24

     அந்த அலி ஊர்வலம், சிரிப்பும் கும்மாளமுமாய் புறப்பட்டது. வளையல்கள் குலுங்கின. கொலுசுகள் கும்மாளமிட்டன. சிலர் சினிமாப் பாட்டுப் பாடினார்கள். சிலர் அதற்கு ஏற்றாற்போல் அங்குமிங்குமாய் ஆடினார்கள். அதேசமயம், வழக்கமான ஊர்வலத்தைப் போல் அக்கம் பக்கத்தை அலட்சியமாகப் பார்க்காமல், அடக்க ஒடுக்கமாகப் போனார்கள். பிரதான சாலை வழியாய், மயிலாக ஆடி, குயிலாகப் பாடி, ஒயிலாக நடந்து, அண்ணா சதுக்கம் வந்து, அதற்கு அப்பால் எழிலகத்திற்கு எதிரே ஒரு இறங்கு முனைக்குப் போனபோது, சரிவுப் புல்தரையில் உட்கார்ந்திருந்த நான்கு பேர் நேரடி வர்ணனை கொடுத்து, விசிலடித்தார்கள்.

     “ஏய் பொட்டைங்களா... ரேட்டைக் கூட்டிட்டிங்களாமே. பொட்டைங்களா... ஏய் பொட்டை, ஒன்னத் தான். கொஞ்சம் போஸ் கொடுமே...”

     “இதுகளுக்கு இன்னிக்கு இன்னடா வந்திட்டு...”

     “ஏதாவது ஒரு பொட்டை வயசுக்கு வந்திருக்கும்... இதோ அந்த பொட்டைக்கிட்டய கேக்கலாமே... ஏய் பொட்டை... பொட்டைப் பையா... உங்களுக்கு வயசுக்கு வாறதுன்னா என்னாடி... சொல்லு கண்ணு... கபீரிச்சி மாதிரி போறியே...”

     பெரும்பாலான, அலிகள் கண்டுக்கவில்லை. இந்த மாதிரியான வார்த்தைகளை இந்தக் கடற்கரை பொறுக்கிகளிடம் மட்டுமல்லாமல், பங்களா பொறுக்கிகளிடமும் கேட்டுக் கேட்டு மரத்துப் போன மனங்கள். ஆனால் சுயம்பு திரும்பித் திரும்பிப் பார்த்தான். ஒரு சில இடங்களில் வீறாப்பாய் நின்று முறைத்தான். அவனிடமே, ஒருத்தன் வயசுக்கு வாறது பற்றிக் கேட்டதை, பச்சையம்மாவால் பொறுக்க முடியவில்லை. மகளின் பார்வையில் ஒரு வீரத் தாயாக விளங்க நினைத்தாள். மேற்கொண்டு நடக்காமல், திருப்பிக் கொடுத்தாள்.

     “ஏண்டா எச்சிக்கலைங்களா... பொறுக்கிப் பசங்களா... ஒங்க வீட்லயும் ஒரு பொட்டை விழ... எதுக்குடா எங்கள் வம்புக்கு இழுக்குறீங்க!”

     “இது கோபப்பட்டாக்கூட அயகாத்தாண்டா கீது...”

     “ஒங்க ஆத்தாளுங்களப் போய்க் கேளுங்கடா... ஏண்டா எங்கள சித்ரவதை செய்யுறீங்க?”

     “அப்படின்னா என்னம்மா கண்ணு... சித்திரத்துல படம் போடுறதா... செந்தமிழ் தேன் மொழியாள்... அவள்... திட்டும் மலர்கொடியாள்.”

     இதற்குள் குருவக்கா, அங்கே ஒடி வந்தாள். அந்த அலி வரிசையும் காச்சு மூச்சு சத்தத்தோடு அவர்களை வட்டமாய் சூழப்போனது. ஆனால் குருவக்கா விடவில்லை. இன்றைக்கு அடித்துவிடலாம்... நாளைக்கு அவஸ்தைப்படுவது... அவள் பச்சையம்மாவை உலுக்கிய போது, பச்சையம்மா உஷ்ணமாகக் கேட்டாள்.

     “போலீஸ் நாயிங்கதான் பொய் கேசு ஜோடிச்சு எங்கள அலக்கழிக்குது... நீங்களும் ஏண்டா பிராணனை வாங்குறீங்க...”

     குருவக்கா, பச்சையம்மாவை இழுக்க, பச்சையம்மா சுயம்புவை இழுக்க, அவன், அந்தப் புல்லர்களைப் பார்க்க, அவர்கள் வரிசையோடு சேர்ந்தார்கள். குருவக்கா பச்சையம்மாவிடம் காதில் பேசினாள். அதற்குள் அவள் புலம்பிக்கொண்டே நடந்தாள்.

     “ஒரு நாளா ரெண்டு நாளா... பொழுது விடிஞ்சா பொட்டை... பொழுது போனால், பொட்டை... சம்பாதிக்கிற பணத்தைக் கத்தியக் காட்டிப் பிடுங்குறாங்க. இந்தப் பொறுக்கிங்களைப் பத்தி போலீஸ்கிட்ட சொன்னா, அந்தப் பொறுக்கிங்களும் நம்மளத்தான் புரட்டி எடுக்காங்க... பேஜாரான பொழப்பு... நீ ஏன், கண் கலங்குறேடி! நான் இருக்கேன்... குருவக்கா இருக்காள்.”

     “ஏய் பச்சம்மா... ஒனக்கு மூளை இருக்குதா... அவன் யார் தெரியுமா? பிளேடு ராக்கப்பன். பஸ்ல பப்ளிக்காவே கண்டக்டருக்குத் தெரியும்படியாவே அறுக்கிறவன். போலீஸுக்குக் கையாளு. அவன் கிட்ட போயாடி வாயாடுறது.”

     “அடக்கடவுளே... எனக்குத் தெரியாமப் போச்சே! நாளைக்கு அவன் குப்பத்துக்குப் போயே மன்னிப்புக் கேட்டுக்கப்போறேன்... பயப்படாதே மகளே, நட! நாங்க இருக்கோம்!”

     பச்சையம்மாவும், குருவக்காவும் சுயம்புவோடு கூட்ட வரிசையில் பழைய இடத்தைப் பிடித்துக் கொண்டார்கள். இதற்குள், கூட்டமாய்க் கிடந்த கல்லூரிப் பயல்கள் ‘ஜிலுக்கு ஜிலுக்குதான், குலுக்கு குலுக்குத்தான்’ என்று ஆரவாரம் செய்தார்கள். உடனே, பல அலிகள் அந்தக் கூட்டத்தின் மீது கொசுக்கள் மாதிரி மொய்த்து ‘வெளிச்சத்துல பாடுறது வீரமில்லடா. இருட்டுப் பக்கமா வாங்கடா மிச்சி’ என்று சாதாரணமாய் கேட்டபோதே, கல்லூரிப் பயல்கள் வாயடங்கினார்கள். அலிகளும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் - எந்த செட்டை விடணும், எந்த செட்டை தொடணுமுன்னு...

     அந்தக் கூட்டம், ஆளில்லாத கடலோரமாய்தான் போனது. அங்கேயும் வேடிக்கை பார்க்கும் கூட்டம் திரண்டது. அதைப் பொருட்படுத்தாமல் சிறிது நேர பிரார்த்தனை, பிறகு பாத்திமா செம்புப்பாலை கடலில் ஊற்றினாள். இப்போது அந்தக் கூட்டத்தைப் பார்த்து வெட்கத்தோடு சிரித்தாள். வயதுக்கு வந்தாச்சே...

