11

     கோலவடிவு குமுறியபடியே நின்றாள்.

     அக்னி ராசாவுக்கு, தான் மனைவியாகும் சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அந்த ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் தனது இடது தோளை வலக்கரத்தால் பிடித்து அழுத்தினாள். அந்தத் தோளில் தொங்கிய ஈரப்புடவை, கசங்கிப் போய் அவளுக்காகக் கண்ணிர் சிந்துவது போல் தண்ணீர் சொட்டுச் சொட்டாக அவள் கை வழியாக உருண்டோடியது. அவளுக்கு, இப்போதே அலங்காரி அத்தையின் வீட்டுக்குப் போய் அவள் தோளில் கை பின்னி, மார்பிலே தலைபோட்டு, அழவேண்டும் போல் இருந்தது. அதற்காகத் திரும்பக்கூடப் போனாள். அது எப்டி முடியும்? அலங்காரி அத்தை வீட்டுக்கு ஆம்புளைங்க போனால் சந்தேகம் வராது. அத்தனையும் இடக்கு மடக்குங்க. ஆனால் ஒரு பொம்பிளை போனால் சந்தேகம் வரும். அந்த அளவுக்குக் கொடிகட்டிப் பறக்கும் அத்தை வீட்டுக்கு, இப்போ மட்டுமல்ல எப்போதும் போக முடியாது. ஆனால் அத்தைய பார்த்துத்தான் ஆகணும்.

     கோலவடிவு வீட்டு வாசல் படியைத் தாண்டப் போனாள். அதற்குள் சிறிது மெளனப்பட்ட வீட்டில் அம்மாவின் சத்தம் கேட்டது.

     “ஊர்ல எவளப் பார்த்தாலும், எவனப் பார்த்தாலும் அக்னி ராசாவுக்கும், கோலவடிவுக்கும் கல்யாணமாமே கல்யாணமாமேன்னு கேள்விமேல் கேள்வியாய் கேக்காங்க. எனக்கு பதில் சொல்லமுடியல. இந்தப் பேச்சு எப்படி வந்தது.”

     “இதுவே ஒரு நல்ல சகுனமுன்னு நெனச்சுக்கணும். மயினி.”

     “சகுனம்... நல்ல சகுனம்... பூனய மடில வச்சுப் பார்த்த சகுனம். அதுவும் நாம தீர்மானம் செய்யுறதுக்கு முன்னாலயே ஊர் தீர்மானம் பண்ணுது. ஒம்மத்தான்... திருமலை ஏதோ ஒங்க கிட்ட பேசணுமாம். நீயே சொல்லேண்டா...”

     கோலவடிவுக்கு, போய்ப் போய் வந்த உயிர், இப்போது போகாமலேயே அவள் உடலில் முழுமையாக நின்றது. அண்ணா, நமக்காக அப்பாகிட்ட சண்டை போடப் போறான். அவன் போடுற சத்தத்துல. இந்த செத்த பேச்சு இன்னயோட முடியணும்.

     கோலவடிவு வீட்டுக்குள் நுழைந்தாள். இருபது எட்டுக்கள் போட்டு நடக்க வேண்டிய தூரத்தைப் பத்தே எட்டாகத் தாவி, தனக்கு எதுவுமே தெரியாததுபோல, குறுக்காகக் கட்டிய கொடியில் சேலையைப் பரப்பிப் போட்டபடியே, அண்ணா திருமலையைப் பட்டும், படாமலும் பார்த்தாள். ‘சீக்கிரம் பேசு அண்ணா... அப்பாகிட்ட பேச பயந்தான் வரும். அதுக்காவ இப்படியா யோசிக்கது. பேசுண்ணா... பேசு... அக்னிராசா, அருமத் தங்கைக்கு ஆவாதுன்னு அடிச்சுப் பேசு. நீ முடிக்குமுன்ன கல்யாணமே நடந்துரும் போலுக்கே...’

     அப்பாவை நேருக்கு நேராய்ப் பார்க்கப் பயந்தது போல, அம்மாவைப் பார்த்து அவள் வழியாகத் தன்னைப் பார்த்த மகன் திருமலையை நோட்டம் விட்டார். பிறகு, இவரும் ‘அம்மா’ வழியாகவே மகனைப் பார்த்துவிட்டு, மனைவியிடம் கேட்பதுபோல் மகனிடம் கேட்டார். அவன் காதில் கடுக்கன் மாதிரி போடப்பட்ட பிளாஸ்டரைப் பார்த்ததும் கோபம் வந்தது.

     “என்ன சொல்லப் போறானாம். அம்மன் கொடை விஷயத்துல சினிமாப்படம் போடணும்னு சொல்லப் போறானா. இல்ல காத கடிக்க கொடுத்தது மாதிரி மூக்கையும் கொடுக்கப் போறானாமா...”

