உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
23 அந்தச் சேரியின் சேரிக்குள், சராசரி நாளைவிடச் சுவையான நாள். சென்னையிலுள்ள அத்தனைப் பேட்டைகளிலிருந்தும் ‘அலி அலியான’ கூட்டம். பெரும்பாலானவர்கள் பட்டுச் சேலை கட்டியிருந்தார்கள். ‘கில்ட்டோ,’ ‘'கவரிங்கோ’ அல்லது தங்கமோ அத்தனை நகைகளும் கழுத்திலும் காதிலும் மின்னின. ஒரு பந்தல் கூடப் போடப்பட்டிருந்தது. அத்தனைபேரும், பேட்டை, பேட்டையாய் நின்று கொண்டிருந்தனர். பந்தலுக்கு அப்பால் மூன்று பெரிய கல் அடுப்பில் அண்டாச் சோறு கொதித்தது. அதேமாதிரியான சின்னக்கல் அடுப்பில் இன்னொரு ஈயப் பாத்திரத்தில் கோழியோ, ஆடோ குழம்பாகிக் கொண்டிருந்தது. அந்தச் சேரிப் பெண்களில் நிசமான பலரும், சமையலுக்கு ஒத்தாசை செய்தார்கள். காய்ந்துபோன வயிறுகளையும் ஒடுங்கிப்போன மார்பெலும்பையும் காட்டிய குழந்தைகளை அவர்களின் அம்மாக்கள், இழுத்துக் கொண்டு போனாலும், அலிச்சமூகம் விடவில்லை. தாய்களையும் குழந்தைகளையும் சேர்த்தே இழுத்தது. அந்தப் பந்தலின் நடுப்பகுதி ஒரு ஓலைக்குடிசையின் வாசலுக்குமேல் உள்ள ஆகாயக் கூரையைத் தட்டி நின்றது. அந்தக் குடிசையின் சுவரோரத் திட்டில் முர்கேவாலி மாதாவின் படம். சாமுண்டீஸ்வரி, மாதிரியான தோற்றம். ஆனாலும், அம்மா சிங்கத்திற்குப் பதிலாக, சேவல் மீது சாய்ந்து நின்றாள். அந்தச் சேவல் கொண்டை பெருத்தும் சிவந்தும், வானவில் வண்ணக் கலப்பில் தோன்றியது. அதன் அலகில் ஒரு மூர்க்கத்தனம் - மாதாவின் கண்களைப்போல். அந்தக் கண்களில் கீழ்நோக்கிப் பாயும் ஒளிக்கற்றைகள் படத்துக்குள், மேலே ஒரு கோவில் படம். மாதாவின் பல கைகளில் ஒன்றில் திரிசூலம். இத்தனை லட்சணங்களும் கொண்ட அந்தப் புகைப்படத்தின் முன்னால் வாழையும் ஆரஞ்சும் மண்டிக் கிடந்தன. குத்துவிளக்கு தீபம் குதித்துக் குதித்து ஒளிர்ந்தது. ஊதுபத்திகள் ஊதாமலே சிவப்புக் குன்றி முத்துக்களைக் காட்டின. அம்மாவின் படத்திற்கு முன்பு, பத்தாவது படிப்புக் காரியான பாத்திமா சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தாள். அவர்கள், வழக்கப்படி ஒரே பச்சை மயம், அவளின் புடவையும் பச்சை ஜாக்கெட்டும் பச்சை வளையல்களும் அப்படியே புருவ மையும் உதட்டுச் சாயமும், பச்சை பச்சை. நெற்றியிலும், பச்சை பிளாஸ்டிக் பொட்டு... எல்லாமே பச்சையாக, அவள் இலை தழைகளோடு கூடிய செடியில் சிவப்பு ரோஜாவாக ஜொலித்தாள். இதற்குள், பேட்டை அலிகளுக்கிடையே ஒரு சின்னச் சண்டை. சேலை கட்டாமல் லுங்கி கட்டியவர்களை ஜமாவிலிருந்து தள்ளிவைக்க வேண்டுமென்று ஒரு புடவை சொல்ல, லுங்கிகளுக்கும் புடவைகளுக்கும் போர் துவங்கியது. ஒரு பக்கத்து லுங்கிகள், இடதுகையை நீட்டி, வலது கையை அதற்குமேல் பிடித்து, மேல் கையை அங்குமிங்குமாய் உருட்டி, இரு உள்ளங் கைகளையும் ஒன்றோடு ஒன்று