16

     காலை வேளை... கதிரவன் தங்கப் பிரவேசம் செய்த நேரம்...

     ஆலமரத்தடிக்கு அருகே அம்மன் கோவில், களை கட்டியது என்றால், சுடலை மாடன் கோவிலும் சும்மா இருக்கவில்லை... இங்கே கரும்பட்டையான்கள் பத்துப் பதினைந்து பேர், அங்கே செம்பட்டையான்கள் பதினைந்து இருபதுபேர், இருதரப்பும் தத்தம் கோவில்களை உற்றுப் பார்த்தார்கள்... அம்மன் கோவிலில் சிலர் பலருக்கும், சுடலை கோவிலில் பலர் சிலருக்கும் உத்திரவுகள் பிறப்பிப்பது போல், கோவில்களின் பல்வேறு இடங்களைச் சுட்டிக் காட்டினார்கள்... உடனே இரண்டிலும் ஏணிகள் சாத்தப்பட்டன... யார் ஏணியில் முதலில் ஏறுவது என்பதுபோல், இருதரப்பும் ஏணிக் கட்டத்திலேயே போட்டி போடுவதுபோல் தோன்றின. ஏறியவர்களிடம் சுண்ணாம்புக் கலசமும் தூரிகையும் ஒரே சமயத்தில் கொடுக்கப் பட்டன... அம்மன் வீட்டில் தெளிந்த சுண்ணாம்பு வெள்ளை சுடலை வீட்டில் மங்கலாகவும், சுடலை வீட்டு வெள்ளைச் சுண்ணாம்பு அம்மன் வீட்டில் மங்கலாகவும் தெரிந்ததை, செம்பட்டையான்களும், கரும்பட்டையான்களும் தத்தம் கோவில் சுவர்கள் அதிகமாய் பிரகாசிப்பதாக அனுமானித்துக் கொண்டார்கள்.

     காளியம்மன் கோவில், சட்டாம்பட்டியின் மேல ஊருக்கும் கீழ ஊருக்கும் எல்லைக் கோடாக உள்ள கோவில்... இதற்கு தென் கிழக்கே துளசிங்கம் வீடு... திருமலை நடக்க ஏழு நிமிடமும், அக்னி ராசா நடக்கப் பன்னிரண்டு நிமிடமும் ஆகும் தூரத்தில் இருந்தது. சுடலைமாடன் வைத்திருக்கும் குறுக்குத்தடி, காளி கோவில் பக்கமும், காளியின் திரிசூலம் சுடலை கோவில் பக்கமும் நன்றாகத் தெரிந்தன.

     தேநீர் கடையில் இருந்து பெரிய கூஜாவில் வாங்கி வரப்பட்ட காபியை, கையோடு கொண்டு வந்த டம்ளர்களில் குடித்துக் கொண்டிருந்த பீடிப் பெண்களைக் ‘குள்ளக் கத்தரிக்காய்’ ராமசாமி விரட்டினார்... அவருக்குக் கொடுக்காமல் குடித்தால் எப்படி...?

     “கொஞ்சம் தள்ளி உட்காருங்க... இன்னும் தள்ளி... தள்ளி...”

     “இப்பபடியே தள்ளித் தள்ளிப் போனால்... சுடலை மாடன் இருக்காரே, அந்த கோவிலுல போய்தான் இடிப்போம்...”

     நாட்டு வக்கீல் நாராயணன் குறுக்கு விசாரணைக்கு போய் விட்டான்.

     “அம்மனுக்கு நாளைக்குப் பந்தக்கால் நடுறோம்... அப்புறம் கண் திறப்போம்... எவளாவது சுத்தபத்தம் இல்லாதவள் இருந்தால், இப்பவே எழுந்து போயிடணும்...”

     சில பெண்கள் சிரித்துக் கொண்டார்கள்... சிலர் முகத்தைச் சுழித்துக் கொண்டார்கள். பலர், ஆங்காங்கே கூடிக்கூடி நின்ற வண்ணம் இரண்டு கோயில்களையும் கண்ணால் அளந்தபடியே வாயளந்த ஆட்களை வாயகலப் பார்த்தார்கள்.

     செம்பட்டையான் ரோசாப்பூ சிரிக்கவில்லை... சுழிக்கவில்லை... சினந்தபடியே பேசினாள்...

     “இந்த நாட்டு வக்கீல் நாராயணன் நம்ம எல்லோரையும் தன் பொண்டாட்டி மாதிரி சுத்தபத்தம் இல்லாதவள்னு நெனச்சிட்டான் பாரேன்...”

     “எங்க அண்ணாச்சி பெண்டாட்டி எந்த வகையிலழா சுத்த பத்தமில்ல...? அம்மனுக்கு சுத்தம் இல்லாட்டா கோபம் வருமுன்னு உலக நடப்பச் சொன்னா ஒனக்கு ஏன் வலிக்குது... ஒங்க சுடல மாதிரி எங்கம்மன் புண்ணாக்கு தின்கிறவள் இல்ல...”

     கரும்பட்டையான் வாடாப்பூ ரோசாப்பூவைத் திட்ட, ‘காத்துக் கருப்பி’ தங்கம்மா தனது கருத்தைப் பொதுக் கருத்தாகச் சொன்னாள்.

