உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
17 அந்தக் கட்டிடம், மருத்துவமனையா, அல்லது லாட்ஜா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். வெளியே, வளைவு வளைவாயும் அழகழகாயும் தோன்றும் அந்த இரண்டு மாடிக் கட்டிடத்திற்குள், டாக்டர்களின் நடமாட்டத்தையே காணவில்லை. ஆங்காங்கே சில பையன்கள் டிபன் செட்டுகளைப் பொட்டலம் பொட்டலமாகவும் தட்டுத் தட்டாகவும் எடுத்துக் கொண்டு போனார்கள். இதை வைத்து அந்தக் கட்டிடத்தை லாட்ஜ் என்று சொன்னால் தப்பில்லை. அதே சமயம் வெளியே இன்னொரு பக்கத்தில் ஒரு மருந்துக் கடையும் உள்ளே ஒரு இடத்தில் தலையில் வெள்ளைக் கைக்குட்டைகளைக் கட்டிய பெண்களையும் பார்த்தால், அதை, மருத்துவமனை என்றும் முனங்கிக்கொண்டே சொல்லலாம். அந்தக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஆறாவது எண் அறையில் சுயம்பு தன்னந்தனியாய்க் கிடந்தான். ஸ்பிரிங் கட்டில், அவன் சுகப்படாமல் போனதால் கிடைத்த சுகமான கட்டில். சின்னதே அழகு என்பது போல் சின்ன அறை. மொசைக் தரை. வால் பேப்பர் சுவர்கள். அவன் கட்டிலுக்குப் பின்னால், கிளிப் பிடித்த பேடில் ஏழெட்டுக் காகிதக் குவியல்கள். ஈஜிஸி கோடுகள். ரத்தச் சித்திரிப்புகளைக் காட்டும் ஒரு தாள். சிறுநீர் இயல்புகளைச் சொல்லும் ஒரு சதுரக் காகிதம். நுரையீரலைக் காட்டும் எக்ஸ்ரே படம். தலையைப் படம் பிடித்த இன்னொரு படம். ரத்த அழுத்தம், எல்லாமே நெகடிவ். அதாவது அவன் உடல்நிலையைக் காட்டும் சுபசகுன அறிகுறிகள். கிட்னியும் சரி என்றால், அவன் வீட்டுக்குப் போகலாம். எந்த நோயும் கிடையாதாம். வாடகை மட்டும் நாளுக்கு நாற்பது ரூபாய். சிகிச்சைக்குத் தனிப்பணம், மருத்துவமனை நிர்வாக டாக்டருக்கோ அவனது சகாக்களுக்கோ சைக்யாட்ரிஸ்ட்டிடம் அவனைக் காட்டவேண்டும் என்ற எண்ணமோ அவனைப் பேச விட்டுக் கேட்க வேண்டும் என்ற தொழில் அக்கறையோ வாங்கிய பணத்தில் ஒரு சதவிகித அளவிற்குக் கூட வரவில்லை. சுயம்பு, அந்தச் சேலை கட்டி ரகளை நடத்திய மறுநாளே சேரவில்லை. மரகத்திற்கு என்று வைக்கப்பட்ட பணத்தை எடுக்க கறார் பேர்வழியான பிள்ளையாருக்குப் பிடிக்கவில்லை. அதோடு, நாட்டு வைத்தியம் பார்த்தார்கள். தலைக்குத் தைலம், வாய்க்கு அரிஷ்டம், கையில் ஒரு தாயத்து... யாராவது செய்வினை வைத்திருப்பார்கள் என்று ஒரு பூஜை. அப்படியும் இப்படியுமாய் ஒரு தோட்டத்தை அடகு வைத்து, இருபது நாட்கள் கழித்தே அவனை இங்கே சேர்த்தார்கள். இங்கே வந்து ஒரு வாரமாகிவிட்டது. அப்பா ஒரு தடவை வந்தார். அண்ணன் பலதடவை வந்தான். மோகனா வெளியே நின்றே பார்த்துவிட்டுப் போய்விட்டாள். அக்கா வர முடியாது. அண்ணி