தட்டி, போர்ச் சத்தம் எழுப்பினார்கள். இது மாதிரிதான் எதிரணியும்... “புடவை வாங்கிக் கொடுங்கடி கட்டிக்கிறோம்..” “அடியே என் சக்களத்திகளா லுங்கிய கிழிச்சு புடவை மாதிரி கட்டுங்களேன்டி... அடுத்தவாட்டி இப்படி ஜமாவுக்கு முண்டமா வந்தீங்க, நடக்கிற கதையே வேற...” இருதரப்பும், போர் வார்த்தைகளை விட்டன. ஒருதரப்பு பேசும்போது, மறுதரப்பு இடையில் குறுக்கிடாது. அது பேசி முடித்ததும், மேல் கையையும் கீழ் கையையும் தட்டி திட்டுக்களை வெளிப்படுத்தும்... இருபக்கமும் சேராதவர்கள் “தத்தேறி முண்டைங்களா! நீங்க போடற சத்தத்துல முர்கேவாலி மாதாவே ஓடிடப் போறாள். ஒக்காருங்கடி. ஒங்க புத்திக்குத்தான் நம்மள பொட்டை பொட்டைன்னு பொறுக்கிப் பயல்க சத்தாய்க்கிறாங்க. அதைக் கேக்க வக்கு இல்ல... வந்துட்டாளுக சக்களத்திங்க...” இதற்குள், குருவக்கா, ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு அலியைக் கூட்டி வந்தாள். பின்னால் பவ்வியமாய் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே, அவளை லேசாய்க் கையைப் பிடித்து முன்னோக்கி நடந்தாள். வழி அடைத்தவள்களில், அவளுடைய ‘சேலாக்களை’ மட்டும் காலால் இடறிப் ‘பெரியவங்களுக்கு வழி விடுங்கடா, விடுங்கடி’ என்று மாறி மாறி ‘டா’வும், ‘டி’யும் போட்டு போட்டு குரு அலியைக் கூட்டிப்போனாள். உடனே பத்தாவது வகுப்பு பாத்திமா உட்கார்ந்தபடியே இருவர் கால்களையும் கையால் தொட்டு, அதற்காக வளைத்த உடம்பை நிமிர்த்தினாள். குருவக்கா, அவள் தாய் மதனாவிடம் கத்தினாள். “நல்லா இருக்குடிம்மா ஒன் பொண்ணு செய்யுற காரியம். எழுந்து கும்பிட்டால் என்னவாம்...” இதற்குள், குரு அலி, முர்கேவாலி மாதா முன் உட்கார்ந்தார். எல்லோரும் கல்லடுப்பில் வைக்கப்பட்ட பச்சை வண்ணம் தீட்டப்பட்ட பால் செம்பையே பார்த்தார்கள். பால் பொங்கியபிறகே, பூஜை... முன்னால், ஒரேயடியாப் போகாமலும், அதே சமயம் பின் தங்காமலும் மத்தியில் சுயம்புவோடு இருந்த பச்சையம்மா, அந்த நிகழ்ச்சி பற்றி விளக்கப் போனாள். பச்சைக் கரை போட்ட, வெளிர் மஞ்சள் சேலையில், வெள்ளை வளையல்களில், பச்சை மதலைபோல் அனைவரையும் ஊடுருவிப் பார்த்த சுயம்புவை, முட்டியில் செல்லமாய் தட்டியபடியே, மெதுவான குரலில், பச்சையம்மா விளக்கினாள். எவளாவது, ஒரு லோலாயி தன்னோட விளக்கம் சரியில்லை என்று தட்டிக் கேட்டுவிடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வோடு இந்த மாதிரி சமாசாரங்களை இப்படித்தான் ரகசியமாய் பேச வேண்டும் என்பது போல் பேசினாள். “அதோ படத்துல இருக்கவள்தான் ஒன்னோட, என்னோட, நம்மோட லோகமாதா... இந்த மாதா மூலம் தான் மகளே நாம் உற்பத்தியானோம். அந்தக் கதைய சொல்றேன் கேள். அதோ... மாதா படத்துல. மேலே ஒரு கோட்டை தெரியுது பாரு. அந்தக் கோட்டையில் இருந்து ஒரு காலத்துல அரசாண்ட மவராசா காட்டுக்கு