13

     பிள்ளையார், பிள்ளைகளோடு வெளியே வந்தார். அந்த அறையின் வாசலிலேயே அந்தப் பெண் கொடுத்த பழைய சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு “குப்பையில போடம்மா” என்றார். ஆறுமுகப்பாண்டிதான் அதை வாங்கிக்கொண்டு பித்துப் பிடித்துப்போய் நின்ற தம்பியையும் இழுத்துக்கொண்டு அப்பாவிற்குப் பின்னால் ஓடினான்.

     அந்த மூவரும் இரண்டாவது மாடிக்கு ஏறி, அந்த அறைக்குள் நடந்தபோது மூர்த்தியும் முத்துவும் அவர்கள் வந்தது தெரிந்ததுபோல், கதவைத் திறந்தார்கள். பிள்ளையாரும் ஆறுமுகப் பாண்டியும் வழியில் பதிவாளரைப் பார்ப்பதற்கு முன்னால், அவர் விவரமாக எழுதியிருந்த கடிதத்தை முத்துவிடம் காட்டியிருந்தார்கள். பிள்ளையார் ஜன்னல் வழியே பார்த்தார். ஆறுமுகப்பாண்டி தலையைத் தொங்கப் போட்டபடி நின்றான்.

     சுயம்பு சுயமாக நிற்காததுபோல் நின்றான். மூர்த்தி பட்டும் படாமலும் கேட்டான். பரீட்சையின் முடிவை எழுதும் போதே தெரிந்துகொண்ட மாணவனைப்போல்.

     “நீங்க சொல்லியும் கேட்கலையா...?”

     பிள்ளையார் வெடித்தார்.

     “எப்படிப்பா கேட்பாங்க. இவன் செய்த காரியம் லேசுப்பட்டதா. இதோ பாரு இந்தச் செருக்கி மவன் இப்படி லுங்கியக் கட்டிக்கிட்டு வந்தாமுன்னா உபகாரம் செய்ய நினைக்கவங்களும், உபத்திரவம்தான் செய்வாங்க...”

     “எப்படியும் அடுத்த வருஷத்துல பழையபடியும் சேர்த்துடலாம்.”

     “பசில பாலுக்குத் துடிக்கிற குழந்தைக்கு சினை ஆட்டைக் காட்டுற கதை... நீ ஆறுதலுக்குத்தான் பேசறே! ஆனால், அது தேவைப்படாத அளவுக்கு மனசு மறத்துட்டு... ஏடா பெரியவன்... பெட்டி படுக்கைய எடுடா... ஒன் என்ஜினியர் தம்பியை சீக்கிரமா கூட்டிட்டு போனும் பாரு... பெரிய வேலை காத்திருக்குல்லா.”

     பிள்ளையார், வெறுமையாகச் சிரித்தபோது, ஆறுமுகப் பாண்டி தம்பியின் மிலிட்டரி டிரங்க் பெட்டியைத் திறந்தான். பூட்டில்லாமல் போன பெட்டி. எந்த வகையிலும் சேர்க்கமுடியாத பெட்டி. மூர்த்தியும் முத்துவும் திணறினார்கள். அலங்கோலமாய் நின்ற சுயம்புவை அமங்கலமாய்ப் பார்த்துவிட்டு அந்தப் பெட்டிக்குள் ஆளுக்கொரு பொருளை அள்ளிப்போட்டார்கள். அழுக்குப் பாண்ட்களையும் சட்டைகளையும் மடித்து வைத்துவிட்டு, இடையிடையே சோப்பு, சீப்பு, கண்ணாடி ஹாங்கர்களைப் போட்டுவிட்டு, அவற்றிற்குமேல் புத்தகங்களை அடுக்கினார்கள். பிள்ளையார் குறுக்கிட்டார்.

     “ஒங்களுக்குப் பிரயோசனப்படுற புத்தகங்களை எடுத்துக்குங்கப்பா... ஏடா... பெரியவன் ஒன் ஆசைத் தம்பிக்கு வாங்கிக் கொடுத்தியே... கணக்கு மெஷின்... அதை ஒன்னோட இந்தத் தம்பிகள் கிட்ட கொடு... எதுக்குடா பாய் தலையணையச் சுருட்டுறே. இவங்களும் எனக்கு பிள்ளிங்க மாதிரித்தாண்டா... நான் எப்பவாவது வந்தாலும் வருவேண்டா... ஒரு படிச்ச பிள்ளை போயிட்டாலும், எனக்கு இன்னும் ரெண்டு படிச்ச புள்ள இருக்காங்கடா...!”

