11

     அந்தப் பல்கலைக் கழக வளாகத்தில், அகில உலகின் ஒட்டு மொத்தமான தலைவிதியை நிர்ணயிக்கப்போவது மாதிரியான வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தது. விருந்தினர் மாளிகையில் ஒரு வி.ஐ.பி. அறையில், ஒரு வாக்குப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. சிலர் எடுத்து எடுத்துக் கொடுக்க, பலர் மடித்து மடித்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பேப்பரிலும் பதினைந்து மாணவ வேட்பாளர்கள். இவர்களில் இருவர் பெண்கள்.

     அந்த விருந்தினர் விடுதிக்கு, வெளியே ஆட்டோக்களும் டாக்ஸிகளும் தூள் பரப்பின. ஒவ்வொன்றிலும் ஏழெட்டு மாணவ வாக்காளர்கள். சில மோட்டார் பைக்குகளும் ஸ்கூட்டர்களும் வாக்காளர்களை இறக்கி விட்டு அவர்கள் வாக்குச் சாவடிக்குள் போனதும் கொடுத்த வாக்கை அங்கேயே மறப்பது போல், மாயமாய் மறைந்தன. சைக்கிள்களில் ஏறச் சொன்னால் எல்லோருக்குமே தயக்கம். கொண்டு வந்துவிட்ட வாகனங்கள் மீண்டும் வரும் என்று வாக்களித்தவர்கள் காத்திருந்த நேரத்தில் தங்களது அறைகளுக்கு மூன்று தடவை போய் விட்டு வந்திருக்கலாம்.

     ஒரு வகையில் இது வரலாறு காணாத தேர்தல்தான். பொறியியல் கல்லூரி யூனியன் தேர்தலில், முதலாண்டு மூர்த்தியும், நான்காவது ஆண்டு செல்லமுத்துவும் செயலாளருக்குப் போட்டியிடுகிறார்கள். பொன்முகன், தலைவர் பதவிக்கும், அவன் படிக்கும் இறுதி வகுப்பிலேயே படிக்கும் ஏகாம்பரம் அதே பதவிக்கும் போட்டியிடு கிறார்கள். இது தவிர, இன்னும் சில ஜாயிண்ட், உதவிச் செயலாளர்கள், பொருளாளர்கள் பதவிகளுக்கும் பல போட்டிகள். ரேக்கிங் செய்யப்பட்ட அனைத்து மாணவ மாணவிகளும் ஒன்று சேர்ந்து மூர்த்திக்கும் செல்லமுத்துவுக்கும் வாக்களிக்கிறார்கள் என்ற நிலமை. செல்லமுத்து ஃபைனல் ஆண்டு என்றாலும், ஃபைனான பையன். ரேக்கிங் செய்தவர்களைத் தடுத்தவன். ஆகையால் அது ஒன்றே, அவனுக்கு மூல பலமாக இருந்தது. பொன்முகனுக்கு, முழுப்பயம் பிடித்தது.

     எங்கு பார்த்தாலும், போஸ்டர் மயங்கள். மாயங்கள், அத்தனையிலும் பொன்முகத்தின் திருமுகம் பெரிதாகவும், அவனது செட்டின் படங்கள் சிறிதாகவும் இருந்தன. ஏகாம்பரம் கோஷ்டியும் சுவரொட்டிகள் அடித்திருந்தார்கள். சில மின்சாரக் கம்பங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் தூக்கு போடப்பட்டவை போல் தொங்கின. இன்னும் சில போஸ்டர்கள் எந்த சம்பந்தமும் இல்லாத பஸ் நிலையத்திலும், பெண்கள் பாலிடெக்னிக்கிலும் ஒட்டப்பட்டிருந்தன. போஸ்டர்கள் என்றால் சாதாரண போஸ்டர்கள் அல்ல. மல்டி கலர். “புரட்சித் தலைவரின் ஆசி பெற்ற இவருக்கு வாக்களியுங்கள்” என்று பெரிய வேண்டுகோள். அவரது காலடியில் வேட்பாளன் “தமிழினத் தலைவரின்” ஆதரவு பெற்ற அவருக்கு வாக்களியுங்கள் என்று ஒரு வாசகம். கலைஞரின்கண் களிலிருந்து தோன்றும் ஒளிக்கற்றைகளை சம்பந்தப்பட்ட மாணவ-வேட்பாளன் முகமெங்கும் தாங்கிக்கொள்வது போன்ற போஸ், இது போதாதென்று பலர் சுயேட்சை வீரப்ப கவுண்டர்களாகவும் போட்டிக்கு நின்றார்கள். இவர்கள் போஸ்டர்கள் போடவில்லையென்றாலும், கிலோ கணக்கில் துண்டுப்பிரசுரம் அச்சடித்திருந்தார்கள். பொதுவாக, மாணவர்கள் கட்சி வாரியாக அணி பிரிந்திருந்தார்கள். தி.மு.க, அ.தி.மு.க மாணவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானித்து விட்டார்களாம். ஒப்புக்கு கதர்க் கைக்குட்டை வைத்திருந்த மாணவர்கள்தான், டில்லிக்கு டிரங்கால் போட்டிருக்கிறார்களாம். அநேகமாக வாக்குப்பதிவு முடிந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஆணை வந்துவிடுமாம்!

