2

     சுயம்பு, கத்திக் கத்திக் களைத்துப் போனான். அப்பாவையும், அம்மாவையும், திட்டித் திட்டி அலுத்துப் போனான்.

     அந்தப் பெட்டிமேல் அவலத்தின் அவலமாக உட்கார்ந்திருந்தான். சவுக்குத் தோப்பில் ஊளையிட்டுக் கொண்டிருந்த நரிகள், அவன் இதுவரை கத்திய கத்தலை சக்தி வாய்ந்த ஒரு மிருகத்தின் கர்ஜனையாக நினைத்து அங்குமிங்குமாய்ச் சிதறின. ஆனால் இப்போது அவன் தலையில் கைவைத்து, தானே தானேயாய், தன்னந்தனியாய் உட்கார்ந்திருப்பதை உணர்ந்து, கால் கிலோ மீட்டர் தொலைவு வரை நெருங்கி அவனைப் பார்த்து அரைவட்டம் போட்டன. ஆனாலும் அவன் அவ்வப்போது கத்தினான். ‘அம்மா’ என்ற கத்தல் ‘அப்பா’ என்ற அலறல், வார்த்தைகளை வரவழைத்தும், வந்தவற்றை வெளியே துப்புவது போலவும் அவன் கத்தியபோது பின் வாங்கும் நரிகள், அவன் அமைதியாகும் போது நெருங்கப் பார்த்தன. பொதுவாக ஆள் வாடைக்கே பயப்படும் அந்த நரிகள், அவனையும், ஒரு ஆறு மாதக் குழந்தையாக இளக்காரமாய்ப் பார்த்தன. எக்காளமாய் ஊளையிட்டன. என்றாலும் சுயம்பு இப்போது அந்தப் பெட்டி மேலே படுத்துக் கால்களைத் தரையில் போட்டுப் போட்டுக் குதிக்க விட்ட போது, அந்த நரிகளுக்கு ஒரு பெரும் அச்சம். எதிர்த்திசையில் ஓடின.

     இதற்குள், அந்தக் கொடூர இருளை இரண்டாய்க் கீறுவது போல், ஒரு லாரி ஒளிக்கற்றைகளோடு அங்கே வந்து லேசாய் நொண்டியடித்தது. சுயம்பு தன்னைத் தானே குறுக்கிக் கொண்டு ஈன முனங்கலாய் முனங்கியதைப் பார்த்த டிரைவர் ஆக்ஸிலேட்டரை அழுத்தினார். அவர் அனுமானப்படி, அவன் சரியான ஆக்ஸிடெண்ட் கேஸ். எந்த வண்டியோ அடித்துவிட்டுப் போய்விட்டது. எடுத்துப் போட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தால் அப்போது பார்த்து போலீஸ் வரும். ‘இதனால்தானே நடு ராத்திரியில் துள்ளத் துடிக்க ரோட்டில் கிடக்கும் மனிதர்கள் மீதும் வண்டிகள் ஏறிக்கொண்டே ஓடுது...’ லாரி டிரைவர் தன்னைத்தானே மெச்சிக் கொண்டார். அவன் மேல் லாரியை விடாமல், வண்டியை ‘ஒடித்து’ ஓட்டியதே, தான் செய்த மிகப் பெரிய சேவை என்பது போல், அந்த வாகனத்திற்குள் உட்கார்ந்தபடியே ஓடி, பிறகு தலைமறைவானார்.

     அந்த லாரியின் ஒளிக்கற்றைகளாலோ, அல்லது அது போட்ட தகர டப்பா சத்தத்தினாலோ, சுயம்பு எழுந்தான். கால்களை மாற்றி மாற்றி, தரையில் மிதித்தான். அம்மாவை நேருக்கு நேராய்ப் பார்த்து இரண்டு திட்டுத் திட்ட வேண்டும் போலிருந்தது. தட்டிக் கேட்க அப்பா வந்தால், அவரையும் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்ற கோபம்... கடும்கோபம்.

