உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
19 சுயம்பு அந்த ஒன்பதாம் எண் அறைக்குள் ஒரேயடி யாய்ப் போவதுபோல் போனான். அவன் மருத்துவமனையை விட்டுப் புறப்படுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்புவரை, அவனை அன்பொழுகப் பார்த்த அதே அவள், இப்போது உலரவிட்ட தலைமுடியை ஒரு சேர பிடித்தபடியே அவனைப் பார்த்தாள். எழுந்து, அவன் அருகே போய், அவன் கையைப் பிடித்து ஒரு நாற்காலியில் உட்கார வைத்தாள். அந்தத் தீண்டலே அவனுக்கு ஒரு சுகமாக இருந்தது. அவளோ, அவன் அலங்கோலத்தையும், சதைச் சிதைவுகளையும் துக்கத்தோடு பார்த்துவிட்டுப் பரபரத்தாள். ‘அய்யய்யோ என்ன கொடுமைடி’ என்று அரற்றியபடியே, மலைத்து நின்றாள். அவனிடம் ஆறுதலாகப் பேசுவதற்கு மாறி மாறி முயற்சித்தாள். முடியவில்லை. வார்த்தைகளே பனிக் கட்டிகளாகி, கண்கள் வழியாகக் கசியப்போவது போன்ற நிலை. அவன் செம்பட்டை மீசை வைத்துக்கொண்டது மாதிரி நீளவாக்கிலான ரத்தக்கோடு. கழுத்தில் ரத்த உழவுத் தடயங்கள். கீழே இருக்கிற மண் மேலே வருமே, அப்படி சதை தெரிந்தது. தோள்பட்டை துணி கிழிந்து, ரத்த உரைச்சலில் உறைந்து கிடந்தது. அந்தக் கம்பைப் பதிய வைத்த சின்னச் சின்னத் தடயங்கள். உச்சந்தலை கருப்பு முடியும், ஒரு சிவப்பு நிறம், உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதோ ஒரு பாதிப்பு. கண்களிலும் அது இருக்க வேண்டும் என்பதுபோல், அது நீரைச் சுரந்தது. அவள் கதவை நிதானமாக, வெளியே எட்டிப் பார்த்துச் சாத்தினாள். ஏதோ பேசப் போனவளை, வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு, அவன் சட்டையைக் கழட்டினான். முதுகில் ரத்தத் திரவத்தோடு ஒட்டிக்கொண்டிருந்த, சட்டைத்துணி வர மறுத்தது. அவள் அதைப் பிய்த்தெறிந்தாள். ஏற்கனவே இற்றுப் போயிருந்த பணியனை அற்றுப் போட்டுவிட்டு, பாண்டையும் கழற்றி, அவனை ஜட்டியுடன் நிறுத்தினாள். கட்டிலில் வைத்த பனியன் குவியலை, ஒன்று திரட்டி ரத்தக் குவியல்களைத் துடைத்தாள். ரத்தக்கோடுகளை அதன் ஒரங்களில் துடைத்து விட்டாள். அவனைக் கீழே குனித்து தலையின் ரத்தக் கசிவைப் போக்கினாள். அவன் வாதையை மெல்வது போல் பல்லைக் கடித்தான். அவள் வெளியே ஓடினாள், கதவைச் சாத்தினாள். அவன் கதவைத் தட்டியபோது அதை மெல்லத் திறந்து ‘சத்தம் போடாத... மருந்து வாங்கிட்டு வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு, யாரோ கீழே உருட்டி விட்டது போல் படி வழியாய் ஓடினாள். நல்லவேளை... அப்போதுதான் மருந்துக்கடை பாதி மூடப்பட்டது. அந்தக் கடை அந்த மருத்துவமனை டாக்டர்களின் சீட்டுக்களிலில்லாமல், மருந்து