உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
33 சுயம்புவை பெளர்ணமிப்பதற்கான சித்ரா பெளர்ணமி... அந்த அறையில் ஒரு சுவரில் சுயம்பு சாத்தி வைக்கப்பட்டான். உடல் அளவில் நிர்வாணப்பட்டு, நிர்க்கதியாய் நின்றான். நின்றானில்லை. நிறுத்தி வைக்கப்பட்டான். பிறந்தமேனிக் கோலம் போட்டவன், எதிரே கண்ணில் பட்டதைப் பார்த்துக் கதறப்போனான். ஆனால் அவனது நீண்டு வளர்ந்த தலைமுடியே அவன் வாயில் திணிக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த முடிக் கற்றைகள் வழியாகத்தான் அவன் அரைகுறைப் பார்வை போட வேண்டியிருந்தது. அந்தப் பார்வையில்கூட அந்த அரிவாள் மின்னியது. ஒரு முழு நீளமுள்ள வெட்டரிவாள். பார்த்தால் முகம் தெரியும். தொட்டால் ரத்தம் வரும். அதைப் பிடித்துக் கொண்டு நின்ற அலியும், அசல் தாடகை மாதிரி கோர சொரூபம். சுயம்பு அனிச்சையால் துள்ளப் போனான். அவனைப் பிடித்தவர்கள் அங்குமிங்குமாய் இறுக்குகிறார்கள். முடியின் பிடி வலுத்தது. அவன், அப்படியும் கத்தப் போனபோது, வாயிலிருந்த தலைமுடி கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. உள்நாக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. சுயம்பு அங்குமிங்குமாய்ப் புரளப் போனான். இரண்டு அலிகள் இருபக்கமும் அவன் கைகளை இழுத்துப் பிடித்திருந்தனர். இடுப்புக்குக் கீழே ‘அதில்’ ஒரு கருப்புக் கயிறு முடிச்சாகி, இரு பக்கமும் நீண்டிருந்தது. முகமறியா இரண்டு அலிகள் அந்தக் கயிற்றின் இருமுனைகளையும் இழுத்துப் பிடிப்பதற்காக, தங்கள் உடம்புகளையும் முறுக்கோடு நிறுத்தி வைத்தார்கள். அந்தக் கயிற்றின் ஆதாரத்திலேயே அவர்கள் நிற்பது போலிருந்தது. சுயம்புவின் பாதங்களுக்குச் சிறிது பின்புறமாய், விபூதி குங்குமம் வைக்கப்பட்ட ஒரு புது மண்பானை. விழுவதை விழுங்குவதற்கு வாய் பிளந்து காத்திருந்தது. அந்த அறையின் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. உள்ளேயும் ஒரு வட்டமான சித்ரா பெளர்ணமி மின் விளக்கு... எதிர்ச்சுவர்ப் பக்கம் முர்கேவாலி மாதா, சேவல் மேல் சரிந்து நின்றாள். இவனையே பார்க்கும் உக்ரப் பார்வை. இவனுக்குக் குறி வைத்தது போன்ற திரிசூலம். பழவகைப் படைப்புக்கள். ஊதுபத்திகள், மேகமண்டலத்தை உற்பத்தி செய்தன. எல்லோரும், சுவர்க்கடிகாரத்தையே பார்த்தார்கள். அது நள்ளிரவு பன்னிரண்டு மணியைக் காட்டி அடிப்பதற்கு, இன்னும் நூறு தடவை சொடக்குப்போட்டு விடலாம். சுயம்புவால் விம்மத்தான் முடிந்தது. மனம் விட்டுத் தேம்பி, வாய்விட்டு அழ முடியவில்லை. டி.