     சுயம்பு, பெட்டியை எடுத்து வலது தோளில் போட்டுக் கொண்டான். அவலத்தை ஆத்திரம் துரத்த, அவன் எதிர் திசையை ஏக்கத்தோடு பார்த்தான். ஒரு ஒளி வட்டத்தைப் பார்த்துவிட்டு, அது வருவது வரைக்கும் காத்திருக்க விரும்பாதது போல், அதை நோக்கி ஓடினான். அதன் மேல் மோதப் போவது போல், மூச்சு முட்ட, தாவினான். அந்த லாரி படாத பாடுபட்டு, அவன் மீது மோதாக் குறையாய் நின்றது. டிரைவர் கத்தினார். “உனக்கு அறிவிருக்கா? சைடுல நின்னு கையாட்டினால் நிறுத்த மாட்டேனா? சரி... சரி... ஏறு... காசு... இருக்குல்ல...”

     அந்த லாரியின் பின்பக்கம் உள்ளே இருப்பதைக் காட்டாத தார்ப்பாய் மேல், பத்துப் பதினைந்து பேர் ஒருவரை ஒருவர் ஆதரவாய்ப் பிடித்தபடி கும்பலாய்க் கிடந்தனர். டிரைவருக்குப் பின்னால் உள்ள நீண்ட பெஞ்சில் ஏழெட்டுப் பேர். இவர்கள் போதாது என்பது போல் கீழே, ஆறு பேர் மூட்டை முடிச்சுகளாய் சுருங்கிக் கிடந்தார்கள். சுயம்புவை ‘கேபினில்’ ஏற்றுவதா, அல்லது பின்பக்கம் அனுப்புவதா என்று யோசித்த டிரைவர் அவனை அசைபோட்டுப் பார்த்தார். பிறகு அவன் பாண்ட் சட்டை போட்டிருப்பதைப் பார்த்து, கேபினுக்குள் ஏற்றும்படி கிளீனருக்கு சைகை செய்தார். உடனே, அந்த வண்டிக்கு ஒரு காது இருப்பது போல கதவு திறந்தது. சுயம்பு, டயர் சக்கரத்தில் கால் பதித்து மேலே ஏறிக் கொள்வதற்காக, கிளீனர் கையை வெளிப்பக்கம் நீட்டினான். அந்த இருக்கை அறைக்குள் ஒளிர்ந்த விளக்கில் வெளியே தெரிந்த கையை சுயம்பு பார்த்தான். அது உருண்டு திரண்டு, ஒவ்வொரு விரலும் ஒரு இரும்புக் குச்சியாய்த் தெரிந்தது. அதைப் பற்றிக் கொள்ள ஆசையோடு கையை நீட்டிய சுயம்பு, பிறகு கூச்சத்தோடு, நீட்டிய கையை மடக்கிக் கொண்டான். ஆனாலும், கிளீனரின் கை அவனை ‘கிளீனாக’ உள்ளே இழுத்து பெஞ்சில் போட்டது. பிறகு அவனிடம் ‘சகட்டு மேனிக்கு’ இருபது ரூபாயை வாங்கி டிரைவரிடம் கொடுத்தது. அவர் அதை சிகரெட் மாதிரி உருட்டி, காதில் சொருகிக் கொண்டார். இப்படி இரண்டு காதுகளிலும் பல சொருகல்கள்.

     அந்த லாரி, முன்னால் சூழ்ந்த இருளைக் கொலை செய்தபடியே ஓடியது. பின்னால் கூட்டத்தில் இடிபட்ட சுயம்பு, பாதி உடம்பைத் தனது மடிமேல் போட்டபடி தன் முகத்தை முகத்தால் இடித்துக் கொண்டு தூங்கியவனை, நோட்டம் போட்டான். அவன் உருண்டு திரண்ட தோளையும், வலைப் பனியனுக்குள் திமிறிக் கொண்டிருந்த மார்பையும் பார்த்து, தலையைத் தாழ்த்திக் கொண்டான். களைப்பில் தன் தலையை அவன் மார்பு மீதும் சாத்திக் கொண்டான். ஒரு சில நிமிடங்கள், அந்த லாரி விட்டு விட்டு வரும் மரம் செடி கொடிகள் போல், அவன் மன உளைச்சல்களும், நின்று விட்டது போன்ற ஏகாந்த உணர்வு. திடீரென்று பழைய உளைச்சல்களும் பஸ்ஸில் பட்ட பாடும் அவனுக்குள் புதிய சுமையாக கனத்தன. அந்த மனித நெருக்கடிக்குள் அங்குமிங்குமாய் நெளிந்தான். ஒவ்வொரு உராய்விலும் ஒருவிதமான கூச்சம். இனிமேலும் இருக்க முடியாத பதற்றம். அவன் அழுதழுது கத்தினான்.

