18

     உச்சி வெயில் உச்சத்த பிடித்த வேளை.

     பழனிச்சாமி அசந்து கிடந்தார். பாக்கியம், அவரையே பார்த்தாள். வயிறு கொலுக்காய் கிடந்தது. சொன்னாலும் கேட்க மாட்டார். சோறுதான் சாப்பிடாண்டாம். காபியாவது குடிக்கலாம். பசியை அடக்கும். கேட்டால்தானே.

     இந்தச் சமயத்தில், ராமசுப்பு, நாட்டு வக்கீல், குள்ளக் கத்தரிக்காய் வகையறாக்கள் உள்ளே வந்து, பழக்கப்பட்ட இடங்களில் உட்கார்ந்தபடியே கோயில் காரியங்களைப் பேசத் துவங்கி விட்டார்கள். அவரும் அந்த பசிக் கிறக்கத்திலேயே பதிலளித்தார். ‘காலையில இருந்தே இவரு ஒரு டம்ளர் தண்ணிகூட குடிக்கலன்னு’ சொக்கார மச்சான்களிடமும், கொழுந்தன்களிடமும் சொல்வதற்காக, பாக்கியம் வாயைத் திறந்தாள். ஆனால் பேச்சோ, மூச்சு மாதிரி மேலும் கீழும் போய்க் கொண்டிருந்தது.

     “எண்ணாச்சி மேளக்காரங்களுக்கு எங்க ஊட்ல சோறு பொங்குறோம். வில்லுப் பாட்டாளிகளுக்கு ஒங்க வீட்ல சோறு. சரிதானே.”

     பழனிச்சாமி, சரியில்லை என்பதுபோல் பேசினார்.

     “மேளம், வில்லு, பொய்க்கால் குதிரைக்காரன் எல்லாருக்கும் இங்கேயே பொங்கிடலாம். தொழிலாளிவள பிரிச்சு சோறு போடப்படாது. எல்லாருமே மனுஷங்கதான். ஏய் பாக்கியம். நம்ம கொப்பரையை புளிய வச்சு தேச்சு கழுவுங்க. உருளைக்கிழங்கும் முட்டக்கோஸம் தனித்தனியாய் வையுங்க. போன வருஷம் மாதிரி என் சொல்ல தட்டுனது மாதிரியும் தட்டாதது மாதிரியும் ரெண்டையும் ஒரே பொறியலா போடாதிய. வயிறுன்னு வரும்போது காச பாக்கப்படாது. மானமுன்னு வரும்போது உயிரப் பாக்கப்படாது.”

     “எண்ணாச்சி நம்ம நாட்டு வக்கீல். பெரிய துணில போடுற சினிமா சங்கதி கரும்பட்டையான் பயலுவளுக்கு தெரிஞ்சு போச்சி. அவங்க அதவிட ரெண்டு மடங்கு துணில போடப் போறாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுதே.”

     “இதுக்குத்தான் நான் சொல்ல மாட்டேன்... சொல்ல மாட்டேன்னு சொன்னேன். இவரு கேட்டாத்தானே.”

     “இப்ப என்னடா குடி கெட்டுப் போச்சு. எதுக்கும் ஒரு ரெக்கார்ட் டான்ஸ் போட்டுட்டாப் போச்சு. எங்கண்ணாச்சி மொகத்த சுழிக்காவ... வேண்டாம்.”

     “அம்மன் கொடை சமயத்துல, அந்தப் பயலுவ வம்பு பண்ணப் போறது மாதிரியும் ஒரு பேச்சு அடிபடுது.”

     “கவலைப்படாதிய. அம்மன் கொடையில நீங்க அக்கறை செலுத்துங்க. நாங்க கரும்பட்டையான் பயலுவள கவனிச்சிக் கிடுறோமுன்னு காத்துக் கருப்பங்க கைமேல் அடிச்சு சத்தியம் செய்யாத குறையா சொல்லிட்டாங்க.”

     “சொந்தக் காலுல நிக்கணுண்டா.”

