16

     சந்தடி சாக்கில், வீட்டுக்கு ஓடி வந்த சுயம்பு, அந்தப் பேருக்கு ஏற்ப தன்னைத்தானே புதிய வடிவத்தில் படைத்துக் கொண்டிருந்தான்.

     தலையை பாப் செய்து அசல் பெண் போலவே தோன்றினான். அந்த பாப் தலையிலும் ஒரு சிவப்பு வளையம். பிடரியில் ரிப்பன் கட்டுக்கள். பிராவோடு கூடிய ஜாக்கெட். அதைப் பாதி மறைத்த முந்தானை... பாவாடை நாடா தெரிந்த சேலைக்கட்டு... ரத்தச் சிவப்பான குங்குமம்... வெளியே அதிர்ந்து போய் நின்ற அப்பாவையோ, அண்ணனையோ கவனிக்காமல், கை வலையல்களைக் கலகலப்பாக்கிக் கண்ணாடியில் இரண்டு பக்க இடுப்புக்களையும் பார்த்து, அங்குமிங்குமாய், அந்த அறைக்குள் உலவிக் கொண்டிருந்தான்.

     ஆறுமுகப்பாண்டி அப்பாவையே பார்த்தபோது, அவர், ‘தம்’ பிடித்து நடந்தார். மூச்சை மூக்கில் மட்டும் வைத்திருப்பவர் போல் முகத்தை நிமிர்த்திக் கொண்டே நடந்தார். முதுகைக் காட்டிய சுயம்புவைத் தன் பக்கமாய்த் திருப்பி, தன் முகத்துக்கு எதிராய் வைத்துக் கொண்டு, நிதானமாகக் கேட்டார். புயலுக்கு முன் வரும் ஒரு அமைதி... பதுங்கிக் கேட்டார்.

     “ஏய் சுயம்பு. சேலைய அவுறுடா! ஜாக்கெட்ட கழட்டுடா!”

     “மாட்டேன்!”

     “ஏன் மாட்டே?”

     “ஏன்னா. நான் பொம்புள! கேர்ல்!”

     “இப்போ அவுக்கப் போறியா இல்லியா?”

     “மாட்டேன்! நீங்க செய்த தப்புக்கு நான் எதுக்கு தண்டனை அனுபவிக்கணும்?"

     “என்ன தப்புடா செய்தேன்?”

     “என்னன்னு தெரியுது... எப்படின்னு சொல்லத் தெரியல!”

     “தத்துவம் பேசுறியளோ. சரி, இப்போ சேலய அவுக்கப் போறியா மாட்டியா?”

     “உயிர விட்டாலும் விடுவனே தவிர, சேலைய விட மாட்டேன்!”

     கூடக்கூட பதிலளித்துக் கொண்டிருந்த சுயம்பு, “எம்மா” என்று கத்தியபடியே கீழே கிடந்து, கையைக் காலை ஆட்டினான். மல்லாக்கத் தூக்கிப் போட்டால் கரப்பான்பூச்சி எப்படி ஆடுமோ, அப்படி ஆடினான். இதற்குள் பிள்ளையாரின் வலது கால் சுயம்புவின் விலாவில் மீண்டும் உதைத்தது. அவன் “எய்யோ போனனே” என்று வலது பக்கம் புரண்டபோது, பிள்ளையார் இடது காலால் ஒரு உதை உதைத்து அவனை இடது பக்கம் புரட்டினார். உதைத்து உதைத்து அவனை, அந்த அறைக்குள் உருட்டிக் கொண்டே இருந்தார். இதற்குள் ஆறுமுகப் பாண்டி அவனைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினான். அவனை அந்தரத்தில் கொண்டு போய் நிறுத்தினான். பிள்ளையார் தீர்மானமாகக் கேட்டார்:

     “சேலய அவுக்கிறியா இல்லையா? பெரியவன் நீ அவன் சேலயத் தொடப்படாது! ஒன்று அவன் சீலய அவனாவே கழட்டிப் போடணும். இல்லன்னா இந்த இடத்துலயே குழி வெட்டி அவனைப் புதைக்கணும். அவனக் கீழே போடு...”

