3

     மரகதம், தம்பியின் இரண்டு கைகளையும், தனது ஒரு கையில் பிடித்து, வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்து, உள்ளறைக்குள் விட்டாள். சுவரோடு சுவராய் சாத்தி வைக்கப்பட்ட பனை நார்க்கட்டிலை, மல்லாக்கப் போட்டாள். சுயம்புவின் இரு தோள்களையும் இரு கைகளால் அழுத்தி, அவனைக் கட்டிலில் உட்கார வைத்தாள். அவனோ, பிரமை பிடித்தவன் போல், கண்கள் திறந்திருந்தும் பார்வை படாது, காதுகள் உயிர்த்திருந்தும் ஒலிகள் பதியாது, பித்துப் பிடித்தவனாய்க் கிடந்தான். மரகதம், அவன் முன்னால் நின்று கீழே குனிந்து அவனை உலுக்கினாள். “தம்பி... தம்பி... உனக்கு என்னடா ஆச்சு” என்று கேட்டபடியே அழப் போனாள். பிறகு அழுவது அவனை மேலும் பலவீனப்படுத்தும் என்று நினைத்தவள் போல், நிமிர்ந்து வேறு பக்கமாய் முகம் திரும்பி கண்களைத் துடைத்துவிட்டு அவன் கழுத்தை கைகளால் கோர்த்துக் கொண்டே, “ஏய்... தம்பி, ஏய்... தம்பி” என்று அதட்டினாள். உடனே அவன் அக்காவின் தோள்களில் இரண்டு கைகளையும் தொங்கவிட்டு கழுத்தில் முகம் போட்டு மாங்கு மாங்கென்று அழுதான். “அக்கா... அக்கா... உருப்படாமப் போய்ட்டேனே அக்கா?”

     மரகதம், அவன் முகத்தைத் தூக்கி நிமிர்த்தினாள். கண்களை முந்தானையால் துடைத்து விட்டாள். பிறகு தழுதழுத்த குரலில் கேட்டாள்:

     “என்னடா இப்படி திடுதிடுப்புனு வந்து நிக்கே, என் கண்ணே உனக்கு திருஷ்டி பட்டிருக்கும் போலுக்கடா... பேசுடா தம்பி...”

     “எக்கா... இனிமே நான் காலேஜுக்கு போக மாட்டேக்கா...”

     “அய்யய்யோ... எந்தப் பேச்சுப் பேசினாலும்... அந்தப் பேச்சு பேசாதே...”

     சுயம்பு, அக்காவைத் தள்ளிப் போட்டுவிட்டு துள்ளி எழுந்தான். சுவர் மூலையில் தலையைச் சாய்த்தபடியே கத்தினான்.

     “நான் போகமாட்டேன்... போகவே மாட்டேன்...”

     மரகதம், தம்பியின் பக்கம் அடிமேல் அடிபோட்டு நடந்தாள். அவனை, மறுபுறமாய்த் திருப்பி, தன் தோளில் சாய்த்துக் கொண்டு கட்டிலுக்கு வந்தாள். அவன் முதுகைத் தடவிவிட்டாள். தோளைத் தட்டிக் கொடுத்தாள். முகத்தைத் துடைத்து விட்டாள். தலையைக் கோதி விட்டாள். பிறகு கழுத்தை நீவி விட்டபடியே உபதேசித்தாள்.

     “நல்லா யோசிச்சுப் பாரு தம்பி... நம்ம குடும்பத்துலயே பெரிய படிப்புக்கு போற முதல் ஆளு நீதான்... அதுவும் ‘காரை வீட்டுக்காரன்’ மகன் கருப்பசாமிக்கு... அவுங்க வீட்டுல எவ்வளவோ முயற்சி செய்தும்... ஒரு லட்ச ரூபாய் கையில வெச்சுக்கிட்டு அலைஞ்சும் கூட, அவனுக்கு எஞ்ஜினியருங்குல இடம் கிடைக்கல. ஆனா உனக்கு தானா கிடைச்சுருக்கு. இதனாலயே நம்ம ஊருல உன்னால நம்ம குடும்பத்துக்கு மதிப்பு. அந்த மதிப்ப குலைச்சுடாதடா. ஊரு உலகத்துல தம்பி படிச்சா, அண்ணன் பொருமுவான்... ஆனால் நம்மண்ணன் அப்படிப்பட்டவனா... அப்பாவும், அம்மாவும்...”

     “அவங்க பேச்சைப் பேசாதக்கா... இப்படி என்ன பெத்துப் போட்ட அவங்கள என்ன செய்தாலும் தகும்.”

