21

     சுயம்பு பிணம் போலக் கிடந்தான். துக்கத்திற்கு இதற்குமேல் எல்லை இல்லை என்பது போலவும், அது எல்லை தாண்டி தூக்கத்திற்கு வந்துவிட்டது என்பது போலவும் கிடந்தான். ஆகாயக் கூரையின் ஓட்டைக்கு மேல் கண் போட்டு உயரமாய்ப் பறந்த ஒரு கழுகு கூட, அது பிணமோ என்பது போல் தாழப் பறந்து பிறகு தன் பாட்டுக்குப் போனது. காக்கைகள் கூடக் கரைந்தன. ஒரு மணி நேரமல்ல, இரண்டு மணி நேரமல்ல. கிட்டத்தட்ட இரண்டு சினிமாக்கள் பார்க்கும் நேரம்.

     என்றாலும், சுயம்பு அங்குமிங்குமாய்ப் புரண்டு மெள்ள மெள்ள கண்விழித்து மெல்ல மெல்ல எழாமல் அப்படியே வாரிச்சுருட்டி எழுந்தான். ‘எம்மா... எம்மா’ என்று பீறிட்டுக் கிளம்பிய வார்த்தையோடு எக்கா என்ற வார்த்தையை விரவிக் கலக்கவிட்டு, அங்குமிங்குமாய்ப் பார்த்தான். அது கண்ணாடி பீரோ உள்ள அக்கா அறையில்லை. அக்காவும் அங்கே இல்லை. சிமெண்ட் போட்ட தரையுமில்லை. வேப்பமரக் காற்று வீச்சுமில்லை. விசாலமான பரப்பும் இல்லை. கோழிக் கூடுமில்லை. அந்தக் கூடே அவன் வீட்டில் இதைவிடப் பெரிதாகவே இருக்கும். இது எது... என்னது... ஓகோ... இதுதான் நிரந்தரமான வீடோ... நான் கனவுல எங்கக்கா கூட தேக்குக் கட்டில்ல சத்தம் போட்டு சிரித்துக்கிட்டு இருந்ததா கனவு கண்டனே அது பொய்யோ...? பொய்யேதான்...!

     சுயம்பு கண்ணைத் துடைத்துக் கொண்டான். அது, அவன் வீடல்ல... பெற்றோர் இல்லை. உடன்பிறப்புகளில் ஒருவருமில்லை. அவர்களை இனிமேல் பார்க்க முடியாது. பார்க்கவே முடியாதா? கூடாதா... அப்போ இது என்ன வாழ்க்கை... இது தேவையா... எக்கா... எம்மா... அய்யோ... அண்ணா... என்ன வந்து கூட்டிட்டுப்போ அண்ணா... அப்பா... என்னை இழுத்துட்டுப்போய் ஊர்லயாவது வெட்டிப் புதையுமப்பா...

     சுயம்பு வீறிட்டுக் கத்தினான். ஆனால் அந்தக் கத்தல் தனக்குள்ளே ஏற்பட்ட சத்தம் என்பது அவனுக்குத் தெரியாது. குடும்பத்தினரை, இனிமேல் பார்க்கவே முடியாது என்ற நினைப்பு... அவர்களை அப்போது பார்க்க வேண்டும் என்று துடிப்பாக மாறியது. இங்கிருந்து இதோ இந்த ஓட்டை வழியாய்... ஊடுருவி ஆகாயத்தில் துள்ளிக் குதித்து, அங்கிருந்து பிறந்த வீட்டில் பிணமாகவாவது விழ வேண்டும் என்ற ஆவேசம். கூட்டி வந்த பச்சையம்மா மேலேயே ஒரு கோபம். உடம்பெல்லாம் ஒரே ஆட்டம். அவனுக்குள், தான் மட்டுமே பிறந்து, தான் மட்டுமே தனித்து இருப்பது போன்ற கொடுமையான கொடூரம்.