     கீழே விழுந்த சுயம்புவிடம், பிள்ளையார் அவன் இரண்டு கால்களிலும் ஒரு காலை வைத்து அழுத்திய படியே கேட்டார்.

     “சேலைய கழட்டுடா...”

     “நான் பொம்புள... கழட்ட மாட்டேன்!”

     “கடைசியா கேக்கேன்...”

     “எப்ப கேட்டாலும் சரி...”

     பிள்ளையார், அந்தக் கதவைத் தாழிட்டார். அவனைப் பெறுவதற்கு முன்பு எப்படி உடம்பில் ஒரு முறுக்கு வந்ததோ, அப்படி அவருக்கு வந்தது. ஒரே எத்து, “எய்யோ...” என்று சுயம்பு கீழே படுத்தான். ஆறுமுகப் பாண்டி, அவன் கழுத்தில் தன் பாதத்தை வைத்துக் கொண்டு கீழே போட்டு அழுத்தினான். அதட்டிக் கேட்டான்.

     “ஏல இப்பச் சொல்லு. இனிமேலும் சேல கட்டுவியா...”

     “கட்டுவேன். எக்கா... எய்யோ.. என் கழுத்துப் போச்சே... என் தலை போச்சே!”

     “இவன் இப்படிச் சொன்னாக் கேட்க மாட்டாண்டா. இரும்புக் கம்பியை எடுத்து சூடு பண்ணிட்டு வாடா...”

     பலமாகத் தட்டப்பட்ட கதவைத் திறந்து கொண்டு, ஆறுமுகப்பாண்டி வெளியே ஓடினான். உள்ளே அலறியடித்து ஓடி வந்த மரகதமும், வெள்ளையம்மாவும் சுயம்புவைப் புரட்டிக் கொண்டிருந்த பிள்ளையாரைத் தடுக்கப் போய், தாங்களும் அடி வாங்கினார்கள். அவரோ தனது கையும் காலும் ஒடியப் போவது போலவும், ஒடித்துக் கொள்ளப் போவது போலவும் இயங்கினார். சுயம்புவின் வாயிலே கால்குத்து. முகத்திலே கைக்குத்து. இடையே வந்த பெண்களுக்கு விலாக்குத்து. ஒரு பெரிய மரத்தைக் குறிவைத்துக் கோடாரியால் இடைவெளி கொடுக்காமலே அரைமணி நேரம் முன்னாலும் பின்னாலும் இயங்கும் அந்தக் கையே, இப்போது ஒரு கோடாரியாகிக் கீழே மரம்போல் கிடந்த சுயம்புவை வெட்டிக் கொண்டிருந்தது. கல்லு மண்ணான கரடு முரடு நிலத்தில் கூட, ஒரு அடி ஒரு விநாடி கூட நிற்காமல் மணிக்கணக்கில் உழவு செய்யும் அவர் கால்கள், அவன் உடம்பை உழுது கொண்டிருந்தன. சுயம்புவும் இப்போது புலம்புவதை விட்டுவிட்டு, ஒரு வைராக்கியத்தோடு அப்படியே கிடந்தான். இதற்குள் ஆறுமுகப்பாண்டி வந்தான். வலது கையில் சாதுவான மரப்பிடி அதன் முனையில் நீண்டு வளைந்த கம்பி! அதன் முன்பக்கம் ரத்தக்கட்டி, பிள்ளையார் சுயம்புவைத் தூக்கி நிறுத்திய படியே கேட்டார். “ஏலே சேலைய எடுக்கிறியா...”

     சுயம்பு, இப்போது தலையை மாட்டேன் என்பது போல் ஆட்டினான்.

     வெள்ளையம்மா, பித்துப் பிடித்து நின்றாள். மரகதம் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து அண்ணனின் கால்களைக் கட்டிக்கொண்டாள். மோகனா வெளியே அண்ணியின் பக்கத்தில் அவளைப் போலவே வெறுப்போடு உதட்டைப் பிதுக்கிக் கொண்டு நின்றாள். ஆனாலும், சித்தப்பா, சித்தப்பா என்று ஓடப் போன பொடிப்பயலை, தாய்க்காரி தடுக்கவில்லை.