     அவர்கள் ஏதோ ஒரு பெரிய காரியத்தை முடித்து விட்ட திருப்தியில், திரும்பி நடந்தார்கள். இப்போது, வயிறு வலிப்பது மாதிரியான பசி. பந்திக்கு முந்து என்ற பழமொழிக்கு ஏற்ப ஆடியாடி ஓடினார்கள். அப்போது அந்தப் பக்கமாக ஒரு வாட்டசாட்டமான ஆசாமி. இருட்டில் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும், அவன் ‘சிக்னல்’ புரியும்படியாகவே இருந்தது. இடம் பொருள் ஏவல் தெரிந்து நடப்பதுபோல், சற்றுத் தள்ளி, சுயம்பு மேல் பார்வை போட்டபடியே நடந்தான். பச்சையம்மா குருவக்காவிடம் கிசுகிசுத்தாள்.

     “எக்கா. அதோ பார் என்னையே முறைக்கான் பார். போகட்டுமா...”

     “சாப்பிட்டுட்டு போ...”

     “அதுக்குள்ள அவன் பசி அடங்கிடுமே...”

     “இன்னிக்கு நல்ல நாளுடி..”

     “பாத்திமாவுக்கு நல்ல நாளுன்னா, எனக்கு என்ன வந்தது? எனக்கு எவ்வளவு கடன் இருக்கு தெரியுமா... அதோட, இவளுக்கு அறுக்கதுக்கு பணம் வேணும்... தத்துக்கு பூஜைச் செலவு? எத்தனை செலவு இருக்குது. என் தம்பிப்பய ஒரு பைசாகூட கொடுக்காமப் போயிட்டானே! அவன் வீட்லயும் பொட்ட விழ... அய்யய்யோ முர்கேமாதா வாய் தவறி சொல்லிட்டேண்டி... அதைப் பெரிசா எடுத்துக்காதடி. என் தம்பிமேல கோபப்படாதடி... எங்க வம்சத்துக்கு நான் ஒருத்தி போதும்டி..”

     “சரி, சீக்கிரமா போயிட்டு சீக்கிரமா வா. இவள எதுக்குடி இழுக்குறே...”

     “இப்பவே தொழில் செய்யாட்டியும், தெரிஞ்சு வச்சுக்கட்டுமே...”

     “எனக்கு என்னமோ சரியாப்படலை... அப்புறம் ஒன் இஷ்டம்!”

     “கவலைப்படாத குருவக்கா. என் மகளுக்கு இஷ்டமில்லாமல் எதையும் செய்யமாட்டேன். அவள்மேல ஒரு துரும்பு விழக்கூட பொறுக்கமாட்டேன்... வாடி என் ராசாத்தி...”

     சுயம்புவுக்கு, ஒன்றும் பிடிபடவில்லை. ஆனாலும், அந்த சேரிப்பகுதிக்குப் போகவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரே நாற்றம். சுடுகாட்டு வாசனை. கருவாட்டுக் குமட்டல். கண்ணால் பார்க்க முடியாத அசிங்கம். இந்தக் கடற்கரை எவ்வளவு அகலமா இருக்கு.

     பச்சையம்மா குருவக்காவிடம், மகள்மேல் இருந்த தனது ஆதிபத்திய உரிமையை நிரூபிக்கும் வகையில், சுயம்புவை இஷ்டமில்லாமல்தான் இழுத்துக்கொண்டு போனாள். விட்டுவிட்டுப் போனால் குருவக்கா மகளின் மனதை கலைத்துவிடுவாள் என்ற பயம். முறைப்படி தத்துப் பூஜை நடைபெறும்வரை இவள் சட்டப்படியான தாயல்ல. முர்கே மாதாவின் படத்துக்கு முன்னாலோ, அல்லது பல்லவன் போக்குவரத்து தலைமையகத்திற்கு அருகே உள்ள கோட்டக்கல் முனிஸ்வரன் கோவிலில் சுவிகாரச் சடங்குகள் நடத்தி, ஊசி போட்டுப் பெரிதான தனது மார்பகத்தைத் திறந்து, அதன் மேல் பூஜை செய்த ஒரு கிண்ணத்துப் பாலை ஊற்றி இந்த சுயம்பு அந்தப் பாலை அண்ணாந்து குடிக்கும்வரை அவள் முறைப்படி தாயுமல்ல சுயம்பு மகளுமல்ல...

