38

     காலம் ஒன்பது ஆண்டுகளாக ஓடிப்போய் சுயம்புவை முழுக்க முழுக்க மேகலையாக்கிவிட்டது.

     அந்த ஆலமரம் அப்படியேதான் இருந்தது. ஆனால், முர்கேவாலி மாதாவுக்கு அந்த மரத்தடி ஒண்டிக் குடித்தனம் தேவையில்லாமல் போய்விட்டது. தன்னந் தனியாய் தனிக்குடித்தனம் நடத்துகிறாள். அவர்களைப் போலவே, அந்த மரத்திற்கு அருகேயே, கூம்புமாதிரியான பெரிய கோவில். கால் வைக்கக் கூசும்படியான பளிங்குக் கற்கள். ஒரு சுற்று பெரிய தளம். அப்போது புகைப்படமாக இருந்த முர்கேவாலி மாதா, இப்போது, சலவைக்கல் சிலையாக மாறிவிட்டாள். அந்தச் சிலைக்கு முன்னால், கிருஷ்ணன் படம். பின்பக்கச் சுவரில் கங்காதேவியின் சடாமுடிப்படம்.

     மேகலை, தேவிக்குக் கற்பூரம் ஏற்றி, கண்மூடித் தியானித்துவிட்டு, பழைய ஆலமரத்தடிக்கே வந்தாள். இப்போது அந்தக் கோவில், அலிகளுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் பொதுக் கோவிலாகி விட்டது. இவள்தான், கோவிலை நிர்வகிக்கிறாள்; என்றாலும் ஆட்கள் அதிகமாகும்போது, ஆலமரத்தடிக்கு வந்துவிடுவாள். அதோடு, கோயிலுக்குள்ளே அலிகளின் நல்லது கெட்டதுகளை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. காலையிலும், மாலையிலும் இந்த ஆலமரத்தடியே ஒரு தியானத் திண்ணையாகவும் தீர்வுத் திடலாகவும் மாறிவிட்டது. நீலிமாவுக்கு முன்பல் ஒன்று தானாய் விழுந்து விட்டதால், இப்போது பாடுவதை விட்டுவிட்டு, டோலக்கை மட்டும்தான் அடிக்கிறாள். அவள் உடம்பில் ஒரு தொய்வு. லட்சுமி முகத்தில் தேமல்கள் மாதிரியான வயதுத் தடங்கள். குஞ்சம்மாவுக்கு அதில் சந்தோஷம். அவளுக்கு இன்னும் சுருக்கங்கள் வரவில்லை. ஆனாலும், உடம்பு முழுவதும் கொஞ்சம் சுருங்கிப்போய்தான் இருந்தது. மேகலைக்குத்தான் பிராய வயதின் மறுபுற எல்லை.

     அந்தத் தோழிக் காய்கள் லோசாய்ப் பழுக்கப்போன போது, அந்த மேகலைப் பிஞ்சு இப்போது நல்ல காயாகி விட்டது. கடிக்கும்போதே இனிப்பது மாதிரியான ஒருவித துவர்ப்புக் கலந்த இனிப்பைத் தருமே கொய்யாக்காய் அது மாதிரி முகம். சிறிது லேசாய் கரடு முரடு, பழைய குழைவு இப்போது கம்பீரமாய்த் தெரிந்தது. பழைய சொங்கிப் பார்வை, இப்போது சொக்கும் பார்வையானது.

     மேகலைக்குப் பின்பக்கம், நீலிமாவும், நலிமாவும் நின்று கொண்டிருந்தார்கள். மார்க்கரெட் அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். லட்சுமியும், குஞ்சம்மாவும் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். பேர் என்னமோ தனித்தனி வீடுகள்... ஆனால், இவர்கள் பெரும்பாலும் ‘கிச்சன் காபினெட்’ மாதிரி, மேகலை வீட்டில்தான் இருப்பார்கள்.

     மேகலை, தன்னைப் பார்ப்பதற்காக அங்குமிங்குமாய் கூடிக்கூடிப் பேசியபடியே நின்றவர்களைப் பார்த்தாள். தாயும் மகளுமாய் தனித்திருந்தவர்கள் கண்ணில் பட்டார்கள்.

