உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
25 அந்த ஆட்டோவுக்குள், மேலும் நான்குபேர் தங்களை திணித்துக் கொண்டார்கள். ஏதோ பேசப் போன பச்சையம்மாவை, ஒருத்தர் முட்டிக் காலாலே இடித்தார். அந்த வாகனம், சம்பந்தப்பட்ட காவல் நிலையம் முன்னால் போய் நின்றதும், இரண்டு மப்டிகள் இருக்கையில் இருந்தபடியே, அவர்களைக் கீழே தள்ளி விட்டார்கள். இருவரும் தரையில் விழப்போன வேளை. ஆனாலும், பச்சையம்மாவும் சுயம்புவும் ஒருவரை ஒருவர் ஆதரவாகப் பிடித்தபடி கீழே விழாமல் சமாளித்தார்கள். அது போதாதென்று அந்தப் போலீஸ்காரர் பச்சையம்மாவின் பிட்டத்தில் வலதுகால் பூட்ஸின் அடையாளத்தைப் பதிய வைத்துவிட்டு, அவர்கள் இருவரையும் ஆடுமாடுகளைப் போல் போலீஸ் துரைத்தன முகப்பிற்குள் தள்ளி விட்டார். ‘கிரைம்’ இன்ஸ்பெக்டர், இருந்த இடத்தில் இருந்த படியே, சிறிது தொலைவில் உள்ள ‘எல் அன்ட் ஓ’ இன்ஸ்பெக்டரிடம் கோபம் கோபமாய்ப் பேசிக் கொண்டிருந்தார். குற்றங்களைக் கவனிக்க வேண்டிய தன்னை, செக்யூரிட்டி டியூட்டிக்குப் போட்டு குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் அலைக்கழித்ததை ஒரு அன்றாட நிகழ்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போதுதான் வந்ததுபோல் அவர் முகத்தில் வேர்வைத் துளிகள். கைகளில் புழுதித் துகள்கள். கத்தினார். “மென்னும் கிடையாது. கன்னும் கிடையாது. முகமூடிக்கொள்ளைய குறைடான்னா எப்படிக் குறைக்கறது... வேற பக்கமா போயிடுங்க சாமின்னு கொள்ளக்காரன் காலுல விழுந்து கும்பிட முடியுமா... காலையில சாப்பிட்டதப்பா... நீயாவது சட்டம் ஒழுங்கு... ஜாலி வேல...” அந்த ‘எல் அன்ட் ஓ இன்ஸ்பெக்டர்’ ஏதோ பதில் சொல்லப் போனபோது, அந்தப் பக்கமாக பச்சையம்மாவும் சுயம்புவும் கொண்டு வரப்பட்டார்கள். சுயம்பு அங்கேயிருந்த போலீஸ்காரர்களைக் கண்டு பயந்து விட்டான். கையில் துப்பாக்கி. அதுக்கு மேலே சூரிக்கத்தி. என்ன செய்யப் போறாங்களோ... அப்போதும் பச்சையம்மா ஆறுதல் சொன்னாள். “மகளே... அழாதே என் மகளே! நம்ம இன்ஸ்பெக்டர்தான் மகளே! மாமூலான மனுஷர்...!” அந்த கிரைமும், பச்சையம்மாவைப் பார்த்து சிரிக்கப் போனார். அவள் முன்கை கட்டப்பட்டிருப்பதைக் கண்டு கோபப்படப் போனார். இதற்குள் அவர்களைக் கொண்டு வந்த போலீஸாரில் ஒரு வயிற்றுவலிக்காரர் சலூட்டோடு விவரம் சொன்னார். “இந்தப் பொட்டை நம்ம ராக்கப்பன்கிட்ட நம்மை போலீஸ் நாயிங்கன்னு சொல்லியிருக்கான் சார். போலீஸும் பொறுக்கியும் ஒன்றுதானாம். தனியாச் சொன்னாக்கூட பரவாயில்ல சார். பொட்டப்பயலுக ஊர்வலத்துல அவனுக கைதட்டுறதுக்காக