14

     ஒரு மாத காலம், அந்தக் குடும்பத்திற்கு இரவும் இல்லாமல் பகலும் இல்லாமல் ஓய்ந்தது - சுயம்புவைப் போல்.

     அந்தக் குடும்பத்தில் மோகனா தவிர, அனைவரும் ஊரில் தேவைப்பட்ட அளவிற்கு மேல் தலைகாட்ட வில்லை. ஆறுமுகப்பாண்டியும் பிள்ளையாரும் அதிகாலையிலேயே வயலுக்குப் போய்விட்டு ஆள் அரவம் முடிந்த இரவிலேயே வீட்டுக்குத் திரும்புவார்கள். மரகதம், அவ்வப்போது அழும் தம்பியைச் சரிக்கட்டுவதிலேயே தன்னைக் கழித்தாள். எப்படியாவது, அடுத்த ஆண்டு அவனை அனுப்பி வைத்துவிட வேண்டும் என்பதில் அவளுக்கு ஒரு குறிக்கோள். அண்ணிக்காரி, கோமளம் தங்கைக்கு ஏற்கனவே தாலி கட்டிவிட்டது போலவும், இப்போது தங்கை விதவையாக இருப்பது போலவும் ஒரு துக்கத்தோடு வீட்டு வேலைகளைக் கூடச் சரியாகச் செய்யவில்லை. அம்மாக்காரி வெள்ளையம்மா, கணவனோடு சாடைமாடையாகச் சண்டை போட்டுக் கிடைக்கும் இன்பத்தை இழந்தவளாய்ப் பாயை விரித்துப் படுத்துக் கொண்டாள். அண்ணன் மகன் அந்த வீட்டில் ‘கால்’ வைத்திருந்தால், இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது என்பது அவளுடைய அனுமானம். இதனால் முன்பின் பார்த்தறியாத வெளியூர் மாப்பிள்ளையின் மொட்டைத் தலை அப்பன் கால் பட்டே இந்த நிலமை என்றால், அவன் மகன் காலடி வைத்ததும் என்னென்ன நடக்கப் போகுதோ என்று இப்போதே அவளுக்கு ஒரு பயம்.

     சுயம்புவைப் பற்றி ஊரிலும், பல்வேறு விதமான வதந்திகள். மலர்க்கொடியைப் பார்ப்பதற்காகவே, அவன் கல்லூரியைப் பார்க்க விரும்பவில்லை என்று ஒரு கிசுகிசுப்பு. கல்லூரியில் இப்படிப்பட்ட ஒரு அப்பாவி, ஒரு பெண்ணை பலவந்தமாகக் கற்பழிக்க முடியுமா என்று ஒரு வாதம். இந்தக் காலத்தில் அப்பாவிகளைத்தான் நம்ப முடியாது என்று ஒரு எதிர்வாதம். கடந்த காலத்தில் இறந்த சீதாலட்சுமி, அன்னக்குஞ்சு, வடிவரசி, போன்றவர்கள் அவனை ஆட்டிப்படைப்பதாக ஒரு ஐதீகப் பேச்சு. அவன் எப்போதாவது ஊருக்குள் போனால், பெண்கள் பக்கமே நிற்பதை நினைத்து, ஊராருக்கு அவன் மீதிருந்த சந்தேகம் ஓரளவுக்கு உறுதிப்பட்டது. பொம்பளக் கள்ளன். இந்தப் பின்னணியில், சுயம்பு வலது பக்க அறையில் கட்டில் காலில் சாய்ந்தபடி கிடந்தான். அந்த அறையில்தான் மரகதக்காவும், மோகனாவும் தங்குவது. இப்போது சுயம்புவும் அங்கே சேர்ந்து கொண்டான். மேலே குறுக்காகக் கட்டப்பட்ட கொடியில் சேலைகளும் பாவாடைகளும் தொங்கின. மோகனாவின் தாவணி மடிப்புக் கலையாமலும், அக்காவின் சேலைகள் முரடு முரடாய் சுருண்டும் கிடந்தன. ஒரு சின்ன - ஐந்தடி உயர அழகு பீரோ. வெளியே மருதாணிக் கலர். இடையிடையே பச்சைப் புள்ளிகள். அந்தப் புள்ளிகளே ஒரு கோடு மாதிரியும் தோன்றியது. அக்காவின் கலியாணத்திற்கு சீதனமாக வாங்கி வைத்திருப்பது.

     சுயம்பு, மனவலி தாங்காமல் தலையைச் சுற்றினான். இதுவரை எதுவும் பேசாத அப்பா, இன்றைய எட்டாவது நாளில் “நாம தலைமறைவா இருந்தாக்கூட சில பயலுவ வயலு வரைக்கும் வந்து தெரியாதது மாதிரிக் கேக்கான். சீக்கிரமா இவனுக்கு ஒரு கலியாணத்தை செய்து வையுங்கன்னு சிபாரிசு செய்யுறான். ‘உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாக முடியுமா’ன்னு பேசுறாங்களாம். இவன் வாயைக் கிளறி வேடிக்கை வேறு பாக்காங்களாம். செறுக்கி மவன ஊருக்குள்ள போக வேண்டாம்னு தட்டி வையுங்க!” என்று அவமானமும், துக்கமும் விரவ சொல்லி விட்டுப் போய்விட்டார்.

     சுயம்பு இந்த உச்சிவெயில் சமயத்தில், உடம்பு வேர்க்கக் கிடந்தான். அப்பாவிடம் சிபாரிசு செய்யப்பட்ட கல்யாண யோசனையை நினைக்க நினைக்க எங்காவது ஓடிப் போய்விட வேண்டும் என்ற வேகம். தனிமைப் பயம். அம்மாவும் அண்ணியும் வெளி ஊரில் துஷ்டி கேட்கப் போய்விட்டார்கள். அக்கா, ஒரு வீட்டுக்குச் சாப்பிடப் போய் விட்டாள். ஒரு பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயிக்கப் பட்டால் சொக்காரர்களும் - அதாவது பங்காளிகளும், ‘கொடுத்தான் - எடுத்தான் வகையறாக்களும்’ அந்த வீட்டுக்கு ஆடு கோழியோடு வந்து ஒரு மூட்டை அரிசியை வேகவைத்து ஆக்கிப் போடுவார்கள். குறைந்தது நூறுபேர், குழந்தைகளும் குட்டிகளுமாய் ஒரே பந்தியில் உட்காருவார்கள். இந்தச் சமயங்களில்தான் தீராத பகையும் தீரும். ஆனாலும் எந்தப் பெண்ணுக்காக “ஆக்கிப்” போட வந்தார்களோ, அந்தப் பெண்ணை சாப்பிட்டியா என்று கூட கேட்கமாட்டார்கள். ஆனாலும், இந்த வழக்கம் முகம் தெரியாத ஏதோ ஒரு வீட்டுக்குப் போகும் ஒரு பெண்ணுக்குத் தான் தனித்து விடப்படவில்லை என்ற தைரியத்தைக் கொடுக்கும். பக்க உறவாக இல்லாமலோ, அல்லது வசதியற்றவர்களாகவோ இருப்பவர்கள், சம்பந்தப் பட்ட பெண்ணை வீட்டுக்குக் கூட்டிவந்து தடபுடலாய்க் கோழியடித்து, சம்பா அரிசி பொங்கி, பெண்ணையும் சாப்பிட வைத்து, தாங்களும் சாப்பிடுவார்கள். இந்த வழக்கத்தின்படி, அன்றைக்குப் பூந்தோட்டத்தில் சுயம்புவுக்குப் பூக்கொடுத்தாளே, மலர்க்கொடி, அவள் வீட்டிற்கு மரகதம் போய்விட்டாள். மலர்க்கொடியின் அப்பா, வசதியில்லாதவர் அல்ல. ‘காட்டான் மூட்டான் களோடு’ அரிசிப்பெட்டி எடுக்க அவருக்கு இஷ்டமில்லை. அந்த அளவுக்கு புதுப்பணம். மரகதமும், ஆயிரம் கவலைகளிலும் தனக்கு ஒரு அற்புதன் கிடைத்திருக்கிறான் என்று தம்பி சொன்ன சொல்லை நம்பி சிறிது சந்தோஷமாகப் போயிருக்கிறாள். அவள் திரும்பி வர இன்னும் நேரமாகும்.