     “என்னை எறக்கிடுங்க... எறக்குறீங்களா... எழுந்து குதிக்கட்டுமா?”

     டிரைவர், அவன் சொன்னதைக் காதில் போடாதது போல், வண்டியைப் போக வைத்த போது, சுயம்பு இருக்கையை விட்டு எழுந்தான். உடனே அவர் கோபமாக பிரேக்கை அழுத்திக் கொண்டு ”ஒப்பன வீட்டு வண்டி மாதிரி ஏறுறது... அப்புறம் ஒம்மா வீட்டு வண்டி மாதிரி இறங்குறதா? இந்தாடா மோகன்... இந்த சனியன்கிட்ட வாங்குன ரூபாய மூணு தடவை தலையை சுத்தி கொடுத்திடு... இந்தா ரூபா. சரியான சாவுக் கிராக்கி...” என்றார். அந்த மெட்ராஸ் டிரைவரிடம் ரூபாயை வாங்கிய மதுரை கிளீனர் மோகன், ரூபாயும் கையுமாய் மூன்று தடவை, தனது தலையைச் சுற்றி உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு, சுயம்புவின் கையை சும்மாத் தொட்டுவிட்டு சந்தடிச் சாக்கில் அந்தப் பணத்தை பைக்குள் வைத்துக் கொண்டான். பிறகு, உள்ளங்கையை விரித்து சுயம்புவின் கையைப் பிடித்து இழுத்து அவனைக் கீழே குதிக்க விட்டான்.

     சுயம்பு, போகிற லாரியைப் பொருட்படுத்தாமல் கூனிக் குறுகி நின்றான். ஓடுகிற லாரியிலிருந்து ஒன்று டமாரென்று கீழே விழுந்தது. அப்படிப் பிணமாய் விழுந்த சூட்கேஸை அவன் எடுத்துக் கொண்டான். வழக்கம் போல் அதைப் பின்புறமாய்க் கொண்டு வந்தான். பிறகு அதைத் தொப்பென்று போட்டுவிட்டு, ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான். வாயிலும் தலையிலும் மாறி மாறி கைகளால் அடித்துக் கொண்டான். அடித்த களைப்பிலும், அடிபட்ட களைப்பிலும், சிறிது நிதானப்பட்டான். மீண்டும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு, நான்கு திக்கையும் பதினாறு கோணங்களாகப் பார்த்தான். எங்கேயாவது ஓடிப் போகலாமா? எப்படிப் போக முடியும்? பஸ்ஸில் கிடைத்தது மாதிரித்தான் உதை கிடைக்கும். லாரியிலிருந்து பெட்டியைத் தூக்கிப் போட்டது போலத்தான் தூக்கிப் போடுவார்கள். ‘அய்யோ... ஏன் தான் பிறந்தேனோ? எப்படித்தான் இப்படி ஆனேனோ?’

     திடீரென்று அவனுள் ஒரு அசுர வேகம். அவன் நிலைக்கு அவன் காரணமில்லை என்ற கண்டுபிடிப்பு. அதற்குக் காரணமானவர்களைக் காண வேண்டுமென்று ஆவேசம். அக்காவின் கழுத்தைக் கட்டி ஆறுதல் பட வேண்டுமென்ற ஆசை. எந்த வீட்டில் பிறந்தானோ, அந்த வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டுமென்ற வைராக்கியம்.