     “எக்கா! ஏன் அங்கேயே நிற்கீங்க... வாங்கக்கா...”

     ஒரு காலத்தில் இறுக்கிக் கட்டிய கயிறுபோல் தோன்றிய சுலோச்சனா, இப்போது தொப்பையாய் சரிந்து நின்றாள். அவள் வயிறு பெருமளவில் முன்னுக்கும் முதுகு சிறுமளவில் பின்னுக்குமாய் தடம் விலகி நின்றன. ஆனாலும் அவள் முகத்தில் குறுஞ் சிரிப்பு. வழக்கம்போல் கண்களைத் தாழ்த்தி தாழ்த்திப் பார்க்கும் மாதக் கடைசிப் பார்வையல்ல. மகளின் தோளில் கைபோட்டு மந்தகாசமாய்ச் சிரிக்கும் அழகுப் பார்வை. மேகலை அந்தச் சிறுவனையே உற்றுப் பார்த்தாள். அறிவு ஜீவிகள் போடும் குர்தா - ஜிப்பா ஜோரான நிறம்.

     “என் மருமகன் ரொம்பத்தான் வளர்ந்துவிட்டான்.”

     “என்ன ஆண்டி? லாஸ்ட் வீக் பாத்தீங்க... அதுக்குள்ளயா வளர்ந்துடப் போறேன்!”

     “பொண்ணு வளர்த்தியும் பீர்க்கங்காய் வளர்த்தியும் ஒண்ணுடா. இப்போ ஆம்புள வளர்த்தியும்... அப்படியா ஆகிட்டு.”

     “மம்மி! வாட் ஆண்டி சேய்ஸ்”

     “இப்படித்தான் ஏதாவது புரியாட்டா இங்கிலீஷ் காரனா மாறிடுவான் சுயம்பு.”

     “இவனைப் பார்க்கும்போதெல்லாம், நான் ஒன் வீட்டுக்கு ரெண்டாவது தடவையா வந்தததும், இவனுக்கு கஸ்துாரி மாத்திரை வாங்கிக் கொடுத்ததும் நேத்து நடந்தது மாதிரியே இருக்குதுக்கா. ஆனால், போன மாசம் இவனுக்குக் கொடுத்தது மாதிரி கஸ்தூரி மாத்திரைய ஒரு குழந்தைக்குக் கொடுக்கச் சொன்னேன். வெட்டு கூடிச்சே தவிர குறையல. இப்போ கஸ்தூரி மாத்திரயிலயும் கலப்படம்.”

     சுலோச்சனா ஏறிட்டுப் பார்த்தாள். இளந்துறவி மாதிரி வெளிர் மஞ்சள் சேலை. பிடி தளராத உடம்பு. பார்வையிலேயே ரெண்டு வித பாவம். ஒன்று பிறத்தியார் பாவத்தைப் போக்குவது போன்ற பார்வை... இன்னொன்று, தானே ஒரு பாவமானது போன்ற உட்பார்வை. எதையோ தேடிக்கொண்டிருப்பது போன்ற கண்கள். வெறுமனே உடம்பைவிட்டு, உள்ளுக்குள் யாரையோ பேசவிடுவது போன்ற தோரணை. முகத்தில் லேசான முற்றல். விவேகமோ... விரக்தியோ!

     “சுயம்பு. ஏன் அப்படிப் பார்க்கிறே? எனக்கு நீ எப்பவுமே சுயம்புதான். உன் மருமகனுக்கு ஆசீர்வாதம் கொடு. இன்னிக்கு அவன் பிறந்த நாள். இப்போ கூட்டமா இருக்கும். அப்புறமா போகலாம்னா கேட்டாத்தானே... நம்ம காலம் மாதிரியா! நமக்கெல்லாம் பெத்தவங்க சொல்லுதான் வேத வாக்கு.”

     “இல்லக்கா. அப்பவும் நான் அடங்காப் பிடாரிதான். கேட்கலை. கேட்க முடியலை. போகட்டும், வாடா என் மருமகனே!”

