உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
18 அவன் அந்த ஊர்ப்பாதை வழியாய் நடந்து, கருவேல மரக்காட்டைத் தாண்டி, அதே இடுக்கு வழியாய் வீட்டுக்கு வந்தபோது... வேப்ப மரத்தடியில் ஒரே ஆண்கள் கூட்டம். தென்னங்கீற்றுக் கொட்டகை. வீட்டுக்குள், பெண்கள் கூட்டம். முற்றத்தில் பெரிய பந்தல், சலவைத் தொழிலாளி கொடுத்த வெளுக்கப்போட்ட சேலைகள் மேலே உள்ள கீற்றுக் கொட்டகை ஓலைகளை மறைத்துக் காட்டின. பந்தலுக்குள்ளேயே ஒரு குட்டிப்பந்தல், விழா மேடை மாதிரியான ஜோடிப்புகள், கலர் பல்ப் தோரணங்கள். அவற்றிற்கு போட்டியாக மாவிலைத் தோரணங்கள். முன்பக்கம் குலை வாழைகள். பூணுால் போட்ட பெரிய செம்பு. அதன்மேல் மஞ்சள் தடவிய தேங்காய், அருகே நாழி, நெல், பக்கா. அதன் மேல் ஒரு விளக்கு... அதன் முன்னால் மேளச் செட்டு. பீப்பிச் சத்தம். செட்டு மேளம் கொட்டியது. கூட்டம் முண்டி யடித்தது. பந்தியில் ஒரு வரிசை. அதைப் பார்த்துக்கொண்டு மறு வரிசை. சுயம்புவை யாரும் சரியாகக் கவனிக்கவில்லை. அப்படிக் கவனித்தவர்களும் அவன் எப்படி வந்தான் என்பது மாதிரியும் பார்க்கவில்லை. பிள்ளையாருக்கு, பெரிய பெரிய வேலைகள். ஆறுமுகப் பாண்டிக்கு அவசர அவசரமான ‘சோலிகள்’. வெள்ளையம்மா, பந்திப் பக்கம். கோமளம், எங்கிருக்காளோ...? சுயம்பு துள்ளிக் குதித்து அக்காவின் அறைக்குள்ளே போனான். அவளைச் சுற்றி ஒரு பெரிய பெண் வட்டம். அதற்குள்ளும் சின்னச் சின்ன வட்டங்கள். அவன் அந்த வியூகங்களை அபிமன்யூ மாதிரி உடைத்துக்கொண்டு, உள்ளே போனான். ‘ஆம்புள இப்படியா இடிச்சுட்டு வாறது’ என்று பல பெண்கள் - குறிப்பாக வெளியூர் சொந்தங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அக்காவைப் பார்த்தான். அவள் ஜெகஜோதியாய் மின்னினாள். பின்னலை மறைக்கும் சரஞ்சரமான பூக்கள். உச்சந்தலையில் வெள்ளி வளைவு. ஒளியடிக்கும் கம்மல். ஒளிவிடும் சிவப்பு மூக்குத்தி. கண்ணொளி ஒரு பக்கம். பொன்னொளி மறுபக்கம். நீல மஞ்சள் காஞ்சிப் பட்டின் உடலொளி ஒரு பக்கம். அக்கா காசுமாலையும், கழுத்துமாய் ஒட்டியாணமும் இடுப்புமாய் ஒளியாய், ஒளிரும் ஒளியாய் மின்னினாள். அபிராமிபட்டர் வர்ணிக்கும் அம்பாள் மாதிரி... மரகதம் தம்பியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவன் பேண்ட் போட்டிருப்பதைப் பார்த்து பெருமகிழ்ச்சி. இங்கிலீஷ் டாக்டர்ன்னா இங்கிலீஷ் டாக்டர்தான். ஒரு வாரத்திலேயே குணப்படுத்திட்டாங்களே... சுயம்பு சும்மா இருக்கவில்லை. “எக்கா... ஒன் மாப்பிள்ளையப் பார்த்து மயங்கி விழப்போற பாரு. அர்ச்சுனன் பல்வரிசையைப் பார்த்து விட்டு பவளக்கொடி மயங்கினாளாமே..