உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
22 ஊருக்கு வெளியே உள்ள முருகன் கோவில் முன்பக்கம் தங்கரளி மரங்கள், அந்தக் காலத்துப் பெண்கள் காதில் போடும் பாம்படங்களாக அவற்றில் காய்கள் தொங்கின. பூவரசமரம், பழுத்த இலையோடும், பச்சை இலையோடும் ஒலிபெருக்கி மாதிரியான பூக்களோடும் மின்னின. இவற்றிற்கு மத்தியில் உள்ள வாகை மரத்தின் அடிவாரத்தைச் சுற்றி, இரண்டடி உயரத்தில் சிமெண்ட் தளம் கட்டப்பட்டிருந்தது. வழிப்போக்கர்களும், வழியைத் தொலைத்தவர்களும் உட்காருவதற்காகச் சட்டாம்பட்டி ஊராட்சி மன்றம் தனது அக்கிரமங்களுக்கு பிராயச் சித்தமாக கட்டிய சிமெண்ட் திண்ணை. அதில், ரஞ்சிதம் உட்படப் பல பெண்கள் உட்கார்ந்து பீடி வேலையில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தார்கள். சில பெண்கள் மரங்களில் அடிவாரங்களில் சாய்ந்தபடி கைகளை இயக்கினார்கள். இந்தக் கூட்டத்தில், ஊர் வம்பில் தலையிடாத 'காரை வீட்டுக்கார பெண்களும் இருந்தார்கள். அந்தக் காலத்தில் ஓலை போடாமல் ஓடு போட்டு வீடுகள் கட்டிய குடும்பம், எண்ணிக்கையோ இருபது, இருப்பதோ லட்சங்கள். இப்போது மாடி மேல் மாடி கட்டிடங்கள் உருவாகி விட்டாலும், காரை வீட்டுக்காரன் பட்டம் என்று இவர்களைத்தான் சேரும் என்று இவர்களே சொல்லிக் கொண்டார்கள். ஊரும் சும்மா ஒரு பேச்சுக்குப் பேசும். ஒருத்தி அலுப்புத் தீர முதுகை வளைத்தபடியே பேசினாள். “எப்பாடா... நம்ம ரஞ்சிதம் புண்ணியத்துல, நம்ம பொழப்பு நல்லாவே ஓடுது. குட்டாம்பட்டில இப்படி ஒரு கூட்டுறவு சங்கம் இருக்க தெரியாமப் போச்சு. பாரு. பழைய இலய தரல... எடையில குளோறுபிகேஷன் செய்யல... பீடியக் கழிக்கல... வாரத்துக்கு முப்பது ரூபா அதிகமா வரும்...” “ஏழா... இதுதான் சாக்குன்னு இலய மோசமா வெட்டாத... தூளை கொறவா வைக்காத...” “அது ஒன் புத்தி. ஆமா ரஞ்சிதம் நாம எப்போ கூட்டுறவு சங்கத்தை வைக்கிறது?” ரஞ்சிதம் பீடிகளைக் கையில் சுழலவிட்டபடியே, பேசியவளைப் பார்க்காமலே பதிலளித்தாள். “மொதல்ல. இந்த ஊருக்கு ரத்தக் கொதிப்பு மாதிரி வந்திருக்கிற கோவில் கொடை முடியட்டும். நம்ம கண்ணாடிக்காரர் ஏற்கனவே பல அதிகாரிங்ககிட்ட பேசிட்டு வாரார். ஒரு மாதத்துல முடிஞ்சுடும்.” “இந்த பால்பாண்டி பீடிக்கடை போண்டியாகணும்... அவன் பழையபடியும் மாட்டுத் தரகுக்குப் போகணும்...” “இப்போவாவது ஒற்றுமையோட அவசியத்தை புரிஞ்சுக் கிட்டிங்களா. சில பழமொழிகளோட அர்த்தம் அதன்படி