. “அலங்காரி அத்தே... நீதான் என்னைக் காப்பாத்தணும்.” |