40

     மேகலையும் சுந்தரம்மாவும் காரைத் தேடிப் போனார்கள். ஒரே ஒரு கார்தான். கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. சுந்தரம்மா, தன்னுடைய சேலா அலிகளைக் கண்டுக்காமல் போனாள். தரையில் கால் பாவாமல் நடந்தாள். மேகலை, அங்கே கூடிய தனது கோஷ்டிக்கு தாலி கட்டிக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டு, காரில் ஏறிக் கொண்டாள். ஜமாத் தலைவியையும் ஏற்றிக்கொண்டாள்.

     கடலூருக்குள் கார் பஜார் பஜாராய்ச் சுற்றியது. அவள் கண்கள் ஒவ்வொரு டாக்டர் போர்டாய் பார்த்தது. சுந்தரம்மா, அதைப்பற்றிக் கவலைப்படாமல், அர்ச்சுனனுக்கும் நாககன்னிகைக்கும் பிறந்த அரவான் கூத்தாண்டவராய் மாறிய புராணத்தை நீட்டி முழக்கிச் சொல்லிக் கொண்டே இருந்தாள். மகாபாரதப் போரில், பாண்டவர் வெல்ல வேண்டுமானால், அத்தனை சாமுத்திரிகா லட்சணங்களையும் கொண்ட ஒருவனைப் பலியிட வேண்டுமென்று சகாதேவன் ஜாதகமாக சொல்லிவிட்டான். இந்த லட்சணங்களைக் கொண்டவர்கள் மூவர். அர்ச்சுனன், கிருஷ்ணன், அரவான். இவர்களில் இளிச்சவாயன் கடைசி ஆள். சம்மதித்தான். ஆனால் ஒரு நிபந்தனை போட்டான். காளிக்குப் பலியாகும் முன்பு, கலியாணம் செய்து வைக்க வேண்டும் என்றான். எந்தப் பெண்ணும் இணங்கவில்லை. இறுதியில், கிருஷ்ணனே ஒரு அலியாகி, அவனைக் கட்டிக்கொண்டார். போரில் காளிக்கு அரவான் படைக்கப்பட்டான். ஆனால், காளியாத்தா, மனமிரங்கி அரவானை ஒற்றைத்தலை உருவமாக்கி அதற்கு உயிரூட்டினாள். அவருக்குப் பேர்தான் கூத்தாண்டவர். ஆகையால் எல்லா அலிகளுமே கிருஷ்ண அவதாரங்கள்.”

     இந்தக் கதையை கருத்தோடு சொன்ன சுந்தரம்மா, பிறகு சலிப்போடு சொந்தக் கருத்தைச் சொன்னாள். இந்தக் கொள்ளயில போற அரவானுக்கு என்ன வந்திட்டுது. அவனுக்குத்தான் புத்தியில்லன்னா, இந்த கிருஷ்ணனுக்குமா... கிருஷ்ணன், ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுத்துட்டு அலியானான். இந்த அரவானும் ஒரு ராத்திரி ஆசைய தீர்த்துக்கிட்டான். கடைசியில நாமதான் அம்போன்னு ஆயிட்டோம்.”

     மேகலை, ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்த அந்தக் கதையை நயத்தகு நாகரிகம் கருதிப் புதிதாய்க் கேட்பது போல் தலையாட்டிக் கேட்டாள். பிறகு வெறுப்போடு சொன்னாள்:

     “கிருஷ்ணன் கிடக்கான் விடு. அவனுக்கென்ன பழையபடியும் ஆணாய், மாறிட்டான். டிரைவர், சிதம்பரத்துக்கு வண்டிய விடுப்பா...”

