12

     சுயம்பு, உடம்பும் உணர்வும் ஒன்றை ஒன்று சிறையெடுத்தது போல் முடங்கிக் கிடந்தான்.

     அந்த அறைக்குள் முடங்கி இரண்டு நாட்களாகி விட்டன. அவன் சாப்பிடக் கூட மெஸ்ஸுக்குப் போக மறுத்தான். மூர்த்தியும், முத்துவும்தான், வேளா வேளைக்கு அவர்களே மெஸ்ஸிலிருந்து உணவுப் பொட்டலங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்தார்கள். மூர்த்தி செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டதால் அந்தப் பதவியைச் சுயம்புவுக்கு ஆதரவாகப் பயன்படுத்திப் பார்த்தான். ஹெச்சோடியை - அதாவது பொறியியல் துறையின் மின்னணுப் பிரிவுத் தலைவரான - ஹெட் ஆப் த டிபார்ட்மெண்டைப் பார்த்தான். அவர் கைகளை மேலே தூக்கிக் காட்டினார். எதுவும் பேசாமல் அவர் அப்படிச் செய்தது, விஷயம் தலைக்குமேல் போய்விட்டது என்று அர்த்தப்படுத்துவதா, இல்லை, சுயம்புவைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று எடுத்துக் கொள்வதா என்று புரியாமல் விழித்த மூர்த்தி, பிறகு இரண்டும் ஒன்றுதான் என்பதுபோல் பதிவாளரைப் பார்த்தான். அவரும் “இது தனிப்பட்ட விவகாரம்” என்று பொதுப்படையாகச் சொல்லிவிட்டார். அப்போது கூட்டுச் செயலாளர் பதவிக்குப் போட்டி போட்டு நான்கு வாக்குகளில் தோல்வியுற்ற ராமலிங்கம் ஒரு யோசனை சொன்னான். சீனியர்கள், தன்னை ரேக்கிங் செய்து செய்தே தனது மன நிலை பாதிக்கப்பட்டதாய், சுயம்புவே துணைவேந்தருக்கு ஒரு மனுக் கொடுக்க வேண்டும் என்றான். இந்த மனுவையும் மீறி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம் என்றான். அவனே ஒரு மனுவை எழுதிக் கொடுத்தபோது சுயம்பு அதில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டான். “உண்மையை மறைச்சு நான் படுற பாடு போதும். பொய் வேற பேசணுமா” என்று சொன்னது மட்டுமல்லாமல் அந்த மனுக் காகிதத்தைக் கிழித்துப் போட்டான். அவன் தங்களையே அப்படிக் கிழித்துப் போட்டு விட்டதாக பல முதலாண்டு மாணவர்கள் நினைத்து ஒதுங்கிக் கொண்டார்கள். இப்போது அவன் இருவர் தவிர்த்து எல்லோராலும் கைவிடப்பட்டவனாகி விட்டான்.

     சுவரில் சாய்ந்து சுரணை கெட்டு உடம்பில் ஒரு சிறு அசைவுகூட இல்லாமல் இருந்தவனை ஒருவர் உள்ளே வந்து உலுக்கினார். காக்கி யூனிபாரம் போட்டிருந்த அந்த நாற்பது வயதுக்காரருக்குக் கையில் லத்தியில்லை.

     “ஓங்க பேருதானே சுயம்பு. ரிஜிஸ்திரார் கையோடு கூட்டிட்டு வரச் சொன்னார். எழுந்திருங்க...” சுயம்பு, அப்படியே எழுந்து அவருடன் அப்படியே புறப்பட்டான். அவர் பரபரப்புக் குரலில் கேட்டார்.

     “லுங்கியோட வாறீங்க...”

     “ஆமா.... சேலை இல்ல...”