     அத்தனை போஸ்டர்களிலும் பல்வேறு வாக்குறுதிகள். இட்டிலியின் முப்பரிமாணங்களையும் கூட்டப் போவதாய் கொள்கை முழக்கம். ‘ஆயிரம் உண்டிங்கு ஜாதி, ஆயினும் போலீஸ் வர என்ன நீதி’ என்ற கவித்துவ வரிகள். ‘தனி ஒருவனுக்கு பாஸ் இல்லையென்றால், கல்லூரியை எரித்திடுவோம்’ என்ற அர்த்தத்திலான வீர கோஷங்கள். பாட நேரத்தைப் பாதி நேரமாய் குறைக்கப் போவதாய் ஒரு சூளுரை. வகுப்பிற்கு இத்தனை நாட்களுக்கு வந்தால்தான் பரீட்சை எழுத முடியும் என்ற கண் மூடிப் பழக்கத்தை மண் மூடச் செய்யப் போவதாக வாக்குறுதி. இன்னும் ஒன்றில், விலைவாசியைக் குறைக்கப் போவதாகவும், ஒரு சபதம். இந்தியா முழுமைக்குமா, தமிழகத்தில் மட்டுமா என்பது புரியவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டால், அந்தக் கல்லூரி இருக்கும் ஊருக்குக் கும்பல் கும்பலாய்ச் சென்று விலைவாசியைக் குறைத்து, அந்தப் புரட்சி இந்தியா முழுதும் காட்டுத் தீ போல் பற்றும் என்று மூக்கு வழியான விளக்கங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, தாய்மொழிக் கல்வி என்ற போர்வையில் தமிழைத் திணிக்க அனுமதியோம் என்று சூளுரை!

     மாணவிகளும் சளைக்கவில்லை. மாணவர்களின் தோளுக்குத் தோளாய் இயங்கினார்கள். சில சீனியர் மாணவிகள், ஜூனியர் மாணவிகளை மொபட்டுகளில் வலுக்கட்டாயமாக ஏற்றினார்கள். இன்னும் சிலர், வாக்காளப் பெண்களை சைக்கிள் கேரியரில் உட்கார வைத்துக் கொண்டு அந்த ‘வெயிட்டை’ சீட்டிலிருந்து ஓட்டிக் கொண்டுபோக முடியாது என்பதால், வெறுமனே உருட்டிக்கொண்டு போனார்கள். பதவி என்றால் சும்மாவா?

     ஆங்காங்கே கும்பல் கும்பலாய் மாணவர் கூட்டம். பேராசிரியர்கள் ஒதுங்கி நின்றும், உதவிப் பேராசிரியர்கள் ஒதுக்கப்பட்டும், அந்தத் தேர்தல் திருவிழாவை ரசித்துக் கொண்டிருந்தார்கள். வாழ்நாளில் ஒரு தடவை கூட வாக்களிப்பதில்லை என்று கங்கணம் கட்டிய ஒரு சில தாடிக்கார அறிவு ஜீவிகள், அங்கே நடப்பதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் ஆங்கில இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள். வாக்குப் பதிவு அமைதியாக நடப்பதற்கு உறுதி செய்ய காவலுக்குப் போட்ட போலீஸ்காரர்களும், அங்குமிங்குமாய் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கல்லூரிக்கு வெளியே இரண்டு கட்சிக்காரர்கள் கத்தியும் கம்புமாக சோடாவும் பாட்டிலுமாக ஆயத்த நிலையில் நின்றார்கள்.