     சுயம்பு, துடியாய்த் துடித்தான். படிப்பு போய்விட்ட கவலை, அவனுக்கும் இல்லாமல் இல்லை. எதிர்காலமே அற்றுப்போய், கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க முடியாமலும், நிகழ்காலத்தில் நிற்க முடியாமலும், சுருண்டு கிடந்தான். எவ்வளவு நேரம் அப்படிக் கிடக்க முடியும். அங்குமிங்குமாய் லாந்தினான். அக்காவின் கல்யாணம் முடிந்ததும், தற்கொலை உட்பட எதையாவது ஒன்றைச் செய்ய வேண்டுமென்றும் நினைத்துக்கொண்டான்.

     சுயம்பு ‘இருமல்’ சத்தம் கேட்டு உள்ளே இருந்தபடியே வெளியே பார்த்தான். முற்றத்தில் மலர்க்கொடி நிற்கிறாள். அவனைப் பார்த்ததும் பாராதது போல் ‘அண்ணி, அண்ணி’ என்று கனைக்கிறாள். சுயம்பு, உள்ளே இருந்தபடியே குரலிட்டான். தனிமைத் துயர் தானாய் போன மகிழ்ச்சி.

     “உள்ளே வா மலரு. சும்மா வா. நமக்குள்ள என்ன இருக்கு...”

     மலர்க்கொடிக்கு தலையை யாரோ தட்டிவிடுவது போலிருந்தது. உடம்பு முழுவதும் ஒரு வேக்காடு. அதன் உள்ளேயோ ஒரு வெந்நீர்த்தனமாக இதம் காணத் துடிக்கும் சுகத்தை, அந்த சுகமே சுயமாய் வந்ததுபோல ஒரு நெகிழ்ச்சி. ஆனாலும் அவள் பிகுவோடு வந்தாள். தாழ்வாரத்தில் ஏறி நின்றவளைப் பார்த்து அவன் “சும்மா வாயேண்டி... நீ யாரு... நான் யாரு... வா வா” என்றான். அவன், அப்படிச் சொல்லச் சொல்ல, அந்தச் சொற்களே அன்று பூந்தோட்டத்தில் அவள் இதயத்தில் ஏற்படுத்திய சுருக்கங்களை நிமிர்த்தின. விளையாட்டுக்காகத்தான் ‘அவர்’ அப்படி பூவை வைத்திருப்பார் என்று ஒரு சமாதானம். யாரையோ அக்கம் பக்கம் ஆளைப் பார்த்து விட்டு, இவர் அதைச் சொல்லி தன்னைக் கலவரப் படுத்தாமல் பூவை, திருப்பிக் கொடுக்க நேரமாகும் என்று, அப்படியே போயிருக்க வேண்டும் என்ற சுயவிருப்ப சிந்தனை. ஆசைக்கு இலக்காக இருந்தவன் படிப்பை முறித்து வந்ததில் ஒரு துக்கம். அதுவும் ஒரு பெண் விஷயம் என்பதால், படு துக்கம். இவளும் ஒரு வகையில் துஷ்டி கேட்கவும் வந்திருக்கிறாள் என்று சொல்லலாம். ஆனாலும், அவனைப் பார்த்த உடனே, அதுவும், அவன் அவ்வளவு பேசியபிறகு, துக்கமே, சுகமாக மாறியது. ஆனாலும் மீண்டும் வீறாப்பாய்க் கேட்பதுபோல் கேட்டாள்.

     “அண்ணி இல்லியா?”

     “என்னடி இது... ஒன் வீட்டுக்குத்தானே வந்திருக்காள்...”

     “சின்ன அண்ணியைக் கேட்டேன்!”

     “உனக்கு அவள் மூத்தவள்தானே.”

     “தெரியாதா... நான் சின்னவள்.”

     “ஆமாமா. நீ அம்மணமா திரிஞ்சபோது, அவள் ஜட்டி போட்டிருந்தாள். இப்போகூட ஞாபகம் வருது:”

     மலர்க்கொடிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. வெளியேறப் போனவளை சுயம்பு அவள் கையைப் பிடித்திழுத்து, கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, அவனும் உட்கார்ந்தான். அவள் தலையை ஆச்சரியமாகப் பார்த்தான். முன் நெற்றியில் ஐந்தாறு முடிக்கற்றைகள். நெற்றிக்குப் பாதிவரை தொங்கின. நேர்வகிடு எடுத்தவளின் தலையில், அந்த முடிக்கற்றை வேர்ப்பிடித்த இடத்தில் ஒரு குறுக்கல் வகிடு. அவனுக்கு ஆச்சரியம். இது எப்படி முடியும்...?

     “ஏய் மலரு. இந்த வகிடு எப்படிம்மா வரும்...?”

     “அது கிடக்கட்டும். ஒங்களை எதுக்காக காலேஜ விட்டு நீக்கினாங்க?”

     “இந்த சந்தோஷமான, சமயத்துல பழைய குப்பை எதுக்கு மலரு... ஒன்னைப் பார்த்ததும் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுமா? இப்படி சந்தோஷப் படுறது இந்த ஒரு மாசத்துல இதுதான் மொதல் தடவை. அப்புறம் இந்த வகிடு...”

     “இப்பவாவது என்னைப் புரிஞ்சுக்கிட்டீங்களே. நான் ஒங்களைப் பார்க்கத்தான் வந்தேன். மரகத அண்ணி கிட்ட, நான் வாரது வரைக்கும் எங்க வீட்டைவிட்டு புறப்படக் கூடாதுன்னு சொல்லிட்டேன். ஒங்கம்மாவோட, துஷ்டிக்குப்போன எங்கம்மா வர்றதுக்கு, சாயங்காலம் ஆகும்னு சொல்லிட்டாள். மோகனா, இப்போ வர மாட்டாள். அந்தச் சேதி ஒங்களுக்குத் தெரியவேண்டாம். அப்படியே அவள் வந்தாலும் கவலையில்லை. என் மனசு அவளுக்கு நல்லாவே தெரியும்.”

     “அடி என் ராசாத்தி. எனக்கு ஒண்ணுதான் புரிய மாட்டேங்கு...”

     “என்னவாம்?”

     “சேலை எப்படிக் கட்டணும்னு தெரியலை. கொஞ்சம் எழுந்து ஒன் சேலையைக் கழட்டி, பழையபடி கட்டு பார்க்கலாம். நாம ஒண்னுக்குள்ளே ஒண்னு. அப்புறம் ஏண்டி வெட்கம்...”

     “எப்பாடி, விட்டால் அதுக்கு மேலயும் போவீங்க போலிருக்கே... எனக்குப் பயமா இருக்கு. ‘அதை’ கலியாணத்துக்கு ரிசர்வ் பண்ணிக்குவோம். நான் வாறேன்... இதுக்குமேல இருந்தால், ஒங்க ஆசையை என்னாலயும் தடுக்க முடியாமப் போயிடும்.”

     “எதுக்கும் அந்த சேலைய...”

     “ச்சீ... பேச்சப் பாரு. நான் வாறேன்...”

     மலர்க்கொடி, வெளியே போனாள். ஜாக்கெட்டுக்குள் வலது கையை விட்டுத் துழாவி, நான்காய் மடிக்கப்பட்ட ஒரு காகிதத்தை வெளியே எடுத்து முத்தம் கொடுத்தாள். இந்த காகித முத்தத்திற்குப் பிறகு, மீண்டும் அந்த அறைக்குள் ஓடிவந்து, முத்தமிடப்பட்டதை, அவன் மடியில் போட்டுவிட்டு ஓடினாள். பிறகு நாணத்தோடு திரும்பி வந்து “பதில் எழுதி வையுங்க. நாளைக்கு வந்து வாங்கிக்கறேன்” என்று அதே நாணத்தோடு சொல்லிவிட்டு, அந்த நாணத்தையும், அவனிடமே விட்டுவிட்டு ஓடுவதுபோல் ஓடினாள்.

     சுயம்பு, கடிதத்தைப் பிரித்துப் படித்தான்.

     என் அன்பிற்குரிய ...... சுயம்பு...