மாத்திரை கொடுக்காத கடை. ஆனாலும், இவள் கெஞ்சிய கெஞ்சலில், டிஞ்சரைக் கொடுத்தது. வெட்டுக் காயம் என்றவுடன், தன்னை டாக்டராக அவள் அங்கீகரித்துவிட்டதாகக் கருதி, கடைக்காரர், நான்கைந்து மாத்திரைகளைக் கொடுத்து, எந்த வேளைக்கு எது என்று விளக்கினார். பிதுக்கினால் பிசின் மாதிரி வரும் ஒரு டியூபையும் கொடுத்தார். அவள் மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களை நீட்டி எட்டு ருபாயைத் திரும்ப வாங்கிக் கொண்டு, மலை ஏறுவதுபோல் படியேறினாள். மூன்று மூன்று படிகளாக அவள் தாவிக் குதித்ததால், மாடி முனைக்கு வந்ததும், அவளால் நகர முடியவில்லை. மூச்சு முட்ட அறைக்குத் திரும்பினாள். அவனோ, முட்டிக் காலில் கை ஊன்றித் தலையை அந்தரத்தில் தொங்க விட்டு அசைவற்று இருந்தான். அந்தப் பெண் அவனைத் தூக்கி நிறுத்தினாள். உடம்பு முழுவதற்கும் அந்த ஒரு பாட்டில் டிங்சர் அயோடின் தேவையாக இருந்தது. பஞ்சு அதை முழுமையாக உறிஞ்சிவிட்டது. அவன் காயங்கள் அந்தப் பஞ்சு ஈரத்தை அடியோடு வாங்கிக் கொண்டன. அவ்வப் போது அவன் வலி பொறுக்காமல் துடித்தான். அவனை அறியாமலே ‘எம்மா, எப்பா’ என்ற வார்த்தைகள் வந்தன. அவன் அவற்றையும் கடித்துக் கொண்டான். நிறுத்திக் கொண்டான். இதற்குள், அந்தப் பெண் அவனுக்கு ஒரு மாத்திரையைக் கொடுத்துவிட்டு, அவனைக் கட்டிலில் கைத்தாங்கலாகக் கிடத்தினாள். பிசின் மருந்தைப் பிதுக்கி, அதை அவன் ரத்தச் சதைகளுக்கு வெள்ளைக் கொப்பளங்கள் போலாக்கி, தடவிவிட்டாள். பிறகு வாயைக் கைக்குக் கொண்டுபோய் அந்தக் கை வழியாய்ப் பேசுவதுபோல் பேசினாள். “ஒன்ன எந்தப் பாவிடா இப்படிப் பண்ணுனது... அவன் வீட்லயும் ஒரு பொட்டை விழும். வேணுமுன்னாப் பாரு...” அவன், தலையைத் தூக்கப் போனான். ஏதோ பேசப் போனான். அவள் ஒரு கையை அவன் தலையில் வைத்துக் கொண்டு, இன்னொரு கையால் அவன் உதடுகளை ஒட்ட வைத்தாள். தலையணையை எடுத்து அவன் தலைக்கு அணையாக்கினாள். பின்னர், அந்தத் தலையைத் தன்பக்க மாகத் திருப்பி வைத்துக்கொண்டே சில கேள்விகள் கேட்டாள். “ஒன் பேரென்ன?” “சுயம்பு!” “சுயம்புன்னா தானாய் முளைத்த லிங்கம்னு பேரு. அதுக்கு எந்த அபிஷேகமும் கிடையாது!” அவள், எதையோ யோசிப்பதுபோல் தலையை வேறு பக்கமாய்த் திருப்பினாள். அவன், அந்தத் தலை போன பக்கம் கண்களைச் சிரமப்பட்டுத் திருப்ப வேண்டியதாயிற்று. அவள், தன் கண்களைத் துடைத்துவிட்டு, அவன் பக்கம் மீண்டும் திரும்பினாள். “ஒனக்கு பொம்பளைங்க மாதிரியே புடவை கட்டணும்... வளையல் போடணும்னு நெனப்பு வருமா?” “இன்னும் வருது. இவ்வளவு அடிச்ச