     “அவன் ரெண்டையும் சொல்ல வர்ல...”

     “பிறகு சொல்லறதுக்கு எதுவுமே இல்லியே...”

     “கோபப்படாம கேளுங்க. அவன் சொல்ல நினைக்கதைத்தான் நான் சொல்லுறேன். நானாச் சொல்லல...”

     “நீ எப்பதான் இப்டி நீட்டி முழக்கிப் பேசுறதை விடப் போறியோ?”

     “திருமலைக்கு விவசாயம் பார்த்து அலுத்துப் போச்சாம். அழுக்கு வேட்டியோட அலையுறது பிடிக்கலையாம். அதனாலதான் துளசிங்கத்துக்கு இவனைப் பார்த்தா இளக்காரமாம். அதனால இவனும் ஒரு கடை வைக்கணுமாம். கோணச் சத்திரத்துல இல்லன்னா. நம்ம ஊரு கார் ரோட்ல கமிஷன் கடை வைக்கணுமாம். துளசிங்கம் மாதிரி ஆயிரக் கணக்குல சம்பாதிக்கணுமாம்.”

     “இதை சொல்லப்படாதுன்னு நீயே சொல்லப்படாதா... பாக்கியம்...”

     “நான் இவன்கிட்டே எவ்வளவோ சொல்லிட்டேன். துளசிங்கப் பயல், அர்த்த ராத்திரில குடை பிடிக்கிறவன். ஆயிரக் கணக்குல சம்பாதிச்சாலும் கடைசில அரியப்புரம் தங்கமுத்து மாதிரி சினிமா எடுக்கேன்னு மெட்ராஸ் போயி, சம்பாதிச்ச பணத்தை எல்லாம் நாசமாக்கப் போறான்னு சொல்லியாச்சு.”

     “துளசிங்கமும், நல்லா இருக்கணுமுன்னு நீ நினைக்கணும். நாடெல்லாம் வாழ கேடு ஒன்னும் இல்லை. அதோட துளசிங்கம், நீ நெனக்கது மாதிரி ஏமாளி இல்ல. கெட்டிக்கார பய. வேணுமுன்னால் பாரு. பணத்த மேலும் மேலும் சேப்பானே தவிர, சிதைக்க மாட்டான்.”

     “அப்போ... அவன் உசத்தி... நம்ம பிள்ள மட்டமா...?”

     “ஒருத்தன உசத்தியாய்ப் பேசுறதாலேயே, இன்னொருத்தன் தாழ்த்தின்னு அர்த்தமில்ல. இவன் அவனவிட ஒருபடி அதிகமுன்னு எனக்குத் தெரியும. நான் வயல் வேலைய கவனிச்சு எவ்வளவோ நாளாச்சு. இவன்தானே கட்டிக் காத்து வாரான். இவனுக்கு என்ன குற... மோட்டார் பைக் வச்சுருக்கான்... எங்கே வேணுமுன்னாலும் போகலாம்.”

     “ஆனாலும் அவன் கொஞ்சம் மரியாதையோட...”

     “நீயே அவனுக்கு சொல்லிக் கொடுப்பே போலுக்கே, பாக்கியம். வியாபாரிக்கு மரியாதன்னா நெனக்கே, அதான் இல்ல. இந்தப் பயலுவ அறைக்குள்ள கண்டவன் காலுல்லாம் விழுந்துட்டு, வெளில மேனா மினுக்கியாய் அலையுற பயலுவ. இவனுக்கு கமிஷன் கடை வைக்கேன்னு வச்சுக்க. வைக்கது ஒன்னும் பெரிசில்ல நமக்கு. ஆனால் அப்டி வச்சுட்டா -போலீஸ்காரன் திருட்டு நெல்ல வாங்கிட்டோமுன்னு சும்மா சும்மா வந்து தொல்லை பண்ணிக்கிட்டு, மாமுலுக்கு வருவான். வரி ஆபீஸர் வருவான். லைசென்ஸ் பாக்க வாறேன்னு யூனியன்காரன் வருவான். இவன் ஒவ்வொருத்தன் கையில இல்ல, காலுல பணத்த வைக்கணும். அவனுவ அதட்டுற அதட்டலுக்கு காது கொடுத்து கேட்டு, கொடுக்கிற லஞ்சத்தையும் பிச்சக்காரன் மாதிரி கொடுக்கணும். ஒருத்தனுக்கு பணம் கொடுக்கிறது தப்புல்ல. அதையே கும்பிட்டுக் கும்பிட்டு லஞ்சமா கொடுத்தா அது அடிமைத்தனம். அந்தக் காலத்து குட்டி ராசாக்க பெரிய ராசாவுக்கு கப்பம் கட்டுறது மாதிரி. விவசாயிக்கு அப்டி இல்ல. எந்தப் பயலுக்கும் பதில் சொல்லத் தேவையில்ல. இந்தக் கவுரவம் எவனுக்கும் வராதுன்னு இவனுக்குச் சொல்லு.”

