36

     லட்சுமி மேகலையை வீட்டுக்குள்ளேயே பிடித்து வைத்துக் கொண்டாள். அறைக்கதவைப் பூட்டிவிட்டு, டி.வி. ஸ்விட்சைப் போட்டுப் பார்த்தாள். ஒரு அலை வரிசையல்ல, பல அலை வரிசைகள். லட்சுமி, தொலைக்காட்சியைத் திட்டித் தீர்த்தாள். அந்தப் பெட்டியைக் கையால் குத்தப்போன மேகலையைத் தடுத்துக் கொண்டாள். மேகலைக்கு ஒரே அழுகை. என்னைக்கு அவளுக்கு ஒரு நல்ல நாள் வந்ததோ, அதுவே கெட்டநாளாகும்படி இப்படி நடந்திட்டே. கங்காதேவி அம்மா பொறி கலங்கி போகும்படி ஆயிட்டே...!

     மேகலை, லட்சுமியிடம் இதைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள். அவள்தான் ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதடி... எப்படியோ உனக்கு எல்லாம் முடிஞ்சபிறகு இது தெரிஞ்சுதேன்னு ஆறுதல் படுடி...” என்றாள். மேகலை தன்னைப் பற்றி மேற்கொண்டு நினைக்க மறுத்தாள். அன்னை இந்திரா கொலையுண்ட நிகழ்ச்சியைத் தனக்குள்ளேயே சுற்றவிடுவது அசிங்கம் என்பதைப் புரிந்து கொண்டவள் போல், லட்சுமியின் தோளில் கைபோட்டு முடங்கிக் கிடந்தாள். ஜன்னலைத் திறந்துவிட்டாள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சோகமாய் சோகத்தைப் பகிர்ந்து முடங்கிக் கிடந்தனர். குப்புறப் படுத்தும் தூங்கினர். அன்னை இந்திராவின் சோகமும், கடந்த பத்து நாட்களாக பட்ட பாடும் தூக்கமாய் வந்தது. என்றாலும் சிறிது நேரத்தில், பயங்கரமான சத்தங்கள். அவர்கள், ஒரே சமயத்தில் எழுந்தார்கள்.

     எங்கும் காரிருள். மின்சாரக் கம்பங்கள், பல்புகள் இல்லாமல் கிடந்தன. அதில் ஒட்டியிருந்த கண்ணாடிச் சிதறல்கள்தான் மின்மினியாய் மின்னின. மற்றெல்லாம் காரிருள், காட்டிருள். மேகலை சுயம்புவாக, மாணவனாக இருந்தபோது, அந்த தார்ச்சலையைப் பிடித்ததே இருள் அதைவிட அதிகப் பிடிப்பான இருள். இருளுக்குப் பின்னே எல்லாம் என்பதுபோல, விதவிதமான சத்தங்கள். எவையோ நொறுக்கப்படுவது போன்ற சத்தம். வெடிப்பது போன்ற சத்தம், வெட்டு மாதிரியான சத்தம். அடிப்பது போன்ற சத்தம். ‘மா, மா’ என்று மருவும் சத்தம். எவையெவையோ கீழே விழுந்து சிதறுவதுபோன்ற சத்தம் முஜே... சோடுதோ... முஜே... பச்சாவோ என்ற சத்தம். சிறுவரும் மகளிரும் கெஞ்சி அழும் சத்தம். அதுவே தானாய் அடங்கி, நிசப்தமாக மாறும்போது, இன்னொரு பகுதியில் இதேமாதிரியான சத்தங்கள். கங்காதேவி விறுவிறுவென்று டோலக்கை சட்டென்று நிறுத்துவாளே, அப்படிப்பட்ட நிசப்தம். மீண்டும் அடிப்பாளே அப்படிப்பட்ட ஓலச் சத்தம். ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்தால், ஆங்காங்கே தீப்பந்தங்கள். சாலைகளில் பலரை எரியூட்டுவதற்குப் போதுமான ஜுவாலைகள். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கதவுகள் தலையிலடிப்பதுபோல் சாத்தப்படுகின்றன. மனிதர்கள் சிதறி ஓடுகிறார்கள். மனிதர்களை, மனிதர் துரத்துகிறார்கள். கண் தெரியாமல் ஓடும் கூட்டம். அவர்களைத் தீப்பந்தத்தால் தேடும் கூட்டம். நாலுபேர் ஒரு ஜுவாலைக்குள் தூக்கிப் போடப் படுகிறார்கள். வெந்ததும் வேகாததுமாய்த் துடிக்கிறார்கள். அவர்களின் சுடலை ஒளியிலேயே இன்னொருத்தரின் நீண்ட கொண்டையில் ஒரு திரவம் தெளிக்கப்படுகிறது. ஒரு குச்சி உரசப்படுகிறது. ஒரு மனிதனே தீப்பந்தமாய் எரிகிறான். கும்பிட்ட கைகளுக்கு வெட்டு. காலில் விழுந்த தலைகளுக்குக் காலாலேயே மோட்சம் கொடுக்கப் படுதிறது. மாடியில் இருந்து பலர் கீழே தூக்கிப் போடப்படுகிறார்கள். அய்யோ. இது என்ன கொடுமை. எய்தவன் இருக்க அம்பை நோவானேன். அம்பை எரித்தால் கூட பரவாயில்லை. இவைகூட அம்புகளாகலாம் என்று ஒவ்வொரு மரத்தையும் செடி கொடியையும், சின்னஞ்சிறு மலர்களையும் தீயிட்டுப் பொசுக்கினால் எப்படி?