     அந்தக் கார், சிதம்பரத்தை நோக்கி விரைந்தது. நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்தது. சாலை ஓரமாக இருந்த பல்கலைக் கழகத்தின் பக்கம் அது வந்தபோது, அவள் காரை, நிற்கச் சொன்னாள். சிறிது தூரம் நடந்தாள். கூட நடக்கப்போன திடீர்த் தோழியைக் கையாட்டித் தடுத்தபடியே நடந்தாள். அசைவற்று நின்றாள். தோழிக்காரி போய்த்தான் அவளை உசுப்பி விட்டாள். காருக்குள் ஏறி ‘கோவில் கோவில்’ என்றாள். கோவிலுக்குப் போனதும், கோபுரத்தை, ஒப்புக்கு கும்பிட்டுவிட்டு, காரை வீதி வீதியாய் விடச் சொன்னாள். போர்ட் போர்டாய்ப் பார்த்தாள். டேவிட் அந்தக் காலத்தில் சுட்டிக் காட்டிய செமினார் புகழ் சைக்யாட்ரிஸ்ட் கிடைப்பாரா என்று பார்த்தாள். அங்கே ஒரு பெட்டிக் கடை இருந்தது. அவள் சளைக்கவில்லை. அதே மருந்துக் கடைக்குப் போனாள். டேவிட்டைப் பற்றி நேரடியாய் விசாரித்தபோது, அப்படி ஒருத்தன் இல்லை என்பதும் ‘இப்படிப்பட்ட’ ஒருத்தி, விசாரிக்கிற அளவுக்கு ஒருத்தன் இருந்தால் அவன் பிரிஸ்கிரிப்ஷன்களுக்கு மருந்து கொடுக்கப் போவதில்லை என்பது மாதிரியும் அதே பழைய கடைக்காரர், பழைய சுயம்புவைத் தெரியாமல் பேசினார்.

     அந்தக் கார், வெறுமையோடு, கூத்தாண்டவர் கோயிலை நோக்கி வந்தது. வழியில் மேகலை தனது வரலாற்றையும், டேவிட் உள்ளிட்ட கதை மாந்தர்களையும் சொன்னாள். கோயிலருகே வந்ததும் இருவரும் கூத்தாண்டவரின் தேரைப் பார்த்து ஓடினார்கள். மேகலை கடல் மண்ணில் ஓட முடியாமல், செருப்பைக் கையில் பிடித்தபடியே ஓடினாள். இருவரும் அந்த மனிதக் கடலில் இரு துளிகளாகி - ஒரு குமுழியாகி மறைந்து போனார்கள்.

     மேகலை தேரிலிருக்கும் கூத்தாண்டவரைப் பார்த்தாள். டேவிட்டாகத் தோன்றிய ஒரு உருவத்தை வலுக்கட்டாயமாக விலக்கினாள். தேருக்கு முன்னால் நடக்கும் ‘திருப்போரைப்’ பார்த்தாள். காளி வேஷம் போட்டவரும், அரவான் வேஷம் போட்டவரும், கத்தியும், வாளுமாக, வேலும் வில்லுமாக போரிடுகிறார்கள். துள்ளித் துள்ளித், தள்ளித் தள்ளி, தாம் தூம் என்று குதிக்கிறார்கள். அரவான், காளியின் வாளுக்கு பலியாகாமல், லாகவமாக தலையை வளைக்கிறான். காளியைக்கூட அவன் கொல்ல போவது போன்ற நிலை. உடனே, எல்லா அலிப் பெண்டாட்டிகளும், கொண்டையிலுள்ள பூக்களை எடுத்து, அரவான்மேல் பூப்பூவாய் வீசுகிறார்கள். சபாஷ் போடுகிறார்கள், விசிலடிக்கிறார்கள். விநயமாக ஆடுகிறார்கள். அந்தக் காலத்து, ஆகாய அம்புகள் போல், வாணவேடிக்கைகள். இந்தக் காலத்து அணு ஆயுதங்கள் போல் சிவகாசி வெடிகள். அலிகளின் நாட்டியங்கள். உருமி மேளம். உள்ளூர் அலிகளின் டேப்புகள். வெளியூர் நீலிமாவின் டோலக். ஒரே சங்கீதக் கூச்சல், அரவானுக்கு வக்காலத்து. காளிக்கும் - காளியாடிக்கும் திட்டுக்கள்.