     பிள்ளையார் அலுத்துப்போனபோது, ஆறுமுகப் பாண்டி முன்னே வந்தான். அமைதியாகத்தான் கேட்டான்.

     “டேய், சுயம்பு! இனிமேல் சேல கட்டுவியா... ஆமான்னா தலையாட்டுறே...!”

     அண்ணன்காரன், கால்களை இறுக்கிப் பிடித்த மரகதத்தின் கைகளை மிதித்துக்கொண்டே முன்னேறினான். கையிலுள்ள இரும்பு முனையை சுயம்புவின் காலில் வைத்தான். புடவை மூடிய முட்டியில் வைத்தான். அங்குமிங்குமாய் நெளிந்த இடுப்பின் இரு பக்கமும் வைத்தான். ரிப்பன்கள் கட்டிய பிடரியில் வைத்தான். பொசுங்கிய வாடையோடு பட்ட இடமெல்லாம் பொசுங்கியது. ஒவ்வொரு சூட்டுக்கும் ஒரு கேள்வி... “டேய் சேல கட்டமாட்டியே...” ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பதில்! ‘கட்டுவேன், கட்டுவேன்’ என்பது மாதிரி தலையாட்டும் பதில்!

     ஆறுமுகப்பாண்டியின் கால்களை, மரகதம் அசைய விடாது பிடித்துக் கொண்ட போது, பிள்ளையார் பெரிய மகனின் வேலையை மேற்கொண்டார். ஒரே குத்து. சுயம்பு வாயில் ரத்தம். ஒரே சூடு. தோள்பட்டையில் வைத்த கம்பியை எடுக்கவில்லை. எரிந்த புகை மறையவில்லை. மரகதம் ஆவேசமாய் எழுந்து ஓடிவந்து, அப்பனைக் கீழே தள்ளினாள். அவர் கையிலிருந்த இரும்புக் கம்பியை சூலாயுதம்போல் பறித்தாள். கீழே விழுந்த அப்பனை நோக்கி அதைக் கொண்டு போகப் போனாள். அவரோ - அந்தப் பிள்ளையாரோ, “ஏமுழா நிக்கே! போடு! சூடு போடு! இந்தக் கோலத்த பார்க்காம இருக்க என் கண்ணுல சூடு போடு!” என்றார். உடனே அவள், அந்தக் கம்பியை இன்னொரு கைக்கு மாற்றி எந்தக் கை அப்பனுக்குச் சூடு போட நினைத்ததோ, அந்தக் கையிலேயே சூடு போட்டாள். சதை சதையாய் தன்னைத்தானே பொசுக்கினாள். புகை புகையாய் சுட்டாள்.

     இதற்குள், மூலையில் சாய்ந்து கிடந்த மரகதம் கத்தினாள்.

     “என் உடன்பிறப்பு வாயில துரை தள்ளுதே. கையும் காலும் சும்மா கிடக்குதே! அடிச்சுக் கொன்னுட்டியளே”

     சுயம்பு, சுரணையற்றுக் கீழே கிடந்தான். வாயில் நுரையும், ரத்தமும் மாறி மாறி வந்தன. ஒன்றோடு ஒன்று கலந்தும் வந்தன. மரகதம் தம்பியை மடியில் எடுத்துப் போட்டுக்கொண்டாள். அவன் கையை எடுத்தே தன் தலையில் அடித்துக் கொண்டாள். பிறகு சுரணை பெற்று ரத்தத்தைத் துடைத்து விட்டாள். கைகால்களைப் பிடித்து விட்டாள். துடைக்கத் துடைக்க ரத்தம். பிடிக்கப் பிடிக்க சதைகள். வெள்ளையம்மா ஒப்பாரி போட்டாள். சுயம்புவின் முகத்தோடு முகம் முட்டி, விம்மி விம்மி பேசினாள்.