நடக்கும்போதுதான் விஸ்வரூபமாய் தெரியும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்கிறது கோடான கோடி பேருக்குத் தெரியும். ஆனால் நமக்கு புரிஞ்சது மாதிரி எத்தன பேருக்குப் புரியும். நாம எல்லாரும் ஒருவர்னும், ஒருவரே எல்லாரும்னும் நினைக்கும் போது மனசுல ஒரு தெம்பு வருது பாருங்க, அது எந்த விலைக்கும் கிடைக்காது. இயற்கையான காத்து மாதிரி வெளிச்சம் மாதிரி, இந்த ஒற்றுமை உணர்வு இயற்கையா இருக்கது. மனுஷன்தான் இதை செயற்கையாக்கிட்டான்.” “பேசு ரஞ்சிதம், ஏன் பேச்ச நிறுத்திட்ட நீ பேசிக்கிட்டே இரு. ஒனக்கும் சேர்த்து நாங்க பீடி சுத்துறோம். சினிமாக்காரனுவளப் பத்திப் பேசிப் பேசியே எவ்வளவு நாளா வீணாக்கிட்டோம் பாரு. ஏன் பேசமாட்டக்க...” பேசியவள் பேசாதவளைப் பார்த்தாள். பிறகு எல்லாப் பெண்களும் ரஞ்சிதத்தைப் பார்க்க, அவள் தொலை தூரத்தைப் பார்த்தாள். அங்கே வாடாப்பூ வந்து கொண்டிருந்தாள். தலையிலே கஞ்சிக் கலயம், தோளிலே மண்வெட்டி, கையிலே கதிரறுவாள், அழுக்கடைந்த புடவை, புழுதிபட்ட தலைமுடி. வாடாப்பூ, அவர்கள் பக்கம் வந்து நின்று, உதடுகளைக் கடித்தாள். முகத்தைத் துடைப்பது போல் கண்ணிரைத் துடைத்துக் கன்னங்களைக் கழுவிக் கொண்டாள். ரஞ்சிதம் எழுந்த போய் அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். இதர பெண்களும் அவளைச் சுற்றி நின்று கொள்ள, ரஞ்சிதம் தழுதழுத்த குரலில் பேசினாள். “நீ நெசமாவே புரட்சிக்காரி வாடாப்பூ. எங்களுக்காவ அப்பாவி அப்பாவே பாவியாயிடும் படியாய் அவர்கிட்டே அடிபட்டிருக்கே. எங்களுக்காவ சிலுவ சுமந்திருக்கே. ஏசெண்டு எவ்வளவோ கெஞ்சியும் என் தோழிகள் இல்லாம சுத்தமாட்டேன்னு சொல்லிருக்கே. இதுக்காவ கத்தரிக்குப் பதிலா மண்வெட்டிய தூக்கிட்டே. ஒன் தோளுல தொங்குற மண்வெட்டியும், கையில இருக்கிற கதிரறுவாளும் ஒரு நாளைக்குக் கேள்வி கேட்கத்தான் போகுது. அப்போ கேள்விக்கான பதிலும் தானா வரும். ஒனக்காக ஒரு இடம் எப்பவும் தயாராய் இருக்கு வாடாப்பூ. நான் அமைக்கப் போற சங்கத்துல முதல் பேரே ஒன் பேர்தான். வாடாப்பூ.” வாடாப்பூ, அந்தப் பேருக்கு உரியவளாய்ச் சிரித்தாள். பிறகு ஏதோ பேசப் போனாள். அன்பிற்கு அடைக்கும் தாழில்லை என்று யார் சொன்னது? அவள் அன்புப் பிரவாகத்தில் வெளிப்பட்டு வார்த்தைகளுக்கு அழுகை தாழிட்டது, கண்ணிர் போட்டியிட்டது. அவர்களைப் பார்த்துச் சோகச் சிரிப்போடு, சுந்தரப் பார்வையோடு அவர்கள் கண்களுக்கு சின்னச் சின்ன உருவமாகி நடந்தபோது... ரஞ்சிதம், அவள் பின்னால் நடந்தாள். “ஒரு