30

     சுயம்பு, தன்பிறப்பைத் தானே கண்டவன்போல் - இந்தப் பிறவியிலேயே நிர்வாணம் பெற்றவன்போல் தெளிவடைந்தான்.

     இந்த ஒரு மாத காலத்தில் அவர்களின் பெயர்களைச் சொல்லுமளவிற்கும் ஓட்டை உடைசல் இந்தியில் பேசும் அளவிற்கும் முன்னேறி விட்டான். நீலிமா... நசிமா... மாக்கிரெட். லட்சுமி... பகுச்சார்தேவி... குஞ்சம்மா...

     அது, சுமாரான அறை. நான்கு கட்டில்கள். கயிற்றுக் கட்டில்கள். ஆனாலும் அவற்றுக்கு மேலே மெத்தை. குளிர் காலத்தில் மூடிக்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் ரசாய் மெத்தை. இதுவரை ஒண்டிக்கட்டிலில் குடித்தனம் செய்த சுயம்புவுக்கும், ஒரு சொந்தக் கட்டில் கிடைத்தது.

     ஒல்லிக்காரியான மலையாளத்தா குஞ்சம்மா எப்போதோ பிசைந்து வைத்த சப்பாத்தி மாவை இப்போது சலவைக்கல் மாதிரியான வட்டக்கல்லில் உருட்டிக் கொண்டிருந்தாள். அடுப்பில் சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டப்பட்ட உருளைக் கிழங்குகளை தமிழ்காரி லட்சுமி பொரித்துக் கொண்டிருந்தாள். வேக வைக்காமலேயே அப்படியே பொறிக்கப்படும் அவசர சப்ஜி, இன்று குஞ்சம்மாவின் சமையல் முறை. அவளுக்கு அவசர சப்ஜி செய்யத் தெரியாது என்ற அனுமானத்தில், லட்சுமி ஒத்தாசை செய்தாள். பாடகி நீலிமா, தனது பற்களை மாதிரி நீளநீளமான செண்பகப் பூக்களைத் தடவியபடியே டோலக்கைத் துடைத்துவிட்டாள். நலிமா சுற்றிலும் கடல்சிப்பிகளால் பிரேமாக்கப்பட்ட முட்டை வடிவக் கண்ணாடியின் முன்னால் முந்தானையை இழுத்துப்போட்டு ஒய்யாரமாக எழுந்தாள். இவள்தான், அங்கு அழகு மயம். இதற்குள் மார்க்கரெட், நஸிமாவிடம் ஒரு ஒயர் சுருளை நீட்டினாள். நளிமா அதை விசாலப்படுத்தினாள். இரண்டு ஒயர்க் கம்பிகள். அவற்றில், பல்லி முட்டை மாதிரி சின்னச் சின்ன பல்புகள். பல்வேறு வகை வண்ணக் கலப்புக்கள்... நலிமா, ஒன்றை வட்டமாக்கி, கழுத்தைச் சுற்றியும், இன்னொன்றையும் அதே மாதிரி வட்டமாக்கி உச்சந்தலையைச் சுற்றி வில்போல வளைத்துக் கொண்டாள். மார்பகப் பள்ளத்தாக்கில் இரண்டு சாதா பேட்டரிகளைக் கொண்ட ஒரு சதுரப் பெட்டியைத் தொங்கப் போட்டு ஒரு வளைவை நிமிர்த்திவிட்டாள். உடனடியாக அவள் முகம் பிரகாசித்தது. நீலமாய், மஞ்சளாய், சிவப்பாய், பச்சையாய். தலைக்குமேல் மேலும் கீழும் பல்புகள் பளபளத்தன. தலைக்குமேல் வானவில் ஒளிவட்டம். இவையும் போதாது என்று முகத்தில் ஆங்காங்கே ஜிகினாச் சரிகைகளை ஒட்டிக்கொண்டாள். எற்கெனவே இதைப்போல் சிங்காரித்துக் கொண்ட மார்க்கரெட்டோடு, நசிமா ‘சதையாக’ நின்று கொண்டாள். நீலிமா, எந்த மேக்கப் போட்டாலும், தேறாத கேஸ். அவளுக்குத் தெரியும். ஆகையால் சாதாரணமாகவே இருந்தாள். டோலக்கை, மட்டும் கண்ணைச் சிமிட்டித் தட்டினாள். வேறு அறையிலிருந்து வந்த பகுச்சார் தேவியும், ஜிலுஜிலு கொலுசுக் கால்களைத் தரையில் தட்டி, கை வளையல்களைக் குலுக்கிவிட்டு, டோலக் சத்தத்திற்கு சுருதி சேர்த்தாள்.

