உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
12 கோலவடிவுக்கு, அந்த திண்டாட்டத்திலும், ஒரு கொண்டாட்டம். சொக்காரன்மார், உட்காருவதற்கு முன்பே கோலவடிவு வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டாள். அந்தக் குழப்பத்திலும் சிறிது தெளிவு ஏற்பட்டது. வழியில் அலங்காரியைப் பார்க்கலாம், அல்லது அவள் மச்சான் மகனைப் பார்க்கலாம் என்ற மனவோட்டத்தோடு உடலோட்டமாய் ஓடினாள். ஆனாலும் அவர்களை கடைகள் பக்கம் காணோம். பீடிக்கடைப் பக்கம் பேச்சில்லை. குளத்துக்கரையில் அலங்காரி இல்லாத பெண்கள் கூட்டமும், துளசிங்கம் இல்லாத ஆண் கூட்டமுமாகப் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தன. வயலுக்குள் வந்த கோலம், பம்ப்செட்டை நிறுத்தாமல் வெள்ளப்பெருக்காகிக் கரையுடைந்த வாய்க்காலையும், எல்லைபோய் இரண்டறக் கலந்த சின்னச் சின்ன மிளகாய் பாத்திகளையும் வாயகலப் பார்த்தாள். பின்னர் பம்ப்செட் வெள்ளத்தை உற்றுப் பார்த்தாள். இதோ இந்த பம்ப் செட் மேளதாளத்தோடு, அலங்காரி அத்தையின் குலவையோடு, அதோ அந்த குருவிகள் ‘கெட்டி மேளம், கெட்டி மேளம்’ என்று கூறுவது போல் கூவிய காச்சள் மூச்சா சத்தத்தோடு இவற்றின் சகல சாட்சியங்களுடனும் துளசிங்கம் மச்சான் குங்குமம் வைத்தார். சைபர் மாதிரியான பெயிலு குங்குமம் அல்ல. தடிச்ச குங்குமம்... கோலவடிவு, சுயநினைவுக்கு வந்து, பம்ப் செட்டை ‘ஆப்’ செய்துவிட்டு, எதிர்த்திசையை எதோ ஒரு திசையாக நினைத்து நோக்கினாள். அங்கே உத்தமன் அக்னி ராசா, தான் சரியாகக் கிரகிக்காததாலோ, அல்லது துளசிங்கம் சொல்ல வேண்டிய அளவுக்குச் சொல்லாததாலோ, சாவியாகிப்போன நெற்பயிர்களை வட்டமடித்த காகங்களை விரட்டியடித்து காவல் காத்தான். அவன் ஒரு பொருட்டல்ல என்பதுபோல் அந்தப் பறவைகளோ பயப்படவில்லை. அக்னிராசா கோலவடிவின் கவனத்தைக் கவர “ஏய் காக்கா.” என்றான். அதைப் பார்த்த கோலவடிவுக்கு அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. வரப்பென்று நினைத்து வயல் வழியாக நடந்தாள். குளத்தின் மதகுப் பக்கம் வந்த பிறகு, மீண்டும் கைகளை உதறினாள். பம்ப் செட் அறையை பூட்ட மறந்துட்டேனே... கோலவடிவு, மீண்டும் நடந்த வழியிலேயே நடந்து, வயல் மேட்டிற்கு வந்து பம்ப் செட் அறையைப் பூட்டினாள். சிறிது தூரம் நடந்தபின், மீண்டும் கைகளை உதறி திரும்பி வந்து சாவியை எடுத்துக் கொண்டாள். அக்னிராசா அவளை சந்தோஷமாகப் பார்த்தான். லேசாய் பாட்டுக்கூட பாடினான். அப்படி பாட்டாக நினைத்து அவன் எதையோ இழு இழு என்று இழுத்தான். இப்படி அவளைப் பார்ப்பதையும், பாடியதையும் பார்த்த கோலவடிவிற்குக் கோபமும் வந்தது. கூடவே அனுதாபமும் வந்தது. ‘ஓம்ம எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனால் புருஷனாய் பிடிக்கலன்னு, நேரா போய் நாகரிகமாய் சொல்லிடலாமா. எம்மாடி... அப்பாவுக்குத் தெரிஞ்சா வெட்டிப் புதச்சிடுவார். அப்புறம் துளசிங்கம் மச்சான் குங்குமம் வச்சதுக்கு அர்த்தமில்லாமப் போயிடும். அவரு கை ராசியில்லாத கையா இருக்காது. இருந்தா கடை இப்படி செழிச்சிருக்காதே.’ கோலவடிவு கரை வழியாய் நடந்து, கண்மாய் வழியாய் இறங்கி ஊருக்குள் நுழைந்தபோது, தேவைப்படாதவர்கள் அனைவரும் தென்பட்டார்கள். தேவைப்பட்ட இரண்டே இரண்டு ஜீவன்களைக் காணாததால், அவள் ஜீவனற்றவள் போல் நடந்தாள். எதிர் பார்ப்புடன் வயலுக்குள் ஓடியவள், ஏமாற்றமாக நடந்தாள். அக்கினிராசாவின் ஆக்கிரமிப்புக்கு நடத்தப்பட்ட பேச்சு. அவள் மூச்சை இப்போது தடை செய்தது. அண்ணாவுக்கு என் பொருந்தாத கல்யாணத்தைவிட, கடை வைப்பது பெரிசாப் போயிட்டு. அப்பா என்னடான்னா பட்டும் படாமலும் பதிலளிக்கார். அம்மாவுக்கோ, அக்கினிராசா உத்தமனாம். நான் யார் கிட்ட சொல்ல, எப்படிச் சொல்ல. சும்மா ஆறுதலுக்குன்னாவது சொல்லியாகணும். இல்லாட்டா தலையே வெடிச்சுப் போயிடும். அத்தே... அலங்காரி அத்தே... ஊரில் பள்ளிக்கூடத்திற்கு அருகே வந்த கோலவடிவு, அங்கு மிங்குமாகப் பார்த்தாள். அலங்காரி அத்தை வீடு அங்கேதான் இருக்குது. போய்ப் பார்த்தா என்ன... அஞ்சு வருஷத்துக்கு முன்னால அத்தை வீட்டுக்குப் போயிருக்கேனே. புதுசாவா போகப் போறேன். அதெப்படி... அப்போ நான் வயசுக்கு வரல. அத்தை வீட்டுக்கு வயசுப் பொண்ணுவ போனால்தானே, ஊருக்கு சந்தேகம் வரும். சந்தேகம்... பொல்லாத சந்தேகம்... தாயக் கழிச்சாலும், தண்ணியக் கழிக்கப்படாதாம். அதாவது தண்ணி வராத ஏதோ ஒரு இடமோ, அந்த தண்ணியோ அசிங்கமாய் இருக்குன்னு அதுக்கு அடுத்த இடத்தையோ, தண்ணியையோ கழிக்கப்படாது. அப்படியே அந்த தண்ணியக் கழிச்சாலும் இந்த அத்தையைக் கழிக்கப்படாது. அவளுக்கு ஆயிரம் வில்லங்கம் இருக்கும். ஆனால் அந்த அத்தைதான் என்னைக் காப்பாத்துவாள். படிதாண்டா பத்தினிமாரு அக்னி ராசாவுக்கு என்ன முடிக்கணுமுன்னுதான் பேசுவாளுவ. ஒரு பொண்ணு தன்னோட கல்யாணத்தைப் பத்தி பேசுறதான்னு சிரிப்பாளுவ. கோலவடிவு அங்குமிங்குமாய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு, அலங்காரி வீட்டின் வெளிச்சுவரில் குப்புறச் சாய்ந்து நின்றபடி, முகத்தை மறைத்துக் கொண்டு கதவைத் தட்டினாள். அதிக நேரம் தட்ட வேண்டிய அவசியமில்லை. அலங்காரியின் பாவி மனுஷன் கதவைத் திறந்துவிட்டு, ஆச்சரியப்பட்டார். பிறகு இங்கே பாரேன் என்பது மாதிரி, பெரிய வீட்டுத் திண்ணையில் ஒரு சேலையைத் தைத்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தார். உள்ளே ஓடிவந்த கோலவடிவு, காஞ்சான், எலி