இரண்டாவது பதிப்பு முன்னுரை

     மானுடத்தின் மூன்றாவது பரிமாணமான அலிகளைப் பற்றிய இந்த 'வாடா மல்லி' நாவல் இரண்டாவது பதிப்பாக வாசகத் தோழர்களை நோக்கி வலம் வருகிறது. எழுத்தாளன் என்ற முறையில் எனக்குப் பெரும் அளவிற்கும், அலித்தோழர்களுக்கு சிறிய அளவில் கிடைத்தும் உள்ள ஒரு நல்ல செய்தியின் பின்னணியில் இந்த இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. அமரர் ஆதித்தனாரின் ஐம்பதினாயிரம் ரூபாய் 'இலக்கிய விருது' இந்த நாவலுக்குக் கிடைத்தது. டாக்டர் ஔவை நடராசன், டாக்டர் பொற்கோ, ராணி ஆசிரியர் மாரிசாமி ஆகியோரைக் கொண்ட நடுவர் குழு இந்த நாவலைத் தேர்ந்தெடுத்தது. சென்னையில் ராணி - சீதை அரங்கில் இந்த விருதை முதல்வர் கலைஞர் அவர்கள் எனக்கு வழங்கினார்கள். எனக்கு அன்று முதல் இன்று வரை தம்பிரான் தோழராக விளங்கும் திருமிகு சிவந்தி ஆதித்தன் அவர்கள் இந்த விழாவில் என்னைப் பற்றி மிக உயர்வாகக் குறிப்பிட்ட போது மிகவும் நெகிழ்ந்து போனேன். அதே சமயம் இந்த நாவலை உடனடியாக வெளியிட்டு எனது பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்ட வானதி பதிப்பக உரிமையாளர் பெரியவர் திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றி சொல்லாத குற்றத்தையும் செய்துவிட்டேன். என்றாலும் அவர் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத பெருந்தகை. ஆனாலும் இன்றும் என் மனம் கேட்கவில்லை.

     அமரர் ஆதித்தனார் அவர்களின் மூலம் தான் எளிய, இனிமையான தமிழைக் கற்றுக் கொண்டு என் படைப்புக்களில் அதைப் பயன்படுத்தினேன். ஆகையால் 'ஆதித்தனார் விருது' கிடைத்தது ஒரு வகையில் பொருத்தமே. விழா மேடையில் நான் அறிவித்தது போல், பரிசுத் தொகையில் பத்தாயிரம் ரூபாயை அலித் தோழர்களின் நலவாழ்விற்காக ஒதுக்கி இருக்கிறேன். இந்தப் பணம் 'கடலில் கரைத்த காயம்' என்று சில நண்பர்கள் சொன்னதால் இந்தப் பணத்தையே மூலதனமாக வைத்து அலிகளுக்கும், அவர்களைப் போல் நலிந்தோர்க்கும் ஒரு அறக்கட்டளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அது முழுமையாக வடிவம் பெற இன்னும் நாளும், நேரமும் கூடி வரவில்லை.

     இந்த நாவல் வந்த பிறகு தான் பல சிந்தனையாளர்களுக்கு அலிகளைப் பற்றி நல்ல விதமான ஒரு கண்ணோட்டம் வந்திருக்கிறது. இன்னும் சில எழுத்தாளர்கள் இந்த நாவலைப் பற்றிக் குறிப்பிடாமலே தாங்கள் ஏதோ அலிகளைப் பற்றி முதல் முயற்சியாய் எழுதப் போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்... என்றாலும் இது இந்த நாவலின் வெற்றிதான். இந்த நாவல் மண்ணுக்குள் வேராக இருந்து அந்த வேரை விடப் பெரிய அடிமரத்தையும் கிளைகளையும் தோற்றுவித்தால் அதுவும் ஒரு வெற்றிதான்... ஆங்காங்கே அலிகளைப் பற்றிய விஞ்ஞானப்பூர்வமான கட்டுரைகளும், செய்திப் படங்களும், மனிதாபிமான சித்தரிப்பும் இந்த நாவலுக்குப் பிறகுதான் ஏற்பட்டுள்ளன... இது ஒரு ஆரோக்கியமான சங்கதி... கூவாகத்தில் ஆண்டுக்கொரு தடவை கூடும் அலிகளுக்கு, காமக் களியாட்டங்கள்தான் பெரிது என்பது போல் சித்திரிக்கும் பத்திரிகைகள் கூட இப்போது அவர்களுடைய பிரச்னைகளை முதல் தடவையாக வெளியிட்டுள்ளன... அதே சமயம் இவர்களைப் பற்றி இப்படி முதல் தடவையாக ஒரு நாவல் வந்திருக்கிறது என்று சொல்வதற்கு அந்தப் பத்திரிகைகளுக்கு விசாலமான மனம் இல்லை...

     கூவாகத்தில் கூடிய அலித் தோழர்களுக்காக ஒரு விழா நடந்திருக்கிறது... இவர்களைப் பற்றி முதல் தடவையாக மனித நேயத்துடன் எழுதிய எழுத்தாளனைப் பேசுவதற்கு அழைக்க வேண்டுமென்று விழாக்காரர்களுக்குத் தோன்றவில்லை... ஆனாலும் அலிகளுக்கு அழகுப் போட்டி நடத்தி விழாவை விகாரமாக்கியவர்கள் அழைத்திருந்தாலும் நான் போயிருக்க மாட்டேன்...