     சுயம்பு மீண்டும் வீறிட்டான். எல்லோருக்கும் இப்போது கேட்டது. அக்கம் பக்கமே ஒட்டுமொத்தமாய் அங்கே வந்தது. குடிசையை இடித்துக் கொண்டு வருவது போன்ற ஒரு கூட்டம். எல்லோரும் பதைபதைத்தபோது, ஒரு இருபது வயதுக்காரி அவன் பக்கத்தில் போனாள். மற்றவர்கள் பயந்து போய் நின்றபோது, அவள் அவனைத் தோளோடு சேர்த்துப் பிடித்தாள். “ஒன்ன மாதிரிதாண்டி நானும் பத்தாவது படிச்சவள். மாடி வீட்ல வாழ்ந்தவள். நமக்கு இனிமே யாருமே கிடையாதுடி... ஒருத்தருக்கு ஒருத்தர்தான் ஆறுதல்டி... நானும் இங்க வந்தப்ப ஒன்ன மாதிரிதான் தவிச்சேன்... அதனால சொல்லுகிறேன், நல்லது செய்யாததை நாளு செய்யும் தங்கச்சி... அழாதே... வீட்ல போய் அழுதாலும் பார்க்கதுக்கு கண்ணு வராது. கேக்கிறதுக்குக் காது கிடைக்காது” என்றாள்.

     சுயம்பு ஆவேசம் சிறிது குறைந்து அந்தப் பத்தாவது வகுப்புக்காரியின் முட்டிக்கால்களில் முகம்போட்டு முட்டினான். மோதினான். சிலதுகள், கஷ்டப்பட்டுப் போனதால் அந்தக் கஷ்டமே ரசனையாக சிரித்தன. துக்கத்தை மூளை மாற்றிய ரசாயனச் சிரிப்பு... இதற்குள் பச்சையம்மாள் வந்துவிட்டாள். ‘என்னடி, என்னடி’ என்று சொல்லிக்கொண்டே சுயம்புவை மடியில் கிடத்தினாள். பிறகு “அழாதடி... நீ அழுகிறத பார்த்துட்டு நான் ஒன்ன கடத்திட்டு வந்ததா நினைப்பாளுகடி... ரிக்ஷா மணியோட கையைக் காலப் பிடிச்சு... லாண்டரிகாரருக்கு துணி துவைச்சுக் கொடுத்து நாளைக்கே ஒன்ன வேணுமுன்னா, ஒன் வீட்லய விட்டுடறேன். அழாதே! அழப்படாதுடி” என்றாள். பிறகு, “போங்கடி போங்க. என் மவள கொஞ்சநேரம் என்கிட்டய விடுங்க” என்றாள்.

     எல்லோரும் போய்விட்டார்கள். அவர்களோடு போகப் போன ஒரு காலத்துப் பத்தாவது வகுப்புப் பயலை சுயம்பு காலைப்பிடித்து இழுத்தே பக்கத்தில் வைத்துக் கொண்டான். பச்சையம்மாள் கேட்டாள்.

     “எதுக்காக அழுதே என் மகளே... தாய்கிட்ட மறைக்கப்படாதுடி.”

     “ஆமா... சுயம்பு... இவங்களுக்கு நீ மகளா வந்தது ஒனக்கு ஒரு அதிர்ஷ்டம். எனக்கும் இருக்காள ஒருத்தி... கார்ல போறவங்கள பார்த்து மட்டும் கண்ணடிக்கணுமாம்...”

     சுயம்பு ஓலமிட்டான். இழுத்து இழுத்துப் பேசினான். கேழ்வரகு கூழாய்க் குழைந்த முகத்தில் தொட்டுக்க வைத்த எள்ளுருண்டை மாதிரியான கண்கள், நிலைகுத்த ஏங்கி ஏங்கிப் பேசினான்.

     “எங்கக்கா எப்படித் துடிக்காளோ... அவளுக்கு இனிமேல் கல்யாணம் நடக்குமோ? நடக்காதோ... நான் பாவி! என் தங்கச்சி வாழ்க்கையையும் கெடுத்துட்டேனே!”