வி. காரர்கள் போன மறுநாளே, அவன் குரு அலி கங்காதேவிக்கு நிச்சயிக்கப்பட்ட மகளாக அவள் வீட்டுக்கே, சுயம்பு வந்துவிட்டான். இல்லை, வரவழைக்கப்பட்டான். மயில் இறகில் செய்தது மாதிரியான கட்டில் படுக்கை. தனித்த அறை. மின்விசிறி. வேளா வேளைக்கு, பிரியாணி முதல் பிரிஞ்சி வரை கொடுக்கப்பட்டது. ஆனாலும், அது ஒரு உயர் ரக சிறைவாசம். அவனுக்குப் பழக்கப்பட்ட எந்த அலியும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கங்காதேவி அவ்வப்போது வருவாள். இவனிடம், தனக்குத் தெரிந்த பல மொழிகளிலும் சில வார்த்தைகளை உருட்டிப் போட்டு ஒருவிதப் புது மொழியில் பேசுவாள். ஆனாலும், அந்தப் பேச்சு செய்யாத காரியத்தை அவரது செல்லமான முதுகுத் தட்டும், கன்ன வருடலும் செய்துவிட்டன. இடையிடையே ‘மகளே. நீ இப்போ இருப்பது மாதிரி, பலர் இருந்தாலும், நீ என்னுடைய மகள் என்பதாலும், எனக்குப் பிறகு ஒருவேளை குரு அலியாக வரலாம் என்பதாலும் இந்தத் தியாகத்தைச் செய்துதான் ஆகவேண்டும்’ என்றாள். சுயம்புவும் ஏதோ அலி சமுதாயத்திற்காக விடுதலைப் போர் தியாகிகள்போல், ஏதாவது ஒன்றைச் செய்வதற்கு தன்னை ஆயத்தப்படுத்துவதாகத்தான் நினைத்தான். அவனுக்கு, உணவு கொண்டுவரும் சேலா அலிகளிடமும், கையால் சைகை செய்து வாயால் ‘க்யா தமாஷா ஹை’ என்றுகூடக் கேட்டுப் பார்த்தான். அவர்கள் அவனது தமிழ்ப்படுத்திய இந்தி வார்த்தையை ரசித்தார்களே தவிர பதிலளிக்கவில்லை. போதாக்குறைக்கு லட்சுமியக்கா, பூடகமாய் சொன்ன சொல்லும், பயமுறுத்தியது. இன்று காலையில்தான், அவனுக்கு வெறும் தயிர் சாதம் மட்டும் கொடுத்தார்கள். வழக்கமான பிரியாணி குருமா கண்ணில்கூடக் காட்டப்படவில்லை. அதற்குப் பிறகு, முழுப் பட்டினி, குரு அலி, அவ்வப்போது எட்டிப் பார்த்தாள். எதுவுமே பேசவில்லை. அவனைத் தூங்கும்படி தொலைவிலேயே நின்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். இரண்டு பேர் அவனை இரவு பத்தே முக்கால் மணி அளவில் எழுப்பி விட்டார்கள். குளிக்கச் சொன்னார்கள். குளித்தான். பட்டினுள் பட்டான ஒரு மின்வெட்டு லுங்கியை கட்டச் சொன்னார்கள். கட்டிக் கொண்டான். சிறிது நேரத்தில், இரண்டு புது அலிகள், அவன் கைகளை சிநேகிதமாகப் பிடித்தார்கள். அவர்கள் கண்காட்டிய இடத்தில், கால் போட்டான். அந்த வீட்டுக்குள்ளேயே அலங்கரிக்கப்பட்ட ஒரு முக்கடி அறை. கங்காதேவி தனது அறை வாசல் வரை வந்து அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். நெற்றியில் தனது கையை வைத்து முர்கே மாதா என்றாள். அவளுக்காக, அவனை நிற்க வைத்தவர்கள், அவளது கண்ணசைவாலேயே உள்ளே கொண்டு போனார்கள். உடனடியாய், கதவு சாத்தப்பட்டது. கசாப்பு அலியின் கையில் இருந்ததைப் பார்த்துவிட்டு, கத்தப்போன சுயம்புவை, அப்படியே மோதிப் பிடித்துக் கோழியைப் பிடிப்பது மாதிரி பிடித்து அவன் தலைமுடியாலேயே வாயடைக்க வைத்தார்கள். சுயம்பு கத்தப் போனான். கதறப் போனான். உடம்பை அங்குமிங்குமாய் ஆட்டினான். இதையெல்லாம் எதிர்பார்த்த மாதிரி கிடுக்கிப் பிடிகள். ஆனாலும் அப்படி