உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
29 சுயம்புவின் கால்கள், அவனைச் சுமந்தபடியே கரோல்பாக் பகுதிக்கு வந்தன. சரிவுச் சாலையில் அவனைச் சாய்த்திழுத்த கால்கள், ஒரு ரவுண்டானாப் பக்கம் நிற்க வைத்தன. சுற்றுமுற்றும் சுத்தமற்ற தமிழ்ப் பேச்சுக்கள். சுற்றமற்ற குரல்கள். அவன் கால்கள் தரையைத் தேய்த்துத் தேய்த்து, அவனை நகர்த்தின. இப்படியே நடந்தால் எறும்பு ஊர, இரும்பும் தேயும் என்பதுபோல், நிற்கக்கூட பூமியில் இடம் கிடைக்காது என்பது மாதிரியான தேய்ப்பு நடை... அவன், அஜ்மல்கான் சாலையை நெருங்கினான். தரையில் குவியல் குவியலாய் இருபக்கமும் கிடந்த தட்டு முட்டுச் சாமான்கள். விளையாட்டுக் கருவிகள். காய்கறிகள். இனிப்புப் பண்டங்கள். சுவர்களில் பிரிந்தாடும் புடவை விரிப்புகள். இடையிடையே நடக்கும் பாட்டுக்கள். இவற்றில் எதையும் அவன் கண்கள் எதிர்கொள்ள மறுத்தன. பிரபஞ்ச சங்கமத்தில், அனைத்தையும் சுற்றவைக்கும் பெளதிக விதி ஒன்றிற்கு மட்டுமே உட்பட்டவன்போல் நடந்தான். அந்தச் சாலையைத் தாண்டி. ராமானுஜம் மெஸ்ஸைக் கடந்து, அதற்குமேல் அதிகச் சந்தடியில்லாத அந்தச் சாலையில் சுயம்பு சித்தன் போக்கு சிவன் போக்காய் நடந்தபோது - “ஹேய்... இதர் ஆவ்...” சுயம்பு நின்றபடியே திரும்பினான். ஒரு வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்ட கூட்டுக்குரல். பச்சையம்மா. குருவக்கா மாதிரியான தோரணைகள். அதே சமயம் வாளிப்பான முகங்கள். அவன் தனது உண்மையான சொந்தங்களைக் கண்டதுபோல், ஓடிப்போய் - அந்த முள் மலர்களுக்கு மத்தியில், மகரந்தத் தண்டாய் நின்றான். அந்த வீட்டிற்குள் ஆடல் பாடலாய்க் குதித்தவர்கள் எல்லாரும் வெளியே ஓடிவந்து அவனைச் சுற்றி வட்டமாய்ச் சூழ்ந்து கொண்டார்கள். மொத்தம் ஐந்து பேர். ஒன்று அசல் காளி மாதிரியான தோற்றம்... வஞ்சகம் இல்லாமல் வளர்ந்த உடம்பு... மங்கலான வெள்ளை... கழுத்தோடு சேர்த்து தொங்கப் போடப்பட்ட டோலக். இன்னொன்றின் கையில் புல்புல்தாரா... சதுரமான படிமப் பெட்டியின் பட்டன்களை அழுத்தி அழுத்தி, அதன் மூலம் மெல்லிய கம்பிகளை மேல் கம்பிமேல் தட்டவிட்ட குள்ளமான உருவம்... மூன்றாவது அசல் அழகுமயம்... உதட்டுச் சாயம்தான் அதிகம். மோவாய் நீளத்திற்கான பின்கொண்டை... தெலுங்குச் சாடை... மற்றொன்று, கன்னட வாடை... ஒரு கண்ணைச் சுண்டி, மறுகண்ணைச் சீண்டிவிட்டுப் பார்க்கும் குறும்புப் பார்வை. நாட்டுக் கட்டை உடம்பு... உருக்கு வட்டக் கம்பிக் கண்கள்... மற்றொன்று, நம்ம ஊரின் அந்தக் காலத்து ‘ஒடக்கு’ மாதிரியான ஒல்லி... சுயம்பு கிட்டத்தட்ட குட்டிச்சாமியார் போல் மற்றவர்களுக்குப் பட்டாலும், அவர்களுக்கு அல்லது அவள்களுக்கு, அவனுக்குள்ளே ஒரு ‘குட்டி’ இருக்கும் அடையாளம் தெரிந்தது. ஆளுக்கு ஆள், அவன் கையையும் காலையும் தொட்டார்கள். எதிர்பாராத இனிய விருந்தாளி வந்தால் எப்படிக் குதுகலிப்போமோ... அப்படி... அவள்கள் டோலக்கைத் தட்டிவிட்டு, புல்புல் தாராவை ஒலியெழுப்பி, அவனைச் சுற்றிச் சுற்றியே ஆடினார்கள். டோலக்காரி கேட்டாள். அந்தக் கேள்விக்கு பதிலும் சொல்லிக் கொண்டாள். ‘நீ யாரு... ஒனக்கு நாங்க இருக்கோம். பிகர் மத் கரோ...’ அவன், புரியாமல் முழித்தபோது, மொழி ஒரு முக்கிய விஷயம் இல்லை என்பது போல் டோலக்காரி, அவன் முதுகையும் டோலக் மாதிரியே தட்டினாள். இதற்குள், எல்லோரும் சுயம்புவை இடுப்பிலும் தோளிலும் கை போட்டபடி, அவனை, எந்த வீட்டிலிருந்து வெளிப்பட்டார்களோ அங்கே கூட்டிப் போனார்கள். அவனுக்கும், அவர்களைப் பார்க்கப் பார்க்க, அவர்களின் வாய்களில் துள்ளி, தனது காதுகளில் விழுந்த வார்த்தைகளில் ‘இனம்’ கண்டான். தேனைக் கொடுத்து மகரந்தத் தூளை வாங்குவதற்கு மலர்ந்த மலர்போல், வாய் விரித்தான். அவர்கள் அருகே நிற்பதிலேயே ஒரு ஆனந்தம். பட்ட பாடெல்லாம் பழங்கதையானது போன்ற இரட்டிப்பு சந்தோஷம்... அந்த ‘டூரூம்செட்’டின் முதலாவது அறையின் மத்தியில் இரண்டு வெள்ளைக் கம்பிகளுக்கு இடையே இணைக்கப்பட்ட பச்சைக் கம்பிக்குக் கீழே ஒரு தொட்டில்... பூ மெத்தை போன்ற வெல்வெட் மெத்தை. ஒரு நான்கு மாதக் குழந்தை ஒன்று மல்லாந்து கிடந்தது. ‘அவள்கள்’ இல்லாமல் அழப்போன அந்தக் குழந்தை, இப்போது அவர்களைப் பார்த்துவிட்டு, பொக்கைவாய்ச் சிரிப்பைச் சிந்தியது. கைகளை லேசாய்த் தூக்கப் போனது. அந்தத் தொட்டில் அருகே ஒரு மோடாவில் இருந்த இருபத்துநான்கு வயதுப் பெண், அந்தக் கூட்டத்தில் புதிதாய் நின்ற சுயம்புவைப் புதுநோக்காய் நோக்கினாள். பிறகு, கீழே குனிந்து குழந்தையின் வாயோரத்தை முந்தானையால் துடைத்தாள். அப்போது முப்பது வயதுக்காரன் பாண்ட் சிலாக்கோடு, இரண்டாவது அறையிலிருந்து வெளியே வந்தான். அதுவரை குழந்தையைப் பார்த்துக் கையை அங்குமிங்கும் ஆட்டி வேடிக்கை செய்த அந்த ஐவரும் இயங்கத் துவங்கினார்கள். காளியக்கா மாதிரியானவள் டோலக்கை, இரண்டு கைகளால் வருடிவிட்டாள். தடவிவிட்டாள். அப்புறம் தட்டோ தட்டென்று தட்டினாள். திரும்பி வந்து தொட்டிலில் வயிற்றோடு சேர்த்து முதுகைத் தூக்கிய குழந்தையின் முன்னால், டோலக்கை கொண்டுபோய் ஒரு