உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
4 பிள்ளையார், தோட்டத்திற்கு போய் வந்ததன் அத்தாட்சியாய், தலையில் ஏறிக் கிடந்த ஒரு சுமை அகத்திக்கீரைக் கட்டை, தொப்பென்று முற்றத்தில் போட்டார். தலையில் பாம்பு மாதிரி சுருட்டி வைக்கப்பட்டிருந்த துண்டை எடுத்து ஒரு முனையைப் பிடித்து உதறியபடியே, சமையலறைத் திண்ணையில் உட்கார்ந்தார். பொதுவாக, தோட்டத்திற்குக் காலையில் போனால் அங்கேயே இரண்டு தேங்காய் பறித்து, வயித்த நிரப்பிக் கொள்பவர், மத்தியானம் சாப்பாட்டுச் சமயத்தில் மட்டும் தான் வருவார். ஆனால், இன்று தோட்டத்திற்குப் போன வேகத்திலேயே திரும்பி விட்டார். எதிர் அறைப் படிக்கட்டில் லுங்கியும் பனியனுமாக இருந்த சுயம்புவை நோட்டம் விட்டபடியே, தட்டில் பழைய அரிசிச் சோற்றைத் தேங்காய்த் துவையலோடு பிசைந்து கொண்டிருந்த ஆறுமுகப் பாண்டியைப் பார்த்துக் கேட்டார்: “ஏடே... பெரியவன்... இவன் இன்னும் போகலை? நான் என்னடா சொல்லிட்டுப் போனேன்? தோட்டத்துல இருந்து திரும்பும் போது, ஒண்ணு நான் இவன் கண்ணுல படப்படாது... இல்லாட்டா, நான் ஒங்க கண்ணுல படமாட்டேன்னு சொன்னத மறந்திட்டியளா? செருக்கிமவன், ‘கரிவலிச்சி’ வாரான். பெரிய படிப்புன்னா கஷ்டமாத்தான் இருக்கும்... இந்த ஒரு மாதத்லயே ரெண்டு தடவை அவன் வரும் போதே எனக்கு சந்தேகம்... ஒவ்வொருத்தியவள மாதிரி நான் வாக்குத் தவறுற வம்சம் இல்லடா... இப்ப அவன் போறானா... இல்ல நான் போகணுமான்னு கேளு...” தப்பித் தவறி ஒரு வார்த்தை வாயிலிருந்து விழுந்து விட்டாலும், அந்த ஒரு சொல்லில் நிற்கும் அப்பாவின் போக்கை அறிந்திருக்கும் ஆறுமுகப் பாண்டி, பாதிச் சோற்றைச் சாப்பிடாமலே கையைக் கழுவினான். இதற்குள், மரகதம் ஓடி வந்து தம்பியின் தோளில் பாண்ட் சட்டையைத் தொங்கப் போட்டு, அவனைத் தூக்கி விட்டாள். மரகதம், தம்பியை ஆடையை மாற்றிக் கொள்வதற்காக, பக்கத்து அறைக்குத் தள்ளி விட்டாள். அவனும், அக்காவின் வார்த்தைக்கு மரியாதை கொடுப்பது போல் சிறிது நடந்து, மீண்டும் அவள் பக்கமே வந்தான். தலையை அங்குமிங்குமாய் ஆட்டி ஓலமிட்டான். அக்காவிடம் மௌனச் சம்மதமானவன், இப்போது மீண்டும் முருங்கை மரம் ஏறப் போவது போல் அபலத்தோடு பேசினான். “நான் போகமாட்டேன். காலேஜுக்குப் போக மாட்டேன். எனக்குப் பயமா இருக்கு... பயத்தைத் தாங்க முடியலை...” “என்னடா பயம், பொல்லாத பயம்? நம்மள மீறி எப்படிடா பயம் வரும்? எங்கே... அக்கா முகத்தைப் பார்த்துச் சொல்லு... எப்படி பயம் வரும்...?” சுயம்பு, அக்கா மூலம் அனைவருக்கும் எதையோ ஒன்றைச் சொல்லப் போனான். அதற்குள் அவன் தந்தை