     ஒரு மாணவப் பட்டாளம், இசைக் கருவிகளோடு பாடிக்கொண்டு, விடுதிகளில் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் மாணவ மாணவியருக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடியது. ஒருத்தனிடம் உடுக்கு, ஒருத்தியிடம் கஞ்சிராக் கட்டை, இன்னொருத்தன் ஜால்ரா. ஜான்சி, கண்ணகி, இளவரசி போன்ற பெண் விடுதிகளில் ‘வாங்கம்மா வோட்டுப் போட’ என்று ஒரு பையன் முதல் தடவையாக மரியாதையோடு பாடியபோது, சில பெண்கள் மாடி முனைக்கு வந்து “நாங்க என்ன கிழவிகளா, அம்மாவாம். அம்மா. இந்த லட்சணத்துல ஒங்களுக்கு வோட்டு வேற போடணுமா” என்று கேட்டுவிட்டு உள்ளே போய் விட்டார்கள்.

     இந்தக் கேளிக்கைக்கு மறுபக்கம், ஒரு தரப்பு மாணவர்கள் ஒரு லெதர் பைல் கவரை ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். குறைந்தது முப்பது ரூபாய் வெறும் பைல் கவர். அசல் காகிதம் போன்ற நிறம். உள்ளே வெல்வெட் துணி வியாபிக்க அதன் இரு பக்கமும் இரண்டு ரெக்ஸின் கவர்கள். இரண்டிலும், ஒரு பேனா, ஒரு குறிப்புப் புத்தகம், ‘தலைவனின்’ படம். இதேபோல், இன்னொரு தரப்பு ஓசைப்படாமல் ஒவ்வொருவருக்கும் ஒரு ‘கவர்’ கொடுத்தது. அதுக்குள்ளும் பணத்தோடு சேர்ந்த இன்னொரு தலைவனின் படம். பெரும்பாலான மாணவர்கள் ஒன்றை வாங்கி அறைக்குள் போய் வைத்து விட்டு, அடுத்த தரப்பிலிருந்து அதையும் வாங்கிக் கொண்டார்கள். தலைவன்களின் படத்தைக் கிழித்துப் போட மறக்கவில்லை.

     இந்த அமர்க்களத்தில், சுயம்பு லுங்கியைக் கட்டிக் கொண்டே அங்குமிங்குமாய் அலைந்தான். அவன் கண்கள் டேவிட்டைத் தேடிக் கொண்டிருந்தன. கண்களைக் கால்கள் பின்பற்றின. அன்றிரவு கைகால் வெட்டிய பிறகு, அவன் மாத்திரைகளை வீசியெறிந்து விட்டான். இன்றும் வழக்கம் போல் அவனுள் ஒரு கலக்கம். ஒரு ஆசை நிராசையானது போன்ற விரக்தி. மூர்த்தியும் முத்துவும் தேர்தல் களேபரத்தில் அவனைக் கண்டு கொள்ளவில்லை.

     தனித்து விடப்பட்ட சுயம்பு, கேட்பாரும் மேய்ப் பாரும் இல்லாமல் மருத்துவ மாணவர் விடுதிப் பக்கம் போனான். டேவிட்டிடம், தனது ஆசைகளையும் நிராசைகளையும் கொட்டித் தீர்க்க வேண்டுமென்ற ஒரு ஆவல். ஆனால், அவன் போன இடத்திலோ யாருமில்லை. எல்லோரும் வேடிக்கை பார்க்கப் போய்விட்டார்கள். டேவிட்டும் ஒரு சிறிய குழுவும் தேர்தலில் வன்முறை ஏற்பட்டால் முதலுதவி செய்வதற்கு ஏதோ டிஞ்சரும் பஞ்சும் வாங்கப் போய்விட்டதாக, சுயம்பு விசாரித்தபோது, ஒருத்தன் சொன்னான். உண்மையோ, பொய்யோ... கிண்டலோ...