     சுயம்பு, பசுமாட்டின் பின்னால் நின்று நின்று, போகும் கன்றுக்குட்டிபோல் நின்று நின்று நடந்தான். பச்சையம்மாவும் அதேபோல் நின்று நின்று, அவன் தன் பக்கம் வந்தபிறகே நடந்தாள். இதற்குள் அந்த ஆசாமியும் போக்குக் காட்டியே நடந்தான். பச்சையம்மா சுயம்புவை சிறிது தொலைவில் நிறுத்திவிட்டு அந்த ஆசாமியின் அருகே போனாள். அவன் கைகளைத் தூக்கி, தன் தோளில் போட்டுக்கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். பிளேடு ராக்கப்பன்...

     அங்குமிங்குமாய் அப்பாவிகள்போல் ‘மப்டியில்’ சிதறியிருந்தவர்கள் வட்டம் போட்டு ஓடி வந்தார்கள். ஒருத்தன் எதிர் ஓட்டம் போடாமல் சும்மாவே நின்ற சுயம்புவை அவன் முடியைப் பிடித்து இழுத்தான். அவனைப் பார்த்து ஓடிய பச்சையம்மாவை நான்கு பேர் குப்புறத் தள்ளினார்கள். ஒரு மப்டி போலீஸ் மிரட்டியது.

     “யாருடா. பொட்டப்பசங்க. போலீஸ்னா ஒனக்கு அவ்வளவு கேவலமாப் போச்சா? டேய்... அந்தப் புதுச்சரக்கையும் கையைக் கட்டுங்கடா... முகவெட்டு நல்லா இருக்கு... ஏண்டி பச்சை. போலிஸ் நாயிங்களா.. ஒன்ன நாய அடிக்கது மாதிரி சாவடி கொடுப்பேன் பாரு...”

     பிளேடு ஊக்கிவித்தது.

     “யாரை விட்டாலும் இவள விடப்படாது சார்...”

     போலீஸ்காரர்கள் சொல்லப் பொறுக்காமல், பச்சையம்மாவுக்கும், சுயம்புவுக்கும் விலங்கு போட்டார்கள்.

     சுயம்புவும், பச்சையம்மாவும் வாய்வலி தாங்க முடியாமல் துடித்ததால் அவர்களுக்குப் பின்னணிக் குரலாக அந்த ஆட்டோவே அலறிக்கொண்டு ஓடியது.

     கையில் விலங்கிடப்பட்ட பச்சையம்மா, ஆட்டோவில் திணிக்கப்பட்ட போது விலங்கும் கையுமாய் கும்பிட்டாள்.

     “அது பச்ச மதலை சார்... விட்டுடுங்க சார்... அது ஓட நெனச்சால ஓடியிருக்கலாம்... சும்மா நின்னுதே சார்... அதோட, குற்றவாளி நான்தான் சார்... என் மகள் இல்ல சார்...”

     அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த போலீஸாரில் ஒருத்தர் பச்சையம்மாளின் வாயில் ஒரே குத்துதான் குத்தினார். அவள் அந்த ஆட்டோவிற்குள் சரிந்து விழுந்தாள். இன்னொருத்தர் சுயம்புவின் முடியைப் பிடித்து இழுத்து அவனை அங்குமிங்குமாய் ஆட்டினார். தலைமைக் காவலர் சவாலிட்டார்.

     தேவடியாப் பையா... திருட்டு மூதேவி... யாருடா நாயி... ஒனக்கு ஆறு மாசமாவது வாங்கித் தர்ரேனா... இல்லியா பாரு...”