15

     கோலவடிவு தெருப்பாதை தெரியும்படியான இடத்தில் உட்கார்ந்திருந்தாள். தெருவில், துளசிங்கம் போவதைப் பார்க்கப் பார்க்க, அவளுக்கு ஏன் பார்த்தோம் என்பது மாதிரி கோபம் ஏற்பட்டது. கடைசில போயும் போயும் இந்தக் கழிச்சுப் போட்ட துளசிங்கத்த பெரிசா நெனைக்கிறேன் பாரு. மனுஷனா இவன்... இல்ல... இவரு... ஊரே கும்பிடுற மாதிரி பாக்கிற எங்கப்பாவை நேத்துப் பிறந்த இந்த மனுஷன் பழனிச்சாமின்னு நாக்குமேல பல்லுப் போட்டு பேசியிருக்கார். எனக்கு, குங்குமம் வச்சது நெனப்பிருந்தா, முத்தம் தந்தது மறக்காட்டா. இப்டி துள்ளுவாரா... கடைசில, இவரு அந்த காத்துக்கருப்பன் கூட்டத்துல உதைபட்டாதான் புத்தி வரும்...

     அய்யய்யோ அக்கினி ராசா அந்த வகையறாவாச்சே... துளசிங்கத்த உதைச்சால் நாமுல்லா விழுவேன்... அதுவும் அக்கினி ராசா முன்னால... அது அப்புறம்... இப்போ நானும் கரும்பட்டையான்... எங்க குடும்பத்த இளக்காரமா பேசுற யாரும் எனக்குப் பெரிசில்ல... ஆமா எனக்கு குங்குமம் வச்சதை அந்த மனுஷன் தமுக்கடிப்பாரோ... முத்தம் கொடுத்ததை அம்பலப்படுத்துவாரோ... எதுக்கும் அவரு கிட்ட போயி சொல்லிட்டு வந்துடணும்... நீருதான் குங்குமம் வச்சீரு... நான் நெத்தியக் காட்டலன்னு சொல்லணும்... முத்தத்த எடுத்துக்கீட்டீரே தவிர... நான் தர்லன்னு சொல்லணும்... தெரிஞ்சு தெரியாம நடந்தத மறந்துடும்... நீ யாரோ... நான் யாரோன்னு சொல்லணும்... இனிமேல் அவருக்கும் எனக்கும் கல்யாணம் நடக்காது... எம்மாடி இவ்வளவு நடந்த பிறகும் அவரு... எங்க குடும்பத்த இவ்வளவு இளப்பா நெனச்ச பிறகு அவர கட்டிக்க அப்பா சம்மதிச்சாலும்... நான் சம்மதிக்க மாட்டேனாக்கும்... மூஞ்சில அடிச்சாப்ல... அவர்கிட்ட பழைய குப்பையை கிளறப்படாதுன்னு சொல்லிட்டு வந்துடலாம்...

     கோலவடிவு, பயப்படாமல் எழுந்தாள்... கம்பீரமாக நடந்தாள்... அதே அந்த ஒற்றையடிப் பாதையில் ஒட்டமும் நடையுமாக நடந்தாள்... மாலை வேளை என்பதால், கண்ணுக்குச் சிலரே தென்பட்டார்கள்... அதுவும் தொலைவில், அவள் அந்தப் பள்ளமான பருத்திக் காட்டிற்குக் குறுக்கு வழியாய் வரவும், துளசிங்கமும், நேர் வழியாய் வரவும் சரியாய் இருந்தது. கோலவடிவைப் பார்த்து, துளசிங்கம் சிரித்தான். அந்தச் சிரிப்பில் பாதிக்கோபம் பறந்து போவதை உணர்ந்த கோலவடிவு, எஞ்சிய கோபத்தை விடப் போவதில்லை என்பதுபோல் ‘தம்’ பிடித்து நின்றாள்... துளசிங்கம், அவள் அருகே வந்தபோது அவள், அவன் கை எட்டாத தொலைவில் நின்று கொண்டாள்... மனதிற்குள் பேசியதை ஒப்பித்தாள்...

     “நான் ஒன்னும் ஒம்மகிட்ட கொஞ்ச வரல... நம்மஞக்குள்ள நடந்ததை சொல்லப் படாதுன்னுதான் சொல்ல வந்தேன்...”

     “எங்க சுடலை மாடன் சத்தியமாய்ச் சொல்லுதேன்... என் தலையே போனாலும் நமக்குள்ள நடந்ததை சொல்லவே மாட்டேன்... அதோட ரெண்டு சமயத்துலயும் தப்பு செய்தது நான்தான். நீயில்ல...”

     “அப்போ எங்கப்பாவ... சபையில... பேர் சொல்லி... மொட்டய்யா...”

     “நானும் ஒண்ணன்மாதிரி ஒரு முட்டாளு... எப்டிச் சொன்னேன்னு எனக்கே தெரியல... எங்கப்பா முன்னால சிகரெட்ட பிடிக்கிற நான், மாமா முன்னால... பிடிச்சதுல்ல... இன்னும் ஆயிரம் சண்டை வந்தாலும், ஒரு சிகரெட்டக்கூட பிடிக்க மாட்டேன்...”

     “அது அவரோர் இஷ்டம்... அனாவசியமாய் சபையில என்னையும் அக்கினி ராசாவையும் அலங்காரி அத்தை எதுக்கு சம்பந்தப்படுத்தணும்...”

     “சரியான பைத்தியக்காரி நீ... சித்தி அப்படிச் சொன்னதாலதான், இனிமேல் பொண்ணு கேட்க அவங்க யோசிப்பாங்க... இல்லாட்டா சித்தி சொன்னதை நீரூபிக்கதாய் ஆயிடும்... பாரு... எங்க சித்தி லேகப்பட்ட சித்தியில்ல...”

