உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
32 மறுநாள் காலையில், எல்லோருக்கும் முன்னாலேயே குளித்துவிட்டு, ஆலமரத்தடி கங்காதேவியின் காலைத் தொட்டுக் கும்பிட்டு, வீட்டுக்கு ஓடிவரப் போனான் சுயம்பு. இன்றைய சமையல் அவன் முறை. அப்போது ஒரு மாருதி ஜீப் குறுக்கே நின்றது. அதன் முன்பக்கம் இருந்து குதித்தவன், ‘இஎன்ஜி’ காமிராவை சரிபார்த்துக் கொண்டிருந்தான். பேச்சையும் பேசிய உருவத்தையும் ஒரே சமயம் பதிவு செய்யும் காமிரா. அந்தக் குழுவின் தலைவரைப்போல் தோன்றிய சுலோச்சனாவின் கணவன் சுயம்புவை அடையாளம் கண்டுகொண்டான். “நல்லவேளையா இன்னிக்கு ஒரு சங்க் காலியா இருக்குது... டூர் இழுத்துட்டதால, ரிக்கார்ட் செய்ய முடியாமப் போச்சு! ஒங்க ஆட்கள் டான்ஸ் செய்யணும். ஒங்க தலைவர் பேட்டி கொடுக்கணும்.” “மொதல்ல என் மருமகப்பிள்ளை எப்படி இருக்கான் - அதைச் சொல்லுங்க.” “தேங்க்யூ தெளிவா இருக்கான். அப்புறம் நீயும் பேட்டி கொடுக்கணும்.” “வேண்டாம்... எங்கப்பா பார்த்தா துடிச்சுடுவார்.” “இந்த நெட் ஒர்க் இந்தி ஏரியாவுக்குள்ளதான். நேஷனல் நெட் ஒர்க் இனிமேதான் வரணும். அது வரைக்கும் இங்க போடறது அங்க தெரியாது. சரிப்பா குயிக்...” “இப்படி திடுதிப்பென்னு வந்து நிக்கீங்களே! எங்க ஆட்கள இனிமேல்தான் தேடிப் பிடிக்கணும்.” “நீ வேற... உள்ள போய்ப்பார்!” சுயம்பு தன் அறைக்குள் ஒடிப் பார்த்தான். ஒவ்வொன்றும் தன்னை, இந்திக் கதாநாயகியாக நினைத்துக்கொண்டு போஸ் முகங்களோடு போக்குக் காட்டின. சுயம்புவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தன. அவசரப் பவுடர்கள். ஈரம் காயாத முகங்களில் பட்டு, வெள்ளைத் திட்டுக்களாய் விகாரமெடுத்து நின்றதும் உண்மைதான். சுயம்பு அந்த டி.வி. குழுவைக் கூட்டிக்கொண்டு கங்காதேவியிடம் போனான். சுலோச்சனா கணவன், அந்த குரு அலியிடம் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கச் சொன்னான். அவர் நமது அரசியல்வாதிகளைப் போல எந்தவித ஒத்திகையும் இல்லாமல் யார் யாரோ எழுதிக் கொடுப்பதைப் படிக்காமல், சரளமாகப் பேசினார். “அலிகள் மனித குலத்தின் மூன்றாவது பரிமாணம். பீஷ்மர் மரணத்திற்குக் காரணமான சிகண்டி ஒரு அலி. அர்ஜுனன் அலியின் உருவத்தோடு இருக்கும் போதுதான், கெளரவப்படைகளை தன்னந்தனியாய் தோற்கடித்தான். கடவுள், ஆண் வடிவாகவோ அல்லது பெண் வடிவாகவோ பாரபட்சமாய் இருக்க முடியாது. அலி வடிவத்தில்தான் இருக்க வேண்டும். அலிகள், நம்பிக்கைக்கு உரியவர்கள். அந்தக் காலத்து அந்தப்புர காவலர்கள். ஆனால், இந்த ஆண்களும் பெண்களும்... அவர்கள் செய்யும் அயோக்கியத் தனங்களும்...” “குருஜி மேடம்... விவாத் தையே... கான்ஸன்ட்ரேட் ஆன் யுவர் பிராப்ளம்.” கங்காதேவி, இணங்கினாள். இந்தச் சின்னத் தடங்கலோடு, ஒரே ‘டேக்கில்’ எல்லாம் முடிந்தது. பிறகு அந்த டி.வி. குழு ‘லேண்ட் மார்க்’ - ‘பனோரமா ஷாட்’ என்ற புதிய டி.