     “நீ எப்படி இருந்தாலும் நான் ஒனக்கு தாய் தானடா. என் வயித்துல பொறந்தது எப்படியும் இருந்துட்டுப் போகட்டுமே. ஒங்களுக்கு என்ன வந்துட்டு. என் ராசா.என் சீமைத்துரையே... என் செவ்வரளிப் பூவே. ஒன்னக் கொல்லு கொல்லுன்னு கொன்னுட்டானுவளே... நீ பிழைப்பியாடா...”

     அப்பனும், மகனும், சுயம்புவையே பார்த்தார்கள். அவனுக்கு லேசாய் தெளிவு வந்தது போல் கண் திறந்ததும் இருவரும் அந்த அறையை விட்டு வெளியேறினார்கள். திண்ணையில் ஆளுக்கு ஒரு பக்கமாகச் சுவரில் சாய்ந்தார்கள். வீட்டுக்கு வெளியே வேப்ப மரத்தடியில் ஒரே கூட்டம். உள்ளே வர யோசிக்கும் கூட்டம். முற்றத்தில் தம்பி சண்முகம். பக்கத்தில் அவர் மனைவி. உள்ளே இப்போது மரகதம், தம்பிக்கு உபதேசிப்பது கேட்டது. “சரி, நீ எடுக்காட்டாலும் என்னயாவது எடுக்க விடு” என்ற யாசகப் பேச்சு! விம்மல்! வெடிப்பு! “இப்படித் தான் நல்ல பிள்ளையா நடந்துக்கனும்” என்ற முடிவுரை.

     பிள்ளையாருக்கும் லேசாய்த் தெளிவு. முற்றத்தைப் பார்த்தார். பத்தாண்டு காலப் பகை போய், சின்ன வயதிலாடிய தெல்லாங்குச்சி ஆட்டமும், கிளித்தட்டு விளையாட்டும் மனத்தில் வியாபித்தன. தம்பியைப் பார்த்துக் கத்தினார்.

     “ஏலே சண்முகம்.ஒன் வீட்டுக்குள்ள வாறதுக்கு யாரு கிட்டடா யோசனை கேட்கணும்... இதுலதான்டா நீ பொறந்தே...”

     சண்முகம், மனைவியோடு திண்ணைக்கு வந்தார். அண்ணனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அலறினார். பிள்ளையார் தம்பியின் தலையை வருடிவிட்டபடியே தழுதழுத்த குரலில் பேசினார்.

     “ஒருத்தன இழந்துட்டாலும், இன்னொருத்தன வாங்கிக்கிட்டேன்! அந்தவரைக்கும் சந்தோஷம் ! வயசானாத்தான் புத்தியே வருது: ருக்குமணி -உள்ளே போயி நீ சேனை கொடுத்த உன் மகனோட அலங்கோலத்தப் பாரும்மா... எந்த நேரத்துல பெத்தேனோ...”

     வெளியே நின்ற வேப்பமரத்தடிக் கூட்டத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்டது. அந்த சத்தத்திற்குரியவர் உள்ளே வந்தார். ராமசாமிக் கிழவர்.

     “ஒக்காரும் மச்சான்...”

     அவர் உட்காரவில்லை. சுயம்பு கிடந்த அறைக்குள் போனார். பத்து நிமிடத்திற்குப் பிறகு திரும்பி வந்தார். அந்தக் காலத்து பஞ்சாயத்து தீர்ப்பு போலவே திட்ட வட்டமாய்ப் பேசினார்:

     “சுயம்பு தானாச் செய்யலை! எந்த ஆம்புளைக்கு அப்படி சேலை கட்ட மனசு வரும்...? வளையல் போடுன்னு யாராவது சொன்னாக் கூட, நமக்கு எப்படிப் பட்ட கோபம் வருது...? ஒருத்தன் அதுவும் ஒனக்குப் பொறந்தவன் இப்படி ஆயிட்டாமுன்னால், ஏதாவது சூட்சுமம் இருக்கும்! பேய்க்குப் பார்த்தாச்சு! இனிமேயாவது நோய்க்குப் பார்க்கணும்!”

     “எனக்கு ஒண்ணுமே ஒடமாட்டேங்கு மாமா...”