     சுயம்பு, மூர்க்கத்தனமாக நடந்தான். அந்த நடையில் பெட்டிச் சுமை பெரிதாகத் தெரியவில்லை. அந்தத் தார்ச் சாலையில் நடுப்பக்கமாகவே நடந்தான். ஓடினான். ஓடி ஓடி நடந்தான். நேரம் நீண்டாலும், அவன் உட்காரவில்லை. கால்களை நத்தை வேகத்திலாவது நகர்த்திக் கொண்டிருந்தான். அவன் வாய்மூச்சு காற்றோடு காற்றாய் கலந்தது. அவன், அவ்வப்போது போட்ட கூச்சல் நரிகளின் ஊளையோடு ஒரு ஊளையாகியது. செருப்பைத் தேய வைத்து, அதன் மேல் கால் தேய நடந்தான். காலதூர கனபரிமாணங்களைக் கடந்தவன் போல், நடப்பதற்காகவே நடப்பது போல், நடந்தான். ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்பது போல் துஷ்ட மிருகங்கள் கூட அவனைப் பார்த்துப் பதுங்கின. துஷ்டத்தனமான லாரிகள் கூட அவன் அருகே பரம சாதுவாகப் போயின. ஒரு காரில் போன இன்ஸ்பெக்டர் ஒருவர் கூட, ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாதவர் போல், அவனைப் பார்த்து, திடுக்கிட்டு, மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ‘கண்டுக்காமலே’ போனார். அவன், கொள்ளையடித்தவன் போலவும், கொள்ளை அடிக்கப்பட்டவன் போலும், நடந்தான். சவுக்குக் காடுகளைத் தாண்டி, மொட்டை வெளிகளைக் கடந்து, மலை ரோட்டில் சரிந்து, கால்கள் இருப்பதே தெரியாமல், வலி என்ற வாதையில்லாமல், மூச்சு விடுவதே தெரியாமல், மூர்ச்சையாகாமலே நடந்தான். சித்த புருஷன் போலவும் செத்த புருஷன் போலவும் முப்பது கிலோ மீட்டருக்கு மேலே நடந்து விட்டான். இந்த அசுர நடைக்கு சாட்சியாக கால்கள் வீங்கிப் போயிருந்தன. கண்கள் அபாயக் கலரில் எரிந்து கொண்டிருந்தன. பெட்டி உரசி, உரசி இடுப்பின் இரு பக்கம் ரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன.

     அந்தத் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குப் பிரியும் கப்பிச்சாலை வழியாக ஊர் முனைக்கு வந்ததும், அவனுக்கு உதறல் வந்தது. அந்தப் பக்கமுள்ள சமூகக்காடு எதுவுமே இல்லாத சூன்யக் கருப்பாகத் தெரிந்தது. சூரிய ஒளியைக் கூட பிடித்துப் பிடித்து உண்டு விட்டு, இருட்டு இருட்டாய் ஏப்பமிடும் ஆயிரக்கணக்கான கருவேல மரங்களின் அடிவாரங்களில் பல இடங்களில், ‘காய்த்தல்’ தொழில் மட்டும் நடந்து கொண்டிருந்தது. அவன், அந்தக் கருவேலங்காட்டைத் தாண்டி, ஆதி திராவிட மக்களின் தொகுப்பு வீடுகளின் பக்கம் வந்தான். அந்த வீடுகளை ஒரு குடும்பத்தில் பிறந்த மகன்களும் ‘மகள்களும்’ ஒட்டு மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டதால், அவை தேவைப்பட்ட, அதே இனமக்கள் கைவேறு கால் வேறாகத் தூங்கிக் கொண்டிருந்த புளியமர அடிவாரத்தின் வழியாக நடந்தான். அங்கிருந்து, மரமில்லாத ஒரு மொட்டை மலைக்கும், மழையில்லா அந்த ஊருக்குமிடையே ‘ஓடும்’ மணல்வாரி ஓடை வழியாக, கால்களை நடத்தி கிழக்குப் பக்கம் சுற்றி, அங்கிருந்து மேற்குப் பக்கம் போனான். தெரு நாய்களின் குலைப்பையும் பொருட்படுத்தாமல் வேப்பமரம் கடை விரிக்க, ‘வைக்கோல் படப்பு’ வெள்ளைக் குகையாய்த் தோன்ற, தனது வீட்டருகே வந்தான். அந்த வீடு பண்ணைச் சேவகம் செய்யும் ஓலை வீடாகவும் இல்லை; அல்லது பண்ணையார்த்தனத்தைக் காட்டும் பளிங்குக்கல் வீடாகவும் இல்லை. சுயசார்பைக் காட்டும் சுமாரான வீடு.