     “உனக்குத் தெரியாதுடா... அப்பா மனசு ஒரு வேளை கல்லாயிருந்தாலும் அந்தக் கல்லுக்குள்ள தேரையா இருக்கறது நீதாண்டா... நீ காலேஜுக்கு போகும் போதெல்லாம், உன்னை எப்படி வாஞ்சையோட பாப்பார் தெரியுமா... ஊர்க்காரங்க உன்னப்பத்தி பெருமையா பேசும்போது... ‘அவன் கிடக்கான்னு...’ ஒப்புக்குச் சொல்லிக்கிட்டே, எப்படிச் சிரிப்பார் தெரியுமா... அதனால... அக்கா என்ன சொல்ல வந்தேன்னா...”

     சுயம்பு, திடீரென்று அக்காவிடமிருந்து விடுபட்டு, கட்டிலில் இருந்து அப்படியே விழுந்தான். தரையில் அங்குமிங்குமாய் புரண்டான். மோவாயைத் தூக்கி தூக்கி தரையில் இடித்தான். “அய்யோ... அய்யோ...” என்று கை கால்களைச் சுருக்கினான், நீட்டினான், மடக்கினான்.

     மரகதம், இப்போது தானே பிரமை தட்டி நின்றாள். தம்பியின் படிப்பு நின்று போய் விடும் என்று நினைக்கக் கூட அவளால் முடியவில்லை. எப்படியோ சுதாரித்துக் கொண்டு அவன் அருகே மண்டியிட்டு உட்கார்ந்தபடியே “தம்பி... தம்பி...” என்ற போது, வெள்ளையம்மா, உள்ளே வந்தாள்.

     “அய்யோ... இங்க வந்து பாருங்களேன்” என்று சத்தம் போடப்போன அம்மாவின் வாயை மரகதம் கைகளால் பொத்தினாள். அப்போதும், அவள் பேசினாள். இதனால் தாய்க்காரியிடமிருந்து விதவிதமான - விநோதமான சத்தம் ஏற்பட்டது. எப்படியோ, மகளிடமிருந்து விடுபட்டும் விடுவித்துக் கொண்டும், மகள் மெல்லப் பேசு என்று சைகை செய்த கையைத் தட்டிவிட்டபடியே அதற்கு எதிர்மாறான குரலில் பேசித் தீர்த்தாள்.

     “ஒப்பன் புத்திதான ஒனக்கு இருக்கும்... எதுக்காக மெள்ளப் பேசணும்னே. இது ஊரு முழுக்க தெரிய வேண்டிய விஷயம்... எல்லாம் அந்த எரவாளி பய மகள் சீதாலட்சுமியோட வேல. இவங்கிட்டயும் நான் படிச்சுப் படிச்சு சொன்னேன். உச்சி காலத்துல அவள் சமாதிப் பக்கம் போகாதடா போகாதடான்னேன்... பாவிப் பய கேக்காம இப்ப வட்டியும் முதலுமா வாங்கிட்டு வந்துட்டான்...”

     “அந்தப் பாவப்பட்ட அக்காவை ஏம்மா வம்புக்கு இழுக்கே... பாவிமகள் சொல்லாம கொள்ளாம துள்ளத் துடிக்க செத்தவள்...”

     “உனக்கு என்னடி தெரியும்... அப்படி சாகறவங்கதான் பேயா அலைவாவ... போன வருஷம் இறந்ததுலருந்து அந்த சீதாலட்சுமி கருவக் காட்டுல லாந்துனாள்... நானே ஒரு தடவ அவளப் பார்த்தேன். ஊர்லயும் சொன்னாவ... ஆனா இப்போ அப்படி அவ லாந்துரது இல்ல. ஏன் தெரியுமா? அவள்தான், இவனைப் பிடிச்சுக்கிட்டு இவன் கூடயே காலேஜுக்குப் போறாளே... அப்புறம் அங்க இருக்க முடியாம இவன இங்க கூட்டிக்கிட்டு வந்துடுறாளே... நம்ம வீட்டுக்கு வரும்போதெல்லாம் இவன வாய்க்குவாய் தம்பி... தம்பின்னு சொன்ன... மூதேவி... இப்ப அவனையே ‘தங்கச்சி... தங்கச்சி’ன்னு சொல்ல வச்சுட்டாள்...”

     “இவன் அப்படி சொன்னான்னு உனக்கு எப்படிம்மா தெரியும்...”

     “எல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்... பூவம்மா மயினிகிட்ட சொல்லி திருநீர் போட்டா சரியாயிடும்... ஏல சுயம்பு வந்ததே வந்திய... உன் அண்ணன் பிள்ளைகளுக்கு, ஏதாவது இனிப்பு கினிப்பு வாங்கிட்டு வரப்படாதா...”