பிடி போட்டவர்களால்கூட, அவன் கண்களில் பெருக்கெடுத்த நீரை நிறுத்த முடியவில்லை. முன்பக்கமாய்க் குவிந்த முடிக்கற்றையில், அந்தக் கண்ணிர்த்துளிகள் உருண்டு உருண்டு, கருமேகம் ஒன்று, மழைத்துளிகளை உருட்டிவிடப் போவது போல் இருந்தது. சுயம்பு எல்லோரையும் நொந்துகொண்டே, வெந்தான். ‘எக்கா... நீ அப்படிப் பேசாவிட்டால், நான் இப்படி ஆவேனா... அண்ணா... ஒன் காலடியிலேயே காலமெல்லாம் கிடக்கேன்னு சொன்னேனே... இப்போ ஒரு அரிவாள் அடியிலே துடிக்கேனே... டேவிட் ஒரு லட்டருக்குக்கூட பதில் போடாத நீங்கள் ஒரு மனிதனா டேவிட்! அடிப்பாவி வஞ்சகி... நீ பச்சையம்மா இல்லடி கொச்சையம்மா. என்னை டில்லிக்கு விரட்டாமல் விரட்டி, இந்தக் கோலத்துக்குக் கொண்டு வந்ததுக்கு நீதாண்டி காரணம். அடே குருவலி... ஒன்ன நான் டி.வி.யில உலகறியச் செய்ததுக்காடி என்ன இங்க கொண்டு வந்து அடைச்சே... இருக்கட்டும், இருக்கட்டும். உயிரோட ஒன்னப் பார்த்தால், முதல் வெட்டு ஒன் தலைக்குத்தான்... எனக்கும் ஒரு அரிவாள் கிடைக்காமலா போகும்... அப்பா... அம்மா... நீங்க ரெண்டு பேரும்தான் என் நிலமைக்குக் காரணம். ஒங்கள அப்படிக் கூப்பிடறதே பாவம்...’ சுவர்க்கடிகாரம் பன்னிரண்டு தடவையில் ஆறு தடவை அடித்தது. உடனே ஏழாவது சத்தத்தில் கீழே இறங்கிய அரிவாள், எட்டாவது சத்தத்தில் செந்நீரோடு மேலே நிமிர்ந்தது. எட்டாவது சத்தம் கேட்பதற்கு முன்பே, பானைக்குள் ஒரு சத்தம். சுயம்பு கீழே கிடப்பது துள்ளுவது போலவே துள்ளினான். அதற்குள், வாய்க்குள் இருந்த முடி நாக்கைச் சுற்றியது. முகத்தோடு சேர்த்து மூக்கடைப்பு. யாரோ இரண்டுபேர், இரண்டு இருபக்கமும் கைகளைப் பிய்த்தெடுக்கப் போவது போன்ற இழுப்பு... சுயம்பு அப்படியே மயங்கி, சுவரில் சாய்ந்தான். நினைத்து நினைத்து நினைவே சூன்யமானது... அழுது அழுது கண்ணிரே கட்டியானது. எல்லா அலிகளும் கீழே பீறிட்டு விழும் ரத்த அருவியையே பார்த்தார்கள். அவர்கள் முகங்களில் ஏதோ ஒரு நல்ல காரியத்தைச் செய்துவிட்ட திருப்தி. அந்த ரத்த ஊற்று நிற்கக்கூடிய அனுமான நேரத்தைச் சரி பார்ப்பது போல், சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார்கள். ரத்த அருவி சிறுகச் சிறுக நின்று, மலைக் குன்றைக் காட்டும் ஆறுபோல், சதையைக் காட்டியது. சுயம்புவின் வாயிலிருந்து, தலைமுடி எடுக்கப்பட்டது. கைகள் அவனிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் அவனால்தான் ஒப்படைக்கப்பட்ட கரங்களை இயக்க முடியவில்லை. இப்போது அந்த அலிகளே அவற்றை இயக்கினார்கள். அவன் கைகளைப் பிடித்துக் கழுத்துப் பக்கம் போட்டுக்கொண்டே ஒரு அலி புறப்பட்டது. இன்னொரு அலி அவன் கால்களைத் தாங்கிக்கொண்டது. அவன், எந்த அறையில் இருந்தானோ, அந்த அறையில் - அதே ஒற்றைக்கட்டிலில் ஒரு உறுப்பு