உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
7 அதே ஆலமர அடிவாரம். சூரியன் வெளியே உள்ளவர்களைச் சுடப்போவது போல் பார்த்தாலும், அந்த மரத்தடிப் பெண்களை, கிளைகளுக்குள்ளும், இலை தழைகளுக்குள்ளும் மறைந்திருந்து சுகமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாப் பெண்களும், மத்தியில் ஒரு ரேடியோ டிரான்ஸிஸ்டரை வைத்து ‘மச்சானைப் பாத்தீங்களா’வை ரசித்துக் கேட்டுக் கொண்டிந்தார்கள். அந்தப் பாடலுக்கு ஏற்ப, பட்டும் படாமலும், இருந்த இடத்தில் இருந்தபடியே ஆடினார்கள். அந்த பாட்டோடு பாட்டாய்ப் பாடி, தங்கள் குரலைவிடப் பாடியவள் குரல் அப்படி ஒன்றும் பெரிசா இல்லை என்பதுபோல் நினைத்துக் கொண்டு சில பெண்கள் அந்தப் பாட்டின் ஒரு வரிக்கு அடுத்த வரியைப் பாடினார்கள். “ஏமுழா... ரோசாப்பூ... சினிமாப் பாட்ட கேக்கவிடேமிழா. நீ பாடுறதவிட கழுத கனச்சால் நல்லா இருக்கும்.” “நீ குட்டிச்சுவர் பக்கத்துல நிக்கிறவ. ஒனக்கு அப்படித்தான் தெரியும். அதோட ஒன் குரல விட என் குரலு மோசமில்ல." வாடாப்பூவும், ரோசாப்பூவும் சங்கீதத்தைச் சண்டையாக்கப் போனபோது, அலங்காரி இன்னொரு பெண்ணோடு வந்து பேசிக் கொண்டே உட்கார்ந்தாள். “நம்ம ரோசாப்பூ குரலுக்கு ஏதுழா ஈடு. எங்க துளசிங்கத்துக் கிட்ட சொல்லி அவள சினிமாவுல பின்னணிப் பாடகியாய் போடலாமுன்னு யோசித்துக்கிட்டு இருக்கேன்.” “இவ பாடுனான்னா ரேடியோ பெட்டியே வெடிச்சிப் போவும்.” “இப்படித்தான் சுசீலாவயும் சொன்னாவுளாம். சானகியவும் நெனச்சாவளாம் வேணுமுன்னால் பாரேன். துளசிங்கம் வரட்டும்.” “இது என்ன புதுசா லீலாவதிய கூட்டிட்டு வந்திருக்கே.” “ஏன் வரப்படாதா. மேலத்தெருக்காரிவ வரும்போது, கீழத் தெருக்காரி வரப்படாதா.” “ஒரே ஊரையும் ஏன் சித்தி துண்டு போடுற? ஒரு நாளும் வராதவளாச்சேன்னு கேட்டோம்.” “நேத்து இங்க முழுசா வரலியா. இன்னைக்கு வேற கடையில பீடி போடணுமா. என் கொழுந்தன் மவளுக்கு சுத்தத் தெரியும். சொல்லிக் கொடுத்திருக்கேன். அதனால கும்புட்டுக் கூத்தாடி கூட்டியாந்திருக்கேன்.” “பீடி நல்லா இல்லாட்டா. ஏசெண்டு பீடிகள கழிச்சிடப் போறான். அப்புறம் நஷ்டம் ஒனக்குத் தான்.” “என்ன அம்மாளு அப்படிப் பேசுறே. பீடி ஏசெண்டு பால்பாண்டிக்கு இவிய பீடியக் கழிக்கிற தைரியம் வருமா.” இப்படிச் சொன்ன ராசகிளி ஏன் சொன்னோம் என்பது மாதிரி நாக்கைக் கடித்தபோது, இந்தப் பெண்கள் அவளைச் சூதோடு