சின்னத் தட்டுத் தட்டிவிட்டு, மீண்டும் அதை வெளியே கொண்டுவந்து நொறுக்கித் தள்ளினாள். உடனே அத்தனைபேரும் பம்பரமாய்ச் சுழன்றார்கள். இசைக் கருவிகள் இல்லாத மூவர், கைகளைத் தாள லயத்தோடு தட்டினார்கள். டோலக்காரி, வாயைத் திறந்து தொகையறா பாடியபோது, சும்மா இருந்ததுகள் அப்புறம் அவள் எதுகை மோனையோடு பாடியபோது, துள்ளி துள்ளிக் குதித்தார்கள். அதனால், அவர்களின் தலைகளிலிருந்தும் பூக்கள் தரையில் துள்ளின. அவள் வேக வேகமாய்ப் பாட, மற்றவர்கள் அணில் அணிலாய்த் தாவினார்கள். உடனே டோலக்கின் டொக் என்ற சத்தத்துடன் பாட்டை மொட்டையாய் முடித்து காளியக்கா மூச்சு விட்டபோது, அவள்கள் கால்களும் அப்படியே ஒருச்சாய்த்து நின்றன. மழை விட்டது போன்ற சூழல். கால் நிமிடத்தில், ஒரு பெருஞ்சப்தம். அப்புறம் மெட்டுச் சத்தம், மேடும் பள்ளமுமான ராகம். உடைவும் குடைவுமான குரல். உடம்பைக் குலுக்கி ஒரு குதி. உச்சக்குரல் நிற்கும்போது ஒரு முக நிமிர்வு. இதையடுத்து மெட்டச் சிட்டான பாடல். உடனே முன்னால் ஒரு துள்ளல். பின்னால் ஒரு தாவல். ஒருத்தி சுயம்புவையும், அங்குமிங்குமாய் ஆட்டி விட்டாள். இடையை இடையால் இடித்துவிட்டாள். மீண்டும் ஒரு பாட்டு. ‘ஷாதி கியா டிசம்பர்மே. பச்சா பைதாகுவா! செப்டம்பர்மே, குவா பச்சேகோ சார் மகினே.” அவர்கள் பாடிக்கொண்டே போனார்கள். பிள்ளைக்காரி டில்லிக்குப் புதுசு! இந்தியை இஞ்சி தின்றதுமாதிரி கேட்பவள். அந்தப் பாடலுக்கு அர்த்தம் புரியவில்லை. ஆனாலும், கணவன் சிரித்ததில் அவளும் சிரித்தாள். தூர்தர்ஷனில் வேலை பார்க்கும் கணவனின் பாண்ட் பையைப் பிடித்திழுத்து, அந்தப் பாட்டுக்கு அர்த்தம் கேட்டாள். அவனும், அந்த தர்சனுக்கே உள்ள இலக்கணப்படி கொஞ்சம் கை வரிசையையும் கலக்கவிட்டு, மொழி பெயர்த்தான்.
“செய்தாளே கல்யாணம் டிசம்பரில்... பெற்றாளே பிள்ளை செப்டம்பரில்... வந்ததே பிள்ளைக்கு நாலு மாசம்... வளருதே இவள் வயிற்றில் ஒரு மாசம் போவாளோ மாட்டாளோ அம்மா வீடு. ‘போக்கிரி’ அம்மாவுக்கும் மூணுமாசம்.” அவன் கிட்டத்தட்ட ராகம் போட்டே பாடினான். அந்த ஐவரும் லேசாய் உடம்பைக் குலுக்கி, லயித்துப் போனார்கள். பிள்ளைக்காரி கணவனைக் கண்குத்திப் பார்த்தாள். கிராமத்து மஞ்சளை, டில்லி பவுடர் இன்னும் துரத்தவில்லை. வாயில் புடவைக்குள் ஒரு வடிவழகு... அவனிடம் செல்லமும் சிணுங்கலுமாய்க் கேட்டாள். “அடிப்பாவிங்க... இந்த மாதிரி பாட்டா பாடுறாள்கள். நல்லவேளை எனக்கு இன்னும் இந்தி வரலப்பா! எனக்கு ஒரு மாசம்னு எப்படிக் கண்டாளுங்க! எல்லாம் ஒங்களால!” “ஒங்க