     பழனிச்சாமி, கடைசியாய் இப்படிப் பேசியபோது, கோலவடிவு உள்ளே வந்தாள். அப்பாவிடம் ஏதோ பேசப்போவது போல் முகத்தை நிமிர்த்தினாள்.

     “இப்போ எப்டி இருக்காள்.”

     “பெரியப்பா, சாப்பிடச் சொன்னாருன்னு சொன்னேன். நீ சாப்பிடாட்டா அவரு சாப்புட மாட்டாராமுன்னும் சொன்னேன். உடனே அலறியடிச்சு சாப்புட்டுட்டா. நீங்க காலையில இருந்தே சாப்புடலன்னேன். அழுதுட்டாள்.”

     “யாரு கோலம்.”

     “வாடாப்பூ...”

     “அவளுக்கு என்ன கேடு?”

     பழனிச்சாமி விளக்கினார்.

     “எனக்கு இப்பதான் வயிறு குளிருது. பாக்கியம் சோறு போடு. எப்பா ஒங்ககிட்டே சாப்புட்டுக்கிட்டே பேசலாமா?”

     “இதுல என்னண்ணாச்சி இருக்கு... ஏன் சாப்புடல?”

     “நம்ம வாடாப்பூ, பீடிக்கடை தகராறுல செம்பட்டையான் பொண்ணுவ பக்கம் சேர்ந்து முருகன் கோயில் பக்கத்துல ரஞ்சிதம் ஏற்பாட்ல இன்னொரு கம்பெனி பீடி சுத்தியிருக்காள். இது தெரிஞ்சதும் இந்தப் பய மாயாண்டி, பெத்த மகளை நாலு பேரு முன்னால வாங்கு வாங்குன்னு வாங்கிட்டான். நானும் அப்போ இருந்தேன். ஆனால் புத்தியக் கடன் கொடுத்துட்டேன். அந்தப் பய மவள் என்னடான்னா இந்த ரெண்டு நாளா குப்புறப் படுத்துக்கிட்டு அன்னம் தண்ணி இல்லாம கிடந்திருக்காள். இன்னைக்கு காலையிலதான் எனக்கு விஷயம் தெரியும். கேள்விப்பட்டதுல இருந்து மனசு கேக்கல. நானும் சாப்புடல. அதிகநேரம் கழிச்சுதான், பாக்கியத்துக்கிட்ட சொன்னேன். இப்போ கோலவடிவு அவளோட உண்ணாவிரதத்தை முடிச்சு வச்சுட்டு வந்திருக்காள்.”

     “பயமவள் சரியான அமுக்கடி கள்ளி...”

     “கள்ளித்தனம் இல்ல. இதுக்குப் பேருதான் வீரம். வாடாப்பூ தனிப் பீடி சுத்தறது எனக்குப் பிடிக்கல. அதேசமயம் அவள் தனிப்பிறவின்னு பெருமைப்படாமலும் இருக்க முடியல.”

     “காலச் சுத்துன பாம்பு மாதிரி. இந்த செம்பட்டையான் பயலுவ பிடிவாதத்துல ஊரே குட்டிச் சுவராப் போயிட்டு. இதுக்குல்லாம் இந்தப் பய துளசிங்கம்தான் காரணம். செறுக்கி மவனோட ஒத்தக் காலையோ, கையையோ எடுத்துட்டா சரியாப் போயிடும்.”