     “என் நெத்தில குங்குமம் வச்ச நெனப்பிருந்தால், அது தந்த ஞாபகம் இருந்தால், நீரு விட்டுக் கொடுக்கலாமுல்லா... ஒரு வெள்ளிக்குப் பதிலா... இன்னொரு வெள்ளில வைக்கலாமுல்லா...”

     “இதோ பாரு கோலம்... ஒன் மேல எனக்கு ‘இது’ வாரதுக்கு முன்னால போட்ட திட்டம் அது... இப்போ அத மாத்தறது கஷ்டம்... ஆனாலும் எங்க ஆட்கள் கிட்ட சொல்லிப் பாக்கேன்... கெஞ்சிப் பாக்கேன்... போதுமா... அநேகமாய் எங்க கொடைய தள்ளி வச்சுடலாமுன்னு நினைக்கேன்... அப்டி முடியலன்னா... நீ என்னை தள்ளி வச்சுடப்படாது...”

     “ரெண்டு குடும்பத்துக்குள்ள இவ்வளவும் நடந்த பிறகு நமக்குள்ள... நமக்குள்ள...”

     “கண் கலங்காத கோலம்... நீ சொல்றது மாதிரி... இவ்வளவு நடந்த பிறகும் ஒங்க அண்ணன் நம்மை ஒண்ணாச் சேர விடமாட்டான்... இந்த இடைவெளில காத்துக்கருப்பன் பயல்வ குறுக்கே வாரான்... அவங்களுக்கு ஒன்னைக் கட்டணும் என்கிறதைவிட பழனிச்சாமி மாமா வீட்ல பெண்ணெடுத்தோமுன்னு பேர் வாங்கணும். அந்தப் பேராசையிலதான் நம்ம ‘கிழ ஊரு’ விவகாரத்துல தலையிட்டு சண்டய பெரிசாக்கிட்டாங்க... ஆனால் சத்தியமா சொல்லுதேன்... அவங்க திட்டம் பலிக்காது... என்னால ஒன்னைக் கட்ட முடியுதோ இல்லியோ... அக்கினி ராசா கட்ட விடமாட்டேன்... எங்க அம்மன் குடையை தள்ளிவச்சுட்டா என்ன செய்வாங்க... முயற்சி செய்யப் போறேன்... முடிஞ்சாலும் முடியலாம். அப்டி முடியாமப் போனாலும் ஒங்க கரும்பட்டையான் கூட்டம் என்னை அடிச்சாலும் பட்டுக்குவேன்... திருப்பி அடிக்கமாட்டேன்...”

     “கை எப்டி இருக்கு...?”

     “இப்போ பரவாயில்ல... நாளைக்கு கட்ட எடுக்கப் போறேன்...”

     “எங்கண்ணாகிட்ட ரூபாய் கொடுத்ததை தப்பா நினைக்கப் படாது... புளியம்பழம் வித்த பணம்... அப்பா என்கிட்ட வீட்டுக்குள்ள வைக்க கொடுத்தாரு... நான்தான் சண்டைச் சத்தம் கேட்டு மறந்து போயி ரூபாவோட வந்துட்டேன்... தப்பா நினைக்கப் படாது...”

     “சரி... பழையத விடு... ஒன்னப் பார்த்தால் எனக்குத்தான் தப்பு செய்யப்படாதுன்னு ஒரு எண்ணம்... அப்படிப்பட்ட முகராசி ஒனக்கு...”

     “இனுமே நாம சந்திக்கப்படாது... வழில பாத்தாலும் பேசப்படாது... கிட்டாதாயின் வெட்டென மறன்னு பள்ளிக்கூடத்துல படிச்ச பாடம்...”

     கோலவடிவு திக்கினாள்... விக்கினாள்... முந்தானையை எடுத்துக் கண்களை ஒற்றிக் கொண்டாள். பிறகு சத்தம் வராமல் இருக்க வாயில் ஒற்றிக் கொண்டாள். துளசிங்கம், அவள் தோளில் கை போட்டான். இரண்டு கைகளாலும் அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபோது, அவள் அவன் மார்பில் முகம் போட்டாள். கழுத்தில் கை போட்டாள்... பிறகு அவனிடமிருந்து விடுபட்டு, அவனை ஏறிட்டுப் பார்த்தவள், இன்னொருத்தியைப் பார்த்துவிட்டாள்...

     “அய்யய்யோ... ரஞ்சிதம்... ரஞ்சிதம்...”

     கோலவடிவு, தன் மார்பில் சாய்ந்ததை, திருமலை தன் காலில் விழுந்ததாகப் பாவித்துக் கொண்ட துளசிங்கம் சந்தோஷமாகச் சொன்னான்.

     “அவள் பாக்கல... வேற பக்கமா நிக்காள்...”

     “அய்யோ... நம்மள பாத்துட்டுதான் அப்படி திரும்பி நிக்காள்... அதோ வாராள் பாருங்க... எம்மோ... அவள் ஊர்ல சொன்னா எனக்கு மட்டுமில்ல... எங்க குடும்பத்துக்கே கேவலமாச்சே...”

     கோலவடிவு பயந்தபடியே ஓடினாள்... துளசிங்கம் சிரித்தபடியே நின்றான்... அலங்காரி சித்தி சொன்னபடியே உயிருக்கு உயிராய் பேசியாச்சு... அவள்கிட்டபோய் சொல்லணும்... சிரிப்பாள்... சிரிப்பாள்... அப்படிச் சிரிப்பாள்...