பிறகும் வருது!” “வரட்டுமே... என்ன குடி முழுகிப் போச்சு... இதே மாதிரி, ஆம்புளங்களைப் பார்த்தா ஆசை வருமா? அவங்களை வெறும் உடம்போட பார்க்கக் கூச்சமா இருக்குமா...” “ஆமாக்கா... ஆமாக்கா! ஆனா டேவிட்டை நெனச்ச பிறகு, அவர்மேல மட்டும்தான் மனசு நிக்குது!” “ஒனக்கு ஒரு டேவிட்டுன்னா, எனக்கு ஒரு முனிர் அகமது. இப்போ இவனுவ முக்கியமில்ல! இவனுவளுக்கு நாமும் முக்கியமில்ல... விட்டுத் தள்ளு. நீ வீட்டுக்குத் தெரியாம அடிக்கடி சேலை கட்டுவியா...” “ஆமாம்.அதனாலேயே எங்க அக்கா கல்யாணம் நின்னுபோச்சு!” “அடக்கடவுளே... அழாதப்பா, ஒங்க அக்காவுக்கு இன்னொருத்தன் இனிமேலா பிறக்கப் போறான்!” “கண்டிப்பா எங்க அக்காவுக்குக் கல்யாணம் நடந்துடும்னு சொல்றீங்களா...” “ஏன் நடக்காது... எதுக்காக நடக்கப்படாது... கண்டிப்பாக நடக்கும்...” அந்தப் பெண்ணால், அதற்குமேல் கேள்வி கேட்க விருப்பமில்லை. அவள் மனமும் நின்றுபோன கலியாணத் தையே நினைத்தது. இதற்குள் அவன்தான் தானாகப் பேசினான். “அப்பா சூடு போட்டார்! அண்ணன் சூடு கொடுத்தான்! அப்படியும் எனக்கு சொரணை இல்லாம போயிட்டே... எங்க அக்கா, எவ்வளவு சொல்லியும் என்னால சேல கட்டாம இருக்க முடியலையே... பொம்பளங்க பக்கத்துல அவங்களோட அவங்களா நிக்கணுமுன்னு வருகிற ஆசையை தடுக்க முடியலையே!” திடீரென்று, அந்தப் பெண் அவன் தலையைத் துாக்கி தன் மடியில் போட்டுக்கொண்டாள். அவன் நெஞ்சை நீவி விட்டாள். அவள் கண்ணிர் அவன் மார்பை நனைத்து அவையும் நெருப்புக் கொப்புங்கள்போல் நின்றன. அவள் கீழே குனிந்து குனிந்து தனது நெற்றியால் அவனது நெற்றியை லேசாய் முட்டி முட்டியே சன்னக் குரலில் ஒப்பாரி வைத்தாள். “என் மகளே... என் மகளே... நானும் ஒன்ன மாதிரி, ஒரு நல்ல குடும்பத்துல பிறந்து, நீ பட்ட அத்தன கொடுமை களையும் பட்டவள்தாண்டி! கைய ஒடிச்சாங்கடி! தலையை மொட்டையடிச்சாங்கடி! எல்லாருக்கும் மாதிரி, ஒன்ன மாதிரி - என்ன மாதிரி இருக்கிற அத்தனபேருக்கும் கிடைக்கிற மாதிரி எனக்கும் சூடு கிடைச்சுதுடி! நம்மள மாதிரி யாரும் பெறக்கப்படாதுடி... பெறந்தாலும் இருக்கப்படாதுடி...” “எக்கா... என்னல்லாமோ பேசுறீங்க...” “பேசவேண்டியததாண்டி பேசறேன் என் மகளே. நான், இனிமேல் ஒனக்கு அக்கா இல்ல - அம்மா... ஒன்னப் பெறாமல் பெத்த அம்மா... எத்தனையோ பேரு எங்கிட்ட தத்தெடுக்கச் சொல்லி வந்தாளுவ... நான்தான் யோசிச்சேன்... ஒரு மகள் இருந்தாலும் - அது உருப்படியா இருக்கணும்னு நிதானிச்சேன். என் புருஷன் கூத்தாண்டவர் சத்தியமாய் சொல்றேண்டி...” “ஒன் புருஷன் கூத்தாண்டவர் எங்க