     பெட்டியைக் குடைந்து கொண்டிருந்த மூர்த்தி, திடுக்கிட்டு எழுந்தான். பிள்ளையார் அழுதிருந்தால்கூட அவனுக்கு அப்படி அழுகை வந்திருக்காது. அவரோ சிரித்தார். பற்களெல்லாம் கழண்டு விழப்போவதுபோல் சிரித்தார். அவனால் தாங்க முடியவில்லை. அசைவற்று நின்ற சுயம்புவைக் கட்டிப்பிடித்து, தேம்பினான். அவனோ, இப்போதுதான் உயிர்த்தெழுந்தவன்போல் அங்குலம் அங்குலமாய் மூர்த்தியைவிட்டு விலகிக்கொண்டிருந்தான்.

     எல்லாவற்றையும் கட்டிப்போட்டாகி விட்டது. ஆறுமுகப் பாண்டி டிரங்க் பெட்டியைத் துாக்கிக் கொண்டான். பிள்ளையார் சூட்கேஸை எடுத்துக் கொண்டார். ஐந்தாண்டு காலத்திற்காகக் கொண்டு வரப்பட்ட உடமைகள் ஐந்து நிமிடத்திலேயே முடக்கப் பட்டன. மூர்த்தியும் முத்துவும் அவர்களை வழியனுப்பப் புறப்பட்டார்கள். மூர்த்தி அங்குமிங்குமாய்த் தேடிவிட்டு, “டேய் முத்து, பூட்டை எங்கேடா வெச்சே” என்று சொன்னபடியே, முத்துவைப் பார்த்தான். அவனோ-அந்த பாக்ஸர் முத்தோ தனது கம்பீரமான முகத்தைச் சுவரில் போட்டு அதில் கண்ணிரால் கோடுகள் போட்டுக் கொண்டிருந்தான். பிள்ளையார் அவன் அருகே போய் முதுகைத் தட்டிக் கொடுத்தபோது அவன் விம்மினான். வெடித்தான். பிள்ளையாரும் “என் மவனே, என் மவனே” என்று அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். மூர்த்தி தான் தன்னை அடக்கிக்கொண்டு சமாளித்தான்.

     “நீங்க போய்க்கிட்டே இருங்க; நான் இவன சமாளிச்சிட்டு பின்னாலயே வாறேன்.... ஏய் முத்து... என்னடா இதெல்லாம்...”

     ஆறுமுகப் பாண்டி, சுயம்புவை லேசாய் தள்ளிவிட் டான். அவனோ, தனது தோழர்களைப் பார்த்தான். உள்ளே இருக்கும் இதயத்தைக் காட்டுவதுபோல், உதடுகள் பிரிந்தன. கண்ணிர் பார்வையை மங்கடித்தது. கண்களைத் துடைக்காமலேயே அந்த அறையை விட்டு வெளியேறினான். மீண்டும் திரும்பி வந்து, தான் தடம் போட்ட இடத்தைப் பார்த்தபடியே நின்றான். பிறகு கீழே ஒரே ஓட்டமாய் ஓடினான். ஒவ்வொரு அறையிலும் மூவிரண்டு ஆறு கண்கள். நீர் சொரியவில்லையானாலும், நிம்மதியற்றுத் தவித்தன. ஒரு அறையில் கண்ணதாசனின் ‘பாடிச் செல்லும் பறவைகளே’ என்ற பாடல் வேண்டுமென்றே ஒரு சோகப் பகிர்வாக டேப்பில் ஒலிக்க விடப்பட்டது.

     ஆறுமுகப் பாண்டி, கையிலிருந்த டிரங்க் பெட்டியைத் தலைக்கு மாற்றி அதை முன் பக்கமாய் சிறிது சாய்த்து, தமது கண்ணிரை மறைக்க முயற்சி செய்தான். எந்தப் படிகள் வழியாய் ஏறி, தம்பியைப் பார்க்கவும், பணம் கொடுக்கவும் வருவானோ, அந்தப் படிகளில் இனி ஏற முடியாது என்ற எண்ணத்தில் அவன் கலங்கியபோது, அவன் கண்ணீரும் கன்னத்தில் இறங்கியது.

     இந்த மூவரும் தங்கள் பாட்டுக்கு நடந்தார்கள். ஆங்காங்கே விடுதிகளின் வெளிப்பகுதிகளில் ஏதோ சொந்த அறையில் துக்கம் நடைபெற்ற தோரணையில் நின்றவர்களைப் பார்க்காமலே தந்தையும் பெரிய மகனும் நடந்தபோது, சுயம்பு அவர்களைப் பார்த்துக் கையாட்டினான். அவர்களின் இதயத்தையே இழுத்துப் போடுவது போன்ற ஒரு அப்பாவிக் கையாட்டு. அதனால் உடம்பு எல்லாம் ஆடிப்போய் அந்த மாணவர்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள்.