     “எம்மா... மொதல்ல நீ இடத்தை காலி பண்ணு. தம்பி துஷ்டி கேக்கற நிலையில இருக்கான்... நீ எக்காளமாவா பேசுற... அம்மாக்காரியாம்... அம்மா... போம்மா.”

     “பாவி மொட்ட.. என்ன பேச்சு பேசறாள். எனக்கு மட்டும் மனசு துடிக்காமலா இருக்கும்.”

     “உனக்கு வாய் துடிக்கிற அளவுக்கு மனசு துடிக்கல போம்மா.”

     மரகதம், அம்மாவின் முதுகைப் பிடித்து தள்ளித் தள்ளி, அவளை அந்த அறைக்கு வெளியே கொண்டு போய் விட்டாள். அப்படியும் வெள்ளையம்மா காலஞ்சென்ற சீதாலட்சுமியை திட்டிக் கொண்டே உள்ளே வரப் போனாள். அதற்குள் மரகதம் கதவைத் தாளிட்டாள். பிறகு பித்துப் பிடித்து நின்ற சுயம்புவை தூக்கி நிறுத்தி, கட்டில் பக்கமாய் நகர்த்தி, அவனை உட்கார வைத்தாள். எதுவும் நடக்காதது போல பேசினாள்.

     “சரி... எப்ப சாப்பிட்டியோ... முதல்ல சாப்பிடுடா...”

     “என்னை உள்ள இருந்து ஏதோ ஒன்னு தின்னுக்கிட்டே இருக்குக்கா... பாம்பு, தவளையைப் பிடிக்குமே அப்படி... காக்கா ஓணானைக் கொத்திக் கொத்தி விளையாடுமே அப்படி... என்னால எப்படிக்கா சாப்பிட முடியும்? எக்கா நான் காலேஜுக்கு போகமாட்டேன்... சரியா...”

     மரகதம் அவனுடன் பேசவில்லை. ஊரே வியக்கும்படி படித்து எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் தம்பிக்கு இப்படிப்பட்ட ஒரு எண்ணம் எப்படி ஏற்பட்டிருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டாள். அவன் உயர உயரப் போவதே கீழே விழுவதற்குத்தானோ என்று ஆயாசப்பட்டாள். கிட்டத்தட்ட சுயம்பு மாதிரியே அவள் விக்கித்து நின்ற போது, சுயம்பு அக்காவை உலுக்கினான்.

     “எக்கா... எக்கா... உனக்கு பேசி முடிச்ச மாப்பிள்ளையை பாத்துட்டு வராம போய்ட்டேன்... எனக்கு வந்த கோளாறுல, உனக்கு வந்த மாப்பிள்ளையை மறந்துட்டேனே... நானெல்லாம் ஒரு தம்பியா... ஆனா ஒண்ணுக்கா... காலேஜுக்கு போகாதது மாதிரி அங்கயும் போகமாட்டேன்னு நினைக்காத... நீ மட்டும் இனிமே என்ன காலேஜுக்குப் போகாதபடி பார்த்துக்க... நாளைக்கே போய் மாப்பிள்ளைய பாத்துட்டு வந்துடறேன்...”

     மரகதத்திற்கு இப்போது தம்பியிடம் என்ன பேச வேண்டும் என்பது தெளிவாகிவிட்டது.

     “உங்க அக்காவைப் பத்தி என்னடா நினைச்சுக்கிட்டே... நீ காலேஜுக்குப் போகாம, நான் யாருக்கும் கழுத்தை நீட்டுவேன்னு நினைச்சியா... அதுதான் நடக்காது...”

     “எக்கா... என்னக்கா சொல்லுற... அப்படியெல்லாம் தத்துபித்துன்னு பேசுனால... என்னால தாங்கிக்க முடியாது...”

     “நீ காலேஜுக்கு போகாம இருந்தால்... அதுமட்டும் என்னால தாங்கிக்க முடியுமா...”

     “எக்கா... எக்கோ...”

     “ஆமாடா இது ஒப்புக்குச் சொல்ற வார்த்தையில்லடா... நீ படிப்பை விட்டுட்டு உன்ன சீரழிய விட்டுட்டு... இந்த அக்காவால வேற ஊர்ல இருக்க முடியாதுடா...”

     சுயம்பு விக்கித்துப் போனான். அக்காவை அப்படியே கட்டிப்பிடித்து கேவினான். அவளோ கால்களை நீட்டி தம்பியை மடியில் போட்டுக் கொண்டு, ஊரில் படித்து முன்னுக்கு வந்தவர்களின் கதைகளை சொல்லப் போனாள். இதில் அக்கா, அம்மாவானாள். தம்பி மகனானான்.