     கோடிட்ட இடத்தை, நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள். நான், இப்படி கோடு போடுவதற்குக் காரணம், நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது புரியாததால்தான். காதலர் என்று எழுதினால், சந்தோஷப்படுவேன். நண்பர் என்று இட்டுக் கட்டினால் ஒரு நம்பிக்கையோடு இருப்பேன். சகோதரி என்று எழுதினால் தற்கொலை செய்துகொள்வேன். அப்புறம் உங்கள் இஷ்டம்.

     சுயம்பு மேற்கொண்டு அந்த நீண்ட கடிதத்தைப் படிக்க இயலவில்லை. சொட்டு சொட்டாகவும், அருவி போலவும் கொட்டிய கண்ணிர், அந்த காகிதத்தில் விழுந்து விழுந்து அவளின் காதல் மொழிகளை நனைத்து நனைத்து நையப் புடைத்தன. அவன் அழுதுகொண்டே இருந்தான். அவனுக்காக சுய இரக்க அழுகை, குடும்பத்திற்காக சுய வெறுப்பு அழுகை, அதோ, சிரிப்பும் கும்மாளமுமாய் எதிர்கால இனிமைகளோடு அந்த வாசற்பக்கம் நின்று குதித்தோடிப் போனாளே, அவளுக்காக ஒரு பரிதாப அழுகை.

     சுயம்பு அந்தக் கட்டில் சட்டத்தைக் குத்தினான். கால்களைப் பின்சட்டத்தில் வைத்து அடித்தான். குப்புறப் படுத்தான். பக்கவாட்டில் நெளிந்தான். திடீரென்று ஒரு நினைப்பு. டேவிட்டின் நினைப்பு. அவன் தன் கையைப் பிடித்து அழைத்துப் போனது, மணவறையிலிருந்து இறங்கித் தன்னை அவன் வீட்டுக்கு அழைத்துப் போவது போன்ற கற்பனை... அதுவே அச்ச உணர்வாகத் துவங்கி, ஆசை உணர்வாக மயங்கி, ஆகாயமும் பூமியுமாக விசுவரூபம் எடுத்து, அவனை ஆக்கிரமித்தது. அவனுள்ளே ஒரு வெறி! டேவிட்டுக்குக் கடிதம் எழுத வேண்டும். எப்போது எழுதலாம்... இப்போதே... இந்த விநாடியே...

     அவன், கடிதம் எழுதுவதற்காக தங்கையின் ரப் நோட்டை எடுத்து ஒரு முரட்டுத் தாளைக் கிழித்தான். அதை, அந்த நோட்டின் மேலேயே வைத்துக்கொண்டு, மாடத்தில் வைத்திருந்த பால் பாயிண்ட் பேனாவை எடுத்தான். அப்போது தலையைத் தூக்கவிடாமல் தடுத்த கயிற்றுக் கொடியைப் பார்த்தான். அக்காவின் பட்டுச் சேலை. தங்கையின் பாவாடை. இருவரில் எவருக்கு என்று தெரியாத பிரா.

     இதுவரை அடைத்து வைத்த உணர்வுகள், அவன் உள்ளத்தை மட்டுமல்ல. உடம்பையும் உடைத்துக் கொண்டு பீறிட்டன. கண்கள் படபடத்தன. முகம் குழைந்தது. இடுப்பு வளைந்தது. பெருவிரல் தரையில் வட்டம் போட்டது. நாக்கு சுருண்டது. இதயம் அடித்துக் கொண்டது. மூளை பிரகாசித்தது.

     சுயம்பு, ஒரு முடிவுக்கு வந்தான். டேவிட்டுக்கு, இந்த லுங்கியோடு கடிதம் எழுதுவது, அவரை அவமானப் படுத்துவது மாதிரி. என்னை நானே ஏமாற்றிக் கொள்வது மாதிரி. எழுதுவதையே எழுதுகிறோம். பொய் வேஷம் கலைத்து, நிச வேஷம் போட்டு எழுதலாம். இது வெறும் கடிதமல்ல. சத்திய வாக்கு சத்தியத்திற்கு பொய்யோ, பொய் வேடமோ கூடாது என்று பொருள்.

     சுயம்பு கதவைச் சாத்தினான். ஆனால், தாழ்ப்பாள் இடவில்லை. அடக்கமுடியாத ஆசை ஒரு பாதி, யாரும் பார்க்கமாட்டார்கள் என்ற எண்ணம் மறு பாதி. லுங்கியைக் கழற்றிக் கால் வழியாய் போகவிட்டுக் குவியலாக்கி, அந்தக் குவியலிலிருந்து வேறு பக்கம் குதித்தான். தங்கையின் வெளிறிய வெள்ளைப் பாவாடையை எடுத்துத் தலை வழியாய் விட்டு, அது முக்காடாய்க் கண்களை மூட, தலையை நிமிர்த்தி, பாவாடையை இடுப்புக்குக் கொண்டு வந்து, நாடாவை இறுக்கி, தூக்குப் போடுவது மாதிரியான ஒரு சுருக்கை ஏற்படுத்தினான். கைக்கு எட்டிய பிராவை எடுக்கப் போனான். அப்போதுதான் சட்டை போட்டிருப்பதை அறிந்து, அந்த நீலச்சட்டையை ‘பட்டன்’களோடு சேர்த்துக் கிழித்து, இரு துண்டுகளாக்கி லுங்கிக் குவியலின் மேல் போட்டான். பிறகு காலால், அவற்றை எட்டி உதைத்து விட்டு, பிராவை எடுத்து, கொக்கியை மாட்டினான். எந்த ஜாக்கெட் பொருந்தும் என்பது போல், கொடியை மறைத்தவற்றில், ஒரு மஞ்சள் கலரைப் போட்டான். அந்தக் கலருக்கு மாட்சாக, சேலை இல்லாததால், போட்ட ஜாக்கெட்டைக் கழற்றிவிட்டு, சிவப்பு ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டு, அதே நிற வாயில் புடவையை எடுத்தான். பட்டுச்சேலை பக்கம் போன ஒரு கையை, இன்னொரு கை தடுத்தது. ‘பாவம் அக்கா. இதைக் கடடிக் கொண்டுதான் வேற வீடுகளுக்கும் சாப்பிடப் போவாள்.’

     சுயம்பு, புடவையின் ஒரு முனையை இடுப்புப் பக்கம் சொருகினான். சரியாக வரவில்லை. புடவை கட்டுவதே ஒரு கலை என்பது இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. கொசுவம், முந்தானை, போன்றவை எப்படி உருவாகின்றன என்பது அவனுக்குச் சரியாகப் பிடிபடவில்லை. ஆனாலும் உடம்பு முழுவதும் தாறுமாறாகச் சுற்றினான். மாராப்பைக் காணோமே... எப்படியோ தோளுக்குக் கீழே ஒரு கைக்குட்டை அளவுக்கு அகலமான துணி கிடைத்தது. போதும் மாராப்பு. அப்புறம் எவள் கிட்டயாவது யோசனை கேட்டுக்கலாம்.

     சுயம்பு, அந்த சீதனப் பீரோ மேலே இருந்த சாவியை எடுத்து, பீரோவைத் திறந்தான். அதன் மேல் தட்டிலிருந்த இன்னொரு சாவியை எடுத்து, லாக்கரைத் திறந்தான். மூன்று அட்டைப்பெட்டிகள். அக்காவுக்காக வாங்கிய நகை நட்டுக்கள். தங்க இழையின் ஆட்டியன் வடிவத்தில் கோர்க்கப்பட்ட மார்பளவுக்கான காசு மாலை. இன்னொரு பெட்டியில் ஒரு நெக்லஸ். மற்றொரு பெட்டியில் வெல்வெட் வளையங்களில் வைக்கப்பட்ட நான்கு தங்க வளையல்கள். பீரோவைப் பூட்டாமலே சாத்திவிட்டு அதன் ஒரு பக்கம் உள்ள செவ்வகக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். ஆனந்தம். அட மறந்துட்டேனே. மீண்டும் பீரோவைத் திறந்து அதன் மேல்தட்டிலேயே கிடந்த கொலுசுகளை எடுத்து, காலில் மாட்டிக் கொண்டான். கண்ணாடியில், பிரமிப்பாய் பார்த்தான். பீரோவுக்கு மேலிருந்த பவுடரைப் பூசிக்கொண்டான். டப்பியிலிருந்த குங்குமத்தை எடுத்து டேவிட், டேவிட்' என்று சொல்லிக்கொண்டே நெற்றியில் திலகமிட்டான்.