     சுயம்பு, அங்கும் இங்குமாய் வெருண்டு வெருண்டு நடந்தான். டேவிட்டைப் பார்க்க முடியாமல் போனது, அவன் கால்களைத் திருக்கிவிட்டது. நரம்புகளை முடுக்கி விட்டது. அங்குமிங்குமாய்ப் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தை ஒரு கிலோ மீட்டர் பகுதிக்குள்ளேயே சுற்றி விட்டான். ஒரு விடுதி வழியே தன் பாட்டுக்கு நடந்தான். அப்போது ஸ்கூட்டரில் கருப்புக் கண்ணாடி போட்ட ஒருத்தி இரு கால்களையும் இருபக்கமும் பரப்பி தரையில் ஊன்றிக்கொண்டு ‘வாக்களிக்காதவர்கள் வரலாம் வரலாம்’ என்று ஏலக்காரி போல் மூன்று தடவை கத்தினாள். கருப்புக் கண்ணாடி போட்டு பெண் ரெளடிபோல் தோன்றிய அவளைப் பார்த்துவிட்டுப் பல மாணவிகள் தத்தம் அறைகளையே, சுயச்சிறைகளாக மாற்றிக் கொண்டார்கள்.

     சுயம்பு யோசித்தான். அவனும் வோட்டுப் போடணுமே... மூர்த்தியை ஜெயிக்க வைக்கணுமே. எப்பாடி. என்னமா காலு வலிக்குது. அவர இதுக்கு மேல தேடி நடக்க முடியாதும்மா...

     சுயம்பு, அந்த ஸ்கூட்டர்காரியிடம் நேரிடையாகப் போனான். அவள் வேறு எங்கேயோ பார்த்துக் கொண் டிருந்தபோது, இவன், அந்த ஸ்கூட்டரின் பின் இருக்கையில் பட்டும் படாமலும், உட்கார்ந்தபடியே அவளிடம் கெஞ்சிக் கேட்டான்.

     “நானும் வோட்டுப் போடணும்... வாக்குச் சாவடில என்னை இறக்கிடுறியா அக்கா...”

     அவளுக்கு அவன் அப்படி நெருக்கியடித்து அமர்ந்ததில் பாதிக் கோபம். அக்கா என்றழைத்ததில் மீதிக் கோபம். கிண்டல் செய்கிறான். கலாட்டா பண்ண வந்திருக்கிறான். இவனை விடப்படாது. என்னை யாருன்னு நெனைச்சுக்கிட்டான்...

     அவள், குய்யோ முறையோ என்று கூப்பாடு போட வில்லை. நிதானமாக இறங்கினாள். ஸ்கூட்டருக்கு ஸ்டாண்ட் போட்டாள். வலதுகால் செருப்பைக் கழற்றினாள். அவன் தலையிலும் முகத்திலும் மாறி மாறி அடித்தாள். விடுதிப் பெண்களுக்கு இதுல பொறுக்க வில்லை. கீழே ஒடி வந்தார்கள். இதற்குள் சுயம்பு எந்த சொரணையும் இல்லாமல், “எதுக்காக அக்கா அடிக்கே. அப்படி என்னத்த நான் பெரிசா கேட்டுட்டேன். காலு வலிக்கேன்னுதானே கேட்டேன்” என்று கண் கலங்கக் கேட்டுக் கொண்டிருந்தான்.

     இதற்குள், கும்பல் கூடிவிட்டது. வாக்களிக்கப் போனவர்கள்கூட அதுதான் சாக்கு என்று திரும்பிவிட்டார்கள். பொன்முகனும், ரதகஜ, துரக பதாதிகளோடு அங்கே வந்தான். சுயம்புவை உற்றுப் பார்த்தான். இவன் மூர்த்தியின் ஆள். லூசுப் பயல் என்றாலும், அன்றைக்கு அவமானப்படும்படி பேசியவன். விடப்படாது. எல்லாப் பயல்வளும் நமக்கு வோட்டுப் போடும்படியா செய்துடணும். இது ஒரு சென்ஸிட்டிவ் இஷ்யூ. நிறைய வோட்டுக் கிடைக்கும்.

     பொன்முகன், புத்திசாலி. சுயம்புவை அடித்தால் தாய்க்குலம் அவன் பக்கம் போய்விடும் என்று தெரிந்து வைத்தவன். இன்னும் இந்தக் குலம் பெருமளவில் வாக்களிக்கப் போகாமல் வம்பளந்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் சுயம்புவின் தோளில் ஒரு கையைப் போட்டுக் கொண்டே, நிதானமாகக் கேட்டான்.