பிள்ளையார், திண்ணையிலிருந்து துள்ளி எழுந்து சுவரில் சாத்தப்பட்ட சாட்டைக் கம்பை எடுத்தார். உடனே வெள்ளையம்மா, “இதுக்கு மட்டும் குறைச்சலில்லே. அவன் சுயமாவா பேசறான்? எல்லாம் அந்தப் பாழாப் போற பய பொண்டாட்டி சீதாலட்சுமி படுத்துற வேலை” என்றாள். உடனே அவர் மகன் மேல் குறி வைத்த சாட்டைக் கம்பை, மனைவிக்குக் குறியாக்கியபடியே கத்தினார். “எல்லாம் இந்தப் பொம்பளைங்க கொடுக்கிற இடம் தான்... செருக்கி மவன நல்ல வார்த்தையா சொல்லி துரத்துரத விட்டுட்டு தாலாட்டுப் போடுறாளுவ, தாலாட்டு... எப்படி உருப்படுவான்? இப்ப சொல்றதுதான் சொல்லு... அவனுக்குப் படிக்க முடியாட்டால் எந்தக் ‘காட்டுக்காவது’ ஓடிப் போகட்டும். இங்க வரப்படாது... நல்லாப் படிச்சு ஒவ்வொரு பரீட்சை லீவுலயும் ராசா மாதிரி வரட்டும்... நான் வேண்டாங்கலை. அப்படி இல்லாம, இப்படி வந்தால், ஒண்ணு இந்த வீட்ல அவன் இருக்கணும். இல்லேன்னா நான் இருக்கணும்... சீதாலட்சுமி... படுத்துறாளாம்... ‘கரிவலிச்சு’... வந்திருக்கான்...” இந்தச் சமயத்தில் கோமளம் குறுக்கிட்டாள். முப்பது வயதுக்காரி. பெங்களூர் கத்திரிக்காய் மாதிரி சிறிது கரடு முரடான முகம். ஆனாலும், தென்னை இளமட்டை போன்ற அந்த நிறமும், அந்த லாவகமும், அவளுக்கு ஒரு கவர்ச்சியைக் கொடுத்தன. இப்போது வருங்காலத் தங்கையின் கணவன் என்ற உரிமையோடு, அவள் சுயம்புவை அதட்டினாள்: “இவ்வளவு பணம் போட்டு உன்னை எதுக்காக படிக்க வைக்கோம்! இந்த மூணு மாதத்துல, ஹாஸ்டலுக்கே மாதா மாதம் எழுநூறு ரூபா ஆகியிருக்கு... புத்தகம், பீஸுன்னு தனியா மூவாயிரம்... ஒங்கப்பா, வீட்ல இருக்க வேண்டிய இந்த வயசுல, காட்ல கிடக்கார்... ஒங்க அண்ணன் காலையில வயலுக்குப் போயிட்டு ராத்திரிக்குத் தான் வாறவரு... இந்த ஊர... இன்னிக்குத்தான் பகலுல பாக்காரு... அதுவும்... நீ வில்லடிக்கிறதால... நாங்க படுற பாட்டை நினைச்சுப் பார்த்தால், உனக்கு எப்படி படிக்க மனசு இல்லாமப் போகும்?” எங்கேயும் தோன்றும், மாமியார்-மருமகள் மகாயுத்தம் அங்கேயும் தோன்றியது. வெள்ளையம்மா, மகன் மூலம் எச்சரித்தாள். “அவனே சித்தம் கலங்கி நிக்கான். இதுக்குமேல பேசக் கூடாதுன்னு சொல்லுடா...” ஆறுமுகப்பாண்டிக்கு, தாயே பேசச் சொல்லிக் கொடுத்தது போலிருந்தது. “எதுக்கும்மா சொல்லணும்? முழுத்த ஆம்பளைப் பயல்... ஓடுற பாம்பை பிடிக்கிற வயசு... காலேஜுக்குப் போகமாட்டேன், பயமா இருக்குன்னு சொன்னால், அவள் கேட்கக் கூடாதா? முட்டையிடுற கோழிக்குத்தான் பிட்டி வலிக்கும்... ஒன் மருமகள் நகையை அடகு வைச்சுத்தான் காலேஜுக்கு