உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
34 சுயம்புவுக்கான, முப்பெரும் விழாக்களில், மூன்றாவதும், பெரியதுமான பெருவிழா. அவனுக்கு அறுவை நடத்திய நாற்பதாவது நாளில் அதே இடத்தில் அலி பட்டாபிஷேக விழா நடைபெற்று விட்டது. அதையடுத்து, அவன் பூப்பெய்ததைக் குறிக்கும் விழாவும் நடந்து முடிந்தது. அவனை ஒப்புக்கு, ஒரு சவுக்குக் கம்பியில் உட்கார வைத்துவிட்டு, அவனே, தானாய் எழுந்திருக்கும்படி விட்டுவிட்டார்கள். இன்று நடப்பது முறைப்படியான சுவீகார விழா. குரு அலியான கங்காதேவி, சுயம்புவை, மகளாக தத்து எடுத்து அலி உலகிற்கு பிரகடனப்படுத்தும் விழா! முன்னைய நிகழ்ச்சிகள் இரண்டிலும் முகம் சுழித்துக் கலந்துகொண்ட சுயம்பு, இன்று முழுமனத்தோடு ஈடுபடும் விழா. அந்த வெட்டைவெளி முழுவதும் ஷாமியானா பந்தலால் போர்த்தப்பட்டது. உள்ளே சர விளக்குகள். தோரண வாயில் மாதிரியான ஜெபமாலை மின் விளக்குச் சரங்கள். பந்தல் தாங்காத கூட்டம். டில்லியிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள அத்தனை அலிகளும் அங்கே கூடிவிட்டனர். கங்காதேவியைப் பற்றி, எல்லோருக்கும் நல்ல முறையில் தெரியும் என்பதை எடுத்துக் காட்டும் பெருங்கூட்டம். அவள் அழைப்பின் பேரில், பலர், கல்கத்தா, பம்பாய், சென்னை, போன்ற முக்கிய நகர்களிலிருந்து வந்திருந்தார்கள். அந்தப் பந்தலுக்கு வெளியே ஏழெட்டுக் கார்கள். ஐம்பதுக்கும் அதிகமான ஸ்கூட்டர்கள். பெரும்பாலானவர்கள் வாயில் புடவை கட்டியிருந்தார்கள். கால்வாசிப்பேர் இயற்கைப் பட்டையும் செயற்கைப்பட்டையும் உடுத்தியிருந்தார்கள். இவர்கள் எப்படி அலியாக இருக்க முடியும் என்பது மாதிரியான பெண் அழகுகள். அறுவை செய்யாமல் லுங்கிகளைக் கட்டி, மார்பில் மாராப்பைப்போல் துண்டைப் பரப்பியவர்கள், தீணடத்தகாதவர்களாய் ஓரங்கட்டி நின்றார்கள். ஆலமரத்தடி, முர்கேவாலி மாதாவுக்கு தனிக்களை கொட்டியது. ஆத்தாவின் பெரிய புகைப்படத்தைச் சுற்றி கலர் பல்புகள் மின்னி மின்னிக் காட்டின. அம்மாவின் முன்னால் தேங்காய், மாங்காய், திராட்சைப் படைப்புக்கள். ஒரு செம்புப் பால். கற்பூரம் ஜோதியாய் தொடர்ந்து எரிந்தது. அது குறையக் குறைய, யாரோ கற்பூரக் கட்டிகளை எடுத்துப் போட்டவண்ணம் இருந்தார்கள். இதற்காகவே மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட அலிகள் கரகாட்டமும் காவடியாட்டமும் நடந்து கொண்டிருக்கின்றன. இதே செட்டு இன்னொரு பிரிவாகி ‘மதுரை மணிக்குறவன்’ செய்த மாபெரும் செயல்களைக் கூத்தாய் முழங்கின. ஒலிபெருக்கியில் இந்திப்படப் பாடல்கள். ஆங்காங்கே அலிகளும், அவர்களோடு வந்த இளைஞர்களும் பிரேக் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் ஒரு கவாலிப் பாடல். எங்கும் ஒளி மயம். ஒலி மயம். சுயம்பு முல்லைச் சரங்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கங்காதேவியுடன், இணையாக உட்கார்ந் திருந்தான். ஒரு அலி புரோகிதர் ஏதோ மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். சுயம்புவின் உடல்மேல் காஞ்சிபுரம் பட்டுப்புடவை. அவனுக்குப் பிடித்த பச்சை