இழந்து போடப்பட்டான். மறுநாள், எப்போது கண் விழித்தானோ, அப்போது அவன் கண்களில் நீலிமா கோஷ்டியினர் பட்டார்கள். நீலிமா அவன் தலையைக் கோதிவிட்டாள். வெட்டுச் சிகிச்சை சுகமாய் நடந்தது போன்ற ஒரு குளிர்ச்சிப் பார்வை. நசிமா தனது பணியைச் செய்யக் காத்திருந்தாள். லட்சுமியும், குஞ்சம்மாவும்தான் சேர்ந்தாற்போல் அழுதார்கள். கங்காதேவி கிழட்டுக்கு அவனைப் பறிகொடுத்தாலும், பிள்ளைப் பாசம் அவர்களை உலுக்கிக் குலுக்கியது. அது என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை, அவர்கள் பார்வை காட்டியது. நீலிமாதான், தனக்கும் அழுகை வந்துவிடக்கூடாது என்பதற்காக, ஒரு அதட்டு போட வேண்டியதாயிற்று. சுயம்பு, லட்சுமியும், குஞ்சம்மாவையும், காய முணங்கலோடு பார்த்தான். பிறகு அவர்கள் பார்த்த இடத்தை, தானும் பார்த்தான். தலையைத் தூக்கி தலையைக் கீழே தாழ்த்திப் பார்த்தான். பார்க்க முடியாமல், கண்களை மூடினான். நசிமா அவன் தலையை நிமிர்த்தி, தனது வயிற்றில் சாத்திக் கொண்டாள். நீலிமாதான் இந்தியில் சந்தேஷமாகப் பேசினாள். டோலக் அடிப்பதுபோல் கைகளை வைத்துக்கொண்டு லடுக்கி, லடுக்கி என்று ஒரு நாட்டுப்புறப் பாட்டைப் பாடினாள். இதற்குள் வாட்டசாட்டமான இரண்டு அலிகள் உள்ளே வந்தார்கள். இருவர் கைகளிலும் இரண்டு சின்னப் பாத்திரங்கள். இரண்டுமே ஆவிஆவியாய் மூச்சு விட்டன. ஒன்றில் கொதிக்கும் எண்ணெய். இன்னொன்றில் அதைவிட அதிகமாகக் கொதித்த வெந்நீர். சுயம்பு அவர்களைத் துக்கித்துப் பார்த்தபோது, அவர்கள் அவனைப் பார்க்காமல் நீலிமாவிடம் பெங்காலியில் பேசினார்கள். உருவமும், உள்ளடக்கமும் மாறினாலும், தாய்மொழிக்காரிகளிடம் பிற மொழியில் பேசாத வங்காள ரத்தத்தின் ரத்தங்கள். அந்த பெங்காலி அலிகள் சொன்னதை நீலிமா லட்சுமிக்கு இந்தியாக்க, அவள் சுயம்புவின் ஒரு காலை எடுத்துத் தன் மடியில் போட்டுக்கொண்டாள். அவள் உட்கார்ந்தால், தானும் உட்காருவது ஒரு அவமானம் என்று நினைத்ததுபோல் குஞ்சம்மா அவன் இன்னொரு காலை எடுத்து நின்றபடியே தன் இடுப்போடு இணைத்துக்கொண்டாள். மார்கரெட் நசிமாவின் வயிற்றோடு சேர்த்து அவன் தலையை பின்பக்கமாய்ச் சாய்த்தாள். அத்தனையும் செல்லப்பிடிகள் தான். சுயம்பு உதறப் போனான். லட்சுமி அறிவுறுத்தினாள். “சும்மா அப்படியே கெட்டி. இது நல்ல மருந்து...” சுயம்பு அப்படியே கிடந்தான். ஒரு அலி ஆவி பறக்கும் எண்ணெய்க்குள், ஒரு ஸ்பூனைமொண்டு, சுயம்புவின் காயம்பட்ட இடத்தில் கவிழ்த்தினாள். உடனே வெந்நீர் அலி, அதே மாதிரி சுடு நீரைக் கொட்டினாள். ஆரம்பத்தில் பிராணன் போவது மாதிரி வலி. முகத்திலேயே ஒரு சுரீர் ஒலி. அப்புறம் ஒரு இதம். அப்படி ஊற்றவில்லையானால்தான் வலிக்கும் என்பதுமாதிரியான நிலை. சுயம்பு சும்மாவே கிடந்தான். லட்சுமி சிகிச்சை அலிகளை ‘சம்திங்காக’ பார்த்தபோது, அவர்கள் கையை ஓங்கினார்கள். ‘நாங்க என்ன ஆஸ்பத்திரிகாரிகளா’ என்றார்கள். ‘அதுவும் குரு அலியோட வாரிசுகிட்டயா’ என்று யோக்கியத்தனத்தில் பாதியைக் குறைத்துக்கொண்டு பேசினார்கள். நீலிமா தவிர, மற்றதுகள் சுயம்புவை பிரமித்துப் பார்த்தனர். இந்த நீலிமாதான் பொய் மரியாதையுடன் முகத்தைக் கோண வைத்து, தலையைத் தாழ வைத்துக் கையை மேலே கொண்டுபோய் ‘சலாம் சாப், சலாம் சாப்’ என்றாள். ஒன்றும் புரியாமல் விழித்த சுயம்புவுக்கு, லட்சுமி விளக்கம் சொன்னாள். “நீ நம்ம குருவுக்கு வாரிசாகப் போறியாம்... இது வரை எவளையும் மகளா தத்து எடுக்காத அந்தக் கிழவி ஒன்ன மகளா எடுத்தது ஒரு பெரிய அதிசயமாம்... எல்லாச் சொத்தும் ஒனக்குத்தானாம். எல்லாம் முர்கே மாதாவாலி அருள்.” “இல்லே, டி.வி. மாதா கிருபா...” லட்சுமியும், குஞ்சம்மாவும் கைகளை நீட்டி நீட்டி, தட்டித் தட்டிப் போர்ப்பரணி பாடினார்கள். அடிக்காத குறைதான். இன்றைக்காவது அடிச்சுக்கட்டும் என்பது மாதிரி எல்லோரும் சும்மா நின்றபோது அவர்கள் வாய் வலித்துப் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வந்துவிட்டது போல் வேறு வேறு பக்கமாக முகம் திருப்பினார்கள். சுயம்பு, வேதனையோடு முனங்கினான். “எல்லாம் போயிட்டு... இனிமேல் சொத்து வந்தா ஆகப்போகுது... விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் கட்டுனதுமாதிரி... கழுதைக்கு, முத்துமாலைன்னு பேரு வெச்சதுமாதிரி... எங்க அக்காவ விட எந்தச் சொத்து உசத்தி... அவளே எனக்கு இல்லாம போயிட்டாள்...” பள்ளிக்கூடத்தில் முதலாவது வந்தும், வாழ்க்கையில் பின்னால் வந்தாச்சு... லட்சுமியால், தாள முடிந்தாலும், குஞ்சம்மாவால் தாள முடியவில்லை. அதிர்வேகமாய் திரும்பி, அவன் பக்கமாய் குவிந்து, கண்களைத் துடைத்துவிட்டாள். நீலிமா விவரம் புரியாமல் விளக்கம் கேட்டாள். லட்சுமி, விளக்கியதும், நீலிமா, முகம் திருப்பினாள். அழவைப்பது தவிர, அழுதறியாத நீலிமாவை, அப்படிப் பார்த்ததில் நசிமாவுக்கு அதிக அழுகை வந்தது. வங்காளத்தில், பள்ளியில் படிக்கும்போதும், பாட்டென்ன, பேச்சென்ன... பரிசுகள்தான் என்ன... வங்காள லதா என்று பட்டம் வாங்கிவிட்டு இப்போது ஒரு தெருப்பாடகியாய், உள்ளுக்குள் ஒரு பிச்சைக்காரியாய்... ஒலமிட வேண்டிய நிலை... இதைப் பிரதிபலிப்பது போல் மார்கரெட் ஏசுவே! ஏசுவே என்றாள். மயான அமைதி. ஒவ்வொருவரும் இயற்கை கொடுத்த சுமையை மேலும் கனமாக்கிய பெற்றேரையும் மற்றோரையும் நினைத்துப் பார்த்தார்கள். மனத்தைப் பின் நோக்கி நகர்த்தினார்கள். அந்த வைத்திய அலிகள்கூட, அந்த மயானப் பார்வைக்குக் கட்டுப்பட்டது போல் சிறிது இடைவேளையாய் நின்றுவிட்டு, மீண்டும் எண்ணெயையும் வெந்நீரையும் மாறி மாறி ஊற்றினார்கள். சுயம்பு, துக்க உணர்வோடு