பணம் கட்டுனோம்...” மரகதத்தால், மேற்கொண்டு பொறுக்க முடியவில்லை. அண்ணன், அண்ணி முகங்களைப் பார்க்காமலே பழையதைக் கிளப்பினாள். “இப்படி ஒரு விவகாரம் வரப்படாதுன்னுதான் அப்பா, தீர்த்து வெச்சுட்டார். தம்பிய படிக்க வைக்க வேண்டியது அண்ணன் பொறுப்பு. அதுக்காக தன் பங்கு நிலத்துல ஆறு மரக்கால் விதப்பாட்டை விட்டுக் கொடுக்க வேண்டியது தம்பியோட பொறுப்புன்னு...” “எழா மரகதம்... எனக்கும் அவனுக்கும் இடையில நெலமா குறுக்க நிக்கும்? அப்பா சொல்லிட்டார்னு இவன் தந்தாலும் இவன் பங்கு நெலத்தை நான் வாங்குவனா?” “நீ சும்மா கெட அம்மாளு... இது எங்க வீட்டு விவகாரம்... அடுத்த வீட்டுக்குப் போறவளுக்கு என்ன வந்திட்டு?” “எந்த வீட்டுக்குப் போனாலும் இவன் என் தம்பிதான்...” பிள்ளையார், மகளுக்குக் குரல் கொடுத்தார். வயதுப் பெண் ஒருத்தி, தனது திருமணத்தைப் பற்றி - அது நிச்சயிக்கப்பட்ட பிறகும் மறைமுகமாகக் கூட பேசக்கூடாது என்று நினைப்பவர். அது என்ன எந்த வீடு... மகள் அப்படிப் பேசியதில் கொதித்துப் போய் ஆவியானார். “என்னழா... வாய் ரொம்பத்தான் நீளுது... நூலப் போலச் சேலையாம். தாயைப் போல பிள்ளையாம்...” தாய்க்காரி வெள்ளையம்மா, புருஷனுக்குப் பதிலடி கொடுக்க அதே விகிதாச்சாரத்திலான, வார்த்தைகளைத் தேடினாள். இதற்குள், மரகதம் அடங்கிவிட்டாள். அந்த அதட்டல் குரல் தனக்கும் சேர்த்துத்தான் என்பதைப் புரிந்த கோமளமும், லேசாய் வெளிப்பட்ட நாக்கைக் கூட உள்ளே இழுத்துக் கொண்டாள். மரகதம் வாயளவில் அடங்கினாலும் மனத்தளவில் வீறிட்டாள். கடந்த ஒன்பதாண்டு காலத்தில் முதல் மூன்று மாதங்களை மட்டும் ‘போனஸாக’ விட்டுவிட்டு, அண்ணிக்காரி, சொல்லுக்குச் சொல் ‘அடுத்த வீட்டுக்குப் போறவள்’ என்று இடித்து இடித்துச் சொல்கிறாள் - இவள் என்னமோ இதே வீட்டில் பிறந்ததிலிருந்தே இருப்பவள் போல... இருபத்திரண்டு ஆண்டுகளாக எந்த வீட்டில் பிறந்தாளோ, நடமாடுகிறாளோ, அந்த வீட்டிலிருந்து, ஒரு ஒன்பது வருஷக்காரி, துரத்தப் பார்ப்பதைக் கண்டு மரகதம் மருண்டு போனாள். அந்த வீட்டிலிருந்து அந்த ஊருக்கு ‘அது’ எப்படிப் பட்டதாக இருந்தாலும், போய்த் தொலைய வேண்டும் என்ற விரக்தி. இப்போது ஆறுமுகப் பாண்டி தம்பியை உசுப்பினான். “சீக்கிரமாகச் சட்டையைப் போடுடா... இப்ப புறப்பட்டாத்தான், பஸ்ஸப் பிடிச்சு, ரயிலைப் பிடிச்சு சாயங்காலத்துக்குள்ள போக முடியும்...” சுயம்பு கையெடுத்துக் கும்பிட்டுப் புலம்பினான்: “என்னால எதுவும் செய்ய முடியலே அண்ணே... என்னக் காப்பாத்து அண்ணே. எனக்கு