     மேகலை, கண்ணை மூடிக்கொள்கிறாள். அவளின் தானாய்க் கதறிய வாயை லட்சுமி மூடுகிறாள். இரும்படிக் கொலையில் இந்த ஈக்களும் சிக்கிக் கொள்ளலாம் என்ற பயம். அந்தப் பயத்திற்கு ஏற்ப, கண்ணுக்குத் தெரிந்த பல இடங்களில் பலர் கும்பல் கும்பலாய் வந்து டி.வி. பெட்டிகளை எடுத்துக்கொண்டு போகிறார்கள். பீரோக்களை தூக்கிக்கொண்டு போகிறார்கள். லட்சுமி சுதாரித்தாள். மேகலையைத் தோளில் சாய்த்தபடி ஜன்னல்களைக் கொக்கிப் போடப் போனபோது -

     அந்த வெட்ட வெளியில், ஒரு உருவம், ஒட்டுமொத்தமான கருப்பு இருளில் வெள்ளைக் கோட்டு போட்டு இருப்பது போன்ற தோற்றம். பிடரியிலும் மோவாய்க்குப் பின்னாலும் இருளின் அடர்த்திகள். ஐயாம் இன்னொசென்ட் மைனே நிராபராத் ஹும்... என்று தன்னைக் காப்பாற்றச் சொல்லி, ஒரேயடியாய் அலறும் அவலக்குரல். அந்த உருவத்திலிருந்து வெளிப்படுகிறது. அபயம் கொடுக்க ஆளிருக்கா என்பதுபோல் அங்குமிங்கும் பார்க்கிறது. அந்த உருவத்திற்குச் சிறிது பின்னால் ஒரு தீப்பந்தக்கூட்டம். அரிவாள், கம்புகளோடு அது துரத்துகிறது. அந்த உருவமோ, தனது சிவப்பு டர்பனை கீழே போட்டுவிட்டுத் தலைவிரி கோலமாய் அங்குமிங்குமாய் ஓடுகிறது. முட்டிக்கால்களில் சிக்கிக்கொள்ளும் அளவிற்கான முடி. உருளைக்கட்டை மாதிரியான உடம்பு. ஒத்தைக்கு ஒத்தையாய், எவரையும் சமாளிக்கும் அந்த உருவம், இப்போது ஓடி, ஓடி ஒவ்வொரு வீட்டு முன்னாலும் நிற்கிறது. நிற்கும் வீடெல்லாம் மூடிக் கொள்கின்றன. கேட்கும் காதுகளெல்லாம் செவிடாகின்றன. இதற்குள் ஒரு தீப்பந்தம் முன்னோக்கி தனித்து நகர்கிறது. ஒரு அரிவாள், அதன் பிடறியிலிருந்து சிறிது குறி விலகி கீழே விழுகிறது. அந்த ஒற்றைத் தரப்பிற்கும், தீப்பந்தத் தரப்பிற்கும் இடைவெளி குறைகிறது. உடனே அங்கே காட்டுக் கத்தல்கள். இங்கே கத்தமுடியாத ஓட்டம். குதிகால் ஓட்டம். ஜன்னலுக்கு அருகே நின்ற லட்சுமியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறது. அவள் அதற்குப் பதிலாகக் கதவைச் சாத்த முற்படுகிறாள். உடனே, மேகலை அவளைப் பின்னால் தள்ளிவிட்டு, முன்னால் வந்து ஜன்னல் கம்பியில் முகம் பதிக்கிறாள். ‘பீச்சே ஆவோ’ என்று சொல்லிவிட்டு, ஓடிப்போய் அறைக் கதவைத் திறக்கிறாள். பிறகு கையை இழுத்துப் பிடித்த லட்சுமியை கீழே தள்ளிவிட்டு ஓடுகிறாள். பின்புறக் கதவருகே போகிறாள். கதவைச் சத்தம் போடாமலும் திறக்க வேண்டும். அந்த உருவம் அதற்குள் வெட்டுப்படாமலும் இருக்க வேண்டும். கதவு மெள்ளத் திறக்கப்படுகிறது. இதற்கு மேல் ஓட முடியாது என்பது போல் வெளியே பம்மி நின்ற உருவத்தை, மேகலை தலையைப் பிடித்தோ, தாடியைப் பிடித்தோ உள்ளே இழுத்துப் போடுகிறாள். பிறகு கதவை இழுத்துச் சாத்துகிறாள். அந்த உருவம் மூச்சு விடுவது நன்றாகவே கேட்கிறது. புயல் மாதிரியான மூச்சு. அவசர அவசரமாய் அவள் காட்டிய சமையலறைக்குள் போகிறது.

