27

     சுயம்பு, ஆண் என்றோ, பெண்ணென்றோ தன்னை அடையாளம் காணாமலும் அடையாளப்படுத்திக் கொள்ளாமலும், ஏதோ ஒரு ‘பிறவி’ என்பது போல் நின்றான்.

     இன்ஸ்பெக்டர், அவன் உடலனைத்தையும், தேடிப் பார்த்தார். ஜட்டியோடு மட்டுமிருந்தாலும், அந்தப் பார்வை தாங்கமாட்டாது சுயம்பு, தனது கைகளை எடுத்து குறுக்கே போட்டுக் கொண்டான். அவனை அடிப்புதற்காக எழுந்திருக்கப் போனவர், அவன் முகம் மாவுபோல் குழைந்திருப்பதையும், கண்கள், பார்வைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும் இருப்பதைப் பார்த்துவிட்டு, சிறிது இறங்கினார், இரங்கினார். ஆனாலும் குரலில் எந்தக் குழைவையும் காட்டாமல் அதட்டினார்.

     “ஒரு நாளைக்கு எவ்வளவுடா சம்பாதிக்கிறே. எத்தன பேருகிட்டடா...”

     சுயம்பு, இரு கைகளையும் விரித்துக் காட்டினான்.

     “நீ ஏதோ என்ஜினியரிங் காலேஜில படித்ததா பெரிய பொட்டை சொன்னான். எந்தக் காலேஜுடா... சொல்றியா. முதுகுத் தோலை உரிக்கணுமா?”

     சுயம்பு பேசப் போவதில்லை என்பதாய் நின்றான்.

     “போலீஸ் எதுக்கு இருக்குதுன்னு நெனச்சடா... ஒன்ன மாதிரி பொட்டங்களை இஷ்டத்துக்கு விட முடியுமா? சொல்றியா... இல்ல முட்டிக்கு முட்டி வாங்கணுமா...”

     சுயம்பு, மார்பில் குறுக்காய்க் கிடந்த கைகளை எடுத்துக் கீழே போட்டு, முட்டிகளை இடுப்புப் பக்கமாக மறைத்துக்கொண்டான்.

     “பொறுக்கிப் பயலே. மரியாதையா கேக்கிறதுக்கு பதில் சொல்லு. இல்ல. ஒன் கூட இருக்கிற பொட்டப் பயலுவ எல்லாரையும், இங்கே கூட்டிவந்து முட்டிக்கு முட்டி தட்டுவோம். ஒன் அம்மாவா... பச்சையம்மா. அந்தப் பயல தட்டுற தட்டுல அவள் தானாச் சொல்லிடுவாள். அப்புறம் ஒன்ன பிழைப்பு நடத்த இங்க அனுப்பி வைச்சிருக்கறதா குற்றம் சாட்டி, ஒப்பனையும், ஒம்மாவையும் ஊர்லருந்து, இங்கே, விலங்கு பூட்டி இழுத்துட்டு வருவோம். போலீஸ்ன்னா லேசு இல்லடா. கிராமத்துப் பயல் மாதிரி தெரியுது. உள்ளதச் சொல்லு.”

     சுயம்பு அழுதான். பலமாக அல்ல, மெதுவாக.

     “சொல்றேன். எங்க அம்மாவ விட்டுடுவீங்களா... அப்போ வேனுல ஏறுனாங்களே...”

     “அவளா ஒங்க அம்மா...”

     “அப்படின்னு அவங்கதான் சொல்றாங்க. அவங்கள விட்டுடுவீங்களா!”

     “எங்களுக்கு அதைவிட வேற வேலை இருக்குடா. சொல்லு.”

     “ஊரு நல்லாம்பட்டி. மதுரைக்கும், துரத்துக்குடிக்கும் மத்தியில... அப்பா பேரு பிள்ளையார் என்ஜினியரிங் காலேஜ்ல படிச்சேன்! சேல கட்டிக்க ஆசை வந்தது. அந்த ஆசை எங்க அக்கா கலியாணத்தையும் அடிச்சுட்டு போயிடிச்சு.”