அப்பாவாவது சும்மா இருந்திருக்கலாமே...” “ஏனுங்க... எங்கம்மா உண்டாயிருக்கதும் இதுகளுக்கு எப்படித் தெரியும்?” “எப்படியோ தெரிஞ்சுக்கிடுறாங்க... தூக்கணாங் குருவிக்கூடு மாதிரி ஒரு ஆச்சரியமான விஷயம்.” “சரி... சரி... அவங்கள போகச் சொல்லுங்க! தலைக்கு ஐம்பது பைசா வீதம் இரண்டரை ரூபா கொடுத்துடுங்க. ஒரே கூத்து. தரை தேஞ்சிடும்.” அந்த ஐவரும், தம்பதியர் பேசுவதையே உன்னிப்பாய்க் கேட்டார்கள். எதுவும் புரியாததால், தொட்டில் பிள்ளையைப் பார்த்து ‘அழகு’ காட்டினார்கள். இதற்குள் அவன், அவர்கள் எல்லாப் பணத்தையும் பார்த்து விடக் கூடாதே என்பதற்காக, வேறு புறமாய்த் திரும்பி பெல்ட்டுக்குக் கீழே ஜிப்பைத் திறந்து, ஒரு கத்தை நோட்டை உருவி, அதில் ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து, பாடகியிடம் கொடுத்தான். அவள் உதட்டைப் பிதுக்கி, எல்லோரிடமும் அந்த நோட்டை நீட்டி இளக்காரமாய்ச் சிரித்தாள். அதைப் பறித்துக்கொண்டே ஒரு அழகு முகம் பொய்க்கோபம் போட்டுப் பேசினாள். “தும் துமாரே பகலே பச்சே கேலியே கித்னா ரூபே தேதே கோ... க்யா துமாரா கந்தான் கா கீமத் யஹி ஹை...” மொதல் குழந்தை பெறந்திருக்கு... இவ்வளவுதான் கொடுக்கே. இதுதான் அதோட விலையா? அதோடு, அவள் விடவில்லை. பொய்க்கோபம் போட்டு, அந்த ரூபாயைக் கைமுகப்பில் பிடித்து, அவன் ஜிப் பைக்குள் திணித்து, ஒரு தட்டுத் தட்டினாள். அவன் ‘ஏ... ஏ’ என்று நெளிந்தபோது, இன்னொன்று அவன் சட்டைப் பைக்குள் கையை விட்டுப் பணத்தைத் தேடுகிற சாக்கில் அவன் மார்பை வருடிவிட்டது. அவன், ‘சீச்சி’ என்று அங்கேயும் இங்கேயுமாய் நெளிந்து முகத்தை, வேண்டுமென்றே நாணிக் கோணி வைத்திருந்தவளின் தோளில் தற்செயலாய்த் தலையைப் போட்டான். ஒருத்தி அவன் கழுத்தை வருடிவிட்டபோது, நிசப் பெண்டாட்டியான பிள்ளைக்காரி ‘என்ன இது. சொகமா இருக்குதோ’ என்று எரிந்தாள். இதற்குள், இரண்டுபேர் அவன் இரண்டு பைக்குள்ளும் கையை விட்டார்கள். ஒரு கை, கைக்குட்டையோடும், இன்னொரு கை ஒரு பெண்ணின் புகைப்படத்தோடும் வெளிப்பட்டன. வீட்டுக்காரி அழுகைக் குரலில் கத்தினாள். “என்னை என் வீட்ல கொண்டு போய் விட்டுடுங்க. அப்பவே ஊர்ல் ஒங்களப்பத்தி ஒரு மாதிரிச் சொன்னாங்க...” “நான் ‘ஒருமாதிரி’ புருஷன் இல்ல. ஒரு ‘மாதிரி’ புருஷன். இந்த போட்டோ ஒரு ‘டாலண்டோட’ படம். நல்லா பாரு... அசல் கிழவி. அறுவது வயசு, என்ன சுலோச்சனா, இவளுக முன்ன வச்ச...” சுலோச்சனா, அந்தப் படத்தை உற்றுப் பார்த்தாள். குமரி மாதிரி மேக்கப் செய்த