வரவில்லை. சுயம்பு, அந்தக் கல்யாண அழைப்பிதழை மாறி மாறிப் படித்துவிட்டான். கொல்லனுரர் ராமசாமியின் சத் புத்திரன் மலைச்சாமிக்கும், நல்லாம்பட்டி பிள்ளையார் மகள் செளபாக்கியவதி மரகதத்துக்கும், பெரியவர்கள் நிச்சயித்த திருமணம். வருகையை விரும்புவோர் என்ற பட்டியலில் சித்தப்பா, சித்தி, சண்முகம், ருக்குமணி பெயர். நிலக்கிழார் என்ற பட்டத்தில் ஆறுமுகப்பாண்டி. சுயம்பு என்ஜினியராம்... அழைப்பிதழின் முகப்பில், அண்ணன் ஆதி நாராயணன் தங்கை ஆதிபராசக்தியை எல்லாம் வல்ல ஈஸ்வரனுக்கு சந்திரர், சூரியர் சாட்சியாய் கைபிடித்துக் கொடுக்கும் டபுள் கலர் காட்சி! சுயம்பு, அந்த அழைப்பிதழை இரண்டாய்ப் பிரித்து, தனது பேரை பெருமையாகவும் பார்த்தான். பார்த்துப் பார்த்து வெறுமையாகவும் சிரித்தான். இப்போதுதான் அவன் பெயர் பட்டி தொட்டி அளவில் முதல் தடவையாய் அச்சில் வந்திருக்கிறது. அதுவும் எப்படிப்பட்ட அறிமுகம். என்ஜினியர்! சுயம்பு பல்லைக் கடித்தான். அண்ணன் வந்தான்; அழைப்பிதழ் கொடுத்துவிட்டுப் போனான். ஆசையோடு பேசிய அண்ணன் கடைசியில் தன்னைக் கூட்டிக்கொண்டு போவதற்குப் பதிலாக “கலியாணத்தைப் பார்க்க முடியலியேன்னு ஏண்டா கலங்குறே. அக்கா, ஒரேயடியாவா போயிடப்போறாள். பத்து மாதத்துக்குள்ளே நம்ம வீட்டுக்கு வந்துதானே ஆகணும்” என்று நம்பிக்கையோடு சொல்லிவிட்டுப் போய்விட்டான். சுயம்பு தனிமையில் தவித்தான். அவனிடம் பேச்சுக் கொடுக்க ஒரு காக்கா குருவிகூட கிடையாது. அந்தப் பக்கம் வரும் நர்ஸம்மாகூட, இவன் பொதுப்படையாக ஏதாவது கேட்டால்கூட, ‘சுகமாயிடும்’ என்று ஒரே வார்த்தையில் சுகமில்லாமல் பதிலளித்தாள். நர்ஸிங் படிப்பு படித்துவிட்டு, ஆயிரக்கணக்கில் பணம் பிடுங்கும் அந்த ஆஸ்பத்திரி - லாட்ஜில், அவளுக்குச் சம்பளம் ஐநூறைத் தாண்டவில்லை என்பது இவனுக்குத் தெரியாது. அவளும், தன்னை உதாசீனம் செய்வதாக நினைத்தான். சுயம்பு அந்தக் கலியாண அழைப்பிதழை எடுத்து வாயிலும் மூக்கிலும் அடித்தபடியே அந்த அறைக்குள் சுற்றினான். செக்குமாடு, இவனிடம் புண்ணாக்கைக் கேட்க வேண்டும். ‘அக்கா கலியாணத்திற்கு போக முடியலையே...போக விடலையே... எக்கா... எக்கா, நான் இல்லாம ஒனக்குக் கலியாணமா?... மாப்பிள்ள அழகாச் சொன்னபோது எப்படிச் சிரிச்சே... எப்படி முகம் பொங்கிச்சு... எப்படி உதடுகள் பூவாய்ப் பிரிஞ்சுது... வாய்ச்சொல்லுக்கே இப்படிச் சிரித்த அக்காவே... ஒன்ன, அந்த அழகு மாப்பிள்ள பக்கத்திலே இருத்தி, நீ சிரிக்கிற சிரிப்பை நான் பாக்காண்டாமா... அக்கா... நான் இல்லாம ஒனக்குக் கலியாணமா...? சுயம்பு உள்ளே இருக்க முடியாமலும் வெளியே போக முடியாமலும், அந்த