     சுயம்பு, அந்த இன்ஸ்பெக்டரையே ஒரு ஆறுமுகப் பாண்டியாக, நினைத்ததுபோல் அழுதான். அழுது அழுது, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னான். அவனுக்கு, தான் இப்படி ஆகிவிட்டோம் என்பதைவிட, அக்காள் கலியாணம் நின்றுபோனதே பெரிதாய்த் தெரிந்ததைப் புரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர், சிறிது சிறுமைப்பட்டார். “நானும் இருக்கேன்... எனக்கும் ஒரு சிஸ்டர். அவளையும் ஒரு கிரிமினலாவே பார்க்கேன்.”

     இன்ஸ்பெக்டர் இப்போது மனிதக் குரலில் பேசினார்.

     “இந்தாப்பா. இவன எதுவும் செய்யாதீங்க. இவனுக்கு எங்க ஊர்ப்பக்கம்... இவன் ஏரியா போலீசுக்கு இன்பர்மேஷன் கொடுத்துடுங்க... இவன அவங்கமூலம் இவன் வீட்ல ஒப்படைக்கணும். அந்தப் பொட்டப் பயல்வள இவனப் பார்க்க விடாதீங்க. ஏதாவது வாங்கிக் கொடுங்க. அங்கே போய் உட்காருடா...”

     சுயம்பு, தானே தன்னைக் கைது செய்துகொண்டு போவது போல் போனான். பின் பக்கமாகப் போனான். எவரோ ஒருத்தர் மப்டியில் வந்தார். போலிஸோ... கிரிமினலோ... அவனுக்கும், தனக்கும், டீயும் பன்னும் வாங்கிவரச் சொன்னார். இதற்காகவே ஓரங்கட்டியிருந்த லாக்கப்பிலிருந்து ஒருவரை பத்து நிமிடத்திற்கு ‘தேநீர் ஜாமீனில்’ விடுவித்தார்.

     அந்தக் காவல் நிலையத்தில் கொல்லைப்புறத்தில் போடப்பட்ட பெஞ்சில் உட்கார்ந்து பன்னைக் கடித்து தேநீரை உறிஞ்சிவிட்டு, சுயம்பு அந்த பெஞ்சிலேயே முடங்கினான். அங்குமிங்குமாய், போலீஸ் நடமாட்டம். ஒரு பெட்சீட் வந்தது. ‘இன்ஸ்பெக்டரின் அண்டை ஊர்க்காரனுக்கு, இதுகூடச் செய்யாவிட்டால் எப்படி... அநேகமா சொந்தக்காரனா இருக்கணும்... இன்ஸ்பெக்டர், கெளரவத்துக்காக மறைக்கான்...’

     சுயம்பு, திடீரென்று ‘எக்கா’ என்று சொல்லி, வீறிட்டு எழுந்தான். தூக்கம் கலைந்து, துக்கம் வந்தது. அந்த அக்காவிடம் தன்னை அழைத்துப் போகிறார்கள் என்பதில் ஒரு சந்தோஷம். ஆனாலும் அந்த சந்தோஷத்தை அடுத்த நிமிடத்தில் ஒரு சந்தேகம் துரத்தியது. ‘எதுக்குப் போகணும்? இனிமேல் அக்காவுக்கு நடக்கப்போற கலியாணத்தை தடுக்கவா... என் காதலைக் கெடுத்திட்டியேன்னு தங்கச்சிகிட்ட திட்டு வாங்கவா... அம்மாவ, ஒரு பாவமும் அறியாத என் அம்மாவ பழையபடியும் திட்டவா? இதுல்லாம் கெடக்கட்டும். முகவரியோட பணம் அனுப்பி வெச்சேன்... மூஞ்சியில் அடித்தது மாதிரி திருப்பி அனுப்பிட்டாங்க. அது என் வீடுல்ல... நான் இன்னும் அக்காவுக்கு தம்பி, பெத்தவங்களுக்கு பிள்ளை. ஆனால் தம்பிக்கு அக்கா இல்ல. பிள்ளைக்கு பெத்தவங்களும் இல்ல...

