உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
9 அந்த முக்கிய வீதி மட்டும் இல்லையானால், சட்டாம்பட்டி, சாதாரணமானப் பட்டியாகி இருக்கும். ஆனால் அந்த ஊரின் மேல்பக்கம், கிட்டத்தட்ட ஊரின் வேலி போல இருந்த, அந்தச் தார்ச்சாலையில், திருவள்ளுவர் பஸ்களும், கட்டபொம்மன் பஸ்களும் ஓடிக் கொண்டிருந்தன. இந்தப் பட்டியில், இந்தச் சாலையில் நின்று படிக்கட்டுகள் வழியாக பஸ்ஸுக்குள் ஏறிவிட்டால் ஒருத்தர் மதுரையில் இறங்கலாம், இன்னொருத்தர் நாகர்கோயிலில் ஒரு தூக்கம் தூங்கிட்டு எழலாம். இந்தச் சாலையில்தான் துளசிங்கத்தின் உரக்கடையும் சிமெண்ட் கடையும் பக்கத்தில் பக்கமாய் உள்ளன. எதிர்ப்பக்கம் பஸ் ஸ்டாண்ட். நான்கைந்து பெட்டிக் கடைகள் ஒரு சில தேநீர் கடைகள் வரிசையாய் இருந்தன. இவன் கடைகளுக்கு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் வாடகை சைக்கிள் கடைகள். ஒரு வாசகசாலை. உருப்படாத ஒரு நடிகனுக்கு உள்ளூர் உதவாக்கரைப் பயல்கள் வைத்திருக்கும் ரசிகர் மன்றம். சில அரசியல் கட்சிகளின் கிழிந்துபோன கொடிகள். துளசிங்கம், வேலையாட்கள் சிமெண்ட் மூட்டைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்குவதை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்த அளவிற்கு சிமெண்ட் மூட்டைகள் விற்காததால், வேலையாட்களைத் திட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று திருமலை கடைக்கு முன்னால் வந்து நிற்பதை, அவன் பார்க்கவில்லை. இருவருக்கும் இடையே உள்ள பழைய தகராறையும், அப்போது தூதுப்பயலுக்கு இருவரும் சொல்லி அனுப்பிய செய்தியையும், எதிர் செய்தியையும் தெரிந்து வைத்திருந்த வேலையாட்கள், மூட்டைகளை அடுக்காமல் திருமலையை அடுக்கடுக்காய் பார்த்தபோது, வேலை தடைப்பட்டதைப் பார்த்து துளசிங்கம் அவர்கள் பார்வை நிலைத்த இடத்தில் பார்த்தபோது . திருமலை வேட்டியைத் தார்ப் பாய்த்துக் கொண்டு சிம்ம கர்ஜனை போட்டான். “எனக்கு எப்டிடா நீ சிமெண்ட் இல்லன்னு சொல்லலாம்?” “நீ எப்டிடா கேட்கிற விதமா கேட்காமல் இருக்கலாம்?” “நான் எப்படிக் கேட்டா ஒனக்கென்னடா...? ஒனக்குத் தேவை பணம்தானடா...?” “அதுக்கு ஒன் காலுல சிமெண்ட் மூட்டையை போட்டுட்டு கும்பிட முடியுமா? ஒனக்கு சிமெண்ட் வேணுமுன்னா என் கடையில வந்து தான் கேட்கணும். தெருவுல வந்து கொடுக்க நான் ஒன் வேலைக்காரன் இல்ல.” “நீ இந்த ஊருக்கு நல்ல முறையில எல்லாருக்கும் சிமெண்ட் கொடுக்கறதுக்காக ஒனக்கு ஏஜென்சி கொடுத்திருக்காங்க. நீ எடுக்காட்டா நான் எடுத்திருப்பேன். அதனால நீ எனக்கு இப்பவே இந்த இடத்துலயே சிமெண்ட் மூட்டய தந்தாகணும். இல்லன்னா, நான் உன்னை விடப்போறதாய் இல்ல.” “நீ இவ்வளவு சொன்ன மட்டும் நான் ஒனக்கு சிமெண்ட் தரப்போறதாய் இல்ல. எப்போ தந்தாலும் தருவேன். ஆனால் இப்போ தலையே போனாலும் தரவே மாட்டேன்.” “தராட்டா எடுப்பேன்.” “எடுக்கிற கைய ஒடிப்பேன்.” “பாத்துப்புடலாண்டா.” “பாத்துக்கிட்டே