பார்த்துவிட்டு, வாயற்றவர்கள் போல் பேச்சுக்குத் திடீர் பிரேக் போட்டதால், அப்படிப் போடப்படும் வாகனச் சக்கரம் மாதிரி இவர்கள் நாக்குகளும் குளறியபடியே உளறின. இதைப் புரிந்து கொண்ட அலங்காரி, சந்திராவைப் பார்த்துப் பேச்சை மாற்றினாள். “சந்திரா... என் மருமவளே... ஒன்ன பழையபடியும் இங்க பாக்கதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா.” சந்திரா, அலங்காரி அத்தையை வைத்தகண் வைத்தபடி பார்த்தாள். அம்மா எப்படித் திட்டினாலும் இந்த அத்தை மனசில வச்சுக்கலியே. என்கிட்ட கொஞ்சங்கூட கோபத்தக் காட்டலியே. இந்த, கோலவடிவுக்காவ, அம்மா அத்தைய அப்டிப் பேசியிருக்கப் படாது. கடைசில எந்தக் கோலவடிவுக்காவ பேசுனேனோ, அந்தக் கோலவடிவே கால வாரிட்டாளே. “மருமவளே சந்திரா. அத்தைக்கு பதில் சொல்ல முடியாத அளவுக்கு கோவமா.” “இல்லத்தே... இல்ல. எனக்குப் புத்தி வந்துட்டு. எந்த நாயி சந்தைக்குப்போனா நமக்கென்ன. நீங்க. எதையும் மனசுல எடுத்துக்காதிய அத்தே.” “அப்டி எடுத்திருந்தா ஒன்கிட்ட பேசுவனா.” அலங்காரி கொழுந்தன் மகள் லீலாவதியின் விலாவில் இடித்தாள். “சொல்லிக் கொடுத்ததை சரியாய் செய்யேமிழா. எருமைமாடு” என்றாள் ரகசியமாக. வானொலிச் சினிமாப் பாட்டில் மெய்மறந்து போன லிலாவதி, சித்தி இடித்த இடி தாங்க முடியாமல் விழித்தாள். எல்லாப் பெண்களும் பீடி சுற்றுவது பற்றி, அவள் சொல்லிக் கொடுத்ததாக நினைத்தபோது அவள் புரிந்து கொண்டாள். நேத்து ராத்திரி சித்திக் சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஒப்பித்தாக வேண்டும். இல்லாட்டா நம்ம விவகாரத்த சித்தி அவுத்து விட்டுடுவாள். என்றாலும் எதிர்கால அலங்காரியாய் ஆவதற்குரிய அத்தனை தகுதிகளும் தன்னிடம் இருப்பதுபோல், லீலாவதி சாமர்த்தியமாகப் பேசினாள். “அப்படிச் சுத்து. இப்படிச் சுத்துன்னு சொல்லேன் சித்தி. இதுக்குப் போயி ஏன் எருமைமாடுன்னு ஒரு வாயில்லா சீவன வையுறே. இதோ பார்... நல்லாத்தானே சுத்தியிருக்கேன். நல்லா இருக்கதை தலையாட்டித் தான் சொல்லுவே. வாயால சொல்ல மாட்டே. ஆமா ஒங்களுக்குத் தெரியாதா... நம்ம ராமையா பெரியய்யா மவனுக்கும் பழனிச்சாமி மாமா மகள் கோலவடிவுக்கும் கல்யாணம் நடக்கப் போவுதாமே. ரெண்டு வீட்லயும் தீர்மானம் செய்தாச்சாம். இனிமே கை நனைக்க வேண்டியதுதான் மிச்சமாம்; சித்தி இந்தப் பீடியாவது நல்லா இருக்குதா. சித்தி...” “நான் சொல்லிக் கொடுத்ததாச்சே... நல்லா இல்லாம இருக்குமா.” “என்ன சொன்ன... கோலவடிவுக்கும் அக்னி ராசாவுக்குமா... இருக்காது.” “ஏன் இருக்காது. கோலவடிவுக்கு