பார்டரும், வெள்ளைச் சரிகையும் கொண்ட வெளிர் மஞ்சள் சேலை. அதே வண்ண ஜாக்கெட் காதுகளில் தங்க வளையங்கள். கழுத்தில் வளைந்து நெளிந்த மூன்று தங்கச் சங்கிலிகள். பெருவிரல் தவிர்த்து, எட்டு விரல்களிலும் எட்டுவகை மோதிரங்கள். தங்கச்செயின் கடிகாரம். சுயம்புவைச் சுற்றி நீலிமா கோஷ்டி... பக்கத்தில் நெருக்கமாக யார் நிற்பது என்பதில் அங்கேயும் குஞ்சம்மா - லட்சுமி யுத்தம். சொந்த வீட்டு நிகழ்ச்சி என்பதால், நீலிமா பாடவில்லை. மார்க்கரெட் ஆடவில்லை. நசிமா சுயம்புவின் அலங்காரத்தைப் பராமரிக்க அவன் கன்னத்தை, பவுடர் மெத்தையால் ஒத்தினாள். வேர்த்த பகுதிகளைத் துடைத்துவிட்டாள். சென்ட் பாட்டிலை அடித்துவிட்டாள். ஜிகினா ஜரிகைகளை ஒட்டிவிட்டாள். அவன் முகம் அவர்களே வகுத்துக் கொண்ட வரையறை வட்டத்திற்குள், நிமிர்த்தியும் கவிழ்த்தியும் வைக்கப்பட்டது. லட்சுமி - குஞ்சம்மா பூனைகளின் சண்டைக்கு நீலிமா குரங்கின் ஒரு நபர் விசாரணைக் கமிஷன். மேடைக்கு முன் வரிசையில் போடப்பட்ட மூங்கில் நாற்காலிகளில், முக்கியமான புள்ளிகள். குரு அலிகள். அலிகள் சங்கப் பிரமுகர்கள். கங்கம்மாவின் ஆசீர்வாதத்தால் முன்னேறியிருப்பதாக நினைக்கும் ‘சராசரி’ பணக்கார மனிதர்கள். ஒவ்வொருவர் கரத்திலும் ஏதோ ஒரு பரிசுப் பொருள். பெரும்பாலானவை சேலைகள். சிறுபான்மை மோதிரங்கள். அந்த அலி புரோகிதர் கங்காதேவியின் கையைப் பிடித்துக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு கையாட்டிச் சொன்னார். உடனே, கங்காதேவி, சுயம்புவைப் பிடித்துக் கொண்டு சுற்றுமுற்றும் அலிகளும், நட்பு மனிதர்களும் சூழ முர்கேவாலி மாதாவின் ஆலமரத்தடிக்குப் போனார்கள். நசிமா அங்கிருந்த பால் செம்பை பயபக்தியோடு முர்கே மாதாவின் முன்னால் நகர்த்தி வைத்தாள். இதற்குள், அதே அந்த கசாப்பு அலி, ஒரு பிளேடை எடுத்து, கங்காதேவியின் பெருவிரலில் ஒரு கோடு போட்டது. பிறகு அந்த விரலை எடுத்துப் பால் செம்பின் வாய்ப்பக்கம் பிடித்து அழுத்தியது. ரத்தத்துளிகள் சொட்டுச் சொட்டாய், பாலில் விழுந்தன. உடனே எல்லோரும் 'முர்கேமாதா, முர்கேவாலி' என்று கன்னங்களில் தப்பளம் போட்டுக்கொண்டனர். மகளைப்போல், சேலைகட்டியிருந்த சடாமுடி கங்காதேவி, தனது ரத்தம் கலந்த அந்தப் பால் செம்பை எடுத்து, சுயம்புவின் வாயில் ஊற்றினாள். உடனடியாக புரோகித அலி, சுயம்புவின் கையை எடுத்துக் கங்காதேவியின் கரங்களில் ஒப்படைத்தாள். உடனை சேட்டு வீட்டு கல்யாணங்களில் ஈடுபடுத்தப்படும் மேள வரிசைகள் ஆரவாரம் செய்தன. அந்தச் சத்தத்தை அமுக்கும் வகையில் கிளாரினெட் குழாய்கள் உச்சகட்டத்தில் ஓங்காரமிட்டன. சுயம்பு தாயின் காலைத் தொட, கங்காதேவி அணைத்துக்கொண்டாள். இருவரும் பின்னர் புரோகிதியின் ஆலோசனைப்படி, மீண்டும் மேடைக்கு வந்தார்கள். ஒன்றுபோல் உட்கார்ந்தார்கள். அப்போது, சுயம்புவுக்கு சென்னையில் சேரியின் சேரியில் வாழும் பச்சையம்மாவின் நினைவு வந்தது. போலீஸ் வேனில் ஏறும்போதுகூட, அவள் ‘மகளே, மகளே’ என்று கூக்குரலிட்டது இப்போது சந்தோஷத்திற்குச் சிறிது தாழிட்டது. பச்சையம்மாவும் ஒரு