உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
3 அந்த வீடு வெளியே பார்ப்பதற்கு ‘அப்பாவி’ மாதிரி தெரிந்தாலும் உள்ளே அசகாயசூரத்தனமாய் இருக்கும். இரண்டு பக்கமும் வியாபித்த வெளித் திண்ணைகளைத் தாண்டி வாசலைத் தாண்டிப் போனால் பெரிய முற்றம், ஒரு பக்கம் சைக்கிள்களும் மோட்டார் பைக்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் ஒடுங்கிய ஒரு பாதை வழியாகச் சென்று ஒரு கதவை இழுத்தாலோ திறந்தாலோ இன்னொரு மிகப்பெரிய ஓட்டுக் கொட்டகை, அதில் பத்து பதினைந்து பால் மாடுகள். அவற்றில் நான்கு ஜெர்சிகள். கொட்டகைக்கு அருகே சாண எரிவாயு கிடங்கு. அவற்றைப் பயன்படுத்தி மின்னும் மங்கலான மின்விளக்குகள். பழனிச்சாமி, வீட்டின் விசாலமான வராண்டாவில் ஒரு தேக்குக் கட்டிலில் எந்தப் புராண நூலையோ படித்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி பாக்கியம், அவருக்கு எதிரே தரையில் உட்காந்து, எதையோ புடைத்துக் கொண்டிருந்தாள். வெளியே இருந்து சந்திராவும், கோலவடிவும் வந்து உள்ளறைக்குள் போனார்கள். சிறிது நேரத்தில் இருவரும் வெளியே வந்து முற்றத்தில் ஒரு பாயைப் போட்டு அமர்ந்தார்கள்... சந்திரா, சுவரில் சாய்ந்தபடியே பீடி சுற்றும் கலையைக் கோலவடிவிற்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ‘பழுப்பு இலய... எடுக்கப்படாது... வெட்டும்போது கத்தரிய ஆட்டப்படாது... சுருட்டும்போது... அடி பெரிசாயும்... நுனி சிறிதாயும் இருக்கணும்... அப்டில்ல... இப்டி...’ மத்தியான வேளை. வைரப்பட்ட உடம்பில் ‘தங்கப்பட்ட’ கழுத்தைச் சாய்த்து வைத்த பழனிச்சாமி, கட்டிலின் பக்கம் போனார். அறுபது வயதுக்காரர். அடாவடியில்லாத பார்வை, வயிறும் மார்பும் ஒரே மாதிரி இருந்தன. பற்கள் தடித்திருந்தாலும், வெள்ளை வெள்ளையாக மின்னின. அணில் வால் மாதிரியான லேசாய் வெள்ளைப்பட்ட கறுப்பு மீசை... மாநிற மேனி... உருண்டு திரண்ட கண்கள். மொத்தத்தில், அவரைப் பார்த்தால், ஒரு பயபக்தி ஏற்படும். திடீரென்று நான்கைந்து பேர் திபுதிபு என்று வந்தார்கள். ஒருவர் மட்டும் கட்டிலில் உட்கார்ந்தார். இன்னொருவர் அதில் உட்காரப் போனார், பிறகு என்ன நினைத்தாரோ, அந்தக் கட்டிலுக்கு எதிரே கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தார். எதிர் நாற்காலியில் உட்கார்ந்திருந்த ‘குள்ளக் கத்தரிக்காய்’ ராமசாமி பீடிகையோடு பேசினார். “இந்தச் சின்னப்பய மக்கள் சின்னத்தனமாய் போயிட்டாங்க... வரவர மட்டு மரியாதி இல்லாமப் போச்சு...” “மட்டு மரியாதி இல்லாட்டா போட்டும்... பெரியவிய சொல்லுறதக் கேட்கணுமுல்லா.” “மட்டு மரியாதி இருந்தா தானே... பெரியவய சொல்லுக்கு மதிப்பு கொடுக்கணும் என்கிற நெனப்பு வரும்...” பழனிச்சாமி, அவர்களிடம் வாய்விட்டுக் கேட்காமல் கண் விட்டுப் பார்த்தார். ‘குள்ளக் கத்திரிக்காய்’ ராமசாமி, காளை மாடு வாலை ஆட்டுவது