     சுயம்பு, சிறிது தூரம் நடந்து இடையில் நின்று அவரைத் திரும்பிப் பார்த்தான். துணைவேந்தருக்கு அடுத்த படியாக உள்ள ஆனானப்பட்ட ரிஜிஸ்ட்ரார் கிட்டவே இப்படி வருகிற இந்த ரவுடி அந்தப் பெண்ணிடம் ‘அப்படித்தான்’ நடந்திருப்பான் என்றும், அவள் தான் கற்பழிப்பை வெளியே சொல்லி அவமானப்பட விரும்பவில்லை என்றும் நினைத்துக்கொண்டார். ஆகையால் அவனுக்குப் பின்னால் இடைவெளி கொடுத்தே எச்சரிக்கையாய் நடந்தார். ‘இந்த மாதிரி பசங்க இடுப்புல பிச்சுவா இருந்தாலும் இருக்கும்.’

     சுயம்பு, விடுதிக் கட்டிடத்திலிருந்து விடுபட்டு மாணவர் பூங்கா வழியாய் நடந்தும் கடந்தும் விருந்தினர் இல்லம் முன்னால் நின்று ‘எங்கே போக வேண்டும்’ என்பது போல் தொலைவில் வந்தவரைப் பார்த்தான். அவர், பதிவாளருக்குக்கூடக் கொடுக்காத அத்தனை பய பக்தியையும் அவனிடம் காட்டி, அந்த இடத்தையும் காட்டி, பிறகு வேக வேகமாய் ஓடிவந்து அவனுக்கு முன்னால் போனார். இரும்பைவிட வலுவானதுபோல் தோன்றிய தேக்குமர மாடிப்படி வழியாய் நடப்பது தெரியாமல் நடந்து, சுயம்பு பதிவாளர் அறைக்குள் நுழைந்த போது அந்தப் பதிவாளர், அவன் லுங்கியைப் பார்த்து லேசாய் திடுக்கிட்டதுபோல், பேப்பர் வெயிட்டை எடுத்தார். பிறகு முன்னால் இருந்த இருவரிடம் ஏதோ சொல்ல, ஆறுமுகப்பாண்டி திரும்பினான். பிள்ளையார் அசையாது இருந்தார். அவர்களைப் பார்த்துவிட்ட சுயம்புவும், அண்ணன் பக்கத்தில் போய் நின்றான். அவன் கண்கலங்க சுயம்புவின் கைகளைப் பிடித்தான். பிள்ளையாரோ, அவன் அங்கே இல்லாதது போல் மேலே ஓடும் மின் விசிறியை வெறித்துப் பார்த்தார். அப்போது பதிவாளர் குழைந்தார்.

     “உட்காருப்பா... சும்மா உட்கார்... நீ உட்காரலாம். யூ ஆர் நோ லாங்கர் மை ஸ்டூடண்ட்.”

     சுயம்பு, உட்காரவில்லை. இதற்குள் தட்டெழுத்துப் பெண் ஒருத்தி கையில் ஒரு ஃபைலோடு வாசல் பக்கம் நின்றாள். அங்குமிங்குமாய் பராக்குப் பார்த்துப் பேச்சு நடப்பதைப் பற்றிக்கூடப் பொருட்படுத்தாமல் பைல் கட்டை அலட்சியமாக மேஜையில் வீசி அடிப்பதுபோல் வைத்துவிட்டு, இடுப்பில் கை வைத்து நிற்காமல், அவள் காலடியால் அவர்கள் கவனம் கலையக்கூடாது என்பது போல் மெள்ள மெள்ள நடந்தாள். அது அவள் நடத்தையையும் காட்டியது. பதிவாளரும், அவளும் யோக்கியமானவர்கள் என்பதை விஷூவலாகக் காட்டுவது போலவும் இருந்தது. பதிவாளர், அவள் மேஜையில் வைத்த பொன்வண்ணக் கோப்பை வாங்கி, அச்சடித்தது போலான மின்னணு டைப்பிங் காகிதத்தை பிள்ளையாரிடம் நீட்ட, அவர் பேசாமல் இருந்ததைப் பார்த்துவிட்டு, ஆறுமுகப் பாண்டியிடம் கொடுத்தார். அவன் படித்துப் பார்த்துவிட்டு மன்றாடினான்.

