20

     சுயம்பு வழி தவறியவன் போல் அங்குமிங்குமாய் பார்த்தபடியே, அந்த வழியை ஆகாயத்திலும் தேடுவது போல் ‘அம்மா’ காட்டிய வழியில் நடந்தான்.

     சென்னைப் பெருநகரில் மிக முக்கியமான ஒரு சாலையிலிருந்து ஒரு பாதை துள்ளிக்குதித்து மேட்டில் ஏறியது. அதில் ஆட்டோவை நிறுத்திச் சுமைகளைத் தூக்கிக் கொண்டு, தாயும் மகளுமாய் நடந்தார்கள். கூண்டிலிருந்து கீழே விழுந்து பறக்கத் தவிக்கும் காக்கைக் குஞ்சுபோல், தனித்தும் தவித்தும் கிடப்பது போன்ற பகுதி. வெளியே எதுவுமே தெரியாத மதில் சுவர். சர்க்கார் சுவர். தலைவர்களின் பாதுகாப்புக்காக, கட்டப்பட்ட ஓரச்சுவர். அதன் மத்தியில், போனால் போகிறது என்பது போல் ஒரு சைக்கிள் ரிக்ஷா போகக்கூடிய பாதை. அந்தப் ‘பெண்’ சுயம்புவின் கையைப் பிடித்துக்கொண்டு நுழைவாயிலுக்கு அருகே நின்றாள். ஒரு பக்கம் தேநீர்க்கடை மறுபக்கம் லாண்டரிக் கடை. இரு கடைகளின் உரிமையாளர்களுக்கும் ‘வந்துவிட்டேன் பாருங்கள்’ என்பது மாதிரி கண்குலுங்கச் சிரித்துவிட்டு, நடையைத் தொடர்ந்தாள். அவர்கள் லேசாய்த் தலையாட்டிச் சிரித்தார்கள். சைக்கிள் இருக்கையில் உடம்பைப் போட்டு இரு கால்களையும் முன்பக்கம் போட்டு முடங்கிக் கிடந்த ரிக்ஷா மணியை, அவள் அடித்து எழுப்பி விட்டாள். மகளிடத்தில், தனக்கிருக்கும் செல்வாக்கைக் காட்டிக் கொள்வதில் - அதற்காக செலாவணிகளைத் தேடிக் கொள்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே சமயம், அந்த மணி, தன்னைத் திட்டி தனக்கு மகளிடம் ஒரு கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்ற பயம். நல்லதனமாகப் பேசப் போன மணியை, பொல்லாப்பாய் பார்த்தபடியே இன்னொரு வளைவுப் பாதையில் திரும்பி, மளிகைக் கடைக்காரரைப் பார்த்து, கண்களால் குசலம் விசாரித்தாள். வடக்குப் பக்கம் குடிசைகளை எல்லாம் தாண்டி கம்பீரமாக இருந்த ஒரு கட்டிடத்தைப் பார்த்து நடக்கப் போன சுயம்புவை கையைப் பிடித்துத் திருப்பி, சைக்கிள் மட்டுமே தட்டுத் தடுமாறிப் போகக்கூடிய ஒரு சந்துக்குள் இட்டுச் சென்றாள்.

     கோணிகளே, கதவுகளான குடிசைகள், மேல் கூரை போனாலும், அதைப்பற்றிய கவலையோ அல்லது கவலைப்பட்டுக் கவலை இல்லை என்ற தெளிவாலோ, நான்கு மண்சுவர் கட்டிடங்களுக்கு இடையேயே குடித்தனம் செய்கிறவர்கள். ஒற்றைக்கண் பூதம்போல், ஒரு பொந்தையே வீடாய்க் காட்டும், குடியிருப்புக்கள். கரையான் புற்றுமாதிரி ஆங்காங்கே கும்பலாய்க் கிடந்த சின்னச் சின்ன நாலுகால் கூடாரங்கள். இவைகளுக்குள், குச்சிக்கால் குழந்தைகள். வயிறு தள்ளிய பிள்ளைகள். உடம்புகளில் கோடுகள் போட்டது போன்ற நரம்பு மனிதர்கள். அதே சமயம், ஏழ்மை, உடையையும் உடைத்தெறியும் பருவக்காரிகள்.