அப்படிப் பேசி யிருக்காள்... இவள விட்டுட்டு வந்தால் அப்புறம் எந்தப் பொட்டை நம்மள மதிக்கும் சார். நாமும் பொட்டன்னுதானே அர்த்தம்...!” இன்ஸ்பெக்டர், சுயம்புவின் மீது படர்ந்த பார்வையை விலக்கி, பச்சையம்மாமேல் வியாபிக்க வைத்து, அவளை மேலும் கீழுமாகப் பார்த்தார். அந்த ஏச்சு எந்த செக்ஷனில் வரும் என்பது மாதிரி நினைத்தார். இதற்குள் வெளியேயிருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டே ஒரு கான்ஸ்டபிள் வந்து, சலூட் அடித்தார். அதற்கு எதிர் விகிதாசார விகிதத்தில் பச்சையம்மாவைப் பார்த்துவிட்டு, இன்ஸ்பெக்டரிடம் அவர் பேசினார். “சார். ஒன் மினிட் சார். நான் போன வாரம் கஞ்சா கேஸ் சம்பந்தமாய், இவள் ஏரியாவுக்கு போனப்போ, ஒரு வளைவுப் பாதையில நடந்துட்டே இருக்கேன். அப்போ இதே இந்த பொட்டைப் பயதான் ‘வந்துடுவானுவ போலீஸ்... வாங்கிக் குடிக்கன்னு’ பொட்டப் பயல் கிட்ட பேசிட்டிருக்காள் சார். நான்தான் மரியாதையைக் காப்பாத்திக்கிறதுக்காக திரும்பி நடந்து பத்து நிமிஷம் கழிச்சுப் போனேன்...” இன்ஸ்பெக்டர், பாதிக் கோபத்தோடு கேட்டார். “திட்டுனதுக்காக மட்டும்தான் பிடித்திங்களா?” இப்போது, பச்சையம்மாவே தன்னம்பிக்கையோடு பதிலளித்தாள். “இல்லிங்க சார்! வழக்கம்போல பீச்ல ஒருத்தனோட... ஆனால் அவன் அடுத்துக் கெடுத்த ராக்கப்பன்...” இன்ஸ்பெக்டர் எழுந்தார். நிதானமாக நின்றார். ஏதோ ஒரு நன்னம்பிக்கையோடு பார்த்த பச்சையம்மாவைப் பார்த்து நடந்தார். உயரத்தில் ஆறடிக்கு ஒரு அங்குலம் குறைவு. பருமனில் முப்பத்தேழு அங்குலத்திற்கு ஒன்று அதிகம். அவர் பார்த்த பார்வையில், நடந்த நடையில் சுயம்பு பயந்துபோய் பச்சையம்மாவின் முதுகுப் பக்கம் ஒளிந்தபோது - இன்ஸ்பெக்டர் பூட்ஸ் காலால் ஒரு எகிறு எகிறினார். “எம்மா போனேனே” என்று அலறியபடியே பச்சையம்மா கீழே விழுந்து, சுயம்புவையும் விழத்தட்டினாள். அந்த இன்ஸ்பெக்டர், சுயம்புவை கழுத்தைப் பிடித்துத் தூக்கினார். அவரது கைகளே வாயாகி அவன் கழுத்தைக் கவ்வின. அப்படியே அவனைத் தூக்கி பச்சையம்மா மேலே போட்டார். சுயம்பு ஒலமிட்டான். “எக்கா, எக்கா. நான் என்ன பாடு படுறேன்னு பாருக்கா... பாருக்கா...” அக்கா மட்டும் இதைப் பார்த்தால்... இன்ஸ்பெக்டரை சும்மா விடுவாளா? எக்கா... எக்கா... இங்க வாக்கா இங்க வந்து பாருக்கா... ‘மரகதக்கா...’ இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்களை, ‘சம்திங்காக’ பார்த்துக்கொண்டு, “இந்த மைனர் பொட்டை சொல்லுற மேஜர் பொட்டைய ஏன் விட்டீங்க?” என்றார். உடனே ஒரு போலீஸ் இன்னொரு சலூட் அடித்துக் கொண்டு “சத்தியமா ரெண்டே ரெண்டுதான்” என்றார். இப்படித் தன்னை வம்பில் சிக்க வைத்த சுயம்பு கவனிக்கப் படவேண்டிய விதத்தில் கவனிக்கப் படுவான் என்பதுபோல் அந்த போலீஸ்காரர் அவனை பயமுறுத்திப் பார்த்தார். பச்சையம்மா, வாயில் ஊறிய ரத்தத்தை துடைத்துக் கொள்ளாமல் சுயம்புவின் வீங்கிப்போன நெற்றிப் பொட்டைத் தடவிவிட்டாள். பிறகு ஏங்கி ஏங்கி அழுதாள். அந்த அவல ஒலியின் பின்னணியில் இன்ஸ்பெக்டர் போர்க்குரல் கொடுத்தார். “ஏண்டா பொட்டை! அமைச்சருங்க. ஐ.ஏ.எஸ். அதிகாரிங்க நடமாடுற இடத்துல நடமாடக்கூடாதுன்னு ஒனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நீ அரவானுக்கு அறுக்கதுமாதிரி நான் அமைச்சருக்கு தாலி அறுக்கணுமா... பாரிமுனை பாலத்துக்குப் போக வேண்டியதுதானடா... ஒனக்கு புத்தி சொல்ற போலீஸ்காரங்க நாயா...? அந்த அளவுக்கு ஒனக்கு திமுரு! போலீஸ், மாமா மச்சான்னு நெனச்சிட்டே... இந்தாப்பா. இவங்கள கவனிக்கிற விதமா கவனியுங்க...” பச்சையம்மாவையும், அவள் மேல் கிடந்த சுயம்புவையும், காலால் ஒரு எத்து எத்தி, மறுபக்கம் தள்ளிப்போட்டு விட்டு, இன்ஸ்பெக்டர் வெளியே புறப்பட்டார். அதற்குமேல் அவர்களை அடிக்கவில்லை. அவருடைய அந்தஸ்துக்கு அவ்வளவுதான் முடியும். இதற்குமேல் துப்பாக்கிதான் அவருடைய அந்தஸ்து! ஆகையால் லத்திக் கம்பிடம் பொறுப்பை ஒப்படைத்தார். சுயம்பு, “மரகதக்கா, மரகதக்கா...” என்று மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி அழுதான். ஒரு தொப்பி மிரட்டியது. “ஏண்டா... மரகதக்கா எங்கடா இருக்காள்? எங்க இருந்தாலும் அந்தப் பொட்டப் பயல நான் சொன்னேன்னு ஸ்டேஷனுக்கு வரச் சொல்லணும்... தெரிஞ்சுதா...” சுயம்பு துடித்துப் போனான். கையைக் கட்டிய விலங்கை வைத்தே அவரை அடிக்கப் போவதுபோல் உடம்பை ஆட்டினான். இதைப் பார்த்து ஏதோ ஒன்றைப் புரிந்துகொண்ட ரைட்டர், தலையைக் கவிழ்த்தி, எழுதியபடியே யோசனை சொன்னார். “பச்சையம்மா அப்படியே இருக்கட்டும். அந்த சின்னப் பொட்டையோட டிரஸை எடுத்துட்டு ஜட்டியோட விடுங்க... பக்கத்துல எதையும் வைக்காதீங்க. தூக்குப் போட்டு சாகப் போறவன் மாதிரி முழிக்கான் பாருங்க. அப்புறம். சொல்றதைக் கேட்காமல் கஸ்டடி டெத், கற்பழிப்புன்னு வம்ப விலைக்கு வாங்காதீங்க...” ஒரு போலீஸ்காரர் ஜோக்கடித்தார். “கற்பழிப்புக்குப் பிறகுதான் சார் கஸ்டடி டெத்து. மாத்திச் சொல்லுறீங்க...” “ஒன்னமாதிரி ஆளுங்க பிணத்தைக்கூட கற்பழிப்பீங்க... மூள இருக்காய்யா ஒனக்கு. சீரியஸ் சமாசாரம் பேசறேன்னு தெரியல...” “எஸ் சார்...” இதற்குள், இந்தக் காவில் நிலையத்தின் பின் கதவு திறக்கப்பட்டது. மூன்று