     “இந்த ஒரு தடவ மட்டும் மன்னிச்சிடுங்க சார். இவன் அப்படிப்பட்டவன் இல்ல சார். ஒரு புழுவைப் பார்த்தாக் கூட ஒதுங்கிப் போறவனை ஒரு புழுவாய் ஆக்கிடாதீங்க சார்.”

     பதிவாளர் ரிப்பன்களைப் பூவாக வைத்திருந்த அந்தப் பெண்ணைக் குறிப்பாய்ப் பார்க்க, அவள் வெளியேறினாள். அந்த அறையின் அறைக் கதவுகளின் ஆட்டத்தையே பார்த்தவர், அந்த ஆட்டம் முடிந்ததும் பேசினார்.

     “நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி, இது முடிஞ்சு போன விஷயங்க. இவன் நல்ல பையன். அப்படிப்பட்டவன் இல்லன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் ரெண்டு தடவை இப்படி நடந்தவன் மூன்றாவது தடவை வேற மாதிரியும் நடக்கலாம் இல்லியா. அதோட.... சரி, அதெல்லாம் உங்களுக்கு வேண்டாம். நாங்க ஒங்க பையனை நீக்கலன்னா, போலீஸ் கேஸாயிடும். அன்றைக்கே எஸ்.பி. உங்க பையனை ஒப்படைக்கும்படியாய்ச் சொன்னார். நான்தான் மறுத்துட்டேன். இன்றைக்குக்கூட ரெண்டு தடவை போன் செய்துட்டார். போலிஸ்ல மாட்டுனால், என்ன ஆகும்னு ஒங்களுக்கே தெரியும். விவகாரம் கோர்ட்டுக்குப் போனால் யுனிவர்சிட்டியோட எல்லாக் கதவையும் இழுத்து மூட வேண்டியதுதான். தனி மனிதனைவிட, ஒரு நிறுவனம் ரொம்ப முக்கியம் இல்லியா. நாங்க, இவன், அந்த பொண்ணுகிட்ட நடந்தது சரிதான்னு கோர்ட்ல வாதாட முடியுமா. நீங்களே சொல்லுங்க...”

     “இவன் நடந்ததை சரின்னு சொல்லலை சார். சரிப்படுத்துங்கன்னுதான் சொல்றேன். கருணை காட்டச் சொல்லுறேன். பிச்சை... கேட்கேன்...”

     “அழாதீங்க மிஸ்டர் ஆறுமுகப்பாண்டி... நாங்க கருணை காட்டியிருக்கத்தான் செய்யுறோம். இவன் வேண்டுமென்றே செய்திருந்தால், காலேஜ விட்டு எக்ஸ்பெல் செய்திருப்போம். அப்படிச் செய்திருந்தால் ஒங்க தம்பிய வேற எந்தக் காலேஜுலயும் சேர்க்க முடியாது. கவர்மெண்ட் வேலைக்கும் போக முடியாது. ஆனால் நாங்க அப்படிச் செய்யல. நீங்களே மனுப்போட்டு ஒங்க பையனோட டி.சி.யை கேட்கிறது மாதிரிதான் அந்தக் காகிதத்திலே எழுதியிருக்கோம். ஒங்களுக்கு இஷ்டமுன்னா கையெழுத்துப் போடுங்க... இல்லாட்டால்...”

     பதிவாளர், இழுத்தபோது, பிள்ளையார் எழுந்தார். பெஞ்சுமேல் ஏற்றப்பட்ட அந்தக் காலத்து மாணவன் போல் கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு செய்யுளை ஒப்பிப்பதுபோல் ஒப்பித்தார். துக்கமும், துயரமும், எதுகை மோனையாக உடைந்த குரலோடு ஒப்பித்தார்.