     மேகலை காலைத் தொட்ட சிறுவனுக்கு, நெற்றியில் குங்குமமிட்டாள். கூடவே ஒரு எண்ணம். என் அண்ணன் மகளும் இவனைவிட பெரிசா வளர்ந்திருப்பாள். மேகலை, நீலிமா காதில் கிசுகிசுத்தாள். அதைச் சிரமப்பட்டுக் குனிந்து கேட்ட நீலிமா, அந்தச் சிறுவனைக் கூட்டிக்கொண்டு உள்ளே போனாள்.

     ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். அலிகள் அல்லாத மனிதர்களும் வந்தார்கள். ஒரு கட்டத்தில், தாயும் மகளுமான இரு அலிகள். பெரியவளுக்கு அழுகை, சின்னவளுக்கு முறைப்பு. சுவிகாரம் எடுத்தவள் புலம்பினாள்.

     “நம்ம முறைப்படி தாயான நான் இவள அடிக்கலாம். இவள் என்னை எப்படித் திருப்பி அடிக்கலாம்?”

     அங்கே ‘நின்றது’ அதட்டலோடு கேட்டது.

     “பெத்துப்போட்ட அம்மாவே என்னை அடிக்கலை, இவள் எப்படி அடிக்கலாம்!”

     மேகலை கண்ணை மூடி, சுயம்புவாக மாறினான்.

     அம்மாவை அவன் திட்டியிருக்கிறான். ஆனால் ஒரு நாள்கூட, இவனை அவள் கடிந்ததில்லை. அடிக்கப்போன கையையே செல்லமாகப் பிடித்து சொடக்கு விட்டிருக்கிறாள். ‘அம்மா. நீ இப்ப எப்படி இருக்கியோ! இருக்கியா... செத்தியோ...’ சுயம்புவுக்கு அம்மாவின் நினைப்புக்கு ஊடகமாக அக்காளின் நினைப்பு நெஞ்சை அரித்தது.‘அண்ணன் எனக்கு சூடு மட்டுமா போட்டான், கழுத்தைக் கட்டி அழுதவனும் அவன்தானே. பல்கலைக் கழக பதிவாளர் முன்னால், அப்பா எப்படிக் கெஞ்சினார். ஒரு லட்டர் போடலாமா? ரூபாயே திரும்பி வந்துதே... நானும் பிள்ளையாருக்கு பிறந்துட்டு சுயமரியாதை இல்லாம இருக்க முடியுமா? மனசே மரத்துப்போச்சு!’

     சுயம்பு, அந்த ஆலமரத்தடியில் முர்கேமாதாவிற்கு இணையாக இருந்த கங்காதேவி படத்தையே பார்த்தான். எனக்காக எழுந்து எனக்காகவே வாழ்ந்தவள். அந்தக் காலத்தில் நல்லாம்பட்டியில் வில்லுப்பாட்டாளி, சிங்கி போடும் தன் மகனைப் ‘பாட்டாளி’ யாக்கிவிட்டு அவனுக்குப் பின்பாட்டுப் பாடுவாரே. அப்படி என்னை முன்னிருத்தி தன்னைப் பின்னிருத்தியவள். இவள் சொல்லிக் கொடுத்த வரலாறும், அள்ளிக் கொடுத்த உபதேசங்களும், படிக்கக் கொடுத்த புத்தகங்களும் நினைத்துப் பார்க்கவே நேரம் தேவைப்படும் அளவிற்கு நீளும். அம்மா பெற்றுப் போட்டாள். பச்சையம்மா எடுத்துப் போட்டாள். ஆனால் இந்த கங்காதேவி அம்மாவோ, என்னை எனக்கு அடையாளம் காட்டி, நானே அவளென்று ஆக்கிக் காட்டியவள். அறுபது வயது பெரிய வயதல்ல. இருந்தாலும் உயிர் படுத்த படுக்கையில் தூங்கும் போதே போய்விட்டது. ஆனால், அந்த அதிர்ச்சி, இன்னும் போனபாடில்லை.