மாதிரி தலையை ஆட்டிக் கொண்டே சொன்னார். “நம்ம காளியம்மன் கோவிலயும் , பேச்சியம்மன் கோயிலாக்கணுமுன்னு பாக்காங்க... பக்கிப் பயலுவ...” கட்டிலில் இருந்த பழனிச்சாமியின் சின்னம்மா மகன் அருணாசலம், ராமசாமியை விரட்டினார். “வெத்திலயத் துப்பிட்டு... விளக்கமாச் சொல்லேமில... மாடு புல்லை சுவைக்கது மாதிரி வெத்திலய இப்டியா திங்கது... ஆதியோட அந்தமாச் சொல்லு...” “சொல்லுதேன். பழனிச்சாமி அண்ணாச்சி... கோபப்படாமக் கேக்கணும்... நம்ம குடும்பத்துச் சின்னப்பய மொவனுவ, இந்த ஆடில காளியாத்தாவுக்கு அம்மன் கொடை கொடுக்கயில... டெக்குல சினிமா... நான் சொல்லல... சின்னப்பய மவனுவதான் டெக்குல சினிமாப் படம் போடணுமுன்னு சொல்லுதாங்க... ‘நாம பரம்பரை பரம்பரையாய் அம்மனை பயபக்தியோட கும்புடுறவங்கடா... வீடியோ சினிமா வேண்டவே வேண்டா’ன்னு சொன்னேன். கேக்க மாட்டேன்னு ஒத்தக் காலுலயே நிக்காங்க... காலம் கலிகாலமாப் போச்சு.” பழனிச்சாமி, நிமிர்ந்து உட்கார்ந்தார். கட்டிலில் இருந்து எழுந்து முற்றத்திற்குப் போய் ஒரு ஓரமாய் காறித் துப்பிட்டுக் கட்டிலுக்கு வந்தார். நிதானமாகக் கேட்டார். “அப்புறம் என்ன கேட்டாங்க... ரிக்கார்ட் டான்ஸ்... கேட்டிருப்பாங்களே... வில்லுலயும், பொம்புள வில்லு வேணுமுன்னு சொல்லியிருப்பாங்களே... எவளாவது சினிமா நடிகை கோவில் கொடியை ஏத்தி வைக்கணுமுன்னும் சொல்லியிருப்பாங்களே...” “அண்ணாச்சி நேரில கேட்டது மாதிரியே சொல்றியளே... அப்படியும் கேட்டாங்கதான்.” பழனிச்சாமி மனைவி பாக்கியம், முறத்தைக் கீழே வைத்துவிட்டு, ராமசாமியைப் பார்த்து சிரித்தபடியே கேட்டாள். “ஏய் கொழுந்தா... ஒங்க அண்ணாச்சி குணம் தெரிஞ்சும் நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற பாரு... அவிய இழுத்து இழுத்து கேட்கிறதுல இருந்தே ஒன்னை எடக்கு மடக்கில சிக்க வைக்கது தெரியல...” “நீ செத்தே சும்மா இரு பாக்கியம்... டேய் ராமசாமி... எந்த செறுக்கி மகன்ல... இப்படிக் கேட்டது...? போகிற போக்கைப் பார்த்தால் அம்மனையே வீடியோ படத்துல நடிக்கச் சொல்லுவாங்க போலுக்கு... நீ அவனுவளுக்கு என்ன பதில் சொன்ன...” “ஒங்களக் கேட்டுச் சொல்றேன்னு சொன்னேன்...” “எல்லாமே என்னக் கேட்டுத்தான் செய்யுறியோ... இவளும் நம்ம பொம்பளப் பிள்ளியளும் இல்லாட்டா ஒன்ன நல்லாக் கேட்பேன்...” “சும்மாக் கிடங்க... ஒங்கள மீறி போவாங்களா... எப்பா மாருங்களா... அவிச்ச மொச்சக் கொட்டை வேணுமா... தாளிச்ச ஏழலைக் கிழங்கு வேணுமா...” “ரெண்டையும் கொண்டு வாங்களேன்... மயினி...” பாக்கியம் வீட்டுக்குள் போய்விட்டாள். கட்டிலில் உட்கார்ந்திருந்த அருணாசலம் கேட்டார். “நீங்க என்ன அண்ணாச்சி சொல்லுறிய...” “ஒன்னை தோல்வாயன்னு ஊர்ல சொல்லுறது சரியா இருக்குடா... இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு, ஒங்களுக்கே தெரியவேண்டாம்... அடிமுடி தெரியாத