     இதற்குள், தீப்பந்தக் கும்பல் முன்பக்கக் கதவைத் தட்டுகிறது. எரியும் பந்தங்களின் அடிக்கட்டைகளால் கதவை இடிக்கிறது. லட்சுமி அரற்றுகிறாள். ஆனால், மேகலை அந்த லட்சுமியையும் இழுத்துக்கொண்டு முன்பக்கம் வருகிறாள். கதவைத் திறந்து அகலப்படுத்தி வைத்துக்கொண்டு என்ன வேண்டும் என்று கேட்கிறாள். அந்த சர்தார்ஜியை அதற்குள் சமயலறைக்குள் நகர்த்தி விட்ட தைரியத்தோடும் சமர்த்தோடும் கேட்கிறாள். அந்தக் கூட்டம் அவளை மேலும் கீழுமாகப் பார்க்கிறது. ஆம்பளைகளே சர்தார்ஜி நண்பர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாதபோது, இந்த அலியால் முடியுமா என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொண்டு ஒரு மனிதன் போலான அந்தக் கும்பல் புறப்படுகிறது. மேகலை கதவைத் திறந்தபடியே வைத்திருந்தாள். அங்கே ஆடிய கூட்டம், வேறு பக்கம் ஆடப்போன போதுதான் கதவைப் பூட்டினாள். அந்தச் சமையலறைக்குள் போய் அந்த உருவத்தை முதுகைத் தட்டி நிமிர்த்தி விட்டாள். அதன் கையைப் பிடித்து எந்த நிர்வாண அறைக்குள் வெட்டுப் பட்டாளோ அங்கே கொண்டு போனாள். மெழுகு வர்த்தியைப் பொருத்தினாள். அது அணையப் போவதுபோல் சுருண்டு, பிறகு வீறிட்டது. அறுபது வயதான சர்தார்ஜி. சொட்டை சொடக்கு இல்லாத கருமுடி சிக்கல் சிடுக்கல் இல்லாத தாடி. ஆனாலும் அந்த ஒவ்வொரு முடியும் தனித்து ஆடியது. இரண்டு கைகளையும் ஏந்திக் கொண்டது. அதில் கண்கள் தாரைதாரையாக நீர் கொட்டின. “மேரா பத்தினி. மேரா பேட்டி, மேரா பேட்டா” என்று இலக்கணமற்ற இந்தியில் புலம்பியது. ‘சாக்லெட் நயி ஹை. இந்திராஜி ஹமாரா மாதாஜி ஹை’ என்று மாறி மாறிப் புலம்பியது. மேகலை அப்படியே அவரை அங்கே விட்டு வைத்தாள். சாப்பாடு கொடுக்கலாமா என்று யோசித்தாள். அவரது உணர்வுகளை அவமதிக்க அவள் விரும்பவில்லை. சோறு இறங்குமா...

     மேகலைக்கும், லட்சுமிக்கும் தூக்கம் பிடிக்கவில்லை. தூக்கத்தையும் பிடிக்கவில்லை. கண்ணயரும் போது திடீர் ஓலங்கள். துப்பாக்கிச் சத்தங்கள்.