     சுயம்பு, மீண்டும் மேகலையாகி கங்காதேவி படத்தைக் கையெடுத்துக் கும்பிட்டாள். கடந்த ஓராண்டு காலத்தில் இவன் இப்படி அடிக்கடி கும்பிடுவதால் அவள் தோழிகளுக்கு அது ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. ஆனாலும் அங்கே நின்ற தாய் அலிக்கு நேரமாவது போலிருந்தது. எங்கேயோ புறப்படப்போன மகளை இழுத்துப் போட்டுக் கொண்டே இருமினாள். மேகலைக்கு உணர்வு வந்தது. அதட்டினாள்.

     “ஏண்டி அம்மா அடித்தா நீயும் திருப்பி அடிக்கணுமா...”

     “அம்மா கூட பாட்டுப்பாட வாறேனேன். பஞ்சாபி பயலுவ விசிலடிக்கான். வீட்டுக்குள்ளய இரு என்கிறான். வீட்டுக்குள்ள இருக்கவா நாம பிறந்திருக்கோம்...”

     “பேசாமல் ரெண்டு பேரும் ஒரு சடங்கு வச்சு சுவிகாரத்தை ரத்து செய்யுறீங்களா!”

     கிழவி, மேகலை கண்டிப்பதைப் பார்த்துவிட்டு, ‘சரி’ என்றாள். உடனே சின்னவள் அழுதாள். ‘மாட்டேன், மாட்டேன்’ என்று தலையை ஆட்டினாள். அம்மாவை அங்கேயே அடிக்கப் போனாள். பிறகு குரு அலியான மேகலையைப் பார்த்து, நாக்கைக் கடித்தாள். மேகலை தீர்ப்பளித்தாள்.

     “அம்மா அடிக்கலாம், மகள் அடிக்கப்படாது என்கிற அலிகள் சம்பிரதாயத்தை பிடிச்சுக்கிட்டு இருக்கக் கூடாது. எல்லாம் ஒரு சொல்லுல அடங்கணும். கோழி மிதிச்சு குஞ்சு சாகாதுன்னா, குஞ்சு மிதிச்சு கோழி சாகுமா பெரியம்மா... ஏண்டி, இனிமேல் அம்மாவ அடிக்கிற வேலைய வச்சுக்கிட்டால், அப்புறம் நடக்கற சங்கதி வேற...”

     அவர்கள் போனதும் லுங்கியும் முண்டாசுப் பனியனுமாய் ஒருவன். பக்கத்தில் ஒரு புடவை அலி.

     “இவளுக்கு அடுத்த வாரம் சித்ரா பெளர்ணமியில் நிர்வாணம் வச்சிருக்கேன். முர்கே மாதாவோட ஆசீர்வாதமும் உங்களோட சிறு தொகையும்...”

     “கருப்புக் கயிற கட்டி வெட்டிப் போடுற காட்டு மிராண்டித்தனம் இனிமேல் வேண்டாம். நமக்குன்னு ஒரு டாக்டர் தேவ்நகர்ல இருக்கார். இதுக்குன்னே நர்ஸிங் ஹோம் வச்சிருக்கார். அவரே ஆபரேஷன் செய்வார். லட்சுமிக்கா, இவளுக்குக் கொஞ்சம் பணம் கொடு...”

     “ஆபரேஷன் சமயத்துல கொடுக்கலாம். இப்ப கொடுத்தால், விஸ்கி விஸ்கியா வயித்துக்குள்ள போயிடும். ஏண்டி முறைக்கே... பணத்தை, டாக்டர்கிட்டத்தான் கட்டுவேன். கொஞ்சம் சாப்பிட்டுட்டு உட்காரேண்டி..”

     மேகலை, எழுந்திருக்கப் போனாள். அதற்குள் நாலு பேர் காரில் இறங்கினார்கள். தலை தாழ்த்திக் கும்பிட்டார்கள். மேகலை அவர்களையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்குள் போனாள். டைனிங் டேபிளில் உட்கார்ந்தார்கள். லட்சுமி சப்பாத்திகளை வைத்தாள். மார்க்ரெட் சப்ஜியை வைத்தாள். குஞ்சம்மா, நீலிமாவும் சமையலறைக்குள் உருட்டிக் கொண்டிருந்தார்கள்.