நொடி நில்லு” என்று கூவியபடியே வாடாப்பூவைப் பின் தொடர்ந்தாள். கோல்வடிவு விவகாரத்தை இவள் மூலமாக, தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியப்படுத்தியாக வேண்டும். திருமலையிடம் பட்ட அவமானத்தைக் காரணமாக்கி, கோலவடிவின் மானம் போவதற்கு மெளன சம்மதம் கொடுக்கலாகாது. ஆனாலும் இந்தத் திருமலை என்ன பேச்சு பேசிவிட்டான். உரிமையோடு மோட்டார் பைக் முன்னால் போய் நின்றால், அதாலயே மோதுவது மாதிரி வண்டியை உறும வைத்தான். கோலவடிவு விஷயமாய் கோவிலுக்குள்ள போய் பேசணுமுன்னு எப்டி பேசிட்டான். கோலவடிவப் பத்தி பேச எனக்கு தகுதி இல்லியாம். அவள், என்ன மாதிரி கண்டவன்கிட்ட பல்லைக் காட்ட மாட்டாளாம். நான் அவன்கிட்ட, “என்னை கட்டிக்க சம்மதமான்னு” வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல் கேட்டது மாதிரி எவன் கிட்டயும் கேட்க மாட்டாளாம். நான் செம்பட்டையான் குடும்பத்து ஏசெண்டாம். துளசிங்கத்துக்கும் எனக்கும் ஏதோ இருக்கணுமாம். இல்லாட்டா செம்பட்டையான் பொண்ணுவளுக்காவ ஏசெண்டுகிட்ட சண்டைக்குப் போயிருக்க மாட்டேனாம். அடேயப்பா... இவ்வளவு பேச்சுக் கேட்ட பிறகும், இவன் தங்கச்சிக்காவ யோசிக்கணுமா? இது தேவையா? யோசிக்கனுந்தான், தேவைதான். ‘நான் சொன்னது மாதிரி நடந்துட்டு பாருன்னு’ நம்மையே நாம பெருமைப்படுத்தி ஒரு பொண்ணு சீரழியுறத பார்க்கதவிட, நம்மையே சிறுமப்படுத்தி, ஒருத்தியக் காப்பாத்தறது நல்லது. சரி, அக்னி ராசாவுக்கு அவளத்தான் முடிவு கட்டியாச்சே. இனிமேல் கோலவடிவு மாறிடுவாள். எப்டிச் சொல்ல முடியும்? நேத்து பகலுல அலங்காரி கிட்ட பேசிட்டுப் போனாள். இந்த வாடாப்பூ மூலம் அவளுக்கு புத்தி சொல்லணும். எங்கிட்டயாவது கொஞ்சம் பேசச் சொல்லணும். அவளுக்கு எது நல்லதோ அது கிடைக்க ஒத்தாசை செய்யத் தயார்னு உறுதி சொல்லி அனுப்பணும். துளசிங்கம் நல்லவன் இல்லன்னு நயமாச் சொல்லணும் ரஞ்சிதம், வேகமாக நடந்தாள். எதிரே அவளை மோதுவது போல் பாய்ந்த வேனில் இருந்து தப்பிப் பிழைக்க துள்ளிக் குதித்தாள். அந்த வாகனத்தை கோபமாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, பின்னர் கொண்ட குறிக்கோளைக் கருதி, வாடாப்பூவை நோக்கி எட்டி நடந்தபோது... பீடி சுற்றும் பெண்கள் கூக்குரல் கேட்டது. மெள்ளப் போய்க் கொண்டிருந்த வேன் மீது, அந்தப் பெண்கள் கற்களையும், கட்டிகளையும் எடுத்து எறிந்தார்கள். சில பெண்கள், அந்த வேனுக்குப் பின்னால் ஓடினார்கள். சத்தம் கேட்டுத் திரும்பிய