பார்த்தான். நீலிமாவின் கையை எடுத்துத் தனது கழுத்தில் சுற்றிக்கொண்டான். திடீரென்று எல்லோரும் எழுந்தார்கள். குரு அலி கங்காதேவி, ஒரு தட்டோடு உள்ளே வந்தாள். அதில் இரண்டே இரண்டு காய்ந்த ரொட்டிகள். இதேமாதிரியான கோலத்தில் அவளைப் பார்த்தறியாத சேலாக்கள் அவள் பக்கம் ஓடிப்போய் அந்தத் தட்டை வாங்கப் போனார்கள். ஆனால், அவளோ ஒரு தலையாட்டு மூலம் அவர்களை நின்ற இடத்திலேயே நிறுத்திவிட்டு, தன்னைப் பார்த்து முகத்தைத் திருப்பிய சுயம்புவைப் பார்த்தே நடந்தாள். அவன் கால்மாட்டுப் பக்கமாக உட்கார்ந்தாள். அவள் பார்த்த பார்வையில் எல்லோரும் வாசலைப் பார்த்தார்கள். சிகிச்சை அலிகளும் காலிப் பாத்திரங்களைக் காட்டிவிட்டு, போய்விட்டார்கள். புறப்படப் போனவர்களில் லட்சுமியின் கையை மட்டும் பிடித்துக்கொண்டு, கங்காதேவி, மற்றவர்களைப் போகும்படி தலையாட்டினாள். சுயம்புவைப் பார்த்துப் பேசப் பேச லட்சுமி, அதைத் தமிழாக்கிக் கொண்டிருந்தாள். மனம் ஒன்றும்போது திறமை தானாய் வெளிப்படும் என்பதற்கு லட்சுமி உதாரணமாகி விட்டாள். குரு அலி மூச்சு வாங்கும்போதெல்லாம், லட்சுமி சுயம்புவுக்குப் பேச்சு வாங்கிக் கொடுத்தாள். “சுயம்பு... என்மகளே... என் வயத்துல பிறக்காமல் உன் வாஞ்சையில பிறந்த மகாராணியே... ஒனக்கு என் மேல் கோபம் இருக்கதை ஒன் பார்வையாலேயே தெரிஞ்சுக்கிட்டேன். நீ இந்தத் தியாகத்திற்கு சம்மதிச்சது நம்மோட அலி சமுதாயத்தின் பொது வாழ்க்கைக்கு அவசியப்பட்டது. முழுப் பெண்ணான சேலா அலிகளில் யாரையும், தத்து எடுக்காமல், பாதிப் பெண் போல் இருந்த உன்னை தத்து எடுத்தால், நம் சமுதாயம் என்னையே மதிக்காது... நம் சமூகத்தில் வெட்டுப்படாதவங்க வெட்டுப்பட்டவங்கள விட ஒரு படி தாழ்த்தி, லுங்கி கட்டுறவங்க, சேலைகட்டுறவங்களைவிட, அந்தஸ்துல சின்னவங்க... என் சிஷ்யைகள் ஒன்ன தாழ்வா பார்க்கக் கூடாதுன்னுதான் இதுக்கு ஏற்பாடு செய்தேன்... என்னமோ தெரியல... ஒன்னப் பார்த்த உடனேயே என்னோட மலட்டு வயித்துல ஒரு துடிப்பு... என் வாழ்நாளுல எனக்காக நான் செய்துக்கிட்ட ஒரே ஒரு நன்மை, ஒன்ன நான் தத்து எடுத்துக்கிட்டதுதான்...” “என் கண்ணே... நான் அடிக்கடி பேசுறவள் கிடையாது. என்னப்பற்றித் தம்பட்டம் அடிப்பதும் கிடையாது. ஆனாலும், மகளான ஒன்கிட்ட சொல்லியாகணும். நீயாவது கொடுத்து வச்சவள். நான், என்னையே யார்னு தேடிக்கிட்டு முப்பத்தைந்து வருஷத்துக்கு முன்னால இங்க வந்தேன். ஜமீன் குடும்பத்துல ‘சூடு’ வச்சாங்க... ஒனக்கு இரும்புச் சூடுன்னா... எனக்கு வெள்ளிச்சூடு... எப்படியோ, அங்கே இருந்து, தப்பிச்சு கர்நாடகத்துல பெல்காம் பக்கத்துல இருக்கிற எல்லம்மா கோவிலுல நம்மள மாதிரி பாவப்பட்ட தேவதாசிகளோடு இருந்தேன். அப்புறம் டெல்லி. அப்போ இது ஒரு காடு. என் நிலயப் புரிஞ்சுக்கிட்ட, பலர் என்னை