வி. மந்திரங்களை உச்சரித்தபடியே, அங்குமிங்குமாய் சுழன்றது. சுயம்புவும் ஒரு ஸ்டேட் மெண்ட் கொடுத்தான். இப்போதுதான், தனக்குத்தானே ஒரு சமாதானம் ஏற்பட்டிருக்கிறது என்றும், அவன் தமிழ் மொழியிலேயே சொன்னான். சில சராசரி மனிதர்களிடமும், ஸ்டேட்மெண்ட் வாங்கப்பட்டது. நீலிமா குழு, இதுவரைக்கும் பாடாத பாட்டாய்ப் பாடி, ஆடாத ஆட்டம் ஆடி, ஒரு அமர்க்களம் செய்துவிட்டது. அந்த காமிராக்குழு, நல்ல உபசரிப்போடு போனதும், எல்லோருக்குமே ஒரு எதிர்பார்ப்பு. அன்றைக்கே சாயங்காலம் ஏழு மணிக்கு போடப்போவதாக, சுலோச்சனா புருஷன் சொல்லிவிட்டுப் போய்விட்டான். இப்போதே இருட்டாதா என்று ஏக்கம். கூடவே இருட்டடிப்புச் செய்துவிடுவார்களோ என்று ஒரு பயம். கங்காதேவி, அந்தப் பெருநகரில் உள்ள, குரு அலிகளுக்கும், சேதி சொல்லிவிட்டாள். சுலோச்சனா கணவன், தலையிட்ட பிறகு, அவருடைய பேச்சு, உணர்வு வெளிப்பாட்டிலிருந்து, அறிவு வெளிப்பாட்டிற்கு வந்தது. பக்கத்து நகரங்களுக்கு எஸ்டிடி முலம் இந்தச் செய்தியை அவரே தெரியப்படுத்தினார். பிரதமர் இந்திரா காந்தியும் தான் பேசுவதைக் கேட்பார் என்று சந்தோஷம். அந்த வளாகத்தில் ஏழு மணிக்கே கண்கொள்ளாக் கூட்டம். சராசரிகளும் அலிக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பல்வேறு அலிப்பேட்டைகளிலிருந்து ஆட்கள் குவிந்தனர். நீலிமாவுக்கு இன்னும் கொஞ்சம் நன்றாக டிரஸ் செய்திருக்கலாம் என்று ஒரு ‘பின்புத்தி’. கங்காதேவி வீட்டுக்குள்ளிருந்த டி.வி. செட்டை ஆலமரத்தடித் திட்டில் வைத்துவிட்டாள். சரியாக ஏழு மணி முப்பத்தாறு நிமிடம். அறிவிப்புப் பெண்ணை அடித்துப் போட்டுவிடலாமா என்ற கோபம். அந்தக் கோபம் தீர்வதற்குள்ளேயே... பனித்துளியில் பனைமரத்தைப் பார்ப்பதுபோல், அந்தச் சின்னத் திரையில் அந்த ஏரியாவை நிரூபிக்கும் லேண்ட் மார்க் ஷாட். கங்கம்மாவின் பேச்சு... இடையிடையே பீஷ்மர், சிகண்டி, அர்ச்சுனன். மாலிக்காபூர் ஆகியோரின் படங்கள். அப்புறம் நீலிமா கோஷ்டியின் ராகம் தானம் பல்லவி. அலிகளைப் பற்றிய சராசரிகளின் உயர்வான கருத்துக்கள். சுயம்புவின் தமிழ்க்குரல். அவன் பேசியதை அடக்கி, அதன்மேல் சத்தம் போட்டு ஒலித்த, இந்தி ஒவர்லாப்... இறுதியில், கங்கம்மாவின் வேண்டுகோள். கடைசியாக “இவர்களும் - நம்மவர்கள் - நல்லவர்கள்” என்ற டைட்டில், நீலிமா, தன்னைப் பாராட்டியே, தனக்குத்தானே கைதட்டினாள். நசிமாவுக்கு குளோசப்பில் வரவில்லை என்று ஒரு கவலை. குஞ்சம்மா, லட்சுமியோடு சண்டைபோடுவது டி.வி. யிலும் காட்டப்பட்டது. சுயம்பு தனது கதையைச் சொன்னது கண்ணிரை வரவழைத்தது. கங்காதேவி சுயம்புவைத் தன் பக்கம் வரவழைத்து கட்டியணைத்தாள். ஒரு நாளிலேயே தன்னை ஊரறிய உலகறிய செய்து விட்டதற்காக அவனை அந்த டி.வி.யைப் பார்த்தது போலவே பார்த்தாள். பிறகு திட்டவட்டமாக அறிவித்தாள். “இன்று முதல், இவள் என்மகள். இதுக்கான சடங்கு சீக்கிரம் நடக்கும். அதுக்கு முன்னால பூப்பு நீராட்டு, சுவீகார சடங்கு, நாற்பது நாளுக்கு மேல்தான் நடக்கப் போகுது. ஆனாலும் இப்பவே சொல்லிட்டேன். அடுத்த சித்ரா பெளர்ணமியில பெண் சடங்க வச்சுக்கப் போறேன்! அப்புறம் அலி பட்டாபிஷேகம்...” ஒரே கும்மாளம். ஒரே நீளவாக்கு கைதட்டல். கங்காதேவியை, மனதுக்குள் திட்டிய லட்சுமியும் குஞ்சம்மாவும், பிறகு ஒருவரை ஒருவர் பார்த்து சந்தோஷப்பட்டார்கள். சுயம்பு அவளுக்குக் கிடைக்கல என்று இவளும், இவளுக்குக் கிடைக்கலைன்னு அவளும், தங்களுக்குள் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தி, அதில் ஏமாற்றத்தைத் தேய்மானமாக்கினார்கள். சுயம்பு, லட்சுமியிடம் கேட்டான். ஒட்டுக் கேட்க வந்த குஞ்சம்மாவையும் பார்த்துக் கேட்டான். “பெண் சடங்குன்னா என்னது...” “அதுவா?... ஒனக்கு தெரிய வேண்டாம். சொன்னாலே மயக்கம் போட்டு விழுந்துடுவே...” வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|