     “செம்பட்டையான் கூட்ட ஆம்புளைகளுக்குத்தான் திமிருன்னு பார்த்தோம்... பொம்புளைகளுக்கும் அப்பிடித்தான் போலுக்கு...”

     “ஏய் தங்கம்மா... நீ மேல ஊருக்காரி... ஒனக்கென்னடி வந்திருக்கு... நாங்க ரெண்டு குடும்பமும் கீழே ஊர்காரிவ... அடிப்போம்... பிடிப்போம்... அணைப்போம்... நீ பாட்டுக்கு சும்மா இரேன்...”

     “இனிமேல... நல்லா ஞாபகம் வச்சுக்க... ஊரு ஒண்ணுதான்... அதுக்குத்தான் எல்லை உண்டே தவிர, அதுக்குள்ள எல்லை கிடையாது... இனிமேல் கருப்பனும் கரும்பட்டையானும் ஒண்ணு... செம்பட்டையான் வாயில மண்ணு... அம்மன் கொடையில பாக்கத்தான் போறோம்...”

     “ஏழா வார்த்தய அளந்து பேசுழா... இல்லன்னா ஒன் தலையில் மண்ணு விழும்... இப்பவே...”

     “எங்கழா... மண்ணள்ளி போடு பார்க்கலாம்...”

     “இன்னொரு தடவ சொல்லு பார்க்கலாம்...”

     கரும்பட்டையான்களை சும்மா சொல்லக்கூடாது... எல்லாப் பெண்களையும் ஒரே மாதிரி பாவித்து விரட்டினார்கள்.

     “நாங்கதான் நாயிமாதிரி ஒருத்தர ஒருத்தர் குதறுறோம்... ஒங்களுக்கு என்னழா வந்துட்டு...? எழுந்திருங்கழா... இந்த சண்டைக்கு வினையே ஒங்க மூலந்தான் வந்துது... ஒடிப்போங்க... இந்தப் பக்கம் எவளும் வரப்படாது... ஏல... பக்கிரிசாமி... வெள்ளையால அடிக்கே... வெள்ளை சும்மா கண்ணப் பறிக்காண்டமா... போங்கழா...”

     பீடிப்பெண்கள் எழுந்தார்கள்... தட்டும் பீடியுமாய் நடந்தார்கள்... நாட்டு வக்கீல் நாராயணன் விரட்டினான்... என்று எழவில்லை. பீடியோட நேரம் வந்தாச்சு... அதோட இன்னைக்கு கணக்குப் பார்த்து காசு வாங்குற நாள்... எடைபோட்டு இலை வாங்குற நாள்...

     சிநேகிதத்தின் அடிப்படையில் ஒவ்வொருத்தரும் , இன்னொருத்தியை இடித்தபடியே கலகலவென்று சிரித்தபடி போவாள்... ஆனால், இன்றைக்கோ, காத்துக் கருப்பியும் கரும்பட்டையாள்களும் கலந்து போக, செம்பட்டையாள்கள் தங்களுக்குள் மட்டுமே சேர்ந்து போனாள்கள்... திருமலை திட்டுவானே என்ற பயத்தில், துளசிங்கம் ஒதப்பானே என்ற அச்சத்தில்...

     அந்தப் பெண்கள் தங்களுக்குள்ளேயே ஒரு வரையப்படாத சண்டைக்கோட்டைப் போட்டுக் கொண்டு, பீடிக்கடை படியேறினார்கள்... நான்கு படியில் முடிகிற கல்தூண் திண்ணையில் சில சிறுவர்கள் பீடிக்கு லேபிள் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். உள்ளறையில் பீடி இலைகள், அடுக்கடுக்காய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. பக்கத்துலயே தூள்கள் குவியலாக இருந்தன. இரண்டுக்கும் மத்தியில் உள்ள மேஜையில் தராசு.

     ஒவ்வொருத்தியும் ஒரு பயலிடம் பீடிகளை எண்ணிக் கொடுத்து விட்டு, கணக்குப் பிள்ளையிடம் கையளவில் உள்ள பேரேட்டை நீட்டினாள். அப்போது, ஒரு ‘அண்டா குண்டா’ அறையில் இருந்து ஏசெண்டு வந்தான்... ‘இர்’ என்றோ ‘இன்’ என்றோ சொல்ல முடியாத வயசு... முப்பது முப்பத்தைந்து இருக்கும்... அவன் முகத்தைவிட, முடி நன்றாக இருந்தது... உடம்பைவிட உடுப்பு நன்றாக இருந்தது... கண்ணுக்குக் கீழே கரும் வட்டங்கள்... கைகளில் தேமல்... ஆனாலும் அவன் அதட்டிச் சொன்னான்...

     “செம்பட்டையான் குடும்பத்துப் பொண்ணுவளுக்கு இன்னையில இருந்து இல கிடையாது... நாளைக்கு வந்து கணக்க முடிச்சுக்கட்டும்... இனிமேல் இந்தக் கடைப்பக்கம் திரும்பிக்கூட பார்க்கப்படாது... ஏல தேசிங்கு... மூணுல ஒரு பங்கு பீடி இலய கரும்பட்டையான், காத்துக் கருப்பன் பொண்களுக்கு நிரந்து போடுடா... செம்பட்டையான் பொண்ணுவள திரும்பிப் பாராம போங்க...”