ஆட்டிப் படைச்சாங்க. ஒவ்வொரு குரு அலியும் இன்னொரு குரு அலிகிட்ட என்ன அடிமையா வித்தாங்க. அடி அடின்னு அடிச்சாங்க. போலீஸ் அடிச்சு, ‘பிள்ளை திருடி’ன்னு பொதுமக்கள் அடிச்சு, கை ஒடிஞ்சுது... கால் ஒடிஞ்சுது... இது பொறுக்காமல், என்னை நானே அடிச்சு தலை கிழிஞ்சுது... ஆனாலும் பொறுத்துக்கிட்டேன். கடைசியில ஜமீன்தார் - அப்பன், அவன் கண்ணுல நான் முழிக்கக்கூடாது என்கிற கண்டிஷன்ல பத்து ஏக்கர் நிலத்தை எழுதி வச்சான்... வேற பக்கம் வீடு தாரேன்னான்... நான் இங்கயே கட்டிக்கிட்டேன். அது என்னமோ தெரியல... ஒன்னை மாதிரி எல்லா அனாதைகளும் இந்தப் பக்கம் தான் வாராங்க... இந்திரா காந்தி மற்றவங்களுக்கு எப்படியோ.. நமக்கு அந்தப் புண்ணியவதிதான் குடியிருப்பில் இடம் கொடுத்தாள். போலீஸ் கையக் கட்டிப் போட்டாள். “என் செல்வமே! இன்னும் பல இடங்களில், குரு அலிகளோட கொட்டம், இன்னும் அடங்கல! சேலா அலிகளை விற்கிற காலம் போகல்ல. அவங்க உழைச்சுக் கொண்டு வாற காசுல இந்த குரு அலிங்க வயிறு நிரப்புறாங்க. இது போதாதுன்னு, சில சமுக விரோதிகள் அப்பாவிப் பையன்களைக் கூட பலவந்தமா கொண்டு வந்து அறுத்துப்போட்டு நம்மளமாதிரி ஆக்கிடுறாங்க. அஜ்மீரி கேட் - சிவப்பு விளக்கு மாதிரி, கள்ளச்சாராயம் காய்ச்சுவது மாதிரி இந்த ஆயாராம் - காயாராம் அரசியல் மாதிரி, அப்பாவிப் பிள்ளைகளை அலிகளாகக் காயடிக்கிற காலமும் உருவாகி செயற்கை அலிகளும் உற்பத்தி செய்யப்படுறாங்க! இதை என்னளவில் எதிர்த்து நிக்கேன். இதற்காகவே போலீஸ் சூழ்ச்சியில, குரு அலிகளோட வஞ்சத்தில், ஜெயிலுக்கும் போயிருக்கேன் மகளே! ஆனாலும், இயற்கை அலிகளைக் காப்பாத்துறதுக்கும் செயற்கை அலிகள் உற்பத்தியைத் தடுக்கிறதுக்கும் போராடி வரேன் மகளே! ஏனோ தெரியலை, நீ எனக்குப் பிறகு அந்தப் பொறுப்ப எடுத்துக்குவேன்னு ஒரு நம்பிக்கை. இதுக்குமேல என்னப் பற்றிப் பேச, கூச்சமா இருக்குதடி. இதுக்குமேல் ஒனக்கு எதுவும் தெரியணுமுன்னா, இந்த லட்சுமி கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ. நல்லதா சொன்னால், சொல்ல வேண்டாம். கெட்டதாய் சொன்னால், சொல்லு. திருத்திக்கிடறேன்.” சுயம்பு, பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு, விக்கித்து நின்ற குரு அலியைப் பார்த்தான். அந்தப் பெரிய தேகத்திற்குள் அத்தனை அணுக்களும் அண்டசராசரமாய்ச் சுற்றுவது போலிருந்தது. அம்மாவைக் கண்டுகொண்டான். லோகமாதா கிடைத்து விட்டாள். ஊனத்தாய் இல்லையென்றாலும் ஒரு ஞானத்தாய் கிடைத்தது போன்ற உணர்வு. அதற்காக ஆயிரம் உறுப்புக்களையும் ஐயாயிரம் தடவை வெட்டுக்குக் கொடுக்கலாம் என்பது போன்ற வெள்ளப் பிரவாக உணர்வு. “எம்மா... என்னை ஒங்கிட்ட ஒப்படைச் சிட்டேம்மா...!” வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|