இருடா.” வேலையாட்கள் செம்பட்டையான் கரும்பட்டையான் ஆகிய இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆகையால், தத்தம் சேவல்களுக்கு ஆதரவாய் உடம்பை நிமிர்த்தியபோது - திருமலை, இரும்புக் கால்களை எட்டாக்கிக் கடைக்குள் நுழையப் போனான். துளசிங்கம் தனது குஸ்திக் கைகளால் அவனை மல்லாக்கத் தள்ளியபோது, கீழே விழப்போன திருமலையை, கரும்பட்டையான் வேலையாள் தாங்கிக் கொண்டான். அந்த ஆத்திரத்தில் திருமலை, துளசிங்கம் வயிற்றில் காலால் உதைத்தான். அந்த வலியை ‘எம்மா’ என்று சொல்லித் தாங்கிக் கொண்ட துளசிங்கம், திருமலை மேல் பாய்ந்தான். இருவரும் நின்று கொண்டே அடித்தார்கள். விழுந்து கொண்டே உதைத்தார்கள். எழுந்து கொண்டே ஒருவர் முகத்தில் ஒருவர் குத்திக் கொண்டார்கள். பிறகு கட்டிப் பிடித்து உருண்டார்கள். சிமெண்ட் மூட்டைக்குள் சிக்கியபடியே சுழன்று, வாசல் வழியாகப் புரண்டு, சாலையோரமாக பந்து போல் உருண்டு, நாய் போல குலைத்து, நரிபோல ஊளையிட்டு, நண்டு போல சுருண்டு, நடு ரோட்டிற்கு வந்தார்கள். நல்ல வேளையாக அப்போது பஸ்கள் வரவில்லை. வேலையாட்களுக்கோ வாலி-சுக்ரீவன் போரைப் பார்த்துக் கொண்டு நின்ற ராமனின் நிலை. இருவரும் உருண்டு சுருண்டதில், எவன் துளசிங்கம், எவன் திருமலை என்று தெரியவில்லை. திருமலை துளசிங்கத்தை கீழே போட்டு மேலே வரும்போது, செம்பட்டையான் ஆட்கள் அவன் கழுத்தைப் பிடிக்க குனியும் போதே, திருமலை கீழேயும், துளசிங்கம் மேலேயும் வந்துவிடுவான். துளசிங்கம் மேலே தோன்றும்போது, அவனை அந்தரத்தில் தூக்கிப் போட நினைத்த கரும்பட்டையான்கள் அதற்குள் திருமலை மேலே வந்ததைப் பார்த்து, குனிந்த உடம்பை நிமிர்த்தினார்கள். அந்தச் சாலைவாசிகள், அனைவருமே கூடிவிட்டார்கள். சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு, யார் தோற்கிறான் என்பதை கண்டு பிடிக்க அதிக நேரம் ஆகும் என்பதாலும் எவன் படுக்கிறான் என்று தெரிவதற்குள், தத்தம் கடை வியாபாரம் படுத்துவிடும் என்பதாலும், இருவரையும் பிரித்து விட்டார்கள். பிரிந்தவர்கள் சிறிது பின்வாங்கி நின்றபோது பிரிபட்டவர்கள் மீண்டும் பிணையப் போனார்கள். ஒருவருக்கு அலுத்து விட்டது. காண்டிராக்டர் தாமோதரன் பிரித்த ஆட்களை விலக்கித் தள்ளிவிட்டு, இருவரின் கைகளையும் பிடித்து நேருக்கு நேராய் நிறுத்திவிட்டு, கத்தினார். “நாங்க யாரும் ஒங்கள பிடிக்க மாட்டோம். உம் பாயுங்க. எவனாவது ஒருவன் கீழே விழுறது வரைக்கும் சும்மாவே இருக்கோம். டேய் ஆஸ்பத்திரிக்கு ஒரு வண்டிய ரெடி பண்ணி வையுங்கடா.” தாமோதரன், வேறு யாரையோ சொல்வது மாதிரியும், அதுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும் துளசிங்கமும், திருமலையும் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க நிற்கிறார்கள். மற்போரைச் சொற்போராக்குகிறார்கள். திருமலையின் காதில் ரத்தம் ஒழுகியது, துளசிங்கம் கடித்த கடி. ரத்தச் சொட்டுக்களோடு பேசினான். “செறுக்கி