உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
26 மறுநாள், காலை ஒன்பது மணி. இன்ஸ்பெக்டர், ரவுண்டுக்குப் புறப்படத் தயாரானார், ஜீப்பில் ஒயர்லெஸ் கருவி கத்தியது. அவர் மேஜையில் பொருத்தப்பட்ட மைக்கும் யார் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தது. சிலர் துப்பாக்கிகளை துடைத்துக் கொண்டிருந்தார்கள். போலீஸ் சித்திரகுப்தனான ரைட்டர் கேஸ் கட்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தார். இன்ஸ்பெக்டர், ஒரு ஓரமாய் ஒடுங்கி நின்ற குருவக்காவை ஓரம்கட்டிப் பார்த்தபடியே “எஸ்...” என்று இழுத்தார். இரண்டு கான்ஸ்டபிள்கள், சலூட்டோடு, இரு வரிசைகளைக் கொண்டு வந்தார்கள். மகளிர் அணி ஒரு பக்கம். ஆண்கள் அணி மறுபக்கம். இதற்குள் ஒருத்தர், சுயம்புவையும், பச்சையம்மாவையும் விலங்கோடு கொண்டு வந்து மத்தியில் நிறுத்தினார். பாதி பேருடைய முகங்கள் வீங்கி இருந்தன. இமைகள் பெருத்துக் கண்களை மறைத்தன. குருவக்காவைத் தட்டுத் தடுமாறிப் பாதிப் பார்வையால் அடையாளம் கண்ட பச்சையம்மா, கதறினாள். கதறிய வாயில் ஒரு லத்தித் தட்டு. கப்சிப். இன்ஸ்பெக்டர், மகளிர் அணியை ரசனையோடு அனுப்பி வைத்தார். ஆண்கள் அணியில் ஒரே ஒருவரை மட்டும் நிறுத்திவிட்டு, மற்றவர்களை வெளியே அனுப்பினார். அவர்கள் போனதும் கைவிலங்கோடு நின்ற பச்சையம்மாவை உற்றுப்பார்த்து, ‘பாடம்’ நடத்தினார். “ஒன் பேர்ல இன்னிக்கு மாற்றமில்ல... பச்சையம்மாதான்... அதோ நிக்கான் பாரு... பிச்சுமணி... அவன் கொடுத்த கால் கிலோ கஞ்சாவை காலேஜ் பக்கமா கொண்டு போகப் போனே... அதுக்காக அவன்கிட்ட முந்நூறு ரூபாயும் அட்வான்ஸா வாங்கிட்டே... அதுக்குள்ள... நானும் அந்தக் கான்ஸ்டபிளும் கஞ்சா கை மாறுனபோது வெடுக்குன்னு பிடிச்சிட்டோம்... நல்லா ஞாபகம் வச்சுக்க. கோர்ட்ல சொல்லும்போது மாற்றிச் சொல்லிடாதே, அப்புறம் லத்தி பிஞ்சுடும்.” பச்சையம்மா, புலம்பப்போனபோது, குருவக்கா சிறிது தைரியப்பட்டு, இன்ஸ்பெக்டர் முன்னால் வந்தாள். அவரைக் குனிந்து கும்பிட்டாள். சேவலாசனம் போட்ட முர்கேமாதாவை எப்படிக் கும்பிடுவாளோ, அப்படி அந்தத் துப்பாக்கி மனிதரைக் கும்பிட்டாள். கும்பிடும் கையுமாகக் கெஞ்சினாள். “ஸார்... ஸார்... நீங்க கூப்பிட்ட குரலுக்கெல்லாம் வாறவங்க நாங்க.. .