     கோலவடிவு, நாட்டு வக்கீல் நாராயணனிடம் ஏதோ சொல்லப் போவதுபோல் உதடுகளைக் குவித்தாள். “நீங்க நெனக்கது மாதிரி அவரு இல்லியாக்கும். அப்பா முன்னால சிகரெட் பிடிக்காதவராக்கும். அம்மன் கொடையை தள்ளி வச்சுக்கிட சம்மதிச்சுட்டார். கொடைக்கு இன்னும் முழுசா ரெண்டு நாளுதான் இருக்குது. இன்னும் தேதி வரலியே. வரும்... வரும்... அவரு எல்லா முரடனுவளயும் சமாதானப் படுத்தனுமுல்லா. இதோ சித்தப்பாவும் பீடி ஏசெண்டும் சிரிச்சுட்டு வாராவ. அநேகமா துளசிங்கம் மச்சான் சுடலை மாடன் விசேஷத்தை தள்ளி வச்சிருப்பாரு. இவங்க அதைச் சொல்ல வாராங்க. அப்பாடா, ஊர்த்தகராறு ஒழிஞ்சது. இனுமே, எல்லாமே நல்லபடியாய் நடக்கும். பழச மறக்கணுமுன்னா புதுச நெனைக்கணும். புதுச நெனக்கணுமுன்னா பழச மறக்கணும். எம்மாடி நான் கூட கூட்டத்துல பேசலாம் போலுக்கே. யார் கை தட்டலன்னாலும் துளசிங்கம் மச்சானும், அலங்காரி அத்தையும் தட்டுவாவ.”

     பீடி ஏசெண்டும், பழனிச்சாமியின் சொந்தத் தம்பி அருணாசலமும் உள்ளே வந்து உட்கார்ந்தார்கள். தம்பிக்காரர், சொக்காரர்களை நோட்டமிட்டபடியே பழனிச்சாமியிடம் பேசினார்.

     “எண்ணாச்சி, ஒன்கிட்டே நாங்க ரெண்டு பேரும் தனியா பேசனும். கோலவடிவு கல்யாண விஷயமாய்.”

     குள்ளக்கத்திரிக்காய் ராமசாமி, மற்றவர்கள் சார்பில் பேசினார்.

     “அப்போ, நாங்க வர்றோம்.”

     பழனிச்சாமி பதறியடித்துப் பேசினார். “உட்காருங்கப்பா. அருணாசலம், நீ ஏன் இப்படி புத்திய அடிக்கடி கடன் கொடுக்கே.? இவங்கெல்லாம் என்கிட்ட அவங்க குடும்ப விஷயத்தைச் சொல்லும்போது நம்ம குடும்ப விஷயத்த அவங்கள துரத்திட்டா பேசணும்...? இவங்களுக்குத் தெரியாத குடும்ப விஷயம் அப்படி என்ன இருக்கு. எதுன்னாலும் இங்கேயே சொல்லு.”

     “சொல்லுதேன், சொல்லுதேன். ஏழா கோலவடிவு நீ உள்ள போ.”

     அருணாசலம், அண்ணன் மகள் உள்ளே போகிறாளா என்று உற்றுப் பார்த்தபோது, அவள் கதவுக்குள் ‘அஞ்ஞான வாசம்’ செய்து காதுகளை உஷராக்கிக் கொண்டாள். அருணாசலம் பீடிகை போடாமலே பேசினார்.

     “நம்ம ராமய்யா மச்சான் மவனுக்கு - அக்கினி ராசாவுக்கு கோலவடிவக் கேட்டு ஆளு மேல ஆளாய் சொல்லி அனுப்பி அலுத்துட்டாராம். இப்ப இவர கையோட கேட்டுட்டு வரும்படியாய் சொல்லி அனுப்பி இருக்கார் ராமய்யா மச்சான்.”

     “ஆவணிலதான் யோசிக்கலாமுன்னு சொல்லியாச்சே.”

     ஏசெண்டு பதிலளித்தான்.

     “அப்படில்ல மச்சான். நாங்க அந்த கோவில் விவகாரத்துல, ரத்த சம்பந்தத்துல ஒங்கள சப்போட்டு செய்யுறோம். ஆனால் ஊர்ல, கோலவடிவ பெண்ணெடுக்க அப்டிச் செய்யுதா ஒரு பேச்சு. இந்தப் பேச்ச ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்.”

     “ஊர் வாய மூட உலமூடியா, இருக்குது மாப்பிள்ள.”