     சுயம்பு, வீட்டுக்குள் நுழைய மனமில்லாமல் கூட்டுக்குள் நுழைய விரும்பாத கோழிக் குஞ்சு போல், அந்த வேப்ப மரத்தில் சாய்ந்து கிடந்தான். அப்போது எதிரித்தனமாய்க் குலைத்தபடியே அந்த வீட்டிலிருந்து ஒரு ‘குட்டி ராஜபாளையம்’ சீறி வந்தது. ஆறு மாதக்குட்டி அவனைப் பார்த்ததும் செல்லமாய்ச் சிணுங்கியது. வாலை பின் கால்களுக்கு இடையே வைத்துக் கொண்டு தூசி படிந்த அவன் கால்களையும், கரங்களையும், நாக்கால் ஒட்டடையடித்தது. பிறகு அவன் வருகையைச் சொல்வதற்காக, அவன் வீட்டை நோக்கி ஓடப் போனது. சுயம்பு கீழே குனிந்து, அந்தக் குட்டியை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அது சத்தம் எழுப்பாமல் இருக்க அதன் இரண்டு தாடைகளையும் மூடி, அதன் முனையைப் பிடித்துக் கொண்டான்.

     அந்த நாய்க்குட்டியின் சீற்றக் குலைப்பாலோ அல்லது செல்ல முனங்கலாலோ, ஏற்கெனவே இரவு முழுவதும் தூங்காமலும், விழித்திருக்காமலும், பாயில் சும்மா புரண்ட மரகதம், வெளியே வந்தாள். ஏதோ ஒரு புரியாத சுமையைப் பிறருக்குத் தெரியாமல் சுமப்பது போல் உச்சி முடி சிலிர்த்து நிற்க நின்றாள். சுயம்புவிற்கு, நான்கு ஆண்டுகள் மூத்தவள். ஒரு வட்டத்திற்குள் அடங்கும் முகம். வெள்ளொளி வீசும் கண்கள். எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது போன்ற தோரணை. அழுத்தம் திருத்தமான உடம்பு, தட்டையாக இல்லாமல், உருண்டு திரண்ட மார்பகம், பழுத்த - அதேசமயம், காயப் போடாத மிளகாய் நிறம்.

     மரகதத்திற்கும், ஒரு பெரிய பிரச்னை. அவளை, அத்தை மகனுக்குக் கொடுப்பதா அல்லது தாய் மாமா மகனுக்குத் தாரை வார்ப்பதா என்று அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே, நடுவர் இல்லாத ஒரு பட்டிமன்றம். ஆகையால் இப்போது இருவருமே பேசிக் கொள்வதில்லை. கடைசியில் மாமா மகன் இன்னொரு பெண்ணையும், அத்தை மகன் அடுத்த பெண்ணையும் கட்டிக் கொண்டதுதான் மிச்சம். உடனடியாக அப்பன்காரன் நாலைந்து பெரியவர்களோடு ஐம்பது கிலோ மீட்டருக்கு அப்பால் பேச்சு நடத்தப் போனார். மறுவாரமே, ஒரு ஜீப்பில் ஒரே ஒரு பெண்ணும், ஆறு ஆண்களும் ஒன்று திரண்டு வந்து, அவளுக்குப் ‘பூ’ வைத்து விட்டுப் போய்விட்டார்கள். பெண் கொடுக்கல் - வாங்கலில், பெரும்பாலும் உள்ளூரைத் தாண்டாத அந்த “சுய மகரந்த சேர்க்கை” ஊராருக்கு இந்த ஐம்பது கிலோ மீட்டர் தூர மாப்பிள்ளையே ஒரு அதிசயம். ஆனால், மருவியவள் மரகதம்தான். மாப்பிள்ளை எப்படியோ? கூனோ? குருடோ? நொள்ளையோ? வெள்ளையோ? அவனது சொந்தக்காரர்கள் யாரும், இந்த ஊரில் இல்லாததால், அவன் எப்படி என்று அறிய முடியவில்லை. ஆகையால், முகமறியா ஒருத்தனிடம் முந்தானை விரிக்கப் போகிறோமே என்ற பயம். இடமறியா வீட்டில் இடறி விழப்போவது போன்ற தடுமாற்றம். இந்தச் சமயத்தில் தான், பதினைந்து நாட்களுக்கு முன்பு வந்த, தம்பி சுயம்பு, மாப்பிள்ளை ஊர் வழியாய்ப் போய் ‘பையனை’ப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனான். “எக்கா, மாப்பிள்ளை மட்டும் எனக்குப் பிடிக்கலன்னா இந்தக் கலியாணத்தையே நடத்த விடமாட்டேன். நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டுப் போனவன் இதோ திரும்பியிருக்கிறான்...