     சுயம்பு, வீறாப்பாய் உட்கார்ந்தான். மாட்டேன், பார்க்க மாட்டேன்; போனால்தானே பார்க்க. அப்போ...

     சுயம்பு, அங்குமிங்குமாய் நோட்டமிட்டான். பின் பக்கமும், கிழக்குப் பக்கமும் சின்னச் சுவர்கள்தான். ஒரே தாவில் குதித்து விடலாம். தப்பித்தாக வேண்டும். இல்லையானால், வீட்டுக்குக் கொண்டு போகப்பட்டு, அந்த வீடே ஒரு லாக்கப்பாகும். இவன் பிரச்னையே, அந்த வீட்டுக்கு ஒரு தண்டனையாகும்.

     சுயம்பு, கிழக்குப் பக்க சுவர் அருகே போனான். எக்கிப் பார்த்தான். சரிப்படாது. ஏதோ ஒரு கம்பெனி... பழையபடியும் பிடிபட்டு, முன்பக்கம் வழியாய் இந்தப் பின்பக்கத்திற்குக் கொண்டுவந்து விடுவார்கள். அவன், அந்தச் சுவரைப் பிடித்தபடியே பின்பக்கமாய் வந்தான். எட்டிப் பார்த்தான். குடிசைப் பகுதி. இதற்கும் அந்தப் பகுதிக்கும் இடையே ஏகப்பட்ட மரியாதைத் தனமான இடைவெளி.

     அந்தச் சுவரில் கை போடப்போன சுயம்பு, தன்னையே பார்த்துக் கொண்டான். ஜட்டி. இதோடு போனால், அவன் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறானே, கீழ்ப்பாக்கம், அங்கே சேர்த்துவிடுவார்கள். அவன் மீண்டும் இருந்த இடத்திற்கே வந்தான். இப்போது போலீஸ் நடமாட்டம் முன்பக்கம்கூட அதிகமாக இல்லை. லேசாய் பின் கதவைச் சாத்தினான். கீழே குவியலாய்க் கிடந்த சேலையைப் பார்த்தான். அதன் மேலேயே பல பூட்ஸ் தடங்கள். அவன் அந்தப் புடவையை எடுத்தான். பச்சைக்கரை போட்ட வெளிர் மஞ்சள் புடவை. கட்டலாமா... பட்டறிவு எச்சரிக்க, அவன் பகுத்தறிவுவாதியானான். அந்தச் சேலையை அவன் இரண்டாகக் கிழித்தான். ஒன்றை இடுப்பில் சுற்றிக் கொண்டான். ஒன்றை இடுப்புக்குமேல் கழுத்துவரை சுற்றி உடம்பின் ஒரு அங்குல இடைவெளி தெரியாமல் தன்னை மறைத்துக் கொண்டான். மறைந்து கொண்டான்.

     ஆனாலும், அவனுக்கு ஒரு உறுத்தல், போலீஸார் தன்னை இவ்வளவு தூரம் நம்பும்போது, இப்படிப் போகலாமா? ‘ஏன் போகக்கூடாது. காரணம் இல்லாமல் என்னை எதுக்காகக் கொண்டு வரணும். இந்தக் காரணமின்மையே நான் தப்பிக்க ஒரு காரணம்.’