அம்மாதான். சின்னம்மா. உடனே சுயம்புவுக்குத் தனது குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துப் பெருமைப்படுவதுபோல் ஒரு கற்பனை. ஆனால், இது பெருமைக்குரிய விஷயந்தானா என்று சந்தேகம். இறுதியாக, டேவிட் குறுஞ்சிரிப்பாய்ச் சிரித்துக் கையை ஆட்டி ஆட்டிக் காட்டுகிறான். முத்தம் கொடுக்கப் போவதுபோல் உதடுகளைக் குவிக்கிறான். டேவிட்... என் டேவிட்! இந்தப் பட்டுச்சேலை நல்லா இருக்கா டேவிட். எக்கா... நீ மட்டுமே வாழவேண்டிய இந்த மனசுல யாரைப் பற்றியெல்லாமோ நெனைக்கேன் பாரு... என்னை மன்னிச்சிடுக்கா! இதற்குள், நீலிமா, அவன் முகத்தைத் திருப்பிப் பேச்சுக் கொடுக்கிறாள். அப்புறம் சுயம்பு, அவள் காட்டிய திசையில் பார்க்கிறான். சுலோச்சனாக்கா... அழுகிறாளா, சிரிக்கிறாளா! இவன் கையாட்டிக் கூப்பிட்டபோது, எல்லாக் கண்களும் அவளை மொய்க்கின்றன. உடனே அவள் லேசாய் தலையாட்டிவிட்டு, கூட்டத்தில் கரைந்து விடுகிறாள். புரோகிதி, கங்காதேவியின் காதில் கிசுகிசுத்தாள். அப்போதுதான் தேவிக்கே அந்த எண்ணம் வந்தது. மகளுக்குப் பெயர் சூட்ட வேண்டும். என்ன பேர் வைக்கலாம். கங்காதேவிக்கு தனது பாட்டி பேரான சீத்தாதேவி பெயரை வைக்க ஆசை. ஆனாலும் சுயம்புவே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சுயாட்சி சிந்தனை. சுயம்புவின் காதில் கிசுகிசுத்தாள்; என்ன பெயர் வைக்கலாம்? சுயம்பு பின்னால் நிற்கும் தன் சிநேகிதிகளைப் பார்க்கிறான். ஒவ்வொரு யோசனைக்கும் தலையாட்டி மறுக்கிறான். லட்சுமி, கண்ணகி என்கிறாள். வேண்டாம். அந்தப் பெயரைக் கொச்சைப்படுத்த வேண்டாம். அகலிகை... அதுவும் வேண்டாம். பாவப்பட்டவள். இறுதியில், சுயம்புவையே, நீயே சொல் என்பது மாதிரி பார்க்கிறார்கள். அவன் மனதுக்குள் ஒரு மின்னல். பத்தாவது வகுப்பில் படித்த ஆபுத்திரன் வரலாறு நினைவுக்கு வருகிறது. அதற்காகத் தமிழாசிரியர் விவரித்த மணிமேகலை பற்றிய குறிப்பு... ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ஒரு காப்பியத்தின் நாயகியான மணிமேகலை, விலைமாதர் குடும்பத்தில் பிறந்த குலமாது. சோழ இளவரசன் உதயகுமாரன், அவளைப் பலவந்தமாகக் கவரப் பார்க்கிறான். அவனாலேயே, படாத பாடு படுகிறாள். அனுபவித்த இன்னல்களும் கொஞ்ச நஞ்சமல்ல... ஆனாலும், அவன்மீது அவளுக்கும் ஒரு காதல். முற்பிறப்பை அறிந்தபிறகு அந்தப் பற்றற்ற நிலையிலும் காதல் ஒரு பற்றுக்கோலாகிறது. இறுதிக் கட்டத்தில், அவன், தன்னைக் கைப்பற்றாமல் இருப்பதற்காக, துறவிப் பெண் மணிமேகலை, காயசண்டிகை என்ற தேவப் பெண்ணின் வடிவம் எடுக்கிறாள். எப்படியோ உதயகுமாரன் அவளைப் பின் தொடர்கிறான். மனைவியை அவன் பெண்டாள நினைப்பதாக தவறாய் எண்ணிய காயசண்டிகையின் கணவன், இளவரசனை வெட்டிப் போடுகிறான். உடனே காயசண்டிகை உருவத்திற்குள் ஒளிந்திருக்கும் மணிமேகலை கத்துகிறாள். கதறுகிறாள். உச்சகட்டமாக ‘காயசண்டிகை வடிவினள் ஆயினேன் காதல்’ என்று நெகிழ்கிறாள். ஒரு துறவி காதலியானாள். ஆனால் இங்கேயோ, ஒரு காதலி, கடைசிவரை துறவியாய் வாழவேண்டிய நிர்ப்பந்தம். மணிமேகலையாவது, காயசண்டிகை என்ற பெண் உடம்பிற்குள் பெண்ணாய் நின்றாள். நானோ, சுயம்பு என்ற ஆண் உடம்பிற்குள் பெண்ணாய்த் தவிக்கிறேன்... அதோடு, சோழ இளவரசனைப்போல எனது டேவிட் மோசமானவரல்ல. ஆனாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நான், அந்த மணிமேகலை மாதிரிதான். எவரிடமும் சொல்ல முடியாமல் மனதுக்குள்ளே குமுற வேண்டும். அவள் துறவி. நான்அலி. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு என்றாலும், அதன் தாக்கம் ஒன்றுதான். அறுவைக்குப் பிறகு நாற்பது நாள் ஓய்வில் கங்காதேவியின் மூலமும் பல புத்தகங்களின் வழியாகவும் ஓரளவு தெளிவு பெற்ற சுயம்பு, இப்போது கங்காதேவியின் காதில் கிசுகிசுத்தான். மணிமேகலையின் வரலாற்றை ஒரு நிமிடத்தில் சொல்லி முடித்தான். கங்காதேவி கண்ணிர் மல்கிக் குலுங்கினாள். அவளுடைய தாய்வழிப் பாட்டியின் பேரும் மேகல்தான். உடனே மைக் முன்னால், அவளே எழுந்து “சுயம்பு என்ற பெயர் மேகல்” என்று இழுத்தபோது, சுயம்பு எழுந்து அந்த அவசரத்தில் மணி என்ற சொல்லை மறந்து மேகலை என்று சொல்லிக் கொடுத்தான். இரண்டு தடவை சுயம்புவிடம் சொல்லி ஒத்திகை பார்த்துவிட்டு, கங்காதேவி கூட்டத்திற்கு கம்பீரமாகச் சொன்னாள். “என் மகள் பெயர் மேகலை.” பலத்த கைதட்டலுக்கு இடையே மேளதாளத்திற்கு மத்தியில், பலர் அந்தப் பெயரை கஷ்டப்பட்டும், கஷ்டப்படுத்தியும் உச்சரித்தார்கள். பிறகு கூட்டத்தி லிருந்தவர்கள் ஒருவர் ஒருவராய் எழுந்தார்கள். சீர் வரிசைகள் கொண்டு வரப்பட்டன. நலிமா, ஒரு நாற்பது பக்க நோட்டில் இவற்றைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். குஞ்சம்மா, அவற்றை ஓரங்கட்டி வைத்தாள். சீர்வரிசை அதுபாட்டுக்கு நடந்தபோது, மைக்கிற்கு முன்னால் நீலிமா டோலக் இல்லாமல் வந்து இடுப்பின் இரண்டு பக்கங்களையுமே அப்படிப் பாவித்துத் தட்டிக்கொண்டு, பாட்டுப் பாடினாள். உடனே நாலைந்து அலிகள் அந்தப் பாட்டிற்கு ஏற்ப ஆட்டம் போட்டன. சீர்வரிசைகள் முடியும்போது பந்தியும் துவங்கியது. அதற்காகத் தனிப்பந்தல் போடப்பட்டிருந்தது. நீலிமா வகையறாக்கள் எல்லோரையும் விழுந்து விழுந்து உபசரித்தார்கள். சப்பாத்தி தீர்ந்து போனதால், வெளியே இருந்து அவசர அவசரமாக அவை கொண்டு வரப்பட்டன. ஆனால் பிரியாணியும், இனிப்பு வகையறாக்களும் அந்தக் குறையைப் போக்கின. அந்த அலிகளின் குடியிருப்புக்களை அடுத்து கவுரவம் பார்த்துக் கொண்டிருக்கும் சிலருக்கும் நீலிமா சிலர் மூலம் சாப்பாட்டு வகையறாக்களைக் கொடுத்தனுப்பினாள். கங்காதேவியும், மேகலையும் பந்தல் ஓரம் நின்று எல்லோரையும் வழியனுப்பி வைத்தார்கள். அம்மா அறிமுகப் படுத்தும் ஒவ்வொரு பிரமுகரையும், மேகலை தலைதாழ்த்தி, அங்கீகரித்தாள். பிரமுகர்கள் பேசிப் பேசியே நேரத்தைக் கடத்தினார்கள். கூட்டத்தினரோ, சாப்பிட்ட கை ஈரம் உலரும் முன்னே ஆங்காங்கே, இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் மட்டுமே பார்க்கக்கூடிய அலிகளோடு பேசிக்கொண்டிருந்தார்கள். எப்படியோ, கூட்டம் எப்படி வருவது தெரியாமல் வந்ததோ, அப்படிப் போவது தெரியாமல் போனது. வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|