டாக்டர் காட்டும் அவசரத்தைவிட அதிக அவசரம் காட்டித் கதவைத் தாழிட்டாள். அலங்காரி ஊசி நூலோடு எழுந்தாள். சேலை ஒரு பொருட்டல்ல என்பதுபோல் அதை விசிறியடித்துவிட்டு, பாதி வழி நடந்து, கோலவடிவை, தனது மறுபாதி போலாக்கி, அணைத்துக் கொண்டே பேசினாள். “என்னடா... இப்டி தும்மல் வருதேன்னு நெனச்சேன். நமக்கு பிடிச்சவங்க வருவாங்கன்னு எதிர் பார்த்தேன். நீ வந்துட்டே... ஆயுசு நூறு. இந்த வீட்டுக்கு அஞ்சு வருஷத்துக்கு முன்னாலதான் வந்திருக்கே. இல்லியா...?” கோலவடிவு பதில் சொல்லப்போனாள். அலங்காரி மகள் விமலா கல்லூரி படித்து முடித்துவிட்டு, விடுமுறையில் வரும் போதெல்லாம் இவள் வந்திருக்கிறாள். அந்த அண்ணிய இவளுக்கு ரொம்ப பிடிக்கும். விமலாண்ணி மதுரையில் கல்யாணம் ஆனபிறகு அம்மாவ எட்டிப் பாக்கதே கிடையாது. பக்கத்து ஊருக்கு புருஷனோட வாராள். இந்தப் பக்கம் வர்ரதே இல்ல. அம்மா நடத்தை சரியில்லன்னு இப்பதான் அம்மாளுக்கு தெரியும் போலுக்கு... அவள ஞாபகப்படுத்தி இவள அழ வக்கப்படாது... அலங்காரி மெளனமாக நின்ற கோலவடிவை தோளில் கை போட்டு, திண்ணையை அடுத்த அறைக்குக் கூட்டிப் போனாள். பிறகு கணவனுக்கு ஆணையிட்டாள். “என் மருமவளுக்குக் போண்டா வாங்கிட்டு வாரும். இல்லாட்டா மசால்வடை. ஒன்னத்தான் கேனய்யா... ஏன் இப்படி பராக்கு பாக்கே... எனக்குன்னு வந்தே பாரு... சரியான அக்னி ராசா. பீரோவுல காசு இருக்கு... எடுத்துட்டு ஒடுய்யா.” “எனக்கு எதுவும் வேண்டாத்தே. சாப்புடுற நிலையிலயும், நான் இல்லத்தே.” கோலவடிவு, அலங்காரியின் மார்பில் விழுந்தாள். அவளின் இரு தோள்களையும் பிடித்துக் கொண்டு அங்குமிங்குமாகத் தலையாட்டினாள். விம்மியடிபயே பேசினாள். “அத்தே நீங்க சொன்னது சரியாப் போச்சு அத்தே. என்னை அக்னி ராசாவுக்கு எரிச்டுவாவ போலுக்கு. ஆமாத்தே... அக்னி ராசாவுக்கு அநேகமா என்னை முடிச்சுடுவாவ போலுக்கே. நீங்கதான் என்னக் காப்பாத்தணும்.” “அய்யோ... எனக்கு கையும் ஒடமாட்டக்கு. காலும் ஒடமாட்டக்கே... ஒன்னையா... அக்கினி ராசாவுக்கா... அடக் கடவுளே... யோவ் ஒம்மத்தான்... துளசிங்கத்தை நான் சொன்னேன்னு கையோட கூட்டி வாரும். இங்க வாருமுய்யா. சொல்லப் பொறுக்காம ஓடுவியரே... எது கேட்டாலும் முழுசாக் கேக்கணும்... துளசிங்கத்தைத் தனியாக் கூப்பிட்டு, நான் உடனே வரச் சொன்னேன்னு சொல்லும். கோலவடிவு இருக்கான்னு சொல்லாதயும். சொல்லிட்டா வெட்கப்பட்டுட்டு வரமாட்டான். இந்தாரும் ஐம்பது பைசா. ஒரு டீயும், மசால்வடையும் சாப்புட்டுட்டு அப்பிடியே ஆட்டுக்கு புல்லு வெட்டிட்டு வாரும்.” அலங்காரி, கணவனை வாசலில் வழியனுப்பி வைத்த கையோடு கதவைத் தாழ்ப்பாளிட்டு விட்டு அந்த இடைவெளி நேரத்தில் கோலவடிவின் பிரிவை