     மேகலை, சாப்பிட்டபடியும், அவர்களை சாப்பிட வைத்தபடியும் பேசினாள்.

     “ஒங்க வழக்கப்படி ஒங்க பிரிவு அலிகள் யாராவது செத்தபிறகு அவள தலைகீழா போட்டு வைச்சு, பிணத்தை செருப்பு வைச்சு அடிச்சுக்கிட்டே சுடுகாட்டுக்குப் போறது இந்தக் காலத்துக்குப் பொருந்துமான்னு யோசிச்சுப் பாருங்க. நோக்கம் புரியுது. இனிமேல் அடுத்த பிறவியிலாவது செத்துப்போனது அலியாப் பிறந்து சீரழியக் கூடாது என்கிற உங்க ஆவேசத்தைக் காட்டுது... ஆனால், நாமும் மனித சீவராசிகள்தான்... நம்மாலயும் சொந்தக் கால்ல நிக்க முடியும்.”

     “எப்படி பழைய சம்பிரதாயத்தை...”

     “ஏசு கிறிஸ்துவ சிலுவையில் அறைஞ்ச கோலத்த காட்டுறதையே, இப்போ அப்படி காட்டப்படாதுன்னு கிறிஸ்தவர்கள் மத்தியிலேயே ஒரு கருத்து நிலவுது. எதையும், சோகத்துல முடிக்காமல், ஏசுநாதர் சிலுவையில் இருந்து பீறிட்டு உயிர்த்தெழுந்ததாய் காட்டணும்னு மேல் நாடுகளில் இளம் பாதிரிமார்கள் வாதாடி வாறாங்க. எதுக்கும் யோசிச்சுப் பாருங்க... எங்கம்மா கங்காதேவி இருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பாங்க.”

     மேகலையிடம், வாதிடப்போன அந்தக் கிழட்டு அலிகள், அவள் கை கழுவுவது போல் கண்களும் தங்களைக் கழுவிக் கொள்வதைப் பார்த்து விட்டார்கள். யோசிக்க வேண்டிய விவகாரம். செருப்படி பட வேண்டியது, அலிகளை நையாண்டி செய்கிறவர்கள்தான்.

     அந்த மூவரையும் வழியனுப்ப மேகலை வாசலுக்கு வந்தபோது, ஒரு படகுக் கார் வந்தது. மேகலை புரிந்து கொண்டாள்.

     “பிதாஜி... பிதாஜி”

     அந்த சர்தார்ஜி காலில் கைபோட்டவளைத் தூக்கி நிறுத்தி, ஆரத் தழுவினார்.

     “கானா காதியா பிதாஜி...”

     “நை பேட்டி. இப்பதான் சாப்பிட்டேன். என் வீட்டுக்கு நீ வந்து ஆறு மாசம் ஆகுது. வேலை தினமும் இருக்கும் மகளே. நாம்தான் அதிலிருந்து ஒரு நாளைக்காவது விலகணும்...”

     “எங்க பிதாஜி முடியுது? வெட்ட வெளியாய் இருக்கிற இந்த இடத்துல அலிகளுக்காக ஒரு தர்மஸ்தலா கட்டணும் என்கிறது எங்க அம்மாவோட ஆக்ஞை. அதுக்கு பிளான் போடறதிலயும், போட்ட பிளானைத் திருத்துறதுலயும் இருக்கேன். கட்டிடம் ஒரு கலை என்கிறதை மறந்துட்டு, அந்தக் கலைக்கே சிறைவைக்கிற மாதிரி ஒருத்தன் பிளான் கொண்டு வாறான்...”

     “இந்த சர்தார்ஜிகூட பழையபடியும் ஒன்கிட்ட அடைக்கலமா வரலாம். சர்தார்ஜி துரத்துகிற பஞ்சாபி இந்துக்களும், இங்க வரலாம். அதனால பெரிசா கட்டு. என் நன்கொடை எப்போ வேணும்?”

     “கடைக்கால் போட்டபிறகு வாங்கிக்கிறேன்... செமத்தியா கேட்பேன்.”