அறைக்குள், சுற்றிச் சுற்றி வந்தான். காலில் ஸ்பீடா மீட்டர் கட்டி அது செயல் பட்டால் இருபது கீலோ மீட்டர் வேகத்தையும், முப்பது கிலோ மீட்டர் தூரத்தையும், காட்டியிருக்கும். திடீரென்று அவன் கால்களை அரைச் சுற்றாக்கி நின்றான். வாசலுக்குள் ஒரு காலும், வெளியே ஒரு காலுமாய் ஒருத்தி ஒதுங்கி நின்றாள். முப்பது வயது இருக்கலாம். உருண்டு திரண்ட மார்பகம். லட்சணக் கருப்பி, காதில், வெள்ளை வளையங்கள். அவள், அவனை ஒரு அபூர்வப் பொருளாகப் பார்த்தாள். கட்டிய பூவைத் தலையில் கட்டப்போவது போல் பார்த்தாள். லேசாகச் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தாள். ஏனோ தெரியவில்லை... அவனுக்கும் அவளருகே ஒரு சுகம். ஏதோ ஒன்று இருவருக்கும் பொதுவாக நின்று, ஒருவரை ஒருவர் ஈர்க்கும்படி செய்தது. சுயம்பு கேட்டான்: “நீங்க யாருக்கா?” “பெறந்தது இந்த டவுனுதாம்பா... ஆனா பத்து வயசிலேயே ஓடிப்போயிட்டேன். ஏன் அப்படிப் பாக்கே தனியாத்தான் ஓடினேன்! நீ இனிமேல் செய்யப் போறத நான் அப்பவே செய்தேன். இருபது வருஷத்துக்கு மேல ஆயிட்டுது. அம்மாவப் பார்க்க ஆசை. உயிரோட இருக்காங்க. ஒருத்தர் கழுத்த ஒருத்தர் கட்டிப் பிடிச்சு அழுதோம். ஆனாலும் அங்க வீட்ல இருக்க முடியாத நிலமை. இங்க வந்து, சும்மானான்னாலும் காலுல முள்ளு குத்திட்டுன்னு சொன்னேன். அதை எடுக்கணும்னேன். அதுக்கு முன்னாலே, அதாவது அந்த முள்ளை எடுக்கு முன்னால. ரத்தத்தை டெஸ்ட் செய்யணுமாம்... இன்னும் என்னெல்லாமோ செய்யணுமாம். எனக்கும் வசதியாப் போச்சு... இங்கதான் இருக்கேன்...” “நீங்க எந்த ரூமு..” “ஒம்போது...” “ஒட்காருங்கக்கா. ஒங்ககூட ஆண்டாண்டு காலம் பழகுனது போல தோணுது!” “எம்மாடி. ஒன் ஒரு சொல் போதும்... ஆமா ஒன் கோளாறு இப்ப எப்படி இருக்கு?” சுயம்பு அந்தப் பெண்ணையே வைத்த கண் வைத்த படிப் பார்த்தான். அவள் அவனை உடம்பிற்குள்ளும் உள்ளத்திற்குள்ளும் ஊடுருவதுபோல் பார்த்தாள். அவன் முகத்தில் சின்னச் சின்ன கரடுமுரடுகள். அவளைப் பார்த்ததும் ஏதோ இலக்கை அடைய முடியவில்லையானாலும், அடையாளம் கண்ட திருப்தி. அவள் அவன் தோளில் கை போட்டு, ஏதோ பேசப் போனாள். அவனும் தனது கஷ்டங்களை, நஷ்டங்களை கண்ணீரும் கம்பலையுமாய் சொல்லப் போனான். இதற்குள் ஒரு பின்தலைக் கைக்குட்டை. அவளை விரட்டியது. “ஒன் ரூமுக்கு நான் வந்தால், நீ இங்க இருக்கியே... போம்மா... பெரிய பெரிய டாக்டருங்க வருகிற சமயம்...” “ஒனக்கு வசதிப்படும்போது, ஒன்பதாம் நம்பருக்கு வா... ஒன்கிட்ட நிறைய பேசணும்!” சுயம்பு தலையாட்டினான். நர்ஸம்மா, ஒப்புக்கு அவனையும், தின்கிற உப்புக்கு மெடிக்கல் தாளையும், உப்பு