     கால் கொலுசுகள் ஜல்ஜல் என்று சத்தத்தை எழுப்ப, அங்குமிங்குமாய் நடந்து பார்த்தான். அதற்கு ஏற்ப, லேசாய் ஆடினான். ஒவ்வொரு காலையும் தூக்கித் தூக்கி, ஆட்டி ஆட்டி, நாதம் எழுப்பினான். கைகளைப் புரட்டிப் புரட்டி பொன்னொலி எழுப்பினான். மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டான். பாழாய்ப் போகிற இந்தப் புடவைதான்... பரவாயில்லை. நாளைக்கு மலருகிட்டயே கேட்டுக்கலாம். பதில் கடிதம் வாங்க வருவாளே.

     சுயம்பு, பெண்மையைச் சிறையிட்ட ஆணுடம்பை தண்டிப்பதுபோல், குதியாய்க் குதித்தான். பிறகு அதுவே ஆனந்தக் கூத்தானது. மேஜையில் தயாராயிருந்த காகிதத்தையும், அதன் மேல் வைக்கப்பட்ட பால்பாயிண்ட் பேனாவையும் குறி பார்த்தபடியே நாற்காலியில் உட்கார்ந்தான். எழுதி, எழுதி, எழுதியவற்றைக் கிழித்துப் போட்டான். ஏதோ ஒரு நெருடல்... என்னது... ஆமாம். பாசமும் நேசமும் காட்டிய அந்த ஆம்புளைப் பயல்கள் மூர்த்திக்கும், முத்துவுக்கும் ஒரு லெட்டர் போட்டேனா, அன்பு செலுத்துகிறவர்களை விட்டுவிட்டு, அன்பு செலுத்தப்படுகிறவருக்கு எழுதுவது சுயநலம் இல்லியா... அந்தப் பயல்களின் ‘உடன்பிறப்பு’ பாசத்தை மறக்க முடியுமா...

     சுயம்பு டேவிட்டுக்கு, எழுதப்போன காகிதத்தை, மூர்த்திக்கும் முத்துவுக்கும் சேர்த்து எழுதினான். பிறகு, டேவிட்டுக்கு இன்னொரு நோட்டுப் புத்தகத்தில் ஒரு நல்ல காகிதத்தைக் கிழித்தான். தங்கையின் டிராயிங் நோட்டுப் புத்தகம். அதுக்குள் ஏதோ ஒரு ஆண் படம் வரையப் பட்ட தாளை விட்டுவிட்டு, அடுத்த தாளைத்தான் எடுத்தான். எழுதத் துவங்கினான். வார்த்தைகள் தாமாக வந்தன. மலரின் வார்த்தைகளையும் கொஞ்சம் திருடிக் கொண்டான்.

     “என் டேவிட் ...... அவர்களுக்கு.

     “நான் வேண்டும் என்றுதான் கோடிட்டேன். அதை உங்கள் விருப்பமான வார்த்தையால் இட்டு நிரப்புங்கள். காதலர் என்று எழுதினால், என் கஷ்டம் பறக்கும். தோழர் என்று எழுதினால் ஒரு நம்பிக்கை பிறக்கும். சகோதரர் என்று எழுதி நிரப்பினால் துக்கமும் சோகமும் என் நெஞ்சை இட்டு திரம்பும். நீங்கள் என் டேவிட்டாச்சே..என்னைப் புதுப் பெண்ணைக் கூட்டிப் போவது போல், கைபிடித்துக் கூட்டிச்சென்ற காதல னாச்சே! நான் அந்த ராட்சசியால் அவமானப்பட்ட போது, அதைத் தீர்த்து வைச்ச கண்ணியனாச்சே! எனக்குக் காதல் வரம் கொடுத்த புண்ணியனாச்சே! ஒங்களுக்கா தெரியாது. நான் கோடு போட்ட இடத்தில் ஆருயிர்க் காதலர் என்று எழுத இடம் போதாது என்று பார்க்காமல் காதலனுக்குரிய அத்தனை வார்த்தைகளையும் உங்களுக்குத் தெரிந்துள்ள அத்தனை மொழிகளிலும் எழுதுங்கள்... டேவிட்! எழுதுங்கள்...

     “டேவிட்! உங்கள் பொன்முகத்தை, உங்கள் புகைப் படத்தைப் பார்த்துப் பரவசப்படுகிறேன். அதைப் பத்திர மாக பெட்டிக்குள் வைத்துப் பூட்டியிருக்கிறேன் டேவிட்! நீங்கள் அன்று, என் சட்டைப் பைக்குள் உங்கள் புகைப் படத்தை வைத்தபோது, சிந்தித்தேன் டேவிட்! கடவுளே. கடவுளே. எனக்கு இருதய ஆபரேஷன் நடக்க வேண்டும்! அதற்குள் என் டேவிட்டின் ஒரு சின்னப் புகைப் படத்தையாவது உள்ளே வைக்கவேண்டும். இதுவே என் வேண்டுகோள். டேவிட்! பதில் எழுதுவீர்களா டேவிட்! நீங்கள் எழுதாவிட்டாலும், நான் எழுதிக் கொண்டே இருப்பேன் டேவிட்! அவற்றை நீங்கள் படித்தாலே போதும் டேவிட்!”

     வாசல் கதவு டப்பென்று திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்த மரகதம், “யாருடி நீ” என்று தன்னையறியாமலே கேட்டாள். அப்புறம் வாயில் கை வைத்தபடியே அவனை ஸ்தம்பித்துப் பார்த்தாள். அவனைச் சற்றிச் சுற்றி வந்து புலம்பினாள்.

     “தம்பி... அய்யோ...என் தம்பி...”

     மரகதம் அய்யய்யோ, அய்யய்யோ என்றும், தம்பி, என் என் தம்பி என்றும் சொன்ன வார்த்தைகளையே வாயில் சுற்றாக விட்டாள். சுயம்பு டேவிட்டுக்கு எழுதிய கடிதத்தை அவளுக்குத் தெரியாமல் பீரோவுக்கு மேல் போடப்பட்ட டிஷ்யூ பேப்பருக்குக் கீழே லாகவமாக வைத்துவிட்டான்.

     வாசல்பக்கம் இன்னொரு காலடிச் சத்தமும் கேட்டது.

     வெளியூரில் துஷ்டி கேட்டுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிய வெள்ளையம்மா, தனது சொந்த வீட்டிலும் ஒரு துஷ்டி விழுந்ததுபோல் உள்ளே ஓடினாள்.

     சுயம்புவைச் சுற்றிச் சுற்றி வந்த மரகதத்திற்கு அம்மா வந்ததில் சிறிது தைரியமும் நிதானமும் வந்தன. ஆனாலும், பதட்டம் குறையாமலே, “எம்மா, எம்மா. மொதல்ல கதவைச் சாத்தம்மா... யாருக்காவது தெரிஞ்சுடப் போவுதும்மா” என்று கத்தினாள்.

     அப்படியும், வெள்ளையம்மா கதவைச் சாத்தாமல் மகனையே வாயகலப் பார்த்துவிட்டு, பிறகு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு தரையில் புரளப் போனாள். மரகதம் அவளைத் தடுத்து, ஒரு கைக்குள் அடக்கிக்கொண்டு, அவளையும் சேர்த்து, இழுத்து இழுத்து, மறுகையால் கதவைத் தாழிட்டாள்.

     தாயும், மகளும், சுயம்புவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்கள். மரகதம் தம்பியின் தாறுமாறான புடவையைக் களைவதற்காக, அவன் தோளில் தொங்கிய புடவை நுனியைத் தொடப்போனபோது, சுயம்பு அவள் கைக்குக் கீழாக குனிந்து தலையைப் பின்வாங்கி, சிறிது விலகி நின்றான். மரகதம், இரு கரங்களையும் இயலாமையைக் காட்டுவதுபோல் ஆகாயத்தைப் பார்த்து ஆட்டி விட்டுக் கெஞ்சினாள்.