அம்மன் நம்ம அம்மன்... இந்த சட்டாம்பட்டி தோன்றதுக்கு முன்னாலயே இருக்கிற அம்மன் நம்ம அம்மன்... கண்கண்ட தெய்வம்... கூப்பிட்ட குரலுக்கு பூவப் போட்டோ கெளளி மூலமோ குரல் கொடுக்கற தாய். அந்தத் தாய அவமானப்படுத்தறது மாதிரி வீடியோ படமுன்னும், ரிக்கார்ட் டான்சும் போடணுமுன்னா என்னடா அர்த்தம்... இதைவிட அம்மன் கோவில இழுத்து மூடலாம்...” “செம்பட்டையாம் குடும்பத்து பயலுவ... வீடியோ படம் போடப் போறாங்களாம்... டான்ஸ்காரியக் கூட்டி வரப் போறாங்களாம்... நாம மட்டும் சும்மா இருக்காலாமான்னு நம்ம குடும்பத்துச் சின்னப்பய மவனுவ...” “செம்பட்டையானுவளும், நாம் கரும்பட்டையானும் ஒண்ணாடா... அவன் வீடியோ டான்ஸ் வச்சா... நாம் வைக்கணுமுன்னு கட்டாயமா... போட்டி நல்லதாகவும் இருக்கணும்... நல்லதுலயும் இருக்கணும்... கெட்டதுல வந்தால் கெட்டதுலதான் முடியும்...” “நம்ம குடும்பத்து சின்னப்பய மவனுவ...” “எந்தச் செறுக்கி மவனாவது பேசணுமுன்னா எங்ககிட்ட வந்து பேசச் சொல்லு... ஒங்க ஆசையை அவங்க மூலம் சொல்லப்படாது...” “அய்யோ அண்ணாச்சி... நாங்களும் ஒங்கள மாதிரி பழைய காலத்து ஆட்களாச்சே, நெனச்சிகூட பார்ப்போமா... சின்னப்பய மவனுவதான்...” இதற்குள் பாக்கியம், கிண்ணம், தாலா, தட்டு ஆகியவற்றில் மொச்சைக் கொட்டையையும் ஏழலைக் கிழங்குத் துண்டுகளையும் கொண்டு வந்து, ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தபடியே, அபிப்ராயம் சொன்னாள். “எந்தப் பய என்ன சொன்னான்னு திட்டவட்டமாச் சொல்லு... ஒங்க அண்ணாச்சி திட்டம் பண்ணிக்குவாரு...” “வேற யாரு... இந்தச் சின்னப்பய மவனுக்குத் தலைவரே... நம்ம திருமலைதான்...” மோட்டார் பைக்கைத் துடைத்துக் கொண்டிருந்த திருமலை, வேஸ்ட் துணியைப் பார்க்கிற சாக்கில் தந்தையைப் பார்த்தான்... அவர் மனைவியிடம் பதில் சொன்னார். “இந்தா பாக்கியம்... அவன்கிட்டே கோவில் பேரேட்ட கொடுத்துடு டான்ஸோ, சினிமாவோ எது வேணுமுன்னாலும் போட்டுக்கட்டும்... தலை இருக்கிற இடத்துக்கு அவனுக்கு கழுத்து வந்துட்டு... அதனால இனிமே என் தல, கழுத்து இருக்கிற இடத்துக்குப் போய் குனியணும்... எடுத்தா பிள்ள... கோவில் கணக்கு வழக்கு பேரேட்ட...” திருமலை, மோட்டார் பைக் சக்கரத்திற்குள் முகத்தை மறைத்துக் கொண்டே முனங்கிப் பேசினான். “நான் ஒண்ணும் அப்டிப் பேசல. சின்னய்யாகிட்ட அப்டி ஒரு அபிப்ராயம் இருக்குதுன்னுதான் சொன்னேன்... அதுவே என் அபிப்பிராயமுன்னு சொன்னனா... எய்யா ஒம்ம ஆசைக்கி என்ன மாட்ட வைக்கியரு...” இதற்குள் சந்திராவின் தந்தை அருணாசலமும், அம்மா பேச்சியும் அங்கே வந்து, முற்றத்தில் நின்றார்கள். பிறகு, சந்திரா, கோலவடிவு உட்கார்ந்திருந்த பாயில், அப்பாக்காரர் உட்கார்ந்து இருந்தார். அம்மாக்காரி உள்ளே போனாள். மகன் திருமலை, இன்னும் தன்னை மீறிப் போகவில்லை என்பதை மனசுக்குள் ரசித்துக் கொண்ட