மவன். சிமெண்ட் கேட்டா தர மாட்டாங்கான். எனக்கு இப்போ ரெண்டு மூட்ட சிமெண்ட் வேணும். வாங்காமப் போக மாட்டேன். செறுக்கி மவன் சரியான நாயி. எப்டி கடிச்சிருக்கான் பாருங்க.” திருமலை கொடுத்த அடியில், கை வளைத்து நின்ற துளசிங்கம், வளையாத வலது கையை ஆட்டியபடியே பதிலளித்தான். “நான் நாயின்னா இவன் வெட்டியான். என் கைய எப்டி வளச்சிருக்கான் பாருங்க. சிமெண்ட் அவனுக்கு இனிமேல் எப்பவும் கிடையாது. வேணுமுன்னால் புகார் பண்ணிக்கட்டும்.” இதற்குள் ஊரே கூடிவிட்டது. பாக்கியம், திருமலை காதில் பெருக்கெடுத்த ரத்தத்தை முந்தானை சேலையால் துடைத்தபடியே ஒப்பாரியிட்டாள். கோலவடிவு, அம்மாவுக்கும் தாயம்மாவுக்கும் பின்னால் நின்று கைகளைப் பிசைந்தாள். ரஞ்சிதம் நெற்றிச் சுருக்கங்களோடு நின்றாள். சந்திரா, துளசிங்கத்தை நாயே, பேயே என்று திட்ட, துளசிங்கத்தின் அம்மா அன்னம்மா எதிர்திட்டு போட்டாள். அலங்காரி, துளசிங்கத்தின் கையைத் தடவி விட்டபடியே, “என் ராசா ராசா” என்று கத்தினாள். இதற்குள் கரும்பட்டையான்களும், செம்பட்டையான்களும் அணிவகுத்தும் ஆர்ப்பரித்தும் பேசினார்கள். “சிமெண்ட் வாங்க விடமாட்டோம்.” “தராத சிமெண்ட் எடுக்காம விடமாட்டோம்.” “செம்பட்டையான் கடைக்குள்ள வந்து சிமெண்ட் எடுக்கணு முன்னால் அந்தக் கடையே கரும்பட்டையான்களுக்கு சமாதியாயிடும்.” “கரும்பட்டையான் வம்சத்துக்கு முன் வச்ச காலை பின் வச்சு பழக்கமில்ல. அந்தப் பழக்கத்தை மாத்திக்கவும் தயாராய் இல்ல.” “சரி வந்து பாருங்க.” இந்த சண்டைக்கு மூன்றாவது கனபரிமாணமாக, ‘காத்துக் கருப்பன் குடும்பத்து’ அதே அந்த ராமையா கோபாவேசமாகப் பேசினார். சூதுவாதில்லாத மனிதர்தான். கோலவடிவை, அக்னி ராசாவுக்கு திருமணம் செய்யும் உறுதியோடு அவர் பேசவில்லைதான். ஆனாலும் பழனிச்சாமி மச்சான் மேல் புதிதாக வந்த பாசம் அவரை இப்படிப் பேச வைத்தது. “ஏய் துளசிங்கம்! நீ பேசுறது அக்கிரமண்டா. ஒன் கடை உரத்த வயலுல போட்டு இப்போ பயிரெல்லாம் சாவியா போயிட்டு.” “சிமெண்டுக்கும், உரத்துக்கும் என்ன சம்பந்தம்.” “எங்க அண்ணாச்சிய பேச விடுடா. பேமானிப்பயல... அவரு யாரோடயும் பேசாதவர். இப்பவாவது பேசட்டும்.” “ஒரே வார்த்ததான் பேசப் போறேன். துளசிங்கம் கடை பொதுக் கடை. சாமியை நம்பாதவன் கற்பூரம் விற்கதுமாதிரி இவன் பிடிக்காத திருமலைக்கும் சிமெண்ட் மூட்டைய கொடுத்தாகணும். இல்லன்னா கடையை உடைச்சாகணும்.” காத்துக் கருப்பன்கள் ‘பைத்தியார தர்மரு’ ராமய்யாண்ணன் பின்னால் கச்சைக் கட்டி, அவரின் இச்சையை நிறைவேற்றத் துடித்தார்கள். ஆனானப்பட்ட அதிகாரிகளையே கெஞ்சியும், மிஞ்சியும் மடக்கிப் போடும் ஒத்தை வீடு காண்டிராக்டர் தாமோதரன் விவகாரியானார். “டேய் துளசிங்கம் போனால் போவட்டும். திருமலைக்கு ஒரு மூட்டை சிமெண்டையாவது கொடு.” “இதைவிட என் உயிரக் கேளும் தாரேன்.” “உயிரும் இப்போ போகத்தான் போகுது.” ரஞ்சிதம் அடிமேலடியாய் நடந்து, கூட்டதுக்கு முன்னால் வந்து