     மரகதம், தம்பியைப் பார்த்து நாணத்துடன் சிரித்தாள். காதுகள் நிமிர தலை கவிழ்ந்து நின்று அவன் பக்கமாக, கண்களை மட்டும் உயர்த்தினாள். அப்படியும் அவன் பதில் பேசாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தோடு நிமிர்ந்தாள். அவனைப் பார்க்கப் பார்க்க அவள் முகம், சுழிப்பானது; சுண்டிப் போனது. கால்கள் தம்பியை நோக்கித் தாமாய் நகர்ந்தன. என்ன கோலம் இது? முகத்தில் ரத்தக் கீறல்கள்; வாயில் ரத்தச் சிதைவுகள், மரகதம் பதறினாள்.

     “தம்பி... தம்பி... என்னடா ஆச்சு? என்னடா ஆச்சு?”

     வயதளவில் நான்கு ஆண்டுகள் இடையில் நின்றாலும், உறவளவில் முப்பதாண்டு இடைவெளி கொடுக்கும் தாய் மாதிரியான அக்காவைப் பார்த்ததும், சுயம்புவால் தாளமுடியவில்லை. அவள் மேல் காலற்றவன் போல் சாய்ந்தான். இதனால் நிலை தடுமாறிப் போன மரகதம், வேப்ப மரத்தூணைப் பிடித்து, தன்னைச் சரிக்கட்டிக் கொண்டபோது, அவன் அக்காவின் கழுத்தைக் கட்டிப் பிடித்து அவள் தலைக்கு மேல் தன் தலையைப் போட்டு, ‘அக்கா... அக்கா’ என்று அரற்றினான். அந்த ஒரே வார்த்தையில், தனது உடல், பொருள், உயிர், அத்தனையும் வைத்திருப்பது போல் ஓலமிட்டான். ஆரம்பத்தில் செய்வதறியாது திக்குமுக்காடிய மரகதம், தன்னை, மனத்தாலும் நிலைப்படுத்திக் கொண்டாள். அவன், முதுகைத் தட்டிக் கொடுத்து, “எதுன்னாலும் அழாதடா...” என்று தைரியம் சொல்லியே, பயப்பட்டாள். உடனே ஒரு சிந்தனை. அந்த மாப்பிள்ளை பிடிக்காததை, அவன் இந்த வீட்டுக்கு வருவதைத் தடுக்க முடியாத இயலாமையில், தம்பி இப்படி அழுகிறானோ என்று ஒரு அனுமானம். அந்த நினைப்பும் அற்றுப் போக அவள், தம்பியின் முகத்தை முந்தானையால் துடைத்து, ரத்தக் கறைகளை அகற்றியபோது-