     “தம்பி... தம்பி... நீ செய்யுறது உனக்கே நல்லா இருக்காடா...”

     “தம்பில்ல.தங்கச்சின்னு சொல்லுக்கா...”

     “ஏய் மரகதம்... சித்தம் குழம்பிப்போய் நிக்கவன் கிட்ட என்ன பேச்சு... சுயம்பு, அம்மா சொல்லுவதைக் கேளுடா... உனக்கே இது அடுக்குமாடா... அப்பாவுக்குத் தெரிஞ்சா...”

     சுயம்பு கதவைத் திறந்து அம்மாவுக்கு வழி காட்டப் போனபோது, மரகதம் அவனை மடக்கினாள். “வாம்மா, வந்து பிடிம்மா” என்று சொல்லிக்கொண்டு, அவன் இடுப்போடு சேர்த்து, தனது இடது கையை வளைத்துப் போட்டு, வலது கையால் அவன் ஜாக்கெட்டைக் கிழித்தாள். முதுகுப் பக்கம் ஏற்பட்ட சின்ன கிழிசலுக்குள் கையைச் சொருகி, அதைக் கீழேயும் மேலேயுமாய் இழுத்தாள். அவன் பிராவோடு நின்றபோது, அம்மாக்காரி, ‘அடப்பாவிப் பயலே’ என்று கத்திவிட்டு, அதைப் பிடித்து இழுத்தாள். இதனால், சுயம்பு சிறிது தடுமாறியபோது, மரகதம் அவன் தோளிலிருந்து முதுகுப் பக்கம் விழுந்த புடவையை இழுக்கப் போனாள். அம்மா, அவனை வந்து பிடித்துக்கொண்டாள்.

     சுயம்பு, அம்மாவை ஒரு அடி அடித்தான். அக்காவை ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு, அவள் மீது ஓங்கிய கையை, அப்படியே வைத்துக்கொண்டான். அவளோ, அவன் சேலை நுனியைப் பற்றிக்கொண்டே அங்குமிங்குமாய்த் தாவித்தாவி, பிறகு அவனோடு சேர்ந்து ஒட்டிக்கொண்டு ‘என்னம்மா பார்த்துக்கிட்டே நிக்கே’ என்று சொல்லி விட்டு, கையைத் தம்பியின் இடுப்புப்பக்கம் கொண்டு போனாள். அம்மாக்காரியும், அறைபட்ட கன்னத்தைத் தடவி விட்டுக்கொண்டே, மகனை நெருங்கினாள். அவ்வளவுதான். சுயம்பு ஒரு உதறு உதறினான். தலையை ராட்டினமாய் விட்டபடியே, ராட்சதத்தனமாய் உதறினான். “எம்மா.என் கண்ணு போச்சே” என்று கீழே விழுந்த வெள்ளையம்மா, மேலே எழாமல் அப்படியே கீழே கிடந்து, முனங்கினாள். அவன் தள்ளிய தள்ளலில் சுவரில் போய்க் குப்புற விழுந்த மரகதம், தட்டுத் தடுமாறி நின்றாள். நெற்றியைப் பிடித்தபடியே கீழே துடித்த அம்மாவைக் கைத்தாங்கலாய்த் தூக்கி உட்கார வைத்தாள். அம்மாவோ, பழையபடி சரிந்தாள். மரகதம், தம்பியை நோக்கி நகர்ந்தாள். அவன் கத்தினான். “யாராவது கிட்ட வந்தீங்க. நான் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும்! நான் ஆம்புள இல்ல! இத மொதல்ல தெரிஞ்சுக்குங்க!”

     வெள்ளையம்மா, கண்களைக் கசக்கிக்கொண்டு, வலித்த இடத்தைத் தடவி விட்டுக் கொண்டிருந்தபோது, மரகதம் அவனை மீண்டும் பார்த்தாள். கிட்டே நெருங்க முடியாத பார்வை: எட்டி உதைக்கப் போவது போன்ற கால்கள் : சுயம்பு பல்லைக் கடித்துக்கொண்டு, யார் பக்கத்தில் வந்தாலும், இரண்டில் ஒன்றைப் பார்க்கப் போவது போல் ஆயத்த நிலையில் நின்றான்.

     மரகதம் எந்தச் சுவரில் மோதினாளோ, அந்தச் சுவரிலேயே தலையைப் போட்டு அங்குமிங்குமாய்ப் புரட்டினாள். “தம்பி, என் தம்பியே... கடவுளே. அவன இப்படி ஆக்கிட்டியே, ஆக்கிட்டியே” என்று அரற்றியவள், திடீரென்று தலையைச் சுவரில் வைத்து மோதினாள். மோதிக்கொண்டே இருந்தாள்.

     சுயம்பு, அக்காவின் தலையைத் தொட்டான். உடனே அவள், அவனை லேசாய் தள்ளிவிட்டுக் கொண்டு, தலையைச் சுவரில் வைத்துத் தேய்த்துக்கொண்டே இருந்தாள். சுயம்பு அக்காவைப் பலமாகத் திருப்பி விட்டான். அவள் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்பது போல், அவள் பக்கமாகக் கைகளை நீட்டினான். அவள் கையை எடுத்து இடுப்புச் சேலையின் பக்கம் கொண்டு வந்தான். வீறாப்பு இல்லாமல் குழைந்து நின்றான். கண்கள் எரிகின்ற மெழுகுவர்த்திகளாய் உருகிக்கொண்டிருந்தன. மரகதம், தம்பியை அப்படியே கட்டிப் பிடித்து மீண்டும் அழுதாள். இதற்குள் அவனே புடவையை அவிழ்த்து, கீழே போட்டுவிட்டான். அவள் காலடியிலேயே போட்டான். அக்காள் கீழே கிடந்த லுங்கியைக் கையில் வைத்துக்கொண்டு ‘நீயே பாவாடையைக் கழட்டு’ என்று உதடு துடிக்கச் சொன்னாள். அவன், பாவாடைக்கு மேல் லுங்கியைக் கட்டிக்கொண்டு அதை அவிழ்த்துப் போட்டான். மரகதம் சிறிது துக்கம் குறைந்து கேட்டாள்.

     “குங்குமத்தையும் அழிச்சுடுடா...”

     “டேவிட் இருக்கற வரைக்கும் அது இருக்கும்...”

     மரகதத்திற்கு, ஒன்றும் புரியவில்லை. பழைய தம்பியை, புதுப்புது வகை வகையாய் பார்ப்பது போல், பார்த்தாள். உருட்டுக்கட்டை உடம்பு. இப்போது முன் பக்கமாய், சரிந்து, ஒடுங்கியிருந்தது. எங்கோ பார்க்கும் பார்வை! எதையோ தேடும் உளைச்சல்! அவளால் இன்னும் தாள முடியவில்லை. அவனை அப்படியே அனைத்துக்கொண்டாள். “தம்பி... தம்பியே...” என்று புலம்பியபடியே நெஞ்சில் ஏதோ குத்துவதைப் பார்த்து அழுத்தமாய்ப் பார்த்தாள். அவன் கழுத்தில் காசு மாலையும், நெக்லஸும் கிடந்தன. அவற்றையும் வளையல்களையும் அவளே கழற்றி, பீரோ மேலிருந்த அட்டைப் பெட்டிக்குள் வைத்தாள். கண்களை விட்டுவிட்டு, இப்போது காதுகளைத் தடவிவிட்ட வெள்ளையம்மா, இன்னும் எழுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் கிடந்தாள். அவள் முகத்தில் ஒரு சின்னத் தெளிவு. மகன் சேலை கட்டுவதற்கான காரணத்தை உறுதிப்படுத்திய அந்தக் கண்டுபிடிப்பு சாதகமாக இல்லாததால் சலிப்போடு சொன்னாள்:

     “எல்லாம் அந்த சீதாலட்சுமியோட வேலைதான். இவனும், அவளமாதிரியே முழிக்கான் பாரு... அவள மாதிரியே இடுப்பக் குலுக்குறான் பாரு. கண்ணைச் சிமிட்டுறான் பாரு. ஏண்டி.. தட்டுக்கெட்ட மூதேவி. ஒன்ன நாங்களாடி சாகச் சொன்னோம்... இந்த வீட்டுக்கு வந்து இந்தப் பயல தம்பி தம்பின்னு சொன்னதாலேயே இவன் ஒனக்கு தம்பி ஆயிடுவானாடி... யாரையாவது பிடிக்கணும்னா, ஒனக்கு சமாதி கட்டிக்கிட்டிருக்கும் போதே ரெண்டாவது கலியாணத்துக்கு நிச்சயம் செய்துக்கிட்ட அந்தப் ‘பலபட்டறப்பய’ ஒன் புருஷன் முத்துக்குமாரப் பிடி. ஒன் மாமன் ‘நரங்கன’ பிடி: அப்படியும் முடியாட்டால், ஒன் மச்சுனன் ‘கொக்கன’ பிடி, என் மகன எப்படிப் பிடிக்கலான்டி. எத்தனாவது சட்டத்துலடி இடமிருக்கு! இரு இரு... பூவம்மா மயினிகிட்ட சொல்லி ஒன்ன பாதாளச் சிறையுல தள்ளுறேன்...”