     “விவசாயத்தையும், வியாபாரத்தையும் ஒண்ணா கவனிச்சுக்கிட்டு.”

     “இந்தா பாரு... நீ இப்டிப் பேசுனால், இவன் ஒரு நாளைக்கு வீட்ல இருக்கிற பணத்தை எடுத்துக்கிட்டு மெட்ராஸுக்கோ, மதுரைக்கோ ஓடி சீரழியப் போறான். அதுதான் நடக்கணுமுன்னு நீ நெனச்சால் அப்புறம் ஒன் இஷ்டம். என்னைப் பொறுத்த அளவுல இந்தப் பிலாக்கணம் இதோட முடியுது. சரி சீக்கிரமா காபிக்கு ஏற்பாடு பண்ணு. வரி போடுறதுக்கு ஆளுங்க வர்ற சமயம்.”

     பழனிச்சாமி, தனது காதுகளைத் திருகினார். ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அவர் அப்படித்தான். திருமலை, உம்மென்று இருந்தான். பாக்கியம் தனக்குள்ளே முனங்கினாள். கோலவடிவு அந்தக் கயிற்றுக் கொடியைக் கீழே இழுத்துப் போட்டபடியே அண்ணாவை ஏமாற்றத்தோடு பார்த்தாள். அம்மாவை, கோபமாகப் பார்த்தாள். அவனுக்காவ எப்டி பேசுறாள். எனக்காவ ஒரு வார்த்த பேசுதாளா. பொண்ணுன்னு வந்துட்டா அம்மாவக்குக்கூட இளக்காரந்தான். அக்னி ராசாவாம் அக்னி ராசா. எரிஞ்சு எரிஞ்சே அணைஞ்சு போற அக்னி.

     பாக்கியம் மகள் பக்கத்திற்கு வந்து தனது கோபத்தைக் காட்டினாள்.

     “இவ்வளவு தண்டில இருக்கியே...? ஒனக்கு மூள இருக்கா...? தடிமாடு... கொடிய இப்டி பிடிச்சா இழுக்கது...? இன்னா பாரு... அறுந்துட்டு...”

     கோலவடிவு பற்றிய கயிற்றுக்கொடி இரண்டாக அறுந்து, அவள் ஒரு பக்கத்து முனையைத் தன்னை யறியாமலேயே பிடித்துக் கொண்டு இழுத்திருக்கிறாள். அவளுக்கே தெரியவில்லை. கீழே விழுந்த ஈரச்சேலையையும், காய்ந்த பாவாடையையும் எடுக்கப் போனபோது, அம்மா விரட்டினாள்.

     “குளிச்சுட்டு வாரதுக்கு இவ்வளவு நேரமாழா. இனிமேல் பம்ப்செட் பக்கம் போ... ஒன் கால ஒடிச்சுப் புடுறேன். டேய் திருமலை... சாப்புடு ராசா... எமுழா இவ்வளவு நேரம்...”

     கோலவடிவு அம்மாவின் திட்டிற்கு வருத்தப்படவில்லை. வழக்கத்திற்கு மாறாக சந்தோஷப்பட்டாள். ஒரு ‘விஷயத்த’ சொல்லப் போறாளே.

     “ராமய்யா மாமா வயலுல ஒரு சண்டம்மா... துளசிங்கத்துக்கும், அவருக்கும் அடிதடி வராத குறை. அப்புறம் ரெண்டு பேரும் இணஞ்சி போயிட்டாங்க. இந்த அக்னிராசாவுக்கு ஒண்ணுமே தெரியலம்மா. துளசிங்கம், வயலுல வாங்குன உரத்தோட இன்னொரு உரத்த கலந்து போடச் சொன்னாராம். இந்த அக்னி ராசா, சரியான அசமந்தமா... பொட்டாசியம் உரத்த, யூரியா உரத்தோட கலந்து, போடாம வயலயே சாவியாக்கிட்டாராம். ராமய்யா மாமா துளசிங்கம் சண்டையில, தனக்கு சம்பந்தம் இல்லாதது மாதிரி நிக்காரு அக்னிராசா.”

     “அக்னி ராசா, உத்தமன்... யோக்கியன்... அப்படித்தான் நிப்பான். துளசிங்கம் மாதிரி அவன் என்ன காவாலிப் பயலா...? பரம்பர பணக்காரன்.”

     கோலவடிவு குன்றிப் போனாள். அறுந்த கொடியைக் கட்டாமல், விழுந்த சேலையை எடுக்காமல், இயக்கமின்றி நின்றாள். இந்தச் சமயத்தில், இருபது இருபத்தைந்து சொக்காரக் கரும்பட்டையான்கள் அவர்களில் ஒருவர் திருமலையைப் பார்த்துக் கேட்டார்.