     செம்பட்டையான் ரோசாப்பூ நேரடியாகக் கேட்டாள்.

     “எங்கள எதுக்காவ போகச் சொல்லுதியரு...”

     “இது காத்துக் கருப்பன் பால்பாண்டி நடத்துற கடை... செம்பட்டையான் பொண்ணுவளுக்கு இங்க இடம் கிடையாது...”

     “நீரு ஒண்ணும் முதலாளி இல்ல... கம்பெனி ஏசெண்டு...”

     “சரி கம்பெனிக்கே கம்ளைண்ட் கொடுங்க... இனிமேல் இந்தப் பக்கம் வரப்படாது...”

     “செம்பட்டையான் ஆம்புளகூட சண்டைபோட வக்கில்ல... வந்துட்டாரு... பொண்ணுவகூட சண்ட போட...”

     “நான் சண்டை போட்டா... ஒங்களால தாங்க முடியாது... மரியாதியா போறியளா... இல்ல... பீடி ஒட்டுற பயலுவள வச்சு கழுத்தப் பிடிச்சுத் தள்ளணுமா...”

     ஏசெண்டு, அப்படிச் சொல்லிவிட்டு, திடுக்கிட்டான்... காரணம் பீடி ஒட்டும் பயல்களிலும் செம்பட்டையான்கள் இருக்கிறார்கள்... அவர்களை நாளைக்கு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று திட்டம் போடுவது போல், மோவாயை அவர்களைப் பார்த்தே மேலும் கீழுமாய் ஆட்டினான்... செம்பட்டையான் பெண்களில் பலர் ஏழைகள்... சொத்துப்பத்து இல்லாத சூன்யங்கள்... பீடி சுற்றியே பிழைப்பவர்கள்... வேறு பிழைப்புத் தெரியாதவர்கள்... அவர்கள் அழப்போவது போல நிற்பதைப் பார்த்துவிட்டு அவர்களிடம் ஆலமரத்தடியில் சண்டை போட்ட கரும்பட்டையான் வாடாப்பூ கோபத்தை நிதானத்தோடு காட்டிப் பேசினாள்.

     “இவளுவள விரட்டுறது நியாயமில்ல... கோயில் சண்டைய கோயிலுலதான் பாக்கணும்... மேளத்துல பாக்கணும்... தாளத்துல பாக்கணும்... பீடில பாக்கப்படாது... இவளுவளும் எங்கள மாதிரி தொழிலாளி பொண்ணுவ...”

     பீடி ஏசெண்ட் துள்ளி எழுந்தான்.

     “அம்மாமாருக்கு அவ்வளவு திமுரு உண்டாயிட்டோ... ஊர்க்காரனுவளயே உண்டு இல்லன்னு பார்க்கிற குடும்பத்துல ஆம்புளையாய் இருந்தாலும் சரி, பொம்புளையாய் இருந்தாலும் சரி... இங்க இடமில்ல... எவளாவது செம்பட்டையானுக்கு பிறந்தவதான் இப்டிப் பேசுவா... அப்படி பிறந்தவளுவ வராண்டாம்... மத்தவளுவ வரட்டும்... ஏய் தங்கம்மா... நம்ம குடும்பத்துக்காரிகள வரச் சொல்லு... வாறியா...? இல்ல... அவங்கவங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி பீடி சுத்துறதை நிறுத்திட்டு வயல் வேலையில போடச் சொல்லணுமா...?”

     காத்துக் கருப்பன்களும், கரும்பட்டையான் பெண்களும், கைவிரல்களைக் கடித்தபடியே யோசித்தார்கள்... எம்மாடி வயல் வேல பாக்கதைவிட தூக்குப் போட்டுச் சாகலாம். பீடி சுத்துனாதான் கையில ரெண்டு காசு புரளுது... வீட்லயும் மதிக்காக... வயலுக்கு போனால் வரப்பு மாதிரி மிதிப்பாவ... இந்த அம்மன்கொடை முடியுறது வரைக்குந்தான் செம்பட்டையான் பொண்ணுவளத் தடுப்பான்... அப்புறம் ஆறுனசோறு பழைய சோறு மாதிரிதான்...

     செம்பட்டையான் பெண்களும், இதர பெண்களைப் போல், சும்மா ஒரு பேச்சுக்காக அப்படிப் பேசியிருக்கணும் என்று அனுமானித்து, இலை வாங்க நுழைந்தபோது, ஏசெண்டு அதட்டினான்.

     “நீங்களெல்லாம் எதுக்காவ சேல கட்டணும்... நல்ல மாட்டுக்கு ஒரு அடி... நல்ல பொண்ணுக்கு ஒரு சொல்லு... மானம் மரியாதி வேண்டாம்... எந்த செம்பட்டையாளும் இன்னும், இங்கே நிக்கான்னா அவளுக்கு மானம் ரெண்டாம் பட்சமுன்னு அர்த்தம். காசுன்னு வந்துட்டா என்ன வேணுமுன்னாலும் செய்வாளுவ போலுக்கு...”