     “என்னம்மா நீ. பழைய கர்நாடகமா இருக்கே... ஒரு வேள மூளக் கோளாறோ என்னவோ...”

     “சும்மா பினாத்தாதீங்க. உடல் கோளாறுதான்...”

     “பாத்தியா, பாத்தியா... இந்த மூதேவி சீதாலட்சுமி மாதிரியே அலுக்கிக் குலுக்கி பேசறான் பாரு. இந்த வார்த்தை இவனுக்குத் தெரியாத வார்த்தை! அந்தப் பாழாய்ப் போன சீதாலட்சுமி, அடிக்கடி சொல்லுற வார்த்த - பினாத்தாதீங்க...”

     மரகதம், தம்பியின் நிலைமை அண்ணிக்குத் தெரியக் கூடாது என்பதில் இப்போது அக்கறை காட்டினாள். ஆகையால், சிறிது அறிவுபூர்வமாய்க் கேட்டாள்.

     “அண்ணி, பிள்ளிங்கள எங்கம்மா... நல்லவேளை... இந்தக் கூத்த அவள் பார்க்கலே...”

     “மூளி அலங்காரி... மூதேவி சண்டாளி! எங்க வீட்டுக்கு போறேன்னு, இடையிலேயே போயிட்டாள். நாலு நாளைக்கு வரமாட்டாளாம். பேரன் படிப்பு கெட்டுப் போகுமேன்னு சொன்னதுக்கு, ‘போகட்டுமே. ஒங்க பரம்பரைக்கு கடவுளே வந்து காலேஜ் நடத்துனாலும் படிப்பு ஏறாதுன்னு’ என்னமாக் கேட்டுட்டாள் தெரியுமா... யானை சேறுல சிக்குனால், தவளைகூட கிண்டல் பண்ணுமாம்.”

     மரகதம் எதுவும் பேசாமல் தம்பியைப் பார்த்தாள். அவன் சுவர்மேல் உடல் போட்டு, கண்மேல் நீர் போட்டு நின்றான். ஏதோ பேசப்போன அக்காவால் அது இயலாமல் போய்விட்டது. வெள்ளையம்மா. உஷார்ப்படுத்தினாள்.

     “காலடிச் சத்தத்தைப் பார்த்தா ஒங்கப்பா மாதிரி தெரியுது. அவருகிட்ட விஷயத்தைச் சொல்லிடாதே. பாவி மனுஷன், ஏற்கெனவே நொந்து போயிருக்காரு... நான் பேசிக்கிடுவேன். நீ வாய வச்சுக்கிட்டு சும்மா இரு...”

     “ஒரு சொல்லுலேயே முடியேம்மா. நடு ராத்திரியில வாறவரு. இன்னைக்கு ஏன் இப்ப வறாரு...”

     வெள்ளையம்மா, கதவைத் திறந்தபோது, அவளைப் பார்த்து முறைத்தபடியே பிள்ளையார் வந்தார். அவளும், அவரிடம் பேசினாள்.

     “துண்டை எங்கேன்னு கேளேண்டி. நல்ல துண்டு...”

     “அடடே... வயலுல குத்துக் கல்லுல போட்ட துண்டை அப்படியே வச்சுட்டேன். இந்நேரம் அது கிணத்துக்குள்ள விழுந்து மிதந்து, அப்புறம் தண்ணிர் குடிச்சு போயிருக்கும். ஏழா. மரகதம், ஏன் இப்படி எல்லாம் செதறிக் கிடக்கு. நகைப் பெட்டிகள ஏன் மேலே வச்சிருக்கே. இவன் ஏன் இப்படி தாறுமாறா நிக்கான்...”

     “ஒண்ணுமில்லப்பா...”

     “வீடுதான் ஒண்ணுமில்லாம ஆயிட்டே. இவன் ஏதோ வீட்ல சேலையைக் கீலய உடம்புல சுத்திக்கிட்டு என்னெல்லாமோ பண்ணுனானாம். அந்தக் ‘கருவாப்பய’ அருணாசலம் மெனக்கெட்டு வயலுக்கு சைக்கிளில் வந்து என்கிட்ட சொல்லிட்டுப் போறான். அதனாலதான் இப்படி ஓடி வர்றேன்.”

     மரகதம், அப்பாவைத் திடுக்கிட்டுப் பார்த்துவிட்டு, வீட்டின் கிழக்குச் சுவரைப் பார்த்தாள். ஜன்னல் திறந்திருக்கிறது. ஓடிப்போய் சாத்தினாள். பிறகு அப்பா பக்கம் திரும்பி, ஏதோ சமாளிக்கப்போனாள். இதற்குள், வெள்ளையம்மா விளக்கம் சொன்னாள்.

     “எல்லாம் இந்த ஊருக்கு இடையில வந்துட்டு இடையிலேயே போன சீதாலட்சுமியோட வேலை. நம்ம பிள்ளைய பேயா ஆட்டுறான்னு சொல்லேண்டி...”

     “பூவம்மாவ கூப்பிடுறதுக்கென்ன... நம்ம நிலமை தான் அந்த மொள்ளமாரி வார அளவுக்கு ஆயிட்டே.”

     “கூப்பிட்டுக் கூப்பிட்டு வாயே வலிச்சுப் போச்சு. என் தம்பி வந்து கூப்பிடட்டும். வீட்டுக்கு நான் வந்து. ஒம் புருஷன் வீம்புக்கார பிள்ளையாரு. அய்யோ, பேரைச் சொல்லிட்டேனே. எப்படி என் வீட்டுப் படியேறலாம்னு கேட்டால் நான் எந்த முகத்தோட திரும்புவேமுன்னு சொன்னதையே சொல்லுதாள். ஆனாலும் இந்த வீம்பு ஆவாதும்மா... ஊரு ஒலகத்துல செய்யாததையா செய்தாள். ஆசைப்பட்டவன காதலிச்சாள். அவனையே கட்டிக்கிட்டாள். அதுல என்ன தப்பு...”