படிப்பும் வேண்டாம் கிடிப்பும் வேண்டாம். வயலும் வேண்டாம். வாசலும் வேண்டாம்... உன் காலடியே போதும்...” ஆறுமுகப் பாண்டி, அரண்டு போய் நின்ற போது, பிள்ளையார் மீண்டும் போர்க்குரலில் பேசினார். “டேய் பெரியவன்... நான் போறேண்டா... திரும்பி வராத இடத்துக்கா போறேண்டா... உன் தங்கச்சி மரகதம் கலியாணத்தை நல்லா நடத்துடா...” பிள்ளையார், துண்டை உதறினார். சுயம்பு, சும்மாவே இருந்தான். இதற்குள் மரகதம் அங்கேயே அவன் தலைக்குள் சட்டையை நுழைத்தாள். பாண்டை எடுத்து அவன் கால் பக்கம் கொண்டு போனாள். பிள்ளையாரோ, பேரப் பிள்ளைகளைக் கன்னத்தில் தட்டிவிட்டு, போகப் போவது போலிருந்தார். சுயம்புவால் பொறுக்க முடியவில்லை. சப்தம் போட்டுப் பேசினான். “போறதாய் இருந்தால், லுங்கியோடதான் போவேன்...” அறைக்குள் போய் லுங்கியைக் கட்டிக் கொண்டு வந்த தம்பியிடம், ஆறுமுகப்பாண்டி சூட்கேஸை நீட்டினான். பிறகு இடுப்பில் குழந்தையோடு நின்ற மனைவியிடம் சில ரூபாய் நோட்டுக்களை நீட்டினான். அவள் அவற்றைக் குழந்தையின் கையில் கொடுத்து மைத்துனனை நெருங்கி, அவனது சட்டைப் பைக்குள் குழந்தையின் ரூபாய்க் கரத்தை உள்ளே விட்டாள். அந்தக் குழந்தை ரூபாய் நோட்டைக் கொடுக்காமல், அவன் சட்டைப் பைக்குள் என்ன கிடைக்கும் என்பது போல் துழாவியது. உடனே அந்தக் குழந்தையின் கையைத் திருகி, அவளே ரூபாயைப் போட்டாள். சுயம்பு திரும்பித் திரும்பி நடந்தான். வேப்பமரத்தைத் தாண்டி, அந்த வாதமடக்கிப் பக்கம் போனான். பெட்டியை அங்கேயே வைத்துவிட்டு அக்காவை நோக்கி ஓடி வந்தான். அவளைக் கட்டிப் பிடித்து, அவள் இரண்டு கைகளையும் தன் கரத்திற்குள் சங்கமமாக்கிக் கொண்டு, அவன் காதில் கிசுகிசுத்தான். உடனே அவள், அழவில்லையானாலும், விம்மினாள். தம்பியின் தலையைக் கோதிவிட்டபடியே, “என் பிரச்னையை விடுடா... நீதான் இப்ப எனக்குப் பிரச்னை” என்றாள். பிறகு அவன் நெற்றியில் முத்தமிட்டு அவனைத் திருப்பிவிட்டாள். அம்மாக்காரி பார்வையால் கேட்டாள். அண்ணன், வார்த்தையாலே கேட்டான். எப்படிச் சொல்ல முடியும்? ‘எக்கா... எக்கா... உன் மாப்பிள்ளை ஊருக்குப் போய் ‘பையனைப்’ பார்த்துட்டுத் தான் இனிமேல், ஊருக்கு வருவேன். உனக்கு வாக்குக் கொடுத்ததை மறக்கலக்கா... எனக்குப் பிடிக்காட்டா இந்தக் கலியாணத்தை நடத்த விடமாட்டேங்கா’ என்று தம்பி மீண்டும் சொல்லிவிட்டுப் போனதை எப்படிச் சொல்ல முடியும்? ஆனாலும் அவள், சத்தம் போட்டுத் தொலைவில் போன தம்பியைத் திரும்ப வைத்துப் பேசினாள். “அதுக்காக சீக்கிரமா ஊருக்கு வந்திடாதே... வேணுமுன்னா லெட்டர் போடு.” சுயம்பு, அக்காவை மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டே, தன் பாட்டுக்கு நடந்தான். அந்தப் பொது வழியில் நடந்தாலும், தான் மட்டுமே தனியாய் நடப்பது போல் நடந்தான். உடம்பைச் சுருட்டிச் சுருட்டி, சுருண்டு சுருண்டு நடந்தான். குழாயடிப் பக்கம் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கிசு கிசு பேசினார்கள். “என்ன வந்திட்டு இவனுக்கு? நம்மையே பார்த்துட்டு நிக்கான் பாரு? புட்டத்தை ஏன் இப்படி அசைச்சு அசைச்சு நடக்கான்? கையக் கால ஏன் டான்ஸ் ஆடுற மாதிரி கொண்டு போறான்? இதோ பாருடி, இந்த மலர்க்கொடிய காணல. அநேகமா இப்போ தோட்டத்துப் பக்கத்துல நிப்பாள்...” அந்தக் குழாயடிப் பெண்களை ஒன்றிப் போய்ப் பார்த்த சுயம்பு, மீண்டும் தன்னைத் தானே தூக்கிக் கொண்டு போவது போல் நடந்தான். அக்கம் பக்கத்துத் தேனீர்க் கடைக்காரர்களையோ, அவர்கள் குசலம் விசாரிப்பதையோ காதில் வாங்காமல், பலியாடு போல, தன்னை யாரோ இழுத்துக் கொண்டு போவது போல் கழுத்தை நீட்டி நீட்டிப் போனான். சுயம்பு, அந்தக் கருவேலமரக் காட்டுப் பக்கம் நெருங்கி விட்டான். முள்ளம் பன்றிகள் சிலிர்ப்பது போல், பச்சைப் பசேல் என்று இருந்த அந்தக் காடு, வெள்ளை வெள்ளையாய் சில பகுதிகளில் குற்றுயிரும் குலையுயிருமாய், பாதி வெட்டப்பட்ட மரப் பிணங்களாய்க் கிடப்பது மட்டுமே அவன் கண்ணுக்குத் தோன்றியது. பழையபடியும் வீட்டுக்குப் போகலாமா என்று நினைப்பு. அப்போது அந்தக் காட்டின் பிதாமகன் - ‘வாட்ச்மேன்’ வீரபாண்டி வந்தான். வரும்போதே, ஒப்பாரி போடாத குறையாகப் பேசிக் கொண்டே வந்தான். “படிச்சவன்னா ஊருக்குப் பிரயோசனப்படணும்... எல்லாப் படிச்ச பசங்க மாதிரி நீயும் பிரயோசனப் படலை. இந்த சமூகக் காடு செடியாய் இருக்கும் போதே உரமும் தண்ணியும் ஊத்துனவன் நான். அப்போ ஒரு துளி தண்ணியோ, ஒரு பிடி உரமோ ஊத்தாத பயலுவ எல்லாம், பட்டப்பகலுலேயே நான் வளர்த்த மரங்களை வெட்டுறாங்கன்னு போலீசுக்குப் போனால், அங்கே இருக்கிற இன்ஸ்பெக்டரு, ‘என்னை மாதிரி நீ எப்படிடா காக்கிச் சட்டை போடலாம்’னு அடிக்க வாராரே தவிர, எத்தனை மரத்த எவன் எவன் வெட்டுனான்னு ஒரு கேள்வி இல்ல. கேப்பாரு இல்ல... நான் போலீசுக்குப் போயிட்டு வந்ததுலே இருந்து எல்லாருமே கருவேல மரங்கள வெட்டுறாங்க... ஆனாலும் என் கண்ணு முன்னாலயே கொழந்தைங்க மாதிரி கண்ணுக்குத் தெரியாமலே வளர்ந்த இந்த மரங்கள வெட்ட மனசு கேக்கலை. இந்த விஷயத்தை நான் விடப்போறதும் இல்ல... கலெக்டர் கிட்ட போகப் போறேன்... ஒரு மனு எழுதிக் கொடு...” சுயம்புவோ, வீரபாண்டியிடம் ஒரு மனுப் போட்டான். “மாமா, மாமா... எனக்கு