பழனிச்சாமி, இன்னொன்றைக் கேட்டார். “ஆலமரத்துப் பக்கம் ஒனக்கும் துளசிங்கத்துக்கும் ஏதோ தகராறுன்னு காஞ்சான் சொன்னாரு... என்ன விஷயம்...” “சொல்லும்படியா ஒண்ணுமில்ல... சும்மா விளையாட்டுக்கு பேசிக்கிட்டு இருந்தோம்.” ஒரு பீடியை உருட்டி, தூளைத் திணித்து, குச்சியால், அடைத்து விட்டு, அதை நூலில் எப்படிக் கட்ட வேண்டும் என்று கோலவடிவுக்கு மீண்டும் சொல்லிக் கொடுக்கப்போன சந்திரா, அந்த பீடியைக் கீழே போட்டாள்... பீடித்தட்டை காலால் உதைத்துக் கீழே தள்ளியபடியே, வராண்டாவிற்கு எதிரே நின்றபடி இதமாகவோ, மிதமாகவோ பேசாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட குரலில் சொன்னாள். “அண்ணா... பொய் சொல்லுதான்... பெரியப்பா... கரும்பட்டையான் குடும்பத்து அலங்காரி, நம்ம கோலவடிவு துளசிங்கம் பயலோட கதாநாயகியாய் நடிக்கணுமுன்னு இளப்பமாய் சொல்லுதா... துளசிங்கம் என்னடான்னா கோலவடிவு தமிழ்க்கு தமிழ் கதாநாயகியாவும், இந்திக்கு இந்திக்காரியாகவும் இருக்கான்னு வீம்புக்குச் சொல்லு தான்... இவன்கிட்ட நான் எல்லாத்தையும் சொன்னால், திருமலை அண்ணன் துள்ளுறது மாதிரி துள்ளிட்டு எவளோ... ஒரு மூதேவி பேச்சக்கேட்டு, இடிச்ச புளி மாதிரி நிக்கான்...” பழனிச்சாமியின் தம்பியும், சந்திராவின் தந்தையுமான அருணாசலத்திற்குக் கரும்பட்டையான் குடும்ப ரத்தம் கொதித்தது. அண்ணன் மகனைச் சாடினார். “நீயல்லாம் எதுக்குல இந்த உடம்ப வச்சுக்கிட்டு இருக்கணும்...? நம்ம பொண்ண செறுக்கி மவன் சினிமாக்காரியா நெனச்சி பேசியிருக்கான், நீ பாட்டுக்கு வந்துட்ட பாரு... நீ கரும்பட்டையான்னு சொல்லிக்கதுக்கு வெட்கப்படணும்... ஒன்னை என் அண்ணாச்சி மகன்னு சொல்றதுக்கு நான் வெட்கப்படணும்...” அங்கே இருந்தால், இன்னும் ஏதாவத பேச வேண்டியதுவரும் என்றும், அதைத் தவிர்க்க நினைத்தவர் போலவும், அருணாசலம், வீட்டுக்கு வெளியே வந்தார். அந்தச் சமயம் பார்த்து, அந்த வீட்டுக்கு அருகே ஓடிய வண்டிப்பாதை வழியாய் போன அலங்காரியைப் பார்த்து விட்டார். அவளை இதமாக வரவழைத்து, பலமாக திட்டித் தீர்ப்பது என்று தீர்மானித்தார். “ஏழா... அலங்காரி... கொஞ்சம்... இங்க வா...” அலங்காரி மாராப்புச் சேலையை இழுத்து மூடி, இடுப்பில் இருந்து முழங்கால் வரை புடவையைத் தட்டி விட்டபடி சாதாரணமாக வந்தாள். வாசல் படிக்கட்டில் நின்ற அருணாச்சலம், அவள் நெருங்க நெருங்க, தனது பற்களை நெருக்கிக் கடித்தார். ஆசாமிக்கு நாற்பது வயதிருக்கும். அவர் உடம்பில், ரத்தத்திற்கு பதிலாக சாராயமே ஒடவேண்டும். நரிக்குறவர் மாதிரி உறுதியான தோற்றம். குத்திட்ட மீசை. மதுரையில் ஏதோ ஒரு ஆஸ்பத்திரியில் போட்டு, எப்படியோ சாராயப் பழக்கத்தை அவரிடமிருந்து பிரித்து மூன்று மாசமாகிறது. ஆனால் நேற்றில் இருந்தே லேசான குடி ஆசை. இன்றைக்கோ அதுவே பலமாகிவிட்டது. அந்த ஆசையை நிறைவேற்றினால் எல்லோரும் நாயே பேயே என்று பேசுவார்கள் என்பது