கிழவிதான். இதற்குள், தொட்டிலுக்குள் கையை விட்டு இரண்டுபேர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியேறினார்கள். அதைப் பார்த்த சுயம்புவுக்கு அண்ணன் குழந்தையை அதே பிராயத்தில் பார்த்த நினைப்பு; வெளியே போய் அந்தக் குழந்தையை வைத்திருந்த ஒல்லிக்காரியடமிருந்து, அதை வாங்கிக்கொண்டான். உள்ளே, தாய்க்காரியிடம் கொடுக்கப் போனான். உடனே அந்த இருவரும் தொழில் ரகசியம் தெரியாதவனைக் காதைப் பிடித்து செல்லமாக முறுக்கிவிட்டு, குழந்தையைப் பலவந்தமாக வாங்கிக் கொண்டார்கள். சுலோச்சனா, வாசலுக்கு வந்து கத்தினாள். “அய்யோ... என் குழந்தை. ஏங்க, ஒங்களைத்தான். எவ்வளவு பணம் கொடுத்தாவது குழந்தையை வாங்குங்க! இவ்வளவு சம்பளம் வாங்கிட்டு. அஞ்சு ரூபா கொடுத்தால் எப்படி? அந்த ராட்சசி என்ன சொல்றாள்?” “ஒனக்கு மொதல் தடவையா குழந்தை பிறந்திருக்காம்.” “ஒங்களுக்கு ஒண்ணும் தெரியாதது மாதிரிச் சொல்றீங்க.” “அவள் சொல்றதச் சொல்றேன். நான் வெறும் மீடியம்தான்.” “நான் பெத்தா இவளுக்கு என்னவாம்... சரி. சொல்லுங்க... ஒங்க மகன் அவளைப் பார்த்துச் சிரிக்கான் பாருங்க... அப்பன் புத்திதான் அவனுக்கும் இருக்கும். இன்னும் என்னமோ சொல்றாள். என்னவாம்...” “அதுவும் ஆண் குழந்தையாம்... நூறு ரூபாய்க்குக் குறையாமல் கொடுக்கணுமாம்.” “அய்யோ... குழந்தையைத் தூக்கிட்டுப் போறாள் பாருங்க! அடுத்த குழந்தைக்குக் கவனிக்கிறதாச் சொல்லி ஒரு ஐம்பது ரூபா கொடுங்க. சரியான கஞ்சன் நீங்க!” அவன், ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு அந்த ஒல்லிக்காரியின் பக்கம் போனான். அதைக் கொடுத்துவிட்டு குழந்தையைக் கேட்டான். உடனே கிடைத்தது. வீட்டுக்குள் வந்து, சுலோச்சனாவிடம் குழந்தையைக் கொடுத்தபோது, சுலோச்சனா அவர்களைப் பார்த்துத் தமிழில் வெளுத்து வாங்கினாள். “தடிச்சிங்களா... தட்டுக்கெட்டதுகளா... எச்சிக்கலை எறப்பாளிகளா... என் குழந்தைய இனிமே தொடுங்க பார்க்கலாம்...” உடனே அவள் கோபத்தைப் புரிந்து கொண்ட டோலக்காரி, படபடப்பாய் இந்தியில் பொரிந்து தள்ளினாள். அதைக் கணவன் மனைவிக்கு தமிழில் பரிமாறினான். “நாங்களும் மனுஷிங்கதான்... எங்களுக்கும் குழந்தையை எப்படி எடுக்கணும்னு தெரியும். பூனகுட்டியைக் கவ்வுறது மாதிரிதான் பிடிச்சோம். குழந்தைக்கு ஒரு ஜட்டி போடு... பால் வராமல் இருக்க மாத்திரை சாப்பிடாதே! தாய்ப்பாலு தாய்ப்பாலுதான்! புட்டிப்பாலு எங்கள மாதிரி... பிரயோசனப்படாது. போயிட்டு வாறோம். அடுத்த பிள்ளைக்கு இருநூறு ரூபாய். அதுக்குள்ள