     விருந்தினர் விடுதிப் பக்கம் வந்ததும், சுயம்பு நின்றான். அதோ, அந்த டீலக்ஸ் கட்டிடத்தில்தான் டேவிட்... என் டேவிட் இருக்கார்... நான் படும்பாடும்... பட்ட பாடும் அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ...

     அப்போது அங்கே வந்த மூர்த்தியின் காதில் ரகசியம் பேசுவதுபோல் பேசிவிட்டு, சுயம்பு ஓடினான். அனைத்தையும் அதிர வைக்கப் போவதுபோல் ஓடி, டேவிட்டின் திறந்த வாசல் வழியே உள்ளே போனான். சிறிது சந்தோஷப்பட்டான். டேவிட் மட்டுமே தனியாய் இருக்கார்.

     உருண்டு திரண்ட வாலிபால் களையோடு, எகிறி எத்திய உருளைக் கால்களோடு ஓங்கி, ஓங்கியடித்து வைரப்பட்ட டேவிட்டின் கைகள் எதையோ எழுதிக் கொண்டிருந்தன. அவன் கையைப் பிடித்து எழுதுவதை நிறுத்த வைத்து, சுயம்பு சொன்னான்.

     “என்னை வெளியேத்திட்டாங்க டேவிட்...”

     “கேள்விப்பட்டேன். மோசமான நியூஸ். மாணவ அரசியல்வாதிக்கு உங்களைப் பலி கொடுத்துட்டாங்க. இருக்கவே இருக்கு அடுத்த வருஷம். மொதல்ல உங்க மனநிலையை நல்லா வச்சுக்கணும். சைக்யாட்ரிஸ்ட்கிட்ட போங்க தம்பி...”

     “நான் ஒண்ணும் தம்பி இல்ல... என் மனநிலை சரியாத்தான் இருக்கு... என்னப் புரிஞ்சுக்கிற மனநிலை தான் உங்களுக்கு இல்ல... நான் ஒண்ணு கேட்பேன் தருவீங்களா?... டேவிட்...”

     “உயிரைத் தவிர எதை வேணும்னாலும் கொடுக்கத் தயாராயிருக்கேன்.”

     “ஒங்க போட்டோவைக் கொடுங்க...”

     டேவிட், ஏதோ கேட்கப் போனான். சுயம்புவிற்கு மனநிலை முற்றிவிட்டதை அறிந்து அதிர்ந்தான். அவன் கேட்டது கிடைக்காமல் மேலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, எதையோ குடைந்து ஒரு போட்டோ பிரதியை எடுத்து, சுயம்புவின் சட்டைப் பைக்குள் வைத்தான். அவன் தோளைத் தட்டிக் கொடுத்தான். சுயம்பு, கண்ணிரும் கம்பலையுமாய் கேவினான்.

     “நான் வாறேன்... டேவிட்... என் உடம்புல உயிரு இருக்கிற வரைக்கும் ஒங்களை மறக்க மாட்டேன் டேவிட். நீங்களும் என்னை அப்பப்ப நினைத்தால் அதையே பெரிய பாக்கியமா நினைப்பேன் டேவிட். மூர்த்திகிட்ட அட்ரஸ் இருக்கு. லெட்டர் போடுங்க டேவிட்... நானும் லெட்டர் போடுறேன் டேவிட்... என்ன மறக்க மாட்டீங்களே டேவிட்...”

     சுயம்பு, டேவிட்டின் மார்பில் சாய்ந்தான். டேவிட் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான். பிறகு அவனை தனது தோளோடு தோளாய்ச் சேர்த்துக் கீழே இறக்கினான். மூர்த்தி நின்ற பக்கம் சுயம்புவின் கையைப் பற்றியபடியே சுயம்புவை இழுத்துக்கொண்டு போனான். பிள்ளையாரிடம் அவனை ஒப்படைத்துவிட்டு அவனுக்காக கர்த்தரிடம் ஜபிப்பதுபோல் தலை தாழ்த்தி நின்றான். பிறகு மூர்த்தியை மெளனமாக நோக்கிவிட்டுப் போய் விட்டான். அப்படிப் போனவனையே பார்த்து சுயம்பு, விம்மியபோது பிள்ளையார் புலம்பாக் குறையாய் பேசினார்.

     “ஏடா பெரியவன். நடு ராத்திரிக்கு வீடு போறது மாதிரியான பஸ்ஸா பாருடா... இல்லாட்டா... ஊரு சிரிக்கும்... நம்ம வீட்டுக்கே நாம தலை மறைவா போக வேண்டிய காலம் வந்துட்டே காலம் வந்துட்டே...”