28

     ரயில், தாலாட்டாய் ஓடியது... தடா தடாவாய் ஓடியது. அதன் சத்தத்தைப் பலர் தங்களின் மனோபாவத்திற்கு ஏற்ப ஒலியமைத்துக் கொள்ளலாம், ‘போறேனே... போறேனோ' என்றோ, ‘அய்யாவே... அம்மாவே’ என்றோ.

     விஜயவாடாவுக்கு ரயில் வந்தபோது டிக்கெட் இன்ஸ்பெக்டர் தலையைக் காட்டினார். அங்கே நின்ற மானுட மீறல்களையும், கழிவுகளையும் கீழே தள்ளி விட்டார். சுயம்புவின் முறை வந்ததும் நிமிர்ந்து பார்த்தார். ‘பாலயோகியோ... இந்த வயதிலேயே இப்படி ஒரு சந்நியாசமா... இப்படி ஒரு ஒளி மயமா...’

     டிக்கெட் சோதகர் சுயம்புவைக் கையெடுத்துக் கும்பிட்டு வழிகாட்டினார். பயணிகள் பக்கம் வந்து ஒரு இடத்தைக் காட்டிப் பணிவோடு நின்றார். சுயம்பு அந்த இடத்தில் உட்கார்ந்து, அவரைப் பார்க்காமல் அப்படியே கண்களை மூடினான். அதையே ஒரு யோகமாகவும், இலவசப் பயணத்திற்கு அனுமதித்த தன்னைப் பற்றித்தான் அவர் தியானிக்கிறார் என்றும் சோதகர் நினைத்தார். சுயம்பு, தற்செயலாய் அவரைப்பார்த்து லேசாய் சிரித்தபோது, அதை ஆசீர்வாதமாகக் கொண்டார். மகான் தரிசனம், பாபவிமோசனம் லஞ்ச விசாரணையில் வெற்றி கிடைக்கும். சீனியர்களுக்கு முன்பாகவே புரமோஷன் கூட வரலாம்...!

     அந்தப் பெட்டியில், ஒரு தமிழ்முகம் கூட இல்லை. அத்தனைபேரும் இந்திக்காரர்கள். ஏதோ, ஒரு மதச்சடங்கிற்காக ஒரு பெட்டியையே சட்டப்படி ‘வளைத்து’ப் போட்டிருந்தார்கள். டிக்கெட் சோதகர் திரும்பித் திரும்பி பார்த்துச் சென்ற சுவாமிஜியை, அவர்களும் பார்த்துக் கொண்டார்கள். பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; என்றாலும் சிறிதாகவும் நினைக்கவில்லை. அவ்வப்போது. சப்பாத்தி, பூரியை நீட்டினார்கள்.

     அந்த ஜி.டி ரயில், இரவையும் பகலையும், உருட்டி விட்டு ஓடியது. இரண்டு இரவுகளையும், ஒரு பகலையும் கழித்துக்கட்டிவிட்டு, ஒருநாள் முழுவதும் ஓய்வெடுக்கப் போவதுபோல், காலையிலேயே புதுதில்லி ரயில் நிலையத்தில் வந்து நின்றது.

     சுயம்புவுக்கு அந்த ரயில் நின்றதுசுட நினைவில்லை. சில மனிதர்களைக் கழித்துவிட்டு, சில மனிதர்களைக் கூட்டிவிட்டு, அது மீண்டும் புறப்படும் என்று நினைத்தான். அவன் பாட்டுக்கு உட்கார்ந்து கொண்டான். எப்படியோ அந்தப் பெட்டியின் வெறுமை புரிந்து, கீழே இறங்கினான். டிராலி வண்டிச் சத்தங்கள். பிரிந்தவர் கூடிப் பேசிய பேச்சுக்கள். ஆயிரம் தலைகொண்ட அதிசயப் பிறவி ஒன்று நகர்வது போன்ற மனிதக்கூட்டம். ‘க்யா காலே... ஏமண்டி. எந்தா...யா...’ போன்ற வார்த்தைகள் அத்தனைக்கும் பொதுவான இன்னொரு வார்த்தை... ‘அச்சா’

     சுயம்பு, தனக்கு ரயிலில் கிடைத்த மரியாதையின் காரண காரியங்கள் புரியாமல், தன் பாட்டுக்கு நடந்தான். முன்னால் ஒரு சத்தம் ‘மனுஷன் போவானா... ஊருக்கு... என்ன தருவோம்னுதான் பாக்காங்களே தவிர, என்ன வேணும்னு கேட்கலை. நீங்க ஒண்ணு. அது ஒங்களோட பார்வை. எனக்கு இந்த ரயிலிலேயே இங்கயே நின்னு திரும்ப ஊருக்குப் போகலாம்னு ஒரு ஆசை வருது.’