குடிசைக்கு, நீங்க ஆள் சொல்லி அனுப்பினாலே போதும். நேர கோர்ட்டுக்கு வந்து செய்யாத குற்றத்தை செய்ததாயும், சொல்றோம்... கைக் காசுலேயே அபராதமும் கட்டறோம். இந்த ஒரு தடவை மட்டும் இந்த பச்சையம்மா செய்த குற்றத்தை கோர்ட்ல சொல்லுங்க சார்... பொய் கேஸ் வேண்டாம் ஸார்...” “ஏய் குருவக்கா... கிண்டலா பண்றே... ஒன்ன மாதிரி பொட்டைங்க விபச்சாரம் செய்யுறதா கோர்ட்ல வழக்குப் போட்டால், ஜட்ஜ் சிரிப்பார்... எனக்கே சிரிப்பு வரும்... அப்புறம் கொஞ்சநாளா ஒன்ன காணலை... ஏன்?” “கூவாகம் கோயிலுக்குப் போயிருந்தேன் சார். அப்புறம் கோர்ட்ல நாங்க செய்யுற தொழிலையே சொன்னா என்ன சார்? அப்படியாவது ஜட்ஜுக்கு கண் திறக்கட்டும்... சர்க்காருக்கு புத்தி வரட்டுமே...” “குருவக்கா... நீ ஒவராப் போறே... மாமூல்காரியேச்சுன்னு விட்டு வைக்கேன்.” “அந்தப் பாசத்துலதான் சார் நான் பேசுறேன். வேற இன்ஸ்பெக்டரா இருந்தால், பேசமாட்டேன் சார். தயவுசெய்து கேளுங்க சார்... எங்கள மாதிரிப் பொட்டைகளை... யாரும் வீட்டு வேலைக்குச் சேர்க்க மறுக்காங்க. சில்லறை வியாபாரம் செய்தால், பொறுக்கிப் பசங்க கிண்டல் பண்றாங்க... எங்களுக்கும் வயிறு இருக்கே சார். அதனாலதான சார் வேற வழியில்லாமல் இந்தப் பொழப்பு செய்யுறோம் சார்... நாங்களும், நல்ல குடும்பங்கள்ல இருந்து நாசமாகி வந்தவங்கதாங்க சார்... அதோ அது கூட என்ஜினியரிங் காலேஜ்ல படிச்சுது சார். அரசாங்கம் ஊனமுற்றவங்களுக்கு உதவி செய்யுது... பெண்களுக்கு எல்லாம் செய்யுது. ஆனால், பெண்ணாவும் ஆகாமல், ஆணாவும் போகாமல் அந்தரத்துல நிற்கிற எங்களுக்கு என்ன சார் செய்யுது... இவள விட்டுடுங்க சார். இல்லாட்டால் நிச வழக்கு போடுங்க சார்...” “ஒனக்காக என்ன வேணுமுன்னாலும் செய்வேன். ஆனால், இவள விடப்போறதாய் இல்ல...” “பொறுக்கிப் பயல்க எங்களை கத்தியக் காட்டி பணம் பறிக்காங்கன்னு ஒங்ககிட்ட எத்தனையோ தடவை எழுதிக் கொடுத்தோம். எழுதிக் கொடுத்ததைத்தான் கிழிச்சுப் போட்டிங்க. இதையாவது கேளுங்க சார். பங்களா விபச்சாரத்துக்கும், பப்ளிக் விபச்சாரத்துக்கும் என்ன சார் வித்தியாசம்... எங்கள மட்டும் ஏன் சார் இந்தப் பாடுபடுத்துறீங்க! போலீஸ் உறவும் பனைமரத்து நிழலும் ஒண்ணுன்னு சொல்றது சரியாப்போச்சே சார்!” “இந்தாய்யா டேவிட்... இவளயும் உள்ள தள்ளு... ஏண்டா பொட்டப் பயலே. எல்லாப் பொட்டைகளும் சொல்றதுமாதிரி நானும் ஒன்னை குருவக்கான்னு மரியாதையாய் பேசுறேன்... ‘அய்யோ பாவமுன்னு’ பார்த்தால் அதிகப்பிரசங்கித்தனமா செய்யுறே. இந்தாப்பா டேவிட்!” எங்கிருந்தோ ஓடிவந்த