அப்படி..” “அப்போ மாப்பிள்ளைக்குத் தெத்துப் பல்லா. உதட்டை மீறி வெளியில தலைகாட்டுற பல்லா...” எவளோ, ஒரு சித்தப்பா மகள், இன்னும் பார்க்காத மச்சானை, இப்போதே கிண்டல் செய்தாள். எல்லாப் பெண்களும் சிரித்தபோது, ஒருத்தி அவசரப்படுத்தினாள். “சரி... சீக்கிரமா கோயிலுக்குப் போயிட்டு வந்துடுவோம். மாமன் சடங்கு, மாப்பிள்ளை அழைப்புன்னு ஆயிரம் இருக்கு. பையன் வீட்டார் வந்துகிட்டே இருக்காங்களாம். எம்மாளு மரகதம். இப்பவே இப்படி வெட்கப்படாதடி! அந்த ராத்திரிக்கும் கொஞ்சம் வச்சுக்க! ஏய் சுயம்புத் தம்பி, இந்த ரூம நல்லாப் பார்த்துக்கணும். எல்லாப் பொருளும் இங்கதான் கெடக்குது... யாரையும் வீட்டுக்குள்ள விடாத!” சுயம்பு தலையாட்டினான். தம்பியைக் கோயிலுக்குக் கூட்டிப் போக நினைத்த மரகதம், தம்பியின் தலையை வருடிவிட்டு, நடந்தாள். சுற்றிலும் பெண்கள் சூழத் தேரோட்டமாய்ப் போனாள். சுயம்பு அந்த அறையை அங்குமிங்குமாய் நோட்ட மிட்டான். வெளியே ஒலித்த மேளச் சத்தம், வெளியேறிக் கொண்டிருப்பதுபோல் சிறுகச் சிறுகச் செத்துக் கொண்டிருந்தது. மணப்பெண் மரகதத்தை, பெண்கள் கோயிலுக்குக் கூட்டிப்போனபோது, அப்படிக் கூடவே போகாதது, சுயம்புவுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. இந்த அறையையும் அறைக்குள் இருப்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய பொறுப்பு. யாரையும் உள்ள விடக் கூடாது. டேவிட் வந்தாலும்கூட. டேவிட் நீங்க வருவீங்களா... அக்காகிட்ட ஓடிப்போய் டேவிட் லெட்டர் போட்டாரான்னு கேட்கலாமா... வேண்டாம், அக்கா தப்பா நினைப்பாள். சந்தேகப் படுவாள்... சுயம்புவிற்கு டேவிட்டை நினைக்க நினைக்க பாலை வனம், பசுஞ்சோலையானது. கண்கள் தானாய்க் குளிர்ந்தன. பற்கள் உதடுகளைத் தேனாய்க் கவ்வின. அந்த அறையை அவன் உற்றுப் பார்த்தான். அதோ அக்காவின் நிச்சயதாம்பூலப் புடவை. டேவிட்டுக்குப் பிடித்த வெளிர் மஞ்சள் கலர். சுயம்பு சிறிது யோசித்தான். ஆனாலும் டேவிட்டை நினைக்க நினைக்க அவன் உடம்பை அடக்கிய ஒன்றை, அடக்கப்பட்ட ஒன்று அடித்துப் போட்டு விட்டது மாதிரி தோன்றியது. அடக்கப்பட்ட மண்ணின் மைந்தர்கள், பீறிட்டு எழுந்தால் எப்படியோ அப்படி, சிவனே என்று உள்ளே கிடக்கும் தீக்குச்சி