     சுயம்பு, அந்த ரயிலை தேவதூதுவனாகவும், அசுர உருவாகவும் அனுமானித்த அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும், இணையாக நடந்து இரும்புப்படிகளை ஏறி, அவர்கள் பக்கமாகவே நடந்தான். மூன்று நாட்களுக்குப் பிறகு முதல் தடவையாய்த் தமிழைக் கேட்டது மகிழ்ச்சியாக இல்லையென்றாலும், துக்கச் சுமையைக் குறைத்தது. அவர்கள் மெளனமாக நடந்தபோதெல்லாம், இவன் பேசுங்கள், பேசுங்கள் என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். ஆகாயப் பாலத்தில் அவர்கள் பக்கமே நடந்து, அவர்கள் பக்கமே இறங்கினான். இதற்குள் அவர்கள் கையிலுள்ள சூட்கேஸ்களையும். ஒரு சின்ன சுமையையும் பறிக்கப்போன ஆட்டோ புரோக்கர்களை தமிழில் திட்டிவிட்டு, “ஆபீஸ் கார் ஆயகா... ஆபீஸ் கார் வரும்” என்று ஒரு பொய்யை ஆசையாகச் சொல்லிவிட்டு, ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தார்கள். சுற்றிலும் தமிழ் இல்லா ஓசை. ஒன்றும் புரியாத அச்சாக்கள்... அந்த அந்நியக் கூட்டத்தில் சுயம்புவிற்கு அந்தத் தம்பதியர் தன்னைப் பெற்றவர்கள் போலவே தோன்றியது. பிறர் பேசும் முன்பு பேசிப் பழக்கப் படாதவன், அவர்கள் முன்னால் போய் நின்றான். ஏதோ ஒரு தமிழ்ப் பாசம்... தனித்துப் போய்விடவில்லை என்ற ஆறுதல் அவர்களிடம் முகம் கூப்பிக் கேட்டான்.

     “சார் நீங்க தமிழா...”

     “ஆமா... அதுக்கென்னயா இப்போ...”

     சுயம்புவிற்கு, அப்பா போட்ட சூடு நினைவுக்கு வந்தது. அண்ணன் கொடுத்த அடி, நெஞ்சுக்குள் தாண்டவமாடியது. ஆனாலும், அவர்கள் அடித்துவிட்டு அணைப்பவர்கள். இவர்களோ, அதற்குமேல் அவனிடம் முகம் கொடுக்க மறுத்து, போலீஸ் கண்காணிப்போடு ஆட்டோ, டாக்ஸிகளில் ஏறும் பயணிகள் வரிசையில் முன்னோக்கி நகரும் மனித மூடிகள்.

     சுயம்பு, வெறுமையோடு ரயில் நிலையத்திற்கு வெளியே வந்தான். சுற்றுப்புறம் அற்றுப் போனது போல் பார்த்தான். இதுவேதான் தனக்குச் சுற்றம் என்பது போலவும் எண்ணினான். ஆங்காங்கே தமிழ் பேசிக் கொண்டே நடந்தவர்களின் அருகே நடந்து பார்த்தான். ஒரு தள்ளு வண்டியில் மிளகாய்ப் பொடி தூவிய வெள்ளரிக்காய்களை கவ்வியபடியே தமிழை வடிகட்டிப் பேசியவர்களைப் பார்த்தான். பீடிகைப் பேச்சாக ‘டைம் என்ன சார்’ என்று கேட்டுப் பார்த்தான். பார்க்கப்பட்ட தமிழ் முகங்கள் எல்லாம் இந்தி மயமாயின. இவனுக்குப் பாராமுகமாயின.