காலேஜ் போகப் பிடிக்கல மாமா... வீட்டுல துரத்துறாங்க மாமா... ஒங்ககிட்டயே என்னை வேலைக்காரனா சேர்த்துக்குங்க மாமா...” வீரபாண்டி, அதிர்ந்து போனான். இப்போதுதான் அவனை முழுமையாக உற்றுப் பார்த்தான். படர்ந்த மார்பும், விரிந்த முகமும், அதற்கேற்ற கால் கைகளும் கொண்ட சுயம்பு, மெள்ள மெள்ள வேற்று ஆளாக மாறிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. ஒடுங்கிப் போய் நின்றவனின் முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு, வீரபாண்டி கண்ணை மூடினான் கல்வியால் கிடைக்கின்ற பம்மாத்தையும், ஊழல் பணத்தையும், அதனால் சுயம்புவிற்குச் சொந்தமாகப் போகும், காரையும் பங்களாவையும் கண்காட்சி வர்ணனை போல் சொல்லிக் கொண்டிருந்தான். கண்ணைத் திறந்தால், அங்கே சுயம்பு இல்லை. சுயம்பு, அந்தச் சின்னப் பூந்தோட்டத்திற்கு அருகே வந்துவிட்டான். பம்ப்செட் தண்ணீர் கீழே இருந்து மேலே குதித்துப் பாயும் காரைச் சுவர் வாய்க்காலில் கால் பதித்த படியே, மலர்க்கொடி பூத்தொடுப்பதைக் கண்டான். அங்கிருந்து காற்று கொண்டு வந்த பூ வாசனை அவன் மூக்கைத் துளைத்தது. மலர்க்கொடி கால்வாய் நீரைக் காலால் எற்றி எற்றி அடித்தபடியே வாழை நாரில் பூத்தொடுத்தாள். அவன் கண்ணில் படும்படியாய் அந்த மாலையைத் தூக்கிக் காட்டினாள். அவன் வருவான் என்று முன்குவிந்தும், வரமாட்டான் என்று பின் வளைந்தும் அல்லாடிக் கொண்டிருந்தாள். சுயம்பு, அவளை நோக்கி அக்கம் பக்கம் பார்க்காமலேயே, சர்வ சாதாரணமாக நடந்து வந்தான். அந்த நடைக்குப் பயந்து, அவள் மறையப் போனாள். ஆனாலும் கால்கள் நகரவில்லை. கண்களோ, அவனைக் கூப்பிடப் போவது போல் குவிந்தன. சுயம்பு அவளுக்கு நெருக்கமாக நின்று கொண்டான். மலர்க்கொடி, தலை தாழ்த்தியபடியே அவனை மேல் நோக்காய்ப் பார்த்தாள். அவனை விட, மூன்று வகுப்புக்கள் தள்ளிப் படித்தவள். ஐந்தாவது படிக்கும் போது, எட்டாவது படித்த இவன், தனது தங்கை மோகனாவுக்கும், அவளுக்கும் கணக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். தலையில் குட்டியிருக்கிறான். தோளைக் கிள்ளியிருக்கிறான். அப்புறம் இருவரும், ஆண் பெண் பள்ளிகளுக்குத் தனித் தனியாகப் போய்விட்டார்கள். பத்தாவது படிக்கும் போது, இவள் பெரியவளானாள். அது முடிந்து தெருவுக்கு வந்த போது, இவனே சகஜமாகப் பேச்சுக் கொடுத்தான். அதையே சரசமாக எடுத்துக் கொண்டு அவள் வீட்டுக்குள் ஒளிந்து ஜன்னல் வழியாக இவனைப் பார்ப்பாள். இப்போது கூட, புதுமையான பருவ உனர்வுகளை, அவனோடுதான் மானசீகமாக பகிர்ந்து கொள்ளுகிறாள். அவன் சின்ன வயதிலேயே தன்னைக் கிடுக்கிப் பிடியாய்ப் பிடித்தது, இப்போதும் அவள் மனத்தைக் கிறக்கிக் கொண்டே இருக்கிறது. மலர்க்கொடி, தலைநிமிர்ந்து அவனை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். பூத்துக் குலுங்கும் குண்டுமல்லி போன்ற முகம். செம்பருத்தி மொட்டு பிரிவது போன்ற உதடுகள். மருதாணி தடவிய கைகள். முன்பக்கம் இருபுறமும் தொங்கிய மாலையைச் சமப்படுத்தியபடியே, அவனைச் சாய்த்துப் பார்த்தாள். அவனும் அவளது மஞ்சள் புடைவையையும் அதே நிற ஜாக்கெட்டையும் உற்றுப் பார்த்தான். பிறகு அவள் முந்தானையைப் பிடித்து இழுத்து, “இந்தப் புடைவை நல்லா இருக்கே” என்று கேட்டுவிட்டு அதே முந்தானையால் அவளை மூடி விட்டான். அவளுக்குக் கோபம் கால்வாசியும், தாபம் முக்கால்வாசியுமாய் கோபதாபம் ஏற்பட்டது. கோபத்தின் மீதே கோபப்பட்டு, “என்னை மறக்கமாட்டீர்களே” என்று சொல்லிவிட்டு அவன் பதிலையே ஆவலோடு எதிர்பார்த்தாள். அவனும் பேசினான். “மலர்... மலர்...” “இதுக்குமேல பேச வராதா?” “ஏன் வராது... உன் கழுத்துல தொங்குற பூவில பாதியாவது கொடேன்...” “இந்தாங்க... முழுசாவே எடுத்துக்குங்க... அப்பாடா... நான் வாழ்வதற்கு இன்னிக்குத்தான் அர்த்தம் புரியுது...” மலர்க்கொடி, கழுத்தில் மாலையான பூவை எடுத்து, மனத்தில் மணவாளனாய்ப் பூத்தவனின் உள்ளங்கையில் திணித்தாள். அப்போது, அவள் வலது கைப் பெருவிரல், அவன் இடது கை மணிக்கட்டில் உரசியது. அவள் சிலிர்த்தாள். பூப்பெய்ததன் பூரணத்தைப் புரிந்தவள் போல் அவன் பக்கமாய் நகர்ந்தாள். அக்கம் பக்கம் பார்த்து ஆள் இல்லை என்ற மகிழ்ச்சியில் அவனை நெருங்கினாள். நெருக்கினாள். கண்கள் அவன் காலடியில் அலை பாய, நாணப்பட்டும், நளினப்பட்டும் நின்றாள். ஆனாலும், சுயம்பு அவள் எதிர்பார்த்தது போல், அவளது தலையில் பூச்சூட்டவில்லை. ‘எதுக்காகத் தயங்கணும்?’ என்ற முணுமுணுப்போடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள். சுயம்பு, அந்த இரண்டு முழம் பூவையும் தனது பிடறியில் சுற்றிக் கொண்டதைப் பார்த்து, மலர்க்கொடி வயிறு குலுங்க, வாய்விட்டுச் சிரித்தாள். எப்படி விளையாட்டுக் காட்டுறார்? சிறிது நேரத்தில் அவள் சிரித்த முகம் சீறும் முகமாவது போலிருந்தது. அவளைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு சின்னச் சிரிப்பை மட்டும் கொடுத்துவிட்டு... சுயம்பு, பிடறியில் கட்டிய மல்லிகைப் பூவை வருடி விட்டபடியே கீழே வைத்த சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு நடந்தான். வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|