     “அதுக்குக் காரணம், நீ அவன எதிரியா பார்க்கிறியே தவிர, அவனுக்குள்ளேயே ஏதோ ஒண்ணு. அவனுக்கு எதிரியா இருக்கிறத பார்க்கலை. பள்ளிக்கூடத்துல மொதல்ல வந்து ஊர், ஜனங்களுக்கெல்லாம் பிடிச்சுப் போன, அவனே இப்படி ஆயிட்டான்னா, எவன் ஆகமாட்டான்னேன்...! அதனால கோணச்சத்திரத்துல புதுசா வந்திருக்கிற நர்ஸிங் ஹோமிலே நாளைக்கே சேர்த்திடு. என் கொழுந்தியாள் மகன்தான் கட்டியிருக்கான். நானும் சொல்றேன். மரகதத்துக்கு கலியாணம் நடக்கு முன்னாலேயே, இவனுக்கு சொகமாயிடணும். ஆனாலும் ஐயாயிரம் ரூபாயாவது கறந்துடுவான். ரூபாய பெரிசா நினைக்காதே!”

     “பெரிசில்லதான். ஆனால், கல்யாணச் சமயம். என்னடா சொல்றே பெரியவன்.”

     “கலியாணப் பந்தலுல மாப்பிள்ளை வீட்டுக்கு கொடுக்குறதா ஒப்புக்கொண்ட பத்தாயிரம் ரூபாதான் இருக்கு.அதை எடுக்க முடியாதே!”

     “ஏன் முடியாது? எல்லாப் பணத்தையும் எடுத்து தம்பிய ஆஸ்பத்திரில சேருங்க! எனக்கு கலியாணத்தை விட அவன் சுகமாகிறதுதான் முக்கியம்!”

     “ஒன் கலியாணத்தைப் பத்தி நீயே பேசுற அளவுக்கு வந்துட்டியா...”

     “காலத்துக்குத் தக்கபடி நீயும் மாறனும் மாப்பிள்ள. நம்ம கிராமத்து பயமவளுவ கூட ஆளப் பார்க்காம கழுத்தை நீட்ட நாங்க ஆடா மாடான்னு கேக்கிறாளுவ... மரகதத்த பெத்ததுக்கு நீ குடுத்து வச்சிருக்கணும். கத்தரிக்காய்னு சொன்னதால பத்தியம் முறிஞ்சிடாது. சரி. காலையில வாறேன்! ரெடியா இரு!”

     ராமசாமிக் கிழவர் போய்விட்டார். பிள்ளையார் உள்ளே திரும்பிப் பார்க்காமலே பிடறியில், வாய் இருப்பது போல் பேசினார்.

     “ஏழா, மரகதம்... ஒம்மாவ அவனுக்குத் தவிட்ட வச்சு ஒத்தடம் கொடுக்கச் சொல்லு. ஒனக்கு வராது. அந்த மூதேவிக்குத்தான் வரும். நல்ல கைராசி!”

     இரவு, எட்டிப் பார்த்துக் கெட்டியானது.

     அந்த வீட்டில் மோகனாவும், சின்னக் குழந்தையும் தவிர யாருமே சாப்பிடவில்லை. ஆறுமுகப் பாண்டியின் ஏழு வயதுப் பயல்கூட சாப்பிட மறுத்தான். வெள்ளையம்மா தண்ணிரைக் குடித்துவிட்டும், மரகதம் கண்ணிரைக் குடித்துவிட்டும் ஒடுங்கிவிட்டார்கள். சுயம்பு, அக்காள் அறையில் மல்லாந்து கிடந்தான். மரகதம் அவன் தலையை வருடி, வருடி கதை சொன்னாள். தந்தைக்காக சாம்ராஜ்யத்தையே துறந்த ராமன். தமையன் சொல்லை தட்டாத பாண்டவத் தம்பிகள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சுயம்பு, இடையிடையே ‘தெரியுது அக்கா ஆனா முடியலையே’ என்றான்.