     சுயம்புவிற்கு, அவர்களைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது. நலிமா அவனுக்கு ‘ஆட்டக்கலையைச்’ சொல்லிக் கொடுத்து விட்டாள். இரண்டு மூன்று இந்திப் படங்களுக்கும் கூட்டிப் போய்விட்டாள். ஆனாலும் இன்னும் ‘ஸ்டெப்’ சரியாக வரவில்லை. அப்படியும் ஆடப்போனால், அங்கேயும், குஞ்சம்மா லட்சுமி யுத்தம்! இப்படித்தான் ஆட வேண்டும், அப்படித்தான் ஆட வேண்டும் என்று ஆளுக்கு ஒருத்தியாக அமர்க்களப் படுத்துகிறார்கள். சுயம்பு தனக்குக் கொண்டை வந்துவிட்ட அனுமானத்தில் பெரிய மனுஷித்தனமாய், லட்சுமியின் சேலையை எடுக்கப் போனான். நீலிமா, டோலக்கைத் தட்டி அவனைத் திரும்ப வைத்து, திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள். அவன் முழு மனுஷியாய் மாறுமுன்னால், புடவையைத் தொடப்படாது. இப்போது இருக்கிற இதே பாவாடை தாவணியிலேயே இருக்க வேண்டும்.

     சப்பாத்தியை, அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் வாசலுக்கு வெளியே வந்தார்கள். சேட்டு வீட்டுக் கல்யாணம். இவர்கள் ஆட வேண்டும். பாட வேண்டும். அட்வான்ஸும் வாங்கிவிட்டார்கள். புல்புல் தாராக்காரியும், அங்கே வநதுவிட்டாள். ‘பாவாடை தாவணி’ சுயம்பு, இப்போது சல்வார் கமீஸ் போட்டிருந்தான். ஆடமாட்டான். ஆனால் ஆட்டப் பயிற்சிக்கு அழைக்கப்பட்டான்.

     மாலை உருக்குலையும் நேரம்...

     அந்த ‘கல்லியில்’ தெற்கு வரிசையிலும் மேற்கு வரிசையிலும் ஹஜ்ராக்களின் - அதுதான் அலிகளின் ஆதிக்கம். மற்ற குடியிருப்புகள் சாதாரண மனிதர்களின் சகவாசக் கூடுகள். இதனால், குழப்பம் ஏற்பட்டு, அங்கே வந்தவர்களில் சிலர் அடி வாங்கிக் கொண்டும் போயிருக்கிறார்கள். இப்போது இவர்களின் பகுதி, சராசரிகளைவிட அதிகமாய் ஜில்லடித்தது. ஒரு குடியிருப்புப் பக்கம் ஒரு பளபளப்பான கார், உள்ளே நுழைந்ததும் ஒன்று ஏறிய சுவடு தெரியாமலே அந்தக் காரில் கம்பீரமாகப் போய் உட்கார்ந்து, காரைப் பறக்க வைத்தது. ‘இன்னொன்று’, மோட்டார் பைக்கில் ஏறிவிட்டது. சில வீடுகளுக்கு முன்னால், சைக்கிள்களும், ‘டபுளாகப்’ போய்க் கொண்டிருந்தன. அந்த வளாகத்தின் மத்தியில் உள்ள பொது மண்டபத்தில் ஒரே கூத்து. கவாலிப் பாடல்கள். சிரிப்பும் கும்மாளமுமான இரு பிரிவின் லாவணிப் பாடல்கள். அதைப் பார்க்கும் கூட்டத்தில் கலகலப்பான சலசலப்பு...

     ஹியா... கீத்கே... ஒன்ஸ்மோர்... ஆலமரத்தடியில் சில கார்கள்... காரில் வந்தவர்கள் கூட, கீழிறங்கி குரு அலியான கங்காதேவியின் காலைத் தொடுகிறார்கள். அவர், ஒரு காரை, இவர்கள் பக்கமாய் கையாட்ட, அந்தக் கார் வருகிறது... ஒரு ஆஜானுபாகுவான ஜாட். அசல் தேவிலால் தோற்றத்தில் நடுத்தரத் துடிப்பு... ‘சுயம்பு... சுயம்போ... ஹை சுயம்போ...’

     சுயம்பு அந்தக் குடியிருப்புத் திண்ணையிலிருந்து கீழே குதித்து, அந்த ஜாட் மனிதரின் அருகே போகிறான். அவர் ஒரு நூறுரூபாய் நோட்டை எடுத்து அவன் பைக்குள் திணிக்கிறார். முதுகைத் தட்டிக் கொடுக்கிறார். அவன் கையை எடுத்துத் தனது தலைமேல் போட்டு சிறிது நேரம் ஆசீர்வாதமாக வைத்துவிட்டு, நீலிமாவிடம், ஏதோ பேசப் போனார். அதற்குள் சுயம்பு அரைகுறை இந்தியில் ஆங்கிலத்தைத் துணைக்கிழுத்துப் பேசினான்.

     “கியா பிதாஜி... ஒய் ஹண்ட்ரட் ரூபி நோட்டு...”

     அந்தப் பிதாஜி, இந்தியில், உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். ஒரு நிமிடம்வரை, பேசினார்.