     “ஒனக்கு இல்லாத பணமா? அப்புறம் மகளே, கோபப்படாமல் கேக்கணும். ஒனக்கு பரிதாபத்ல ஒரு சின்ன பாக்டரியை எழுதி வைக்கேன்னு சொன்னேன். தட்டிட்டே. ஆனால், இதைத் தட்ட விடமாட்டேன். இந்திரபுரியில் உன்பேர்ல ஒரு வீட்டை எழுதி வைச்சுட்டேன். மாதம் வெறும் பத்தாயிரம் ரூபாதான் வாடகை வரும். அதோட ரெண்டு லட்சத்தை உன்பேர்ல டிபாசிட் போட்டுட்டேன்.”

     “இதுக்குத்தான் என் பாங்க் அக்கவுண்ட் நம்பரைக் கேட்டிங்களா... எனக்கு எதுக்கு பிதாஜி...”

     “நீ எனக்கு செய்திருக்கிறதை, நான் பழையபடியும் சொல்லிக்காட்ட விரும்பல. ஆனால், நான் உனக்குன்னு ஏதாவது செய்யாட்டால், என் ஆத்மா சாந்தியடையாது. என் ஆத்மா சாந்தியடையணும்னு நீ விரும்புனால், இதை ஏத்துக்கணும்...”

     சர்தார்ஜி அவள் மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, புறப்பட்டார். அவருக்குக் கார் கதவைத் திறந்துவிட்டு, காரிலேற்றி, வழியனுப்பிவிட்டுத் திரும்பிய மேகலை, ‘எங்கம்மா கங்காதேவி சொத்தே நாலு தலைமுறைக்குப் போதும். இதுக்குமேல எதுக்கு?’ என்று சொன்னபடியே ஆலமரத்தடியில் உட்கார்ந்தாள். இந்தப் பேச்சை மட்டும் அவள் தோழிகள் காதில் வாங்க மறுத்தனர்.

     இதற்குள், இன்னொரு கூட்டம் எந்தக் கலப்பும் இல்லாத அவர்களின் கூட்டம்.

     “விவேக்புரியில் ஒரு ஆபீஸர்மேல பஸ் மோதி இறந்துட்டாரு...”

     “சரி, கூடமாடப் போய் அழுங்க, காசு கொடுத்தால் வாங்கப்படாது...”

     “நம்ம ஏரியாவுக்குள்ள மோசினி குரு அலி, சேலா அலிகளை அனுப்பி வைக்கான். நேற்று கொஞ்சம் கலகலப்பு...”

     “அதெல்லாம் கூடாது. இன்னிக்கு மட்டும் அந்த ஏரியாப் பக்கம் போகாதீங்க. மோசினிகிட்ட நான் பேசுறேன்.”

     “இவள் மூணு தடவை ஆள மாத்திட்டாள். முதலாவது ஆள் அழுகிறான். ரெண்டாவது ஆள் பொருமுறான்...”

     வாசலில் நின்ற லட்சுமி புகார் செய்தவளைக் கண்டித்தாள்.

     “ஏண்டி, குதிரைக் கொண்டை, தராதரம் தெரியாமல் இதைப்போய் அவள்கிட்ட சொல்றயடி. இவள் மூணாவது ஆம்பளையாவது மாற்றாமல் இருக்கச் சொல்லு...”

     மேகலை மீண்டும் எழுந்தாள். அதற்குள் ஒரு கார். எந்த நல்ல காரியத்திற்கும் அவளிடம் விபூதி குங்குமம் வாங்கிக்கொண்டு போகும் கார். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு நூறு ரூபாய் கொடுத்ததே, அந்தக் காரின் வாரிசுக் கார்.

     லட்சுமி, வாசலில் தன்னை ஒரு மாதிரிப் பார்ப்பதை புரிந்து கொண்ட மேகலை, உதட்டைக் கடித்தபடியே வீட்டுக்குள் வந்தாள். நீலிமா, நளிமா, மார்கரெட், குஞ்சம்மா, பகுச்சார்தேவி எல்லோரும் லட்சுமியைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினாள்கள். மேகலை கேட்டாள்.