     அடுத்த பத்தி அறையில் ஆறுமுகப் பாண்டியின் மனைவி கோமளம் தேக்குக் கட்டிலில் ஒருச்சாய்த்துப் படுத்திருந்தாள். ஒருபக்கம் இருவயது மகள். மறுபக்கம் ஆறுமுகப் பாண்டி. சின்னப்பயல் சித்தப்பா பக்கம் போய் விட்டான். ஆறுமுகப் பாண்டியாவது கண்களை மூடிக் கொண்டு தூங்காமல் கிடந்தான். கோமளமோ, கண்களை மூடாமலே கிடந்தாள். அடுத்த ஆண்டு மைத்துனன் கல்லூரிக்குப் போக முடியும் என்று கனவு கண்டவள் இன்று அந்தக் கனவு சிதறியதைக் கண்கூடாகப் பார்த்து விட்டாள். இனிமேல் தனது தங்கைக்கு அவன் கணவனாக முடியாது என்பதைக் கண்டறிந்ததும், அவள் மனம் அந்தக் குடும்பத்துடன் கட்டப்பட்ட பந்தத்தை அறுக்க முயற்சி செய்யவில்லையானாலும், அவிழ்க்க முயற்சி செய்தது. அவள் மனம் அந்த முயற்சியில் சில உண்மைகளை, அல்லது உண்மைகள் போன்றவற்றைத் தேடிக் கண்டு பிடிக்கப் புறப்பட்டன. அப்படிக் காணக்கான, பெற்றவர்கள் தன்னைப் ‘பாழும் கிணற்றில்’ தள்ளி விட்டார்களோ என்ற எரிச்சல், புகுந்த ஊரிலும், பிறந்த ஊரிலும் தலை நிமிர்ந்து நடக்க முடியாதே என்ற வேதனை. ஆபீஸராய் இருக்கும் அண்ணனைக் கட்டியவளிடம், ‘என் மைத்துனனும் என்ஜினியராக்கும்’ என்று மார்தட்ட முடியாமல் போன மனக்கவலை. இந்த சுயம்புவால் தனது பிள்ளைகளின் எதிர்காலமும், பாதிக்கப்படலாம் என்ற தொலைநோக்குக் கவலை. ஐயாயிரம் ரூபாய் அழ வேண்டியதிருக்கே என்ற உடனடிக் கவலை. எல்லாவற்றிற்கும் மேலாக...

     மைத்துனனுக்கு வந்தது, மணவாளனிடமும் இருக்குமோ என்ற சந்தேகம். இல்லற வாழ்க்கையில் ஏக்கங்கள் இல்லையானாலும், அழுத்தமான தாம்பத்திய உறவு கிடைக்காமல் போயிருக்குமோ என்ற கேள்வி. முதலிரவில்கூட, இந்த ஆறுமுகப்பாண்டி சினிமாக் கதாநாயகன்போல் தன்னைக் கைகளில் ஏந்திக் கொள்ளாமல், துண்டைக் கடித்துக்கொண்டு நின்றது கூட, ஒரளவு பொட்டைச் செயலோ என்ற விரசமான சிந்தனை. ஒருதடவை, சைக்கிளில் பின்னால் இருந்த தான், முன்னால் உட்காரச் சிணுங்கியபோது, அவன் ரோடு மறைக்கும் என்று சொன்னது இப்போது, மனதை மறைத்தது. சிற்சில சிக்கலான சமயங்களில் - குறிப்பாக, மருமகள் - மாமியார் மகாப்போரின்போது எல்லாக் கணவன்மாரும் செய்வது போல், இவன், தன்னை அடிப்பது கிடக்கட்டும், அடிப்பதற்குக்கூட கையை ஓங்காதது கூட, ஒரு ஆண்மையற்றதனமோ என்ற எண்ணம். ஆக மொத்தத்தில் அவள் பிரச்னை பரீட்சித்துப் பார்த்துக் கண்டறிய முடியாத விவகாரம். தம்பிக்கு வந்தது அவனைப் போலவே முகஜாடை கொண்ட அண்ணனிடமும் ஓரளவு இருக்கும் என்ற மனோவிகாரம். இன்றைய சண்டையில் கூட அவன் முத்துக்குமாரிடம் கெஞ்சினானே தவிர, ஒரு மாவீரன் போல் மார்தட்டவில்லையே என்ற குறை. முறைப் பெண்கள் கிண்டல் செய்யும்போது கூட, தக்க பதிலடி கொடுக்கத் தெரியாமல், அந்தப் பெண்களோடு பெண்களாய்ச் சிரித்தவன்... அப்போது ஏகப்பட்ட பொறாமை... இப்போது ஆற்றாமையாய் வெளிப்பட்டது. கூடவே, ஊரில் தன்னை கண்களால் வளைய வளையப் பிடித்த பலசரக்குக் கடைக்கார பாண்டியனைக் கட்டியிருக்கலாமோ என்ற மறு பரிசீலனை.