     “ஒங்க வயலுல பம்ப் செட் ஓடிக்கிட்டு இருக்குது. நீ இங்கே இருக்கே.”

     கோலவடிவு கைகளை உதறியபோது பாக்கியம் கூப்பாடு போட்டாள்.

     “பம்ப் செட்ட ஆப்பு செய்யாம வந்துட்டியா...? எரும மாடு மாதிரி தலை ஆட்டுறாள் பாரு. போழா... சீக்கிரமா வயலுக்குப் போய் ஆப் பண்ணிட்டு வா. இந்நேரம் வயலே மூழ்கியிருக்கும். ஓடுழா... வரவர ஏன்தான் இப்டி பித்துப் பிடிச்சுப் போறியோ...? ஓடுழா... இல்லன்னா வயலு குளமாயிடும்.”

     உள்ளே இருந்தவர்கள் பழனிச்சாமி இருந்த தார்சாவுக்குள் போய், பெஞ்சுகளையும் நாற்காலிகளையும் தரையையும் இடமில்லாதபடி நிரப்பினார்கள். பழனிச்சாமி சுவரில் சாய்ந்த தலையை நிமிர்த்தியபடியே கேட்டார்.

     “எந்தப் பய மவனுகளோ... நம்ம அம்மனுக்கு முன்னால வீடியோ படம் போடணுமுன்னு சொல்லுதாங்களாமே. எந்தப் பயன்னாலும் இப்பவே சொல்லட்டும்...”

     “ஒங்க பேச்சுக்கு எதிர்ப்பேச்சு உண்டா. வில்லுல தான் கொஞ்சம்...”

     “வில்லுலயும் பொம்புள வில்லு கிடையாது. நம்ம அரியப்புரம் வெற்றிக்குமார் வில்லுதான். அவங்க கிடைக்காட்டாதான் அடுத்த வில்லு.”

     “அப்புறம் மேலும்...”

     “செட்டு மேளம் வைப்போம். நம்ம ஊரு கணேசன் ரெண்டு தட்டு தட்டட்டும். இந்தத் தடவ குற்றாலத்துல மட்டும் தண்ணி கொண்டு வந்தால் போதாது, தோரணமலை முருகன் கோயில் சுனையில் இருந்தும் நீரெடுக்கணும்.”

     “அப்புறம் வரி எவ்வளவு அண்ணாச்சி.”

     “ஐம்பது ரூபாய் வரி போதும்.”

     “எப்டி போதும். இந்த வருஷம் சப்பரம் விடணும். ரிப்பேர் பாக்கவே ஆயிரம் ரூபாய்க்கு மேல ஆவும்.”

     “ஒனக்கு மூள இருக்காடா. கொத்துகுறைக்கு அண்ணாச்சி கொடுத்துட்டுப் போறார். அம்பது ரூபாய் வளியே அதிகம்.”

     “சரி... சரி... ஐம்பது ரூபாய். சப்பரத்த பழுது பார்த்து அலங்காரம் செய்யுற செலவு என் பொறுப்பு. இன்னும் ஏதும் பாக்கி இருக்கா பேசுறதுக்கு...? பாக்கியம் காபி கொண்டு வா. திங்கறதுக்கு மொச்சக்கொட்டை பாசிப் பருப்பு எது இருந்தாலும் சீக்கிரம்... சிக்கிரம்...”

     வீட்டுக்குள் தட்டுமுட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது பற்குணம் ஓடி வந்தார். மேலத்தெரு ராமய்யாவின் தம்பி வம்புச் சண்டைக்கு பழக்கப்பட்டதால் ‘வாலன்’ என்று வக்கணை பெற்றவர், முற்றத்தில் நின்றபடியே ஊளையிடுவது போல் பேசினார்.

     “ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா... செம்பட்டையான் குடும்பத்துலயும் சுடலைமாடனுக்கு இப்போ ‘வரி’ போடுதாங்க. செறுக்கி மவனுவளுக்கு திமிரப் பாருங்க. நீங்க விசேஷம் வச்சிருக்கிற நாளையிலேயே அவங்களும் வைக்கப் போறாங்களாம்...”

     “வாங்கடா... புறப்படலாம்... நம்ம வைக்கிற வெள்ளில வைக்காண்டாமுன்னு கெஞ்சிப் பார்ப்போம். மிஞ்சுனாங்கன்னா சுடலைமாடன் கோயிலயே தரமட்டமாக்கிடணும். கரும்பட்டை யானுவளப் பத்தி என்னதான் நினைச்சுக்கிட்டாங்க தெத்துவாளிப் பயலுவ...”

     எல்லோரும் எழுந்தார்கள். திருமலையும் திமிறியபடியே எழுந்தான்.