     அரவான் சாமியாடி வலுவானவர். ஆனாலும் புராணத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு தலையை நீட்டுகிறார். ஒரு ‘பாவலா’ அரிவாள் வெட்டு. அப்படியே தரையில் சாய்கிறார். சாராய வாய் கோணுகிறது. அந்தச் சமயத்தில் தேரிலிருந்த அரவான் தலை வெட்டப்படுகிறது. அத்தனை அலிகளும் - அழுது புலம்புகிறார்கள். புருஷனின் தலை துண்டாகி விட்டதைக் கண்டு, உடம்பே துண்டாப் போவதுபோல், மாரடிக்கிறார்கள். கைகளை ஒன்றோடு ஒன்று உரசி வளையல்களை உடைத்துக் கொள்கிறார்கள். கொண்டை விரித்து, மலர்ச்சரங்களைப் பிய்த்துப் பிய்த்துக் கசக்கி எரிகிறார்கள். சிலர் ஒருவர் கழுத்தை ஒருவர் பிடித்து அழுகிறார்கள். சொந்தப் புருஷனைப் பறிகொடுத்த ஒரு பத்தினிகூட இப்படி அழமாட்டாள். கணவன் போனதால் அனைத்தும் போன ஒரு திக்கற்ற பெண்கூட இப்படி புலம்பமாட்டாள். ஒப்புக்கான ஒப்பாரியில்லை. உப்பில்லாப் பண்டமாய்ப் போனதற்கான அழுகை. உடம்பில் பட்ட சூடுகளையும், மனத்தில் பட்ட இழிவுகளையும் நினைத்து நினைத்து ஆற்றாமையில் அழும் அழுகை. கூட்டம் கூட்டமாய் நின்றாலும், தனிமைப்பட்டது போன்ற தாங்கொண்ணாத் துயரத்தில் அழுகிறார்கள். பொட்டழித்துப் பூவழித்து தன்னை அழித்துக்கொள்வது போன்ற தலையடிகள்... மாரடைப்பு வருவது போன்ற மாரடிப்புக்கள்...

     அந்தத் தேர் உருக்குலைந்த அரவானோடு பகல் பதினொருமணி அளவில், ‘பந்தலடிப்’ பக்கம் போகிறது. அங்கே ஒரு கம்பம். அந்தக் கம்பத்தின் கம்பம்போல் எந்தவித சலனமும் இல்லாமல் ஒரு பூசாரி நிற்கிறார். ஒவ்வொரு அலியும் அவர் முன்னால் போய் நிற்கிறது. அந்த நிச மனிதர் இந்த பொய்ப் பெண்களின் தாலிகளை அறுத்து எறிகிறார். கொஞ்ச நஞ்சமுள்ள பூக்களையும் பறிக்கிறார். மிச்ச மீதியான பொட்டுக்களை வேர்வைக் கையால் அழித்துவிடுகிறார். மஞ்சள் துண்டு பறிகொடுத்த ஒரு இருபது வயதுக்காரி கம்பத்தின் பக்கம் போனாள். கூரைப் புடவைக்காரி அந்தக் கம்பத்திலேயே தலையை முட்டி முட்டி ஒப்பாரி வைத்தாள்.

     “காகிதப் பூவுன்னு கண்மூடிப்
          போனீரோ - என்ராசாவே
     வாடாமல்லின்னு பேசாமல்
          போனீரோ... நானும்
     அப்பனுக்கு வேப்பங்காய்,
          அண்ணனுக்கு எட்டிக்காய்.
     ஊருக்கு திருஷ்டிக்காய்,
          ஒனக்குக்கூட ஊமத்தங்காய்.”