உரசப்பட்டால் எப்படி ‘சக்தி’ வெளிப்படுமோ... அப்படி... கதவைச் சாத்திக் கொண்டான். தாளிட்டால் தப்பாய் நினைப்பார்கள். கொஞ்சநேரம் வரைதான். அக்காவும் அவள் பட்டாளமும் உதிரமாடன் கோயிலுக்குப் போய்விட்டு வீடு திரும்ப அரைமணி நேரம் ஆகும். இது பத்து நிமிட வேடம். சுயம்பு புடவையை மட்டும்தான் கட்ட நினைத்தான். ஆனாலும், அந்தப் பாவாடை, அது உடம்பில் பட்டாலே ஒரு சுகம். பாண்டுக்கு மேலே கட்டிக்கொண்டான். ஜாக்கெட் இல்லாத ஒரு பாவாடையா... பிரா இல்லாத ஒரு ஜாக்கெட்டா. சுயம்பு பெண்ணாகி விட்டான். பீரோ கண்ணாடியைப் பார்த்து குங்குமமிட்டுக் கொண்டான். அப்படிக் குங்குமம் இட்ட தன் சொந்தக் கையையே டேவிட்டின் கையாகப் பாவித்துக் கொண்டான். வளையல் கிடைக்குமா என்று அங்குமிங்குமாய் நோட்டமிட்டான். அதற்குள்... அந்த அறையின் கதவு ஒரேயடியாய் திறக்கப்பட்டது. ஒரே பெண் பட்டாளம். வெளியூர் வாடை ஆனந்தக் கூத்தாய்ப் பேசினார்கள். ‘பொண்ணு ரொம்ப ரொம்ப அழகா இருக்கே, அண்ணன் கொடுத்து வச்சவரு. ஆனால் தலை ஏன் இப்படி மொட்டையாய். முடி ஏன் அப்படி?’ ஒருத்தி கேட்டாள். “மயினி கொஞ்சம் பின்னால திரும்புங்க!” சுயம்பு அப்படியே திகைத்து நின்றான். மலைப் பாம்பின் கொலைகாரக் கண்ணுக்குக் கட்டுப்பட்டு அப்படியே நிற்கும் இரை மாதிரி நின்றான். முன்னாள் பிள்ளைத்தாய்ச்சியை, குழந்தையும் இடுப்புமாய்ப் பார்த்தான். அவளோ, கல்யாண மாப்பிள்ளையான அண்ணன் சொன்ன சில சந்தேகங்களை மனத்தில் திருப்பிக்கொண்டு, அதே சமயம், அவசரப்படக்கூடாது என்று சில சந்தேகங்களைக் கேட்டாள். “நீங்கதான் மணப்பெண்ணா?” “இல்ல, பொண்ணுக்குத் தங்கச்சி...” “பேரு...” “பேரா... பேரு...” அவனுக்கு, உடனடியாய் பொய் சொல்லத் தெரியவில்லை. அவளோ, அவனருகே பேயாகப் போனாள். மற்றப் பெண்கள் தடுத்தும் கேளாமல், அவன் கரண்டைக் காலில் நீட்டிக்கொண்டிருந்த ஒன்றைப் பார்த்துவிட்டு அவன் சேலையை உரிந்தாள். பாவாடையோடு நின்றவனைப் பார்த்தாள். அந்தப் பாவாடைக்கு மேலே பெல்ட் போட்ட பேண்டின் வட்டம். கீழே அதே மாதிரியான, இரண்டு சின்ன வட்டங்கள். ஆரம்பத்தில் அவள்கூட கத்தப்போனாள். ஆனாலும் நிதானப்பட்டாள். அலறியடித்து அமர்க்களம் செய்யப்போன பெண்களை, பேசாமலிருக்கும்படி ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்து, அவர்களோடு வெளியேறினாள். கூட வந்தவர்களை மீண்டும் பேசாதீர்கள் என்பது மாதிரி சைகை