     சுயம்பு எழுந்தான். நான்கைந்து குச்சிகளை வைத்து, குறுக்கு நெடுக்குமாய் கொண்ட பொந்து வழியாய் பிறந்த திசையைப் பார்த்தான். பிறந்த வீட்டை ஊரோடு சேர்த்துக் கண்களால் நகர்த்தி நகர்த்தித் தன் பக்கம் கொண்டு வரப்போவது போல் பார்த்தான். இதற்குள் அந்தப் பத்தாவது வகுப்புக்காரி பாத்திமா அவன் ஜாக்கெட்டைப் பிடித்திழுத்து, முதுகுப் பக்கத்தைத் திருப்பி முகத்துககு எதிராகப் பேசினாள்.

     “எந்தப் பிரச்னையையும் அதன் எல்லைவரைக்கும் போய்ப் பார்க்கணும் சுயம்பு. நீ வீட்டுக்குப் போனால், அங்கே போய் என்ன பண்ணப்போற... கற்பனை செய்து பாரு... புடவையைக் கட்டாமல் இருக்க முடியுமா? அப்பா சூடு போடாமல் இருப்பாரா? ஊரு சிரிக்காமல் இருக்குமா? நீ போறதால ஒன் வீட்டுக்கு பிரச்னை வருமே தவிர, எந்தப் பிரச்னையும் தீராது! நல்லா யோசிச்சுப் பாரு... காரு வச்சிருக்கிற குடும்பத்துல பிறந்திட்டு, இங்கே கால இழுத்துக்கிட்டு திரியுற எனக்கு மட்டும் எங்க வீட்டுக்குப் போக ஆசையில்லையா...”

     சுயம்பு, யோசிக்க யோசிக்க யோசனையே அற்றுப் போனான். பச்சையம்மா, அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கேவினாள்.

     “கரையான் புத்துல இருந்து வெளிப்பட்ட ஈசலு பழையபடி அந்தப் புத்துக்குள்ள போக முடியாது மகளே! உடைஞ்ச கல்லு ஒட்டாது மகளே! கீழே விழுந்த குஞ்சு காக்கா நினைச்சாலும் அதை கூட்டுக்குள்ள வைக்க முடியாதுடி மகளே! நாம பிறத்தியார் சிரிக்கதுக்காக - சினிமாவில காமெடிக்காக - முரட்டுப் பயலுக்கு வடிகாலாகப் பொறந்த பொட்டைங்கடி..”

     சுயம்பு மெள்ள மெள்ளக் கேட்டான்.

     “ஒரு லெட்டராவது, ஒரே ஒரு தடவை...”

     “லட்டர் வேண்டாம் மகளே! அது அவுங்கள கெஞ்சுறது மாதிரி இருக்கும். நான் எங்க வீட்டுக்கு செய்ததை ஒனக்கும் செய்யப்போறேன். உங்க அக்கா, பேருக்கோ அப்பா பேருக்கோ இருபத்தஞ்சு ரூபாய் அனுப்பி வைக்கேன். நம்ம அட்ரஸையும் கொடுக்கேன். நீயும் கீழ நாலு வரி எழுது, அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்... என்ன. குருவக்காவா? இதோ வந்துட்டேன்.”

     பச்சையம்மா குடிசைக்கு வெளியே வந்தாள். குருவக்கா அவளை ஒரு பக்கமாய் கூட்டிப் போனாள். அவள் சொன்னதைக் கேட்டு பச்சையம்மா பதறினாள்.

     “முடியாதுக்கா... முடியவே முடியாது. என் மகள யாருக்கும் கொடுக்க முடியாது. ஊசி முனையில ஒத்தக் காலுல தவம் இருந்து எடுத்தது மாதிரியான மகள். நெருப்ப வளர்த்து அதுல திரெளபதியா வந்தது மாதிரியான மகள். இதுல பேசுறதுக்கு எதுவுமே இல்ல...”