     சுயம்பு அவள் பின்னால் பீதியோடு நடந்தான். ஓடப்போவதுபோல் திரும்பிப் பார்த்தான். அவளோ, ஆங்காங்கே பாத்திரங்களை விளக்கிக் கொண்டும், பல் தேய்த்துக்கொண்டும், திட்டு முட்டாக நின்ற தேகக்காரர் களிடம் குசலம் விசாரித்தாள். அவர்கள் இது யார் என்று கேட்கமாட்டார்களா என்ற ஆவல். ‘என் மகள்’ என்று சொல்ல வேண்டுமென்ற ஆசை. எல்லோரும் அவளை சிநேகிதத்தோடு பார்த்தார்களே தவிர, பேசவில்லை. பேசுவதற்கு நேரமும் இல்லை.

     அந்தச் சேரிக்குள்ளேயே ஒரு சேரி மாதிரியான பகுதி. அதன் முன்னால், பச்சைப் பச்சையாய் உருண்டை உருண்டையாய் தண்ணிரை மறைக்கும் குட்டை. கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தில், தமிழன் எப்போது மூத்துப் பிறந்தானோ அப்போதே தோண்டப்பட்டது போன்ற ஊத்தக்குட்டை, அதன் மேல் வாசம் செய்த கொசுக்கள், உருண்டை உருண்டையாய் அங்குமிங்குமாய் பறந்துகொண்டிருந்தன. இங்கேயும் குடிசைகள், ஆனால், அந்தக் குடிசைகளைவிட இளைத்துப் போனவை. ஓரிரண்டு தவிர, அனைத்திலும் தவழ்ந்து போக வேண்டும். மரப்பலகையில் சுவர்க் குடிசைகள். தகர நெளிவுகளில், வாழும் இடங்கள். இவற்றிற்கு இடையிடையே எச்சில் தையல் இலைகள். குழந்தைகளின் அசிங்கங்கள்.

     இப்போது அவளையும் சுயம்புவையும், எல்லாக் கண்களும் மொய்த்தன. சுயம்புவை இனங்கண்டு கொண்டவர்கள் போல், அவர்கள் பார்த்த பார்வைக்கும் கேட்ட கேள்விகளுக்கும் ‘என் மகள்’ என்றாள். முக்கிய சிநேகிதர்களிடம் மட்டும் அவனைப் பற்றிச் சிறிது விவரம் சொன்னாள். சிலதுகள், சுயம்புவின் தோளைத் தட்டி குதூகலித்தனர். சிலருக்குப் பொறாமைக.ட வந்தது. ஆனால் அத்தனைபேரும் சுயம்புவோடு சுற்றிச் சுற்றி நடந்தார்கள். வழியில் ஒரு தூக்கலான மேடு. அங்கிருந்த குடிசையிலிருந்து குருவக்கா இறங்கினாள். அந்தக் காலத்து சிரட்டைப் பொட்டு மாதிரியான முகம். அசல் வட்டம். நிதானமான பார்வை, ஆவேசம் கொடுக்காத அழுத்தமான கண்கள். அலி ராணி. அதற்கேற்ற கம்பீரம். சுயம்புவை நோட்டமிட்டாள். அந்தப் பெண்ணிடம் கேட்டாள்:

     “பாவம் பச்சை மதலை... எங்க அலைஞ்சுதுடி...”

     “எங்க ஊருக்கு பக்கத்து ஊருக்கா... நம்மள மாதிரியே அவளுக்கும் சூடு போட்டு சொரணை கொடுத்திட்டாங்க. அதனால என் பின்னாலயே வந்திட்டாள். காலேஜ் படித்திட்டு இருந்திருக்காள்.”

     “அடிப்பாவி... பச்சை மண்ணு, பானையா மாறு முன்னே எடுத்துட்டு வந்திட்டியேடி...”

     “எக்கா எந்தப் பேச்சுப் பேசினாலும் இந்தப் பேச்ச பேசாதே... இங்கயே அஞ்சு வருஷமா இருக்கேன்... இன்னுமா நீ என்னப் புரிஞ்சுக்கலை!”

     “தப்பா நினைக்காதடி பச்சையம்மா. இவள இங்க கொண்டு வரதுக்கு நமக்கு தகுதி இல்லியேன்னுதான் கேட்டேன். சரி மொதல்ல வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ! அப்புறம் ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.”