கான்ஸ்டபிள் டேவிட், இன்ஸ்பெக்டருக்கு முதலில் சலூட்டை அடிப்பதா, அல்லது குருவக்காவை அடிப்பதா என்று யோசித்தார். ஆனாலும், சலூட்டைவிட, அடிப்பதில் ஒரு சந்தோஷம் கிடைக்கும் என்பதால் குருவக்காவின் பிடறியில் ஒன்று போட்டார். இன்ஸ்பெக்டர் அதற்குமேல் அடிக்காமல் தடுத்து விட்டார். பிறகு வெட்டொன்று துண்டொன்றாய் பேசினார். “நீ தலைகீழ நின்னாலும் கஞ்சா கஞ்சாதான். கடத்துனது பச்சையம்மாதான்...” குருவக்கா, விரக்தியுடனும், வெறுமையுடனும் கேட்டாள். “அபராதம் எவ்வளவு சார் போடுவாங்க...” “அப்படிக் கேளு. புத்திசாலி. ஐநூறு ரூபாய்க்குக் குறையாது... இல்லாவிட்டால், ஒரு மாதம்.” குருவக்கா, பச்சையம்மர்வைப் பார்த்தாள். அதில் பாதிக் குற்றப்பார்வை. பச்சையம்மா புலம்பினாள். “ஒன் பேச்சைக் கேட்காதது தப்புத்தாங்கா... டிரங் பெட்டிக்குள்ள பேப்பர் மடிப்புக்குக் கீழே இருநூறு ரூபா இருக்குது. ரிக்ஷா மணி, பத்திரமா வச்சுக்கச் சொல்லிக் கொடுத்தது. முர்கேமாதா படத்துக்குப் பின்னாலே கஷ்டப்பட்டு வாங்குன கால் பவுனு தங்க மோதிரம் வச்சிருக்கேன். அய்யோ... கடவுளே. என் மவளுக்காக பாக்கேன். இல்லாவிட்டால், அபராதம் கட்டாமல், ஜெயிலுக்கே போவேன்! மகளே... என் மகளே... கவலைப்படாதே என் மகளே.” பச்சையம்மா, சுயம்புவை நெருங்கப் போனபோது, அவன் வீறாப்பாய் சிறிது விலகிக் கொண்டான். இன்ஸ்பெக்டர் உச்சரித்த டேவிட் என்ற வார்த்தை அவனை சிலிர்க்க வைத்தது. ‘டேவிட்... என் நிலமையைப் பார்தீங்களா டேவிட்! அன்றைக்கு என்னைக் காப்பாற்றுனது மாதிரி இன்னைக்கும் காப்பாற்றுவீங்களா டேவிட்! இந்தப் பச்சையம்மாவால நான் படுற பாட்டைப் பாருங்க டேவிட். பாவம் அவளும்தான் என்ன செய்வாள் டேவிட்...’ குருவக்கா, இன்பெக்டரிடம் நல்வார்த்தை கேட்டு விட்டுப் போக வேண்டும் என்பதுபோல் கால்களைத் தேய்த்துத் தேய்த்து நின்றாள். அவரோ, எதையும் படிக்காமல் கையெழுத்துக் கையெழுத்தாய் போட்டுக் கொண்டிருந்தார். உடனே குருவக்கா, பச்சையம்மாவைப் பார்த்து ‘கோர்ட்டுக்கு வாறேன்’னு குரல் எழுப்பாமலே அந்த வார்த்தைகளை மனதுக்குள் சொல்லி, அதற்கு ஏற்ப உதடுகளை ஆட விட்டாள். பிறகு, மெள்ள மெள்ள நகர்ந்தாள். இதற்குள், சகல போலீஸ் சம்பிரதாயங்களையும் உணர்ந்த ஒரு போலீஸ்காரர் பச்சையம்மாவின் விலங்குப் பூட்டைத் திறந்தார். சுயம்புவின் விலங்கும் திறக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், முகத்தைத் திருப்பாமலே