கான்ஸ்டபிள்கள் லத்திக் கம்புகளோடும், ரூல்தடியோடும் பச்சையம்மாவையும் சுயம்புவையும் தள்ளிவிட்டார்கள். பிறகு இவர்களும் துள்ளிக் குதித்து அங்கே போய் கதவைத் தாழிட்டார்கள். திறந்த வெளி. சுற்றுமுற்றும் சுவர். நான்கைந்து மரங்கள். ஒரு பெஞ்சில் ஒரு லுங்கிக்காரன் குறட்டை போட்டுத் தூங்கினான். அவன் தலைமாட்டில் ஒரு பெண். அவளும் தூக்கம். ஒரு போலீஸ் சுயம்புவின் சேலையை அவிழ்த்தார். ஜாக்கெட்டைக் கிழித்தார். பிறகு அவனை உற்றுப் பார்த்து, “பூ... இதுக்குத்தான் இவ்வளவு அமர்க்களமா...” பாவாடையைக் கீழே கொண்டு வந்தார். மெல்லக் கண்ணைத் திறந்தார். அவருக்கும் பொட்டைக எப்படி இருக்கும் என்று பார்க்க ஒரு ஆசை. ஆனால், அவன் ஜட்டி போட்டிருந்தான். அதற்காகவே, அவனை அடித்தார். லத்திக் கம்பால் குத்திவிட்டார். முட்டியைப் பிடித்து இழுத்து முட்டிக்கு முட்டி தட்டிவிட்டார். அவன் வலி பொறுக்காமல் அலறியபோது, பச்சையம்மா, “ஏற்கெனவே சூடுபட்ட பிறவிய்யா... அடிபட்ட உடம்புய்யா... அடிக்கணுமுன்னா அவளுக்கும் சேர்த்து என்ன அடியுங்கையா” என்று மருவினாள். மன்றாடினாள். கும்பிட்டாள். கும்பிட்ட கரங்களை எடுக்காமலே நின்றாள். போலீஸார் அந்தச் சவாலை, ஏற்றுக்கொண்டார்கள். ஒருவர் தோளைப் பிடித்து அவளை உட்கார வைத்தார். இன்னொருத்தர் முட்டிக்கால்கள் வரைக்கும் அவள் புடவையை மடித்துவிட்டார். பிறகு இரண்டு கால்களை நெருக்கி வைத்துக்கொண்டு, கால் பாதங்களை வளைத்துப் பிடித்துக்கொண்டார். ரூல்தடிக்காரர், அந்தக் கால்களில் அந்தத் தடியை வைத்து உருட்டினார். நிலத்தை ஏர்க்கலப்பை உழுவது மாதிரியான உருட்டல், உழுத நிலத்திலிருந்து வருவது போன்ற கசிவு. நீர் கொண்ட மண். ரத்தம் உண்ட சதை. பிராணனை பிடுங்கும் வலி. “எம்மா... எம்மா... முர்கே மாதா... இவனுவ வீட்லயும் ஒரு பொட்டை விழ! ஐயோ, என் கண்ணு போச்சே! ஐயோ என் காது போச்சே...!” அந்த இரவு முழுவதும், பச்சையம்மா வலி பொறுக்க முடியாமல் அலறினாள். சுயம்பு, அக்காவைப் பற்றி அவர்கள் சொன்ன சொல் பொறுக்க முடியாமல், முடங்கிக் கிடந்தான். காவலுக்கு இருந்த போலீஸாரும் அடித்த களைப்பில் தூங்கிவிட்டார்கள். அந்த, இருவரும் மாடுகள் கட்டப்பட்டதுபோல், சுவரில் உள்ள இரும்பு வளையங்களில், விலங்கோடு சேர்த்து கட்டப்பட்டி ருந்தார்கள். அந்த விலங்கோ சுயம்புவுக்குத் தலையணை... நாய்ச் சங்கிலி... ஆனால் நாய்கள் குலைக்கலாம். இவர்கள் குலைத்தால், அவர்கள் கடிப்பார்களோ... பச்சையம்மா, முனங்குவதைக்கூட, மெதுவாய் முனங்கினாள். வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|