31

     தொட்டிலில் கிடந்த குழந்தையை சோக மயமாய்ப் பார்த்துக் கொண்டு கையைப் பிசைந்த சுலோச்சனா, சுயம்புவைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். பிறகு அவளிடம் “ஆப் ஹமாரா கர்மே” என்று அதற்குமேல் இந்தியில் பேசத் தெரியாமல் விழித்தாள். பகுச்சார்தேவி இந்தியிலும் குஜராத்தியிலும் ஏதோ, அந்த மதராசிப் பெண்ணுக்குத் தெரியும் என்பதுபோல் பேசினாள். இறுதியில் சுயம்பு சொந்த மொழியில் பேசும் உணர்வு இல்லாமலே பேசினான்.

     “குழந்தைக்கு என்னக்கா செய்யுது?”

     சுலோச்சனா அவனை அதிர்ந்து பார்த்தபோது, அவன் மேற்கொண்டும் தொடர்ந்தான்.

     “அன்றைக்கு ஒங்ககிட்ட வேணுமுன்னுதான் தமிழில பேசலே! ஏன்னு கேட்காதீங்க. நானும் ஒரு நல்ல குடும்பம்தான். இப்படியாயிட்டேன். என்னடா பண்ணுது மருமகனே... அத்தைகிட்டே. நீயாவது சொல்லுடா.”

     அவள் கண்ணிர் சிந்தி கதை சொல்லும் குரலில் சொன்னாள்.

     “ஒரு மாசமா திடுதிப்புன்னு வெட்டு வருது... பிட்ஸ்ஸாம். கட்டுப்படுத்த முடியாதாம். மருந்து மாத்திரை கொடுத்து எட்டு வயசு வரைக்கும் எச்சரிக்கையாய்ப் பார்த்துக்கணுமாம். இல்லாவிட்டால், எது வேணுமுன்னாலும் நடக்குமாம். இவரு வேற இன்னிக்கு ராத்திரிதான் வருவார். பத்துநாள் டூர்...”

     சுயம்பு மூச்சே ஒரு வெட்டாவதுபோல், முடங்கிக் கிடந்த குழந்தையைப் பார்த்துவிட்டு, அவளுக்கு உபதேசித்தான்.

     “டாக்டருங்க கெடக்கானுக. எங்க அண்ணன் பயலுக்கும் இப்படித்தான் அடிக்கடி வெட்டு வந்திச்சு. ஒரு நாட்டு வைத்தியரு கஸ்தூரி மாத்திரையை தேனுல ஒரு வாரம் கொடுத்தார். வெட்டு, வெத்து வேட்டாயிட்டு. பேசாமல், அதை வாங்கிக் கொடுங்கக்கா.”

     “எங்கே கிடைக்கும் தெரியாதே!”

     “எனக்குத் தெரியும். பூசா ரோட்டுல ஒரு ஆயுர்வேத ஆஸ்பத்திரி இருக்கு ஒரு நொடியில போயிட்டு வாறேன்.”

     சுயம்பு பகுச்சார்தேவியிடம் ‘தும் இதர் பைட்டியே’ என்று சொல்லிவிட்டு ஒரு ஆட்டோவைக் கை தட்டிக் கூப்பிட்டான். அது வந்ததும் ஒரே தாவல்.

     பகுச்சார்தேவி, அந்தக் குழந்தையின் தலையைப் பிடித்து முர்கேவாலி தேவியை அந்த ‘அச்சா பச்சாவுக்காக’ தியானித்தாள். சுலோச்சனாவின் முதுகைத் தட்டி ‘குச் நை. குச் நை’ என்றாள். அதாவது கவலைப்படும்படி ஒன்றும் இல்லையாம்.

     இதற்குள், சுயம்புவும் திரும்பி வந்துவிட்டான். ஒரு கையில் தேன் பாட்டில். மறு கையில் பத்து மாத்திரை பொட்டலம். ஒரு மாத்திரையைக் கையாலேயே நசுக்கி தூளாக்கி உள்ளங்கையில் ஏந்தி தேனில் குழைத்து, ஆள் காட்டி விரலில் தேய்த்து, குழந்தையின் வாயில் வைத்தான். தாய்க்காரி பதறியபோது, “இந்த மருந்து நல்லது செய்யும், அப்படி செய்யாட்டாலும், கெட்டது செய்யாது. மூணு வேளைக்குக் கொடுக்கா” என்றான்.

     “எவ்வளவு ரூபாப்பா?”

     “ஒங்களுக்கு ஏன் அதெல்லாம்!”

     “முன்னப் பின்ன தெரியாத எனக்கு...”

     “நீங்க எனக்கு அக்காமாதிரி இருக்கீங்க. அது எங்க அண்ணன் குழந்தை மாதிரி இருக்குது. அப்படி நீங்க இல்லாவிட்டாலும் என்ன, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவப்படாதா? நான் வாறேன். மாத்திரை அவ்வளவுதான் இருந்தது. தீர்ந்துபோனதும், ஸ்டாக்குக்கு வந்துடும்.”

     “ஒனக்கு எந்த ஊருப்பா?”

     “ஊரைச் சொன்னாலும் பேரச் சொல்லப் படாதுன்னு சொல்லுவாங்க! ஆனால், நான் ரெண்டுமே சொல்லப்படாது! படிச்சது காலேஜ், இனிமேல் ஆடப்போறது தெரு டான்ஸ்! ஏக்கா அழுவுறே... குழந்தைக்கு ஒன்னும் ஆகாதுக்கா...”

     “நான் கொழந்தைக்காக அழலப்பா. நீயும் என் தம்பி மாதிரி. ஒன் கோலத்தை நெனச்சால், ஒனக்கு நான் ஏதாவது செய்யனும் தம்பி!”

     “அப்படின்னா, இந்தத் தங்கச்சிக்கு ஒரே ஒரு உதவி செய். ஒங்க ஹஸ்பெண்ட எங்க ஆட்களை படம் பிடிச்சு டி.வி.யில் காட்டச் சொல்லு... அட்ரஸ் வேணுமா? பகுச்சார்... டி.வி. கம்மிங்... தும் அட்ரஸ் போலோ.”

     பகுச்சார்தேவி முகவரி சொல்ல, சுலோச்சனா எழுதிக்கொண்டாள். சுயம்பு தானிருக்கும் இடத்தைக் கைநீட்டி விளக்கிவிட்டு, புறப்பட்டுவிட்டான்.