ஆணையிட்டார். “பச்சையம்மாவ மட்டும் வேன்ல ஏத்து. சின்னப் பொட்டையப் பற்றி அப்புறம் யோசிக்கலாம். பின்னாலகொண்டு போய் நிறுத்து.” ஒரு கையில், இரு விலங்குகளை வைத்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவர், இன்னொரு கையால், சுயம்புவின் கையைப் பிடித்து இழுத்தார். பச்சையம்மா இன்ஸ்பெக்டரை காலைத் தொட்டுக் கும்பிட்டாள். கும்பிட்ட கையோடு நிமிர்ந்தாள். “நான் பெறாமல் பெற்ற பிள்ளை சார். என்னோட அனுப்பி வையுங்க சார்: அவளுக்கும் சேர்த்து அபராதம் கட்டுறேன் சார்...” “எனக்குத் தெரியும்... என்ன செய்யனும்முன்னு. இனிமேல் அந்தப் பொட்டையை நீ பார்க்க முடியாது...” பச்சையம்மா, சிறிது திகைத்து நின்றாள். அவர் சொன்னதன் பொருள் புரிந்து அதிர்ந்து போனாள். மீண்டும் ஒரே ஒரு சொல்லில் சொல்ல வேண்டிய அத்தனையையும் ஏற்றி வைத்துச் சொன்னாள். “சார்... சார்... சார்... சார்...” இன்ஸ்பெக்டர், இப்போது பச்சையம்மாவைத் திரும்பிப் பார்த்தார். “அந்த சின்ன பொட்டையை வச்சு. நீ பொழப்ப நடத்தணும். நான் அதுக்கு ஆமாம் போடணுமா... இவன எப்படிக் கவனிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்... ஏம்பா! நீங்களும் பொட்டைங்களா இவன வேன்ல ஏத்துங்களேப்பா!” சுயம்புவை ஒரு கான்ஸ்டபிள் பின்னாலும், பச்சையம்மாவை இரண்டு பேர் முன்னாலும் இழுத்துக் கொண்டு போனார்கள். பச்சையம்மா, திரும்பித் திரும்பி கத்தினாள். ‘என்ன செய்யணுமோ செய்யுங்கடா’ என்று சொல்வது போல் விரக்திப் பார்வை போட்ட சுயம்புவைப் பார்த்து ஒப்பாரி வைத்தாள். “நான் ஒன்ன பொழப்புக்கு அனுப்ப மாட்டேன் மவளே. இவங்க ஒன்ன எங்க அனுப்பி வச்சாலும் எங்கிட்ட ஓடி வந்துடு மவளே... இவங்க என்ன பாடு படுத்துனாலும் அதுக்கு மருந்து போட நான் இருக்கேண்டி... நீ வாரது வரைக்கும் நான் உண்ணவும் மாட்டேன் ஒறங்கவும் மாட்டேன்... ஒன்ன போலீஸ் வரைக்கும் கொண்டு வந்துட்டேனே மவளே...” பச்சையம்மாவை, போலீஸ்காரர்கள் மீண்டும் அடிக்கப் போனார்கள். அவளோ வாயிலும் வயிற்றிலும் தலையிலும் அடித்துக்கொண்டு கால்களைத் தரையில் தூக்கித் தூக்கிப் போட்டுக்கொண்டும் அல்லோகல்லோலப் பட்டதால், அந்தப் போலீஸ்காரர்களுக்கு அவளிடம், அடிக்க இடம் கிடைக்கவில்லை. அந்த ஏமாற்றத்தை அவளை இழுப்பதில் ஒரு வேகமாக்கி, வேனுக்குள் ஏற்ற, வெளியே கொண்டு போனார்கள். வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|