தெரிந்து வெறும் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார். இப்போதோ அலங்காரி கிடைத்து விட்டாள். அருணாசலத்தின் குணாதிசயங்களைத் தெரிந்து வைத்திருந்த அவர் மனைவி பேச்சியம்மா, ஆசாமியை நோட்டம் போடுவதற்காக விடுவிடுவென்று வாசல் படிக்கு வந்து, அவரது தார்ப்பாய்ச்சிய வேட்டியைப் பிடித்து உள்ளே இழுத்தாள். வெளியே அவர் அலங்காரியை ஏடாகோடமாகப் பேசிவிடக்கூடாது என்பதைவிட, இந்த அலங்காரியைத் தானே விரட்ட வேண்டும் என்ற எண்ணம். இவளும், அலங்காளியும் ஒரே தாய்க் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பழைய பகை ஒன்று கணக்கு முடிக்கப்படாமல் இருந்தது. அருணாசலம் மனைவியின் வலுவால் இழுக்கப்படாமல், வேட்டி அவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தால் அப்படியே நின்றார்... அதைப் பார்த்த அலங்காரியும், குறுஞ்சிரிப்போடு வந்தாள். அருணாசலம், அவளிடம் நெருங்கி வந்தார்... “என்னழா... செறுக்கி பலவட்ற” என்ற வசவு மொழிகளைச் சுமந்து நின்ற அவரது வாயை, அலங்காரி பார்த்த பார்வையும், சிரித்த சிரிப்பும், அடைத்துவிட்டன... ஏதோ ஒரு கிறக்க சுகத்தில், என்ன பேசுவது என்று தெரியாமல் அவர் விழித்தபோது, அவரது அருமை மனைவி பேச்சியம்மா, முன்னேறினாள். வெடவெடத்த உடம்புக்காரி... தலைமுடி நான்கு பக்கமும் மொக்கையாக நிற்பதால் அவளை பம்பை என்பார்கள். எவ்வளவு படி எண்ணெய் தேய்த்து, எவ்வளவு பெரிய சீப்பால் வாரினாலும், அவள் தலையில் முன்பக்க, பின்பக்க தலைமுடியை ஒன்றும் செய்துவிட முடியாது. அசல் கரடி முடி. ‘பம்பை’, அலங்காரி முன் வந்து அரட்டினாள். “ஆமாடி கேட்க ஆளில்லன்னு ஒனக்கு எண்ணமா...” “என்ன தங்கச்சி சொல்லுதே...” “தங்கச்சி பொல்லாத தங்கச்சி... எங்கப்பன் என்ன ஒங்கம்மாவை வச்சுட்டு இருந்தானா...” “எங்கப்பன் ஒங்கம்மாவை வச்சுட்டு இருந்தாலும்... நீ எனக்கு தங்கச்சிதான்... ஆனால் நான் அப்படி நாகரீகக் குறைவா பேச மாட்டேன்.” “நாகரிகம்... தூ நாயே... ஒனக்கா நாகரிகம்... பட்டப்பகலுலயே அடுத்தவனுக்கு முந்தாணி விரிக்கிற எச்சிக்கல இரப்பாளி... வந்தட்டி... மஞ்சக் கடஞ்சா...” “இந்தா பாரு தங்கச்சி... மரியாதி குடுத்து மரியாதி வாங்கு.” “மரியாதைய வாங்கவும் ஒரு தகுதி வேண்டாம்...? ஒனக்கு எதுக்குழா மரியாதி... எதுக்குழா என் மச்சான் மகள் கோலவடிவை சினிமாக்காரின்னு சொல்லுரே... சினிமாவுல நடிக்க ஆச இருந்தால் நீ நடி... ஊர்ல கண்ட கண்டவங்ககூட எல்லாம் நடிக்கிற ஒனக்குத்தான் நடிப்பு நல்லா வருமே... எங்க குலமான் கண்ணு கோலத்தை எப்படிமா சொல்லலாம்... ஒன்னை மாதிரி கண்டவன் கிட்டயெல்லாம் பல்லு இளிக்கிறவள்தான் சினிமாவுல நடிக்கணும்... என் ராசாத்தி கோலவடிவு ஏன் நடிக்கணும்...” “அற்ப விஷயத்த பெரிசாக்குறே...” “யாருழா அற்பம்... இன்னொரு தடவ சொல்லு...” “ஒனக்கு காது கேக்காட்டா நான் என்ன பண்ணுறது...” “எனக்கு