அறுபது பவுன் நகை செய்திருக்கு. முப்பதாயிரம் சருள் கொடுப்பாங்க. அக்னி ராசாவுக்கு அவரு பங்குக்கே மூணுகோட்டை விதப்பாடு இருக்குது. ராமையா, காத்துக்கருப்பன் குடும்பத்துல பெரிய ஆளு. பழனிச்சாமி மாமா கரும்பட்டையான் கூட்டத்துல முதல் தல. ஏன் கூடாது...” “எப்படி இருந்தா எனக்கென்ன. இருக்காட்டா எனக்கென்ன. கொடுப்பார் இஷ்டம். கொள்ளுவார் இஷ்டம். ஆனாலும்...” எல்லாப் பெண்களும், ஆச்சரியப்பட்டபோது, சந்திரா கத்திரித்த இலையைக் கீழே போடாமலே யோசித்தாள். கோலவடிவு மேல் அவளுக்கு ஆயிரந்தான் கோபம் இருந்தாலும் அவளை அந்தப் ‘பெத்தட்டி’ அக்னி ராசாவோடு சேர்த்துப் பார்க்க முடியவில்லை. அதை விட அக்காவை வெட்டிப் போட்டுடலாம். அதோடு அக்கினி ராசாவுக்குக் கோலவடிவு போயிட்டால், அந்த அக்கினிய விட மோசமான அவன் தம்பி ‘பல்லனுக்கு’ என்னைக்கூட கட்டி குடுக்கலாமே. இந்தப் பேச்சு இருக்கோ இல்லியோ. இருக்கப் படாது. பெரியப்பா சம்மதிக்கவே மாட்டார். ஒரு வேள ராமய்யா மாமாவுக்கு அப்டி ஒரு ஆச இருக்கும். இந்த அக்கினி ராசாவுக்குத்தான் ஆச கீசன்னு எதுவுமே கிடையாதே. சந்திரா, பதிலளிப்பது மாதிரியல்ல, பதிலடிப்பது போல் பேசினாள். “ஆலம்பழத்த அண்டங்காக்கா கொத்தவிட மாட்டோம். படியாத முட்டாளுக்கு படிச்சவள குடுப்பமாக்கும். போயும் போயும் அக்கினி ராசா, கோலவடிவுக்கா? எங்க அக்கா மலைன்னா, அவரு மடு. வெத்துப் பேச்சு பேசாதிய. எங்கக்கா கால்தூசிக்கு அக்கினி ராசா பெறமாட்டார்.” அந்தப் பெண் கும்பலில் மேலத் தெருவைச் சேர்ந்த அக்கினி ராசாவின் சொக்காரப் பெண்கள் இருந்தார்கள். அந்த ராசாவைப் பற்றி அவள் சொன்னது சரிதான் என்று அவர்களுக்கு தெரியும். ஆனால், அவர்கள், அங்கே விட்டுக் கொடுக்கத் தயாராய் இல்லை. “எங்க அக்கினி ராசா கால்தூசிக்கு ஒங்க கோலவடிவு பெற மாட்டாள். சும்மா ஒனக்குத்தான் பேசத் தெரியுமுன்னு பேசாதே. எனக்கும் பேசத் தெரியும். ஒங்க பெரியப்பா மகன் திருமலை என் கால்தூசிக்கு பெறமாட்டான்.” “சரி... சரி... யாரையும் யாரும் கழிச்சுப் பேசப்படாது. ஒவ்வொருத் தரும் அவரோடு அப்பன் அம்மாவுக்க பிறந்தது மாதிரி இருப்பாவ.” மேல ஊரும் கீழ ஊரும் மோதிக் கொண்டு கிளிகள் போல கத்தியபோது அலங்காரி மகிழ்ந்து போனாள். ஆக, அக்கினிராசா, கோலவடிவு கல்யாணப் பேச்சு சம்பந்தப்பட்ட குடும்பங்களில் அடிபடுதோ இல்லையோ சந்திக்கு வந்துவிட்டது. இந்தப் பெண்களே இந்தச் சேதியைத் தெருத்தெருவாய், வீடு