     ரோசாப்பூ, வாடாப்பூவையே பார்த்தபடி செம்பட்டையான் பெண்கள் கண்ணிர் சிந்தினார்கள். கரும்பட்டை வாடாப்பூ, பதிலுக்கு கண்ணிர் சிந்தியபடியே அவளோடு நின்றாள்... பிறகு அந்தப் பெண்களோடு வெளியே வந்தாள்... இந்தப் பெண்கள் அவளை உள்ளே தள்ளிவிட்டாலும் அவள் அவர்களுடனேயே வெளியே வந்தாள்... “ஒண்ணாச் சிரிச்சோமே, அதுபோல் ஒண்ணாவே அழுவோம்...” என்று சொன்னபடியே வெளியேறினர்.

     செம்பட்டைப் பெண்கள், வாடாப்பூவோடு, கடைக்கு வெளியே வந்து, வீதியில் நின்றார்கள்... நடந்ததை நம்ப முடியாமல், மேற்கொண்டும் நடக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றார்கள்... அப்போது, ரஞ்சிதம் எதிர்ப்பட்டாள்... அவளைப் பார்த்ததும், இவள்களில் ஒருத்தி சத்தம் போடாமலே அழுதாள்... பிறகு ரஞ்சிதத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒப்பித்தாள்.

     “அன்னிக்கு ஒன்னை அடுத்த சாதிப் பொண்ணுன்னு பீடிப் பய அவமானமா திட்டும்போது சும்மா இருந்தோமே, அதுக்கு இப்போ நல்லா அனுபவிக்கோம்... ரஞ்சிதம், கரும்பட்டையான் ஆம்புளயும், செம்பட்டையான் ஆம்புளையும் போட்டி போட்டால் காத்துக் கருப்பனுக்கு என்ன வந்துட்டு... நாங்க இப்போ பீடி சுத்தப் படாதாம். அஞ்சாறு வருஷமா செய்யுற வேலையை எப்பிடி நிறுத்திட்டான் பாரு...”

     “ரஞ்சிதம் நீயாவது பூவு வித்துப் பிழைக்கே... நாங்க என்ன பண்ணுவோம்...? பீடிய பிடிச்ச கையால மம்பெட்டிய பிடிக்க முடியாது... இலைய சுருட்டின கையால புல்லு வெட்ட முடியாது... இதவிட அந்த கரிமுடிவான் எங்கள ஒரே வெட்டா வெட்டியிருக்கலாம்...”

     ரஞ்சிதம், அந்தப் பெண்களை இரண்டு பக்கமும் கை நீட்டி இரு முனைகளிலும் நின்றவர்களின் கரங்களைப் பற்றியபடியே சாதாரணமாகப் பேசினாள்.

     “மனுஷனையும், மனுஷியையும் பிரிச்சுப் பார்த்தால், அப்புறம் கையி காலுன்னும் பிரிக்க வேண்டியது வரும்... அன்னிக்கு என்னை சாதியச் சொல்லி விரட்டுனான்... இன்னைக்கு ஒங்கள குடும்பத்த சொல்லி விரட்டுறான்... நாளைக்கு கரும்பட்டையான் பொண்ணுவள விரட்டுவான்... அப்புறம் காத்துக் கருப்பன் குடும்பத்துல முதல் சொக்காரன சேர்த்துட்டு, ரெண்டாவது சொக்காரன விரட்டுவான்... அப்புறம் முதல் சொக்காரனுவனுள்ல அண்ணன் தம்பின்னு ஏத்துக்கிட்டு சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகளை விரட்டுவான். பிறகு தன்னைத்தானே மட்டும் வச்சுக்குவான்... இப்படிப் பட்டவனுவள முதலில் விரட்டுனாத்தான் நம்மள மாதிரி தொழிலாளிங்க ஒன்றாய் சேரமுடியும்...”

     “இப்போ வேல இல்லாம வீதியில நிக்கோமே... ரஞ்சிதம்...”

     “கவலைப்படாதிய... குட்டாம்பட்டில கண்ணாடிக்காரன்னு ஒருத்தர் ஏற்பாட்டுல பீடி சுற்றும் கூட்டுறவு சங்கம் வந்திருக்கு... அதுல பீடி சுத்தி பிழைக்கலாம்... இப்போவாவது நமக்கு சங்கம் தேவைன்னு தோணுதா...”

     “அதுல என்ன சந்தேகம்... இவன விடப்படாது...”

     “கண்ணாடிக்காரர் கிட்டே சொல்லுவோம்... அவர் லேபர் கோர்ட்டுல ஏற்பாடு செய்வார்... பேரேடு புத்தகத்த பத்திரமா வையுங்க... சரி நாம இப்பவே குட்டாம்பட்டி போய் கூட்டுறவு சங்கத்துல பதிவு செய்யலாம்... கோர்ட்ல இல்லன்னா... அரசாங்கத்துல... புகார் கொடுக்கது பத்தி முடிவெடுப்போம்... இவனை நீங்க விட்டாலும், நான் விடமாட்டேன்...”

     ஏசெண்டு பால்பாண்டி, அந்தப் பெண்களின் பின்பக்கமாக ஓடிவந்து, முன்பக்கமாக நின்று கத்தினான்.

