உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
14 கட்டிலில் கால்போட்டு உட்கார்ந்திருந்த பழனிச்சாமி, பங்காளிகள் சொல்வதை வழக்காளியாய் இருக்கும்போது எப்படிக் கேட்பாரோ, அப்படி எந்தவித உணர்வையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் கேட்டார். காத்துக் கருப்பன்கள் தலையிட்டதைச் சொல்லும்போது மட்டும், மோவாயில் ஊன்றிய கையை எடுத்து விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். எல்லோரும் சொல்லி முடித்ததும், இன்னும் ஏதாவது இருக்கிறதா என்பதுபோல் அவர்களைப் பார்த்து விட்டுச் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அவர் வாயையே எல்லோருடைய கண்களும் மொய்த்தன. அவரும் நிதானமாகக் கேட்டார். “ஒருவேள நான் நேருல போயி கேட்கலன்னு அவங்க நெனக்கலாம். நானே, எலி டாக்டர் வீட்ல போயி, கேட்கனே... என்ன சொல்றிய...” “அது மட்டும் கூடாது அண்ணாச்சி... அந்த துளசிங்கம் செறுக்கி மவன்... ஓங்கள பேர் சொல்லிக் கூப்புடுறான்...” “கோபத்துல சில வார்த்தை வாரத பெரிசா எடுக்கப்படாது... நம்ம திருமலைகிட்ட சண்டை போட்ட பிறகுகூட இந்த துளசிங்கம் ஒரு நாளு என்னைப் பார்த்துட்டு வாயில இருந்த சிகரெட்ட தூக்கி எறிஞ்சுட்டு மரியாதையா போனான்... நானும் போனேன்னு அவங்களுக்கும் ஒரு திருப்தி இருக்கட்டுமே...” “அது மட்டும் கூடாது அண்ணாச்சி... ஒங்க மரியாதிக்காவ நாங்க சண்டைக்குப் போனோம்... இனிமேல் எங்க மரியாதிக்காவ நீங்க போவப்படாது... அப்புறம் உங்க இஷ்டம்...” இஷ்டம் என்ற வார்த்தையை இஷ்டமில்லாமல் உச்சரித்த பங்காளிகளை, திடுக்கிட்டுப் பார்த்தார் பழனிச்சாமி. எல்லாம் இவனால என்று திருமலையைப் பார்த்துப் பேசப்போன வாயை அடக்கிக் கொண்டார். அப்போது, அவர் தம்பி அருணாசலம் “இந்த துளசிங்கம் பயதான் ரொம்ப குதிக்கான்... அந்த அடாவடிப் பயலோட இன்னொரு கையயும் ஒடிக்கணும்” என்றார். பழனிச்சாமி திட்டவட்டமாகச் சொல்லாமல், யோசனை கேட்பது போல் கேட்டார். “சரி... நாம் விட்டுக் கொடுப்போமா... அவனுவ வேணுமுன்னா வெள்ளில கொடுத்துட்டுப் போறான்...” “அண்ணாச்சி... இந்த விஷயத்துல மட்டும் எங்கள விட்டுக் கொடுத்திடாதிய... எப்டி அப்படிக் கொடுக்கது, தர்மராசா. தம்பிமாருகள திரியோதனனுக்கு அடிமையாக்குனது மாதிரி, ஒங்க பெருந்தன்மய புரிஞ்சுக்க முடியாத தற்குறிப் பயலுவ அவனுவ...” பழனிச்சாமி, காபி ரெடியா என்பது மாதிரி... கதவில் சாய்ந்து நின்ற மனைவி பாக்கியத்தைப் பார்த்தார். அவள் அப்போதுதான் ஞாபகம் வந்ததுபோல், சமையலறைக்குப் போனாள். பழனிச்சாமி திட்டவட்டமாகப் பேசினார். “சரி, ரெண்டு கோயிலுக்கும் நடக்கட்டும்...” “அவங்க சுடலைக்கு எப்படி...” “இப்போ அவங்க பேச்சு தேவையில்ல... நாம நம்ம அம்மனுக்கு அடுத்த வெள்ளில கொடை