     “என்னக்கா வேணும்.”

     “சித்ராபெளர்ணமி நெருங்குது. கூவாகம் போகணும். நம்ம புருஷன நாம பாத்தாகனுமே...”

     “நான், என்ன போகவேண்டாம்னா சொல்லப் போறேன்!”

     “நீ வரணும். இவளுக எல்லாம் இந்த வருஷம் நீ இல்லாமல் கூவாகம் போகக்கூடாதுன்னு சொல்றாளுக... ஏண்டி, என்ன பேசவிட்டுட்டு நீங்க சும்மா நின்னா எப்படி..?”

     “விழுப்புரம் பக்கத்துல இருக்கிற கூவாகம்தானே. நான் வரமாட்டேன். தமிழ் பேப்பர்ல - பத்திரிகைகள்ல வந்த செய்திகளைப் படித்தால், வாந்தி வருது. அலிகளை அசல் தாசிகளா எழுதுறாங்க. நாம் பிறப்பெடுத்ததே அதுக்குத்தான் என்கிறது மாதிரி, பக்கம் பக்கமா எழுதறாங்க. ஆம்பளைங்களைத் தவிர, நமக்கு வேற சிந்தனையே இல்லை என்கிற மாதிரி எழுத்து. இதனாலேயே விழுப்புரம் பக்கத்துல இருந்து விடலப் பயலுக, கூவாகத்துக்கு பஸ் பஸ்ஸா போறாங்களாம். அது கூவாகம் இல்ல, கூவம். இந்தச் சித்ரா பெளர்ணமிக்கு நான் வழக்கம்போல குஜராத்ல இருக்கிற முர்கே மாதா கோயிலுக்குப் போறேன். என்கட நீங்க வேணுமுன்னா வாங்க. ஆனால் நீங்க கூவாகம் போகக்கூடாதுன்னு நான் சொல்லல.”

     லட்சுமி, வாயைத் திறந்து வைத்து யோசித்தாள். அப்படி அவள் வாயைத் திறந்தால், சிந்தனை பிறக்காது என்று எண்ணியது போல், குஞ்சம்மா அவளின் இரண்டு மோவாப் பிரிவுகளையும் ஒன்று படுத்தினாள். அவள் நினைத்ததுபோலவே லட்சுமிக்கு ஒரு சிந்தனை பிறந்தது.

     “கூவாகத்துல மட்டும்தான் கூத்தாண்டவருக்கு கோயில் இருக்கதா... நினைக்காதடி... பாண்டிச்சேரியில், பிள்ளையார்குப்பத்துல அரவான் இருக்கார், கடலூருக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்துல கடற்கரையோரமாய் மஞ்சக்குப்பம் என்கிற இடத்துல நம்ம புருஷன் இருக்கார். இந்த இடம் அருமையான இடம். கூவாகம் மாதிரி அசிங்கம் கிடையாது. பிள்ளையார்குப்பம் மாதிரி வெடிவிபத்துக் கிடையாது. நம்மளுல இருக்குற மேனாமினுக்கிங்க வராத இடம். நான் ஒரு தடவை போயிருக்கேன். இந்தத் தடவை நீ மாட்டேன்னாலும், நான், அனுமார் ராமலட்சுமணரைத் தூக்கிட்டுப் போனதுமாதிரி ஒன்னை தூக்கிட்டுப் போயிடுவேன்...”

     மேகலை, மீண்டும் சுயம்புவானான்.

     ‘கடலூர் படித்த ஊருக்குப் பக்கத்திலுள்ள நகர். ஒரு வேளை டேவிட் அங்கே டாக்டரா இருக்கலாம். அந்த ஆம்பளப் பசங்ககூட கண்ணுல படலாம். வீட்டுக்குப் போகக்கூடாதுதான். ஆனாலும், தெரிஞ்சவங்க கிடைச்சா குடும்ப நிலமையை தெரிஞ்சுக்கலாம். போகலாமா, வேண்டாமா? இருக்கிற நிம்மதியை எதுக்காகக் கெடுக்கணும்...’