     மறுநாள் காலை வந்தது. சேவல்கள்கூடக் கூவப் பயந்தன.

     மேகலை, லட்சுமியையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டாள். சர்தார்ஜி கொடுத்த முகவரியை ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு, கதவைப் பூட்டி விட்டுப் புறப்பட்டார்கள். இடையில், குஞ்சம்மாவும் மார்க்கரெட்டும் வந்தார்கள். அம்மா கங்காதேவியைப் பற்றிக் கேட்டால், இன்னும் வரவில்லையா என்றார்கள். எதற்கும் நீலிமா இருக்கிறாளே என்று மேகலைக்கு ஆறுதல் சொன்னார்கள்.

     அந்த நால்வரும், சர்தார்ஜி சொன்ன முகவரி இடத்தைத் தேடி, தற்செயலாய் நடப்பது மாதிரி நடந்தார்கள். சென்னா மார்க்கட்தான். கூப்பிடும் தொலைவுதான். ஆனாலும்... கடவுளே... இது என்ன... ஒரே ரத்த வாடை... எருக்குழிபோல் பிணக் குவியல்கள். கருகிப் போன தேகங்கள். பாதி வெந்த உடம்புகள். வயிற்றிலுள்ள மரணக் காயங்கள் தெரியாமல் சிரிப்பது போல் குப்புறக்கிடந்த குழந்தைகள். நிர்வாணமாய்க் கிடந்த பெண்கள். ஆங்காங்கே வாசல்களை இழந்த கடைகள். அங்குமிங்குமாய்ச் சிதறிக் கிடந்த விலை உயர்ந்த பொருட்கள். ஒரு லத்திக் கம்புகூட இல்லாத சூன்யம். ஆங்காங்கே கழுகுகள் வட்டமடித்தன. காகங்கள் கொத்திக் கொண்டிருந்தன. நாய்கள் தின்று கொண்டிருந்தன. மனிதச் சதை மேடுகள். உறைந்த ரத்தக் கட்டிகள். முண்டம் முண்டமாய். தலை. தலையாய்.

     மேகலை பித்துப்பிடித்துப் போனாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். கூடவந்தவர்கள் ஓடப்போவது போலிருந்தது. இவளையும் இழுத்தார்கள். அவள் எதிர்ப்புறமாய் இழுத்தாள். பிறகு தான் மட்டும் நடக்கப்போவது போல் சைகை செய்தாள். உடனே லட்சுமி அவளுக்கு முன்னால் போனாள். குஞ்சம்மா பின்னால் வந்தாள். இடையிலே ஒரு வீடு. முதலாவது அறை. குழிகுழியான தேகத்தோடு ஒரு சர்தார்ஜி கிடக்கிறார். சுற்றிலும் நான்கைந்து பேர். அந்த ஆறு மாடிக் குடியிருப்பில் மருந்துக்குக்கூட, ஒருவர் வரவில்லை. அந்த சர்தார்ஜி இளைஞனை மடியில் போட்டு வைத்த இளம் பெண்ணோ பித்துப் பிடித்துக் கிடக்கிறாள். இன்னும் சிறிது நேரத்தில் அவளே தன் சேலையைக் கிழித்துக்கொள்ள வேண்டிய நிலைமை. பித்தப் பார்வை. சித்தம் இழந்த செத்தப் பார்வை...