     வழக்கத்திற்கு விரோதமாய்ப் பேச்சு கொடுக்காமல் இருக்கும் மனைவியின் மனநிலை புரியாமல், ஆறுமுகப் பாண்டி தன்பாட்டுக்குப் பேசினான். அவளைத் தன் பக்கம் இழுக்காமல், மறுபக்கமாய் படுத்திருப்பதையும் மாற்றிக் கொள்ளாமல் பேசினான்.

     “ஒரு நாளும் அடிக்காத உடன்பிறப்ப அடிச்சு நொறுக்கிட்டேன். என் கையால இடுப்பில தூக்கி வளர்த்த பயலுக்கு இடுப்புலய சூடு போட்டுட்டேன். இனிமேல் அவன் எங்க தேறப்போறான்... எனக்கு என்னவோ சந்தேகமாகவும் இருக்கு. பயமாகவும் இருக்கு. நாளைக்கே நர்ஸிங்ஹோம்ல சேர்க்க முடியாதுதான். ஆனால் எவ்வளவு ரூபா ஆனாலும் சரி. முடிவு தெரியற வரைக்கும் பார்த்துட வேண்டியதுதான். பால் பொங்கி வரும்போது பானை உடைஞ்சிட்டு. என்ன பேச மாட்டங்க...”

     “பேசறதுக்கு என்ன இருக்கு. யார் யாருக்கு எது கொடுத்து வச்சிருக்கோ அதுதான் நடக்கும். எழுதாக் குறைக்கு அழுதா முடியுமா! ஆமா, ஒங்க பரம்பரையில வேற யாருக்காவது இப்படி வந்திருக்கா?”

     “எனக்குத் தெரிஞ்சு இல்ல!”

     “எதுக்காக இக்கன்னா போட்டுப் பேசறீங்க?”

     “காரணம் இருக்கு. ஒரு மனுசனோட பரம்பரய நினைச்சுப் பார்த்தால், அதுவே ஆதி அந்தம் இல்லாதது. என் தகப்பன் வழித் தாத்தா, தாய்வழித் தாத்தா, அந்த தாத்தாக்களோட தாய்வழித் தாத்தா, தகப்பன் வழிப் பாட்டி. நெனச்சுப் பார்த்தால், உலகம் முழுசுலயும் நாம ஏதோ ஒரு வகையில, ஒரு கிளையில, ஒரு இலையா இருப்போம்! ஆனால், நமக்குத்தான் நம்ம தாத்தாவுக்கு மேல யாருமே தெரியாதே! மிஞ்சிப் போனால் பூட்டி. நம்ம வேரை நாம தேடுறதே இல்ல!”

     “என்ன நீங்க பொம்புள மாதிரிப் புலம்பறிய!”

     “இதுக்குப் பேரு புலம்பலா... பொம்பளன்னாலும் ஆம்பளன்னாலும் மனசு ஒண்ணுதானம்மா...”

     “அம்மா. அம்மா.. எப்பப் பார்த்தாலும் நான் ஒங்களுக்கு அம்மாதான்!”