     “தயவு செஞ்சி குறையும் கேளுங்க மச்சான். கோலவடிவுக்கும் அக்கினி ராசாவுக்கும் கல்யாணமுன்னு இப்பவே ஒரு முடிவெடுக்கணும். இல்லன்னா, இல்லன்னு தெரியப்படுத்தணும். முடிவு எப்டின்னாலும் நாங்க ஒங்க பக்கந்தான். செம்பட்டையான் குடும்பத்துக் காசிராஜன் மகள சொல்லி அனுப்புனாக. காசிராஜன் மகள முடிவு பண்ணிட்ட பிறகும் ஒங்களையே சப்போட்டு செய்தால் ஒங்களுக்கு பெரும, எங்களுக்கும் பெரும. ஆனால் ராமய்யா அண்ணாச்சிக்கு மனசு கேக்கல. பழனிச்சாமி மச்சான் வாயால முடியாதுன்னு வந்தால், காசிராஜனுக்கு முடியுமுன்னு சொல்லி அனுப்பலாமுன்னு நெனைக்கார். என்னா அனாவசியமாய் ஒரு பொண்ணு பெயரும், பையன் பெயரும் இதுக்கு மேல அடிபடப்படாது பாரும்.”

     “ஓங்க கூடப் பிறந்த தம்பி நான். ஓங்க மதிப்பு, ஒரு இம்மியளவு குறைஞ்சாக்கூட உயிர விடுறவன் நான். அப்படிப்பட்ட நான் சொல்லுதேன், ஏசெண்டு மாப்பிள்ள இப்போ ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும், எந்தப் பக்கம் பொண்ணு எடுக்கமோ அந்தப் பக்கம் தானா சாயுறோம். நம்ம குடும்பத்துல பாதிப்பேரு மெட்ராஸ் போயிட்டதால இப்போ நமக்கு ஆள் பலம் இல்ல. யானை சகதில மாட்டிக்கிட்டா தவளைகூட கிண்டல் பண்ணுமாம். நாம நாட்டாமையாய் இருக்கையில நமக்கு கப்பம் கட்டுன இந்த செம்பட்டையான் பயலுவ, நம்மளயே எதுக்குறாமுன்னா, நம்ம குடும்பத்து பயலுவ மெட்ராஸ்லயே இருந்துட்டதுதான் காரணம். நம்ம பாட்டி பிறந்த குடும்பம் காத்துக் கருப்பன் குடும்பம். நம்ம அத்தைய கட்டிக்கிட்ட குடும்பம். பழைய உறவு போயிடப்படாது. அதனால...”

     அருணாசலம் விட்டதை ராமசுப்பு தொடர்ந்தார்.

     “அக்கினி ராசாவும் நல்ல பையன். நல்ல குடும்பம். திரண்ட சொத்து இருக்கு. அவங்க குடும்பம் இந்த உறவால, அடுத்த தலைமுறையில கூட நம் பக்கம் நிற்கும். இந்த சங்கதிய கேள்விப்பட்டாலே செம்பட்டையான் செத்துப் போவான்.”

     “தப்பா நினைக்காதிய மச்சான். இப்பவே ஒரு முடிவு சொல்லிட்டா நல்லது.”

     பழனிச்சாமிக்கு அவர்கள் சொல்வதன் தாத்பரியம் புரிந்தது. ஆனாலும் அக்கம் பக்கம் பார்த்தார். எவரும் முனங்கவில்லை. பாக்கியத்தைப் பார்த்தார். அவள் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பழனிச்சாமி, சிறிது பதட்டப்பட்டே முடிவளித்தார்.

     “சரி மாப்புள்ள. என் மகள், கோலவடிவுதான் பொண்ணு. ராமய்யா மச்சான் மகன் அக்கினி ராசாதான் மாப்பிள்ள. ஆவணில கைமாத்திக்கலாம்.”

     “நீங்க பொண்ணு கொடுத்தா போதும். நகைநட்டு ரெண்டாம் பட்சம்.”

     “அவளுக்கு நகைபோட்டு பாக்கது எங்களுக்கும் பெருமதான். சரி என்னை கொஞ்சம் கண்மூட விடுதியளா?”