செய்தாள். அண்ணன் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு. சுயம்பு சிறிது நேரம் புரியாமல் விழித்தான்; பிறகு அவசர அவசரமாய் சேலையை மடித்து வைத்துவிட்டு, பாண்டைப் போட்டுக்கொண்டே சட்டையையும், மாட்டிக் கொண்டு வெளியே வந்தான். திண்ணைப்பக்கம் அவள்களின் முதுகுகளைப் பார்த்து, “நான் மரகதக்கா தங்கச்சி, சுயம்புவுக்கும் தங்கச்சி. சில சமயம் பாண்ட் போடுவேன். சில சமயம் சேலை கட்டுவேன். ரெண்டுமே பிடிக்கும்” என்றான். காலதாமதமான பொய். பிள்ளைத் தாய்ச்சி காலம் கடத்த விரும்பவில்லை. சுயம்புவைப் பார்த்துச் சிரித்தாள். “அங்கே போய் இருக்கோம்” என்றாள். அவனையே வெறித்துப் பார்த்த சந்திராவின் பின்னலைப் பிடித்து இழுத்தபடியே வெளியேறினாள். சுயம்புவுக்கு அவர்களைச் சமாளித்துவிட்ட திருப்தி, அவர்களுக்குத் தான் ஒரு நாகரிகப் பெண்ணாக தோன்றுவதில் ஒரு சந்தோஷம். அரைமணி நேரத்தில்... அந்தப் பந்தல் முழுக்க ஒரே சத்தம். இன்னது என்று தனித்துப் பிரிக்க முடியாத சந்தைச் சத்தம். அதையும் மீறிய வெள்ளையம்மாவின் ஒப்பாரிச் சத்தம். ஆறுமுகப் பாண்டியின் கத்தல், கதறல், அதே ராமசாமிக் கிழவர் இப்போது மேளம் நின்ற வீட்டில் யாருக்கோ உபதேசிப்பதுபோல் உபதேசித்தார். “எல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்கப்பா... கலியாணம் மட்டும் யார் யாருக்கு கொடுப்பனையோ... அங்கதான் நடக்கும். ஆனாலும் செருக்கி மவளுவ தந்திரக்காரிங்க. இந்தப் பய கோலத்தைப் பார்த்துட்டு, சத்தம் போடலை பாரு! அப்படிப் போட்டால், நாம் அவங்களை அதட்டி ஊரு விட்டு ஊரு வந்த மாப்பிள்ளய கட்டாயப்படுத்தி தாலி கட்ட வச்சிடுவோம்னு நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காளுவ. மாப்பிள்ளை காருக்கு முன்னால வேனுல வந்து... ஒன் மகன் போட்ட கோலத்தை பார்த்துட்டு எதையோ கோணச் சத்திரத்தில வச்சிட்டு வந்ததாய் ஏமாத்தி வேனுக்குள்ள ஏறிப் பறந்து, வழியில வந்த மாப்பிள்ள காரையும் மடக்கி திரும்பி கரிச்சான் குருவி பறந்தது மாதிரி பறந்துட்டாளுவ பாரு. அப்படியும் ரோட்டுல ஒருத்தன்கிட்ட ‘பொண்ணோட குடும்பம் பொட்டக் குடும்பம். பிடிக்காம போறோம்னு’ சொல்லிட்டுப் போயிருக்காளுவ பாரு! தந்திரக்காரப் பய மவளுவ... சரிப்பா, போனது போகட்டும். போட்ட பந்தலப் பிரிக்கப்படாது... பேசாம நம்ம வத்தல் வியாபாரிக்குக் கட்டி வச்சிடலாம். ஐம்பது வயசுலயும் கலியாணம் செய்த ஆம்பளைங்க இருக்கத்தானே செய்யுறாங்க...” பிள்ளையார் அவலத்தை