சப்பில்லாமல் பார்த்துவிட்டுப் போய்விட்டாள். சுயம்புவுக்கு மீண்டும் தனிமை வட்டியும் முதலுமாய் வந்தது. அவனுடன் போர் தொடுத்தது. ஒன்பதாம் எண் அறைக்குப் போனால், அங்கே இந்த நர்ஸம்மா. சுயம்பு திரும்பி வந்தான். கலியாண அழைப்பிதழை மீண்டும் படித்தான். இந்நேரம் மாப்பிள்ளை வீட்டார் வந்திருப்பார்கள். என்னை விசாரிப்பார்கள். அந்த ரெட்டைப் பின்னல்காரி, நான் பஸ்ஸுல அடிபட்டத தத்துப்பித்துன்னு உளறிடப்படாதே. அதோட அவளப் பத்தி நான் யார்கிட்டவும் சொல்லவே இல்லன்னு சொல்லணுமே... அவள் கிடக்காள்... அந்த ‘ஆம்பளப் பயல்வ’ மூர்த்தியும் முத்துவும் வந்திருப்பானுவளே. அண்ணன் அழைப்பிதழ் அனுப்பி, லெட்டரும் போட்டதா சொன்னானே. ஒருவேள டேவிட்டும், வரலாமோ. நான் சொல்லி அண்ணன் அவருக்கும் அனுப்பி வச்சாரே... டேவிட்... டேவிட்... உங்களுக்கு மூணு லெட்டர் எழுதிட்டேனே டேவிட், ஒரு லெட்டருக்குக்கூட பதில் எழுதலையே டேவிட். ஒருவேள என் வீட்டுக்கு வந்திருக்குமோ... அண்ணன் தரலியே. அவனுக்கு எங்க நேரம்? கலியாணத்துக்கு வரச் சொல்லி எழுதியிருந்தேனே டேவிட். நீங்க வருவீங்களா... எனக்குத் தெரியும். நீங்க வருவீங்கன்னு. நீங்க அங்க வந்து ஒங்கள வரவேற்க, நான் இல்லாட்டால், நல்லாருக்குமா டேவிட்! அதோட அந்த ‘ஆம்பளப் பசங்கதான்' என்னப்பத்தி என்ன நினைப்பாங்க...” சுயம்பு மெள்ள மெள்ளத்தான் ஒரு முடிவுக்கு வந்தான். அப்படி வந்ததும், அதுவே ஒரே ஒரு முடிவு என்று உறுதிப்படுத்திக் கொண்டான். அதேசமயம் அக்காவின் வாழ்க்கைக்கு எந்தக் குந்தகமும் வரக்கூடிய எதையும் செய்யக்கூடாது என்றும் உறுதி எடுத்தான். அதனாலேயே லுங்கியைக் கட்டப்போனவன், அதை வீசிப் போட்டு விட்டு, பாண்டை மாட்டிக்கொண்டு, முழுக்கைச் சட்டையையும் ‘இன்செய்து’ கொண்டு புறப்ப்டடான். “அதிக நேரம் இருக்கப்படாது. தாலி கட்டுன உடனேயே ஓடி வந்துடணும். அந்தப் பயல்வளையும், டேவிட்டையும் இங்கே வரச் சொல்லணும். கையில்தான், அண்ணன் கொடுத்த ரூபா இருக்கே... இங்கேயே ஹோட்டலுல வாங்கி கலியாணச் சாப்பாட்டைப் போட்டுடலாம்... டேவிட்டுக்கு, என்ன பிடிக்கும்னு முதல்லேயே கேட்டு வச்சுக்கணும். அவரு பக்கத்துல இருந்தே நானும் சாப்பிடணும்...” சுயம்பு கதவைப் புத்திசாலித்தனமாய் உள் தாழ்ப் பாள் போட்டதுபோல், இடைவெளி இல்லாமல் இறுகச் சாத்தினான். வெளித் தாழ்ப்பாள் போடாமலே, புறப்பட்டான். அந்த மருத்துவமனைக்கு முன்னால் வந்து நின்ற ஐந்து நிமிடத்தில் அந்தப் பட்டிக்காட்டுக்குப் போகும் டவுன் பஸ் வந்துவிட்டது. ஏறிக்கொண்டான். ஒரு ரூபாய் ஐம்பது பைசா டிக்கெட். வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|