     சுயம்புவைச் சுற்றி நின்றவர்கள் இப்போது அவனைச் சிறிது, வித்தியாசமாகப் பார்த்தார்கள். பித்துப் பிடித்த அவனை, சித்தம் கலைக்க, சிலர் அவன் சேலையை கையால் இஸ்திரி போட்டார்கள். முகத்தை, முந்தானையால் துடைத்தார்கள். அவனைப் பார்த்து, அங்குமிங்குமாய் அடப்போன ‘ஒருத்தியை’ பலர் இடுப்பில் இடித்தார்கள். குரலைத் தவிர அனைத்துமே பெண்மையின் வெளிப்பாடுகள். அந்தக் குரல்களில் ஒரு சிலதான் தடித்தவை. பூ வைத்த இந்திராக்கள். பொட்டு வைத்த மலர்க்கொடிகள். கண்சிமிட்டும் மோகனாக்கள். இவர்களைப் பெண் கூட்டத்திலிருந்து பிரிப்பது கடினம். இதனால்தானோ என்னவோ, அருகருகே உள்ள சேரிகளில் உள்ள பெண்களில் இருந்து இவர்களைப் பிரிக்க முடியவில்லை.

     பச்சையம்மா தன் மகளைப் பெருமை பிடிபடாமல் பார்த்தாள். அதே சமயம் தோழிகள் போட்ட அச்சச்சோவின் சிறுமையில் சிக்கியும் தவித்தாள். அவள் கிட்டத்தட்ட சுயம்புவை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டே ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்த தனது குடிசைக்குப் போய் கதவைத் திறந்தாள். உள்ளே நோட்டமிட்டாள். வைத்தது வைத்தபடியே இருந்தன. தகரப் பெட்டி செளக்கியமே. நார்க்கூடையும், அதற்குள் இருந்த சில்லறைப் பொருட்களும் நலமே. ஈயப்போணிகள், ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கப்பட்ட பிளாஸ்டிக் குடங்கள். ஏதோ நோய் பிடித்ததுபோல் தூசி துகள்களான ‘கிருமிகளைக்’ காட்டின.

     பச்சையம்மா, மூலையின் இரு சுவர்ப் பிரிவில் சாத்தி வைத்த கோரைப் பாயை எடுத்தாள். ஒரு உதறு உதறி, விரித்தாள். உறை இல்லாத தலையணையை எடுத்துப் போட்டாள். சுயம்புவை கொஞ்சம் கொஞ்சமாய் அங்குலம் அங்குலமாய்ச் சரித்து அதில் உட்காரவைத்தாள். இதற்குள் அங்கேயும் ஒரு சிறு கூட்டம். பாயிலும் தரையிலுமாய்ப் படர்ந்தார்கள். பல்வேறு வகை பெண்ணுடம்புக்காரிகள். வெளியே துருத்திய கண்காரிகள். அவையே ஒடுங்கிப் போன நடுத்தரங்கள். விஜயன் என்ற பூர்வாசிரமப் பெயரைக் கொண்ட விஜயா சுயம்புவின் தோளில் கை போட்டாள். அச்சடித்த சிவப்பு. புள்ளியோ முடியோ இல்லாத முகம் ஆழ்ந்த கண்கள். ஒவ்வொருத்தி கண்ணும் உலகின் அத்தனை துக்கக் கடல்களிலும் அந்தக் கண்களைப் புரட்டி குறுகத் தரித்து மீண்டும் பொருத்தியது போல் தோன்றின.

     இதற்குள், எவளோ ஒருத்தி எங்கிருந்தோ ஒரு பானைத் தண்ணிரைக் கொண்டு வந்தாள். பச்சையம்மா கையால், தண்ணிரைத் தொட்டு, கதவுக்கு வெளியே ஒரு உதறு உதறிவிட்டு, மேற்கு பக்கமுள்ள பூசைத் திட்டின் முன்னால் உட்கார்ந்தாள். மத்தியில் சேவல்மீது ஆசனம் போட்ட திரிசூலி. அவளுக்கு ஒரு பக்கம் பிள்ளையார். மறுபக்கம் புல்லாங்குழல் கிருஷ்ணன். உடம்பில் கட்டிகள் வந்ததுபோல் தோன்றிய மண்சுவரில், அவள் அப்பாவின் படம். அவள் கற்பூரத்தை ஏற்றப்போனபோது, “பச்சையம்மா...” என்ற சப்தம் கேட்டுத் திரும்பினாள். கன்னத்தில் தப்பளம் போடுபவளைப் பார்த்தாள். குருவக்கா... அங்கிருந்தே பேசினாள்.

     “மனசே கேக்கலைடி ஊர்ல இருந்து திரும்பி வாறியே. ஒன்னப்பத்தி ஒரு வார்த்தை நான் கேக்கலை பாரு. மொதல்ல அம்மாவுக்கு பூசையை முடி. இவளும் நல்லா இருக்கணும்னு கும்பிடு... அப்புறமா வாறேன்!”

     “ஒட்காருக்கா... ஒங்கிட்ட சொல்லாட்டா தலையே வெடிச்சுடும்...”