     “இவன் தானாய் முளைச்ச காட்டுச்செடி அய்யா. எங்க ஊரு மோசமுன்னா, அதுலயே எங்க வம்சம் படுமோசம் அய்யா. எங்க வகையறாவுல எவனுக்கும் பெருவிரலக்கூட பெறட்டத் தெரியாது அய்யா... இதனாலயே எங்க வகையறாவுக்கு தற்குறிக் குடும்பம்னு பேரு அய்யா. அதனாலதான், இவன் எட்டாவது படிக்கும் போது ‘வயலவிட உனக்கு பள்ளிக்கூடம் பெரிசாயிட்டோன்’னு அடிக்கக்கூடப் போனேன். இவன்தான் என்னைச் சத்தம் போட்டு, தம்பிக்குப் பதிலாக நான் ரெண்டு மடங்கு வேலை பாக்கேன்னு இவன மேல மேல கொண்டு படிக்கவிட்டான். கடைசி சர்க்கார் பரீட்சை எழுதி, இவன் நல்ல மார்க் வாங்குனதாய், பெரிய மவன் சொன்னபோது, ‘ஒன் தம்பிய வயல் வேலையப் பார்த்துக்கிட்டே சர்க்கார் வேலைக்கு எழுதிப்போடச் சொல்லுன்னு சொன்னவன்யா நான். இந்த ரெண்டு பயல்களும் சேர்ந்து இங்க எழுதிப்போட்டது எனக்குத் தெரியாது அய்யா... இடம் கிடைச்சதும் பணமுன்னு வந்தது. பெரியவன் தலையைச் சொரிந்தான்யா... இந்தப் படிப்பு படிச்சா என்ன வேலை கிடைக்குமுன்னு கேட்டேன்யா. நான் கனிஞ்சத பார்த்துட்டு ஒங்க முன்னால நிக்கானே, இவனே ‘கடைசிப் பரீட்சை முடியும்போதே வெளி தேசத்துக்கு போற வேலை கிடைக்கும். ஆயிரக்கணக்குல ரூபா கிடைக்குமுன்’னு சொன்னான். உடனே நான் இவன பிடறியில ஒரு போடு போட்டேன்யா. ‘செருக்கி மவனே, பாசை தெரியாத ஊருக்குப் போய் வேஷத்தை மாத்தி நீ எங்களை மறக்கதுக்கு ஒன்ன நான் படிக்க வைக்கணுமா... இந்த ஒண்ணுக்காகவே உன்னைப் படிக்க வைக்க மாட்டேன்’னு சொல்லிட்டேன்யா. பெரியவன். அதான் இவன், எனக்குத் தெரியாமல் எங்க ஊர் காண்ட்ராக்டர் கிட்ட மூவாயிரம் ரூபாய் கைமாத்தா வாங்கி, இவனை இங்க சேர்த்தான். பைத்தியக்காரப் பயல். அந்தக் காண்ட்ராக்டரு என் காதைக் கடிச்சபோது... நான்தான் ஐயாயிரமா கொடுக்கும்படிச் சொன்னேன். இந்த குட்டை இப்பதான்யா போட்டு உடைக்கேன்...”

     “எய்யா. எய்யா. எங்க வம்சம் கொத்தனாரையும், சித்தாளையும் மட்டுமே கொடுத்து வந்த வம்சம்யா! அந்த வம்சம் தழைக்க இவன் பிறந்திருக்கான்யா. தர்மப் பிரபுவே. கருணை காட்டு. இவனத் திருப்பி அனுப்னிங்கன்னா, என் வீட்டுக்காரி தாங்கமாட்டாய்யா... ஏற்கெனவே என் மகளை அவள் அண்ணன் மகனுக்குக் கொடுக்கலன்னு ஆடிப்போயிருக்காள். என் பிள்ளைகள் அவளுக்குக் கொள்ளி போட வச்சிடாதீங்க அய்யா...”