வீடாய், ஆள் ஆளாய்ப் பரப்பி விடுவார்கள். இந்த முட்டாப்பய மவள் லீலாவதி இதுக்குமேல எதுக்கு இருக்காள். அதுவும் கழிவு பீடியாய் சுத்துக்கிட்டு. சந்திராவால் தாள முடியவில்லை. மீண்டும் எகிறினாள். “எங்கண்ணாச்சிய சொன்ன ஒன் வாய...” “நிறுத்துங்கழா... நிறுத்துங்க... இனிமேல் எது பேசினாலும் வெறும் பேச்சுத்தான் பேசணும். நம்ம துளசிங்கம் தம்பி வந்தாலாவது அவன் வாயைக் கிளறி, கமலகாசன் சரிகாவ பண்ணிக்கிட்டது, கார்த்திக் ஸ்ரீபிரியாவை கைவிட்டது, இந்த மாதிரி முக்கியமான விஷயங்களைப் பேசலாம். இத விட்டுட்டு வெட்டிப் பேச்சா பேசி அடிதடி வரும்போலுக்கு...” அந்தப் பெண்கள் மத்தியில் இருந்தாலும், எங்கேயோ இருப்பதுபோல் இருந்த ரஞ்சிதம், பீடி சுத்துவதை நிறுத்திவிட்டு, உரக்கப் பேசினாள். “சினிமாக்காரங்களப் பத்தியும், சினிமாக்களப் பத்தியும் பேசிப் பேசியே நம்ம வாழ்க்க சினிமாவாப் போச்சு. சினிமாவே வாழ்க்கையாச்சு. நம்மை மாதிரி ஏமாளிவ இருக்கதாலதான் அவங்களோட அற்ப விஷயங்களை பெரிசா எழுதி நம்மளயும் பேச வைக்கானுவ. அவனுகளுக்காவது காசு கிடைக்குது. நமக்குத் தான் சினிமாக்காரங்களை பேசிப் பேசி உள்ளூர் பிரச்சினை மறந்து போச்சு. சதா சினிமாக்காரனயும், சினிமாக் காரியயும் நெனச்சு நெனச்சு நம்ம ஊரில நடக்கிற அக்கிரமம் அநியாயத்தை பேசக்கூட மாட்டக்கோம்.” “அப்படி என்ன பெரிசா அக்கிரமம் நடக்கு.” “இதைக்கூட சொல்லிக் காட்ட வேண்டியதிருக்கு. முந்தா நாள் ஐயங்கண்ணு பெரியவர, அவரு மகனும் மருமவளும் செருப்ப வச்சே அடிச்சாங்க. தட்டிக் கேட்டமா...? மலையப்புரத்தா பாட்டிய அவன் மகன் பட்டினி போடுறான். கேட்டோமோ... மாட்டோம். நமக்கு சினிமா நடிகை காதல் தோல்வி முக்கியம். பாவம்... இந்த ஐயங்கண்ணு தாத்தா செருப்பால அடிபட்டா என்ன... பெருக்கு மாறால அடிபட்டா என்ன... சினிமாவுல ஒரு சம்பவத்தக் காட்டினாத்தான் நமக்கு அழுக வரும். அப்பவும் கோபம் வராது...” எல்லாப் பெண்களும் ரஞ்சிதத்தைச் சங்கடமாய்ப் பார்த்தபோது, தாயம்மா, ரஞ்சிதம் பேசியதை வழி மொழிந்தாள். “ரஞ்சிதம் அடுத்த சாதியா இருந்தாலும் அவள் சொல்லுறது நூத்துல ஒரு வார்த்த. நாம் எதுக்காவ போடு வண்டல கொடுக்கணும்... ஏசெண்டு எதுக்காவ பழுத்த இலய கொடுக்கணும். நல்ல பீடிய கழிக்கணும்... கூலிய எதுக்காவ குறைக்கணும்...” “இந்த பாரு... சும்மா கேபி சுந்தரம்பா மாதிரி பாடிக்கிட்டே இருக்காத. கேட்கணுமுன்னா ஏசெண்டு கிட்ட கேளு. நாங்களும் ஒனக்கு சப்போர்ட்டு