உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
10 சுயம்பு பல்கலைக்கழக விடுதிக்கு வந்தபோது இரவாகிவிட்டது. மூர்த்தியும் முத்துவும் அவனைப் பழையபடியும் கண்டுக்காமல் இருந்தார்கள். இவன்தான் விடவில்லை. “என்னடா ஒருத்தி எங்கே போயிட்டு வருதுன்னு கேட்கிறீங்களாடா... நீங்க ஆம்புளைங்களாடா...” “என்னடா உளறுறே.” “எங்க அக்காவுக்கு நிச்சயிச்ச மாப்பிள்ளயப் பார்த்து விட்டு வரேன். எனக்கே அவரு மேல ஒரு ஆசை. அது காதலா மாறாமல் இருக்க ரெண்டு காரணம் இருக்கு.” “மாத்திரை வேகம் முடிஞ்சுட்டுன்னு நினைக்கேன். இன்னிக்கு இவனுக்கு ரெண்டு மாத்திரையா போடணும்.” முத்து மாத்திரைகளை எடுக்கப் போனபோது, மூர்த்தி கத்தினான். “பாவிப் பயலே. போனதே போனே. சொல்லிட்டுப் போகலாம் இல்ல. உன்னால இன்னிக்குப் பெரிய ரகளை. சீனியர்கள்தான் உன்னைக் கடத்திட்டுப் போயிட்டாங்கன்னு நாங்க உருட்டுக் கட்டையோட போக, அவங்க சைக்கிள் செயினோட எதிர்க்க, கடைசியில் விவகாரம் ‘ரிஜிஸ்ட்ரார்’ வரைக்கும் போயிட்டுது. போலீஸ்ல வேற கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கு. இப்போ உன் பேரு துணை வேந்தர் பேர விட அதிகமா அடிபடுது... என்னடா நினைச்சுக்கிட்டே...” “போடா கீடான்னு டா போட்டுப் பேசினே, பல்ல உடைப்பேன்டா...” “நீ மட்டும் பேசலாமாடா...” “நீ ஆம்புள... டாதான் போடணும்.” “டேய் முத்து. இவன் வாய்க்குள்ள மாத்திரையைத் திணிடா. அப்பத்தான் தத்துப்புத்துன்னு பேசமாட்டான்.” சுயம்புவின் வாய்க்குள் இரண்டு மாத்திரைகள் உருட்டி விடப்பட்டன. ஒரு டம்ளர் தண்ணிர் நாக்கு வழியாக உருண்டோடியது. அவனைக் கட்டிலில் படுக்கச் சொல்லிவிட்டு மூர்த்தி முத்துவோடு படுத்துக்கொண்டான். எல்லோரும் தூங்கிவிட்டார்கள். ஒரு மங்கலான விளக்கு மட்டும் பாதித் தூக்கத்தில் எரிந்தது. நாய்களின் குலைப்புச் சத்தம்கூட இல்லை. சுயம்பு கூட படுத்த வேகத்திலேயே தூங்கிவிட்டான். அனைத்தும் அடங்கி, அனைத்து மூச்சுக்களும் கூட மூர்ச்சையானது போன்ற நடுநிசி. சுயம்பு, வீறிட்டுக் கத்தினான். அந்தக் கத்தலில், அவன் அறைவாசிகள் மட்டுமல்ல, அந்த மாடி முழுவதிலுமிருந்தவர்கள் அவனை மொய்த்து விட்டார்கள். சில பயல்கள் ஜட்டிகளோடுகூட வந்தார்கள். சுயம்புவைப் பார்த்தார்கள். அவன் கைகால்கள் இழுத்தன. நாக்கு, வாய்க்கு வெளியேயும், உள்ளேயுமாய்ப் புரண்டு கொண்டிருந்தது. மேல் உதடும் கீழ் உதடும் ஒன்றை ஒன்று நெருக்கின. பற்களுக்கு இடையே அவன் நாக்கு வெட்டி எடுக்கப் போவது போன்ற நெருக்கம். கண்கள் சொருகின. தலை உருண்டது. அவனால் இப்போது கூச்சலிட முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு சப்தம். பூனையின் கால் நகங்களில் சிக்கிய அணில் மாதிரியான அவலச் சத்தம். மூர்த்தியும், முத்துவும், சுயம்புவின் தலையையும் கால்களையும் பிடித்துத் தூக்க, மற்றவர்கள் அவன் முதுகுக்குள்ளும், பின்பக்கமும் கைகளைச் சொருகினார்கள். சுயம்பு கூச்சப்பட்டு நெளிவது போலிருந்தது. பிறகு அந்த நெளிவே, நிமிர முடியாமல் திண்டாடியது. கால் கைகள் அங்கு மிங்குமாய் வெட்டி வெட்டி அவனைச் சுமந்தவர்களின் முகங்களில் ரத்தச் சுவடுகளை ஏற்படுத்தின. சுயம்பு கீழே கொண்டு வரப்பட்டான். அநேகமாய் பிழைக்கமாட்டான் என்ற அச்சம். எங்கே போவது? டவுனில் எந்த டாக்டரும் இருக்கமாட்டார். டாக்டர் வீட்டைக் கண்டுபிடிக்கும் முன்பே உயிர் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்குப் போய்விடலாம். மூர்த்திதான் தட்டுத் தடுமாறிச் சொன்னான். “மெடிகல் காலேஜ் ஹாஸ்டலுக்குப் போகலாம்.” “முடியாது... அவ்வளவு பேசிட்டு எந்த முகத்தோட போறது.” “அப்போ உங்க சுயமரியாதைக்காக இவனை இங்கேயே சாக விடுறதா?” மாணவர்களின் வாதப் பிரதிவாதங்களுக்கு இடையே சுயம்பு மருத்துவ மாணவர் விடுதிக்குக் கொண்டு போகப்பட்டான். அங்கே அதட்டிய வாட்ச்மேனை பல குரல்கள் அதட்டின. உடனே அவன் பயந்துபோய் விடுதி மாணவர் செயலாளர் டேவிட்டின் அறையைக் காட்டினான். கூடப் போக உதறல். டேவிட் அறை முன்னால், சுயம்புவைத் தரையில் கிடத்தினார்கள். மாணவர்களின் கூச்சலில், டேவிட் கதவு தட்டப்படாமலேயே வெளியே வந்தான். துள்ளத் துடிக்கக் கிடந்தவனைப் பார்த்துக் குனிந்து நாடி பிடித்தபடியே கேட்டான். “எப்படி இது. ஏதாவது மருந்து கொடுத்தீங்களா...” “நீங்க சொன்னது மாதிரி டாக்டர்கிட்ட கூட்டிப் போனோம். ‘டிரான்குலை’சர்னு எழுதிக் கொடுத்தார். நைட்ல ஒண்ணுதான் கொடுக்கச் சொன்னார். நாங்க இவன் அதிகமா உளறுறான்னு கூட ஒரே ஒரு மாத்திரையைத்தான் போட்டோம். இப்படி ஆயிட்டான்.” “நாங்க எப்படி என்ஜினியராகக் கூடாதோ, அப்படி நீங்களும் டாக்டராகக் கூடாது. ஒரு மாத்திரையையே தாங்க முடியாது. இதுல வேற ரெண்டா. கவலைப் படாதீங்க. ஆளு சாகப் போறது மாதிரி அந்த மாத்திரை அடம் பிடிக்கும். வெறும் மிரட்டல் தான். நாம சண்டை போட்டோமே, அப்படி ஒரு பொய்ச் சண்டை. சரி, சரி பிரிஸ்கிரிப்ஷனை எங்கே. ஏன் அப்படி கைய விரிக்கீங்க. போய்க் கொண்டு வாங்க. நான் கீழே டிஸ்பென்சரிக்குப் போறேன். அங்க கொண்டு வந்துடுங்க. இவர் இங்கய இருக்கட்டும்.” சுயம்புவை அங்கே கூடிய மருத்துவ மாணவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சக பொறியியல் மாணவர்களையும் அங்கேயே நிற்கும்படி கையாட்டிவிட்டு, மூர்த்தியும் முத்துவும், கீழே இறங்கித் தங்களது அறையைப் பார்த்து ஓடினார்கள். டேவிட்டும் அறைக்குள் போய் ஒரு சாவியை எடுத்துக் கொண்டு கீழே ஓடினான். கால் மணி நேரத்தில் அந்த மூவரும் உள்ளே வந்தார்கள். சுயம்புவுக்கு ராஜ யோகம். பொறியியல் மாணவர்களும் மருத்துவ மாணவர்களும் ஊசியும் மருந்தும் போல, மாத்திரையும் தண்ணிரும் போல ஒருவரோடு ஒருவர் விரவிக் கலந்து, அவனை டேவிட்டின் வெல்வெட் மெத்தைக் கட்டிலில் கிடத்தினார்கள். கை கால்களைப் பிடித்து விட்டார்கள். இதற்குள் உள்ளே வந்த டேவிட், அவன் வாய்க்குள் ஒரு பெரிய ஸ்பூனை வைத்து, உதடுகளை ஒட்டிக் கொள்ளாமல் செய்தான். பிறகு முறிவு மாத்திரையை வாய்க்குள் போட்டான். இன்னொரு டாக்டர்-மாணவன் அவன் வாய்க்குள் நிசமாவே பால் வார்த்தான். காலே கால் மணி நேரத்தில் சுயம்புவும், அவன் ஆட்டம் போட்ட கையும் காலும் அடங்கியது. சொருகிய கண்கள் சுகமாகப் பார்த்தன. அவன் எழுந்திருக்கக் கூடப் போனான். அவனை அசைய விடாமல் முத்து பிடித்துக் கொண்டபோது, மூர்த்தி கத்தினான். “பாவிப் பயலே. நீ இனிமேலும் இதே மாதிரி ஏதாவது ஏடாகூடம் செய்யத்தான் போறே. ஒப்பன் என் அப்பாவி மகன பார்த்துக்கப்பான்னு சொல்லிட்டுப் போனாரு. நீ செத்துக்கித்துப் போனா அவருக்கு நான் என்ன பதில் சொல்லணும்முன்னு இப்பவே சொல்லிடுடா...” எல்லோரும் சிரித்தார்கள். நேற்றைய சண்டைக்காரர்கள் இன்றைய நண்பர்களானார்கள். டேவிட், சுயம்புவின் இதயத்தின் பக்கம் ஸ்டேதாஸ்கோப்பை வைத்தான். பிறகு வயிற்றில் கை வைத்தான். பிறகு கேட்டான். “தம்பிக்கு இப்ப எப்படி இருக்குது...” சுயம்புவுக்கு வெட்கமாகிவிட்டது. வயிற்றில் பட்ட டேவிட்டின் கையைப் பிடித்து அது விலகாதபடி வைத்துக் கொண்டான். நாணிக்கோணிப் பேசினான். “என்னத் தம்பின்னு சொல்லாதீங்க... வேணும்னா பேரு சொல்லிக் கூப்பிடுங்க...” டேவிட், உட்பட எல்லோரும் அவனை அதிசயமாகப் பார்த்தார்கள். வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|