கொடுக்கோம்... அவ்வளவுதான்... அதுதான் பேச்சு...” “எப்பா. இப்பதான் மனசு குளுந்தது... அண்ணாச்சின்னா அண்ணாச்சிதான்...” திருமலைக்கு ஒரு வயது குறைந்த ராமசுப்பு பக்குவமாய் பேசினான். “நம்ம கோவிலுக்கும் அவங்க கோவிலுக்கும் இடையே இருக்கிற தூரம் கூப்புடு தூரம். இங்க இருந்து அங்க பாக்கலாம். அங்க இருந்து இங்க பாக்கலாம்...” “இதுக்குத்தான் ஊரில ஒன்ன தோல்வாயன்னு சொல்லுதாங்க... சட்டுப்புட்டுனுன்னு சொல்லேண்டா...” “நான் பெரியப்பா கிட்டதான் பேசுறேன்... ஒம்மகிட்ட இல்ல... கோவிலுக்கு களையே கூட்டந்தான்... அந்தக் கோவிலுல... இருபத்திரண்டு பேர் சாமியாடுறான் நம்ம கோவிலுக்கு ஒரே ஒரு சாமியாடி. அதுவும் நெத்தில திருநீர் பூசுறேன்னு நம்ம வாய்க்குள்ளேயே கைய விடுற சின்னச்சாமித் தாத்தா... இவரு ஆடுறதவிட இவரு கைகாலு ஆடுறதுதான் ஜாஸ்தி...” “சின்னப்பய மவனுக்கு பேச்ச பாரு... இப்ப என்னல செய்யனும்... வேணுமுன்னா நீ சாமியாடு... நான் ஒதுங்கிக்கிறேன்... பாருடா பழனிச்சாமி...” “அப்போ சாமி ஆடுறதும் ஆடாததும் மனுஷன் இஷ்டத்த பொறுத்தது... அம்மன் இஷ்டத்த பொறுத்தது இல்லங்கிறியளா...” “ஏல நாட்டு வக்கீலு நாராயணா... குதர்க்கமாய் பேசாம... இந்தச் சிக்கலுக்கு ஒரு வழி சொல்லேண்டா...” “சொல்ல மாட்டேன்... செய்து காட்டுவேன்...” “அவங்க வீடியோ படத்துக்கு அதிகமாய் ஒண்ணு செய்யணும்... செய்யப் போறேன்...” “என்ன செய்யப் போறே...” “இப்ப சொல்ல மாட்டேன்... ஆனால் செய்வேன்...” “செறுக்கி மவனுக்கு திமுரப் பாரு... நம்ம மனச அந்தரத்துல விடுறான் பாரு... பொம்புள நாடகமாடா...?” “இல்ல...” “ரிக்காட் டான்ஸா...?” “இல்லவே இல்ல...” “பிறகு என்னதான் செய்யப்போற...” “வேணுமுன்னா... பெரியப்பாகிட்ட தனியா சொல்லுறேன்... அவருக்கு சம்மதமுன்னா அந்தக் காரியத்த செய்து... செம்பட்டையான் கோவிலுல சாமியாடுற பயலுவகூட நம்ம கோவிலுக்கு வரும்படியாய் செய்யப் போறேன்... பெரிசா...” “ஏல நாட்டு வக்கீலு... நீ செம்பட்டையானுவள விட திமுருபிடிச்ச பயல்... என்னதான்னு சொல்லேண்டா...” “நீரு ஆயிரம் கேள்வி கேட்டாலும் இப்ப சொல்லமாட்டேன்... ஆனால் ஒண்ணு... செம்பட்டையான் கோவிலுல காக்கா குருவிகூட இருக்காது... பெரியப்பா மட்டும் கொஞ்சம் கண்ணை மூடிக்கணும்...” பழனிச்சாமி, நாட்டு வக்கீலை எடைபோட்டுப் பார்ப்பதுபோல் பார்த்தார். கட்டில் சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு புராணப் புத்தகத்தை பிரித்தார். பிறகு பெருமூச்சோடு பேசினார். “எப்டி வேணுமுன்னாலும் செய்யுங்க... ஆனால் ரெண்டு கண்டிஷன்... என்னை கோயிலுக்கு வான்னு வற்புறுத்தப்படாது... செம்பட்டையானை கண்டால் ஒதுங்கிப் போகணும்... வம்பு தும்பு வச்சுக்கப்படாது...” எல்லோரும் ஒருமித்துப் பேசப் போனார்கள்... அதற்குள் காபி டம்ளர்கள் ஆவி பறக்க வந்துவிட்டன. |