     “என்னடி சொன்ன ரஞ்சிதம்... என்னை நீ விடமாட்டியா... இப்பவே ஒன் சேலயப் பிடிச்சு இழுக்கேன்... ஒன் கள்ளப் புருஷன்ல எந்தப் பய வந்து காப்பாத்துறான்னு பாக்கலாம்...”

     ரஞ்சிதம் எந்தவித உணர்வையும் காட்டாமல், அப்படியே நின்றாள். அதுமட்டுமில்லாமல், பீடி ஏசெண்டை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். அவன், ஏதோ தன்னிடம் குசலம் விசாரிக்கப் போவது போலவும், அதற்குப் பதிலளிக்க வேண்டியது தனது கடமை என்பது போலவும் சினமடையாமலே அவனைப் பார்த்தாள். “அய்யோ சாமி நான் அப்படி ஒன்னும் பேசல” என்று ரஞ்சிதம் சல்ஜாப்பு சொல்வாள் என்று எதிர்பார்த்த ஏசெண்டு சிறிது அதிர்ச்சியுற்றான். ஆனாலும் செம்பட்டையான் பெண்களைப் பயமுறுத்துவதற்காவது ரஞ்சிதத்தை ஏதாவது செய்ய வேண்டும். ஒப்புக்காவது, அவள் தோளில் கிடக்கும் முந்தானையைக் கீழே இழுத்துப் போடவேண்டும். செறுக்கி மவள்...

     ஏசெண்டு, ரஞ்சிதத்தை, அடிமேல் அடிவைத்து நெருங்கினான். என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியாமலே - அதேசமயம், ஏதாவது செய்யவேண்டும் என்ற வீறாப்புடன் நெருங்கினான். இதற்குள் செம்பட்டையான் பெண்கள், ரஞ்சிதத்தைச் சுற்றி வியூகம் போட்டார்கள். அந்த வியூகத்திற்கு முன்னால் கரும்பட்டையான் வாடாப்பூ, தன்னைத்தானே முன்னால் நிறுத்திக் கொண்டு, ஏசெண்டைப் பார்த்துச் சவாலிட்டாள்.

     “ஏய்... பால்பாண்டி... நீ நெசமாவே... மனுஷன்னா... ரஞ்சிதத்த தொடு பாக்கலாம்...”

     “என்னடா நெனச்சே... பண்ணிப் பயலே...”

     “ஒருத்தி இரண்டாவது கணையைத் தொடுத்தாள்... இதையடுத்து எல்லாப் பெண்களும் முந்தியடித்து பேசினார்கள்.

     “ஒரு பொம்புளய, அதுவும் ஒத்த வீட்டு பொண்ண, அடிக்கவாறியே... நீயுல்லாம் ஆம்புளையாடா...”

     “பீடிக் கம்பெனில நீ பெரிய வேலைக்காரன்... நாங்க சின்ன வேலைக்காரிவ. எங்கள வராதன்னு நீ எப்டிடா சொல்லலாம்...”

     “ஊருன்னா ஆயிரம் நடக்கும்... ஐயாயிரம் இருக்கும்... கரும்பட்டையான் குடும்பத்துல பொண்ணு எடுக்கணுமுன்னா... முறப்படி கேட்கறத விட்டுப்புட்டு, இப்டியாடா ஆடுறது...? ஆம்புளத் திமுர்ல அலையுறவனுவ... சண்டைக்கு நாங்க பொட்டப் பிள்ளியல என்னல செய்வோம்...”

     “அம்மன் கொடைக்கும் பீடி சுத்தறதுக்கும் என்னல சம்பந்தம்... எரும மாடே...”

     “ஏமுல... பித்துப் பிடிச்சு நிக்கே... ரஞ்சிதத்த தொடுல பாக்கலாம்...”

     “பெண்கள கொடுமப் படுத்தினா ஆறு வருஷம் செயிலுக்கு போகனுமுன்னு தெரியுமாடா...”

     “பீடி சுத்துறத ஒன்னால தற்செயலாய் நிறுத்தலாம்... நிரந்தரமா முடியாதுன்னு கண்ணாடிக்காரரை வச்சு ஒனக்கு சொல்லிக் கொடுக்கோம் பார்...”

     “இந்த ரஞ்சிதம் முகத்த ஏறிட்டு பாருல... அனாதையா, அம்மாவ... இழந்துட்டு இருக்க இவளயால சேலய உறிவே...”

     “எழுழா அவன்கிட்ட பேசிக்கிட்டு... சாணியக் கரைச்சு அவன் தலையில் ஊத்துங்க... அந்த சாணிய எடுழா...”