அப்படியே காது கேக்காட்டாலும், ஊர்ல நீ ஆடுற ஆட்டமும் போடுற போடும் நல்லாவே கேக்குது...” “எதையும் ருசிப்படுத்தாம பேசாத தங்கச்சி... ஒனக்கும் ஒரு பொண்ணு இருக்காள்...” “என் பொண்ணுக்கு சாபமாழா போடுற சண்டாளி... கடைசில ஒன் புத்தியக் காட்டிட்ட பாத்தியா...” “என் புத்திய அப்டி என்னத்த கண்டுட்ட பெரிசா...” “நம்ம ஊர்ல கல்யாணம் ஆகுமுன்னே ஆட்டம் போட்டு ஒரு கள்ளப்பிள்ள கழிச்ச. கழுத்துல மஞ்சக் கயிறு விழுந்த பிறகாவது சும்மா இருக்கலாம். இருந்தியா... கல்யாணம் ஆன ஆறாவது மாசத்துலேயே காஞ்சான் அண்ணாச்சிய காலி பண்ணுனே... வெளியூரிலே இருந்து வந்த மிளவத்தல் வியாபாரிய மடக்கிப் போட்டு காசு பறிச்சே... எங்கேயோ இருந்து வந்த டெய்லரை... மொட்டையடிச்சே... ஒயர்மேன ஓட்டாண்டியாக்குன... செம்பட்டையான் குடும்ப மானம் பொறுக்காம குதியோ குதின்னு குதிச்ச எலி டாக்டரையும் மடக்கிப் போட்டே... நல்ல வேளையா ஒன் பொண்ணு டவுன்ல வேல கிடச்சதும் ஒன்கிட்ட வராம தப்பிச்சுட்டா... இல்லாட்டா அவளையும் எவன்கிட்டயாவது...” அலங்காரி குன்றிப் போனாள். இப்படிப்பட்ட அர்த்தத்தில்தான், இந்தச் சந்திராவும் பேசினாள். ஆனால், இந்த பேச்சியம்மாவைப் போல் எவளும் இப்படி லிஸ்டைப் படித்ததில்லை. அந்த லிஸ்டைவிட, அவள் லிஸ்ட் பெரிதுதான்... என்றாலும் அங்கே அம்மணமாக இருப்பது போல் உணர்ந்தாள். இந்தப் பேச்சியம்மா, கோலவடிவை, தான் கதாநாயகியாக்க மேற்கொண்ட முயற்சிக்காகப் பேசவில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். இருவரும் திருமணமாகாமல் கட்டாம்பட்டியில் குமரிகளாய்ச் சுத்தியபோது, பேச்சியம்மா, மாமா மகன் முறை வேண்டிய ஒரு வாத்தியாரைக் காதலித்து, தொட்டதுண்டு. கெட்டதுண்டு. அலங்காரிக்கும், வயசுக் கோளாறா... அதே அந்த வாத்தியாரை இந்த அலங்காளி பயன்படுத்தினாளா... அல்லது அந்த வாத்தியார் பயன்படுத்தினாரா என்பதைச் சொல்ல முடியாது. எப்படியோ ஒருவரை ஒருவர் பயன்படுத்திக் கொண்டதில், பேச்சியம்மா காதல் அறுபட்டு, கடைசியில் காதறுந்த ஊசி போல் ஊசிப் போனது, கடைசியில் பேச்சியின் கழுத்தில் அருணாசலம் கயிறு போட்டார். இந்தப் பழைய பகையைக் கோலவடிவு நிகழ்ச்சி மூலம் பேச்சியம்மா புதுப்பிக்கிறாள் என்பது அலங்காரிக்குத் தெரியும்... ஆனால் வெளியில் சொல்ல முடியாது... அதுவும் இந்த வீட்டில் வைத்து சொல்லமுடியாது... கொலையே விழும்... அப்புறம் வேண்டுமானால் துளசிங்கத்தை வைத்து, ‘அந்த’ விவகாரத்தைச் சொல்ல வைக்கலாம்... ஆனால் இப்போ... ஓடுற நாயைக் கண்டால் விரட்டுற நாய்க்குத் தொக்கு என்பதுபோல், அலங்காரியின் மெளனம் பேச்சியம்மாவை இன்னும் அதிகமாகப் பேச வைத்தது. “பதில் சொல்லேமிழா... பத்தினி... கண்டவன் பின்னாலல்லாம் சுத்துற நாயி நீ... இப்படி இருக்கயில எங்க மச்சான் மவளை சினிமாக்காரின்னு சொல்லுறதுக்கு எத்தனாவது சட்டத்துலழா இடமிருக்கு...? சொல்லுழா... கைகேயி... சொல்லுழ கூனி... சொல்லுழா சூர்ப்பனகை...” குன்றிப்போய் நின்ற அலங்காரி திடீரென்று தன் தலையிலே பட்டுப்பட்டென்று அடித்துக் கொண்டாள்... வாயிலும் வயிற்றிலும் மாறிமாறி அடித்து, நிசமாவே புலம்பினாள். “கடவுளே... கடவுளே... இவ்வளவு பேச்சையும் கேட்கணுமுன்னு ஆண்டவன் விதிச்சுட்டானே... இனிமேல் நான் இருந்ததுலயும் சேத்தி இல்ல... செத்ததுலயும் சேத்தி இல்ல. அய்யோ... அம்மோ... என்னமா கேக்குறாள். அடைக்கலமுன்னு வந்தவளை இப்டிப் பேசிட்டாளே... இவ்வளத்தையும் கேட்டுட்டு நான் உயிரோட இருக்கணுமா...” அழுகைச் சத்தம் கேட்டு, கோலவடிவும், சந்திராவும் ஓடி வந்தார்கள். அப்படியும் பேச்சி, வசவை விடவில்லை. கோலவடிவு, அலங்காரியையே பரிதாபமாகப் பார்த்தாள்... அவளிடம் பேசப் போன சந்திராவை ஒரு இடி இடித்து தள்ளிவிட்டு, அழுகிறவளை, அழப்போகிறவள்போல் பார்த்தாள். நடந்ததைப் புரிந்து கொண்ட சந்திராவிற்கே பாவமாக இருந்தது. அம்மாவைத் திட்டப் போனாள். இதற்குள் வராண்டாவில் பேசிக் கொண்டிருந்த பழனிச்சாமியும், மற்றவர்களும், அவள் அழுகைச் சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே தாவினார்கள். இரண்டே இரண்டு நிமிடத்தில் நடந்து முடிந்த இந்த வசவு அவர்கள் காதுகளை மெய்யாகவே எட்டவில்லை. பழனிச்சாமி பதறியடித்துக் கேட்டார். “என்ன அலங்காரி... திடுதிப்புன்னு இப்டி அழுவறே...?” கோலவடிவால் பொறுக்க முடியவில்லை. “எப்பா... அலங்காரி அத்தையை நம்ம சித்தி அசிங்கம் அசிங்கமாப் பேசிட்டா... அதுவும் அளவுக்கு மேல, அவன்கூட இவன் கூடன்னு பேருகளச் சொல்லிச் சொல்லி...” “ஏழா கோலவடிவு... நல்லதுக்குக் காலமில்ல... என்கிறது சரியாத்தான் இருக்குது... நான் மச்சான் மகளை சினிமாக்காரின்னு பேசிட்டாளேன்னு வயித் தெரிச்சலை பேசுனால். நீ அவளுக்காக வக்காலத்து வாங்குறே... ஏழா... சந்திரா... எழுந்திரு... பாவி மனுசா... இன்னுமா ஒமக்கு இந்த ஊட்ல வேலை...” பேச்சியம்மா கணக்குத் தீர்ந்த திருப்தியுடனும், அதேசமயம், சொந்தக்காரியான கோலவடிவிடம், புதிய கணக்கைத் திறந்த அதிருப்தியுடனும், சந்திரா சகிதமாய்ப் போய்விட்டாள். அந்தப் ‘பாவி மனுஷன்’ அருணாசலமும், நரசிம்ம அவதாரம்போல் வாசலுக்கு உள்ளேயும், வெளியேயுமாய் இல்லாமல், வாசற்படியில் நின்று, பிறகு நிலைகுலைந்து நடந்தார். பேச்சியம்மாவின் நட்பு, அவளது பகையை விட மோசமானது என்பது தெரிந்ததுபோல, அவள் குடும்பத்தோடு போனதை யாரும் கண்டுக்கவில்லை. பழனிச்சாமி, அலங்காரியின் பக்கமாக வந்து நின்று, ஆறுதலாகவும், சூசகமாகவும் பேசினார். “அவள் அறிவில்லாதவள். அவள் பேச்ச பெரிசா எடுத்தா நாமதான் சிறிசாப் போயிடுவோம்... ஆனால அண்ணாச்சி சொல்ற அர்த்தத்த புரிஞ்சுக்க... நாமல்லாம் வாழ்ந்து முடிஞ்சவங்க... நம்ம பிள்ளியளுக்கு நம்ம சொத்தவிட நம்ம பேருதான் பக்கபலமாக இருக்கும். ஒனக்கும் வயசாயிட்டு... அஞ்சுல