செய்யுறோம். அவன் பண்றதும் அக்கிரமந்தான்.” ரஞ்சிதம் ஆனந்தப்பட்டாள். மகிழ்ச்சி தாள முடியாமல், பிடித்தட்டில் மேளம் அடித்தாள். பிறகு அழுத்தம் திருத்தமாகக் கேட்டாள். “ஓங்களுக்கு அந்த பால்பாண்டி ஏதாவது ஒரு வகையில உறவு. அதனால யோசனை வரும். அதனால், நானே மொதல்ல கேக்கேன். அப்புறம் நீங்க பேசுங்க. அலங்காரியம்மமா எதுக்கு எழுந்து நிற்கீக.” “எங்க வீட்டுக்காரர் வயலுல இருந்து வந்திருப்பாரு. பச்சக் குழந்தை மாதிரி பசில துடிப்பாரு. அவரு துடிச்சால் என்னாலதான் பொறுக்க முடியுமா. போயி சோறு போட்டுட்டு வாறேன். ஏய் லீலாவதி சோலி முடிஞ்சுட்டு. எழுந்திரு.” அலங்காரியும், லீலாவதியும், போய்க் கொண்டிருந்தபோது தாயம்மா வர்ணனை கொடுத்தாள். “ஆடு நனையுதேன்னு ஒநாய் கவலைப்பட்டுதாம். புருஷனுக்குல்லா சோறு போடப் போறாளாம். நல்லா போட்டாளே. கள்ளப் புருஷன் கிட்ட...” “எந்தக் கள்ளப் புருஷன்... எத்தனையோ...” “பீடி ஏசெண்டு கிட்ட இங்க நடந்ததை ஓடிப்போபி சொல்லப் போறாள்.” “சரி... எசெண்டு நாம சொல்லுறத அவள் மூலம் தெரிஞ்சுக் கிட்டா நமக்கும் பேச்சு மிச்சம்தானே. ஆனாலும் எங்க குடும்பத்துக்கு வந்த அலங்காரி பெரியம்மய இனிமே அப்டிப் பேசப்படாது...” சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தப் பெண்கள் அணிவகுக்காத குறையாக, பிடிக் கடைக்குப் போனார்கள். மேல, கீழ ஊருகளுக்கு மத்தியில் இருக்கும் கடை. அரங்கு அரங்கான அறைகள். வராண்டாவைத் தாண்டிய முதல் அறையில், இன்னொரு மார்க் பீடியை பிடித்தும், குடித்தும் அமர்க்களமாய் இருந்த ஏஜெண்ட் அதட்டினான். “என்ன இப்படி வரிசையா வந்து நிற்கிய. ஏதோ சொல்லப் போறிய போலுக்கு. என்ன விஷயம் ரஞ்சிதம்.” “நீங்களே கேட்டதால எனக்கு சந்தோஷம். இனிமேல் போடு வண்டலு கேட்கப்படாது. கலியையும் கட்டணும். பீடிய கழிக்கதோ, பழுப்பு இலய கொடுக்கதோ கூடாது.” “ஒன் சாதி புத்திய காட்டிட்ட பாத்தியா...” “நீங்கதான் காட்டுதீங்க...” “என்னடி சொன்ன முடிச்சிமாறி. ஒங்களத்தான் பிள்ளியளா... நான் நம்மோட சாதிப்புத்திய காட்டுறதா இந்த கண்டார முண்ட சொல்லுதாள்... நீங்க சாதி பொண்ணுவளா... இல்ல சாதி கெட்ட பொண்ணுவளான்னு தெரியணும். சாதிக்காரியாய் இருந்தால் கடைக்குள்ள வாங்க. பலசாதின்னா அவளோடயே நில்லுங்க...” ரஞ்சிதம் பயமின்றி சொன்னவனை நேருக்கு நோாய்ப் பார்த்தாள். பிறகு அந்தப் பெண்களையே பார்த்தாள் - அவர்கள் எடுக்கும் முடிவில்தான் தனது எதிர்காலமே அடங்கி இருப்பது போல. |