இருக்கார்...” “கல்லாய் இருக்கார். கட்டையாய் இருக்கார். கூவாகத்துல இருக்கார். பிள்ளையார்குப்பத்துலயும் இருக்கார். இதெல்லாம் ஒரு நிமிஷத்துல சொல்ல முடியாத சங்கதி என் மகளே... ஒரு தடவை நீ என்ன அம்மான்னு கூப்பிடுடி. அப்பதான் நீ என்ன ஒப்புக் கொண்டதா அர்த்தம்டி..” “மாட்டேன்கா... எனக்கு அம்மா பிடிக்காது. அவள் தானே என்ன இப்படி பெத்துப் போட்டுட்டாள்.” “கூத்தாண்டவர், பெண் கேட்டா அவள் என்னடி செய்வாள்... எங்கம்மா, என்னப் பார்த்து துடிச்சது மாதிரிதான் அவளும் துடிச்சிருப்பாள். ஆனாலும், எப்படியோ என் கூட்டுல தூக்கிப் போட்ட குயிலு முட்டை நீ. ஒன்ன அடைகாத்து ஆயுள் வரைக்கும் பராமரிக்க வேண்டிது, என்னோட பொறுப்பு!” “அப்படின்னா...” “நான் ஒனக்கு அம்மான்னா அம்மாதான். நாம எங்க போனாலும் ஒண்ணாத்தான் போவோம்! ஒரே பாயில தான் படுப்போம். ஒரே தட்டுலதான் சாப்பிடுவோம்... நீ என்ன அம்மாவா பார்த்துக்கணும். நான் ஒன்ன மகளா நடத்தணும். கூத்தாண்டவரே, கூத்தாண்டவரே, ஒனக்கு பொண்ணு கிடைச்சது போதாதா. இன்னுமாய்யா ஒனக்கு ஆசை தீரல. இந்த சின்னப் பனங்குருத்த இப்படி கோர ஓலையா ஆக்கிட்டியே, ஆக்கிட்டியே...” “எனக்கு எதுவுமே புரியமாட்டேக்கு அக்கா...” “இன்னுமாடி நான் ஒனக்கு அக்கா... கடைசியா கேக்கேன் என் மவளே. என்னை இந்தக் கணத்திலேருந்து அம்மான்னு கூப்பிடணும்... ஆனாலும், நான் ஒன்ன வற்புறுத்த மாட்டேன். பச்ச பனந்தோப்புல இடி விழுந்த மரமா நிற்கிற இந்தப் பாவிய அம்மான்னு சொல்லுறதும் சொல்லாததும் ஒன்னோட இஷ்டம்...” அந்தப் பெண், இப்போது பேச்சடங்கி உட்கார்ந்தாள். பிறகு மடியில் கிடந்த சுயம்புவின் தலையைத் தலையணையில் வைத்துவிட்டு எழுந்தாள். கரங்கள் இரண்டையும் முன்பக்கமாகவும், பின்பக்கமாகவும் கட்டிக் கொண்டு நடந்தாள். அவ்வப்போது சுயம்புவின் வாயை - வாயை மட்டுமே பார்த்தாள். சுயம்பு தலையைப் பிடித்துக்கொண்டே யோசித்தான். அவள் துடித்த துடிப்பை அழுத அழுகையைத் தாயினும், சாலப் பரிந்த நேர்த்தியை நினைத்துப் பார்த்தான். இவள் வெறும் தாயாக மட்டும் தெரியவில்லை. ஆதிபராசக்தி... லோகமாதா... பெறாமல் பெற்றவள். சுயம்புவின் கண்களில் தாரை தாரையாக நீர், எலும்பு கசிந்து கண் வழியாய் திரவமாவது போன்ற தெளி நீர். உதடுகள் துடித்தன. நாடி நரம்புகள் ஒவ்வொரு அணுவும் பூரித்துப் பூரித்துப் புது மெருகாகிறது. உடம்புக்குள் அவனை இதுவரை துன்புறுத்திய ஒன்று, அவன் உடம்பு முழுவதும் ஒய்யாரமாக வியாபிக்கிறது. ஒரு ராட்சஸி, வேடம் கலைத்து தேவதையாகிறாள். ஆனாலும் அவளை ஒரு அசுரன், ஒற்றைக் கொம்பன் ஈட்டியால் குத்தப்போகிறான். இதோ நிற்கிறாளே... இந்தத் தாய், இவள் ஆவியாகி அவன் வாய் வழியாய் உள்ளே போகிறாள். அந்த அசுரனை, துவம்சம் செய்கிறாள். அவள் வெட்டிப் போட்ட ஒவ்வொரு துண்டுகளையும், வாய் வழியே வெளியே வீசுகிறாள். பிறகு வெளியே வருகிறாள். உஷ்ண சூரியனாய் நிற்கிறாள். நெருங்க நெருங்க எரிக்காத பெண் சூரியன், இந்தக் கட்டாந்தரைக்கு வாழ்வளிக்கும் சூரியத்தாய்... சுயம்பு, ஒரு குழந்தை எப்படி முதலில் அந்த வார்த்தையை உச்சரிக்குமோ அப்படி உச்சரித்தான். “அம்..ம்.மா...அ.ம்.மா. அம்மா. அம்மா..." அவள், அப்படியே ஓடிவந்தாள். அந்தக் கட்டில் சட்டத்தில் முகம் போட்டு அவன் மார்பில் சாய்ந்தாள். அவன் கைகளை எடுத்துத் தன் கழுத்தில் கோத்துக் கொண்டாள். ‘மகளே... என் மகளே’ என்று ஒரே ஒரு தடவை ஒரு சின்னச் சத்தம். அப்புறம் தாயும் மகளும் அதே நிலையில், அதே பிடிவாரத்தில். காலத்தையும் பிடித்து வைத்துக் கொண்டது போன்ற பிடி வாழ்வில் பிடிபடாத ஒன்றைப் பிடித்துவிட்ட திருப்தி. மூத்தவளுக்கு ஒரு ஆறுதல். சின்னதுக்கு ஒரு அடித்தளம். அந்தப் பெண் கண் விழித்தாள். தன்னை மறந்து அவளையே பார்த்த சுயம்புவிடம் நாத்துடிக்க பேசினாள்: “மகளே, மகளே... நீ பட்டது போதும் மகளே... இந்த தாய்கிட்ட ஒன் சுமையைக் கொடுத்துடு மகளே... என் சுமை ஒனக்கு வேண்டாம். ஆனால் ஒன் சுமை எனக்கு வேணும்... நெல்லுல சாவியாகி, முட்டையில கூமுட்டையாகி ஆணுலயும் சேராமல், பெண்ணுலயும் சேர்க்காமல் அலியாப் போன ஒன்னோட கதையை சொல்லு மகளே. தாய்கிட்டச் சொல்லாம யார்கிட்ட சொல்லுவே மகளே! சொன்னாத்தானே மகளே. பாரம் தீரும்... வாய் வழியாத் தானே அந்தப் பாரத்தை நானும் வாங்கிக்கொள்ள முடியும்...” சுயம்பு மெள்ள மெள்ளப் பூ விரிவது போல் தனது கதையை சொல்லப் போனான். குரலில் கவலை வந்தாலும், கண்ணில் நீர் வரவில்லை. இந்த அம்மா பார்த்துக் கொள்வாள் என்பது மாதிரியான நம்பிக்கை. சொன்னான் - சொன்னான் - அப்படிச் சொன்னான்... சுவர்க்கடிகாரம் மும்முறை வேறுவேறு விதமாய் அடிக்கும் வரை சொன்னான். அவள், அவன் உணர்ச்சிப் பெருக்கான சமயங்களில் சிறிது நேரம் பேசவிடாமல் தடுத்தாள். அவன் பத்து வயதிலேயே லேசு லேசாய் எட்டிப் பார்த்த பெண் போக்கை வென்றெடுத்த வீரத்தைச் சொன்னான். பிளஸ்டூவுக்கு வந்தபோது பாதி உணர்வுகளை ஆக்கிரமித்த பெண்ணாகிய பேருணர்வு பதுங்கிப் பாயும் புலியாகி, பொறியியல் கல்லூரிக்குப் போன ஒரு மாத காலத்திற்குள்ளேயே தன்னைக் கவ்விக் கொண்டதை - அந்த ரத்தப்பசி தாகம் அடங்காமல் அக்காவையும் கொல்லாமல் கொன்று போட்டதை அழுதழுது சொன்னான். இப்போது அவளும் அழுதாள். அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டே ஓலமிட்டாள். “நானாவது தற்குறி மகளே! பிறக்கும்போதே வயலுல புரண்டவள் மகளே! ஆனால் நீ படிச்சவள். என்ஜினிய ராக கனவு கண்டிருக்கே.