     சுயம்பு புரியாது விழித்தான். அவனுக்கு அதை விளக்கும்படி, நீலிமா, பாட்டுக் குரலோடு, குஞ்சம்மாவிடம் கொஞ்சிப் பேசினாள். உடனே லட்சுமி ஒரு அதட்டு அதட்டிவிட்டு, தமிழச்சியானாள்.

     “நீ மலையாளத்துல பேசி, நான் அதைவேற என் மகளுக்கு தமிழுல சொல்லணுமோ...!”

     “நீ பரையன தமிழோட, ஞான் பரையன மலையாளம்... அவளுக்கு நன்னாய் மன்சிலே... ஆவுண்டு.”

     “வாய மூடிக்கிட்டு சும்மா இருடி குஞ்சம்மா... ஏடி சுயம்பு... இந்த பிதாஜி புதுசா நட்டுக்கடை அதான் ஸ்பேர் பார்ட்ஸ் கடை தெறந்தப்போ நீதான கற்பூரம் கொழுத்துனே... இப்போ அந்தக் கடைக்கு என்ன கர்மத்துக்கோ ஒரு ஏஜென்ஸி கிடைச்சிருக்காம். நீ கைராசிக்காரியாம். மெனக்கெட்டு வந்திருக்கார். ஒனக்கு வந்திருக்கிற பவுசப் பாரு... ஒன்ன பெரிய மனுவியாக்குற செலவுக்கு இவளும் நானும் போட்டி போட்டு சம்பாதிக்கோம்... நீ என்னடான்னால், எங்களவிட ரெண்டு மடங்கா சம்பாதிக்கே. பேசாம எங்கள தத்து எடுத்துக்கடி..”

     சுயம்பு அந்த நூறு ரூபாய் நோட்டை யாரிடம் கொடுக்கலாமென்று யோசித்தான். தமிழின் இனமானமும், மலையாளத்தின் திராவிட சக்தியும், அவனை இழுக்கடித்தன. பிறகு தேசியவாதியாகி, நீலிமாவிடம் நீட்டினான். அவளோ, அந்த நோட்டை மீண்டும் அவன் ஜாக்கெட்டுக்குள் திணித்தாள். இதற்குள் ஆஷா அங்கே ஓடிவந்தாள். மராத்திக்காரி - துப்பறிவதுதான் அவள் வேலை. அந்த சுயம்புவைப் பார்த்து முதல் குரல் கொடுத்தவளும் இவளே. மராத்தி வாடையில் ‘சுயம்போ, சுயம்பு’ என்றாள். சுயம்பு அவளை சிநேகிதமாய்ப் பார்த்துச் சிரித்தபோது, அவள் லட்சுமியிடம் காது வழியாகச் சொல்ல, அவள், அதை, வாய் வழியாக விட்டாள். காதுக்கும் வாய்க்கும் இடையே ஒரு மொழி மாற்றம்.

     “நீ திக்குத் தெரியாமல், அலைஞ்ச மொதல் நாளுலே ஒரு மதராசிப் பொண்ணு அதுதான் - நம்ம தமிழாளு வீட்டுல குழந்தை பிறந்ததுக்கு பாடுனீங்களாமே. அந்தக் குழந்தைக்கு உடம்புக்குச் சரியில்லயாம். பிழைக்கது கஷ்டமாம். இவள் இத மட்டும் சொல்ல வந்தான்னு நெனைக்காதே. இங்கே நின்னு அந்தக் கள்ளப் பயலப் பார்க்க இவளுக்கு வசதியா இருக்குது...”

     சுயம்புவின் முகம் கூம்பிப் போனது. இப்போதுதான் தனது முகராசியை நினைத்துப் பெருமைப்பட்டான். ஆனால், முதல் நாளே தான் தொட்ட குழந்தை அதுவும் அண்ணன் மகள் மாதிரியான சின்னக் குழந்தைக்கு இப்படி ஒரு ஆபத்தா? கூடாது. வரக்கூடாது. வரவிடக்கூடாது.

     பாடகி நீலிமா பட்டென்று பேசினாள்.

     “நாம் ஒரு வீட்டு சந்தோஷத்தை மட்டும் பங்கு போட்டுக்க மட்டும் இல்ல. கஷ்ட நஷ்டத்தையும் பங்கு போடணும். அதனால, சுயம்புவோ, பகுச்சார் தேவியோ அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போகட்டும்! அச்சாலடுக்கி...”

     சுயம்பு பகுச்சார்தேவியைக் கையைப் பிடித்து இழுத்தான். அவள் மொக்கை முகத்தைப் பிடித்து ஆட்டினான். இருவரும், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு ஓடினார்கள். சேட்டு வீட்டுக் கலியாணத்தில் தின்னவும், சேர்க்கவும் நிறையக் கிடைக்கும். ஆனால், இதையெல்லாம் பார்க்க முடியாது... கூடாது.