     “ஏண்டா. நீ முளைச்சு மூணு எல விடலே. மீசை கூட மொளைக்கல. அப்படியிருந்தும் இப்படி நடந்துக்கிறே. லேடிஸ்னா ஒனக்கு அவ்வளவு கேவலமாப் போச்சு இல்லியா. இது என்ன அமெரிக்கான்னு நெனைச்சியா. கண்ணகி பிறந்த நாடுடா. ஒனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் அவங்களை இப்படி இம்சிப்பே. எனக்குத் தெரியும்டா. சீனியர் மாணவிகள், ஒன் மூர்த்திக்கு வோட்டுப் போட மாட்டாங்கன்னு தெரிஞ்சு, நீ வேணும்னே இங்க வந்து, கலாட்டா செய்யுறே. என்னடா நெனைச்சுக்கிட்டே...”

     சுயம்பு, எதுவும் நினைக்காமல் சும்மா நின்றபோது, முத்துவும் மூர்த்தியும் அங்கே ஓடி வந்தார்கள். மூர்த்தி, பொன்முகத்தின் மோவாயைப் பிடித்துக் கொஞ்சியபடியே “இவன் லூசு அண்ணே. ஒங்களுக்கே தெரியும். விகற்பம் இல்லாமல் நடந்திருப்பான்... நான் அவங்ககிட்ட மன்னிப்புக் கேட்கச் சொல்றேன் அண்ணே. டேய் சுயம்பு. அறிவு கெட்டவனே. அவங்ககிட்ட மன்னிப்புக் கேளுடா” என்று கத்தினான்.

     சுயம்புவும், அவளிடம் மன்னிப்புக் கேட்பதற்காக முகத்தைக் குழைத்தான். அவளும் அதை ஏற்றுக் கொள்ளப் போகிறவள் போல் கையிலிருந்த ‘ஒற்றைச் சிலம்பைக்’ கீழே போட்டாள். தாய்க்குலம், ஏற்கெனவே பேர் வாங்கிய சுயம்புவை, கருணையோடு பார்த்தது. அந்தக் கருணை மூர்த்திக்கு ஆதரவாகக் கைகளில் வந்துவிடக் கூடாதே என்று எச்சரிக்கையான பொன்முகன், ஒரு புகார்ப் பட்டியலையே அடுக்கினான்.

     “இந்த மாதிரி வேற எங்கயோ , லேடீஸ்கிட்ட கலாட்டா பண்ண நீ போயிருக்கிறே. ஒன் பேட்ச் பசங்க என்னடான்னா, நாங்கள் - சீனியர்கள் ஒன்னைக் கடத்துனதா புகார் கொடுக்கிறான்கள். நீ என்னடான்னால், அன்றைக்கு அந்த எம்.பி.பி.எஸ். பெண்ண மொலஸ்ட் செய்யப் போனே. இன்னிக்கு என்னடான்னா, இந்த பிரமிளாகிட்ட வம்பு செய்யுறே. இதுல நீ மட்டும் சம்பந்தப் படலடா. சீனியர்களுக்கு எதிரா ஒரு பெரிய திட்டமிட்ட சதியே இருக்குது!”

     பொன்முகன், தனது பக்கத்திலிருந்த மாணவர்களைக் கண்ணடித்தான். உடனே எல்லோரும் கூச்சலிட்டனர். மூர்த்தியால் இப்போது செய்வதற்கு ஏதுமில்லை. அந்த வளாகமே அலறியது. வெளியே நின்ற அரசியல்வாதிகள் பாதிதூரம் வந்துவிட்டார்கள். இதற்குள் போலீஸார் உஷாரானார்கள். ஒரு பகுதியினர் அரசியல்வாதிகளைக் கெஞ்சிக் கொண்டிருந்தபோது, இன்னொரு பகுதியினர் அந்த அடாவடி இடத்திற்குப் போனார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கில் எங்கேயோ பேசிவிட்டு அங்கே தனித்து வந்தார்.

     “நீங்கல்லாம் ஸ்டூடண்ட்ஸ். என்ன நடந்ததுன்னு அமைதியா சொல்லுங்க.”

     பிரமிளா சொல்வதற்கு முன்பே, பொன்முகன், பொறிந்து தள்ளினான்.