தீர்ப்பளிப்பவள்போல் பேசினாள். “நான் எல்லாருக்கும் பொதுப்பிள்ள, அடுத்த சாதி அற்பம். நான் சொல்லுறதக் கேளுங்க. நம்ம யூனியன் காண்டிராக்டர் அய்யா தாமோதரன், முருகன் கோயில் முகப்பு கட்டுறதுக்கு உபயமாய் பத்து மூட்டை சிமெண்ட் வாங்கி துளசிங்கம் கடையிலேயே போட்டிருக்கார். அதுல எத்தன மூட்டை சிமெண்ட வேணுமுன்னாலும் திருமலை அவருகிட்டயே பணத்தக் கொடுத்துட்டு, எடுத்துக்கட்டும். தாமோதரய்யா தன்னோட சிமெண்ட் மூட்டைய எடுத்துக் கொடுப்பாரு. இதனால துளசிங்கம் மானமும் போகல. திருமலை மானமும் போகல. சிமெண்ட் மூட்டதான் போவுது.” “ரஞ்சிதம் ஒன்னை கொழும்புக்கு அனுப்பி வைக்கணும்.” அந்தத் தீர்ப்பால் எல்லோருக்கும் திருப்தி. ஒரு சில கர்நாடக விவகாரிகள்தான் மனதுக்குள் முனங்கிக் கொண்டார்கள். “போயும் போயும் ஒரு ஒத்தை வீட்டுப் பொண்ணு அடுத்த சாதிக்காரி... சொக்காரப் பலம் இல்லாத ரஞ்சிதமா இந்த வழக்க தீர்த்து வைக்கணும். நாங்க எதுக்கு இருக்கோம்?” விவகாரம் தீர்ந்து கொண்டிருந்த போது, அக்கினி ராசாவின் அப்பா ராமய்யாதான் தனது சுபாவத்திற்கு மாறாக விடாப்பிடியாகப் பேசினார். “அதுல்லாம் முடியாது. தாமோதரன் சிமெண்ட் விற்றுப் போன சிமெண்ட். துளசிங்கந்தான் அவன் கையால வேற சிமெண்ட்ட கொடுக்கணும்.” தாமோதரன், ராமய்யாவின் மோவாயைத் தூக்கி, தன் உள்ளங்கையில் தாங்கிக் கொண்டே மன்றாடினார். “போவட்டும் மச்சான். போவட்டும் ரெண்டு தரப்புமே சம்மதிச் சுட்டாங்க. நமக்கென்ன வம்பு. டேய் துளசிங்கம். என் சிமெண்ட் மூட்டையை தனியா ஒதுக்கு. இந்தாடா திருமலை நூற்றி எண்பத்து நாலு ரூபாயும் முப்பது பைசாவையும் எடு. என்கிட்டயே கொடு. சிமெண்ட்டோட விலை. வயசுப் பொண்ணு வளத்தி மாதிரி கூடிக்கிட்டே போவுது. இன்னைய ரேட்டுப்படி. மீதிக் கணக்கு அப்புறம் பார்த்துக்கலாம்.” “ஆமா தெரியாமத்தான் கேக்கேன், நீரு விவகாரியா, இல்ல வியாபாரியா, மாப்பிள்ளே.” திருமலை சட்டைப் பையைத் துழாவினான். வேட்டியைத் தூக்கி, டவுசர் பைக்குள் கைவிட்டான். அப்போதுதான் அவனுக்கு உறைத்தது, வெறும் கையில் முழம் போட்டிருக்கான். இந்தச் சமயத்தில் யாரிடமாவது பணம் கேட்டால், தான் துளசிங்கத்திடம் வம்புச் சண்டைக்குப் போனதாக அர்த்தமாகிவிடும். திருமலை என்ன செய்வது என்று புரியாமல் விழித்தபோது, துளசிங்கம் புரிந்து கொண்டான். திருமலை வம்புச் சண்டைக்கே வந்தவன் என்பதை நிரூபிப்பதற்காக, அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சபையிடம் முறையிடப் போனபோது - திருமலை அண்ணாவின் தடுமாற்றத்தைப் புரிந்துகொண்ட கோலவடிவு, அண்ணனின் அருகே வந்து, முந்தானையில் மடித்து வைத்திருந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை திருமலையின் கையில் லாவகமாகத் திணித்தாள். உடனே அவன், அந்த நோட்டுக்களை பத்து ரூபாய் நோட்டாக பயந்து பார்த்து, பிறகு சந்தோஷப்பட்டு தாமோதரனிடம் நீட்டினான். துளசிங்கம், கோலவடிவை, பற்களைக் கடித்துப் பார்த்தான். |