கண்ட கனவு பலிக்கலையே. இந்த நாட்ல, காது கேளாதவனுக்கு சைகை சொல்லி விளக்குறாங்க. கண்ணில்லாதவன் கையப் பிடிச்சு வழி காட்டுறாங்க... ஆனா நம்பள மாதிரி பொட்டைங்கள கடிச்சுக் குதறுறாங்களே மகளே. ஒன்ன எப்படித்தான் வாழவைக்கப் போறேனோ! இந்த அம்மா உயிரோட இருக்கது வரைக்கும் ஒன்ன கண்கலங்க வைக்கமாட்டேன் ராசாத்தி... கண்ணீரத் தொடடி என் கண்ணே...” அந்தப் பெண்ணே இப்போது சுயம்புவிற்காக கவலைப்படுவது போலிருந்தது. ஆனாலும் அந்த சுமையிலும் ஒரு சுவை இருப்பதுபோல் நகத்தைக் கடித்தாள். இப்போது சுயம்புவே நிலமையை விளக்கினான். “எக்கா... இல்ல...இல்ல... அம்மா... ஒருவேள எங்க அண்ணனும், எங்கப்பாவும் என்னத் தேடி வரலாம். அவங்க மனசும் ஏழை. ஆனாலும் எனக்கு அவங்ககூட போக இஷ்டமில்ல, ஒன்கூடத்தான் வருவேன்...” “இந்த வார்த்தை கேட்க என்ன தவம் செய்தேனோ? நீ சொல்றதும் ஒரு வகையில சரிதான் மகளே. பேசாம பஸ் ஸ்டாண்டுக்கு போயிடலாம் மகளே... இனிமேல் காலைலதான் பஸ் கிடைக்கும். ஆனாலும் இப்பவே போயிடலாம் மகளே! ஒன் ரூமுல போயி எடுக்க வேண்டியதை எடுத்துக்கடி!” “ஒரு துரும்பக்கூட எடுக்கமாட்டேன்...” “அதுவும் ஒரு வகையில சரிதாண்டி இதோ என் டிரங்க் பெட்டி இந்தா சாவி, எந்தப் பாவாடையை வேணுமுன்னாலும் எடுத்துக்கோ. எந்தச் சேலைய வேணுமுன்னாலும் கட்டிக்கோ. நான் கணக்கு முடிச்சுட்டு வர்றேன். என்னோட ஆஸ்பத்திரி கணக்க சொல்றேன்...” “என்னோட கணக்கும்...” “வேண்டாம். முடிக்க வேண்டாம். காசுக்காக சொல்லல. ஆனா, அதுவும் முக்கியம்தான். எங்கப்பா குதிருக்குள்ள இல்ல என்கிற மாதிரி ஆயிடும். பழைய கணக்கை மறந்துடு, புதிய கணக்கை துவக்கலாம். கதவை சாத்திக்கோ. கட்ட வேண்டிய புடவய கட்டிக்கோ. அம்மா ஒரு நொடியில, வந்துடறேன்...” அவளோ அல்லது அவனோ அல்லது அதுவோ வெளியேறியதும் சுயம்பு ரத்தச் சேறான பேண்ட், சட்டை களைக் கழற்றி, அவற்றை ஒரே சுருட்டாய் சுருட்டி, ஒரு மூலையில் எறிந்தான். பிறகு எறிந்ததை எடுத்து தலைக்கு மேல் மூன்று தடவை சுற்றி அவற்றின்மீது காரி துப்பினான். துப்பி துப்பி அவற்றை வீசி கடாசிவிட்டு அந்த டிரங்க் பெட்டியைத் திறந்தான். அடுக்கடுக்காய் வைக்கப்பட்ட சேலைகளை எடுத்துக் கீழே போட்டான். ஒரு வெளிர் மஞ்சள் புடவை கிடைத்தது. கூடவே அதே நிற ஜாக்கெட். பெண்ணாகி விட்டான். இதற்குள் அவள் மீண்டும் உள்ளே வந்தாள். சுயம்புவை அதிசயித்து பார்த்துவிட்டு