     அதுவரை அந்த நிகழ்ச்சிகளை ஒப்புக்கென்று நினைத்து சோகத்தோடும் கம்பீரம் கலையாமலும் நடந்த மேகலை, பூசாரி தாலியைப் பிடிக்கும்போது கையிலேயே மஞ்சள் துண்டைப் பொத்திக்கொண்டு சத்தம் போட்டே டேவிட், டேவிட் என்றாள். எவளோ ஒருத்தி, இவள் கைவிரல்களைப் பலவந்தமாகப் பிரித்து, மஞ்சள் கயிற்றைத் தூக்கிக் காட்டியபோது, அரிவாள் அதைத் துண்டு படுத்தியது. மேகலை, வெறிபிடித்தவளாய் எழுந்தாள். பக்கத்தில் கம்பத்தைப் பிடித்து கட்டியழுத கூரைப் புடவைக்காரியை இவளும் கட்டிப் பிடித்துக் கொண்டாள். அவளை அறியாமலே ஓலமிட்டாள். தாளநயத்தோடு ஒப்பாரி போட்டாள். பாடல்கள் அவளைத் தேடிவந்தன.

     “செடியாய் முளைச்சிருந்தால்...
          பூவாய் மலர்ந்திருப்பேன்.
     கொடியாய் வளர்ந்திருந்தால்...
          கொம்புலே படர்ந்திருப்பேன்.
     நதியாய்ப் பிறந்திருந்தால்...
          கடலிலே சேர்ந்திருப்பேன்.
     நண்டாய்ப் பிறந்தாலும்...
          வளையிலே வாழ்ந்திருப்பேன்.
     இரண்டாய்ப் பிறந்ததாலே
          துண்டுபட்டு நிக்கேனே!
     சூடுபட்ட மனசும்
          சொன்னாலும் கேட்கலியே...
     வீடுபோக வேணுமுன்னு
          வெறிபிடித்து துடிக்குதய்யோ...”

     அசந்துபோன, சுந்தரம்மா மேகலையைத் தூக்கி விட்டாள். அவளைச் சுற்றியும் பற்றியும் புலம்பிய டெல்லிக்காரிகளுக்கு ஆறுதல் சொன்னாள்.

     “கவலைப்படாதீங்கடி... மனசுல நீண்ட நாளா அடைச்சு வச்சிருந்தது இப்ப உடைச்சிட்டு வந்திட்டு. இதுவும் ஒரு வகையில நல்லதுக்குத்தான். இனிமேல் ஒவ்வொரு வருஷமும், கூட்டி வாங்க... இல்லேன்னா இவளோட இருதயம் பலூன் மாதிரி வெடிச்சுடும்...”

     “நேற்று வந்ததும் வராததுமா சிலர் அன்னதானம் நடத்துறதப் பார்த்துட்டு அடுத்த வருஷம் நாமும் அப்படி நடத்தணும்னு சொன்னவளா இப்படி அழுகிறது...”

     “அழுகிறவள் தாண்டி மனுஷி. இல்லாட்டி அமுக்கடி கள்ளி. அவள், கதைய என்கிட்டவும் சொன்னாள். சொந்த ஊருக்கு அவளக் கூட்டிட்டுப் போங்க. அக்காவைப் பார்த்தால், பித்தம் தெளியும்...”

     ஒப்பாரியை விட்டுவிட்டு லேசாய் ஆசுவாசப்பட்டுக் கொண்டிருந்த மேகலை அவர்களைப் பார்த்துக் கூரைப் புடவைக்காரியின் பாட்டையே மீண்டும் ஒப்பாரியாக்கினாள். சிறிது மாற்றி, ஓலமிட்டாள்.

     “அப்பனுக்கு வேப்பங்காய்...
          அண்ணனுக்கு எட்டிக்காய்;
     தமைக்கைக்கு விஷக்காய்...
          தங்கைக்கோ சுண்டைக்காய்...”

     அவள், புலம்பலைப் பார்த்துவிட்டு, அத்தனை அலிகளும் புலம்பினார்கள். ஒட்டுமொத்தமாய் ஒப்பாரி வைத்தார்கள்.