     ஒருத்தி ஆவேசப்பட்டு சற்றுத் தொலைவில் கிடந்த எருமைமாட்டுச் சாணியை எடுத்தாள்... இன்னொருத்தி, அவளைத் தடுத்து, அவள் கையை அங்குமிங்கும் ஆட்டி, சாணத்தைக் கீழே தட்டிவிட்டாள்... இதற்குள் அக்கம் பக்கத்தில் போட்டி கொடைகளைப் பற்றிக் கூடிக் கூடிப் பேசி நின்றவர்கள், அங்கே ஒடி வந்தார்கள்... அந்தப் பெண்களைச் சத்தம் போட வந்த எல்லோரும், அவர்களின் ஆவேசத்தைக் கண்டு சற்று பயந்து, அது தணிவது வரைக்கும் காத்திருப்பது போல், அவர்களையே பார்த்தார்கள்... ஏசெண்டு, வெலவெலத்துப் போனான்... ஒருத்திக்குப் பதில் சொல்லப்போனால், இன்னொருத்தி கேள்வி கேட்டாள்... அவன், அந்தப் பக்கம் நின்றவர்களில் பெரும்பான்மையினரான சொக்காரர்களைப் பார்த்து இப்போது முறையிட்டான்.

     “இவளுவ பேசுற பேச்சப் பாத்தியளா... பொம்புளன்னு பாக்கேன்...”

     “நாங்களும் ஒங்க ஆட்கள் மொவத்துக்காவ ஒன்ன விட்டுட்டுப் போறோமுல... சாக்கிரத... அடுத்த வாரம் நீயே ஒன்கையால எங்களுக்கு பீடி இலைய கொடுக்கியா... இல்லியான்னு பாரு... பொண்ண மானபங்கப் படுத்துனால்... தூக்குத் தண்டனையாம்... அடிச்சா ஆயுள் தண்டனையாம்... பீடி இலைய மட்டும் பார்க்காம, பேப்பரையும் படிச்சுப் பாரு. வா... ரஞ்சிதம்...”

     “இவன்... எங்க... பீடி இலைய பாக்கான்...? அதைச் சுத்துற விரலத்தான பாக்கான்...”

     எல்லாப் பெண்களும், ரஞ்சிதத்தை முதுகைப் பிடித்தும், கையைப் பிடித்தும் இழுத்தும் தள்ளிக் கொண்டு போனார்கள்... அவள் என்னமோ இந்த ஏசெண்டை திட்டியதுபோலவும், இவள்கள் என்னவோ சமரசம் செய்து வைப்பது போலவும்; இவள்கள் நடக்க, நடக்க, பீடி ஏசெண்ட்டின் பக்கம் நின்றவர்களின் பேச்சு கேட்டது... மூளை இருக்கா... மண்டையில மசாலா இருக்கா...? இதுக்குப் பேருதான் திமிரு... கொளுப்பு... அந்தக் கூட்டம் இவள்களைச் சொன்னதா அல்லது அவனைச் சொன்னதா என்று அந்த களேபரச் சத்தத்தில் சரியாகப் புரியவில்லை.

     ரஞ்சிதம் புல்லரித்துப் போனாள்... சென்னையில், அண்ணி செண்பகம், ‘வேணுமுன்னா அவன்கிட்ட போய் இருந்துக்க... நீ பார்க்காம அவன் எப்படிப் பார்ப்பான்’ என்று ஆண் பார்வைக்கே புது இலக்கணம் வகுத்தபோது, அவள் அழவில்லை... வயதான, அம்மா, மகளுக்கு கல்யாணமாகாதோ என்ற ஏக்கத்தில் இறந்த போதுகூட, அவள் அந்த துக்கத்தை, ‘ஒரு ஜீவனாவது கவலையற்ற இடத்துக்குப் போயிட்டே’ என்று ஆறுதலில் மறந்தாள்... இந்த பீடி ஏசெண்ட்டும், அப்போது பேசும்போதும், இப்போது பேசும்போதும் அவளுக்கு அழுகை வந்தது... ஆனால் அழவில்லை... ஆனால் இப்போதோ, அந்தப் பெண்கள் தனக்காக ஒருமுகமாய் நிற்பதை நினைத்துப் பார்க்கும்போதே அழுதுவிட்டாள். இரண்டு பெண்களின் தோள்களில் கைகளை போட்டபடியே, தலையை அங்குமிங்குமாய் ஆட்டி ஆட்டி அழுதாள்... கண்ணில் பெருக்கெடுத்த நீரும், முகத்தில் துளிர்த்த வேர்வையும் வாயென்ற கடலில் வடித்து கொண்டிருந்தன... அந்தப் பெண்கள் துடித்துப் போனார்கள்.

     “அழாதே ரஞ்சிதம்... அழாத... அவன் அறிவில்லா பயல்... நாங்களும்தான் அவனுக்கு நல்லா கொடுத்தமா... அவன் தலையில் சானிய ஒரு துண்டாவது எடுத்துப் போட்டிருக்கணும்... அது செய்யாதது தப்புதான்... அழாத ரஞ்சிதம்...”

     ரஞ்சிதம் கண்ணிரைத் துடைத்த ஒருத்தியின் கரங்களைத் தன் கரங்களுடன் இணைத்துக் கொண்டே விம்மலுக்கிடையே பேசினாள்.

     “நான் அவர் திட்டுனார்னு...”

     “அவரு பெரிய இவரு... எரப்பாளிப் பயல மரியாதியா பேசாத... சரி ஏதோ பேச வந்தே... சொல்லு ரஞ்சிதம்...”

     “நான் அவனுக்காவ அழல... ஒங்க அன்ப நெனச்சால் அழுக வருது... ஒங்க அன்புக்கு நான் தகுதியா இருக்க மாட்டேனோன்னு பயம் வருது...”