     அந்த வீட்டு வாசலை அடைப்பது போல், நான்கைந்து பேர் ஒன்று திரண்டு நின்றார்கள். பிறகு ஒவ்வொருவராய் வெளியே வந்தார்கள். தாய் வெள்ளையம்மா, மகள் மரகதத்தைத் தள்ளிவிட்டு, மகனைத் தன் மார்பில் சாய்க்கப் போனாள். அவனோ அம்மாவைத் தள்ளிவிட்டு, அக்கா மேல் மீண்டும் சாய்ந்தான். பழுத்த பனம் பழத்தைக் கொத்திப் போட்டது போல், முகத்தில் சின்னச் சின்னச் சுருக்கங்களைக் கொண்ட வெள்ளையம்மா, மகனைச் சுற்றிச் சுற்றியே வந்தாள். ‘அய்யையோ... என் பிள்ளைக்கு என்ன ஆச்சோ?’ என்று சராசரிக் குரலை விட அதிகமாகக் கத்தினாள். எதுவும் புரியாமல் பக்கத்தில் நின்ற மூத்த மகன், ஆறுமுகப் பாண்டியின் கையைப் பிடித்து வைத்துக் கொண்டு, ஆறுதல் தேடுகிறவள் போல் அவனைப் பார்த்தாள். ஒரு குழந்தையை இடுப்பிலும் ஏழு வயதுப் பயலை கையிலும் வைத்துக் கொண்டு நின்ற கோமளம், மைத்துனனை வைத்த கண் வைத்தபடி பார்த்தாள். இதற்குள், இடுப்புக் குழந்தை அம்மாவின் கால் வழியாக இறங்கி, அண்ணன் பயல் உதயகுமாரின் தலையை ஆனந்தமாய் மிதித்து, சுயம்புவின் பக்கம் போய் ‘செத்தப்பா, செத்தப்பா’ என்றது, இரண்டு வயதுக் குழந்தை. அப்போது அந்த வார்த்தை அபசகுனமாய் ஒலித்தது. தாய்க்காரி குழந்தையின் வாயை ஒரு கையால் மூடி மறுகையால் இழுத்துப் பிடித்தாள். ஆனால் அண்ணியிடம் இழுபட்ட அந்தக் குழந்தையை, சுயம்பு தன் பக்கமாய் இழுத்துக் கொண்டு அதன் தலையைத் தன் கழுத்திற்குள் வைத்துக் கொண்டு, “நீ சொன்னது மாதிரி செத்துட்டேம்மா... சித்தப்பாவா செத்துட்டேன்” என்று அழுதான். அவன் அழுகைக்குத் தங்கைதான் காரணம் என்பது போல், ஏழு வயது உதயகுமார், எழுந்து போய், அதன் தலையைக் குட்டினான். குடும்பத்தினர் எல்லோரும் சுயம்புவை அதிர்ந்து பார்த்தார்கள். ஆறுமுகப்பாண்டி, எதுவும் புரியாமல் மனைவி கோமளத்தைப் பார்க்க, பதிலுக்கு அவள் அவனையே பார்த்தாள். அந்த வேப்பமரத்திற்குச் சிறிது தொலைவில் உள்ள வாதமடக்கி மரத்தூரில் உட்கார்ந்திருந்த கணவனை ஓரங்கட்டிப் பார்த்தபடியே, வெள்ளையம்மா சாடையாகப் பேசினாள்.

     “இப்படிக் குத்துக்கல்லு மாதிரி எதுக்காக நிற்கணும். பெத்த பிள்ளை பொறி கலங்கி வந்திருக்கான். என்னடா ஆச்சுன்னு ஒரு வார்த்தை கேட்கப்படாதா?”

     பிள்ளையார், கையிலிருந்த சுருட்டு, விரல் இடுக்கை எரிப்பதை உணரவில்லை. அந்த இரண்டு விரல்களும் செந்நிறமாகி, பிறகு வெண் தழலாய் மாறியதை அறியவில்லை. வழக்கம் போல் கம்பீரம் கலையாமல், ‘பெரிய மகன்’ ஆறுமுகப் பாண்டியனைப் பார்த்து, கேட்டார்.

     “ஏண்டா பெரியவன்... இவன் எதுக்காக வந்தானாம்? எதுக்காவ அழுவறானாம்?”

     சுயம்பு அழுகையை நிறுத்தினான். அந்த வாதமடக்கி மரம்போல் உறுதியாகவும், அதன் பட்டைகள் போலச் சிற்சில சுருக்கங்களாகவும் தோன்றிய தந்தையைக் குற்றம் சாட்டும் தோரணையில் பார்த்தான். பிறகு தந்தையைப் பார்க்காமலே, வீறாப்பாக பதிலளித்தான்.

     “நான், இனிமேல் காலேஜுக்குப் போகமாட்டேன். போகமாட்டேன்னா போகமாட்டேன்...”