பொறுக்க முடியாதவள் போல் ஓடிவந்தாள். கோலவடிவு மருவி மருவிக் கேட்டாள். “அவரு... அவரு... எதுக்கத்தே.” “நானும் யோசிச்சேன். ஆனால் அவனாலதான் யோசனையே சொல்ல முடியும். பாரு ஒன் நிலமயப் பார்த்து, இந்த அத்தைக்கே கைகால் ஆடுதுபாரு. ஒன்னை காப்பாத்தியாகணும். இதுல அத்த பிறழப் போறதுல்ல. ஆனால் எப்டிக் காப்பாத்தறது. இதுக்கு துளசிங்கம்தான் சரியா யோசித்து சொல்லுவான். சரி... என்ன நடந்தது. எது நடந்ததுன்னு இந்த அத்த கிட்ட ஒருவரி விடாம ஒப்பிப்பியாம். நான் இருக்கேன் சொல்லுடி என் ராசாத்தி.” கோலவடிவு, வயலில் துளசிங்கம் குங்குமம் வைத்த அந்த நாளில் இருந்து, அந்த பம்ப் செட்டில் குளித்தாலும், குங்குமம் வைக்கப்படாத இந்த நாள்வரை வரிவரியாய் வார்த்தை வார்த்தையாய் ஒலி ஒலியாய் ஒப்பித்தாள். சொல்லி முடித்துவிட்டு, மாங்கு மாங்கு என்று அழுதாள். அழுது முடித்துவிட்டு, அத்தையை சோகமாகப் பார்த்தபோது - தெருக்கதவு தட்டப்பட்டது. அதைத் திறப்பதற்காக துள்ளிக் குதித்தவளை, அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு, அலங்காரி வெளியே வந்தாள். கதவைத் திறந்ததும், துளசிங்கம் வாசற்படியில் நின்றபடியே “என்ன சித்தி” என்றான். “உள்ளே வாப்பா” என்று அவன் கரத்தைப் பிடித்து உள்ளே இழுத்துவிட்டு, அலங்காரி கதவை மீண்டும் தாளிட்டாள். அவன், கதவை ஒரு கையால் திறக்க முயற்சி செய்தபடியே கேட்டான். “ஒனக்கு ஏன் சித்தி காலம் நேரம் தெரியல. இன்னிக்கு நம்ம சுடலை மாடனுக்கு வரிபோட நம்ம சொக்காரங்க கூடியிருக்காங்க. கரும்பட்டையான் குடும்பத்து காளியம்மன் கொடையோடயே நம்ம கோவிலுக்கும் கொடைன்னு நானே முடிவு எடுத்தாச்சு. ஆனாலும் கூட்டத்துல முடிவு எடுக்கதா பாவலா செய்யணும். எவனும் கரும்பட்டையானுவளுக்குப் பயந்து முடிவ மாற்றிடப்படாது பாரு.” “அப்படி மாத்திட்டால் நாம உயிரோட இருக்கதுல அர்த்தமில்ல. உள்ள யாரு இருக்கான்னு பாரு...” “அடடே... கோலவடிவு... இவள் எதுக்கு வந்தாள்...?” “காரணமாத்தான் வந்திருக்காள். அக்கினி ராசாவுக்கு அவளக் கட்டப் போறாங்களாம். அவளுக்கு இஷ்டமில்ல. நாம் அந்தக் கல்யாணத்தை தடுக்கணுமாம்.” “இருக்கிற உபத்திரம் போதாதுன்னு இவள் வேறயா...? அதோட இவளும் லேசுபட்டவ இல்ல. அன்னைக்கு. திருமலைக்கு ரகசியமாய் கையோட கையாய் பணத்தை எடுத்து...” “பழைய கதை வேண்டாண்டா. சித்தி சொன்னால், அதுல காரண காரியம் ஏதாவது இருக்கும். ஆறுதலா அவள் கிட்ட ரெண்டு வார்த்த பேசிட்டு போ.” “என்ன சித்தி இது... அவள்கிட்ட என்ன பேச்சு. அதுவும் ஒன் வீட்ல. கதவ மூடிக்கிட்டு... இதுல்லாம் கொலையில போய் முடியுற சமாச்சாரம்...” “இப்போ நீ அவள்கிட்ட பேசுனால் கோயில் விவகாரத்துல நாம் ஜெயிப்போம். எப்படின்னு