விலைவாசி மூணு மடங்கா ஆயிடுமே. வயித்துப் பிள்ளய அபார்ஷன் செய்யாதே! புருஷனை அனுசரிச்சுப் போ! அச்சா ஆத்மி, நல்ல யங்மென்.” “ஒங்க வார்த்தையே ஒங்கள காட்டிக் கொடுத்திட்டு பாருங்க! இந்த ஆட்களுக்கு இதெல்லாம் தெரியுமா என்ன?” “நெசமாவே கடைசி வரிதான் என்னுது. மீதி அவளே சொன்னது.” “ஏதோ இன்னும் கேக்கறாளுங்க... பணம் போதலியா?” “எங்கே வேலைன்னு கேக்காங்க...” இப்போது, சுலோச்சனாவே பிள்ளையை மார்போடு சேர்த்துக் குலுக்கியபடியே ‘தூர்தர்ஷன், டெலிவிஷன்’ என்று பெருமையாய்ச் சொன்னாள். தலைகளில் கைகளை வைத்து சலாம் போட்டு வெளியேறப் போன அந்த ஐவரும், அந்த அறையை நெருங்கி வந்து அவனைச் சுற்றி நெருக்கினார்கள். டோலக் குரலெழுப்பியது. புல்புல்தாரா நாதமெழுப்பியது. கொலுசுக்கால்கள் தாளமிட்டன. பாடகி ஜாக்கெட்டுக்குள் திணித்த ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவன் பைக்குள் திணித்துவிட்டு, “பாய்சாப்... ஹமே டி.வி.மே. தி காதோ. சம்திங் தே... ஹேங்கே இஸ் பச்சாஜ் ரூபியாகோ அட்வான்ஸ்... மே... லேலோஜி.” சுலோச்சனா, கணவனைக் குழப்பத்தோடு பார்த்தபோது அவன் விளக்கினான். “டெலிவிஷன்ல இவங்க முகத்தை எப்படியாவது காட்டிடணுமாம். இந்த ரூபாய லஞ்சமா வச்சுக்கணுமாம். இன்னும் எவ்வளவு பணம் கேட்டாலும் தருவாங்களாம்!” “உங்க டெலிவிஷனை நல்லா தெரிஞ்சு வச்சிருக்குதுங்களே. சரி சரின்னு தலையாட்டுறீங்களே. ஒங்களால, கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியுமா? அப்புறம் இதுங்களுக்கு, ‘எல்லாம்’ தெரியும்னு சொன்னிங்க... நீங்க டெலிவிஷன்ல இருக்கறது தெரியலை.” “எல்லாமுன்னா, நீயும் நானும் எப்படிக் கொஞ்சுவோம்னு விஷுவலாகூட தெரியுமா என்ன... பழைய ஆல் இண்டியா ரேடியோவுல இருக்கிறதா நெனைச் சிருக்கலாம்.” இப்போது, சுலோச்சனாவே அவர்களிடம் தமிழில் பேசி, அதற்கு ஏற்ப சைகை செய்தாள். “இவரு நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டாரு... எப்படியாவது ஒங்க முகத்தை டி.வி.யில காட்ட வைக்கேன்... டோண்ட் ஒர்ரி... நானாச்சு, ஏங்க, அந்த ஐம்பது ரூபாயை அப்படியே வச்சுக்குங்க... சொன்னா பொறுக்கமாட்டீங்களே... வெளையாட்டுக்குச் சொன்னா அப்படியே வச்சுக்கிட்டீங்களே.” அவர்களுக்கும் புரிந்தது. தலைகளைத் தரைதட்டும் படி சலாம் போட்டுவிட்டு அவன் திருப்பிக் கொடுத்த ஐம்பது ரூபாயை வாங்கிக்கொண்டு, திரும்பப் போனார்கள். சுலோச்சனா, புருஷனின் கைக்கடிகாரத்தைப் பிடித்தபடியே கண்கள் சொருகக் கேட்டாள். “ஏங்க இந்த பச்சை