     குருவக்கா, சுயம்புவின் பக்கத்தில் போய், அவன் தோளைத் தட்டிவிட்டபடியே உட்கார்ந்தபோது, பச்சையம்மா தாம்பாளம் போன்ற தகரத்தில் கற்பூரம் ஏற்றி அம்மாவைச் சுற்றிச் சுற்றி வட்டமிட வைத்தாள். அந்தக் கற்பூரம் மாதிரியே, உள்ளுக்குள் எரிந்தவளுக்கு குருவே விபூதி கொடுக்க வேண்டும் போல் தோன்றியது. அவள் சைகை செய்ததும், குருவக்காவும் எழுந்தாள். எல்லோருக்கும் விபூதி குங்குமம் கொடுத்தாள். பிறகு, அவளது கவனத்திற்காகவே காத்திருந்த பச்சை அம்மாளை அந்தப் படத்திற்கு முன்னால் உட்கார வைத்துவிட்டு, தானும் உட்கார்ந்தாள். அவள் “ம்... ம்... சொல்லு” என்றாள். பச்சையம்மாள் விறுவிறுப்பாகவும் வெறுவெறுப்பாகவும் பேசினாள்.

     “அம்மா என்னக் கட்டிப் பிடிச்சு அழுதாள். அப்பா எப்பவோ செத்துப் போயிட்டாராம். நான் தோளுல தூக்கி வளர்த்த தம்பி, தொலைவில நின்னே கண்ணக் கசக்கினான். பெண்டாட்டி அவன் காதுல ஏதோ சொன்னாள். அப்புறம் அவன் என் பக்கமா வந்து எங்கே இருக்கப் போறேன்னு அந்நியமாகக் கேட்டான். ‘சொந்த வீட்ல இருக்காமல் எந்த வீட்டுக்கடா போவான்னு’ அம்மா திருப்பிக் கேட்டாள். ‘இப்படியா சேலை கட்டி வாறது? இனிமேல், எல்லாப் பயல்வளும் என்வேட்டிய கூட சேலை மாதிரிதானே பார்ப்பாங்கன்’னு சொன்னான். அம்மாதான் என் வயிற்றுல ஒரு மாடு பிறந்தாலும் எனக்கு பிள்ளதாண்டா... உனக்கு உடன்பிறப்புதாண்டான்னு அழுதழுது தம்பிக்குச் சொன்னாள். என்கிட்ட ஏதோ ரத்த வாடையில் ஓடிவரப் போன, பிள்ளைகளை அவன் பொண்டாட்டி ரெண்டு சாத்து சாத்தினாள். அதுக்குமேல அங்க இருக்க பிடிக்கல. நான் வீட்டுக்குள் போயி, வெளிப்படையாவே கெஞ்சினேன். ‘தம்பி, தம்பி... நமக்கு பொதுச் சொத்து, அஞ்சு ஏக்கர், ஆத்துப் பாசனம். நீயும் நானும் பிறக்கறதுக்கு முன்னால இருந்த முப்பாட்டன் சொத்து... சூடு போட்ட அப்பா வாங்குன சொத்துகூட வேண்டாம். முப்பாட்டன் சொத்துல சரி பாகத்தையும் கேக்கல. கணக்குப்படி அக்காவுக்கு அஞ்சு லட்சம் வரும். ஆனால் எனக்குத் தேவையில்ல. அக்கா பொண்ணா யிருந்தாலே, கல்யாணம் காட்சின்னு அப்பா மூணு லட்சமாவது செலவழிச்சிருப்பாரு. நீ, அவ்வளவையும் தர வேண்டாம். ஒனக்கு எது தோணுதோ, எவ்வளவு தோணுதோ அதக் கொடுடா, அக்காவால இப்ப எதுவுமே முடியல. நீ கொடுக்கிற பணத்தை பாங்கில போட்டுட்டு மெட்ராஸ்ல மொடங்கிக்கிறேன். உனக்கு விடுதலை பத்திரம் வேணுமுன்னாலும் எழுதிக் கொடுக்கேன்னு நான் கெஞ்சினேன். கையை திருவோடு மாதிரி வச்சுக்கிட்டு அழுதேன்...”

     “சரி. அழாதே! எனக்கு நடந்ததுதான் ஒனக்கும் நடந்திருக்கு. ஒன் தம்பி அதுக்கு என்ன சொன்னான்?”