     சுயம்பு இப்போது தமிழ் வேறு, தமிழன் வேறு என்பதுபோல் நின்றவர்களை நெடுமரமாய்க் கருதி அங்குமிங்குமாய்ப் பார்த்தான். சிறிது தொலைவில், ஆகாயப் பாலத்தில் இரண்டு ஜோடி பஸ்கள். எதிரும் புதிருமான வாகனங்கள். அதற்குக் கீழே பின்வாங்கிய இடத்தில் ஆரிய சமாஜ் ரோடு என்ற இந்திப் போர்டுகளைச் சுமந்த டி.டி.சி. பஸ்கள். நமது பல்லவனின் சகாக்கள். சுயம்பு அந்தப் போர்டைப் பொறுத்தவரை ஒரு தற்குறி. ஆனாலும் அந்த பஸ் வந்து திரும்பி நின்றது. அதற்குள், ஆடுமாடுகள் கூட அப்படி ஏறாது. டில்லி மனிதர்கள் பெண்டாட்டியைக் கூட கீழே தள்ளிப்போட்டு விட்டு படி ஏறுவது போலிருந்தது. இந்த பஸ்ஸிற்கு எதிர்ப்புறம் நான்கு இருக்கைகள் கொண்ட சைக்கிள் ரிக்ஷா மாதிரியான ‘யந்திர பட்பட்’கள். இவை போட்ட கூச்சல்கள். திரும்பிப்பார்த்தால், மோடாக்கடைகள். சோபா செட் போட்ட தேநீர்க் கடைகள். பாய்லருக்குப் பதிலாக ஸ்டவ் அடுப்பில் அவ்வப்போது கைப்பிடி உள்ள ஒரு ஈயப் பாத்திரத்தில் பாலையும் வெந்நீரையும் கொட்டித் தயாரிக்கப்படும் திடீர் உஷ்ண பானங்கள். நடுத்தெருவிலேயே சூட்கோட் போட்டிருந்தவர்கள் கூட, அங்கேயே ஒளிவு மறைவு இல்லாமல் வெந்த முட்டைகளைத் தின்று கொண்டிருந்தார்கள். பல்வேறு வித சத்தங்கள். யந்திரச் சத்தம். ஒரு மந்திரச் சத்தம். ஓடும் சத்தம். இருமும் சத்தம். பேச்சே இல்லாத பெருஞ்சத்தம். ஆக மொத்தத்தில் அந்தப் பகுதி மொழியின்றிப் பேசிக்கொண்டிருந்தது.

     சுயம்புவுக்கு இலக்குப் புரியவில்லை. அந்த அம்மா சொன்னதுபோல், மீண்டும் அதே ரயிலைப் பிடித்து ஊருக்குப் போகலாமா என்று ஒரு சின்னச் சிந்தனை. மனதிற்குள் போட்ட அந்த விதை, மரமாய் மாறுமுன்பே, அவன் அதை முளையிலேயே கிள்ளிவிட்டான். இருபத்து ஐந்து ரூபாய்க்கும் பெறாதவன் அவன்.

     சுயம்புவின் கண்கள் மீண்டும் பொங்கின. கழுத்திற்குள் ஏதோ ஒன்று உள்பிடி போட்டது போன்ற நெரிச்சல். கருப்பாய் ஏதோ ஒன்று உருண்டு திரண்டு, அவன் உடல் முழுவதையும் ஆக்கிரமிப்பது போன்ற தள்ளாமை, அக்காவைப் பற்றிய சிந்தனை. ‘எக்கா... எக்கா... நான் இருக்குமிடம் ஒனக்குத் தெரியுமா அக்கா. நான் தவிக்கும் தவிப்பு ஒனக்குத் தெரியுமாக்கா. நீ அங்கிருந்து என்னையும், நான் இங்கிருந்து ஒன்னையும், ஒளி வேகத்தில் - விநாடிக்கு ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் மைல் வேகத்தில் பார்ப்பதாய் நினைக்கேன் அக்கா. உன் கை நீண்டு நீண்டு, நீள நீள அதுவே அழகாகி இங்கிருந்தபடியே, என் தலையைக் கோதிக் கொடுப்பதாய் தவிக்கேன் அக்கா. நானும் என் தலையை... கால்களை நகர்த்தாமலே கொக்குபோல் நீட்டி, நீட்டி, ஆகாய மின்கோடாய் ஆகி ஆகி, ஒன் மடியில் முகம் வைக்கேன் அக்கா. முகமறியா மனிதரக்கா. ஒவ்வொருவரும் இங்கே அந்நியமாய்ப் படும்போது, நீ நெருங்கி நெருங்கி வாறேக்கா. அக்கா. ஒன்னைப் பார்ப்பேனோ மாட்டேனோ. பார்ப்பேன்னு வாழவா... பார்க்கமாட்டேன்னு சாகவா...’

     சுயம்பு பொங்கிப் பொங்கிக் குமுறுவதை சுற்றுமுற்றும் நிற்பவர்கள் பார்ப்பது போலிருந்தது. ஆனாலும், அவனை வேடிக்கையாகப் பார்க்கவில்லை. இதெல்லாம் சகஜம் என்பது மாதிரியான பார்வை.

     சுயம்பு மெள்ள நகர்ந்தான். அந்த ஆகாயப் பாலத்தில் அடிவார வீதியில் நடந்தான். பார்வையற்ற நடப்பு. பாதம் மட்டுமே இயங்கும் பயணம். கால்கள் முன் ஏக ஏக, நினைவுகள் பின்னோக்கிப் போயின. அப்பாவுக்குத் தலைக்குனிவு. அக்காவுக்கு நிராசை... அம்மாவுக்கு மயக்கம்... தங்கைக்குத் தாழ்த்தி... அண்ணனுக்கு மானபங்கம், இவை அத்தனையும் எனக்கு, ஒட்டு மொத்தமாய் எனக்கு... நடந்தால் என்ன... நின்றால் என்ன...