அப்படியே கட்டி அணைத்தாள். கை வளையல்களில் சிலவற்றைக் கழற்றி, அவன் கைகளில் மாட்டினாள். அவன் நெற்றியில் முத்தமிட்டாள். உடனே அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். பிறகு தட்டுமுட்டு சாமான்களை எடுக்கக் கீழே குனிந்தான். அவள் பரவசப்பட்டு, “மகளே! மகளே!” என்று அவளைச் சுற்றிச் சுற்றி அரற்றினாள். தாய்க்காரி டிரங்க் பெட்டியைத் தூக்கிப் போனாள். பிறகு அந்தத் தகுதி மகளுக்குத்தான் உண்டு என்பதுபோல், அதைச் சுயம்புவிடம் நீட்டினாள். பிறகு தன் கொண்டை மாதிரி உள்ள சாக்கு மூட்டையின் முனையைப் பிடித்துத் தூக்கிக்கொண்டாள். இருவரும் ஒசைப்படாமல் படியிறங்கினார்கள். ஒரு சைக்கிள் ரிக்ஷாவைப் பிடித்து பஸ் நிலையம் வந்தார்கள். திருவள்ளுவர் பேருந்து போர்டும், அதன் படமும் தொங்கிய இடத்தருகே வந்தார்கள். பெண்கள் கூட்டத்தில் சந்தேகம் வரவில்லை. ஆனால், சில சில்லறைப் பயல்கள் சுற்றிச்சுற்றிச் வந்தார்கள். தாய்க்காரி சுயம்புவை எச்சரித்தாள். “ஒன் தலை ஒரு மாதிரி இருக்கதைப் பார்த்துட்டு அந்தப் பயலுவ கண் சிமிட்டுறானுவ பாரு... தலையில முக்காடு போட்டுக்கடி என்ன அதிசயம் பாரு... ஆம்பள உடையில் இருந்தால், ஒனக்குக் கஷ்டம்... பொம்பள உடையில இருந்தால் அவனுவளுக்குக் கஷ்டம்... காலை கைய நல்லா.நீட்டிப் படு மவளே... திருவள்ளுவர் பஸ்கூட லேட்டா வருமாம்... ஏதோ இந்தி - எதிர்ப்பாம்... நாம என்ன கோட்டைக்கா போறோம். கழுதப் பய பஸ்ஸு எப்ப வேணுமுன்னாலும் வந்துட்டுப் போகட்டும்.” சுயம்பு முக்காடிட்டு அப்படியே அற்றுப் போனான். இதற்குமேல் எதுவும் இல்லை என்பது மாதிரி ஒரு சுமை வரும்போது வருமே ஒரு தூக்கம் அப்படிப்பட்ட பெருந் தூக்கம். கண்ணிமைகளை இருபுறமும் இழுத்துப் பிடிக்கும் தூக்கம். இரவில் அப்படி அப்படியே நின்ற பஸ்கள், அந்த பஸ் நிலையத்திற்கு விடியலைக் காட்டும் சேவல்கள் போல் கொக்கரக்கோ போட்டன. அவளுக்கு சுயம்புவின் பெருந் தூக்கத்தைக் கலைக்க மனம் வரவில்லை. முகத்தைக் கழுவி விட்டு திருவள்ளுவர்காரனிடம் இரண்டு டோக்கன்களை வாங்கிக்கொண்டாள். ஒரு தேனிர் கடைப்பக்கம் போன போது, சுயம்புவும், அவளோடு சேர்ந்து கொண்டான். மகளிர் பக்கம் போனால் பெண்களின் கூச்சல், சுயம்பு ஒசைப்படாமல் ஒரு புதர்ப்பக்கம் போனான். அப்படியும் இப்படியுமாய் காலை மணி ஒன்பதைத் தாண்டிவிட்டது. “எத்தான்...” சுயம்பு திரும்பிப் பார்த்தான். அவன் அவசர அவசர மாய்க் கேட்டான். “எங்க அக்கா எப்படி இருக்காள் மலரு. ஒருவேள மாப்பிள்ளை மனம் திருந்தி வந்திருப்பாரோன்னு ஒரு ஆசை...” “எல்லாருடைய