     “சரி... சரி... சொம்மா கொஞ்ச நேரம் எதையும் யோசிக்காத சரியாயிடும்... நீ இப்போ எதுவும் பேசப்படாது... ஆமா... அந்தப் பக்கம் தற்செயலா வந்தியா? இல்ல இப்படி நடக்குமுன்னு எதிர்பார்த்து வந்தியா?”

     “எழா... தொட்டிலயும் ஆட்டி, பிள்ளையுமா கிள்ளுற...”

     “அவளும் வீட்ல நடக்க கல்யாணப் பேச்சு நம்பி... தொட்டுலயும் வச்சுட்டா... தாலாட்டும் தெரிஞ்சுக்கிட்டா... கிள்ளுறதுக்கு மாப்பிள்ளதான் வர்ல... பிள்ளைக்கு எங்கே போறது...”

     “எந்த சமயத்துல தமாஷ் செய்யணுமுன்னு தெரியாண்டாம்...? ஒரு வாரத்துக்கு பீடி சுத்துறனால... எழுபத்தைஞ்சு ரூபாய் வரும்... இப்போ அதவிட்டுவிட்டு அனாதையா நிக்கோம்... எவளுக்காவது உடம்புல சூடு சொரணை இருக்குதா...?”

     சிரித்த பெண்கள் அழுகையை அடக்குவதுபோல் சிரிப்பை அடக்கினார்கள். ஒருத்தியை ஒருத்தி ஆறுதலாகப் பிடித்துக் கொண்டார்கள். கூட்டத்திற்குள், இருந்தாலும், தனிமைப் பய உணர்வு காசில்லாமல் குடும்பத்தில் இருக்கப் போகிறோமே என்ற அச்சம்...

     எல்லோரும் முருகன் கோவிலுக்கு வந்தார்கள். சோர்ந்து போய் உட்கார்ந்தார்கள். ரஞ்சிதம் அவர்கள் முன்னால் அவர்களுக்கு முகம் கொடுத்து அமர்ந்தாள்... இப்போது பழைய நிலைக்கு வந்து விட்டாள்... சிரிப்பதற்கே வாழ்க்கை என்பது மாதிரியான சிரிப்பு... கூடி வாழ்வதே கோடி பெறும் என்பது போன்ற பார்வை...

     கண்களை அகல வைத்துப் பேசினாள்.

     “நாம எல்லாரும் குட்டாம்பட்டிக்கு மொத்தமாகவும் போவோம்... இல்லன்னா நான், ராசகிளி, வாடாப்பூ வேணுமுன்னால் இன்னும் ரெண்டு பேரு... அஞ்சாறு பேராய் போவோம் . குட்டாம்பட்டில கண்ணாடிக்காரர் நம்மள பாத்ததுமே இலை தூள் தருவாரு. கன்னத்துள வச்ச கைய விடுங்க. குட்டாம்பட்டில பீடித் தொழிலாளி சங்கத்தை வைக்க அந்த கண்ணாடிக்காரர் படாதபாடு பட்டாரு. அப்படியும் விடாப்பிடியாய் சங்கம் வச்சு அதையே கூட்டுறவு சங்கமா மாத்திக்கிட்டார், அதுக்கு முன்னால அவரை அடிச்சாங்க... ஊர்லலேந்து தள்ளி வச்சாங்க... அவரு மசியல... அவரு நமக்கும் சேர்த்து பாடுப்பட்டதால நாம அதிகமா கஷ்டப்பட வேண்டியதில்ல... சரி... இப்பவே... போவோமா...”

     “இன்னும் வயித்துக்குள்ள எதுவும் போகல... காபியக்கூட சரியா குடிக்கவிடாம அந்த நாசமாப்போற நாட்டு வக்கீலு வந்து விரட்டிட்டான்... வீட்ல போயி கொஞ்சம் கஞ்சி குடிச்சுட்டு வாறேன்... எங்க வரணும் ரஞ்சிதம்...”

     “இங்கேயே வாங்க...”

     “முன்னப்பின்ன யோசிக்காம ஏமுழா எழுந்திருக்கிய... பீடிப்பய, ரஞ்சிதத்த இங்க வந்து மிரட்டப் போறான்...”

     ரஞ்சிதம், பொதுப்படையாய் பேசினாள்.

     “நீங்க போங்க... ஒரு பொண்ண... அவமானப் படுத்துனால ஆயுள் தண்டனைன்னு சொல்லிட்டிங்கல்லா... அந்த ஆளுக்கு இது பொய்யுன்னு தெரியாது. ஒரு பொண்ண என்னபாடு படுத்திட்டும் ஜாமீன்ல வந்துட சட்டம் இடம் கொடுக்கது அவனுக்குத் தெரியாது... அவன மாதிரி ஆட்கள் முட்டாளா இருக்கதும், ஒரு வகையில நல்லதுக்குத்தான். சரி சீக்கிரமா போயிட்டு வாங்க...”