ரஞ்சிதம், அந்தப் பிரச்சினை அவசரப் பிரச்சினை என்பதால், வாடாப்பூவைக் கையாட்டி போகச் சொல்லிவிட்டு, முருகன் கோவில் முன்னால் ஒடி வந்தாள். அந்த வேனோ, ஒரு மூலையில் திரும்பியது. அதன் பின்னால் ஒடிய பெண்கள் மூச்சிறைக்க ஓடி வந்தார்கள். “பாரு ரஞ்சிதம், இந்த மெட்ராஸ் பயலுவள. கிணத்துல குளிச்சிட்டு வேனுல போற பயலுவ சும்மா போக வேண்டியதுதான. எங்களப் பார்த்து கையாட்டிட்டுப் போறாங்க.” “ஒருவேளை சிநேகிதமாய்...” “அப்படி என்ன சினேகிதம் இவனுவ கூட. அப்டி இருந்தால் அதோ கதிரறுக்கப் போவுதே சேரி சனங்க. ஆம்புளைங்க அவங்களப் பார்த்தும் கையாட்டி இருக்கணுமுல்லா...?” “இதுல்லாம் திமுறு ரஞ்சிதம். நாம என்னவோ அவங்களைப் பார்த்து மயங்குறதா தூம பயலுவளுக்கு ஒரு நெனப்பு.” “நீ சொல்றதும் சரிதான். இப்போ வார சினிமாப்படங்கள்லயும் எவனாவது ஒரு பயல் கண்ணுல கண்ணாடி மாட்டி கழுத்துல காமிராவ தொங்கப் போட்டு ஜீப்புலயோ, மோட்டார் பைக்குலயோ வந்தா. எந்த கிராமத்துப் பொண்ணயும் இழுத்துட்டுப் போயிடலாமுன்னு ஒரு எண்ணத்தை ஏற்படுத்துறாங்க. இவனுவளும் சினிமாக்காரங்களாம். நிழல நிசமா நினைக்கிற பயல்க.” “எங்க துளசிங்கத்துக்கு இந்தப் புத்தி ஆகாது. இந்தக் காவாலி பயலுவள எதுக்காவ கொண்டு வரணும்.” “சரி. பொறுத்திருந்து பார்ப்போம். இப்போ குட்டம்பட்டில பீடியைப் போட்டுட்டு வருவோம்.” “ரஞ்சிதம் சொல்லிட்டாள்லா. இன்னுமா கையில கல்ல தூக்கிட்டு நிக்கிய, பைத்தியமுன்னு நெனப்பாவ.” “மொதல்ல ஒன் கையில இருக்க கல்ல கீழ போடு பைத்தியம்.” எல்லாப் பெண்களும் பீடித்தட்டுக்களை எடுத்து கொண்டார்கள். அவற்றில் பீடிகள் வண்டல் வண்டலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தட்டுகள் அந்த அடுக்கால் ஆயிரம் கண்ணுடைய அதிசயத் தட்டுக்களாகத் தோன்றின. குட்டாம் பட்டிக்குப் போகும் வழியில் தார்ரோடு பக்கமாக நடந்து வந்தார்கள். அதற்குக் கிழக்குப் பக்கம் என்ன தகராறு? என்ன கூட்டம்? எலி டாக்டர் எதுக்காவ இங்க வந்தார். “ஏடி கொஞ்சம் நில்லுங்க. ரஞ்சிதம் நீயும் நில்லு. என்னான்னு பார்ப்போம்.” காத்துக் கருப்பன்களில் அக்னி ராசாவின் தந்தை ராமய்யாவுக்கு அடுத்தபடியான வசதியுள்ளவர் முத்துப்பாண்டி. ஆகையால் அண்ணாச்சி ராமய்யாவுக்குப் போட்டியாக ராமய்யாவின் தம்பி பற்குணத்தைப் பார்த்துக் கையாட்டிப் பேசினார். “எலி டாக்டர் மச்சான் மெனக்கெட்டு நம்ம வீட்டு வாசலுல வந்து கெஞ்சுகிறார். நம்ம மாரியம்மன் கோயில் சுடலைமாடன் உத்தரவு