ஆசையையும் தான் பொடிப் பொடியா ஆக்கிட்டீங்களே... சரி சரி என் லெட்டரைக் கொடுங்க... என் புத்திய எதையோ கழட்டி அடிக்கணும்...” “லவ் லெட்டரைத்தானே. நான் அங்கேயே கிழிச்சுப் போட்டுட்டேனே... சத்தியமா நம்பு மலரு. எனக்கு அதனால என்ன பிரயோசனம்...” சுயம்பு, இன்னொரு உருவத்தை அடையாளம் கண்டு கேட்டான். “அது என் தங்கச்சி மோகனா இல்ல? அவள் பக்கத்தில... அவன் யாரு...” “லவ்வரு. ரெண்டு வருஷ லவ்வரு. உங்கள மாதிரி எலெக்ட்ரானிக் ஸ்டூடண்ட்... படிப்பை இடையில விடாதவன். பிடிச்சாலும் பிடிச்சாள் புளியங்கொம்பாய் பிடிச்சா...” “என் தங்கச்சிய கண்கலங்காம காப்பாத்துவானா?” “அதை நீங்க சொல்லப்படாது...” சுயம்பு தானே வேண்டுமென்றே புடவையைக் கட்டிக் கொண்டு படிப்பையும் விட்டுவிட்டது போன்று அவள் பேசினாள். அவனை அருவருப்பாய் பார்த்தபடியே மோகனா நின்ற பக்கம் போனாள். அந்த வாலிபனிடம் இவனைக் காட்டிப் பேசினாள். உடனே அந்த வாலிபன் ஸ்தம்பித்தான். மோகனாவிடம் எதை எதையோ கேட்டான். அவள், தட்டுத் தடுமாறிப் பேசிக்கொண்டே போனாள். அவன் அதட்டுவது போல் தலையை ஆட்டினான். உடனே அவள் அழத் துவங்கினாள். அவள் கழுத்தும் வாயும் வெட்டு வந்ததுபோல் மேலும் கீழும் ஆடியது. சேலை கட்டிய சுயம்புவால் தாங்க முடியவில்லை. நேராக அவர்கள் பக்கம் போனான். வாலிப மிடுக்கோடு அதற்குரிய உடையோடு பயில்வான் போல் நின்ற அந்த வருங்கால மச்சானிடம் கெஞ்சினான். “நான் இப்படி ஆயிட்டனேன்னு என் தங்கைய கை விடாதீங்க... ஏதோ என் போதாத காலம். என்னால ஒங்களுக்கு சிரமம் இருக்காது. நான் திரும்பி வரவே மாட்டேன் மாப்பிள்ள...” “ஒங்க ஊருப் பக்கம் இப்படி ஏதோ நடந்தது தெரியும்... ஆனால், அது ஒங்க வீட்ல என்கிறது எனக்குத் தெரியாது. இவள் எதுக்காக என்கிட்ட மறைக்கணும்? இதை மறைத்தவள் நாளைக்கு எதை எதையோ மறைப்பாள் இல்லியா, மலரு?” சுயம்பு கையைப் பிசைந்தான். கையெடுத்துக் கும்பிடப் போனான். அப்போது கூட்டம் கூடுவது போலிருந்தது. திருவள்ளுவர் பஸ்ஸும் வந்துவிட்டது. தாய்க்காரி குரல் கொடுத்தாள். “மகளே... மகளே... வா மகளே...” பல்லைக் கடித்துக்கொண்டிருந்த மோகனா கத்தினாள். “போய்த் தொலையேண்டா. அக்காவையும் ஒரு வழி பண்ணிட்டே... என்னையும் ஒரு வழி பண்ணிட்டே! இதுக்குமேல யார வழி பண்றதுக்காக நிக்கே. ஒன்ன இப்படி பட்டப்பகல்ல சேலை கட்டிக்கிட்டு யாரு நிக்கச் சொன்னது: அந்தத் துணி ஒனக்கு சேலை. அதுவே எனக்கு பாடை! தூ...” சுயம்பு, ஓடினான். மெள்ள நகர்ந்து கொண்டிருந்த அந்த பஸ்ஸின் பின்னால் தலைதெறிக்க ஓடினான். வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|