     “நாங்க சீனியருங்க, சார். சீனியர்கள் முகத்துல கரி பூசணும்னே கொம்பு முளைக்காத பசங்கல்லாம் திட்டமிட்டு இந்த சுயம்புவை. எங்களுக்கே சீனியரான இவங்கள-இந்த பிரமிளாவை மொலஸ்ட் செய்ய அனுப்பியிருக்காங்க. ஏற்கெனவே இவன் ஒரு ஏடாகூடம். லேடீஸ்கிட்ட தப்புந்தவறுமா நடக்கிறவன்.”

     “என்னப்பா பொல்லாத தப்பு. அசல் லூசன். வோட்டுப் போட ஸ்கூட்டர்ல ஏறிக்கட்டுமான்னு கேட்டிருக்கான். இதப் போய் ஒரு பெரிய விஷயமா...”

     “இது பெரிய விஷயமில்லியா. இன்னிக்கு ஸ்கூட்டர்ல ஏறுறேன்னு கேட்டான். நாளைக்கு ரேப் பண்றேம்பான். இது என்ன காலேஜா, இல்ல இவன் அப்பன் வீட்டு அந்தப்புரமா... என்னய்யா பேச வந்திட்டே.”

     இன்ஸ்பெக்டர், ரேப் என்ற வார்த்தையைக் கேட்ட உடனேயே பயந்துவிட்டார். கெஞ்சலோடு பேசினார்.

     “இன்னிக்கு அடிச்சுக்குவீங்க... நாளைக்கு கூடிக்குவீங்க; வாங்க ரிஜிஸ்ட்ரார்கிட்டயே போவோம். அவரே விசாரிக்கட்டும். அன்லாபுல் அசெம்பளி கூடாது. மாணவர் தலைவர்களும், மேடமும் இந்த லுங்கிப் பையனும் வந்தால் போதும்.”

     இன்ஸ்பெக்டர், மிடுக்காக நடந்தார். எல்லோரும் தங்களைத் தலைவர்களாய் அனுமானித்து, அவர் பின்னால் போனார்கள். பிரமிளா தயங்கினாள். பொன் முகன் உருட்டிய உருட்டலில் லேசாய் சுணங்கினாள். உடனே ‘நல்லா மாட்டிக்கட்டும்’ என்று நினைப்பதுபோல் நாலைந்து பெண்கள் அவள் முதுகைப் பிடித்துத் தள்ளி விட்டார்கள். ஆனாலும் கூட்டத்தில் பாதி கால் வலித்து இடையில் நின்றது. மூர்த்தியும் முத்துவும் கூடவே போனார்கள். சுயம்புவிற்கு எதையோ சொல்லிக் கொடுத்துக் கொண்டு போனார்கள். ரிஜிஸ்ட்ரார் என்கிற பதிவாளர் இன்ஸ்பெக்டருடன் வந்த மாணவ மாணவிகளை எழுந்து நின்று வரவேற்றார். ஏற்கெனவே நடந்த விவரங்களை பியூன் - ஒற்றர்கள் மூலம் தெரிந்து வைத்திருந்த அவர், எதுவும் தெரியாதது போல் ‘வாட் கேன் ஐ டு பார் யூ’ என்று வினவிவிட்டு, சோபா செட்டைக் கைகாட்டினார். அவரும் உட்கார்ந்தார். பொன்முகன், தான் பேசுவது, அங்கே மட்டுமல்ல, வாக்குப் பதிவுக்குச் செல்கிறவர்களுக்கும் கேட்கவேண்டும் என்பது போல் கத்தினான்.

     “சார். இவன் லேசுப்பட்டவன் இல்ல சார். இந்தப் பிரமிளாவை மொலஸ்ட் செய்ய முயற்சி செய்திருக்கிறான் சார். நல்ல வேள, நாங்க போய் இவங்களைக் காப்பாத்துனோம் சார். இவங்க அப்பா மெட்ராஸ்ல செகரட்டேரியட்ல கல்வி இலாகாவிலே டெப்டி செகரட்டரி சார்.”

     இப்போது, பதிவாளர், பிரமிளாவைச் சிறிது பயத்தோடு பார்த்தார். அப்படி பயம் ஏற ஏற, சுயம்புவைப் பயமுறுத்துவது போல் பார்த்தார். பொன்முகன், டீப்பாயைத் தட்டித் தட்டிப் பேசினான்.