     மேகலை, ஒடிப்போய் உட்கார்ந்தாள். அந்தப் பெண்ணை அப்படியே கட்டிப்பிடித்து அழுதாள். அவள் முகத்தை தோளில் சாய்த்து, ‘நீ என் சகோதரி. தும் மேரே பெகன் ஹோ...’ என்று புலம்பினாள். அவளோடு மற்ற மூவரும் சேர்ந்துகொண்டு தலையில் அடித்துக் கொண்டார்கள். பிணத்தின் காலை ஒருத்தி பிடித்துக்கொண்டாள். மேகலை, தான் கட்டிப் பிடித்தவளைக் கண் மூடிப் பார்த்து, ‘ஒனக்கு யார் இல்லாவிட்டாலும் நாங்க இருக்கோம்’ என்று சொன்ன போது, அந்தப் பெண் ‘ஓ’வென்று அழுதாள். சுற்றி நின்றவர்களும் அந்தப் பிணத்துப் பக்கமாய் குவிந்து குவிந்து அழுதார்கள். மெள்ள மெள்ள வாய்திறந்து காவிரி நீரூற்றாய்ப் பீறிட்டு கங்கை நதிபோல அங்குமிங்குமாய் உடம்பைப் புரட்டிய அந்தப் பெண்ணை, மேகலையும், அவள் தோழிகளும் பிடித்துக் கொண்டார்கள். உடம்பு முழுவதிலும் ஒட்டிக்கொண்டார்கள். இதற்குள் ஒரு சில மாடிகளிலிருந்து, ஒரு சிலர் இறங்கினார்கள். அவர்களைப் பார்த்த மேகலைக்குக் கோபம் வந்தது. கையிலிருந்த வளையல்களைக் கழற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய்க் கொடுக்கப் போனாள். குஞ்சம்மா பிடித்துக்கொண்டாள். இதற்குள் கணவனைப் பறி கொடுத்த சர்தாரிணிப் பெண், மேகலையை விட்டுப் பிரிய மனமில்லாமல் கட்டிப்பிடித்துப் புரண்டாள். கத்தினாள், கதறினாள். கணவன் முகத்தை முத்தினாள். மோதினாள்.

     மேகலை சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டாள். சர்தார்ஜி முகவரி கொண்ட வீட்டிற்குத் தற்செயலாக போவது போல் போனாள். அங்கே வெளியில் தோழிகளை நிறுத்திவிட்டு, உள்ளே போகிறாள். ஆளுக்கு ஒரு பக்கமாய்ச் சிதறிக் கிடப்பவர்களிடம் ‘ஆப்கா பிதாஜி ஹர்பஜன்சிங் ஹமாரா கர் மே டீக்ஹை...’ என்கிறாள். அந்தக் குடும்பம் கடைசிவரைக்கும் உயிரைக் கையில் பிடித்திருப்பதுபோல் அவள் வாயைப் பார்க்கிறது. ‘டீக்ஹை’ என்றவுடன் விவரம் கேட்கிறது. பிறகு ஒருத்தி உள்ளே ஓடிப்போய் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து மேகலையிடம் நீட்டினாள். இப்படி வந்தது கோபம் அவளுக்கு.

     “நாங்க ரூபாய்க்கு ஆசைப்பட்டு வரலை. அப்படி ஆசைப்படுறதுக்கு நாங்க ஆணுமில்ல. பெண்ணுமில்ல. உங்களுக்குப் பணம் வேணுமானால், கேளுங்க. இங்கயே தாரோம்... லட்சுமிக்கா. பர்ஸ்ல எவ்வளவு பணம் இருக்குது. கொண்டுவா...”

     கூனிக் குறுகிப்போன சர்தார்ஜி குடும்பத்தை ஆறுதலோடு பார்க்கிறாள். பிறகு சுவரில் தொங்கிய சர்தார்ஜி படத்தை இவளே எடுத்து ஜாக்கெட்டின் பின் பக்கம் வைத்துக்கொண்டு புறப்படுகிறாள். இங்கே வந்ததுக்கு அத்தாட்சி... அந்த சர்தார்ஜி இதைப் பார்த்தால்தான் சாப்பிடவாவது செய்வார்.

     மேகலை தோழிகளோடு திரும்பி நடக்கிறாள். எங்கிருந்தோ இரண்டு சர்தார்ஜிகள் ஒரு வீட்டைப் பார்த்து ஓடுகிறார்கள். அங்கிருந்து இரண்டு தாடி வைக்காத ஆண்கள் ‘ஜல்தி ஆவ், ஜல்தி ஆவ்’ என்று குரல் கொடுத்தபடியே அவர்கள் பக்கமாய் ஓடிப்போய், அவர்களை இழுத்துக்கொண்டு தங்கள் வீட்டுக்குக் கொண்டு போகிறார்கள். ஜன்னல் வழியாய்ப் பார்த்த பெண்கள் சந்தோஷமாகத் தலையை ஆட்டுகிறார்கள். மானுட மரத்தின் கிளைகள் வெட்டப்படுகின்றன. ஆனாலும் அதன் வேர்ப்பிடிப்பு நன்றாகத்தான் இருக்கிறது என்பது போன்ற தியாக பாதுகாப்புக்கள். சுயநல மறுப்பின் அடையாளங்கள், இப்படிப்பட்ட காட்சிகளும், சுயம்புவுக்கும், தோழிகளுக்கும், ஆங்காங்கே கிடைக்கத் தான் செய்தன.