     சுயம்பு, பின்புறமாய் நகர்ந்து, அந்தச் சுவரைப் பிடித்தபடியே காவல் நிலையத்தின் பின் சுவர்ப்பக்கம் வந்தான். இரண்டு கைகளையும், ஊன்றியபடி ஒருபக்கமாய் உடலைச் சாய்த்து, அதில் ஏறினான். மறுபுறம் ‘காவாய்ச்’ சுவரில் குதித்தான். நல்லவேளை, யாரும் பார்க்கவில்லை. கிழக்குப் பக்கமாக ஓடினான். ஒரு முட்டுச் சந்து அங்கிருந்து, தெற்குப் பக்கமாய் போய், குடிசைப் பகுதிக்குள் மறைந்து. அதன் மேற்குப் பாதை வழியாய் நடந்து. மனிதக் கூட்டத்தில் கரைந்து அங்குமிங்குமாய் திரும்பித் திரும்பி ஓட வேண்டிய வெட்ட வெளியில் ஓடி, நடக்கவேண்டிய சந்தடிப் பகுதியில் நடந்து, நிற்க வேண்டிய ‘பல்லவப்’ பகுதிகளில் நின்று -

     சுயம்பு எப்படியோ சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டான். ஏதோ ஒரு போலீஸ் ஜீப் அவன் பக்கமாக நகர்வது போல், ஒரு மாயை. டிக்கெட் வாங்கப் போவது போல் ஓடினான். ஒரு இடுக்கு கவுண்டர் வழியாக நடந்து மறுபக்கம் போய் மற்றொரு வாசல் வழியாய் உள்ளே காத்திருப்போர் கூட்டத்தில் கலந்து கொண்டான். பயணச் சோர்வில் படுத்தவர்கள். பயணத்திற்காகத் துடிப்பவர்கள்... எதுவுமே புரியாமல் விழிப்பவர்கள்... அழுகின்ற குழந்தைகள், எங்கும். ஏதோ ஒரு அவலச் சத்தம் மாதிரியான ஓசை. சிறிது நேரத்தில் சில போலீஸ் தொப்பிகள்...

     சுயம்பு எழுந்தான். தலையில் முக்காடு போட்டுக் கொண்டான். மஞ்சள் ஆடை கட்டிய ராமலிங்க சுவாமிகள் மாதிரியான தோற்றம். போலீஸிடமிருந்து தப்பிக்க, அந்தச் சேரியின் சேரிக்குப் போகவேண்டும் என்ற ஒரு சின்ன எண்ணம் கூட அவனுக்கு ஏற்படவில்லை. அதை நினைப்பதற்கே மறுத்தான். அந்த வாசத்தை ஏதோ ஒரு கெட்ட கனவு என்றே நம்பினான். அங்கே போவதைவிட எங்கே வேண்டுமானாலும் போகலாம். ஆனாலும் அந்தப் பச்சையம்மா மேல் ஒரு பச்சாதாபம்.

     ஏதோ ஒரு ரயில் கூச்சலிட்டது. அது, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்பதுபோல், அதை நோக்கி ஓடினான். கண்ணுக்குத் தெரிந்த போலீஸ் தொப்பிகளில் அவனைக் கட்டியடித்தவர்களும் இருப்பதாக அவனுக்கு ஒரு அனுமானம். அவர்களும் தன்பக்கம் நகர்வதுபோன்ற எண்ணம். அவன் ஓடினான். அந்த ரயில் பெட்டியில் ஒரு பிடியைப் பற்றியபோது, கால்கள் தரையில் உராய்ந்தன. உள்ளே நின்ற யாரோ இரண்டு பேர், அவன் கையைப் பற்றி உள்ளே இழுத்துப் போட்டார்கள். பயணிகளின் இருக்கைக்கு அப்பாலுள்ள எல்லைப்புறம். நான்கைந்து பேர் நின்றார்கள். அத்தனைபேரும், வாழ்க்கையைத் தொலைத்தவர்களாய், அல்லது அதற்குள் தொலைந்தவர்களாய்த் தோன்றினார்கள். அந்தப் பக்கம் வந்த பயணிகள் அவர்களை முறைத்துப் பார்த்தார்கள்.