     ஏழைகளைப் பற்றி எழுதுகிற ஒரு எழுத்தாளனுக்கு பரிசு கிடைத்தாலும் அதே சமயம் அந்த ஏழைகள் முன்னேறாமல் இருப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்... ஆகையால் இந்தப் பரிசுகள் ஏழ்மையின் வெற்றியே தவிர ஏழைகளின் வெற்றி அல்ல... இதே போல் இந்த நாவலுக்குக் கிடைத்த பரிசும், பேரும் அலித்தன்மையின் வெற்றியே தவிர அலிகளின் வெற்றி அல்ல என்றே கருதுகிறேன். இப்படிக் கருதுவதற்குக் காரணமும் இருக்கிறது. சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்பிக்கப்படுகிறார்கள். செம்மறி ஆட்டிலிருந்து அதன் நகலான இன்னொரு செம்மறி ஆடு உருவாக்கப்படுகிறது. பெற்றோர் இல்லாமலேயே நகல் மனிதர்களை உருவாக்கும் வேண்டாத வேலையிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் இதே இந்த விஞ்ஞானிகளுக்கு அலிகள் ஏன் இப்படி உருவாகிறார்கள் என்று ஆழமாக ஆய்வு செய்ய நேரமில்லை... கேட்டால் 'குரோமோசோம் கோளாறு' என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடுவார்கள். இன்றைய விஞ்ஞான பொற்காலத்தில் இந்தக் கோளாறுகளைச் சரிப்படுத்த வேண்டுமென்ற மனிதாபிமானம் எவருக்கும் ஏற்படவில்லை... இதுதான் இன்றைய நடைமுறை... இது மாறும் என்று நம்புவோமாக...

     'ஆனந்த விகடனில்' இது தொடர்கதையாக வந்த போதும், பின்னர் இது நூலாக வடிவம் எடுத்த போதும் அருமையான படம் வரைந்த ஓவியர் அரஸ் அவர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாவலை 'இந்தியா டூடே'யில் விமர்சித்த பேராசிரியர் சு. வேங்கட்ராமன், 'சுபமங்களா'வில் விமர்சித்த கோபாலி, எனது தோழர்களான செம்மலர், தாமரை, தீக்கதிர் உள்ளிட்ட அனைவருக்கும் நான் நன்றிக் கடன் பட்டவன்... இந்த நாவலை அச்சுப்பிழை திருத்துவதிலிருந்து இரண்டாம் பதிப்புக்கு முன்னுரை எழுத வேண்டுமென்று என்னை வற்புறுத்தியவரும், இந்த நாவலோடு இரண்டறக் கலந்த என் தேசியத் தோழர் தர்மலிங்கம் அவர்களுக்கும், இந்த நூல் சிறப்பாக வெளிவரத் துணை நின்ற பெரியவர் திருநாவுக்கரசு அவர்களின் திருமகன்களான ராமு, சோமு ஆகியோருக்கும் செலுத்த வேண்டிய நன்றிக் கடன் என்னிடம் அதிகமாகவே உள்ளது... இதற்கு முன்னுரை எழுதிய விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியன், ஆய்வுரை எழுதிய டாக்டர் இராம குருநாதன், இந்த நாவலை விமர்சித்து கடிதங்கள் எழுதிய ஏராளமான வாசகத் தோழர்கள் அத்தனை பேருக்கும் என் நன்றி உரித்தாகுக... இந்தப் படைப்பை பாலக்காடு பல்கலைக்கழகத்தில் பாடநூலாக்கக் காரணமான அந்தப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ராசாராம் அவர்களுக்கும் நன்றியுடையேன். இந்த நாவலுக்கு ஆய்வு நிகழ்ச்சி வைத்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க வடசென்னைக் கிளைத் தோழர்களையும், கோவை மாவட்டத்தில் இதற்கு ஆய்வரங்கம் நடத்திய சக எழுத்தாளர் தோழர் சுப்ரபாரதி மணியனுக்கும், அந்த அரங்கில் ஆய்வுக் கட்டுரை படித்த கோவையில் வாழும் ஞானியான பழனிச்சாமி அவர்களையும், உரையாற்றிய தோழர் பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரையும் இதோ இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்...

     இதன் மூன்றாவது பதிப்பும், வானதி மூலம் விரைவில் வெளிவரப் போவது நிச்சயம்... அப்போது எனது மூன்றாவது முன்னுரையில் அலிகளுக்கான அறக்கட்டளை செய்யும் சேவகம் பற்றியும், இந்த நாவல் அகில இந்திய அளவில் திரைப்படமாக வந்துள்ளதையும் நான் குறிப்பிடாமலேயே வாசகர்கள் அறிந்து கொள்ளும் சூழலும், அனைத்திற்கும் மேலாக பாவப்பட்ட அலித்தோழர்களின் வாழ்க்கையில் ஒரு ஆரோக்கியமான மாறுதலும் ஏற்படுமென நம்புகிறேன். இந்த நம்பிக்கை நனவாக வாசகத் தோழர்களாகிய நீங்கள் வாய்ச்சொல் அருள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
சு.சமுத்திரம்
4-5-1997
சென்னை-41.