     அவர்கள் அங்குமிங்குமாய்ச் சுற்றி, தெருக்களின் பிணத்தோடு பிணமாய்க் கிடந்த அபலைப் பெண்களைக் கட்டிப்பிடித்து அழுதார்கள். அலங்கோலமாய்க் கிடந்தவர்களின் கால்களைச் சரிப்படுத்தி வைத்தார்கள். லேசு லேசான மனித நடமாட்டம் தெரிந்தது. இவர்களைப் பார்த்து பலர் வீதிக்கு வந்தார்கள். இவர்களிடமே விவரம் கேட்டார்கள். வன்முறை பெருத்தபோது மானுடம் சிறுத்துப் போவதற்குக் காரணமான ‘தெருவோருக்கும் உதவாத சிறிய வீணர்கள்’. வீணர்களில் ஒருத்தர், இவர்களிடம் கேள்வியும் பதிலுமாய்ப் பேசினார்.

     “பஞ்சாபிலிருந்து. இந்துக்களை அப்படியே வெட்டி வெட்டி சர்தார்ஜிகள் ரயிலுல அனுப்பி வைக்காங்களாம். டில்லிக்கு தண்ணிர் கொடுக்கிற யமுனை நதியில விஷத்தைக் கலந்துட்டாங்களாம். டில்லியில் பல தொட்டிகளில் விஷத்தைப் போட்டுக் கலக்கிட்டாங்களாம். கனாட்பிளேஸ்ல ஐம்பதுபேர் செத்துட்டாங்களாம். இன்றைக்குக் காலையில் பல இடத்தில ஒட்டுன போஸ்டர்ல படிச்சேன். தண்ணிய குடிக்கவே பயமா இருக்கு. ஆனால் தாகம். ஒங்க வீட்ல பழைய தண்ணிர் இருக்குமா. கிடைக்குமா.”

     மேகலை அந்த ஆசாமியை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தாள். பக்கத்திலேயே மனிதப் பிணங்கள். அடியும் தலையுமாக உச்சிமுதல் பாதம் வரை ஒன்றுபட்டு நின்ற மனித எலும்புகள் சிதறிக் கிடக்கின்றன. ரத்த நாளங்கள் வெடித்துக் கிடக்கின்றன. ஆனால் அவருக்குத் தாகம்.

     மேகலை அங்குமிங்கும் பார்க்கிறாள். ஒரு தெருக்குழாய். அங்கே போகிறாள். தோழிகள் இழுத்துப் பிடிக்கிறார்கள். அந்தக் குழாயைத் திறந்து தண்ணிரைக் குடிக்கிறாள். கால் நிமிடத்திற்குப் பிறகு வாயில் உள்ள தண்ணிரை அவளிடம் கேள்வி கேட்டவர் பக்கம் கொப்பளிக்கிறாள். செத்தால் சாவோம் என்கிற வேகம்! சாகாவிட்டால் இந்தப் பொய்யைத் தெரிந்தவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற தாகம்!

     அந்த நால்வரும், மயானச் சாலைகள் வழியாகக் குடியிருப்புக்குத் திரும்புகிறார்கள். நீலிமா குறுக்கும் நெடுக்குமாய்ச் சுற்றுகிறாள். இன்னும் எந்தக் கதவும் திறக்கப்படவில்லை. சுடுகாட்டிலாவது வெட்டியான் சத்தம் இருக்கும். சுடலைத் தீயின் பாம்புபோல் சீறும் சத்தமாவது கேட்கும். ஆனால் இதுவோ மனிதர்கள் சும்மா மூச்சு மட்டுமே விட்டுக்கொண்டிருக்கும் மயானப் பகுதி. இன்னும் ஒரு வாரத்திற்குத் தம்மடக்கி வாழ்வதற்காக மூச்சைக்கூட அடக்கி விடுவது போன்ற ஒரு ஒத்திகை.

     மேகலை நீலிமாவிடம் கேட்டாள்.

     “அம்மா எங்க...”

     “அம்மா இங்க வரலியா. நான் எங்கெல்லாமோ தேடிட்டு இங்க வாறேன்...”

     மேகலை அழுவாள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவளோ பித்துப் பிடித்து அந்த சர்தாரிணிப் பெண், இவள் போனபோது எப்படிக் கிடந்து எப்படி முழித்தாளோ, அப்படிக் கிடந்து, அவள் போலவே கண்கள் சொருக, வாய் துடிக்க, அந்தத் தரையிலேயே சரிந்தாள்.