     “தாய்க்குப் பிறகு தாரம்னு சும்மாவா சொன்னான். அதோட பொம்பளய மதிக்கத் தெரியணும்... அவளுவள அடிக்கிறவன் புருஷன் இல்ல. தாலியை லைசென்ஸா வைத்திருக்கிற வேட்டைக்காரன்... எங்கப்பா கூட, எங்கம்மாவத் திட்டுவாரு... அம்மா திருப்பிக் கொடுக்கிறதையும் வாங்கிக்குவாரு. ஆனால், எனக்குத் தெரிஞ்சு ஒரு நாள் கூட எங்கம்மாவை அவரு அடிச்சது கிடையாது...”

     “அவரும் சுயம்புவோட அப்பாதானே!”

     “இன்னிக்கு என்ன... ஒன். பேச்சு ஒரு மாதிரி போகுதும்மா... பேசாமல் தூங்கு!”

     “ஒங்ககிட்ட இந்த மாதிரி வார்த்தையத்தான் எதிர் பார்க்க முடியும். தள்ளிப் படுங்க...”

     “ஒன்னத் தள்ளச் சொல்றியா. இன்னிக்கு நெனைச்சாலும் அது முடியாது!”

     “என்னைக்குத்தான் அது முடிஞ்சுதாம்.”

     “நான் உன்னச் சொன்னால் நீ எதையோ சொல்றே! சரி... நீயே சொல்லு... தம்பிய நாளைக்கே சேர்த்திடலாமா. இல்ல தங்கச்சி கலியாணம் முடியுறதுவரை இழுத்துப் பிடிப்போமா..?”

     “எந்த நோய்க்கும் மருந்துண்டு. ஆனா பரம்பரை நோய்க்குக் கிடையாதாமே!”

     ஆறுமுகப்பாண்டி, அவள் தோளில் முகம் போட்டு அவளைத் தன் பக்கம் திருப்பப் பார்த்தான். தீர்வு காண முடியாத வலிக்கு, பெயின் கில்லர் போடுவது போல், வீட்டை உலுக்கும் அந்தப் பிரச்னைக்கு ஒரு தாற்காலிக மருந்து தேடினான். ஆனால், அவளோ அவன் பிடியிலிருந்து, திமிறி இடைவெளி கொடுத்துப் படுத்தாள். அவன், அவளை மனதுக்குள் பாராட்டினான். ‘பிடித்த உடனேயே எதிர்ப்பிடி போடுபவள், சுயம்பு மைத்துனனுக்கு ஏற்பட்ட கோளாறால்... அந்த உணர்வே அற்றுப் போனாள்! பாசக்காரி...

     ஆறுமுகப்பாண்டியால், தூங்க முடியவில்லை. அவனை ஆறுதல் செய்தும் ஆற்றுப்படுத்தியும் பேசும் மனைவியையும் பேசாமல் விட்டுவிட்டான். மீண்டும் அவனுக்குத் தம்பியின் நினைவு வந்தது. அடித்த கையும், உதைத்த காலும் துடித்தன. முடியாத ஒன்றை முடிவாக்க நினைத்தபோது, அந்தப் பயல் எப்படித் துடிச்சானோ. எப்படித் தவிச்சானோ... இந்த மாதிரி சமயத்தில் எல்லாப் பயல்வளும் திட்டுறது மாதிரி அவன் ஒரு வார்த்தை திட்டுனானா... இல்லியே! இல்லியே!

     ஆறுமுகப்பாண்டி வாய்விட்டே புலம்பினான்.

     “என் தம்பிக்கு அண்ணனாகாமே போயிட்டேனே... போயிட்டேனே...”

     கோமளம், பொறுமை இழந்தாள். திரும்பிப் படுக்காமலே கேட்டாள்.

     “மொதல்ல பொண்டாட்டிக்கு புருஷனா இருக்கோ மான்னு எண்ணிப் பாருங்க!”

     ஆறுமுகப்பாண்டி எழுந்து உட்கார்ந்தான். அவள் முகத்தை எடுத்து மடியில் போட்டுக்கொண்டே கேட்டான்:

     “நீ எதையோ மூடு மந்திரமா பேசுறியே... என்ன விஷயம்.”

     கோமளம், அந்த மூடு மந்திரத்தை சொல்லாக்கி விட்டாள். அவன் செல்லாக்காசாய் ஆனதுபோல் மரத்துப் போனான். மரித்துப்போனான்.