     அனைத்துப் பெண்களும் ரஞ்சிதத்தை வியப்போடு பார்த்துவிட்டு நடந்தபோது, ரஞ்சிதம் வாடாப்பூவையே வியந்தபடி பார்த்தாள்... அவளுக்கு இப்போது முதுகு காட்டி நடக்கும் இந்த வாடாப்பூ கரும்பட்டையான் குடும்ப முழு உணர்வையும் மீறி வந்தவள்... அவள் பெரிய மனுஷி... பாதிக்கப்படும் வாய்ப்பு வராதபோதே... பாதிக்கப்பட்டு விட்டவர்களோடு சேர்ந்த அவள் முன்னால் போய் நின்று கும்பிட வேண்டும்... முருகனைக் கும்புடுவதும் கும்பிடாததும் அப்புறம்...

     ரஞ்சிதம், முருகன் சிலையையே உற்றுப் பார்த்தாள்... அந்த கோவணாண்டியை பார்த்துப் பார்த்துப் பேசிக் கொண்டாள்... முருகா... ஒன்னைப் பார்க்கப் பார்க்க என் மனம் நெகிழுதுடா... ஒன்ன இந்தக் கோலத்துல பார்க்கும் போதெல்லாம் நீ சிவன் மகன் மாதிரி எனக்குத் தெரியல... சிவகாசில தீப்பெட்டித் தொழிலுல ஈடுபட்டிருக்கிற சின்னப் பையன் மாதிரி தெரியதுடா... இந்த ஏசெண்ட் கிட்ட பீடி ஒட்டுற பிஞ்சுகள் மாதிரி தோணுது... நீ கைலாசத்த விட்டது மாதிரி... நீ படிக்க வசதியில்லாம பள்ளிக்கூடத்த விட்டுட்டு மரம் வெட்டுற, கிணறு தோண்டுற விவசாய கூலிப் பையன்கள கண்ணு முன்னால பாக்கது மாதிரி இருக்குடா... மெக்கானிக்குகளிடம் திட்டும் உதையும் வாங்கிட்டு, வெறுமையாய் பாக்குற பிஞ்சுப் பயல்க... ஞாபகம் வருதுடா...

     ரஞ்சிதம், அங்கே வைத்துவிட்டுப் போயிருந்த பூத்தட்டைப் பார்த்தாள்... நாளை முதல் இது பீடித்தட்டாகப் போகிறது... அவள் எழுந்தாள்... கையில் இருந்த உதிரிப் பூக்களை முருகன் பாதத்தில் போட்டாள்... கதம்பப் பூவை மாலை போல் மடித்து, முருகன் சிலையின் கழுத்தில் போட்டாள். அவள் தனக்கென்று ஒரு பூத் துண்டை எடுக்கப் போனாள்... நீட்டிய கரத்தைச் சுருட்டிக் கொண்டாள்... பெண்களை நகைபோட்டு நகை போட்டே நகைப்புக்கு இடமாக்கிட்டாங்க. பூ வைத்துப் பூ வைத்தே பூவாய் வாட வச்சுட்டாங்க...

     ரஞ்சிதம் கோவிலுக்கு வெளியே வந்தாள்... மேற்குப் பக்கமாக, ரயில்வே பாலத்தைப் பார்த்தவள், கிழக்குப் பக்கம் உறுமல் சத்தம் கேட்டு, திரும்பினாள்... திருமலை, மோட்டார் பைக்கில் கம்பீரமாக வந்து கொண்டிருந்தான்.

     ரஞ்சிதத்திற்கு, கோலவடிவை பருத்திக் காட்டில் பார்த்த கோலம் நினைவுக்கு வந்தது... இது வெறும் காதல் பிரச்சினை மட்டுமல்ல... ஊர்ப் பிரச்சினை... துளசிங்கத்திற்கு, ஒருவேளை இந்தக் கோலவடிவு எத்தனையோ பேர்களில் ஒருத்தியோ என்னவோ... அவள் மேல் துளசிங்கத்திற்கு, நிசமாவே காதல் இருந்திருந்தால்... நேற்று என்கிட்டே அப்படி வம்பா பேசியிருக்கமாட்டான்... தமாஷ்தான்... ஆனால் அந்த தமாஷ், நிசமானால் சந்தோஷப்பட்டிருப்பான்... அப்படிப் பட்டவனிடம் இருந்து கோலவடிவைக் காப்பாற்றியாகணும்... ஒருவேளை... அவளை, அவன் நிசமாவே காதலிச்சால்... காதலிக்கட்டும். கல்யாணத்துக்குப் பிறகு காதலிக்கட்டும்... விஷயத்தை, இந்த திருமலையிடம் எப்படிச் சொல்வது... எப்படியாவது சொல்லியாகணும்... முருகனுக்கு இவரும் பக்தர்... முருகன் கோவில் முன்னால் “ஆவேசப்படமாட்டேன். அரிவாளை எடுக்கமாட்டேன்”னு சத்தியம் வாங்கிட்டு, பக்குவமாச் சொல்லணும்... ஒரு பொண்ணையும் காப்பாத்தியாகணும்... ஊரையும் காப்பாத்தியாகணும்...

     ரஞ்சிதம் திருமலையைப் பார்த்து போலீஸ்காரன் கையாட்டுவது போல், வலது கையை நிமிர்த்தி, உள்ளங்கையை வெறுங்கை ஆக்கினாள்.