     “சாட்டைக் கம்ப எடுத்துட்டு அடிக்க வந்தான். அப்புறம் ‘நீ நம்ம குடும்பத்துக்கு ஏற்படுத்தியிருக்கிற கேவலத்துக்கு நீதான் நஷ்டஈடு தரணும்’னான். பதினைஞ்சு வருஷம் கழிச்சுப் பார்க்குற, அந்தக் காலத்து அண்ணனை ஒரு அரைமணி நேரத்துலயே கழுத்தப் பிடிச்சுத் தள்ளினான். 'அம்மாவை மட்டுமாவது நல்லா வச்சுக்கடா’ன்னு தள்ளாத அம்மாவைக் கட்டிப்பிடிச்சுக் கதறிட்டு ஒரு ஆஸ்பத்திரில ரூம் எடுத்து தங்கினேன். பணம் வாங்க எடுத்துட்டுப்போன பணமெல்லாம், நாசமாப் போயிட்டு. இவள் எனக்கு மகளா கிடைச்சது எல்லாத்தையும் சரிக்கட்டிட்டு... இந்த சந்தோஷமே போதும்...”

     “இவளப்பத்தி. நா ஒங்கிட்ட அப்புறம் விவரமா பேசணும். சாயங்காலமா பேசிக்கலாம்.” குருவக்கா எழுந்தாள். எழுந்தபடியே ஆறுதலாகவும், அன்பாகவும் பேசினாள்.

     “ஒம்பேரு என்னடி..”

     “சுயம்பு...”

     “நல்ல பேரு. நல்லவளாவே இரு. ஏண்டி தடி முண்டங்களா... இவளுக்கு எவளாவது நாஷ்டா வாங்கிக் கொடுங்களேண்டி... அவளையே நாஷ்டா மாதிரி பாக்கீங்க...”

     குருவக்காவிற்கு, மற்றவள்கள் மரியாதை காட்டி எழுந்திருக்கவில்லை தான். ஆனாலும், அவர்கள் கால்களை குறுக்கிக்கொண்டு, அவளுக்கு வழிவிட்டதில், ஒரு தோழமை உறவும், அந்தத் தோழமைக்குத் தொண்டாற்ற அவர்கள் தயாராய் இருப்பது போலவும் தோன்றின. இதற்குள், ஒருத்தி, நாஷ்டா கொண்டு வந்தாள். குருவக்கா, அவசரப்பட்டு திட்டிவிட்டமே என்பது மாதிரி உதட்டைக் கடித்து நின்றுவிட்டு, போய்விட்டாள். இதற்குள், பச்சையம்மா நாஷ்டா வாங்கி வந்தவளுக்குக் காசை நீட்ட, அவள் மறுக்க ஒரு செல்லச் சண்டையே நடந்தது. “போங்கடி... என் மகள் கொஞ்சம் தூங்கட்டும்” என்று அத்தனை பேரையும் விரட்டி விட்டாள். கதவைச் சாத்திவிட்டாள்.

     சுயம்பு, அழப்போனான். அந்த வாய்க்குள் பச்சையம்மா இட்டிலித் துண்டை எடுத்து வைத்தாள். மசால்வடைத் துண்டை சட்டினியில் புரட்டி ஊட்டினாள். அவன் வீட்டுக் கோழி கூ.ட கொத்த விரும்பாத வாடை. வெளியே துப்பப் போனவன், அம்மாவின் கண்களில் பொங்கிய பாசத்தைப் பார்த்துவிட்டு, துடித்த துடிப்பைக் கண்டுவிட்டு, அப்படியே விழுங்கினான். வாந்தி வரப்போனது. வீட்டை நினைத்து அழப்போனான். அந்த அழுகையையே துக்கத் துண்டுகளாக மாற்றி, உணவுத் துண்டுகளோடு கலந்து உண்டான்.

     பச்சையம்மா, வீட்டைப் பெருக்கினாள். விரித்த பாயை எடுத்து உதறியபடியே மீண்டும் அதை விரித்தாள். அழுக்குத் தலையணைக்குப் பழைய புடவையை மடித்து உறையாகப் போட்டாள். சுயம்புவை அப்படியே கிடத்தினாள், தொலைவில் கிடந்த ஒரு தூக்குப் பை பொட்டலத்தைக் கால் விரல்களைக் கொக்கியாக்கி லேசா வளைத்துப் பிடித்து மகளின் கால்களை மயிலிறகுபோல் தூக்கிப் பிடித்து அதில் வைத்தாள். பிறகு எழுந்து, உடம்பில் மூச்சோட்டம் இன்றி எந்த ஓட்டமும் இல்லாமல் கிடந்த மகளை ஆசை தீரப் பார்த்துவிட்டு, கதவைத் திறந்து வெளியே சாத்தினாள்.