கேட்கும்படியாய். உத்தரவு போடப் போறதாய் சொல்லுதார். இது நமக்குப் பெருமைதான?” “புராணத்தை தலைகீழாய் மாத்தப்படாது பாரு. எலி டாக்டர் மச்சான் சூதோட சொல்லுறதை புரிஞ்சுக்கணும்.” “அப்டிப் பார்த்தால் யாரு சூதில்லாதவிய...? நீ மட்டும் ஒங்க அண்ணாச்சி மவனுக்கு கோலவடிவ காதும் காதும் வச்சாப் போல நிச்சயம் செய்யணும். அதுக்காவ எங்களை பயித்தியக்காரனா ஆக்கணுமோ...?” “முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடாத.” “ஒனக்கு வேணும்போது சொக்காரன், வேண்டாத போது பங்காளி. கோலவடிவு அக்னி ராசாவுக்கு முடிக்கலாமான்னு சொக்காரன் கிட்ட கேட்டியா.” “சரி. இப்போ கேட்கேன். ஒன் சொல்லுக்கு கட்டுப்படுறேன்.” “இப்ப முக்கியம் கோலவடிவு இல்ல. மாரியம்மன் தான். சுடலைமாடன் இங்க வரப் போறார்.” “வந்தா காலை ஒடிப்பேன்.” “ஒடிக்கிற கைய வெட்டுவேன்.” எலி டாக்டர் ரசிக்கும்படியாய் காத்துக் கருப்பன்கள் கட்சி பிரிந்து சண்டை போடப் போனார்கள். அப்போது பீடிப் பெண்களிடம் ஒரு கூச்சல். எல்லோரும் சண்டையை விட்டுவிட்டு அங்கே ஓடினார்கள். ‘காரை வீட்டுக்காரி’ பீடிப்பெண் ஒருத்தி கத்த, மற்றப் பெண்கள் ‘மாஸ்டர்கள்’ வந்த வேனை, கைகோத்து, மறித்து நிறுத்தினார்கள். “இந்தப் பயலுவ அப்பவும் எங்களப் பார்த்து கையாட்டுறானுவ. இப்பவும் கையாட்டுறானுவ. எச்சிக்கல பயலுவ. என்ன நெனச்சு கிட்டாங்கன்னு கேளுங்க. சட்டாம்பட்டி பொண்ணுங்கன்னா இளக்காரமா. அவங்கள என்னன்னு கேளுங்கய்யா.” இதற்குள் வேனைச் சுற்றி கூட்டம் மொய்த்தது. திருமலையும் கூட்டத்தில் ஒருத்தன். அதுதான் சாக்கு என்று வேனின் முன் சக்கரங்களில் காற்றைப் பிடுங்கி விட்டான். ஒருத்தர், வேனுக்கு உள்ளே ஒடுங்கி இருந்தவன்களைப் பார்த்து அதட்டினார். காரைவீட்டுக் குடும்பத்தின் அண்ணாவி... “இறங்குங்கல. எங்க பொண்ணுங்களப் பத்தி என்னல நெனச்சிய” “இவங்க ஊரையே அடிக்க வந்த பயலுவப்பா. நம்ம பொண்ணுவள கையாட்டி நம்மள வம்புச் சண்டைக்கு கூப்புடுறாவனுவ. ஏல செறுக்கி மவனனுவள... இறங்குறியளா, இறக்கணுமா.” “இதுக்குல்லாம் காரணம். இந்த துளசிங்கப் பயல். அவன இழுத்துக் கிடத்தணும். மல்லாக்கப் போட்டு வயித்துல மிதிக்கணும். டேய், ஒரு அஞ்சாறு பேரு போயி. அந்தப் பயல எங்க இருந்தாலும் இழுத்துட்டு வாங்கடா. நம்ம ஊரு பொண்ணுங்க கையப் பிடிச்சு இழுக்கலாமுன்னு அந்தப் பயலே இந்தப் பயலுவளகுக்கு சொல்லிக் கொடுத்திருப்பான். ஏய். சீக்கிரமாய் போய் இழுத்துட்டு வாங்கல.” |