     “இன்னிக்கு மொலஸ்ட் செய்தான். நாளைக்கு ரேப் செய்வான். ஒங்க டாட்டர்கூட இங்கதான் ஸார் படிக்காங்க.”

     பதிவாளருக்குச் சுருக்கென்றது. ‘சீக்கிரம் முடிக்கணும். இல்லாட்டி இந்தப் பொன்முகன், அம்மா, பாட்டி எல்லோரையும் இழுப்பான்!’

     “யாரும் சம்பந்தம் இல்லாத விஷயம் பேசப்படாது. மை டியர் யங்மேன். எதுக்காக அப்பா இப்படி நடந்துக் கிட்டே. படிக்க வந்தியா இல்ல பிடிக்க வந்தியா...”

     சுயம்பு, பதிவாளரையே பார்த்தான். என்னத்தை சொல்வது, எப்படிச் சொல்வது? டேவிட்... டேவிட்... நீங்க எங்க போயிட்டீங்க டேவிட்... நீங்கதான் என்னைக் காப்பாத்தனும்! உடனே வாங்க டேவிட்...

     “மை யங்மேன். விவகாரம் போலீஸ் கேஸாகாமல் இருக்கதுக்காவது நீ ஏன் இந்த இன்னோசண்ட் சைல்டை மொல்ஸ்ட் செய்தேன்னு சொல்றியாப்பா...”

     குட்டையும் தட்டையுமான பதிவாளரைப் பார்த்து, சுயம்பு அழுதான். மூர்த்தியும் முத்துவும் அவனை உலுக்கினார்கள். வாயை மூடினார்கள். இன்ஸ்பெக்டருக்கும் பதி வாளருக்கும் பரிவுணர்வு ஏற்படுவதை யூகித்துக் கொண்ட பொன்முகன், மேடைப் பேச்சாளியானான்.

     “இவன் சும்மா நடிக்கான் சார்... போனவாரம் ஒரு மெடிகல் கேர்ல் கிட்டவும் முறைகேடா நடந்தான் சார். இவனால ஒரு பெரிய சண்டையே வர இருந்தது சார். இவனால எங்க பொறியியல் மாணவர் சமுதாயத்துக்கே அவமானம் சார்.”

     “அப்படியா மை யங்கமேன்...”

     சுயம்பு, அரிச்சந்திரன் மாதிரி தலையாட்டினான். இதற்குமேல் மூர்த்தியால் பொறுக்க முடியவில்லை. முத்து வேறு அவன் முதுகைக் கிள்ளிவிட்டான்.

     “சார். சார். இவன் மனநிலை சரியில்லாதவன் சார். போனவாரம் சைக்யாட்ரிஸ்ட் கிட்ட கூட கூட்டிட்டுப் போனோம் சார். மனசு சுத்தமானவன் சார்.”

     “புத்திசாலியான போக்கிரிய விட, சுத்தமான முட்டாள் அபாயமானவன்னு உனக்குத் தெரியுமா யங் மேன். நீ இதுல தலையிடாதே. மை டியர் சைல்ட். உன் பேரு என்னம்மா... என்ன நடந்ததும்மா...”

     பிரமிளா அழுதாள். அவள் அடித்த இடத்திலேயே, சில பெண்கள் சுயம்பு மனநோயாளி என்று அவள் காதைக் கடித்தார்கள். அப்படிப்பட்ட ஒருவனை, இப்படிச் செய்து விட்டோமே என்று மனவாதையில் அழுதாள். விட்டுடுங்க சார் என்றுகூட சொல்லப் போனாள். ஆனால் இப்போது கடைசியாக அவர் சேர்ந்திருக்கும் பொன்முகத்தைப் பார்த்தாள். அந்த முகம் இறுகிக் கிடந்தது. அவளால் அழத்தான் முடிந்தது. பேச முடியவில்லை. இந்த அழுகையையே, பதிவாளரும், இன்ஸ்பெக்டரும், சுயம்புவுக்கு எதிரான ஒரு சாட்சியமாக எடுத்துக் கொண்டார்கள். பொன்முகன், அவளுக்குப் பிரதிநிதியாகப் பேசினான்.