லுங்கிக்காரப் பையன். என் தம்பி மாதிரியே அசப்புல இருக்கான் பாருங்க. யாரு பெத்த பிள்ளையோ... ஒருவேளை தமிழ்நாடா இருக்குமோ...” “தம்பி ஒன் பேரு என்னப்பா...” சுயம்பு இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினான். அவர்களும் அவனைத் தமிழ்நாட்டின் சாயல் கொண்ட பீஹார்க்காரன் என்பதுபோல் நினைத்துவிட்டார்கள். சுயம்பு பெருமினான். ‘நான் கெட்ட கேட்டுக்கு பேச்சு ஒரு கேடா...’ அந்த ஐவரும் அவனைப் பிடித்து இழுத்தார்கள். அவனுக்கு அந்த சுலோச்சனா வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பது மாதிரி ஒரு ஆசை! அவசரப்பட்டு சைகை செய்துவிட்டோமே என்று வருத்தம். இதற்குமேல் பேசினால், அசிங்கம் என்று சுயமரியாதைத்தனம். அவர்கள் இழுத்த இழுப்புக்கு அவன் நடந்தான். அவர்கள் அவனைச் சுற்றிக் கூத்தாடாத குறையாகக் கூட்டிப் போனார்கள். ஒருத்தி, அவன் தலைத் தூசியைத் தட்டிவிட்டாள். இன்னொருத்தி ‘சாப்பிட்டியா’ என்பது போல், வாயில் கை வைத்துக் கேட்டாள். அவனுக்கும் ஒரு தெம்பு. அதே சமயம் இவள்களும் என்ன செய்வார்களோ என்ற அச்சம். சென்னைச் சம்பவம் திரும்பிவிடுமோ என்ற பயம். எதிர்த்திசையிலிருந்து இரண்டு ‘சேலை கட்டிகள்’ வந்தார்கள். சமவயது. ஒருத்தி, கருப்பற்ற - சிவப்பற்ற பொதுநிறம். ஒல்லி. இன்னொருத்தி தடிச்சி. சுயம்புவைச் சுற்றி நின்றவர்களிடம், இந்தியில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த ஏரியாவில் எவனோ ஒருத்தன் விபத்தில் இறந்துட்டானாம். ஒருத்தனுக்கு ஆபீஸ்ல சஸ்பெண்டாம். அழவேண்டிய இடத்திற்கு அழப்போக வேண்டுமாம். அதற்காக ஒரேயடியாய் அழவேண்டியதும் இல்லை என்பது போலவும் பேசினாள். ஒரு பஞ்சாபிக்கு புதுக் கார் வந்திருக்கிறதாம்... விடப்படாதாம்... அந்த இரண்டு பெண்களும், அன்று தாங்கள் கண்டு பிடித்த வார்டு நடப்புகளை மாற்றி மாற்றி விளக்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒல்லிக்காரி, சுயம்புவின் தோளில் கை போட்டாள். பாடகி நீலிமா விவரம் சொன்னபோது தடித்தவள் சுயம்புவிடம் கேட்டாள். “நீ தமிழா...” சுயம்பு, வெறுமனே தலையாட்டவில்லை. ஆமாம் என்று ஒவ்வொரு எழுத்தையும் தனிப்படுத்தியும் ஒன்றுபடுத்தியும் பதிலளித்து, அவளை நெருங்கியடித்தான். அவள் அவனை இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். பிறகு அவன் மோவாயை நிமிர்த்தியபடி, ஆனந்தமாய்க் கூவினாள். “எப்பாடி எனக்கு மகள் கெடச்சிட்டாள். இனிக் கவலையே இல்ல...” அவள் சுயம்பு தோளில் கையை அழுத்தமாகப் போட்டபோது, ஒல்லிக்காரி