வேட்டையாடப் போயிருக்கான். அங்கே, துர்க்காதேவி தன் தம்பியோட ஏதோ பேசிட்டு இருந்திருக்காள். மவராசா பார்த்துட்டான். தேவிகிட்ட போயி ‘ஒன்னோட நான் சேரணும். சாயங்காலம் வருவேன். தயாரா இரு’ன்னு சொல்லிட்டுப் போயிட்டான். அரசனாச்சே... தடுக்க முடியுமோ... இப்போ நமக்கு எப்படி போலீசோ அப்படி அப்போ அவங்களுக்கு மவராசா. துர்க்கா தேவி, தவியாய் தவிச்சாள். உடனே, தம்பிக்காரன் அக்கா சேலையை உடுத்துக்கிட்டு அவள மாதிரியே வேசம் போட்டான், அக்காவுக்கு தன்னோட துணியக் கொடுத்து, அவளுக்கு ஆம்பளை வேஷம் போட்டு வாசல்ல உட்கார வச்சுட்டு இவன் குடிசைக்குள்ள போயிட்டான். சொன்ன நேரத்துக்கு வந்த மவராசா, குடிசைக்குள் போய், பொம்பளை வேடம் போட்டவனை ஏதோ பண்ணிட்டுப் போயிட்டான். வெளியே வந்த தம்பி, துர்க்காதேவியைப் பார்த்தான். பக்கத்துல வந்த ஒரு நாயை கீழே வெட்ட வேண்டியதை வெட்டிட்டு, தம்பிக்கும் அப்படி வெட்டிட்டாள். தம்பிகிட்ட சொல்லிட்டாள். இனிமேல் நீ அலியப்பா. ஒனக்குன்னு தனி ஒலகத்தை நான் தாறேன்! நீ அலி அவதாரமாக பக்ராஜி என்கிற இடத்துக்குப் போ... அங்க ஒனக்கு கோயில் கட்டிக் கும்பிடுவாங்க... ஒன்னத் தேடி வார அலிகள் காலுலயும், எல்லோரும் விழுந்து கும்பிடுவாங்க... நீயோ ஒன் வம்சாவளியில யாரோ ஒருத்தரைப் பார்த்து பொட்டையா போன்னு சொன்னால் சொன்னதுதான். நிச்சயமா பலிக்கும்... இது, நான் ஒனக்கு கொடுக்கிற வரம் என்று துர்கா சொல்லிவிட்டாள். இதுதான் நம்ம வரலாறு. அதனாலதான் ‘அறுத்துப் போட்ட’ ஒவ்வொரு பொட்டையும், முதல்ல நாய்கிட்ட காட்டணும். அப்புறம் நாற்பது நாள் விரதம் இருக்கணும். அதற்குப் பிறகு இந்த பாத்திமாவுக்கு நடக்கிறது மாதிரி பூஜை நடக்கும். அப்புறம்தான் அதெல்லாம்.” பச்சையம்மா, மூச்சு விட்டபோது, சுயம்பு அவள் சொன்னதைக் காதுகளில் ஏற்றிக்கொண்டாலும் கருத்தில் ஏற்காததுபோல் கிடந்தான். அப்போதுதான், அவன் ‘உம்’ கொட்டாமல் இருந்ததை நினைத்த பச்சையம்மா, அவனைத் தன் பக்கமாய் நிமிர்த்தினாள். அவன் கண்கள் நீரிட்டன. உதடுகள் துடித்தன. அவள் அவன் முதுகைத் தட்டிக்கொடுத்தாள். மனசுக்கும் ஒத்தணம் போட்டாள். “ஒடஞ்சக் கல்லு ஒட்டாது மவளே... பிரிஞ்ச உமி நெல்லோட சேராது மவளே... நான் இருபத்தஞ்சு ரூபாய அந்த பத்தாவது வகுப்புக்காரிக்கிட்ட கொடுத்தப்போ நீ என்ன பைத்தியக்காரின்னு கூட நினைச்சிருப்பே... நீயும், வேலையில சேர்ந்து நல்லா இருக்கிறதா அட்ரலோட எழுதியும் பார்த்தேன். அப்படியும் ‘மனுதாரர் பணத்தை வாங்க மறுக்கிறார்’ என்கிற எழுத்தோட பணம் திரும்பி வந்ததைப் பார்த்தாவது, நீ திருந்தணும். நீ அவளை பாசத்தோட அக்கான்னு நினைக்கிறதாலேயே, அவள், உன்னை தம்பின்னு துடிக்கிறதா ஆயிடாது... ஒருத்தரப் பத்தி, நாம அவங்க மேல வச்சிருக்கிற பாசத்தை வச்சு தீர்மானிக்கோம். இது தப்பு... ஒருத்தர நம்ம விருப்பத்துக்கு