கேளாத. பேசாம அவள் கிட்ட பேசுடா... ஆறுதலா பேசு... விளையாட்டா...” “போ சித்தி...” “நீ அவள்கிட்ட பேசும்போது சித்தி போயிடுவேன்...” அலங்காரி கண்சிமிட்டியபடியே சிரித்தாள். துளசிங்கத்திற்கும் கிறக்கம் வந்தது. இருவரும் கோலவடிவைப் பார்த்தபடியே போனார்கள். உள்ளறையில் கட்டிலில் உட்கார்ந்திருந்த கோலம் எழுந்தாள். கண்ணிர் சொட்டுக்கள் கழுத்தில் பெருக்கெடுத்தன. அலங்காரி அவள் கண்களை முந்தானையால் துடைத்து விட்டுப் பெருமூச்சோடு பேசினாள். “ஒன் கதயத்தான் இவன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன். துடிச்சுட்டான்... துடிச்சுட்டான்... அப்படித் துடிச்சுட்டான். எய் துளசிங்கம்... என் மவனே... கோலம் நம்ம பொண்ணுடா. அலங் கோலமாய் ஆயிடப்படாதுடா. அவள எப்படியும் காப்பாத்தி ஆகணும். எம்மாடி எனக்கு தலைக்கு மேலே வேல. நம்ம சுடலமாடன் ஆட்டுக்கு தவிடு வச்சுட்டு வாறேன்.” சுடலை மாடனுக்கு வளிபோடும் நாளிலேயே கோலவடிவை தன்னிடம் வரவழைத்த மாடனின் திருவிளையாடலில் மெய் சிலிர்த்து அலங்காரி போய்விட்டாள். துளசிங்கம், இடுப்புப் பெல்ட்டைத் தடவியபடியே கோலவடிவைப் பார்த்தான். இருவரும் சிறிது நேரம் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். நேரமில்லாத துளசிங்கம் நேரடியாகவே உறுதி சொன்னான். சித்தி பூடகமாகப் பேசுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கும் என்ற அர்த்தத்தில் பேசினான். “கவலைப்படாதே கோலம். அந்த அக்னிப் பயல் ஒன்னை எரிக்காம நான் பாத்துக்கிறேன். அழாதேம்மா... வேற எந்த வழியும் இல்லாட்டா நானே ஒன் கழுத்துல தாலி போடுறேன். பயப்படாதே... ஒங்கப்பா சம்மதத்தோடுதான்.” கோலவடிவு புல்லரித்தாள். அவன் சொன்ன காட்சியை நினைக்க நினைக்கக் கன்னம் சிவந்தது. அண்ணாவோட ஏற்பட்ட அமளி துளியில், இவனால் அப்டி செய்ய முடியுமா என்று அவனை ஏக்கமாய்ப் பார்த்தாள். பிறகு, அவனால் முடியும் என்றும், அதற்குரிய சாதுரியமும், சமர்த்தும் அவனிடம் இருப்பதைக் கண்டு கொண்டவள் போலவும் அவனைச் சிரிப்பும் சிணுங்கலுமாய்ப் பார்த்தாள். அப்பா அவனுக்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்தது அவள் முகத்தில் நல்ல சிவப்பாக மலர்ந்தது. துளசிங்கம் அவள் மோவாயை, ஒரு கையாலேயே நிமிர்த்தினான். எந்த நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்தானோ, அதை எச்சிலாக்கியபடியே உறுதியளித்தான். “இந்த முத்த சாட்சியாய் சொல்லுறேன்... இந்த துளசிங்கம் ஒன்னைக் கைவிடமாட்டான்...” அந்த அறைக்கு வெளியே, அலங்காரி சுடலைமாடன் கிடாவோடு விளையாடி விளையாடிப் பாடினாள்.
“துள்ளாத துள்ளாத ஆட்டுக்குட்டி என்கிட்ட இருக்குது... சூரிக்குத்தி” |