அந்தக் கையை எடுத்துக் கீழே போட்டாள். இருவரும் மலையாளத்திலும், தமிழிலும் மோதிக்கொண்டார்கள். “நீ அல்லே ரெண்டு மக்களே... தத்து எடுத்தது...” “ரெண்டு முண்டைகளும் மெட்ராசு குப்பத்துக்கு பழையபடி ஓடிட்டாள்களே.” “நீ தொட்டது ஏதும் சரியாவ்லியா... நண்ட முகராசி அவ்வன என்ன... ஞான்... இவ்ளே... தத்தெடுக்கண.” இதற்குள் தலைப்பாட்டுக்காரியான நீலிமா, டோலக்கை ஒரு தட்டுத் தட்டி, ஒருத்தி கையை எடுத்து இன்னொருத்தி வாயிலும் இன்னொருத்தி கையை எடுத்து அடுத்தவள் வாயிலும் வைத்து அடைத்தாள். சுயம்பு குழம்பிப் போய் நின்றான். அவனுக்கு எவளுக்கும் மகளாக ஆசையில்லை. பட்டது போதும்... அடுத்த எட்டு பேரும், ஒரு சந்தைத் தாண்டி, திறந்த வெளி மைதானத்தைக் கடந்து மூன்று மாடிக் கட்டிடக் குவியல்களை நோக்கிப் போனார்கள். சின்னச் சின்ன அறைகள்தான். அரசாங்கக் குடியிருப்புகள். அன்னை இந்திரா, இந்தப் பிறவிகளுக்கும், அங்கே இடம் ஒதுக்கியிருந்தார். அவருக்கு, இவர்களிடம் இருந்த அன்பைப் போல், இன்னும் ஈரம் உலராத சுவர்கள். அந்த மாடிக் கட்டிடங்களுக்கு ஒரு ஓரமாக தனித்திருந்த ஒரு சின்ன வீடு. அந்த வீட்டுக்கு வெளியே ஒரு ஆலமரம். அதைச் சுற்றி ஒரு வட்டச் சுவர். அதன் அடிவாரத்திலும் கோழியாசனம் கொண்ட முர்கேமாதா. ஒரு டப்பா நிறைய விபூதி, இன்னொன்றில் குங்குமம். அந்த ஆலமரத்தடியில் இருந்தவளை, இவர்கள் எல்லோரும் பயபக்தியோடு பார்த்தார்கள். அவர்களின் குரு அலி கங்காதேவி... ஐம்பது வயதிருக்கும். பின்பக்க முடி மூன்று சடைகளாகத் தொங்கின. அரிசிப் பற்கள். ஊசியை வைத்து அங்குமிங்குமாய்க் குத்தியது மாதிரியான முகம். பவுன் மாதிரிமான நிறம். பாடகி நீலிமா, சுயம்பு கிடைத்த விவரத்தை விளக்கினாள். அந்த இருவரும் சொல்லாதே என்று அவளை ஜாடைமாடையாக இடித்தாலும், அவள் இவர்களுக்குள் நடந்து கொண்டே நடந்த ‘சுவீகார’ விவகாரத்தையும் விளக்கினாள். கங்காதேவி சுயம்புவைத் தன்பக்கம் வரவழைத்தாள். விபூதியிட்டு, குங்குமம் வைத்தாள். இந்தியில் ‘நதி கடலுக்கு எப்படி வரணுமோ அப்படி வந்திட்டே... கவலைப்படாதே. இனிமேல் உன் வாழ்வும் தாழ்வும் எங்களோடு’ என்றாள். அதை அந்த இரண்டு பேரும் தமிழிலும் மலையாளத்திலும் போட்டி போட்டு விளக்கினார்கள். கங்காதேவி, தீர்மானமாகச் சொன்னாள். “மொதல்ல இதை, ‘இவளாக்கணும்’... முழுப் பெண்ணாக்கணும்... அந்தச் செலவுக்கு யார் மொதல்ல பணம் கொடுக்காங்களோ, அப்போது யாருக்கு மகள்னு யோசிக்கலாம்.” வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|