தக்கபடி பார்க்காமல், அவங்க விருப்பத்துக்கு தக்கபடி எடை போடணும் மவளே...” சுயம்பு மெள்ள முணுமுணுத்தான். “ஒருவேளை அக்காவுக்கு தெரியாம இல்லன்னா அவளைக் கட்டாயப்படுத்தி...” “முள்ளுல சேல பட்டாலும், சேலையில முள்ளு பட்டாலும் சங்கதி ஒண்ணுதானே மகளே!” “அப்போ எப்பவுமே என் அக்காவ, எங்க அம்மாவ...” “இனிமேல் எப்பவுமே பார்க்க முடியாதுன்னு நெனச்சிக்க மகளே. இனிமேல், நான்தான் ஒனக்கு அம்மா... நல்லதுக்கும், கெட்டதுக்கும் பொறுப்பு. ஒன்னயும் அந்த பாத்திமா மாதிரி பூஜையில வச்சு பார்க்கணும்னு ஆசை. அதுக்கு முன்னால ஒன்னை நான் தத்து எடுத்துக்கணும். அந்த குருவக்கா என்னடான்னா, தானே ஒன்னத் தத்து எடுப்பாளாம். அவளும் நல்லவள்தான். ஒன்மேல அவளுக்கும் ஒரு பாசம். அவள் மகளேன்னு கூப்பிட்டாலும், நீ அக்கான்னுதான் பதில் சொல்லணும். சரியாடி..!” சுயம்பு, பேசாமல் இருந்தபோது, பச்சையம்மா அவன் தலையை அங்குமிங்குமாய் ஆட்டினாள். பிறகு கேட்டாள். “ஒனக்கு யாருடி அம்மா... நானா... குருவக்காவா?” “எங்கக்கா... எங்கக்கா...” பச்சையம்மா, விட்டுப் பிடிக்க நினைத்தாள். இதற்குள் பால் பொங்கியது. அந்த பச்சை செம்பின் நாலு பக்கமும் வெள்ளைக் கோடுகள் விழுந்தன. அது பொங்கிய வேகத்தில் எல்லோருக்குமே சந்தோஷம். அது மாதாவின் முன்னால் கொண்டுவரப்பட்டது. கற்பூரம் ஏற்றப்பட்டது. எல்லா அலிகளும் அவர்களோடு இரண்டறக் கலந்த பெண்களும் ஒரு சேர எழுந்து கும்பிட்டார்கள். அவர்களின் மரபுப்படி சந்தோஷத்தில் ஒரு கவலையைப் புகுத்தி ஒரு தோத்திரம் பாடினார்கள். “மாதா மாதா... பகுச்சார தேவி மாதா... முர்கேவாலி மாதாவே... இனிமேல் எந்த பிறப்பு எடுத்தாலும் இந்த அலிப்பிறப்பு ஆகாது தாயே... ஆகாது...” குரு அலி, தாம்பாளத் தட்டிலிருந்து திருநீறையும், குங்குமத்தையும் பாத்திமாவுக்கு பூசினார். பொட்டிட்டார். தலை நிறைய பூக்குவியலோடு இருந்த பாத்திமா, கள்ளச்சிரிப்பாய் சிரிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு தலையைச் சுற்றினாள். என்ன நினைத்தாளோ... ஏது நினைத்தாளோ... எல்லா அலிகளும், குரு அலியிடம், பயபக்தியோடு குங்குமத்தை வாங்கிக் கொண்டார்கள். முன்வரிசை, பின்வரிசையாகும்படி முகங்கள் திரும்பின. ஆனாலும் தலையில் பால் குடத்தை ஏற்றிய பாத்திமா முன்னால் வந்தாள். இருபுறமும் குரு அலியும், குருவக்காவும், தாய்க்காரி மதனாவும் சூழ, அவள் தன்பாட்டுக்கு நடந்தாள். அத்தனை அலிகளும், தத்தம் அந்தஸ்தை தாமே நிச்சயித்துக் கொள்வதுபோல் திருத்தி அமைந்த வரிசையில் பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். ‘என்ஜினியர்’ மகள் கிடைத்ததால் தனது அந்தஸ்தை உயர்த்திக்கொண்ட பச்சையம்மா சுயம்புவோடு அந்த ஊர்வலத்தின் தலைக்குக் கழுத்துப் பகுதியானாள். வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|