வளையாதது ஐம்பதுல வளையணும்... கோலவடிவை நீ அப்டி கேட்டிருக்கப்படாது. எம் பொண்ணுன்னு நான் பூசி மழுப்பி பேசல... இன்னொருத்தன்கூட வாழப் போறவளுக்கு சினிமாவுல நடிக்கணுமுன்னு... ஒரு எண்ணம் வரப்படாது... பாரு... ஆனால் அதுக்காக பேச்சியம்மா ஒன்னை அப்படி பேசக்கூடாதுதான்... பாக்கியம், தங்கச்சிக்கு மோர் கொடு... ஏழா கோலவடிவு... ஆலமரம் பக்கம் போனே... திருமலைய, அங்கேயே ஒன்னை வெட்டிப் புதைக்கச் சொல்லியிருக்கேன்...” பாக்கியம் மோர் கொடுக்கும் எண்ணம் இன்றிப் பேசாது இருந்தாள். அதை அலங்காரி வேறுவிதமாக எடுத்துக் கொண்டாள்... ‘பழனிச்சாமி குடும்பத்தின் சம்மதத்தின் பேரில்தான், பேச்சியம்மா பேசியிருக்கிறாள்... அவள் பேசுவது... இவங்க பேசுவது மாதிரித்தான்... இருக்கட்டும், இருக்கட்டும்...’ ஆயிரந்தான் சொன்னாலும், அலங்காரி, பழிவாங்கும் உணர்வை விட, அவமானப்பட்ட உணர்வுடன் குலுங்கிக் குலுங்கி அழுதபடி போனாள். அலங்காரி போவதையே பார்த்துக் கொண்டிருந்த கோல வடிவிற்கும் கண்ணீர் கொப்பளித்ததது. அவள் சிந்திய கண்ணீரே ஆவியாகி, இவள் கண்களில் மேகமாகி, பெருமூச்சுக் காற்றால் தொடப்பட்டு, நீராகி விழுவது போலிருந்தது. அவள்பட்ட அவமானத்தை நினைத்து நினைத்து மருகுகிறாள்... பாவம்... அலங்காரி... அவள் மனசு எப்படித் துடிக்குதோ... எப்படித் தவிக்குதோ... பேச்சியம்மா சித்தி சொன்னதை யார் கிட்டயும் சொல்லி ஆறுதல் தேட முடியாது. கோலவடிவு சுற்றும் முற்றும் பார்த்தாள். திருமலை சாப்பிட உட்கார்ந்தான். அப்பா சொந்தக்காரர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். ‘ஒரு எட்டு நடந்து, அலங்காரி அத்தைக்கு ஆறுதல் சொன்னால் என்ன... அதனால் அவள் மனசு திருப்திப்படுதோ... இல்லியோ... என் மனசு திருப்திப்படும்... படுதோ... படலியோ... அலங்காரி அத்தை கண்ணைத் துடைச்சு அதுவழியா நெஞ்சைத் துடைக்கணும்...’ கோலவடிவு மெல்ல எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து, வேகமாய் நடந்தாள். அலங்காரியைச் சீக்கிரம் பார்க்க வேண்டும் என்பதற்காகக் குறுக்கு வழியான ஒரு ஒற்றையடிப்பாதை வழியாக நடந்தாள். அலங்காரியின் அழுகையை நிறுத்தினால்தான், தனது அழுகை நிற்கும் போல் தோன்றியது. திக்கற்று ஒருத்தி புலம்பும்போது, நான்கு திக்குகளுமே திசையறியாது புலம்புவதுபோல் தோற்றம் காட்டுகிறது. மானுடம், நரைபட்டு போனது போல் காட்டுகிறது. கோலவடிவுக்கு, இந்த மாதிரியான சிந்தனை, அவள் புத்தித் தகுதிக்கு ஏற்ப, இதே தாக்கத்தில் வேறுவிதமாய் உட்புகுந்தது. “இல்லாதவன் பெண்டாட்டி... எல்லாருக்கும் அண்ணிதான்... அழுகிறவள் அலங்காரி அத்தை அல்ல... புருஷன் பலம் இல்லாத... சொத்துபத்து இல்லாத அத்த... பொம்புளயோட அழுகை... இவங்க அழுகை நிக்காட்டால் ஊரு சிரிக்க முடியாது... உறவுக்கு அர்த்தம் கிடையாது... பாவம் அத்தே...” கோலவடிவு, ஞானவடிவாய் நடந்தாள். |