ஆத்திரமாக்கினார். “மச்சான், யானை படுத்தாலும் குதிரை மட்டம் மச்சான். இதைவிட, கண்ணுக்குக் கண்ணா வளத்த மகள எருக்குழியில பொதைச்சிடலாம் மச்சான். நீரு இப்போ எனக்கு மச்சானாப் பேசல. அந்த செரங்குப் பயலுக்கு பெரியப்பாவா பேசுறீரு. வீட்ட விட்டுப் போறீரா மச்சான்?” ராமசாமிக் கிழவர் வீறாப்பாய் போனபோது, பிள்ளையார் சுயம்புவைத் தற்செயலாப் பார்த்து விட்டார். ஒரு கம்பை எடுப்பதற்காக மணப்பந்தலை இழுத்துப் போட்டார். அது சரிந்தபோது, ஒரு கம்பை உருவினார். சுயம்புமேல் மேலும் கீழுமாய் உச்சியும் பாதமுமாய் படர விட்டார். உச்சி பிய்ந்தது. நெற்றி பீறிட்டது. சுயம்பு அங்கு மிங்குமாய் ஓடினான். ஓடிய பக்கமெல்லாம் அடி. பிறகு அப்படியே நின்றுகொண்டான், கையைக் கட்டிக்கொண்டு, ‘அடித்துக் கொல்’ என்பது மாதிரி. பிள்ளையாரை நாலு பேர் பிடித்துக்கொண்டார்கள். ஆறுமுகப்பாண்டி அப்பாவின் வாரிசானான். அந்தக் கம்பை எடுத்தே தம்பிக்கு மூக்கில் ரத்தம் வடியுமாறு அடி கொடுத்தான். தோள் தோலை உரித்துக் காட்டினான். அப்போது மரகதம் கோவிலில் இருந்து அலங்கோலமாய் வந்தாள். நான்கு பெண்கள் அவளைப் பிணத்தைப் பிடிப்பதுபோல் பிடித்துக்கொண்டனர். கல்யாணம் ஆகுமுன்பே கலைந்த நெற்றி, விரிந்த முடி... சுயம்பு ‘எக்காய்...’ என்று பீறிட்டு ஆறுமுகப்பாண்டி யின் பேய்க் கூத்தாடும் கம்புக்கு இடையே ஓடினான். அக்காவின் காலைக் கட்டிக்கொண்டு அழுதான். அவள் சீறினாள். துக்கமும் கோபமுமாய்க் கத்தினாள். “சீ... யாருடா ஒனக்கு அக்கா. என் வாழ்க்கையை கெடுக்கறதுக்குன்னே உடன் பிறந்தே கொல்லும் நோயுடா, நீ! இப்ப உனக்கு சந்தோஷம்தானேடா!” சுயம்பு அக்காவைப் பார்த்தான். நெருப்புச் சூட்டை விடப் பெரிய சூடு பந்தல் கம்பு அடியைவிட பெரிய அடி! சுயம்பு தேங்காய் உடைப்பதற்காக இருந்த அரிவாளை எடுத்து பித்தனாகி நின்ற அப்பனிடம் கொடுத்தான். அவர் சும்மா இருக்கவே அண்ணனிடம் கொடுத்தான். அவனும் அசைவற்று நிற்கவே அந்த அரிவாளை எடுத்துத் தனது கழுத்துக்குக் குறி வைத்தான். இரண்டுபேர் வந்து பிடித்துக் கொண்டார்கள். சுயம்பு அக்காவைப் பார்த்தான். அவளோ எங்கேயோ நிற்பதுபோல் நின்றாள். ‘எக்கா’ என்று வாய் முட்ட வந்த வார்த்தையை மீண்டும் நெஞ்சுக்குள் முட்டி மோதவிட்டு, அவன் வெளியே ஓடினான். திக்கறியா, திசையறியா இடத்துக்கு. மனித வாடையே இல்லாத காட்டுக்கு... வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|