     “ஒருவர் செயல்பட்டால்தான் மதிப்பீடு செய்யப்படுகிறார். நோக்கங்களால் அல்ல... ஆக்ஷன்... நாட் இன்டென்ஷன்... நாளைக்கே இவன் ஒரு பெண்ணை ரேப் செய்யலாம். தட்டிக் கேட்கிற, என்னை மாதிரி ஆட்களை கொலைகூடச் செய்யலாம். மனநிலை சரியில்லன்னு அப்போ சொல்ல முடியுமா. அதோட பிரமிளா லோக்கல் கேர்ள். அவங்க கம்யூனிட்டி இந்த டவுனில் அதிகம். நாளைக்கே கதவடைப்பு செய்தால் நம்ம காலேஜுக்கு கெட்ட பேரு இல்லியா. ஒரு பெண்ணை மானபங்கப் படுத்துணவனுக்கு பதிவாளரான நீங்க என்ன தண்டனை கொடுக்கப் போறீங்க?”

     இன்ஸ்பெக்டர் நிமிர்ந்தார் - தான் ஏன் தீர்மானிக்கக் கூடாது என்பதுபோல். அதோடு கதவடைப்பு நடந்தால் முதல் சஸ்பெண்ட் அவர்தான். பதிவாளரிடம் நாசூக்காக பேசப் போனவர் திடுக்கிட்டு எழுந்தார். ஒரு சல்யூட் அடித்தார். அதை ஏற்றுக்கொண்டே உள்ளே வந்த டி.எஸ்.பி ரிஜிஸ்ட்ராரைப் பார்த்து வணக்கம் போடாமலே தனது வருகையின் நோக்கத்தைக் குறிப்பிட்டார்.

     “இந்தப் பெண்தான் மொலஸ்ட் ஆன பொண்ணு இல்லியா? இவங்கள மெடிகல் டெஸ்டுக்கு அனுப்பணும்.”

     இப்போது முத்து குமுறினான்.

     “இது லாக்கப் இல்ல சார். காலேஜ்.”

     “நீ யாருடா கொம்பன்... யார்கிட்ட பேசறோம்னு நினைத்துப் பேசு... இன்ஸ்பெக்டர்... இவனுக்கு ஒரு டோசியர் போடு...”

     “எஸ் சார்... இம்மீடியட்லி சார்...”

     முத்துவின் வாயை மூர்த்தி மூடிக்கொண்டான். சுயம்பு எதுவுமே நடக்காதது போல் அப்படியே நின்றான். பிரமிளா தனக்காக அழுதாள். சுயம்புவிற்காக அழுதாள். ஒரு முரட்டுப் பயலை - ஒரு தந்திரக்காரனை முன்பின் யோசிக்காமல் அவனே கதியென்று ஆகிவிட்டோமே என்று முப்பெரும் அழுகையாய் அழுதாள். அந்த அழுகையால் கோபப்பட்ட டி.எஸ்.பி. சுயம்புவை முறைத்தார். விவகாரத்தைக் கைவிட விரும்பிய பதிவாளர், இப்போது அது கையை விட்டே போகும் நிலைக்கு வந்ததை உணர்ந்து ஒரு தாற்காலிகத் தீர்ப்பு வழங்கினார்.

     “சுயம்பு இஸ் சஸ்பெண்டட் ரைட் நெள. நைட்ல வைஸ்-சான்சலர கன்சல்ட் செய்து. மேற்கொண்டு என்ன ஆக்ஷன் எடுக்கணுமோ அதை எடுப்போம்!”

     பொன்முகன், ஏற்கெனவே கட்சி மூலம் பரிச்சயப்பட்ட டி.எஸ்.பி.யிடம் கிசுகிசுத்துவிட்டு முழங்கினான்.

     “இவனை போலீஸ்ல ஒப்படையுங்க சார். இவனுக்குப் பின்னால ஒரு பெரிய கிரிமினல் கேங்கே இருக்குது... போலீஸாலதான் இதைக் கண்டுபிடிக்க முடியும்.”

     “நீ நினைக்கறதைவிட பலமான ஆக்ஷன் கூட நிர்வாகம் எடுக்கலாம். நத்திங் இஸ் ரூல்ட் அவுட். வீ.சி. வரட்டும். இந்தாப்பா மை டியர் யங்மென் சுயம்பு, நீ இனிமேல் வகுப்புக்குப் போகப்படாது.”

     பதிவாளர் தீர்ப்பளித்து விட்டு, அது அப்போதைக்கு முடிந்த விவகாரம் போல் எழுந்தார். அப்போது, எஸ்.பி. உள்ளே வந்தார்.