     வெள்ளையம்மா, தானே ஒரு காலத்தில் இந்தப் பிள்ளையாரைக் காதலித்ததில் லயித்து நின்றாள். பிள்ளையாரும், அவள் பேச்சை லேசாய் ரசித்தார். பூவம்மா அவரது சொந்த பெரியப்பா மகள். இவருக்கு மூன்று வயது மூத்தவள். சரியாக நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘வீமசேனன்’ மாதிரி இருந்த லோகல் தர்மரை, காதலித்தாள். கம்மாக்காடும், சோளத் தட்டைகளும், அவர்களுக்கு இடம் கொடுத்தன. தர்மரோட குடும்பத்துக்கு, இந்த இஸ்கு தொஸ்கு தெரிஞ்சபோது, மகனை வீட்டுக்குள் பூட்டினார்கள். ஆனால், இந்தப் பூவம்மா அசரவில்லை. ஆளில்லாத சமயம், அந்த வீட்டுக்குப் போய், கள்ளச்சாவி போட்டு பூட்டைத் திறந்தாள். தருமர் தட்டிக் கேட்கப் போனபோது, அவரை ஒரு அதட்டு அதட்டி, கதவைச் சாத்தித் தாழிட்டாள். பட்டி தொட்டி பதினாறிலும், நடக்காத ஒரு மாபெரும் காதல் புரட்சியால், பிள்ளையார் சொக்காரன்களும், தருமர் சொக்காரன்களும் சொல்லோடும், கல்லோடும் மோதினார்கள். இவர்கள் சண்டை முடியுமுன்பே பூவம்மா, இருதரப்பிற்கும் ஒரு பேரனைப் பெற்றுப் போட்டாள். விஷயம் அதோடு முடிந்தது. ஆனால், பிள்ளையாரைப் பொறுத்த அளவில், அது இன்னும் முடியவில்லை. அக்கா, அக்கா என்று அவள் மேல் அவ்வளவு பாசம் வைத்திருந்தார். இப்படி ஓடிப் போகாமல் ‘உட்கார்ந்த’ அவள், அதன்மூலம் தனது வம்சத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டாளே என்று அவருக்குக் கோபம். அது, கூடியதே தவிர குறையவில்லை. சென்ற ஆண்டு பூவம்மா, தனது மகனுக்கு, சொந்த தம்பியின் மகளை தாலி கட்ட வைத்தாள். அதிலிருந்து சொந்த பெரியப்பா மகனான, இந்தப் பிள்ளையார், அந்த பெரியப்பா மகன் கோயக்கண்ணனோடும் பேசமாட்டார்.

     பின்னோக்கிச் சென்ற பிள்ளையாரின் மனத்தை வெள்ளையம்மா முன்னோக்கிச் செலுத்தினாள்.

     “இப்படிக் குத்துக்கல்லா நின்னால் எப்படி? பிள்ளை துடியாத் துடிக்கான். தவியாய்த் தவிக்கான். ஒரு நட நடந்து. பூவம்மா மயினி வீட்டுக்குப் போய், வரச் சொல்லுறது... பிள்ளைய விடவா கெளரவம் வந்துட்டு. ஆனாலும் இந்த வீறாப்பு ஆகாதுப்பா... வேற யாரு போனாலும் மயினி வரமாட்டாள். அவள் வராமல் இந்த சீதாலட்சுமி போகமாட்டாள்! அப்புறம் அவரவர் இஷ்டம்...”

     பிள்ளையார், இஷ்டத்துக்கு விரோதமான ஒரு காரியத்தைச் செய்தது போன்ற பெருமூச்சோடு விவரம் சொன்னார்.

     “இப்பதான் வழியில் அவளப் பார்த்தேன். வீட்டுக்கு வாக்கான்னேன்... கூடவே புறப்பட்டாள்... நான்தான், திருநீறு எடுத்துட்டு வான்னு சொன்னேன். வழியிலதான் பார்த்தேன்... படியேறிப் பார்க்கல...”

     “கீழ விழுந்தாலும், மீசையில மண் படலியாம்...”

     “எல்லாம் இந்தப் பன்னாடைப் பயலால. பேசக் கூடாத ஒடுகாலிகிட்ட, நான் வருஷக் கணக்குல வச்சிருந்த வீம்ப விட்டுக் கொடுக்க வேண்டியதாப் போச்சு...”

     “பாத்தியாளா மரகதம்... ஒப்பன் பார்க்கதுக்கும் பேசறதுக்கும் ‘பேயன்’ மாதிரி தெரிஞ்சாலும், அவரு மனசு தேவதை மாதிரின்னு நான் அடிக்கடி சொல்றத ருசுப்படுத்திட்டாரு பாரு. இந்த மாதிரி என் அண்ணன் மகனுக்கும் விட்டுக் கொடுத்திருந்தா...”

     “ஏழா மரகதம்... ஒம்மா ஏன் இப்படி வாயக் கிழிக்கான்னு கேளு...”

     “என்னம்மா நீ... தம்பி இந்த நிலயில இருக்கும் போது, ஒனக்கு எப்படித்தான் பேச வருதோ...”

     “போடி புண்ணாக்கு. பூவம்மா மயினி தீர்த்து வச்சுடுவாள்! அதனாலதான், கவலையில்லை. அதோ மயினியே வந்துட்டாக, நமக்கு நல்லகாலம் பொறந்துட்டு. மரகதம், ஒப்பாவ மயினிகிட்ட ரெண்டு வார்த்தை பேசச் சொல்லு... வாய் அழுவிடாது...”

     பூவம்மா மயினி, இரண்டு கைகளிலும், இரண்டு கொத்து வேப்பிலையைப் பிடித்தபடியே லேசாய் ஆடிக்கொண்டு வந்தாள். ஜாக்கெட் இல்லாத உடம்பு அப்போதிருந்த மின்னும் சிவப்பு இப்போது துருப் பிடித்திருந்தது. முட்டிகளிலிருந்து முழங்கைகள் வரைக்கும் பச்சை நீள வாக்கு முகம். ஒரு கண்ணை உள்ளேயும் மறு கண்ணை வெளியேயும் விட்டுப் போன்ற தோரணை... பிள்ளையார் லேசாய் சிரித்தார். வரவேற்று விட்டாராம். வெள்ளையம்மா, மயினியிடம் ஒரு சந்தேகம் கேட்டாள்.

     “மயினி... மயினி... ஒன்பது தேங்கா கேப்பீக. ஒரு குலை வாழைப்பழம் வையின்னு சொல்லுவீங்க... ஒரு கட்டு வெத்திலை கேப்பீக. முப்பது ரூபா தட்சிணை தரணும்னு சொல்லுவிங்க... ஒன்னுமே கேக்காம அப்படியே வந்துட்டிகளே...”

     “அதுல்லாம் ஊருக்கும். ஒலகுக்கும். இன்னைக்கு நாலு பேரு முன்னால என் தம்பி என்ன அக்கான்னு கூப்பிட்டான். அதுவே போதும் எனக்கு. ஏண்டா தம்பி, நாம் நகமும் சதையுமா இருந்தோமடா. என்னை, அந்தக் ‘கிந்துகாலன்’ இடக்குப் பேசினான்னு அவன ஓட ஓட விரட்டுனியேடா... காலையில தூக்கம் கலைஞ்சதும், எங்க அக்கா கண்ணுலதான் முழிக்கணும்னு ஒன் பெரியப்பா வீட்டிலேயே படுப்பியேடா... பஞ்சபாண்டவர் வனவாசம் படிக்கிறத கேட்டுக்கிட்டே இருப்போமடா. அப்படிப்பட்ட நம்மள விதி பிரிச்சிட்டேடா, அக்காவுக்குக் கொடுத்த ஆயுள் தண்டனை போதுண்டா. அதுக்குக்கூட கழிவு இருக்காண்டா... நீ மட்டும், அக்காள இப்படி விட்டுட்டியேடா... நீ, அக்கான்னு இன்னிக்குச் சொன்னதும் நான், பாவி மொட்ட... எப்படி சந்தோஷப் பட்டேன் தெரியுமா...”

     வெள்ளையம்மா, இரு கைகளாலும், முகத்தை வேப்பிலைக் கொத்துக்களோடு மூடினாள். ஏங்கி ஏங்கி அழுதாள். பிள்ளையார், கண்களைத் துடைத்துவிட்டு அக்காவின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். இதைப் பார்த்துவிட்டு மரகதமும் அழுதுவிட்டாள். வெள்ளையம்மாள் லேசாய்ச் சிரித்தாள்.

     பூவம்மாவுக்கு அப்போதுதான் சுயம்புவே நினைவுக்கு வந்தது. வீட்டுக்குள் வந்தாள். சுவரில் சாய்ந்து நின்றவனை உட்கார வைத்தாள். தெற்குப் பக்கமாய் முகத்தைத் திருப்பிவிட்டாள். பிறகு அதட்டும் குரலில் கேட்டாள்.

     “சம்மணம் போட்டு நல்லா உட்காருங்க, என் மருமவனே. இன்னையோட ஒங்களப் பிடிச்ச பீடை கழிஞ்சுட்டுதுன்னு நினைச்சுக்கோ! எப்பா. பிள்ளையாரு தம்பி, வேற எதுவும் வேண்டாம். ஒரு கட்டிக் கற்பூரம் வாங்கிட்டு வா. முடியுமுன்னால். ரெண்டு வாழைப்பழம். ஊதுபத்தி.”