     பதிவாளர் உருளை நாற்காலியில் அங்குமிங்குமாய் நெளிந்தார். திடீரென்று ஆறுமுகப் பாண்டி எழுந்தான். உட்கார்ந்திருந்த நாற்காலியைத் தரையோடு சேர்த்து இழுத்துப் போட்டான். சிறிது பின்னுக்கு நடந்தான். பிள்ளையாரும், பதிவாளரும் பயந்துபோய் எழுந்தபோது அப்படியே தொப்பென்று விழுந்தான். நீச்சலடிப்பதுபோல் கைகளை ஊன்றி, ஊன்றி நகர்ந்து மேஜையின் அடிவாரக் கட்டைகளுக்கு மேலே கையைப் போட்டு, பதிவாளரின் கால்களைத் தேடித் தேடி, தேடியதைப் பிடித்துக்கொண்டு புலம்பினான். "கருணை காட்டுங்க சார்... கருணை காட்டுங்க... பிச்சிப்பூவை பிக்கறது மாதிரி பிச்சிடாதீங்க சார்... அய்யா... தர்மராசா...” என்று அரற்றினான்.

     பதிவாளர் ஆடிப்போனார். வெளியே ஒரு சின்னக் கூட்டம் கதவுகளுக்கு இடைவெளி கொடுத்து எட்டிப் பார்த்தது. பதிவாளர், அவர்களைப் பார்த்து ‘கெட்அவுட்’ என்று கத்தி தனது இயலாமைக்கு வடிகாலை ஏற்படுத்தினார். பிறகு இன்டர்காமில், வி.ஸி.யிடம் ஆங்கிலத்தில் பேசினார். அடுத்த முனையில் ஒரு கத்தல் வந்தது; இந்த முனையில் இருந்த பிள்ளையாருக்கும் அதன் உக்ரம் சுட்டது. பேசி முடித்த பதிவாளர் உதட்டைப் பிதுக்கியபடியே பேசினார்.

     “காலேஜ் எலெக்ஷனக்கூட போலீஸ் வெச்சு நடத்த வேண்டிய காலம் இது. கள்ளச்சாராயம் காச்சுறவன்கூட படிக்கிற காலம் இது. இந்த சிலந்திவலைக் காலத்துல, ஒங்க பையன் எப்படியோ சிக்கிட்டான்... ஐயாம் ஸாரி. இந்தாம்மா அந்த சர்டிபிகேட்களை கொண்டு வாம்மா. பெரியவரே... அந்த காகிதத்துல ஒரு சின்னக் கையெழுத்து போடுறீங்களா... சுயம்பு நீயும் போட்டுடு. மிஸ்டர் ஆறுமுகப் பாண்டி எழுந்திருங்க... என்னால செய்ய முடிஞ்சது ஒங்க தம்பிய போலீஸ்ல ஒப்படைக்கப் படுறதைத் தடுத்ததுதான்...”

     ஆறுமுகப் பாண்டி, எழுந்தான். அப்பாவைப் பார்த்தான். முதியோர் கல்வி இயக்கத்தால் கையெழுத்துப் போட மட்டுமே தெரிந்த பிள்ளையார், பதிவாளர் நீட்டிய பேனாவைப் பிடித்தபடியே யோசித்தார். அப்போது ஆறுமுகப் பாண்டி பழையபடி “சார்” என்று சொல்லிக் கொண்டே கீழே குனியப் போனபோது, பிள்ளையார் எழுந்தார். ஆறுமுகப் பாண்டியின் முடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தி, கன்னத்தில் பட்டுபட்டு என்று அடித்து விட்டு, “செருக்கி மவனே. நீ எனக்குத்தானே பிறந்தே” என்று கத்தினார். பிறகு “எங்கையா கையெழுத்துப் போடணும்... இங்க... இதுலதானே...” என்றார். தோளில் கிடந்த துண்டை வாய்க்குள் வைத்துக்கொண்டே ஒரு முத்தை சொத்தையாக்கும் - முத்து முத்தாய் டைப் செய்த காகித அடியில் எழுத்துக் கூட்டிக் கையெழுத்துப் போட்டார். பிறகு சுயம்புவைப் பார்த்து “நடலே...” என்று அதட்டினார்.