     எல்லோரும் ஆடிப் போனார்கள். பிள்ளையார் அவன் பக்கத்தில் அதட்டலோடு வந்து நின்றார். ஆறுமுகப் பாண்டி கோபமாக ஏதோ பேசப்போக, அவன் மனைவி கோமளம் கணவனை இதமாகப் பிடித்துக் கொண்டாள். ‘பிளஸ்-ஒன்’ தங்கையை அந்த எதிர்கால எலெக்ட்ரானிக் எஞ்சினீயருடன் ‘கனெக்‌ஷன்’ கொடுக்க நினைத்திருப்பவள். ஆகையால் மைத்துனன் மீது ஒரு வாஞ்சை. பாம்பும் சாகாமல் பாம்படித்த கம்பும் நோகாமல் எப்படிப் பேசுவது என்று, அவள் யோசித்துக் கொண்டிருந்த போது, பிள்ளையார், எங்கேயோ பார்த்தபடி அதட்டினார்.

     “எருதுக்கு நோவாம். காக்கைக்குக் கொண்டாட்டமாம்... இப்போவாவது கண் குளிர்ந்து மனம் குளிர்ந்தால் சரிதான்.”

     பிள்ளையார் பார்த்த வைக்கற்போரிலிருந்து, அவரது தம்பியும், தம்பி பெண்டாட்டியும் விழுந்தடித்து ஓடினார்கள். தம்பிக்கும் அவருக்கும் தீராப் பகை. இரு தடவை கோர்ட்டிற்குப் போனவர்கள். பிள்ளையார், பேசி முடித்ததும், மனைவிக்காரி வெள்ளையம்மா அவருக்கு ஒத்தாசை செய்தாள்.

     “கொள்ளிக்கட்டைக் கண்ணுங்க, என் பிள்ளைமேல பட்டுப்பட்டு, பாவிப்பய பட்டுப் போயிட்டான்.”

     இன்னொரு ‘பொம்பளச் சண்டையை’ இழுக்க விரும்பாத பிள்ளையார், “சரி, சரி உள்ளே வாங்க” என்று அதட்டினார். அந்த அதிகாலையிலும் நகத்தைக் கடித்தபடி வெளியே இருந்து வந்த இளைய மகள் மோகனாவை அவர் பார்த்தார். ஆனாலும், அவள் அவர் மனதில் பதியவில்லை. வேறொரு சமயமாக இருந்தால், இதே இந்தப் பிள்ளையார், அவளைக் கொழுக்கட்டை மாவாய்ப் பிசைந்திருப்பார்.

     சுயம்புவை, மரகதம் கூட்டி வருவாள் என்ற அனுமானத்தில் எல்லோரும் உள்ளே போனார்கள். வாசலிலேயே நின்ற அம்மாவைப் பார்த்து, “உன் வேலையப் பார்த்துக்கிட்டு போம்மா... உன்னாலதான் இந்தக் கேடு” என்று சுயம்புவே அதட்டினான். உடனே வெள்ளையம்மாள், “அந்தப் பாவி மனுஷன் என்னைப் பழி வாங்குறதுக்காக கடைசிக் காலத்துல என் கண்ணுல காட்டப்படாதுன்னு, நான் பெத்த மவ மரகதத்த கண் காணாத எடத்துல, பாழுங்கிணத்துல தள்ளுறார்... நீயுமாடா அம்மாவை இப்படிப் பேசறே?” என்று புலம்பிக் கொண்டே நின்றாள். பிறகு மரகதம் ‘போ... போ’ என்பது மாதிரி கையாட்டியதால், அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமென்று உள்ளே போய்விட்டாள்.

     மரகதம், தம்பியின் கையைப் பிடித்து, விரல்களுக்குச் சொடக்குப் போட்டாள். அவன் கலைந்த தலையைச் சரிப்படுத்தினாள். “எந்த வார்த்தை பேசுனாலும் காலேஜுக்கு போகமாட்டேன் என்கிற பேச்சு மட்டும் பேசாதடா” என்றாள். சுயம்புவும் அக்காவின் இரண்டு கைகளையும் எடுத்து தோளுக்கு போட்டபடியே மன்றாடினான்.

     “எக்கா... என்னால காலேஜுக்கு போக முடியாதுக்கா, இந்தத் தங்கச்சியை கைவிடாதக்கா... ஆமுன்னு சொல்லுக்கா... அப்பதான் இந்தத் தங்கச்சி வீட்டுக்குள்ள வருவேக்கா...”

     மரகதம் திகைத்துப் போனாள். என்ன பேசறான்... தங்கச்சி, தங்கச்சின்னு... என்ன வந்துட்டுது இவனுக்கு?