     பிள்ளையார் ஓடினார். அவர், தலை மறைந்ததும் வெள்ளையம்மா, மயினிடம் புலம்பினாள்.

     “வெளியில சொன்னா வெட்கக்கேடு மயினி. சேலையும், ஜாக்கெட்டையும் போட்டுக்கிட்டு குதிக்கான். ஏய் மரகதம். நீ ஏன் இப்படி கையை ஆட்டுறே. மயினியை பத்தி ஒனக்கு என்ன தெரியும். அவியிள உங்கப்பா உள்பட எல்லோரும் விலக்கி வச்சபோதுகூட, தனியே நின்னவிய. அந்த மாரியம்மாவே கதின்னு மயினி அப்போ நட்ட வேப்பஞ்செடி இப்போ இவ்வளவு குத்து வேப்பிலையைக் கொடுத்து மரமா நிக்கிது. மயினி கட்டுன மாரியாத்தா கோயிலுக்கு அதே வேப்பமரம் விசிறி வீசுது... மயினி... மயினி... எந்த ரகசியத்தையும் கழுத்த அறுத்தாக்கூட சொல்லமாட்டாக!”

     “அதைவிடு வெள்ளையம்மா. சேலை கட்டுறது பெரிய விஷயமாச்சே...”

     “நீங்களே இப்படி பயப்படலாமா மயினி. எல்லாம் அந்தச் செத்துப்போன சீதாலட்சுமியோட வேலை...”

     பூவம்மா மயினிக்குச் சொல்லிக் கொடுத்தது மாதிரி ஆகிவிட்டது. இடது கையில் வைத்திருந்த வேப்பிலைக் கொத்தை, வலது கைக் கொத்தோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு, சுயம்புவின் முகத்திற்கு முன்னால், மேலும் கீழுமாய் ஆட்டினாள். அந்த முகத்தை, அந்த இலைகள் வருடிக் கொடுத்தன. உடனே அவள் கண்களை மூடிக் கொண்டு மாரியம்மாவைப் பற்றிய பாட்டைப் பாடிக் கொண்டே, வேப்பிலைக் கொத்தை பலமாக ஆட்டினாள். பிறகு ஆவேசப்பட்டு அதே கொத்தைச் சுயம்புவின் தலையில் கொத்தவிட்டாள். தலையைப் பிடித்து வேப்பிலைக் கொத்தாலேயே அடித்தாள். பிறகு இடுப்பில் காசுப் பை போல் சொருகியிருந்த விபூதிப் பையை எடுத்து உள்ளங்கையில் ஒரு கவளம் திருநீறை வைத்துக் கொண்டாள். வாயைக் கையின் அடியில் வைத்தபடியே அந்தத் திருநீறை எடுத்து அவன் முகத்துப் பக்கம் மூன்று தடவை ஊதினாள். பிறகு, அவன் தலையை ஓங்கி ஓங்கி அடித்தாள். அவன் வலி பொறுக்க முடியாமல் இரண்டு கைகளாலும் தலையை மறைத்தபோது, வெள்ளையம்மாள் அவற்றைத் தலையிலிருந்து பிய்த்தெடுத்தாள். அப்போது தான் வந்த தம்பியைப் பார்த்து, “என்மவனே பிள்ளையாரே... ஆத்தாளுக்குக் கற்பூரம் கொளுத்துடா” என்றாள் அந்த அக்கா.

     பிள்ளையார், ஒரு கட்டி கற்பூரத்தையும் வெற்றிலையில் வைத்துக் கொளுத்தினார். ஜோதியாய் எரிந்த அதை, பூவம்மா, வெறுங்கையால் தூக்கித் தாம்பாளத்தில் வைத்தாள். அதைக் கையில் ஏந்திக்கொண்டே அதட்டினாள்.

     “ஏய் சீதாலட்சுமி. என்னோட காவலுக்குள்ளேயே நீ எப்படிடி வரலாம்? மரியாதியாய் ஓடுறியா.இல்ல, ஒன்ன பாதாளக் குகைக்குள்ள பிடிச்சுப் போடணுமா... சரி, சரி, கேட்கிறத கேட்டு, வாங்குறத வாங்கிக்கிட்டு பேசாம போ! ஒனக்கு என்ன வேணும் சொல்லுடி! நீ பேயாப் போனாலும், நீயும் என் மகள்தாண்டி. ஒன் தாய்கிட்ட கேள் மகளே.”

     சுயம்புவுக்குத் துக்கம் குறைந்து, மகிழ்ச்சி ஏற்பட்டது. முதல் தடவையாக தன்னை ‘டி’ போட்டும், மகள் என்றும் அழைத்த அத்தையைப் பார்த்து, லேசாய்ச் சிரித்தான். வெள்ளையம்மா அதட்டினாள்.

     “இப்படி சிரிச்சா சீரழிஞ்சு போவே மகளே! சீக்கிரமா கேட்டுட்டு சீக்கிரமா போ. உனக்கு என்ன வேணும்டி...”

     சுயம்பு சுயமாகவே பதிலளித்தாள்.

     “சேல வேணும்... சேல வேணும்... டேவிட் போட்ட வெளிர் மஞ்சள் துண்டுமாதிரி நிறத்துல சேல இருக்கணும். ஜாக்கெட்... வெள்ளை உள்பாடி, பாவாடை. ஏழெட்டு வளையலு, குங்குமம்...”

     “சரி. இப்பவே ஓப்டிப்போ... நீ கேட்டது எல்லாம் அடுத்த செவ்வாக்கிழமை உச்சி காலத்துல ஒன் வீடு தேடி வரும்.”

     பூவம்மா, செம்புத்தண்ணி, செம்புத்தண்ணி என்று கத்த அந்த கத்தல் முடியுமுன்பே, மரகதம் செம்பும் கையுமாக வந்தாள். அதை வாங்கிக்கொண்ட பூவம்மா சுயம்புவின் முகத்தில் செம்பையும் சேர்த்து மூன்று தடவை வீசியடித்தாள். அவ்வளவு உக்ரம். பிறகு நெற்றியில் திருநீறு இட்டு, குங்குமம் போட்டு, வாயைத் திறக்கச் சொல்லி, அதில் மூன்று தடவை கையை உள்ளே விட்டு, வெளியே எடுத்தாள். ஒரு பெரிய பிரச்னையைத் தீர்த்து விட்ட பெரு மிதத்தில் பேசினாள்.

     “கலங்காதே பிள்ளையார்... எம் மருமவனுக்குப் பிடிச்ச பீடை இன்னியோட முடிஞ்சிட்டு... சந்தையில போயி நல்ல சேலையா வாங்கு... சீதாலட்சுமி கொஞ்சம் நாகரீகமானவள் பாரு... வளையலும் ரப்பரா இருக்கட்டும்...!

     வெள்ளையம்மா, ஒரு சந்தேகம் கேட்டாள்.

     “டேவிட்டுன்னா யாரு? அந்தப் பேரையே இந்த சீதாலட்சுமி சொல்றாளே! ஒருவேள கலியாணத்துக்கு முன்னால அவன வச்சுக்கிட்டு இருந்திருப்பாளோ...”

     “எக்கா... இந்த மூளியை வாய மூடச் சொல்லுக்கா. யாரையும் பழி சொல்லணுமுன்னால் கூசாம சொல்லுவா!”

     பூவம்மா, வெள்ளைக் கொடி பிடித்தாள்.

     “ஊர்க்கதை நமக்கெதுக்கு வெள்ளையம்மா... நம்ம வரைக்கும்தான் நாம் பார்க்கணும். சீதாலட்சுமி கேட்டது எல்லாத்தையும் என் மருமவன் கையில கொடுங்க. அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை உச்சிப் பகலுல என் மருமவன் யாருக்கும் தெரியாம போயி சீதாலட்சுமி சமாதியில சேலை, துணிமணி, வளையலு, எல்லாத்தையும் வச்சுட்டு திரும்பிப் பார்க்காமலே வந்துடணும்! இதுக்கும் மீறி சீதாலட்சுமி, கட்டுப்படலன்னா இருக்கவே இருக்கு. பாதாளச் சிறை!”